சனி, 21 ஆகஸ்ட், 2010

Looking for Comedy in Muslim World

எல்லோரும் குழந்தையாகிற அரிதான சந்தர்ப்பங்களை நகைச்சுவை மட்டும்தான் வழங்குகிறது. திரையரங்குகளில் எப்பொழுதாவது நீங்கள் திரைப்படம் பார்ப்பதை வி்ட்டுவி்ட்டு அரங்கில் அமர்ந்து ரசிக்கும் மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? நகைச்சுவை காட்சிகள் வருகிற சமயத்தில் மீசை நரைத்த, சுருக்கங்கள் விழுந்த குழந்தைகளை காண முடியும். அத்தனை இருட்டையும் மீறி அவர்களது முகத்தில் மினுக்கும் பிரகாசத்தை நீங்கள் உணர முடியும்.


Albert Brooks
நமக்கு அருளப்பட்டிருக்கிற இந்த வாழ்வு சதாசர்வமும் சோகக் காட்சிகள் அல்லது இறுக்கமான பொழுதுகள் நிரம்பியதாகவே இருக்கிறது. எல்லோருமே போலியான சிரிப்பு ஒன்றை ஏந்தியபடியே அலைகிறோம். மனம் விட்டு சிரித்தல் என்பது நமது ஒட்டு மொத்த வாழ்வின் நிமிடங்களை சதவிகித கணக்கில் வகை பிரித்தால் மிகச் சொற்பமானதாகவே இருக்கும். அவரவர் வாழ்வில் அதி முக்கியமான தினங்கள் என்று பட்டியலிட்டால் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது பள்ளி நாட்களோ அல்லது கல்லூரி நாட்களோ அந்தப்பட்டியலில் முதலாவதாக இடம் பெறும். அதற்குப்பிறகு நாம் கடக்கும் நிமிடங்களெல்லாம் கடினமானவையாகவே இருக்கும்.

Michael Glacchino


நம் திரைப்படங்களில் நகைச்சுவை கூட பெரும்பாலும் அடுத்தவரை துன்புறுத்துவதாகவோ அல்லது தன்னை தாழ்த்துவதாகவோ அமைந்து விடுகிறது. இந்த திரைப்படம் இதிலிருந்து சற்று வேறுபட்டு சமகால வாழ்வில் யதார்த்தமாக நிகழும் நகைச்சுவையான விஷயங்களை படம் பிடிப்பதாக இருக்கிறது. 


அமெரிக்க அரசு பிற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கான யுக்தியினைத் தேடி சில ஆய்வுகளை நடத்த முடிவு செய்கிறது. அதன் ஒரு கூறாக ‘இஸ்லாமிய மக்களிடம் நகைச்சுவை உணர்வு என்கிற விஷயத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்கிறது. அந்தக் குழு அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான ஆல்பர்ட் புரூக்ஸ் இடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறது. அவர் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்து, ஒரு ஆய்வறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவர் பிரயாணம் செய்யும் நாட்கள், ஆய்வறிக்கை தயார் செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், அதன் பின்விளைவுகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
                    
“யதார்த்தமான நகைச்சுவை“ என்று இந்தப் படத்தைக் குறிப்பிடலாம். இதில் வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை என்று எந்தக் காட்சியிலும் இல்லை. படத்தில் யாரும் துன்புறுத்தப்படவில்லை. இகழப்படவில்லை. அவரது செயல்பாடுகளும், அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. உரையாடல்களில் கூட வார்த்தை விளையாட்டு எதுவும் இல்லை. ஆனால் படம் பார்க்கும் நீங்கள் உங்களை அறியாமல் சிரித்து விடுவீர்கள்.

உதாரணமாக, புரூக்ஸ்-ஐ ஆய்வுப் பணிக்கு கேட்டுக் கொள்ளும் அதிகாரிகளுக்கும், புரூக்ஸ்-க்கும் இடையே நடக்கும் உரையாடல்.
       
                 “புரூக்ஸ், நீங்கள் இஸ்லாமிய மக்கள் எது மாதிரியான நகைச்சுவையை விரும்பி ரசிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் 500 பக்க அளவில் அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும்“
                          
               “500 பக்கமா...?
           
            குழுவின் தலைவர் தன் சக அதிகாரியிடம் “வழக்கமாக ஒரு அரசு அறிக்கை எத்தனை பக்கங்கள் இருக்க வேண்டும்?

