வியாழன், 7 செப்டம்பர், 2023

 

வளைதலும் வாழ்தலும்

-நெய்வேலி பாரதிக்குமார்

 

              




    ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக யாரைக் கண்டாலும் ஆடுவதும், நிமிர்த்த முடியாதபடிக்கு வளைந்தும் இருப்பதை அவமானமாகக் கருதியது. படைத்தவனிடம் சென்று வால் இல்லாமல் இனி நாய் ஜென்மத்தைப் படைக்கும் படி கேட்பதற்காக சென்றது.

               ஆட்டுக்குக் கூட அளவாய் அளந்து வைத்த நீங்கள் ஏன் எங்களுக்கு இத்தனை நீளம் வைத்துப் படைத்தீர்கள்?”

               கறிக்கு ஆட்டை வெட்டுகிற மனிதர்கள் உன்னை வெட்டாமல் விட்டு வைப்பதற்கு நன்றியாய் கொஞ்சம் வாலாட்டிப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை?”

               நாய் வாலை நிமிர்த்தவே முடியாது’ என்று திருத்த முடியாத ஜென்மங்களுக்கு உதாரணமாய் எங்களைச் சுட்டிக்காட்டுவது, ரொம்பக் கேவலமாக இருக்கிறது. பத்தாததற்கு அவ்வளவு நீளமாய் நாக்கு... ஓடும் போதெல்லாம் வாய்க்குள் இருக்காமல் தொங்கிக் கொண்டே இருப்பதால், பேராசைக்காரனுக்கு ஒப்பிடவும் எங்களைத்தான் சொல்கிறார்கள்... என்ன பிழைப்பு இது?”

               எல்லாவற்றுக்கும் ஈடு செய்வது போல நன்றியுள்ள ஜீவனுக்கு உதாரணமாக உன்னைத்தானே சொல்கிறார்கள்... அப்புறமுமா குறை?”

               சரி, நாக்கு இல்லாவிட்டால் ஜீவனம் செய்ய முடியாது. இந்த வாலால் என்ன பிரயோசனம்? குறைந்த பட்சம் அது நிமிர்த்தியாவது இருக்கக் கூடாதா?” - நாய்.

               கொஞ்சம் பொறுமையாக ஓரங்கட்டி நில்.. அடுத்த நபர் ஒரு புகாருடன் வருகிறான். அமைதியாகக் கேள்என்றார் கடவுள்.

               மிகுந்த அச்சத்துடன் உள்ளே நுழைந்த முள்ளம்பன்றி கடவுளே எனக்கு ஏன் இந்த முட்கள்?”

               ஒரு பாதுகாப்புக்குத்தான்... அச்சமூட்டும். எவராவது நெருங்கினால் சட்டென்று நிமிர்ந்து நிற்கும் வசதி செய்திருக்கிறேன், அப்புறமென்ன?”

               வளைக்க முடியாமல், நெளிவு சுளிவு இல்லாமல் ஒரு உறுப்பு உடம்பின் மீது இருந்தால் எவர் என்னிடம் நெருங்குவர்?”

               உனக்கு செளகர்யம் தானே?”

               வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாததால் வளர்ப்பு மிருகமாக எவரும் என்னை வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகளைத் தொட்டு  உணரும் பாக்கியம் எனக்கில்லை. முறைத்துக் கொண்டே இருப்பதால் எங்கள் இனமே அருகிக் குறைந்து விட்டது. பாடப்புத்தகங்களில் மட்டுமே எங்கள் படம் அடையாளத்துக்காக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் இருப்பதைப் போல...

நாய்க்கு இருப்பதைப் போல வளைந்து நெளியும் வால் இருந்திருந்தால் குழந்தைகள் ரசித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்... எவருமே விரும்பாத வாழ்க்கை அமையப்பெறுவது ஏதோ சாபம் போலிருக்கிறது. சதா முறைத்துக் கொண்டும் விரைத்துக் கொண்டும் இருப்பது பெருமைக்குரிய விஷயமில்லையே?” என்றது முள்ளம் பன்றி.

