மடல் அவிழ் பொழுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மடல் அவிழ் பொழுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 அக்டோபர், 2012

ஜெயமோகனிடமிருந்து...

          கடிதங்களை ஆவணப்படுத்துதல் என்பதை விட அதில் செறிந்த கருத்துகளை ஆவணப்படுத்துதல் அவசியமாகிறது. என்றோ யாராலோ எழுதப்பட்டு நம் பாதுகாப்பில் பத்திரமாயிருக்கும் இந்திய உள்நாட்டு அஞ்சல் தாள்கள் சில சமயங்களில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தக்கதாய் இருந்து விடுகிறது. எழுத்தாளுமைகளின் படைப்புகளில் அவர்களின் கடிதங்களும் இடம் பெற்று விடுகின்றன... அவர்களின் சிந்தனை வீச்சுகளால்.

           திரு.ஜெயமோகன் எனக்கும் கடிதமெழுதியிருக்கிறார் என்ற பெருமிதப் பீற்றலால் அல்ல இப்பதிவு.  அக்கடிதங்களில் விரவிக்கிடக்கும் அவர்தம் கருத்துக்களை சக நண்பர்கள் முன்வைக்கும் நோக்கமெனக் கொள்ளலாம்.
          மடல் அவிழ் பொழுதெல்லாம் மணம் பரப்பும் மலர்களாய் இவை...

31.8.02 தேதியை முத்திரையிட்ட கடிதம் ஒன்று...


அன்புள்ள பாரதிக்குமார் அவர்களுக்கு,
 

         தங்கள் கடிதம் கிடைத்தது. உண்மைதான். என் மீது பலதரப்புகளிலிருந்து கடுமையான விமர்சனம் உள்ளது. அதற்குப் பல காரணங்கள். முக்கியமானது நான் முன்வைக்கும் விமர்சனங்கள். பெரும்பாலான எழுத்துக்களை நிராகரிக்காமல் தீவிரமான விமர்சனங்களை முன்வைக்க முடியாது இல்லையா? அப்போது கடுமையான கோபதாபங்கள் உருவாவதை தடுக்க முடியாது. இம்மாதிரி கோபதாபங்களுடன் இருப்பவர்கள் பொதுவாக வாசகர்கள் அல்ல. ‘சிறு' எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆக முஸ்தீபு எடுப்பவர்கள். தங்களால் எழுதிவிட முடியும் என்றோ தாங்கள் எழுதுவது முக்கியம்தான் என்றோ உறுதியாக நம்ப முடியாதவர்கள். இவர்கள் உருவாக்கும் பிரச்சாரத்தை நம்பி என் நூல்களைப் படிக்காமலே கருத்துக்களை உருவாக்கிக் கொண்டுள்ள எளிமையான சிலர். ஆனால் இவர்கள் இருசாரரையுமே நான் பொருட்படுத்துவதில்லை. என் வாசகர்கள் என் நூல்கள் மூலமே என்னைப்பற்றிக் கணிப்பார்கள்.
 

           www.marutham.com என்று ஒரு சிற்றிதழ் இணையத்தில் கொண்டுவர முயற்சியில் இருக்கிறேன். ஏற்கனவே சொல்புதிது என்ற இதழை நான் நடத்துவதை அறிந்திருப்பீர்கள்.
 

          இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் என்று ஒரு தத்துவநூலை எழுதியுள்ளேன். அதை சீக்கிரத்தில் வெளியிடவுள்ளோம்.
 நவீனத்துவத்திற்குப் பிறகு தமிழ்க்கவிதை இருவகையில் முக்கியமானது. ஒன்று தமிழ் கவிமரபின் ஒரு சுருக்கமான சித்தரிப்பை அது அளிக்கிறது. மேற்கத்திய நவீனத்துவ / பின்நவீனத்துவ மரபின் சித்திரத்தையும் அளிக்கிறது. பிறகு தேவதேவனை அவ்வடிப்படையில் விமர்சித்து மதிப்பிடுகிறது. அறிமுக நூல் என்ற முறையிலும் அது முக்கியமானதே.


அன்புடன்,
ஜெயமோகன்.



31.10.02 முத்திரையிட்ட ஒரு இந்திய அஞ்சல்...

