செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி

திசையெட்டும் சிறகு விரிக்கும் கவிதைப் பட்சி                                                                -அன்பாதவன்
   
        “சிந்தை முழுவதும் ஊறி அதை இயக்கும் சக்திக்கு மறுபெயர்தான் கவிதை. கவிஞனுடைய வேலை இந்த சக்திக்கு தன்னை ஊற்றுக் கண்ணாகத் திறந்து கொள்வதுதான். இயற்கை என்ற ஒளியை விசிறும் மின்சாரம்தான் கவிதை. அந்த மின்சாரத்தை இயற்கையாகக் கவிஞன் உணர்கிறான். அவனை அவனது பாஷை மூலம் நாம் உணர்கிறோம். ஆகவே பாஷைத் தகட்டைச் செப்புக் கம்பியாக நீட்டி, தன் ஆத்மாவினுள் கரைந்த கவிதையைப் பாய்ச்சுகிறான். நம்மூடேயும் அக்கவிதை பாய்ந்து மனதில் ஒளியாகப் பூக்கின்றது”
-எனக் கவிதையூறும் கோட்பாட்டைச் சொல்வார் பிரேமிள்.

         ஒரு கதைக்காரராக, திரைப்பட ரசனையாளராக சிறந்து விளங்கும் பாரதிக்குமாரின் மற்றுமொரு பரிமாணமாய் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதைத் தொகுப்பு.

        ‘என் படைப்புகள் பிரசுரத்துக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல... அவை என் இருப்பின் பிரகடனங்கள்' எனப் பேரிகை முழக்கமிடும் பாரதிக்குமாரின் கவிதைவெளி மிகப் பெரியது. வானுக்கு கீழுள்ள அனைத்தையும் கவிப்பொருளாய்க் காண்பது.

         மிச்சமிருக்கும் ஈரம் தொகுப்பில் உறவுகளும் தோழமையும் ஊடும் பாவுமாய் கலந்து செல்கின்றன. எல்லாக்கவிதைகளையும் குறித்துப் பேசலாம். அது ஒரு பாணி; எனினும் எனக்குப் பிடித்த மூன்று கவிதைகளால் இந்தத் தொகுப்பை எடைபோட உத்தேசம்.

        மூன்று கவிதைகளும் ‘உறவு' குறித்துப் பேசுபவை;  உறவைப் பேணுபவை.
 ‘முகவரிகள்'
 ‘சொல்லாமல் செல்வது'
 ‘மிச்சமிருக்கும் ஈரம்'

            முகவரிகள் கவிதை, பெருங்கூட்டத்தால் உதாசீனப்படுத்தப்பட்ட மனதொன்றின் ஆற்றாமையாக பதிவாகியுள்ளது. ஒரு நல்ல திரைப்படத்தின் உத்தியோடு நெய்யப்பட்டது.
           அப்பத்தாவை ஒதுக்கி உதாசீனம் செய்த உறவுக்கூட்டம்தான் இப்போது இந்தக் கவிதைசொல்லியையும் உதாசீனம் செய்து ஓரங்கட்டி மூலைக்குத் தள்ளுகிறது. புறக்கணிப்பின் வலி புரிந்தவர்கள் யாவரும் இந்தக் கவிதையின் வலியை, அவஸ்த்தையை அறிய முடியும்.
           முதல் வரியில் லாங் ஷாட்டில் அப்பத்தா வீசியெறியப்பட்ட மூலையைக் காட்டுபவர், கடைசி வரிகளில் க்ளோசப் ஷாட்டில் சொல்கிறார்...
         “... அப்பத்தா உன் முகத்தின் சுருக்கங்களை
         இப்போது புரிந்து கொள்ள முடிகிறது
        வரிகளுக்கிடையே புதைந்து கிடந்தவை
        வருடங்களல்ல...
        வருத்தங்களும், உதாசீனங்களும்தான் என்று.”

         ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்' என்கிற குறளின் காட்சிப் படிமமாய் விரியுமொரு வெற்றி பெற்ற கவிதை இது!

         ‘சொல்லாமல் செல்வது' கவிதையில் ஒரு கதை சொல்கிறார் பாரதிக்குமார்.
          மரணம் சம்பவித்த வீட்டில் சொல்லிக் கொண்டு போகலாகாது என்ற மரபை, உறவுகளின் இன்னொரு முகத்தைக் காட்ட வாகாக எடுத்துக் கவிதை நெய்திருக்கிறார் கவிஞர்.
             தந்தையின் மரணம். தந்தையின் உடன் பிறந்த உறவுகளுக்கு அது செத்த பிணம்! 
       காடாத் துணியை கோடித்துணியாகக் கொணர்ந்த பெரியப்பா!
       வாய்க்கரிசியை மறந்த அத்தை!
       இன்னொரு தரம் வர மனம் அலுக்கும் மாமா!
       உடன்பால் தெளிச்சிட்டா ஊருக்குப் போக சவுகர்யமென முணுமுணுக்கும் சித்தி!
என உறவுகள் எனும் பெயரில் காகிதச் சங்கிலிகள் ஒருபுறம்.

       இன்னொருபுறம், நிராதரவாய் நிற்கும் அம்மா, அக்கா, தம்பியென கையறு நிலை உறவுகள்.
          இந்தக் கவிதையைப் படித்தபோது என் தந்தையின் மரணமும் பிறகு நிகழ்ந்த கசப்பான சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.
         ஒவ்வொரு வீட்டிலும் இப்படியோர் கசந்த மரம் இருக்கக் கூடும்!

        இப்படியாகப் புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் சுயநலங்களும் கூடிய சமூகத்தில் வாழத் தேவை மனத்திட்பம்! அதைத் தான் ‘மிச்சமிருக்கும் ஈரம்' கவிதையில் காட்டுகிறார்.

       ‘...எதிர்கொள்ள எத்தனிப்பதற்குள்
        எல்லாப் புயல்களையும்
        எனக்கெதிராய் வீசச் செய்கிறது
        வாழ்வின் அவலச் சூழல்.
         ... ... ...
          ... ... ...
         எந்த ஆதாரமும் இல்லாமல்
         என் காலடியில் நழுவுகிறது
         வாழ்க்கை'

       ஆனால், யதார்த்தமென்பது குரூரம் மட்டுமல்ல! ஏதோ ஓர் மூலையில் கருமேகம் சூழும்! மழைத்துளி வீழும்! என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்தக் கவிதை. தோட்டத்துள் மட்டுமல்ல; தோட்டத்துக்கு வெளியிலும் பூக்கள் சில மலர்வதுண்டு என்ற நன்னம்பிக்கை முனையைக் காட்டுவதாய் இக் கவிதை.

        பாரதிக்குமாரின் கவிதைகள் பலவற்றிலும் கவிதைப் பொறி நிறையவே இருக்கிறது. செய்நேர்த்தியும், நுட்பமும் சரிவிகிதத்தில் சேர்ந்திருக்குமானால், மாபெரும் வெற்றித் தொகுப்பாக இந்நூல் மின்னியிருக்கக் கூடும்.

         ஆனாலுமென்ன... கவிதை அழகுதான் என்றாலும் மனிதம் கவிதையைவிட உயர்ந்தது!
 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அபோகாலிப்டோ (APOCALYPTO)

        

        மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனித ஈடுபாட்டைச் சார்ந்தே இருக்கிற அவலம்; இன்னொருபக்கம், தொன்மைக்காலச் சின்னங்கள் அழிகின்ற சூழல்; மற்றொரு பக்கம், வரலாற்றைத் திரிக்கும் தந்திரசாலிகளென்று அறிய முற்படுகிறவர்களுக்கும், வன்மையான வரலாற்றுக்குமிடையே எத்தனையோ தடைக்காரணிகள்.
          வரலாற்றாய்வாளர்களும் மானுடவியல் ஆய்வாளர்களும் உழைத்துப் பெற்ற கனிகளைச் சுவைக்கவும், விதை பரவலாக்கத்துக்குத் துணை செய்யவும் வேண்டியவர்கள் படைப்பாளர்களே...
 இங்கே உள்ள திரைக்கலைஞர்கள் ஒன்று, வரலாற்றை அறியாதவர்களா இருக்கின்றார்கள்; அல்லது, வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் அவற்றில் கற்பனைக் கலப்பை அதிகரித்து விடுகிறார்கள்.
           இந்த தருணத்தில் அழிந்து போன ‘மாயா' இனத்தவர் பற்றிய ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படமாக மெல்கிப்சனின் அபோகாலிப்டோவைக் குறிப்பிடலாம்.
            கிறிஸ்து பிறப்பதற்கு  கிட்டதட்ட 1600 வருடங்களுக்கு முன் மத்திய அமெரிக்க நாடுகளென்று அறியப்படும் இன்றைய குவாதிமாலா, எல் சால்வடார், மெக்சிகோவின் சிலபகுதிகளில் வாழ்ந்து வந்த இனம்தான் ‘மாயன்' இனம்.
            கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடியடைந்த போதுதான் (உண்மையில் அவர் இந்தியாவைக் கண்டறியும் நோக்கில் பயணித்து, தவறாக இந்தியா என நினைத்து அமெரிக்காவில் இறங்கினார்) ஐரோப்பியக் குடியேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகே முறைமைப் படுத்தப்பட்ட எழுத்துமுறை பரவலாக அப்பகுதிகளில் ஏற்பட்டது. ஆனால் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் (‘மாயன்கள் வாழ்ந்த பகுதிகளில்) எழுத்துமுறை மொழியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமானதொரு விஷயமாகும். அது மட்டுமல்லாமல் வானியல் மற்றும் கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.
           அவர்களது எண்கள் பயன்பாட்டு முறையை விளக்கும் படத்தினைப் பார்த்தால், அதில் அவர்கள் பூஜ்ஜியம் மற்றும் கோடுகளை வைத்துக் கணக்கிட்ட முறை புரிபடுகிறது. கணினித்துறையில் இருப்பவர்களுக்கு, கணினியின் அடிப்படை அமைப்பியல் சூத்திரம் 1,0 என்று இரண்டு எண்ணை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டது என்பது எளிதாகப் புரியும். கிட்டதட்ட மாயன் எண்கள் அதே போல் இருப்பது கண்டு வியப்பாயிருக்கிறது.
         
            மாயன் காலண்டர் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் துல்லியமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் வருவதை முன்கூட்டியே இன்ன தினத்தில் வருமென அறுதியிட்டுப் பிரிக்கிறார்கள். ‘சூரியகாலம்' என்பது அவர்கள் சுழற்சி முறையில் 1,336,500 நாட்கள் கொண்ட தொகுப்பாக இருக்கிறது. அதன்படி அவர்கள் கணக்கிட்ட நான்காவது சூரிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
           ஐந்தாவது மற்றும் இறுதி சூரியகாலம் வரும் 2012-ம் ஆண்டு திசம்பர் மாதம் 21-ம் தேதி வருகிறது. அன்று இந்த உலகம் அழிந்து விடுமென்பது அவர்களது ஆரூடம்.
            மாயன்களின் ஆரூடங்கள் அவர்களது நம்பிக்கைகள் சார்ந்த விஷயம். இப்படியான ஆரூடங்கள் ஜோதிடம் மாதிரியல்ல. அசரீரி மாதிரி அவர்களில் சிலருக்குத் தோன்றுவதைக் கூறுவார்கள்.
          மாயன்கள் தங்களது ஆரூடங்கள், கலை ஆகியன சம்பந்தமாக அந்தக் காலகட்டத்திலேயே புத்தகங்களாகத் தயாரித்திருக்கின்றனர் என்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது. ஸ்பெயினின் ஆக்கிரமிப்பில் அவற்றை அழித்து விட்டனர். அதில் எஞ்சிய நான்கு புத்தகங்கள் இன்னும் இருப்பதாகச் சொல்கின்றனர்.
             ‘மெஸோ அமெரிக்கன்கள்' என்று மானிடவியல் நிபுணர்களால் குறிப்பிடப்படும் ‘மயன் நாகரீகத்துப் பழங்குடியினரின் பல நகரங்களும், பிரமீடுகளும் யுனெஸ்கோவினால் பாரம்பர்ய சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
             மத்திய அமெரிக்காவின் அதிகபட்ச மக்கள்தொகை இனமாக இருந்த ‘மாயன்கள்' இன்று 6 லட்சம் பேர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மாயா மொழி கிட்டதட்ட வழக்கொழிந்து விட்டது. ஸ்பெயினின் ஆக்ரமிப்புக்குப் பிறகு ‘ஸ்பானிஷ்' தான் பெரும்பான்மையோரின் மொழியாக இருக்கிறது. மாயா நாகரீகம் கிட்டதட்ட அழிந்துவிட்டது. மயன்கள் இன்று கலப்பின மக்களாகவே இருக்கின்றனர்.