               சிடுசிடுவென விழுவதும், கடுகடுவென முகம் இருப்பதும் மேலாண்மையின் ஒரு தந்திரமிக்க பாவனை. நிறைய மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.. என்னைப் பார்த்தவுடன் அஞ்சும்படி மேலாடையாக முட்கள் இருப்பதால் நான் சிறந்த மனிதன் போல  ஆவேன் என்று நீதானே வரம் கேட்டாய்? நான் என்ன செய்ய முடியும்?” கடவுள் கைவிரித்து விட்டு நாயை அன்புடன் பார்த்தார். முள்ளம்பன்றி தலை குனிந்து வெளியேறியது

               நாய் நன்றியோடு முன்னைவிட வேகமாக வாலாட்டியபடி ஓடத்துவங்கியது.

 

 

முயலாமை

                                          -நெய்வேலி பாரதிக்குமார்

               



    குதூகலமாய் குதித்து வந்த முயல் வழியில் ஆமையை நிறுத்தி வருகின்ற வனராஜா தேர்தலில் நான் நிற்கப்போகிறேன். மறக்காமல் உன் ஓட்டை நீ எனக்குத் தரவேண்டும்.என்றது.

               நீயா... உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” வியந்து கேட்டது ஆமை.

               நான்தான் வெள்ளையாக இருக்கிறேனே

               ஆமை சிரித்தபடி சொன்னது நினைவில் வைத்துக்கொள்.. நீ காட்டில் இருக்கிறாய். நாட்டில் இருப்பதாக எண்ணமா?”

               இருட்டை ஊடுருவிப் பார்ப்பேன்... வேகமா ஓடுவேன்...

               நீ ஓடுகிற லட்சணம் பற்றி என்னிடமே சொல்கிறாயா? ஓட்டப் பந்தயத்தில் என்னிடம் தோற்றவன்தானே நீ?”

               கொஞ்சம் கண்ணயர்ந்த நேரத்தில் கோடு தாண்டி விட்டாய்... என்னுடையக் காதுகள் மிக நீளமானவை... எந்த பிரச்சினையையும் காது கொடுத்துக் கேட்பேன்.

               இப்படியாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது... இரவும் கவிந்தது. வாக்குவாதம் முற்றுப்பெறவில்லை. வேட்டைக்காரன் கைவிளக்குடன் வந்தான். முயலின் கண்களுக்கு நேராக வெளிச்சத்தைப் பாய்ச்சினான். பழக்க தோஷத்தில் வெளிச்சத்தைப் பார்த்து பயந்து அப்படியே நின்றது முயல். ஆனால் ஆமையோ தனது ஓட்டுக்குள் அமைதியாய் பதுங்கியது.

               அப்படியாக... அலப்பறை செய்த முயல் மறுநாள் கறியானது.

               அப்படியாக தன் ஓட்டுக்குள் தன்னைப் பாதுகாக்கத்  தெரிந்த ஆமை ஓட்டுக்குள் இருந்ததனால் தப்பித்துக் கொண்டது.

 

 

மருந்து

-                       -நெய்வேலி பாரதிக்குமார்




ந்த பாசமுள்ள தாய்க்கு ஐந்து வயதில் சரவணன் என்று ஒரே மகன். சம்பாதித்துப் போட்ட கணவன் இறந்த பிறகு, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக் குறியானது. நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்தால் வயிறு கழுவி விடலாம்தான். ஆனால் செல்ல மகனை எப்படிப் படிக்க வைப்பது?

               டவுனிலிருந்து வந்த குழந்தையில்லாத பணக்காரர் சரவணனை எடுத்துச் சென்று நன்றாக வளர்த்துப் படிக்க வைக்க முன்வந்தார். ஆனால் தாயும் மகனும்  எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கூடாது என்று நிபந்தனை விதித்தார். கனத்த மனதுடன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மகனை அவருடன் அனுப்பிவைத்தார். அவ்வப்போது மகனின் நண்பன் பப்லு, தொலைபேசியில் டவுனில் இருக்கும் சரவணனுடன் பேசி இருவரது நலத்தையும் பரிமாற உதவி செய்தான்.

               ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் அந்தத் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பப்லு போனில் தாயைப் பற்றி மகனிடம் தெரிவித்தான். நிபந்தனையை மீறமுடியாதே... ஆகவே சரவணனுக்கு பணக்காரத் தந்தை செலவுக்குத் தரும் பாக்கெட் மணியிலிருந்து சில பழங்கள் வாங்கி, யார் மூலமாவது தாய்க்கு கொடுத்தனுப்பினான். மறுமுறை போனில் பேசும் போது பப்லுவிடம் தாயின் உடல்நிலை பற்றிக் கேட்டான்.

               அம்மா நோயிலிருந்து குணமாகவில்லை. முன்னை விட இன்னும் மெலிந்து போயிருக்கிறார்என்றான் பப்லு.

               அடுத்த நாள் பிரெட், சத்தான பானங்கள் வாங்கி அனுப்பினான் சரவணன்.

               அப்பொழுதும் பப்லுவிடமிருந்து அதே பதில்தான்.

               அடுத்தமுறை தேவையான வைட்டமின் மாத்திரைகள் வாங்கிக்கொடுத்து அனுப்பினான்.

               அப்பொழுதும் பப்லுவிடமிருந்து அதே பதில்தான்.

               சரவணனிடமிருந்த சேமிப்பு முழுவதும் தீர்ந்துபோனது. கவலையில் தோய்ந்தான். இன்னும் மிச்சமிருந்தது கையில் பேப்பரும் பேனாவும் மட்டுமே.

               அம்மாவுக்கு ஒரு கடிதமெழுதி அனுப்பினான். அடுத்த நாள் பப்லுவிடமிருந்து வந்தது உற்சாகமான குரல்.

               அம்மா குணமாகி வீட்டுக்கு வந்தாச்சு. நீ எழுதிய கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தானே படித்து படித்து சந்தோஷப்படறாங்க. அப்படியென்னடா எழுதியிருந்தே அதுல?”

                              அம்மா, நான் நலமாக இருக்கிறேன்.

 

 

நான்தான்!

               -நெய்வேலி பாரதிக்குமார்

 

               



    லை முகட்டில் ஒட்டிக்கொண்டிருந்த மண் துகளொன்று பூமியைப் பார்த்தபடி இருந்தது. பூமியில் படிந்து கிடந்த மண் துகளொன்று மலைமுகட்டில் இருந்த மண் துகளைப் பார்த்துச் சொன்னது: நான்தான் இந்த பூமியின் சகல பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அப்படியா... நான் இந்த மாபெரும் மலையின் சிறுதுகள்.

அந்த மலையையும் தாங்கிக் கொண்டிருப்பது நான்தான்.

அந்த வழியாக ஒரு சிங்கம் வந்தது. அதன் பாதங்கள் பூமியில் பதிந்த வேகத்தில் புழுதி பறந்து அந்த மண்துகள் சிங்கத்தின் பிடரியில் அமர்ந்தது.

அட்டகாசமாகச் சிரித்த அந்த மண்துகள் மலைமுகட்டில் இருந்த மண்துகளைப் பார்த்து “இதோ பார் காட்டின் ராஜா என்னைச் சுமந்து கொண்டிருக்கிறார். நீ மலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுதுகள்” என்று ஏளனமாகச் சொன்னது.

               சில காலம் கழித்து வீசிய புயல் காற்றில் பூமியிலிருந்து பறந்து சென்ற மண்துகள் மேலேறி மலையுச்சியில் ஒட்டிக் கொண்டது.

ஏற்கெனவே ஒட்டிக்கொண்டிருந்த மண் துகளைப் பார்த்து இறுமாப்புடன் சொன்னது: இப்பொழுது நான் உன்னைவிட உயரத்திலிருக்கிறேன் என்பதோடு நிற்காமல் வானத்தில் திரண்டிருந்த மேகக்கூட்டத்தைப் பார்த்து “மேகமே.. மேகமே.. நான் தரையிலுமிருப்பேன்.. மலையிலும் இருப்பேன்.. நீங்கள் வானத்தில் மட்டும்தான் ஓடிக்கொண்டு இருப்பீர்கள்” என்று எகத்தாளமாக சொன்னது.   .