அன்புள்ள பாரதிக்குமார்
 
        தங்கள் கடிதம் கிடைத்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? தீராநதி கட்டுரை வாசிக்கிறீர்களா? அது ஒரு புதுவகை உத்தி. மேலோட்டமாக கண்ணில் படும் விஷயங்களை சகஜமாக சொல்லிப்போகும் பாணியில் உள்ளோட்டமாக வேறு சில விஷயங்களைக் குறிப்பிட்டு போகும் முறை அது. குற்றால அருவி வழியும் குளிர்ந்த பாறை லாவா உறைந்து உருவானது. அதேபோல், மனம் என்றால் என்ன என்ற வினாவை எழுப்பிக் கொள்ளும் கட்டுரை அது எனக் கூறலாம். குளிர்ந்த சகஜத்தின் அடியில் கொதிக்கும் பித்து உள்ளது. நாம் எல்லோருமே எப்போதாவது நம் மனதின் கட்டுக்கடங்காத நிலையை எண்ணி அஞ்சியிருப்போமல்லவா? அந்த கணத்தை தொட முயலும் கட்டுரைதான் அது. பரவலாக அது கவனிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் இருக்கிறது எனக்கு.
 

         www.marutham.com என்ற இணையதளம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் இணைய இதழ் இது.

அன்புடன்,
ஜெயமோகன்.


20.1.04 முத்திரையிட்ட அஞ்சல் ஒன்று...

அன்பிற்குரிய பாரதிக்குமார் அவர்களுக்கு,
 

         தங்கள் கடிதம் கிடைத்தது.
 

         நெய்வேலியில் பா.சத்தியமோகன் எனக்கு பிரியமான நண்பர். அவரும் கடிதம் எழுதி இருந்தார். சங்கச்சித்திரங்கள் உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கடிதத்திற்கு நன்றி.
 

          இலக்கியம் என்ற பேரிலும் சரி, மேடைப்பேச்சு கடிதம் அனைத்திலும் சரி. பொது ஊடகத்தில் அலங்காரமான பொய்களை சொல்வதற்கு நாம் பழகி விட்டிருக்கிறோம். எழுதினால் பேசினால் கேட்பவரை மகிழ்விப்பதே முதல் நோக்கம் என்றாகி விட்டிருக்கிறது. மெதுவாக உண்மையை பேச ஊடகமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது இல்லையா?
       

          சங்க சித்திரங்களை எழுதும் போது முன்கூட்டியே நான் எனக்கு போட்டுக்கொண்ட நிபந்தனை ‘உண்மையை' மிகையின்றி எழுதுவது என்பது ஒன்று. இரண்டு ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் வாசிப்பவனின் வாழ்பனுபவங்களையே தீண்ட வேண்டும் அவன் சொந்த வாழ்வை வேறு ஓர் ஒளியில் காட்ட வேண்டும் அது. அதற்குத்தான் சங்க சித்திரங்களில் ஒவ்வொரு கவிதையும் என் சொந்த வாழ்வில் என்னை எப்படி பாதித்தது என்று எழுதினேன். இம்மாதிரி ஒரு வாசிப்பு முறை உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்.
            உங்கள் கடிதத்தைக் கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் பேசுவது மறுபக்கத்து சமான இதயத்திற்கு கேட்கிறது என்ற மகிழ்ச்சி. எத்தனை மலினப் படுத்தப் பட்டாலும் கூட நவீன மொழியில் நம்மை தொடர்புறுத்த முடிகிறது என்ற திருப்தி. ஒருவேளை இலக்கியம் என்பதே இதனால்தான் போலும் எழுதப்படுகிறது. பழகி தேயும் மொழியை முடிவின்றி புதுப்பிக்க.

-ஜெயமோகன்.

 

ஞாயிறு, 15 ஜூலை, 2012

மடல் அவிழ் பொழுது - 2

திரு. கோவை ஞானி அவர்கள் 7/10/02-ல் எனக்கு எழுதிய கடிதமொன்று...

அன்பு நண்பருக்கு வணக்கம்,

      உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இடையில் நிறைய வேலைகள். உடனடியாக பதில் எழுதவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். தங்கள் கேள்விகளுக்கு சுருக்கமான பதில் எழுதுகிறேன்.

      உங்கள் உணர்வுகள் நேர்மையானவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக என் பாராட்டுக்கள். இனி என் பதில்கள்.

