ஞாயிறு, 16 ஜூன், 2013

நூறைக் கடந்து.... வேரை மறந்து....


                               1913 ஆம் ஆண்டு மே -3 ந்தேதி சனிக்கிழமை அன்று மாலை தெற்கு மும்பையின் கிர்கான் பகுதியிலுள்ள காரனேஷன் வெரைட்டி ஹால் அரங்கில்தான் முதன் முதலில் இந்தியாவின் முழு நீள சலனத் திரைப்படம் திரையிடப்பட்டது. ராஜா ஹரிச்சந்திரா என்கிற அந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியவர் தாதா சாகிப் பால்கே. அவரது பெயரால்தான் இந்திய அரசு சினிமாத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
                முதல் முழுநீள சலனத் திரைப்படம் திரையரங்கில் திரையிட்டு மிகச்சரியாக 100 ஆவது ஆண்டினை எட்டும் இந்த வேளையில் இந்திய சினிமாவின் துவக்கத்தையும், அதற்காக துணிந்து சில அசாத்திய முயற்சிகளில் இறங்கிய இருவரைப்பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
                இந்திய சினிமா 100 என்கிற நீண்ட பயணத்தின் முதல் அடியை எங்கிருந்து துவங்குவது என்பது சற்று கடினமான விஷயம்தான். பால்கேவின் ராஜா ஹரிச்சந்திரா திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் முழு நீள மௌனப்படம் என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பாகவே  சிறு சிறு சினிமா முயற்சிகள் துவங்கிவிட்டன.
                1896-ல் அகஸ்டி நிக்கோலஸ் லூமியர், லூயிஸ் ழீன் லூமியர் சகோதரர்கள் எடுத்திருந்த ஆறு மௌனப்படங்களை, அவரது குழுவினர் இந்தியாவில் திரையிடும்பொருட்டு மும்பை வந்தனர். ஜூலை 7, 1896 அன்று மும்பை காலாகோடா பகுதியில் இருந்த வாட்சன் ஹோட்டலில் சில பார்வையாளர்களுக்கு அந்த படங்களை காண்பித்தனர்அங்கு பார்வையாளர்களில் ஒருவராக இருந்த ஹெச்.எஸ்.பி. வடேகர் ஒரு மூவி கேமராவை லண்டனில் வாங்கி, அதில் அன்றாட நிகழ்வுகளை சிறு சிறு செய்திப்படங்களாக எடுத்து திரையிட்டார்.
                1897-ல் எம். எட்வர்ட் என்கிற ஐரோப்பியர் தான் எடுத்த துண்டு படங்கள் சிலவற்றை சென்னை விக்டோரியா ஹாலில் திரையிட்டார். 1898 ஆம் ஆண்டு ஸ்டீவன்ஸன் என்பவர் கல்கத்தா வந்திருந்தார். அங்கு திறந்தவெளி மைதானம் ஒன்றில் தனது flower of persia  என்ற குறும்படத்தை திரையிட்டார்.
                அதே ஆண்டு கல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஹீராலால் சென் என்பவர் ஸ்டீவன்ஸனிடமிருந்து ஒரு கேமராவை விலைக்கு வாங்கி அதன் மூலம் A dancing scene  என்ற குறும்படத்தை எடுத்து, அதனை ஒரு சிலருக்கு போட்டு காண்பித்தார். அதுதான் இந்தியாவின் முதல் குறும்படமாக இருக்கக்கூடும். பிற்பாடு அவர் தனது சகோதரர் மோதிலாலுடன் சேர்ந்து ராயல் பயாஸ்கோப் என்ற கம்பெனி மூலம் சுமார் 42 சிறு படங்களை எடுத்தார்.
    1902-ல் ஜாம்ஷெட் ஃபிரேம்ஜி மதன் என்பவர் துண்டு படங்களை திரையிடுவதற்காகவே கெட்டித்துணியிலான கூடாரம் (டெண்ட்) ஒன்றை கல்கத்தாவில் அமைத்து வணிக ரீதியாக படங்களை காண்பித்தார். லாபகரமான தொழிலாக அது இருக்கவே நிரந்தரமான அரங்கை கட்டத் தீர்மானித்த ஜாம்ஷெட்ஜி கல்கத்தாவில் 1907-ல் எஸ்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ் என்ற பெயரில் திரையரங்கு ஒன்றைக் கட்டினார். அதுதான் இந்தியாவின் முதல் திரையரங்கம், இன்றும் கல்கத்தாவில் புகழ்பெற்று விளங்கும் அந்த திரையரங்கின் இன்றைய பெயர் சாப்ளின் சினிமாஸ்.
                லூமியர் சகோதரர்கள் தயாரித்த சில துண்டு படங்களை அவரது குழுவினர் இந்தியாவெங்கும்டூர்' அடித்து திரையிட்டனர். அதனால்தான்டூரிங் சினிமா' என்ற பெயர் வந்ததுஅவ்வாறு அவர்களால் காண்பிக்கப்பட்ட life of jesus  என்ற படத்தைப் பார்த்து திரைப்படத்துறைக்கு இந்தியாவில் வித்திட்டவர்கள் மஹாராஷ்ட்ராவின் திரையாம்பகேஷ்வரில் பிறந்த பால்கேவும், கோவையில்  பிறந்த சாமிக்கண்ணு வின்சென்ட்-டும்தான்.
                1870-ல் பிறந்த பால்கே பரோடாவிலுள்ள கலாபவன் பயிற்சிப்பள்ளியில் சிற்பம், ஓவியம், புகைப்படக்கலை ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டார். தொல்லியல் துறையில் பணிக்குச்சேர்ந்த பால்கே ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார். அச்சகம் குறித்த தொழில்நுட்பங்களை அறிய ஜெர்மன் சென்ற அவர் அங்கு நவீன புகைப்படக் கருவிகள் பற்றி அறிந்தார். அதற்குப்பிறகு இந்தியா வந்த அவர்  life of jesus  படத்தைப் பார்த்தது முதல் தனது இலக்கு ஒரு திரைப்படத்தை இயக்குவதுதான் என்று தீர்மானித்தார். அந்த முயற்சியின் விளைவேராஜா ஹரிச்சந்திரா'