          இந்தப் பின்னணிகளைப் புரிந்து கொண்டு அதன்பின் அபோகாலிப்டோ திரைப்படத்தைப் பார்த்தால்தான் உலகின் அழிந்து போன இனங்கள் மற்றுமவர்களின் நாகரீகம் பற்றிய கண்ணோட்டத்தோடு அதனைப் பார்க்க முடியும்.
           இப்படம் பார்த்த சிலரிடம் படம் பற்றிய விமர்சனங்களைக் கேட்ட போது அவர்கள், இரண்டு பழங்குடிக் குழுக்களிடையே நடக்கும் பயங்கரமான மோதல் பற்றிச் சொல்லும் வன்முறைக் கலாச்சாரம் விரவிய படமென்று நம் ‘அரிவாள்+அண்டர்வேல்ட்' படங்கள் பற்றிக் குறிப்பிடுவது போலவே சொன்னார்கள்.
           இப்படத்தின் கதை வெகு சராசரியானது. யூகாட்டின் மெக்சிகோ வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் (மயன்) மிருகங்களை வேட்டையாடி பச்சையாக சாப்பிடும் அளவுக்கு நாகரீகமடையாத காட்டு மிராண்டி கும்பல். அந்தக் கூட்டத்தின் தலைவன் ஃபிளிண்ட் ஸ்கை எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பவன். அவனது மகன் ஜாகுவார்பா துணிச்சலும், வீரமும் மிகுந்தவன்.  அவன் மனைவி செவன். இவர்களுக்கொரு மகன். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவன் ஜாகுவார். ஒரு நாள் காட்டில் குழுவாக வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த கிராமத்திலிருந்து மற்றொரு குழுவினர் காட்டைக் கடந்து செல்லும் நோக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எனப்பலரோடு வருகின்றனர். ஆதிவாசி கும்பலைப் பார்த்ததும், அவர்கள் பயந்து ஒளிந்து கொள்கின்றனர். அவர்களில் ஒருவன் சற்று துணிந்து தாங்கள் எடுத்து வந்த மாமிசத்தை மயன் குழுவினரிடம் வைத்து, தங்களைக் காட்டைக் கடந்து செல்வதற்கு அனுமதிக்குமாறு கேட்கிறான். மயன் குழுவினர் அவர்களைத் தாக்க எத்தனிக்கும் போது மயன் குழுவின் தலைவன் அவர்களைத் தடுத்து, ‘அவர்கள் நம் எதிரிகளல்ல; நம்மிடம் அடைக்கலம் கேட்கிறார்கள். எனவே அவர்கள் செல்லட்டும்' என அனுப்பி விடுகிறான்.
           வேட்டை முடிந்து வீடு திரும்பும் ஜாகுவார் கனவில், ஏதோ ஒரு மனிதக் கூட்டம் மயன் குழுவினரைத் தாக்குவது போல் வருகிறது. உறங்கும் தனது கர்ப்பிணி மனைவியையும், மகனையும் கவலையோடு பார்க்கிறான். சிறிது நேரத்தில் அவன் கனவில் கண்டது போலவே காட்டுமிராண்டித் தனமாக மற்றொரு கூட்டம் மயன் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து வரைமுறையின்றித் தாக்குகிறது. எதிர்த்துப் போராடுபவர்கள் இரக்கமில்லாமல் தாக்குதலில்  கொல்லப்படுகின்றனர். ஜாகுவார் தன் மனைவியையும் மகனையும் அவர்கள் கண்ணில் படாமல் ஒரு ஆழமான கிணற்றினுள் மறைவாக பாறைக்கடியில் பதுங்குமாறு, செடிகளின் உதவியோடு இறக்கி விடுகிறான். பின் அந்தக் கூட்டத்தோடு சண்டையிடுகிறான். ஆனால் அவன் தந்தை உட்பட பலரும் கொல்லப்பட, ஜாகுவாரும் சிலரும் அவர்களிடம் பிணைக்கைதியாக மாட்டிக் கொள்கின்றனர்.
