நாடு முழுவதும் இது விவாதத்துக்கு உட்படுத்தவேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தனியார் நிறுவனங்கள் வேலைக்கான விளம்பரங்களை வெளியிடும்போது 10-15 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டிருந்தது. ஆனால் இப்போதெல்லாம் கல்லூரியிலிருந்து வெளிவந்த சூட்டோடு சான்றிதழ் வருமுன்பே, பணியிலமர்த்த தயாராயிருக்கின்றன நிறுவனங்கள்!
அனேகமாக இன்னும் பத்து வருடங்களுக்குள் நாம் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற எச்சரிக்கையுணர்வு இல்லாமல் நாம் சமகாலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இளைஞர்களை மிகக் குறைந்த வயதில் பணியிலமர்த்த முன்வருவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
1. இளம் வயதினராய் இருப்பதால் நிர்ணயித்த சம்பளம் தனக்கான குடும்பச் செலவு குறைந்த நிலையில் பெரும் தொகையாக தோற்றமளிப்பது.
2. பணி உயர்வும் சம்பள உயர்வும் அதற்கிணையான உழைப்பை சத்தமின்றி உறிஞ்சிக் கொள்வது கவனத்தில் கொள்ளப்படாதது.
3. நாற்பது வயதாகும் போது நிறுவனத்தின் நிதி நிலைமை அல்லது தனி நபர்களின் திறமையின்மை என்று ஏதேனும் காரணங்களைச் சொல்லி வேலையை விட்டு அனுப்ப எளிதாகும்.
4. நாற்பது வயதுக்குப் பின்னான பதவி, பண உயர்வு அவசியமற்றுப் போதல். மேலும் அவ்வயது தாண்டி நெருங்கும் நோய்களுக்கான மருத்துவ செலவையும் ஏற்க வேண்டியதில்லை.
இப்படியான காரணங்கள் இருப்பதால் நாற்பது வயதை நெருங்கும் நபர்களை வீட்டுக்கு அனுப்பும் வழிகளை நிறுவனங்கள் தேடத் துவங்குகின்றன.
இது அபாயகரமானது. ஒரு நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என்பதை அரசுகளோ, பொதுமக்களோ இன்னும் உணராமல் இருக்கின்றனர்.
வேலையில்லை என்ற முடிவை எடுக்க 28 வயது வரை பார்த்துவிட்டு, ஒரு இளைஞனால் தனக்கான, நிலையான தொழிலைத் தானே துவங்க வாய்ப்பு இருக்கிறது. எந்த முடிவை எடுப்பதற்கும் குடும்பம் என்ற கட்டு இல்லாமல் துணிச்சலாக இயங்க முடியும்.
ஆனால், 40 வயதில் தனக்கு வேலையில்லை என்று தெரியவந்தால் ஒரு மனிதன் எப்படி தனக்கான இடத்துக்காக மறுபடி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க முடியும்?
‘ஆட்குறைப்பு' என்ற ஆயுதத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குபவை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் அந்த நிறுவனங்களுக்கு, முதலீடு செய்த தேசத்தின் பிரஜைகள் பற்றிய அக்கறையோ கவலையோ இருக்காது.
நாளடைவில் இதற்கொரு பொது விவாதம் நிகழ்த்தி இது போன்ற நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கு ஒரு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
இலக்கியங்களானாலும், ஊடகங்களானாலும் ஒரு சமூகத்தின் கண்ணாடியாக நிகழ்ந்து, சமகாலப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்க வேண்டும்.
நமது திரைப்படங்களில் எத்தனை படங்கள், இப்படியான ஜீவாதாரமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன என்ற கேள்வி அண்மையில் Heart Beat Detector என்ற பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்த்த பிறகு தோன்றியது.