மேகங்கள் கோபத்தில் கருத்து திரண்டன. அதன் காரணமாக  பெய்த மழையில் மலையில் நீர் நிரம்பி அருவியாகக் கொட்டியது. அருவியின் வேகத்தில் இரண்டு மண் துகள்களும் கீழே நதியில் விழுந்து பின் நதியின் ஓட்டத்தில் கடலில் கலந்தன. மலைமுகட்டில் முன்னதாக ஒட்டியிருந்த மண்துகள் சொன்னது: வாயை மூடிக்கொண்டு நீ இருந்திருக்கலாம். உன் ஆணவப் பேச்சால் இருவரும் கடலுக்கடியில் கிடக்கிறோம்”.

யார் சொன்னது? நான்தான் இப்பொழுது கடலைத் தாங்கிக் கொண்டு....

என்று சொல்லி முடிக்குமுன் அலை அந்த மண்துகளை இழுத்துக் கொண்டு வெளியே கரையில் போட்டது. திரும்ப வாய் திறப்பதற்குள் மறுபடி கடலுக்குள் இழுத்துப் போட்டது. இனியொருபோதும் பேசமுடியாதபடி அலை அந்த மண் துகளை உள்ளிழுப்பதும் வெளியே தள்ளுவதுமாக அலைகழித்தபடியே இருந்தது. மெளனமாயிருந்த மண்துகள், கடலுக்கடியில் பவளப்பாறையில் மினுமினுத்தபடி கதகதப்பாய் கிடந்தது.

 

 

தலைவா...

-நெய்வேலி பாரதிக்குமார்




னிதர்கள் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்வு செய்வதைப் பார்த்து, பறவைகள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்வு செய்ய ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன. எல்லாப் பறவைகளும் தங்களது தனிச்சிறப்புகளைச் சொல்லி, தங்களைத் தலைவராகத் தேர்வு செய்யச்சொல்லி வேண்டுகோள் விடுத்தன.

               முதலில் மேடையேறிய ஃபீனிக்ஸ் பறவை, “நான் சாம்பலில் இருந்து உயிர்ப்பவன்என்றது.

               உன்னைச் சாம்பலாக்கியது யார்? அவனை பிறகு என்ன செய்தாய்?” என்று கேட்ட போது அது திருதிரு என விழித்தது.

               “ஃபீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்க்கும் என்பதெல்லாம் அறிவியல் கோட்பாட்டின்படி உண்மையில்லை ஆகவே உன்னைத் தேர்வு செய்ய முடியாது” என்றன மற்ற பறவைகள்.

               நான் பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிப்பேன்என்றது அடுத்து வந்த அன்னப்பறவை.

               நீயும் பொய்தான் சொல்கிறாய். உன்னால் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் திறன் இல்லை. ஆனால் இந்தப் பொய்யை ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டுத் திரிகிறாய். நீ சொல்வது உண்மையே என்றாலும் ஒரு வகையில் நீ பிரிவினைவாதி. ஆகவே உனக்குத் தகுதியில்லைஎன்றன பிற பறவைகள்.

               தலையில் விளக்கைச் சுமந்து கொண்டே திரிபவன் நான்என்றது மின்மினிப் பூச்சி.

               உன்னைத் தவிர பிறருக்குப் பயன்தராத வெளிச்சம், ஒரு சுமையேஎன்று பதிலளித்தன பறவைகள்.

               நான்தான் பலம் மிக்கவள்என்றது நெருப்புக் கோழி.

               அத்தனைப் பெருமையையும் மண்ணுக்குள் தலையை புதைத்து கெடுத்துக் கொள்கிறாயே!

               கடைசியாக, கொசு தனது பாடலை இசைத்துக்கொண்டே வந்தது.