             “850 பக்கங்கள் இருப்பது மரபு. 500 பக்கங்கள் என்பது மிகக் குறைவுதான்

           இன்னொரு அதிகாரி, கவலைப்பட வேண்டாம். அதை யாரும் படிக்கப்போவதில்லை. ஒருவேளை எடை போட்டுப்பார்ப்பார்கள். நீங்கள் வரைபடங்களை கூட சேர்த்துக்கொள்ளலாம். பக்க கணக்குக்காக...“

இன்னொரு அதிகாரி அதற்காக முழுதும் வரைபடங்களாகவே இருந்து வி்டக்கூடாது

புரிகிறது. ஆனால் அது என்ன கணக்கு? 850 பக்கங்கள். 500 பக்கங்கள்...

இந்தக்குழு செய்யும் செலவினங்களுக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும்

ஒரு அரசு நியமிக்கும் குழுக்கள் அதன் ஆய்வுகள் அதன் விளைவுகள் இன்ன பிற லட்சணங்கள் வெளிப்படும் அற்புதமான காட்சி இது. ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டு முதலில் இந்தியா வருகிறார். தனக்கு உதவியாளராக மாயா என்கிறப் பெண்ணை தேர்வு செய்கிறார்.நெரிசல் மிக்க பகுதிகளில் நின்று கொண்டு நகைச்சுவை துணுக்குகளை எதிர்ப்படுபவர்களிடம் சொல்கிறார். தனி நபர் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்துகிறார். மக்கள் பெரிதும் ரசிக்க வில்லை. அவரால் இந்திய மக்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க இயலவில்லை. பாகிஸ்தான் செல்வதற்கான அனுமதி அவருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. எனவே இந்திய எல்லையை ரகசியமாக ஒரு ஏஜென்ட் மூலம் கடந்து அங்குள்ள காமெடியன்களை சந்திக்கிறார். அவர்களது சிரிப்பு செயற்கை நிறைந்ததாகவும் சில சமயம் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது. அத்துடன் இவர் இந்தியாவுக்கு வந்த வழியே திரும்புகிறார்.

பிரச்சினை  அதற்குப் பிறகுதான் துவங்குகிறது.  இந்தியாவில்  உள்ள  பாகிஸ்தான்  தூதரகத்தில்  அவரது நடவடிக்கைகள்  தீவிரமாக  விவாதிக்கப்படுகின்றன.  இந்திய உள்துறை அமைச்சகத்தில் அவர்  மீது  சந்தேகம்  எழுகிறது.  இரு நாட்டு  அதிகாரிகளும் புரூக்ஸ் தங்கள் நாட்டுக்கு எதிராக ஏதோ சதிவேலை செய்கிறார் என்று முடிவுக்கு வருகிறார்கள். இருநாட்களுக்கு இடையே நடந்து வரும் அமைதிபேச்சு வார்த்தை இதனால் தடைபடுகிறது. இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதியில் இராணுவ துருப்புக்களை நிறுத்தி வைக்கின்றன. அணு ஆயுதங்களை தயார் நிலைப்படுத்துகின்றன.

ஆல்பர்ட் புரூக்ஸ் ஆய்வை நிறுத்திவிட்டு உடனே நாடு திரும்பும்படி அமெரிக்க அரசு அவருக்கு ஆணை இடுகிறது. ஆல்பர்ட் புரூக்ஸ் நாடு திரும்பி அதுவரை தான் தயாரித்த 6 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கிறார். அத்துடன் அந்த ஆய்வு கைவிடப்படுகிறது?

பொதுவாக இந்திய மக்கள் சமாதானப்பிரியர்கள். அதே நேரத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். உற்றுக்கவனித்தால் நம் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் அடிப்படை என்பதை உணரலாம்.

சார்லி சாப்ளின் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் ஆளுமை என்பது திரைப்படத்துறையில் வேறுவிதமானது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பல்வேறு பிரச்னைகளை இருவரும் இயல்பாக நையாண்டி செய்யும் திறன் படைத்தவர்கள்.


ஆல்பர்ட் புரூக்ஸ் மெனக்கெட்டு எதையும் புனையாமல் இயல்பான நகைச்சுவையால் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். யதார்த்த வாழ்வில் நாம் சிரிப்பை தொலைத்துவிட்டு யோகா பயிற்சியில் சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யும் காட்சியை படத்தில் வெகு சாமர்த்தியமாக வைத்திருக்கிறார்.