ஜெர்மனியில் தலைமையகத்தைக் கொண்ட வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஃப்ரான்சில் இயங்கி வருகிறது. தனது நிறுவனத்தில் ஒரு புறம் புதிய இளைஞர்களை வேலைக்குச் சேர்த்தபடி, மறுபுறம் தனது ஊழியர்களை (2500 பேரிலிருந்து 1200 பேராக) குறைக்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதன் உச்சகட்டமாக நிறுவனத்தின் C.E.O. மத்தியாஸ் ஐஸிப்பை மனநிலை சரியில்லாதவர் என்று நிரூபிக்கும் ஆதாரங்களோடு வரும்படி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி (H.R.) சைமனை அனுப்புகிறது.
சைமன் அந்த நிறுவனத்தில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து ஊழியர்களை மனதளவில் உற்சாகப்படுத்த வந்ததாக தன்னை மத்யாஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மத்தியாஸ் உண்மையில் ஒரு வயலின் கலைஞர். அது மட்டுமில்லாமல் நிறுவனத்தின் சில ஊழியர்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை ஏற்கனவே நடத்தி வந்தவர். ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஒரு முக்கியமான இசைக்கலைஞர் ஏரோன் வீட்டுக்கு அனுப்பப்பட, இசைக்குழு கலைக்கப்பட்டு விடுகிறது. அப்பொழுதெல்லாம் அதைப் பற்றி அக்கறை கொள்ளாத தலைமையகம் இப்பொழுது திடீரென இதற்காக ஒரு அதிகாரியை அனுப்புவது பொருந்தவில்லையே என்று யோசித்த மத்தியாஸ், தன்னை வெளியேற்றத் தான் சைமன் வந்திருக்கிறார் என்பதை யூகித்து விடுகிறார்.
மத்தியாஸின் தனிச் செயலர் இஸபெல்லாவிடம் மத்தியாஸின் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டறிகிறார் சைமன். இஸபெல்லாவும் இசைக்குழுவில் இருந்தவர் என்பதோடு மத்தியாசுக்கும் அவருக்கும் நெருக்கமான காதல் உறவு இருந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. ஆனால் தலைமையகத்தில் மேலதிகாரியாக இருக்கும் கார்ல் ரோஸ் என்பவர் இஸபெல்லாவை, மத்தியாஸ் மனநிலை சரியில்லாதவர் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கும்படி மிரட்டிப் பணியவைத்ததாக இஸபெல்லா கூறுகிறார்.
இஸபெல்லா தந்த குறிப்பேட்டின்படி மத்தியாஸ் ஒரு முறை நிறுவன அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது தடுமாறியதையும், இரண்டுமுறை தாமதமாக வந்ததையும், ஒரு முறை மயக்கமடைந்ததையும் நாள் மற்றும் நேரக் கணக்குப்படி ஆதாரம் தரப்பட்டது.
மத்தியாசின் மனைவி லூசி, சைமனைச் சந்தித்து மத்தியாசின் மகன் இறந்து போன நிகழ்விலிருந்து மத்தியாஸ், மிகவும் மனம் உடைந்திருப்பதால், அவரைப் பணி நீக்கம் செய்து துன்புறுத்த வேண்டாமென்று கெஞ்சுகிறார்.
சைமன் மீண்டும் ஒரு முறை மத்தியாசை சந்தித்து சில விளக்கங்களைக் கேட்கிறான். அப்போது தலைமையகத்தில் உள்ள கார்ல்ரோஸின் உண்மையான பெயர் கார்ல் க்ராஸ் என்றும் அவர் ஒரு லெபனீஸ் சைல்ட் (ஜெர்மனியில் ஹிட்லருடைய ஆணைகளை நிறைவேற்றவும், அவரைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட படையில் பணியாற்றிய வீரர்கள் மரணமடைய நேர்ந்தால், அவர்களுடைய குழந்தைகளை ஏதேனும் ஒரு ஜெர்மானியன் தத்தெடுத்து வளர்க்க வேண்டும்; அப்படித் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு லெபனீஸ் சைல்ட் என்று பெயர்) என்றும், தான் போலந்து நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவர் மனதில் இன்னமும் ஹிட்லர் கால நினைவுகளோடு தன்னை பலிகடா ஆக்க முயற்சிப்பதாகவும் மத்தியாஸ் கூறுகிறார். சைமன் பதிலேதும் சொல்லாமல் வெளியேறுகிறான். இதன் காரணமாக, மத்தியாஸ் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப் படுகிறார். மருத்துவ மனையிலிருக்கும் அவர் மீது எந்த அறிக்கையும் தயார் செய்ய இயலாமல் சைமன் உயரதிகாரி கார்ல் ரோஸிடம் தன் இயலாமையைத் தெரிவிக்கிறான்.