                1883-ல் பிறந்த சாமிக்கண்ணு வின்சென்ட் இரயில்வே துறையில் திருச்சி நகரில்  பணியாற்றிகொண்டிருந்த போது 1905-ஆம் ஆண்டு ஃபதே எனும் சினிமா ப்ரொஜெக்ஷன் கம்பெனியின் ஊழியர்டூபாண்ட்' என்பவர்  life of jesus  படத்தை இந்தியாவெங்கும் திரையிட்டபடி திருச்சி வந்து சேர்ந்தார். இந்தியாவின் தட்பவெப்பம், இடைவிடாத ஊர்சுற்றல் காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட டூபாண்ட் வின்சென்ட் சந்தித்தார். தன்னால் தொடர்ந்து திரையிடல் பணியை செய்ய முடியாது என்பதால் தன்னிடமுள்ள கருவிகள், திரைப்படச் சுருள்களை 2000 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளும்படி கூறினார். மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் இருந்த வின்சென்ட்க்கு  அது இமாலயத் தொகைதான். ஆனாலும் எதிர்காலத்தில் இது இந்தியாவெங்கும் ஈர்க்கக்கூடிய துறை என்பதை முன் கூட்டியே உணர்ந்த வின்சென்ட், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொகையைத் திரட்டி அவற்றை வாங்கினார். இரயில்வே வேலையை விட்டுவிட்டார். ஊரூராக டெண்ட் அடித்து, மக்களைக்கவர மின்விளக்குகள் வைத்து திரையிடல் பணியை செய்தார். மௌனப்படங்கள் என்பதால் சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் சில மேஜிக் நிகழ்ச்சிகளை இடையிடையே செய்து காண்பித்தார். நிரந்தர திரையரங்கம் கட்டவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கோவையில் 1914-ல் வெரைட்டி ஹால் என்ற பெயரில் ( இன்றைய பெயர் டிலைட்) ஒரு திரையரங்கை கட்டினார்.. சினிமா புரஜெக்ஷன் கருவிகளை தருவிக்கும் வினியோகஸ்தராகவும் இருந்தார்.
                பேசும் படங்கள் வர ஆரம்பித்த காலத்தில்வள்ளித்திருமணம்' என்ற படத்தையும், பின்னர்ஹரிச்சந்திரா மற்றும் சுமத்திர பரிணயம்' போன்ற படங்களையும் தயாரித்தார்.
                சாமிக்கண்ணு வின்சென்ட் ஒரு சினிமாக்காரர் மட்டுமல்ல.. அவர்தான் முதன் முதலில் மின் அச்சகத்தை நிறுவியவர். அதோடு மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும் கட்டியவர். இரண்டுக்கும் தேவைப்படும் மின்சாரத்துக்காக மின்னுற்பத்தி ஆலையையும் உருவாக்கியவர். ஆலைகளுக்கு பயன்பட்டதுக்குப் போக  உபரி மின்சாரத்தை பள்ளி உபயோகத்துக்கும், கோவையின் பொதுமக்கள் உபயோகத்துக்கும் தந்தார். நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் சாத்தியப்படும் கூறுகள் பெரும்பாலனவற்றை முயற்சித்து அதில் வெற்றி கண்டவர் சாமிக்கண்ணு.
                பால்கேவுக்கும், சாமிக்கண்ணு வின்சென்ட்டுக்கும் ஆச்சர்யகரமான பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும்  life of jesus  படத்தால் ஈர்க்கப்பட்டு திரைத்துறையை தேர்வு செய்தவர்கள். இருவரும் அடிப்படையில் புகைப்படக்காரர்கள். இருவருமே ட்ராஃப்ட்ஸ்மேனாக வேலை பார்த்து சினிமாவுக்காக பாதியில் வேலையை விட்டவர்கள். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் ஹரிச்சந்திராவை தயாரித்தவர்கள். அச்சகம் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தவர்கள். இருவருக்கும் மேஜிக்கில் சிறிது பரிச்சயம் உண்டு. இளம் வயதில் மனைவியை இழந்தவர்கள். இப்படி பல...
                இருவருக்கும் உள்ள வேற்றுமை பால்கே பெயரால் சினிமாத்துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பெயர் அவரளவுக்கு பரவலாக கவனப்படுத்தப்படவில்லை. தியோடர் பாஸ்கரன், இயக்குனர் செந்தமிழன் ( பாலை ), நியாஸ் அகமது போன்ற ஒரு சிலரே அவரைப்பற்றி விரிவாக பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

                திரையிடல் கலை நூறாண்டைக் கடக்கும் நிலையில், சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரால் கௌரவமிக்க விருது ஒன்று வழங்கப்படவேண்டும். அவரது  படங்களும், இன்னும் அரிய பொக்கிஷங்களாக விளங்கும் துவக்க கால படங்களும்  ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்வருடங்கள் உருண்டோட, உருண்டோட கொண்டாட்டங்களால் நிறைவதல்ல வரலாறு. சரித்திரத்தை மாற்றியமைத்தவர்களை மறக்காமல் அங்கீகரிப்பதன் மூலம் வரலாறு நிறைவுகொள்கிறது.

நன்றி: கல்கி- 19,மே -2013.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...