       1. தமிழகத்தில் மார்க்சியர் எப்பொழுது எப்படி எல்லாம் தடம் புரண்டு போனார்கள் என்பது பற்றி நிறையச் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்தோடு அவர்கள் கடுமையாக முரண்பட்டது ஒரு பெரும் தவறு. திராவிட இயக்கத்தின் இனப்பார்வைதான் இவர்களுக்குப் புலப்பட்டதே தவிர அதன் உள்ளடக்கமாக இருந்த தமிழ்த் தேசிய இனப் பார்வையை இவர்கள் பார்க்கவில்லை. தமிழின் தொன்மை மேன்மை முதலியவற்றை இவர்கள் வெறுத்தனர். மார்க்சியம் வந்த பிறகுதானே உலகத்திற்கு ஒளி வரமுடியும் என்று இவர்கள் உண்மையாகவே நம்பினர். வள்ளுவர் பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை.

       சோவியத் ரஷ்யா எதைக் கொண்டாடுகிறதோ அதையே இவர்கள் கொண்டடினர். மேற்கத்திய மார்க்சியரை இவர்கள் மதிக்கவில்லை. மார்க்சின் மொழிப்பற்றைக் கூட இவர்கள் ஏற்கவில்லை. மார்க்சியத்தை அதன் உள் ஆழங்களோடு இவர்கள் கற்கவில்லை. இந்திய வரலாற்றின் தனித்தன்மை இவர்களுக்கு புலப்படவில்லை. கட்சிக்கு மட்டுமே இவர்கள் முதல்மரியாதை தந்தனர். கட்சிக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. இன்றளவும் இவர்களுக்கு ஆழமான தமிழ்ப்பற்று இல்லை. பாரதிதாசனை இவர்கள் இன்றுதான் மதிக்கின்றனர். மக்களுக்கு எதிராக கட்சி செயல்பட்டதை இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களை மார்க்சியர் என்று நாம் மதிக்க வேண்டியதில்லை. இவர்களுக்குத் தமிழ்ப்பற்று இல்லை, தமிழ்த்தேசிய உணர்வு இல்லை, இயற்கை மீது அக்கறை இல்லை. இந்தியா தான் இவர்கள் தேசம். பா.ஜ.வினரை விட இவர்கள் நேசம் அதிகம். இவர்களைப் பற்றி நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

       2. தி.க.சி. என்னைப் பாராட்டியது எனக்கு வியப்பளிக்கிறது. தி.க.சி.யின் மதிப்பீடு எப்பொழுதுமே கேள்விக்குரியது. எனினும் அவரது அன்பை நான் மதிக்கிறேன். மார்க்சியர், தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றை பெரும் சங்கடத்தோடு தான் ஏற்கத் தொடங்கினார். வர்க்கப் பார்வைக்குள் இவை எப்படி வரும் என்ற கேள்வியைக் கூட ஒதுக்கிவிட்டுத் தலித்தியம் முதலானவற்றை இன்று ஆதரிக்கின்றனர். மக்களிடம் கட்சி செல்வாக்குப் பெறுவதற்கு வேறு என்ன செய்ய முடியும்? எனினும் இவர்களுக்குப் பின்நவீனத்துவம் முதலியவற்றோடு இன்னும் உடன்பாடில்லை. பின்நவீனத்துவத்தினுள்ளும் இருக்கிற இடதுசாரிப் பார்வை எனக்கு உடன்பாடு. அப்புறம் இந்துத்துவம் ஒரு பெரிய சிக்கல். இந்து மதம் வேறு, இந்துத்துவம் வேறு என்று நாம் வேறுபடுத்த வேண்டும். இந்துமதம் பன்முகப் பார்வைகளைக் கொண்டது. நாத்தீகனும் இதற்க்குள் இடம் பெறலாம். கடவுளர்க்கு உருவங்கள் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். இந்துத்துவத்திற்கு ஒரே முகம் தான் உண்டு. அது முதலும் முடிவுமாக மதவாத அரசியல், ஆதிக்க அரசியல். இவர்களுக்கு மதம் என்பது கூடப் புரியாது. இப்படி நாம் வேறுபடுத்திப் பார்ப்பதை பலர் ஒப்புக்கொள்வதில்லை. தி.க.சி. அவர்களுக்கும் இது புரியவில்லை.