நல்ல நகைச்சுவை என்பது எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக இந்தப்படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இந்தியர்கள் எப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு படைத்தவர்கள் என்பதை அறிய இந்தியாவில் நடைபெறும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் எதையும் பார்க்கவோ அல்லது இந்திய நகைச்சுவையாளர்கள் எவரையும் சந்திக்கவோ ஏன் புரூக்ஸ் முயற்சிக்கவே இல்லை என்ற கேள்வி படத்தை பார்க்கும்போது எழுவது இயல்பே. படத்தில் இது போன்ற கேள்விகளுக்கு இடமளிக்கும் காட்சிகள் சிலவும் உள்ளன. அவற்றைத் தவிர்த்துவிட்டு பார்க்கையில் இந்தப்படம் சிறந்ததொரு யதார்த்த நகைச்சுவைப்படம்.

படத்தின் உச்சபட்ச காட்சியில் புரூக்ஸ் நாடு திரும்பியதும் அவருக்கு சிறு விருந்து அளிக்கப்படுகிறது. அதில் புரூக்ஸ்ன் மனைவி புரூக்ஸ் செய்த ஆயவின் பின் விளைவுகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் மிக உன்னதமான செயல் முடித்து நாடு திரும்பியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்என்கிறார். அறையிலிருக்கும் தொலைக்காட்சியில் இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளும் பதற்றம் நிலவியதாக இருக்கின்றன. அமைதிப்பேச்சு வார்த்தை முறிந்து போனதுஎன்று செய்தியில் அறிவிப்பு காட்டப்படுகிறது. அழகான காட்சியமைப்பின் மூலமே இரு வேறு நிலைப்பாடுகளை உணர்த்தும் அற்புதமான இடம் இது.

அமெரிக்க அரசு எங்கும் நுழைந்தாலும் அது இன்னொரு யுத்தத்துக்கான முகாந்திரமாக அமைந்து விடுகிறது என்பதையும் உணர்த்துகிறது. படத்தின் இசையமைப்பாளர் மிக்கேல் கியாசினோவையும், உடையலங்கார நிபுணர் எவர்ட்ன் மற்றும் ஆடையணியும் பழக்கங்கள் பற்றி முறையே அறிந்து அதற்குத்தக்க தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். குறிப்பாக புரூக்ஸ் நாடு திரும்பியதும் தன் பெண் குழந்தைக்கு இந்திய புடவை மற்றும் ரவிக்கையை வாங்கிவர அந்தக்குழந்தை அவற்றை அணிந்துக்கொண்டு நடைபயிலும் காட்சி கொள்ளை அழகு.

பிக்கலும் பிடுங்கலும், சிக்கல்களும் சிடுக்குகளும் நிறைந்த நமது வாழ்வைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளின் கயிறு அவிழ்க்க முடியாத முடிச்சுக்களோடு இறுகிக்கிடக்கிறது. நகைச்சுவை என்கிற உணர்வுதான் அவ்வப்போது நம்மை தளர்த்துகிறது. கலை, இலக்கியங்களின் பணியும் நோக்கமும் கூட மனிதர்களை விடுவிப்பதுதானே....அந்த வகையில் பார்த்தால் நகைச்சுவைப்படங்களும் எனதுபார்வையில் கலைப்படங்களேயாகும்.


சனி, 14 ஆகஸ்ட், 2010

‘கலை'க்காகத் திரண்ட மக்கள் (Shwaas)


‘கலை கலைக்காக' என்றும், ‘கலை மக்களுக்காக' என்றும் இரு வேறு வாதப் பிரதிவாதங்கள் எல்லா மொழியிலும், எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கலைக்காக மக்கள் திரண்ட சம்பவம் அங்கொன்று இங்கொன்றாக சரித்திரம் சந்தித்திருக்கிறது. மராத்தி மொழியில் வெளியான shwaas(சுவாசம்) என்னும் திரைப்படம் அப்படியான மெளனப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது.


வணிக சாத்தியக் கூறுகள் அதிகமுள்ள மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தி திரைப்படங்களின் நெரிசலுக்கு இடையே மராத்தி மொழிப் படங்கள் சவலைப் பிள்ளையாகவே இருந்து வருகின்றன. இந்தித் திரையுலகில் நுழைய முயற்சிப்பவர்கள் கிடைக்கும் இடைவெளியை நிரப்ப மராத்தி படங்களை எடுத்து வந்தனர்.

இந்திய அரசால் வழங்கப்படும் ‘தங்கத் தாமரை' விருது 1954ல் shyamach Aai என்ற படம் பெற்றபிறகு கிட்டத்தட்ட 50 வருடங்கள் வேறு எந்த மராத்தி படமும் அந்த விருதைப் பெறவே இல்லை என்ற நிலையில் shwaas திரைப்படம் அந்த விருதைப் பெற்று ,மராத்தி மொழிப் படங்களின் திருப்புமுனையாகவும் இருக்கிறது.


