என்ன செய்யப் போகிறோம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என்ன செய்யப் போகிறோம்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூன், 2022

 

நாம் என்ன செய்யப் போகிறோம்..?  

தன்னிலிருந்து தன்னைச் செதுக்கும் மாற்று சினிமா

                

     ( இது தமிழ்க் குறும்பட உலகின் வரலாறு இல்லை .. ஒரு சிறிய ஆதங்கம்..)

-நெய்வேலி பாரதிக்குமார்

                தகிக்கும் வெய்யிலில் வறண்ட பாலைவனத்தில்  வெற்றுப் பாதங்களோடு திரிபவனுக்கு  அபூர்வமாகத்  தென்படும் குளிர் சுனை போல், ஒரு வார ஆயுள் திரைப்படங்களைத் தாண்டி மாற்று சினிமா என்னை ஈர்க்கிறது. குறும்படங்களை அவற்றின் நீளத்தை வைத்து அவ்வாறு அழைத்தாலும் ‘மாற்று சினிமா’ என்கிற பதம் அவற்றின் நோக்கத்தை, தேவையை இன்னும் நெருக்கமாக நமக்கு உணரவைக்கின்றது.

காட்சிக் கலை ஊடகங்கள்  பற்றி நாம் அதிகம் விவாதிக்க வேண்டுமா அல்லது அதை விட்டால் இந்த நாட்டில் ஆராய வேறு விஷயங்களே இல்லையா? என்கிற முணுமுணுப்பு கேட்காமல் இல்லை. கடந்த காலங்களில் தமிழகம் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் வழியே பெற்ற அரசியல் தலைமைகள் அப்படியான கசப்பை நம் உடலெங்கும் ஏற்றி வைத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லது நாம் விவாதிக்காவிட்டாலும் அவற்றின் பாதிப்புகளின் பாதாளத்தில்  நாம் வீழ்வதை நம்மால் தடுக்க முடியாது. அப்படியாக நம் நாடி நரம்பு, சமூகத்தின் சகல இடுக்குகளிலும் நீக்கமற நிறைந்து, விஷம் போல் பரவி இருக்கின்ற விஷயத்தை இடக்கையால் புறக்கணிப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

உடலின் ஒரு பகுதியில் பரவியிருக்கும் ஒரு வியாதியை நமக்கு பிடிக்காது என்கிற காரணத்தினால் வைத்தியம் செய்யாமல் இருப்போமா? உண்மையில் வியாதி என்று நாம் கண்டுணர்ந்த பிறகு அதன் மீது தானே நம் கூடுதல் கவனம் இருக்கும். அப்படியாக நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் தவிர்க்க முடியாமல் சினிமாவும் இருக்கிறது. நல்ல சினிமா எது என்று நாம் புரிந்து கொள்ளவும் அதனை அடையாளம் காட்டவும் தேவை இருக்கிறது. நல்ல சினிமாவே வரவில்லை அப்புறம் எதைப்பற்றிப் பேசுவது என்று கேள்வி எழுந்தால் நல்ல சினிமாவை வரவைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லையெனில் மோசமான சினிமாவிலிருந்து மோசமான மனிதர்கள் நம் தலைக்கு மேல் பீடத்தில் அமர நேரும் அபாயம் துரதிர்ஷ்டவசமாக தமிழ் சமூகத்திற்கு இருக்கிறது. மகன் ஒரு தவறான நண்பனை தேர்வு செய்தால் ஒன்று மகனை அவனிடமிருந்து நாம் விலக்க வேண்டும். அல்லது அந்த நண்பனை சரி செய்ய வேண்டிய பொறுப்பை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மை யார் விடுவிப்பார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களே பொய் நட்சத்திரங்களைப் பார்த்து ‘விடிவெள்ளி’ என்று அழைக்கின்ற கொடுமையை நிகழ் காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

திரைப்படம் பார்க்கின்றவர்கள் சமூக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது திரைப்படத் துறையில் இருப்பவர்கள் சமூக பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும். ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்று கூறுபவர்கள் கூட திரைத்துறையில் ஓரளவு புகழ் பெற்றுவிட்டால் தனக்கென லட்சக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்ட தனி கேரவன் வேண்டுமென அடம் பிடிப்பதை நெருக்கமான திரைத்துறை நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. அருகிலுள்ள மலையாள பூமியில் அரசியல்வாதிகள் முதல் திரைத்துறை சார்ந்தவர்கள் வரை ஓரளவு நேர்மையை, அவர்களை அணுகுவதில் உள்ள எளிமையை நாம் ஏன் சாத்தியமாக்க முடியவில்லை?