           நீண்ட தூரம் காட்டைக் கடந்த அவர்கள் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப் பட்டு மாயா நகரை அடைகின்றனர். இவர்களைப் பிடித்து வந்த கூட்டம் ஓரளவு அறிவு பெற்றவர்கள். பிரமிடுகளை ஆலயம் போலும், இருப்பிடமாகவும் கட்டி இருக்கின்றன. விவசாய நிலங்களை அழிஹ்து சிறுசிறு தொழிற்கூடங்களை கட்டியிருக்கின்றனர். மனதளவில் அவர்களது காட்டுமிராண்டித்தனம் மட்டும் போகவில்லை. பிடிபட்ட கைதிகளை ஒரு பலிபீடத்தில் வைத்து இதயத்தை அறுத்து தங்கள் காணிக்கையாக வைக்கின்றனர். தலைகளை வெட்டி உருட்டுகின்றனர். ஒவ்வொருவராக பலியிடப்படும் சூழலில் ஜாகுவாரின் முறை வருகிறது.
           மயன் சிறுமியொருத்தி ஆரூடமாக ஒரு வார்த்தை சொல்கிறாள். மயன் குழுவினரை கைதியாக இழுத்து வரும்போது “நீங்கள் இவனைக் கொல்லவே முடியாது. நீங்கள் முயற்சிக்கையில் சூரியக் கடவுள் இவனைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறாள்.
           அவள் கூறியபடியே ஜாகுவாரை வெட்ட வரும்போது வானில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதைக் கண்ட மதகுரு, ‘கடவுளுக்கு பலி போதும். இனி இவர்களை விட்டுவிடலாம்' என்று கூறுகிறார்.
           பிடித்து வந்த குழுவினர், பலியிடப்படாத கைதிகளை பெரிய மைதானத்தில் ஓடவிட்டு ஈட்டி எறிந்து கொல்லும் விளையாட்டினை விளையாடுகிறார்கள். அதிலும் தப்பி அங்கிருந்த தலைவனின் மகனைக் கொன்றுவிட்டு, பல தடைகளைத் தாண்டி தன் மனைவி, குழந்தை இருக்கும் கிணற்றருகே வருகிறன். அப்போது பெய்யும் மழை கிணற்றை நிறைக்கிறது.  ஜாகுவாரின் மனைவிக்கு அங்கேயே இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவர்களைக் காப்பாற்றி அழைத்து வரும்போது, அவனைத் துரத்தி வந்த இருவர் எதிரில் நிற்கின்றனர். அதே சமயம் கடற்கரையோரம் ஸ்பானிய கப்பல்கள் வருகின்றன. கப்பலைப் பார்த்து அதிசயித்த அந்த இருவரும் கடலை நோக்கி நடக்கின்றனர். ஜாகுவார் மனைவி குழந்தைகளோடு வேறு திசையில் திரும்புகிறான். செவன், ஜாகுவாரிடம் நாமும் அவர்களிடம் செல்லலாமா? எனக் கேட்கிறாள். வேண்டாம், நம் சொந்த காட்டுக்கே போவோமெனத் திரும்புகிறான் ஜாகுவார்.
          தங்களிடம் அடைக்கலமாக வந்த கிராமத்தினரை பத்திரமாக அனுப்பும் நாகரீகம் பழங்குடியினருக்கு இருந்திருக்கிறது. ஆனால் பழங்குடியிலிருந்த சிறிது நாகரீகமும், அறிவும் பெற்ற அதே இனத்தின் வேறொரு குழுவுக்கு இரக்கம், மனிதாபிமானம் இல்லாமல் போகிறது. மெல்கிப்சன் அதோடு நில்லாமல், நாகரீகமடைந்த அந்தக் குழு இன்னும் அறிவில் பலம் வாய்ந்த ஸ்பானியக் குழுவை நோக்கிப் போவதாக முடித்திருப்பது மயன் கலாச்சாரத்தின் இன்றைய அழிவு நிலைக்கான காரணத்தை உணர்த்துவதாய் இருக்கிறது.
          