சந்தீப் சாவந்த்

புனேயில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மராத்தி பெண் எழுத்தாளர் மாதவி கர்புரே ஒரு பத்திரிகையில் தீபாவளி மலருக்காக எழுதிய கதைதான் shwaas. இந்தக் கதையை வாசித்த கணக்குப் பதிவாளர் விஸ்வனாத் நாயக் இது பற்றி நாடக நடிகர் அருண் கடவாலேயேவிடம் தெரிவிக்க, கதையால் ஈர்க்கப் பட்டு, தான் இயக்கும் முதற்படத்துக்காக நல்ல கதையைத் தேர்வு செய்யும் முயற்சியிலிருந்த இயக்குனர் சந்தீப் சாவந்துக்குப் பிடித்துப் போனது.

படத்தின் கதை மிகச் சுருக்கமானது. முதியவர் விசாரே(அருண் கடவாலே) தன் 10 வயது பேரக்குழந்தை பரசுராமுக்கு ஏற்பட்ட பார்வைக்குறைவை சரி செய்ய பட்டணத்துக்கு வந்து, பிரபல மருத்துவர் ஸானேவிடம் காண்பிக்கிறார்.பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் retino blastoma எனப்படும் கண் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஸானே... அறுவை சிகிச்சை தவிர வழியில்லை, அதுவும் விரைவில் செய்தாக வேண்டுமென்கிறார். பரசுராமின் உயிரைக் காக்க, பார்வை பறிபோவதை தவிர்க்க முடியாதென்கிறார்.

பரசுராமிற்கும் அவனது பெற்றோர்க்கும் தகவல் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் விசாரேவுக்கு. நோயாளிக்கு சிகிச்சை முறை பற்றிய அறிவுறுத்தலும், அறிவித்தலும் சட்டப்படி நியாயமெனினும் பத்து வயது பிள்ளையிடம் உனது கண்பார்வையை பறிகொடுத்தே உன் உயிரைத்தக்க வைக்க வேண்டுமென தெரிவிக்க, தேற்ற, மிரண்டு திகைக்கிறார் விசாரே.

அவருக்கு துணை வந்த சமூக சேவகி ஆஸ்வாரி, மருத்துவர் ஸானேவிடம் மன்றாடி, அவர் மூலமே பரசுராமுக்குத் தெரியப்படுத்துகிறார்.

முதலில் அழுது ஆர்பாட்டம் செய்தவன் நிலைமையின் தீவிரம் புரிபட ஓய்ந்து போகிறான். குறித்த தேதியில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றான். எதிர்பாராவிதமாய் அறுவை சிகிச்சை ஒரு நாள் தள்ளிப் போகிறது. படுக்கையிலேயே நாள் முழுதும் இருக்கச் சலித்தவனைச் சமாளிக்கப் பாடாய்ப் படுகிறார் விசாரே. மூடிக்கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கும் போது மட்டுமே அமைதியாகிறான் அவன். வெளியுலகக் காட்சிகளுக்கான அவனது ஏக்கம் புரிகிறது விசாரேவுக்கு.

திடீரென மருத்துவமனை அறையிலிருந்து மாயமாகின்றனர் பாட்டனும் பேரனும். மருத்துவர் ஸானேயும் நிர்வாகமும் பதைக்கின்றனர். தகவல் வெளிக்கசிய பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மருத்துவமனைக்குப் படையெடுத்து யூகங்களாலும் கேள்விகளாலும் திணறடிக்கின்றனர். மருத்துவர் ஸானே மிகுந்த கோபமாகிறார்.

பொழுது சாயும் நேரத்தில் விசாரேயும் பரசுராமும் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். பரசுராம் கையில் ஏகப்பட்ட விளையாட்டு பொம்மைகள். எதிர்ப்படும் ஸானே, விசாரேயைக் கடுமையாகத் திட்டுகிறார்.

பரசுராமுக்கு பார்வையிருக்கப் போகும் இந்த ஒரே ஒரு நாளாவது அறைக்குள் அடைந்து கிடக்காமல் புறவுலகின் எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், அவனையொத்த வயதினருடன் குதூகலமாக விளையாடி மகிழவும் தான் வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார் விசாரே.அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஸானே, கடிந்து கொண்டதற்குப் பிராயச்சித்தம் போல், அறுவை சிகிச்சை செய்யப் போகும் அறையை குழந்தைகள் விரும்பும் பொருள்களைக் கொண்டு வண்ணமயமாக அலங்கரிக்க, பணியாளர்களுக்கு உத்தரவிடுகிறார்.