        நான் இந்துத்துவத்தை அணு அளவும் ஏற்கவில்லை. இந்து மதத்தோடும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் கடவுள் முதலியவை இன்றும் தேவை. கட்சி இவர்களுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. அரசு இருக்கும் வரை வர்க்க வேறுபாடுகள் இருக்கும் வரை மதமும் இருக்கும் என்று கூறியவர் மார்க்ஸ். ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கிற மதத்தோடு நமக்கு உடன்பாடில்லை. மக்களின் விடுதலைக்கு மதமும் பணிபுரிய முடியும். கிறிஸ்த்துவத்தினுள் விடுதலை இறையியல் என்று ஒரு போக்கு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயமோகன் இந்துத்துவவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயமோகன் மார்க்சியத்திற்கு எதிரி இல்லை.

       3. கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனிலும் சரி, இங்கும் சரி வரலாற்று இயக்கத்தோடு ஒத்துச் செல்லவில்லை. மாஸ்கோ விசாரணை என்ற பெயரில் ஸ்டாலின் தன் கருத்தோடு முரண்பட்டவர்களை ஒழித்துக் கட்டினார். இப்படி ஒழிக்கப்பட்டவர்களில் ஒருவர் புகாரி. இவர் ஒரு அசலான தத்துவ அறிஞர். லெனினால் மதிக்கப்பட்டவர். கோர்பசேவ் காலத்தில் ஸ்புட்னிக் இதழில் இவரைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளிவந்தது. கோர்பசேவ் ஆவணக் காப்பகத்தைத் திறந்து விட்டு குறுகிய காலத்தில் மூடிவிட்டார்.

        புகாரின் முதலிய ஆயிரக்கணக்கானவர் பழைய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றனர். கோர்பசேவ் காலத்தில் “மாஸ்கோ நியூஸ்” என்ற ஓர் இதழ் வெளிவந்தது. முன்பு மறைக்கப்பட்ட எத்தனையோ உண்மைகள் அந்த இதழில் வெளிவந்தன. பிறகு அந்த இதழும் மூடப்பட்டது. வரலாற்றை மூடி மறைப்பதில் எல்லா அரசியல்வாதிகளும் திறமையானவர்கள் தான். இதில் கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு சொல்ல வேண்டியதில்லை. ஆவணக் காப்பகத்திலிருந்து எதுவும் வெளிப்படவில்லை என்பது வடிகட்டிய பொய். இதையெல்லாம் உண்மையா பொய்யா என்று தெளிபடுத்துவதற்கு இவை பற்றிப் பேசுபவர் எந்தளவுக்கு நேர்மையானவர் என்பதை அவரோடு பழகும்போது  நாமே அளந்து கொள்ளலாம். எனக்கு அவர்களைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரியும். மார்க்சியன் இப்படிப் பொய்யனாக இருப்பதன் மூலம் மார்க்சியத்தின் மரியாதையைக் கெடுக்கிறான். மார்க்சியம் இன்று மதிக்கப்படாததற்கு இப்படியும் ஒரு காரணம். தமிழ்நேயத்திற்கு நன்கொடை தேவை. தமிழ்நேயம் அனுப்புகிறேன்.

                                       தங்கள்,
                                      ஞானி (கி. பழனிச்சாமி).
                                      கோவை.
                                       7. 10. 02.

ஞாயிறு, 24 ஜூன், 2012

மடல் அவிழ் பொழுது

(ஜெயமோகன் 2006ல் தான் எழுதுவதை சில காலம் நிறுத்தப் போகிறேன் என அறிவித்த சமயம் நானெழுதிய கடிதத்துக்கு அவரனுப்பிய பதில் இது. )
அன்புள்ள பாரதிகுமார் அவர்களுக்கு,