        மெல்கிப்சன் மிகச்சிறந்த இயக்குநர். கடும் உழைப்பாளி. தான் எடுத்துக் கொள்ளும் கதைக் கருவிற்காக வருடக் கணக்கில் உழைப்பவர். அவரது Brave Heart, The Passion of Christ ஆகியன உலகப் புகழ் பெற்றவை.
         மெல்கிப்சனே சிறந்த நடிகர்தான். ஆனால் இந்தப் படத்தில் நடுக்க வாய்ப்பிருந்தும் அவர் நடிக்கவில்லை. சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் தொழில் முறை நடிகர்களை பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான கதாபாத்திரங்களை மயன் சமூக மக்களையே நடிக்க வைத்திருக்கிறார்.
           படத்தின் மிகச்சிறப்பான அம்சம், திரைப்படம் முழுக்க மயன் மொழியில்தான் கதாபாத்திரங்கள் பேசுகின்றனர். தொழில்முறை நடிகர்களை மயன் மொழி கற்க வைத்து, பின்னர் நடிக்கச் செய்திருக்கிறார். குவாதிமாலாவின் இருண்ட வனப்பகுதிகளிலும், யுகாட்டன் மெக்சிகோவிலும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படம் பிடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக மயன் இன ஆய்வாளர்கள், மானிடவியல் ஆய்வாளர்கள், மயன் மொழி அறிந்தவர்களுடன் பல மாதங்கள் விவாதித்து பின்னர் படப்பிடிப்புக்குச் சென்றார். மயன் காலத்திய பிரமிடுகளை நேரில் சென்று ஆய்வு செய்து அது போலவே பிரமிடுகளை ‘செட்' போட்டு அதில் சில காட்சிகள் பதிவு செய்தார்.
            கல்லால் செய்யப்பட்ட அந்தக் காலத்திய ஆயுதங்களை படத்திற்காக உருவாக்கியிருக்கிறார்.
           இந்தப் படத்தின் முக்கியக் குறைகளாக எனக்குத் தெரிந்த இரண்டு விஷயங்கள்...
         ஒன்று, கதாபாத்திரங்களின் பெயர்கள் சற்றேறக்குறைய ஆங்கிலப் பெயர்களாக இருப்பது முரணாகத் தெரிந்தது. இதே போன்று ஆப்ரிக்க பழங்குடிகளை வைத்து 1966-ல் எடுக்கப்பட்ட Naked Prey எனும் படத்தில் கதாபாத்திரங்களுக்கு பெயர்களே கிடையாது. ஆனால் அந்தப் படம் முழுக்க முழுக்க பழங்குடியினர் பேசும் மொழியில் எடுக்கப்பட்டது அல்ல. ஆங்கிலத்திலும் சிற்சில இடங்களில் பழங்குடியினர் மொழியிலும் எடுக்கப்பட்டது.
         மற்றொரு குறை, ஜாகுவார் குழுவினர் பிடிபட்டு, பலியிடப்படும் வரை அவர்களது முகம் மழிக்கப்பட்டே இருக்கின்றன. படத்தில் கலை இயக்குநரும், இசை அமைப்பாளரும் மிகக் கடுமையாக உழைத்திருப்பது காட்சிக்குக் காட்சி புரிகிறது. படத்தின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று டீன் சீமரின் ஒளிப்பதிவு. காடுகளில் படர்ந்திருக்கும் கொடிகளோடு இழைந்து கொண்டு நகர்கிறது கேமரா. ஜாகுவாரை பலியிடப் போகும் காட்சியில் தெரியும் சூரிய கிரகணக் காட்சியும் அற்புதம்.