               மற்றவர்கள் பாடினால் இனிமையாக கேட்பார்கள். நான் பாடினால் மனிதர்கள் எச்சரிக்கையடைவார்கள். குரல் மெலிதாயினும் மிரள்பவர்கள் அதிகம்என்றது கொசு.

               மறுப்பேதும் இல்லாமல் மதிப்பெண் கிடைத்தது.

               நம்மை அச்சுறுத்தும் மனிதர்களின் இரத்தத்தை நம் பறவை இனத்தவர்கள் சார்பாக அதிகம் உறிஞ்சிக் குடிப்பதும் நான்தான்.

               மதிப்பெண் எண்ணிக்கையில் மற்றொன்று கூடியது.

               உங்களை எல்லாம் என்றாவது ஒரு நாள் அழித்து விடுவார்கள். என்னை அழித்துவிட முடியுமென்ற நம்பிக்கை எவருக்குமே இல்லை. காரணம் மனிதர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டைச் சுற்றி மழை நீரை தேங்க வைப்பதாலும், கழிவு நீரை அகற்றாமலும், குப்பைக் கூளங்களை சுத்தம் செய்யாமலும் அழுகிய பழங்களை சாலையில் வீசும் வரையிலும் என்னை யாராலும் அழிக்க முடியாது ஹா.. ஹா.. ஹா..

               மறுபேச்சு இல்லாமல் சேர்ந்தது மற்றொரு மதிப்பெண்.

               எல்லாவற்றுக்கும் மேலாக யாரைச் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறேனோ  அவர்களிடமே கைதட்டு பெறுவது நான்தான்என்றது கொசு.

               ஆஹா நீ தான் எங்களின் தலைவன்என்று பாராட்டிக் கைத்தட்டின பறவைகள்.

               தலைவர்பதவி கிடைத்த மகிழ்ச்சியில் தனது வெற்றி கீதத்தை இசைத்தபடி, இன்னும் பறந்து கொண்டிருக்கிறது கொசு.

 

கா ... கா... காகம்

                                    -நெய்வேலி பாரதிக்குமார்.

               



    ந்தக் காகத்திற்கு தான் காக்கை இனத்தில் பிறந்ததன் வருத்தத்தை தாங்கவே முடியவில்லை. தனது கருப்பு நிறத்தைப் பார்க்கும் போதெல்லாம் துக்கம் மிகுந்து தனிமையில் ‘கரைய’ தொடங்கியது. குளத்தங்கரையில் திரியும் கொக்குகளைப் பார்த்து அதன் ஆதங்கம் அதிகரித்தது.

               கடவுளை நோக்கி தவமிருந்தது. கடவுளும் பிரசன்னமானார். தானும் கொக்கைப் போலவே வெள்ளையாக மாற வேண்டு'மென்று கேட்டது.

ஏதேனுமோர் கொக்கு முழுமனதோடு காகமாக மாற சம்மதித்தால் அது காகமாகவும் நீ கொக்காகவும் மாறலாம்' என்ற நிபந்தனையோடு கடவுளும் வரம் கொடுத்தார்.

               மெலிந்து சோர்வுற்று இருந்த ஒரே ஒரு கொக்கு மட்டும் காகமாக மாற சம்மதித்தது. மகிழ்ச்சியோடு இரண்டும் ஒரு நாள் கடவுளை நினைத்து தியானித்து கொக்கு காகமாகவும் காகம் கொக்காகவும் மாறிக்கொண்டன.

               கொக்காக மாறிய காகம் மகிழ்ச்சியின் எல்லையில் துள்ளிக் குதித்தபடி இங்கும் அங்குமாக சில காலம் ஓடிக்கொண்டிருந்தது. நாளாக நாளாக குளம் வற்றி இரை இல்லாமல் எல்லாக் கொக்குகளும் வாடிவதங்கின. காகமாக இருந்தவரை மனிதர்கள் ஆளாளுக்கு கா... கா... என்று வருந்தி வருந்தி அழைத்து உணவிட்டது ஞாபகம் வந்தது. அதுமட்டுமல்லாமல், சிறிது இரை கிடைத்தாலும் சக காக்கைகள் கூப்பிட்டு, பங்கிட்டுக் கொள்வதும் நினைவுக்கு வந்தது. ஆனால் கொக்காக மாறிய பிறகு அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. போகப்போக உயிர்வாழ்தலே கேள்விக்குறியாகி விடும் போலிருந்தது.