       தங்கள் கடிதம் கிடைத்தது. நட்புடனும் உரிமையுடனும் தாங்கள் எழுதியதைக் கண்டேன்.
          தமிழில் இலக்கிய வாதிகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ 45 வயதில் அவர்களுக்கு பெரிய தேக்கமொன்று நிகழ்வதைக் காணலாம். அந்த ‘கண்டத்தை' தாண்டி எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. நா. பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற சிலரே திரும்பி வந்தனர். பிறர் அப்படியே நின்றுவிட்டனர். பிடிவாதமாக எழுதிய சிலரோ தங்களையே பிரதியெடுத்தனர், ஒப்புக்கு எழுதி நீர்த்துப் போயினர். இது தமிழில் உள்ள தவிர்க்க இயலாத இரும்புவிதி ஒன்றையே காட்டுகிறது.
நான் முன்னரே அதைப் பற்றி சிந்தனை செய்துள்ளேன். பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவ்வயதில் அவர்களுக்கு குடும்பப் பொறுப்பு அதிகமாகிறது. குழந்தைகள் உயர்நிலைப்பள்ளி தாண்டுகிறார்கள். பணச்செலவு கூடுகிறது. இரண்டு, அலுவலகத்தில் முதல் பதவி உயர்வு கிடைக்கிறது. புதிய வேலையும் புதிய பொறுப்புகளும் வந்து சூழ்கின்றன. இதையொட்டி குடும்பத்தின் அழுத்தம் அவன் மீது ஏறுகிறது. வாசிக்க, எழுத, பயணம் செய்ய நேரமும் மனநிலையும் கூடுவதில்லை. மன எழுச்சிகள் நிகழ்வதில்லை.
         இவை புறக் காரணங்கள். இலக்கியம் சார்ந்தும், சில காரணங்கள் இருக்கலாம். ஒன்று, எல்லா எழுத்தாளர்களும் இளமைப் பருவம் தொடங்கி வாலிபப் பருவம் வரை சுற்றியலைந்து அறிந்தவற்றை எழுதுகிறார்கள். பதினைந்து வருடங்களுக்குள் அவை எழுதி எழுதிக் காலியாகிவிடுகின்றன. இரண்டு, அவனது எழுத்தைச் சுற்றி ஒரு எதிர்பார்ப்பு வளையம் உருவாகிவிடுகிறது. அவன் என்ன எழுதுவதென்பது அவ்வாறாகத் தீர்மானமாகி விடுகிறது. அதைத் தாண்ட முடிவதில்லை. மூன்று, அவனைச் சுற்றிய கோபதாபங்களின் வலையில் அவனுடைய உணர்ச்சிகளும் சிக்கிக் கொள்கின்றன. அவற்றுக்குத் தன்னை அறியாமலேயே எதிர்வினையாற்றி அவன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில் தேங்கி விடுகிறான்.
          மேலும் முக்கியமான ஒரு சிக்கல் உள்ளது. அது ஆன்மீகமானது. எழுத்தாளனை இப்படி வகைப்படுத்திக் கொள்ளலாம். அவன் உலகியல் சார்ந்த தளத்துக்கும் அதைத் தாண்டிய ஓர் ஆன்மீகத் தளத்திற்கும் இடையே ஆடும் ஊசல். இங்கிருந்து அங்கு நோக்கி எழுகிறான். அங்கே நின்றபடி இந்த தளத்தை மதிப்பிடுகிறான். இதில் ஏதேனும் ஒரு தளத்தை முற்றாகச் சாரும்போது அவனுடைய எழுத்து நின்றுவிடுகிறது. தல்ஸ்தோய் ஆன்மீகம் நோக்கி நகர்ந்தவர். நம் எழுத்தாளர்கள் உலகியல் நோக்கிச் செல்கிறார்கள்.
          உலகியலில் ஆழ்ந்த பற்று எழுத்தாளர்களின் வரமும் சுமையுமாகும். அறவுணர்வு, அழகுணர்வு என்னும் இரு தளங்களில் அவனில் இது வெளிப்படுகிறது. அதுவே அவன் ஆக்கங்களின் சாரம். ஆனால் அது அவனைக் கட்டிப் போடுகிறது. ஏதோவொரு கட்டத்தில் உலகியல் பல மடங்கு விசை கொண்டு அவனை இழுத்து மேலெழாது செய்துவிடுகிறது. ஆகவே தான் துறவிகளுக்கு இணையாகவே எழுத்தாளனுக்கும் நிலையின்மை நெறியாக வகுக்கப்பட்டுள்ளது. அவன் அலைய வேண்டும், ஓடியபடியே இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