அவரோ சைமனைக் கடிந்துகொள்கிறார். மத்தியாசை வீட்டுக்கு அனுப்பத்தான் சைமனை நிர்வாகம் அனுப்பியதே தவிர பரிதாபப் பட அல்ல என்று கோபமாகப் பேசுகிறார்.
சைமன் மத்தியாசை மனிதாபிமானத்துடன் மருத்துவமனையில் சந்திக்கிறார். அங்கு மத்தியாஸ் சைமனிடம் மூன்று அநாமதேயக் கடிதங்களைத் தருகிறார். அதில் மத்தியாசின் தந்தையும் ஹிட்லரின் படையில் போலந்து நாட்டில் பணியாற்றியவர். அத்துடன் அவர் போலந்து நாட்டில் அப்போதிருந்த யூதர்களை கூட்டம், கூட்டமாக ‘காஸ் சாம்பரில்' (Gas champer) கொன்று பல இடங்களில் புதைக்கும் பணியிலிருந்தவர் என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதை மத்தியாஸ் சைமனிடம் கொடுத்ததற்கு முக்கியக் காரணம் தன் குடும்பத்துக்குக் கூட ஹிட்லர் படையுடன் தொடர்பிருந்தது என்று நிரூபிப்பதன் மூலம் உயரதிகாரி கார்ல்ரோஸிடம் அனுதாபம் பெறுவதற்காக.
அடுத்த நாள் சைமனுக்கும் இதே போல கையொப்பமிடாத கடிதமொன்று வருகிறது. அதில் யூதர்களைப் போலந்தில் உள்ள மிஸ்ரெக்கில் விஷவாயு செலுத்திக் கொல்லும் ஆணையொன்றின் நகல் அனுப்பப் பட்டிருக்கிறது. அந்த ஆணையில் கையெழுத்திட்டிருப்பவர் மத்தியாஸின் தந்தை ‘தியோடர்'. கடிதம் அஞ்சல் செய்யப்பட்ட இடம் எதுவெனப் பார்த்து, அதனை வைத்து யார் அனுப்பியிருக்கக் கூடும் என்று ஆய்கிறார் சைமன். அது ஏற்கனவே நிறுவனத்தில் வேலை பார்த்து, இசைக்குழுவிலும் இடம் பெற்ற ஏரோன் நியூமென் என்று கண்டு பிடித்து விடுகிறார்.
நியூமெனிடம், அவன் வசிக்கும் ஊரி சென்று பேசுகிறார் சைமன். நியூமென் போலந்தில் நடந்த யூதர்களின் மீதான விஷவாயு சம்பவத்தில் நேரடியாக வாழ்ந்தவன். அத்துடன் நியூமெனின் தந்தைதான் கொல்லப்பட்ட யூதர்களை வாகனத்தில் ஏற்றிக் குழிதோண்டிப் புதைக்கும் பொறுப்பிலிருந்த அதிகாரியென்பதும், நியூமெனின் தந்தைக்குத்தான், மத்தியாஸின் தந்தை தியோடர், யூதர்களைக் கொல்லும் பணியில் எவரும் உயிர் பிழைத்துவிடாமல் கவனமாகச் செய்ய வேண்டுமென்று ஆணையிட்ட கடிதம் அனுப்பியிருக்கிறார் என்பதும் புலனாகிறது.