               மறுபடியும் கடவுளிடம் வரம் கேட்டு தவமிருந்தது. திரும்பவும் கடவுள் வந்தார். தான் மறுபடியும் காகமாக மாற வரம் கேட்டது. கடவுளும் பழையபடி மாறிக்கொள்ளும்  நிபந்தனையைக் கூறி வரம் தந்து விட்டு மறைந்தார்.

               அன்றிலிருந்து போகிற வருகிற காக்கைகளை நிறுத்தி உங்களில் யாருக்காவது கொக்காக மாற ஆசையா?' என்று கேட்டது.

               எந்தக் காகமும் ஒப்புக்கொள்ளவில்லை.

               சரி, கொக்கிலிருந்து மாறிய காகம் எங்கே?” என்று கேட்டது.

               தெரியாதுஎன்றபடி பறந்து சென்றன.

               கொக்கிலிருந்து மாறிய காகமும் நன்கு உடல் பருத்து இருந்தது. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத அக்காகம் கேட்டது, “ஏன் நீ அழகாக, நன்றாக, வெள்ளையாகத்தானே இருக்கிறாய்? எதற்காக காகமாக மாற ஆசைப்படுகிறாய்?”

               அழகாய் இருந்து என்ன செய்வது? வயிறு காயுதே...

               உன்னை யாரும் கூப்பிட்டு சோறு வைப்பதில்லையா?”

               அந்தக் கொடுப்பினை கொக்குகளுக்கு இல்லை. கொக்கிலிருந்து மாறிய காகத்தை உனக்குத் தெரியுமா?”

               மனதுக்குள் சிரித்தபடி, “எனக்குத் தெரியாது. ஆனால், அதைக் கண்டுபிடிக்க ஒரு வழியிருக்கிறது. கொக்காக இருந்து மாறியதால், அந்தக் காக்கைக்கு கா... கா...' என்று கத்தத் தெரியாதாம். எந்தக் காக்கா கா... கா... என்று கத்தவில்லையோ அதுதான் நீ தேடும் காகம்.என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

               அன்றிலிருந்து கா... கா... என்று கத்தாத காகத்தை எதிர்பார்த்து ஒற்றைக் காலில் நிற்கத் தொடங்கியது கொக்கு.

               அன்றிலிருந்து எந்த இடத்தில் இருந்தாலும், காக்கைகள் மறக்காமல் கா... கா... என்றே கத்திக்கொண்டே இருக்கின்றனவாம்.

      இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதால் கொக்கு தன் உருவத்தை இழந்து உணவு தேடும் பழக்கத்தை மறந்து தவித்துக்கொண்டே ஒற்றைக்காலில் தவம் இருந்தது

 

 

கடவுளின் கவிதை

            -நெய்வேலி பாரதிக்குமார் 



 

               டைப்புக் கடவுள் அவசரமாக அழைத்ததன் பேரில் அவரது அவை பிற கடவுள்களாலும் அறிஞர்களாலும் நிரம்பியிருந்தது.

               கடவுள் எல்லோரையும் பார்த்து, “எனக்கு ஒரு சிக்கல். அதற்குத் தீர்வு காணவே உங்களை எல்லாம் அழைத்தேன்என்றார்.

               உங்களுக்குச் சிக்கலா?” வியப்புடன் கேட்டார் மழைக்கடவுள்.

               ஆமாம். நான் ஒரு கவிதை எழுத வேண்டும்... அது என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க வேண்டும்”.

               ப்பூ... இவ்வளவுதானா...! இந்த உலகத்தையே படைத்தவர் நீங்கள். கவிதை படைப்பதா பெரிய விஷயம்?” -பூமிக் கடவுள்.