          புதிய நிலக் காட்சிகள் புதிய மனிதர்கள் வழியாக சென்றபடியே இருப்பது எழுத்தாளனுடைய கற்பனைக்கு உரமூட்டுவது. அறிந்த வாழ்க்கை, பழக்கத்தின் களிம்பால் மூடப்பட்டுள்ளது. புதிய நிலம், புதிய மனிதர்கள் அவன் முன் புதிதாகப் பிறந்து எழுகிறார்கள். ஆகவே தான் துறவி மூன்று நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தங்கலாகாது என வகுத்தது மரபு. பாவலர் பரிசில் வாழ்க்கையை தேர்ந்தனர். கம்பனும் காளிதாசனும் அப்படித்தான் வாழ்ந்தனர். நாமறியும் எல்லா ஐரோப்பிய படைப்பாளிகளும் அப்படித்தான் வாழ்கிறார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு அந்த வாய்ப்பே இல்லை.  மாறாக, அவனுக்கு விதிக்கப்பட்ட எளிய வாழ்வின் ஓயாத லெளகீகப் போராட்டத்தில் அவன் தன் நேரத்தையெல்லாம் இழக்கிறான். உள்ளத்து ஆற்றலை சிதறடிக்கிறான். சில துளிகளை எப்படியோ மீட்டுக் கொண்டு சிலவற்றை எழுதுகிறான்.
நான் நிறைய எழுதினேன் என்றால் அதற்கு இரு புறக்காரணங்கள் உள்ளன. ஒன்று, என் வழி எழுத்துதான் என முடிவு செய்துகொண்டு பிற அனைத்தையும் விலக்கினேன். பதவி உயர்வோ பிற உலகியல் வெற்றிகளோ வேண்டாமென மறுத்துக் கொண்டேன். அதற்கேற்ப தனிப்பட்ட தேவைகளை சுருக்கிக் கொண்டேன். இரண்டு, என் குடும்பமும் வேலையும் எனக்கு நேரமும் மனநிலையும் அளிக்கக் கூடியனவாக அமைந்தன. ஓரளவு பயணங்களும் வாய்த்தன.
         இப்போது என் 44வது வயதில் என் வாழ்க்கையில் ஒரு தேக்கத்தை நானே உணர்கிறேன். மாறாத அலுவலக வாழ்க்கை சலிப்பு அளிக்கிறது. வீடு-அலுவலகம்-வீடு என என் அகநிலக்காட்சிகள் எல்லை கொள்கின்றனவா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. பயணங்களுக்காக, புதியனவற்றுக்காக அகம் ஏங்குகிறது. தமிழில் எழுதி இதிலிருந்து நான் விடுதலை பெற இயலாது. எழுதி நான் பயணங்களுக்காக பொருளீட்ட இயலாது. (இப்போது கிடைக்கும் மிக சொற்பத் தொகையைக் கண்டே இலக்கிய வணிகம் என்று இகழ ஆளிருக்கிறது)
          இத்தருணத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பு எனக்கு வந்துள்ளது. வரவிருக்கும் பாலாவின் திரைப்படம். அதிகமில்லையேனும் பொருட்படுத்தத் தக்க அப்பணம் எனக்கு ஏராளமான பயண  வாய்ப்புகளை அளிக்கிறது. முழுக்க முழுக்க சுற்றியலைந்து அதை செலவிட எண்ணியுள்ளேன். என் இருபது வயதில் இருந்த அதே வேகத்துடன் அலைய வேண்டுமென்ற கனவு. அமர கால் தரிக்கவில்லை. வீட்டில், அலுவலகத்தில், எங்கும்.
         திரைப்படச் செயல்பாடு சார்ந்து எனக்கு எவ்விதமான கனவுகளும் எதிர்பார்ப்புகளுமில்லை. உண்மையில் திரைப்படத்தையே நான் ஒரு பொருட்படுத்தத் தக்க கலைவடிவமாகக் கருதவில்லை. ஆனால் அதன்மீது நன்றியுடனிருக்கிறேன். என்னை இவ்வயதுக்குரிய தேக்கத்திலிருந்து மீட்பது அது அளிக்கும் பணம்தான்.
         எழுதுவதை மீண்டும் தோன்றினாலொழிய தொடர்வதில்லை என்று முடிவு செய்ய பல உடனடிக் காரணங்கள் இருக்கலாம். சுந்தர ராமசாமியின் மரணம் முதல் உருவானதொரு மீள் நோக்கு ஒன்று. அதுவொரு அதிர்ச்சிதான். கோபங்கள் மோதல்கள் மூலம் நீளும் விவாதங்களைப் பற்றிய ஒரு ஐயம் ஆழமாக எழுந்துவிட்டது. இன்னொன்று, ‘கொற்றவை'. நான் இப்போதிருக்கும் சிறகுகளால் பறக்க சாத்தியமான உச்சகட்ட உயரமிதுவே. இனி இதை பிரதி செய்ய முயலக்கூடாது. மீண்டும் கூடிருந்து புதிய சிறகடைய வேண்டும்.