            ஜாகுவார் தப்பித்து மலையருவியில் குளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. Spider Cam எனப்படும் தொங்குநிலை கேமரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இக்கேமரா உயரமான இடத்திலிருந்து கீழே நிலைகுத்திய பார்வையில் எடுக்கப்படும் காட்சிகளில் பெரும்பாலும் பயன்படுகிறது. குறுக்கே கட்டப்பட்ட கயிற்றில் கேமராவைக் கட்டி அதன் ஒயர்களை வேறொரு இடத்தில் இணைப்புக் கொடுத்து அதன் வழியே அதை இயக்குகிறார்கள். ஹாலிவுட் படங்களில் குறிப்பிட்ட 20 படங்களில் மட்டும் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப் படுகிறது.
          ‘தி பிரிட்ஜ் ஆஃப் ரிவர் க்வாய்' திரைப்படம் வந்தபிறகு ஜப்பானிய மரண ரயில் பாதை குறித்த ஆய்வுகள் நடைபெறத் துவங்கியது போல, மயன் நாகரீகம் பற்றி பலரும் இப்படம் வந்த பிறகு அறியத்தலைப்பட்டனர்.
 ஒரு மிகச்சிறந்த மனித நாகரீகம் மெல்ல அழிந்ததன் வரலாற்றுப் பதிவாக அபோகாலிப்டோ படம் விளங்குகிறது.
          படத்தின் துவக்கக் காட்சியில் ‘வில் டூரண்ட்'ன் வரிகள் காண்பிக்கப் படுகின்றன.

        ஒரு மகத்தான நாகரீகத்தின் அழிவென்பது அந்த இனத்துக்குள்ளிருந்து துவங்குகிறதே தவிர, வேறொன்றின் முயற்சியாக மட்டுமில்லை
 என்பதே அந்த வரிகள். எவ்வளவு சத்தியமான வரிகள்!


மெல்கிப்சன்:
 
        மிகச் சிறந்த இயக்குநரும், நடிகருமான மெல்கிப்சன் ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான திரைப்படங்களிலும், சர்ச்சைக்குரிய திரைப்படங்களிலும் நடித்தவர். புகழ்பெற்ற MAD MAX, LETHAL WEAPENS படங்களிலும், Bravery Heart, The passion of Chirst படங்களிலும் நடித்தவர்.
           இயக்குநருக்கான ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். திரைப்படம் தாண்டிய சமூக அக்கறை கொண்டவர். குடிபோதைக்கு எதிராகவும், யூதர்களுக்கு இழைக்கப்படும் இனவெறிக்கு எதிராகவும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் குரலெழுப்பியவர்.
 மெல்கிப்சனின் மனைவி ரோபின் தலைமையில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்ற அறக்கட்டளை ஒன்றை இன்றும் நடத்தி வருகிறார்.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...