               சிக்கல் அதில் இல்லை. மனிதர்களையும் படைத்துவிட்டு கூடவே பல ஆயிரம் மொழிகளையும் படைத்து விட்டேன். இதில் நான் எந்த மொழியில் எழுதினால் எல்லோருக்கும் போய்ச் சேரும்?”

               நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதுங்கள். உலகத்திலுள்ள அத்தனை மொழியிலும் மொழிபெயர்த்து விட கடவுள்களான நமக்குக் கஷ்டமா என்ன?” செல்வத்துக்கான கடவுள்.

               விஷயம் என்னவென்றால் நான் என்ன உணர்வில் கவிதையைப் படைக்கிறேனோ அதே உணர்வில் கவிதையை வாசிக்கிறவர்களும் உணரவேண்டும். உதாரணமாக நான் மழைச்சாரலில் நனைந்து பெற்ற இன்பத்தை, பனித்துளிகளை தொட்டு  கிடைத்த ஆனந்தத்தை நான் எப்படி உணர்ந்தேனோ அதே உணர்வில் மனிதர்கள் உணர வேண்டும்.

               இதுவரை பேசாமலிருந்த மொழிகளுக்கான கடவுள், “அது சாத்தியமில்லாத ஒன்றாயிற்றே. வெவ்வேறு மனநிலையுடன், வெவ்வேறு உணர்வுகளுடன் வெவ்வேறு சிந்தனைத் திறனுடன் மனிதர்களைப் படைத்துவிட்டோம் என்பதால்தானே அவரவர்களுக்கு ஏற்றாற்போல் இத்தனை ஆயிரம் மொழிகளைப் படைத்தோம்.

               அதுவுமில்லாமல், படிக்கிறவர்கள் அவரவர் கோணத்தில் உணர்வது தானே கவிதையின்  அடிப்படை இயல்பு... படைக்கிறவனது உணர்வுகளோடு இயைந்தே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லையேஎன்றார் இலக்கியத்துக்கான கடவுள்.

               கடவுள் புன்னகைக்கிறார். அந்த இலக்கணம் எல்லாம் மனிதர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு. கடவுளின் கவிதை எல்லாவற்றுக்கும் மேலானதாக இருக்க வேண்டும் அல்லவா?”

               அப்படியொரு கவிதை... எல்லோராலும் ஒரே உணர்வுடன் உணரப்படுகிற கவிதை... படைப்பது என்பது சிக்கல்தான். ஆனால் அதற்கு வழி இருக்கிறது... தமிழகத்தில் இருந்து சுப்பிரமணிய பாரதி எனும் கவிஞர் இங்குதான் நம்மோடு இருக்கிறார். 400, 500 வருடங்கள் அவருக்கு ஆயுள் அருளப்பட்டிருந்தால் எவ்வளவு அற்புதமான கவிதைகள் எழுதியிருப்பாரோ அத்தனையையும் தனது 39 வயதிலேயே எழுதிவிட்டார். அவரிடம் இதற்கு உபாயம் இருக்கக் கூடும்என்றார் கல்விக்கடவுள்.

               சுப்பிரமணிய பாரதி அவைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் கடவுளின் சிக்கல் சொல்லப்பட்டது.

               கேட்டதும் இடி, இடியென சிரித்தார் பாரதி. கடவுளே நீர் இதைத் தெரிந்து கேட்கிறீரா அல்லது தெரியாமல் கேட்கிறீரா?”

               உமக்குப் பதில் தெரியுமா?”-கடவுள்.

               நன்றாகத் தெரியும். நீங்கள் அப்படியான கவிதையை ஏற்கனவே எழுதிவிட்டீர்கள்.

               என்னது... நான் ஏற்கனவே எழுதிவிட்டேனா?”

               ஆமாம். அதுவும் ஒன்றல்ல... கோடிக்கணக்கில் எழுதிக் குவித்து விட்டீர்கள்.

               கோடிக்கணக்கிலா... நீங்கள் யாராவது வாசித்திருக்கிறீர்களா?” என்று அவையைக் கேட்டார் கடவுள்.