இன்னொரு எண்ணம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கூடிய கும்பலின் வேகத்தைக் கண்ணுற்றதும் எழுந்தது. குட்டி ரேவதி, பிரபஞ்சன், வெளி.ரங்கராஜன், பா.செயப்பிரகாசம், அ. மார்க்ஸ் எத்தனை தரப்புகள் அதில். அந்த ஒற்றுமை! அது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிரான கோபமல்ல. எந்த சிக்கலிலும் மாட்டாத எம்.யுவனுக்கு எதிராக எல்லா படைப்பிலக்கியவாதிகளுக்கும் எதிராக நிகழ்ந்த வன்முறை. தொடர்பே இல்லை என்றாலும் ‘பரீக் ஷா  ஞாநி' என்னையும் வசைபாடினார். அது அவர்களால் புரிந்து கொள்ள முடியாத படைப்புத் திறன் என்ற ஒன்றுக்கு எதிரான சினம். ஆனால் அது உண்மையான ஆங்காரம்தான். ஒரு முறையேனும் ஒரு எழுத்தாளனையேனும் பாராட்டாதவர்கள் வசைபாட மட்டும் ஒன்று திரண்டெழுகிறார்கள். எழுத்தாளனே தமிழ்நாட்டின் ஆகப்பெரிய நசிவு சக்தி என்கிறார்கள் இவர்கள். ஒழித்துக் கட்டுவோம் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
          எப்போதுமே நான் இவர்களை இம்மி கூடப் பொருட்படுத்தியதில்லை. இப்போதும் அப்படித்தான். ஆனால் ஒரு கணத்தில் அது தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும்பான்மையின் குரலாகக் கேட்டது. படைப்பு சக்திக்கு தடைபோடுவதையே அது எக்காலமும் செய்து வந்துள்ளது. இதனுடன் போராடித்தான் கம்பன் எழுதினான், பாரதி எழுதினான், புதுமைப்பித்தன் எழுதினான். இன்று படைப்பூக்கத்துடன் எழுதும் ஒவ்வொருவரும் எழுதுகிறார்கள். ஒருபோதும் இக்கும்பலால் படைப்பு சக்தியை தடுக்க, வெல்ல இயலாது. ஆனால் ஒருகணம் தோன்றியது, சரி கொஞ்ச நாள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்ல. ஒரு தற்காலிக வெற்றியை அவர்களுக்கு தரலாமே. சரி, ஒருவனை ஒழித்து விட்டோம் என அவர்கள் விட்டு விடட்டுமே. இவர்களிடமிருந்து துண்டித்து ஓடிவிட வேண்டும் என்று ஒரு தருணத்தில் பட்டது. இவர்களை நினைப்பது கூட எப்படியோ என் ஆழத்தை தூர்க்கச் செய்துவிடும். கொஞ்ச நாள் மேலும் வசை. மேலும் அவதூறு. அவ்வளவுதான். அந்த அவகாசத்தில் என் ஊற்றை வேறு எங்கோ நானே தேடிக் கண்டடைகிறேன்.
**

         இந்நாட்களில் மீண்டும் பயணம் செய்தபடி இருக்கிறேன். மண்ணில், மதநூல்களில். இருபது வயதில் நான் பேரிலக்கியங்களில் அலைந்தேன். இவ்வயது மதம் நோக்கி செலுத்துகிறது. பைபிள் (1995ல் புதுத் தமிழாக்கம் செய்யப்பட்ட கத்தோலிக்க பைபிள் ஒரு பேரிலக்கிய ஆக்கம்) வேதங்கள், உபநிடதங்கள், சமண நூல்கள்...
         இவ்வருடம் முழுக்க சமணத் தலங்களுக்குச் செல்ல திட்டம். தமிழக சமணக் கோயில்களுக்கு சென்று மீண்டபின் சிரவண பெலகொலா சென்று கர்நாடக மாநிலச் சமணத் தலங்களில் நீண்ட பயணம் மேற்கொண்டு இப்போதுதான் திரும்பினேன். உடனே மீண்டும் கிளம்பவிருக்கிறேன்.
மீண்டும் எழுதலாம். எங்கோ அதன் விதை ஈரம் காத்துப் புதைந்திருக்கிறது. பார்ப்போம்.

அன்புடன்,
ஜெயமோகன்,
28/02/2006.

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...