இந்த விஷயங்கள் அறிந்த நியூமெனை மத்தியாஸ் சாமர்த்தியமாக ‘ஆட்குறைப்பு' நிகழ்வில் பணியிலிருந்து நீக்கியிருக்கிறார். நியூமெந்தான் இசைக்குழுவின் மைய நபர் என்பதால், இதன் காரணமாக இசைக்குழு கலைக்கப் படுகிறது. யூதர்களின் படுகொலையின் போது எவராவது உயிர் பிழைத்து விடுவார்களோ என்று சோதிக்க Heart Beat Detector கருவியைப் (இதயத் துடிப்பை அறியும் கருவி) போன்றவர்கள்தாம் என்ற பொருளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மிகச் சிறந்த திரைக்கதை, காட்சியமைப்பு, வசனங்கள் ஆகியவற்றுக்கு மிகச் சரியான உதாரணம்.
அழகான, இயல்பான திரைக்கதை முடிச்சுக்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், கூர்மையான வசனங்கள் என்று படம் எல்லாவற்றையும் சம விகிதத்தில் கலந்து யதார்த்தமாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒரு காட்சியையோ, வசனத்தையோ தவறவிட்டால் படத்தின் பிரதானமான கதையின் முக்கிய முடிச்சை அவிழ்க்க முடியாமல் தடுமாறி விடுவோம். நிறுவனத்தின் ஆட்குறைப்பு என்பது அதன் தந்திரமான நிலைப்பாடுகளில் ஒன்று. சில தனிமனிதர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டே எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பதைப் படம் தெளிவாக உணர்த்துகிறது.
படம் நெடுக இசை ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டியாக வேண்டும். திரைக்கதை என்ற கலையில் திரையிசை என்ற மொழியை எப்படி இரண்டறக் கலப்பது என்பதை, இந்தப் படத்தின் இயக்குநர் நிகோலஸிடம் கற்க வேண்டும். படத்தின் ஒரு காட்சியில் மத்தியாஸ் தனது இசையனுபவத்தை சைமனிடம் பகிரும்போது ‘இசை என்பது ஒரு வைரஸ். என்னை அது ஆறு வயதில் பீடித்தது' என்றபடி ஒரு வயலின் இசைக் கோர்வையை ஒலிக்கச் செய்து, ‘இசை பல சமயங்களில் என்னைக் கத்தியைப் போலக் கிழிக்கிறது' என்பார். அந்த இசையைக் கேட்கும் போது உண்மையில் நம் இதயம் கிழிபடும். அந்தக் காட்சியின்படி மத்தியாஸ் ‘வேலை போய்விடுமே' என்று மனம் நொந்த சூழ்நிலையை உணர்த்துவது போலிருக்கும்.
அடுத்த சில காட்சிகளுக்குப் பிறகு மறுபடி ஒரு இடத்தில் மத்தியாஸ் வயலின் வாசிப்பார். அருகிலமர்ந்து இருப்பவர் நியூமென். (இது ஃப்ளாஷ்பேக் காட்சி) பணி நீக்கம் செய்வதற்கு முன்னதாக இருந்த காட்சியது. இப்பொழுது புரிந்து விடும். ஒரு இசைக் கலைஞனுக்கு ஒரு இசை எப்படிக் கத்தி போல் அறுக்கும் என்பது. நியூமென்னை நீக்கிய குற்றவுணர்ச்சி காரணமாகத்தான் மத்தியாசுக்கு பிறகு இசை கேட்கும்போதெல்லாம் பதட்டம் ஏற்படுகிறதென்பதைக் காட்சி ரீதியாகக் காட்டியிருப்பார்கள். கவிதையான காட்சிகள் படம் நெடுக.
இசைக் குழுவுக்காக ஆள் தேர்வு பண்ணுவதற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சைமன், ஒரு கண்துடைப்புக்காக... அதில் பாடுபவராக வந்து அசத்துபவர் ஸ்பானிஷ் தேசத்தின் ‘பெமிங்கோ' என்ற இசைப்பாணியில் பிரபலமான மிகுல் பவேடா... மிக உருக்கமான பாடல் அது. பவேடாவின் குரல் இதயத்தை உருக்கும். பவேடா, கிராமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
இம்மானுவேல் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புக்களில் பெரும் பங்கு வகித்திருப்பவர் எலிஸபெத்.