பரசுராம் ஒளியிழந்த தன் விழிகளைக் கண்ணாடிக்குள் ஒளித்து ஊர் திரும்ப, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு அவனை வரவேற்க நிற்பதுடன் படம் நிறைவடைகிறது.

இப்படம் இந்தியாவின் அதிகாரப் பூர்வமான திரைப்படமாகப் பரிந்துரைக்கப் பட்டு ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப் படுகிறது. பிறகுதான் மராத்தி மக்களின் உணர்வுப் பூர்வமான எழுச்சியை நாம் உணரும் நிகழ்வுகள் நடந்தன

அமெரிக்காவில் தயாரித்து திரையிடப்படும் பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் எளிதாக ஆஸ்கார் விருதுக்குப் பரிசீலிக்கப் படும். பிறமொழிப் படங்கள் ‘சிறந்த அயல்மொழித் திரைப்படம்' எனும் பிரிவில் மட்டும் பரிசீலிக்கப்படும். படத்தை நடுவர்கள் மற்றும் ஆஸ்காரின் 5835 உறுப்பினர்கள் கண்டு அவர்கள் மனதில் படம் பற்றிய மதிப்பை பதிய வைக்க செலவு பிடிக்கும் மெனக்கெடுவைச் செய்ய வேண்டும். ஏனெனில், உலகம் முழுக்க ஏற்கனவே பிரபலமான படங்கள் உறுப்பினர்களிடையேயும் அறியப்பட்டிருக்கும். பிற மொழி படங்கள் பற்றி ஆஸ்கார் குழுவினரிடம் பிரபலப்படுத்த படத்தை தயாரித்தவர்கள்தான் முயற்சிக்கவேண்டும். அமீர்கான் கூட ‘லகான்'படத்துக்காகவும், பின்னர் ‘தாரே ஜமீன்பர்' படத்துக்காகவும் நிறையச் சிரமப்பட்டார்.

shwaas படத்தை தயாரிக்க ஆன செலவை (30,00,000) விட அதிக தொகை படத்தை முன்னிறுத்த(promote) தேவைப்பட்டது. மஹராஷ்ட்ராவில் உள்ள ஜோஹேஸ்வரி பள்ளிக் குழந்தைகள், விளக்குகள் தயாரித்து விற்றுக் கிடைத்த ரூ.30,000 பணத்தை தந்தனர். வேறொரு பள்ளி மாணவர்கள் பகுதி நேர வேலையாக கார்களைத் துடைத்து அதில் கிடைத்த தொகையை அனுப்பினர். சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்தார். அமிதாப்பச்சன் ரூ.ஒரு லட்சமும், கோவா அரசு 2.5 லட்சமும், மகாராஷ்டிர அரசு 15 லட்சமும் தந்தனர். அமெரிக்காவிலுள்ள மகராஷ்டிர மக்களிடம் திரட்டிய பணம் மற்றும் மகாராஷ்டிர நாடக அமைப்புகள் 65,000 ரூபாயும், சித்தி வினாயகர் ஆலய நிர்வாகிகள் தனியொரு உண்டியல் மூலம் திரட்டி தந்த சிறு தொகையும் பயன்படுத்தி 14 முறை ஆஸ்கர் குழுவினர் பார்ப்பதற்காகத் திரையிடப்பட்டது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் மக்களை ஈர்த்து பெருந்திரளாகச் சேர்ப்பது கூட அரிதாகி விட்ட சூழலில், ஒரு மாநில மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒரு திரைப்படத்தின் பின்னே திரள வைத்தது பெரும் எழுச்சி என்று சொல்லலாம்.

படத்தில் சிறுவனாக நடித்த அஸ்வின் சிட்டாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றான். shwaas திரைப்படம் ஆஸ்கார் விருதை தவறவிட்டாலும், பெரும்பாலான மக்கள் திரளும் திருமண மண்டபங்கள், பள்ளி அரங்குகளில் மக்களாலே பல முறை திரையிடப்பட்டு மராத்தியர்களிடையே தனக்கென ஒரு இடம் பிடித்தது.

40கோடி,50கோடி முதலீடு செய்து ஒரு படத்தை தயாரிக்கத் தயாராய் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதுபோன்ற வெகு குறைந்த முதலீட்டில் வருடத்துக்கு ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தால் மக்கள் அவர்கள் பின் திரளமாட்டார்களா என்ன?

(கல்கியில் பிரசுரமானது)

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...