தலைவா...
-நெய்வேலி பாரதிக்குமார்
மனிதர்கள்
தங்களுக்குள் தலைவர்களைத் தேர்வு செய்வதைப் பார்த்து, பறவைகள் தங்களுக்குள் ஒரு
தலைவனைத் தேர்வு செய்ய ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன. எல்லாப் பறவைகளும்
தங்களது தனிச்சிறப்புகளைச் சொல்லி, தங்களைத் தலைவராகத் தேர்வு
செய்யச்சொல்லி வேண்டுகோள் விடுத்தன.
முதலில் மேடையேறிய ஃபீனிக்ஸ் பறவை, “நான் சாம்பலில் இருந்து உயிர்ப்பவன்”
என்றது.
“உன்னைச் சாம்பலாக்கியது யார்? அவனை
பிறகு என்ன செய்தாய்?” என்று கேட்ட போது அது திருதிரு என
விழித்தது.
““ஃபீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து
உயிர்க்கும் என்பதெல்லாம் அறிவியல் கோட்பாட்டின்படி உண்மையில்லை ஆகவே உன்னைத்
தேர்வு செய்ய முடியாது” என்றன மற்ற பறவைகள்.
“நான் பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிப்பேன்” என்றது அடுத்து வந்த அன்னப்பறவை.
“நீயும் பொய்தான் சொல்கிறாய். உன்னால் பாலையும் தண்ணீரையும்
பிரிக்கும் திறன் இல்லை. ஆனால் இந்தப் பொய்யை ரொம்ப நாளாக சொல்லிக்கொண்டுத்
திரிகிறாய். நீ சொல்வது உண்மையே என்றாலும் ஒரு வகையில் நீ பிரிவினைவாதி. ஆகவே
உனக்குத் தகுதியில்லை” என்றன பிற பறவைகள்.
“தலையில் விளக்கைச் சுமந்து கொண்டே திரிபவன் நான்” என்றது மின்மினிப் பூச்சி.
“உன்னைத் தவிர பிறருக்குப் பயன்தராத வெளிச்சம், ஒரு
சுமையே” என்று பதிலளித்தன பறவைகள்.
“நான்தான் பலம் மிக்கவள்” என்றது
நெருப்புக் கோழி.
“அத்தனைப் பெருமையையும் மண்ணுக்குள் தலையை புதைத்து கெடுத்துக்
கொள்கிறாயே!”
கடைசியாக, கொசு தனது பாடலை இசைத்துக்கொண்டே
வந்தது.
“மற்றவர்கள் பாடினால் இனிமையாக கேட்பார்கள். நான் பாடினால் மனிதர்கள்
எச்சரிக்கையடைவார்கள். குரல் மெலிதாயினும் மிரள்பவர்கள் அதிகம்” என்றது கொசு.
மறுப்பேதும் இல்லாமல் மதிப்பெண் கிடைத்தது.
“நம்மை அச்சுறுத்தும் மனிதர்களின் இரத்தத்தை நம் பறவை இனத்தவர்கள்
சார்பாக அதிகம் உறிஞ்சிக் குடிப்பதும் நான்தான்.”
மதிப்பெண் எண்ணிக்கையில் மற்றொன்று கூடியது.
“உங்களை எல்லாம் என்றாவது ஒரு நாள் அழித்து விடுவார்கள். என்னை
அழித்துவிட முடியுமென்ற நம்பிக்கை எவருக்குமே இல்லை. காரணம் மனிதர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டைச் சுற்றி மழை நீரை
தேங்க வைப்பதாலும், கழிவு
நீரை அகற்றாமலும், குப்பைக் கூளங்களை சுத்தம் செய்யாமலும் அழுகிய பழங்களை சாலையில்
வீசும் வரையிலும் என்னை யாராலும் அழிக்க முடியாது ஹா.. ஹா.. ஹா..”
மறுபேச்சு இல்லாமல் சேர்ந்தது மற்றொரு மதிப்பெண்.
“எல்லாவற்றுக்கும் மேலாக யாரைச் கடித்து ரத்தத்தைக் குடிக்கிறேனோ அவர்களிடமே கைதட்டு பெறுவது நான்தான்” என்றது கொசு.
“ஆஹா நீ தான் எங்களின் தலைவன்” என்று
பாராட்டிக் கைத்தட்டின பறவைகள்.
“தலைவர்” பதவி கிடைத்த மகிழ்ச்சியில் தனது
வெற்றி கீதத்தை இசைத்தபடி, இன்னும் பறந்து கொண்டிருக்கிறது கொசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>