மத்தியாஸ் வரும் காட்சிகளில், அவர் கைகளைக் கழுவிக்கொண்டும், நகங்களைச் சுத்தம் செய்துகொண்டும் இருப்பார். மிக நுணுக்கமான பாவனையது. அவரது இந்தச் செய்கைகளுக்கு எந்த விளக்கமுமில்லை. உண்மையில் இது ஒரு மனோ வியாதி. ஒரு சிலர் தங்கள் குற்றவுணர்ச்சியை மறைக்க, தங்களை அதீதமாகச் சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள்.
அதைப்போல ‘சனிக்கிழமைக் காய்ச்சல்' (Saturday Fever) என்று கூறப்படும் நிறுவன மதுபான விருந்துகளை படத்தில் அடிக்கடிக் காண்பிக்கிறார்கள். படத்தில் ஆட்குறைப்பு செய்வதற்கு நிறுவனம் தரும் குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று ‘மதுப்பழக்கம்' ஒரு நோயாகக் கருதப்பட்டு, அதன் பேரிலும் ஊழியர்களை நீக்கலாம் என்று தகவல் அனுப்புகிறது. ஆக, மதுப்பழக்கம் ஏற்படுத்துவதென்பதும் நிறுவன அதிகாரிகளால் தான். ஆனால் அதையே காரணம் காட்டிப் பணிநீக்கம் செய்வது எத்தனை குரூரமான தண்டனை? அல்லது குரூரமான தந்திரம்?!
மதுபான விருந்தொன்று முடிவடைந்ததும், போதை தலைக்கேறி ஒரு ஊழியர் தெருவில் நடனமாடிக் கொண்டே வருவார். சர்ரியலிஸ நடனம் என்று கூறப்படும் அந்த நடனம், நளினமாக இருந்தாலும் மறுபுறம் தெருவில் நடப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவு இருக்கும். இது போல் படத்தில் பல நுட்பமான காட்சிகள்.
அயல்நாட்டுப் பத்திரிகைகளில் பல விமர்சகர்கள் இந்தப் படத்தை அறுவை, இழுவை என்றெல்லாம் தூற்றி எழுதியிருக்கிறார்கள். இதிலும் கூட நுண்ணிய அரசியல் இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
பல நிறுவனங்களில் மடிப்புக் கலையாத உடைகளில் பணியாற்றும் இன்றைய தலைமுறை, நவீன கூலிகளாகவே கண்களுக்குத் தெரிகின்றனர். அவர்கள் கழுத்தில் கட்டியிருக்கும் ‘டை' ஒரு ‘சுருக்குக் கயிற்றை'ப் போலவே காட்சியளிக்கிறது. இந்தியா, இன்னும் சில வருடங்களில் சந்திக்கப் போகும் இந்தப் பிரச்சினைக்காக இப்போதே யோசிக்கத் துவங்குவதுதான் புத்திசாலித் தனம். 40 வயதிற்குப் பிறகு வேலையற்றுத் திரியும் பிள்ளைகளை இந்த தேசம் சுமக்க வேண்டுமா? மூளை உழைப்பாளிகளுக்காகவும் யோசிப்போம் உழைப்பாளர் தினத்தில்....
நிக்கோலஸ் க்ளாஸ்: ப்ரெஞ்சு இயக்குநரான நிக்கோலஸ், நல்ல எழுத்தாளரும் கூட. நிக்கோலசுக்கு இந்தியாவின் மீது நல்ல ஈடுபாடும், அபிமானமும் உண்டு. இவர் இந்திய மண்ணின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு The Bengal Nights என்ற படத்தை ப்ரெஞ்சு மொழியில் இயக்கினார். இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி தான் அதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்திலும் இவருக்கு ஒரு பங்கு இருக்கிறது. திரைப்படத்தை பொறுத்தவரை, கதையிலும், திரைக்கதையிலும் மிகுந்த கவனத்தைச் செலுத்துபவர். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தீர்மானிக்கும் முன்பாக எழுத்தாளர் எலிஸபெத்துடன் விவாதித்து, பின்பே படமாக்கினார்.