               எல்லோரும் தயக்கத்துடன் உதட்டைப் பிதுக்கினார்கள்.

               பாரதி, நீரே சொல்லிவிடும் பதிலை” - கடவுள்.

               எல்லோராலும் மொழிகளைத்தாண்டி ஒன்று போல் உணரக்கூடிய கவிதைகள் குழந்தைகள் தான்... அவர்களைத் தான் அன்றாடம் படைத்துக் கொண்டு இருக்கிறீர்களே...

               ஒருவராலும் மறுக்கமுடியாத அந்த உண்மையை எல்லோரும் கைதட்டி ஏற்றுக் கொண்டனர்.

               கடவுள் பெருமையோடு மர்மப்புன்னகை புரிந்தார்.

 

எறும்புக்கும் காலம் வரும்

-நெய்வேலி பாரதிக்குமார்




ன்றி தனது சக நண்பன் வண்டுடன் காலாற நடந்து கொண்டிருந்தது.

               வர வர, இந்த எறும்புகளின் அட்டகாசம் தாங்கவே முடியவில்லைஎன்றது பன்றி.

               ஏன்? அவை என்ன செய்கின்றன?” கேட்டது வண்டு.

               மனிதர்களுக்கும், நமக்குமான வித்தியாசம் ஒழுங்கின்மைதான்... ஆனால், இந்த எறும்புகள் எங்கு சென்றாலும் வரிசையில் தான் செல்கின்றன. நாளைக்கு வேண்டும் என்று இன்றைக்கே சேமிக்கின்றன...கண்ட இடத்தில் புரள்வது, புரண்ட இடத்தில் உறங்குவது என்று சுதந்திரமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்க, ஏன் இந்த எறும்புகள் மட்டும் பிடிவாதம் பிடிக்கின்றன?”

               உண்மைதான் மனிதர்களே ஒழுங்கைக் கடைபிடிக்காமல் கண்ட இடத்தில் காரித் துப்புகிறார்கள். நம்மைப் போல் மாறிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த எறும்புகளுக்கு ஏன் அதிகப் பிரசங்கித்தனம்?” என்று சலித்துக்கொண்டது வண்டு.

               நான் கூட எத்தனையோ முறை வரிசையில் புகுந்து கலைத்துப் பார்த்து விட்டேன். மறுபடி மறுபடி அதே வரிசையில் செல்கின்றன. ஒருவேளை அவை யாவும் பிறவிக் குருடர்களா?” என்றது பன்றி. அப்பொழுது அந்த வழியே தனது இரையைச் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு வந்தது ஒரு எறும்பு.

               பன்றி அதைப்பார்த்ததும், கேலியாக, “இந்த வாழ்க்கை நிலையற்றதாக இருக்கிறது நாங்கள் எதையும் சேமிக்காமல், இருக்கிறோம்... நீ ஏன் இத்தனை சிரமப்படுகிறாய்?”

               உழைப்பே பிரதானம்... ஒழுங்குக் கட்டுப்பாடுகளே உயிர் மூச்சு என நாங்கள் அன்றாடம் இயங்குவதால் நாங்கள் இனிப்பானவற்றை இழுத்துச் செல்கிறோம். ஒழுங்கற்ற சோம்பேறிகளான நீங்கள் உருட்டிச் செல்வதும், விரட்டிச் செல்வதும் எதை என்று யோசித்தீர்களா?” என்று கேட்டது எறும்பு.

               திகைத்துப்போன பன்றியும், வண்டும், “உழைப்பதாலும், கட்டுப்பாடுகளாலும் என்ன சாதித்து விடப் போகிறாய்?”

               விலங்காக இருப்பினும் பிற உயிர்களைக் கொன்று பிழைக்காத குரங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களானது போல், என்றேனும் ஒருநாள் நாங்களும் மனிதர்களாகலாம்... ஏன் மனிதர்களைக் கூடக் கடந்து செல்லலாம்...என்றபடி, எது மாறினாலும் நிலை மாறாமல் தமது இரையை இழுத்துக் கொண்டு சென்றது எறும்பு.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...