ஒரு சமூகம் முழுமைக்குமான பொதுத் தன்மையை பரவலாக்க அந்த சமூகம் ஏற்கின்ற ஆளுமை, ஊடகங்கள், கலை ஆக்கங்கள், இலக்கிய படைப்புகள், ஆகியன மறைமுகமாகவும் நேரடியாகவும் தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஜெயலலிதா இருக்கின்ற வரை எதிர்க் கட்சி யாவும் எதிரிகளின் கட்சியே. எதிரே தென்பட்டால் அவர் உடன்பிறந்த சகோதரனே ஆனாலும் பொது சபையில் சகஜமாக உரையாடக்கூட முடியாது. ஏன் சிரிப்பது கூட குற்றம் என்கிற நிலைதானே இருந்தது. ஆனால் அவர் மறைந்த பிறகு அவரது கட்சியை சேர்ந்தவர்கள், எதிர் கட்சித் தலைவரது உடல்நிலையை மரியாதை நிமித்தம் பார்த்து வர முடிந்ததே.. ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் பலநாட்கள் மெரினாவில் கூடி அவர்கள் நினைத்தை சாதிக்க முடிந்ததே... இந்த மாற்றம் எல்லா தளத்திலும் நிகழ இப்பொழுது தருணம் கூடி வருகிறது. திரைத்துறைக்கான மாற்றத்தை நாம் மாற்று சினிமாவிலிருந்துதான் துவங்க வேண்டியிருக்கிறது.

மாற்று சினிமா முயற்சிகளுக்கு ஒரு வணிக சந்தை இல்லை. சொல்லிக் கொள்ள பெரிதான அங்கீகாரம் இல்லை. அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இல்லை. திரையிட்டு ஒரு விவாதத்தை துவக்கி வைக்கத் தளம் இல்லை. எதிர்காலம் குறித்த உறுதியான நம்பிக்கையும் இல்லை. கண்ணுக்குத் தெரிந்து நேரடியான போட்டியாளர்கள் இல்லை... ஏன் விமர்சகர்கள் கூட இல்லை. எனினும் இவர்கள் அத்தனை பேரும் தனக்கு எதிரில் இருப்பதாக நினைத்து தன்னை அதற்குத் தயார் செய்து, தன்னிலிருந்து தன்னைத் தானே உருவாக்கி செதுக்கிக் கொண்டிருக்கிறது,கண்ணுக்குத் தெரியாத ஒரு தியாகக் கூட்டம்....

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்து வருபவன் என்கிற அடிப்படையில் அவர்களது வளர்ச்சியை கண்கூடாக உணர முடிகிறது. சொற்பத்தொகை பரிசுகளாக அறிவிக்கப்பட்டு, அதைவிட சொற்ப பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு கடந்து போகும் சில குறும்பட போட்டிகள் மட்டுமே அவர்களுக்கான நிழற்கூடம்.. அந்த நிழல் தரிசனத்தில் எனக்கு காணக் கிடைத்த சில மாணிக்கங்கள் என்னை வியக்க வைக்கின்றன..

தமிழ் குறும்பட வரலாற்றில் காஞ்சனை சீனிவாசன், எடிட்டர் B.லெனின், ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. எவ்வித எளிதான தொழில் நுட்ப வசதிகளும் கைக்கெட்டிய தொலைவில் கிடைக்காத  சூழலில், கவனம் பெறக் கூட வாய்ப்பில்லாத நாட்களில் அவர்களே மாற்று சினிமாவுக்கான கரடு முரடான பாதையை வெறுங்கரங்களால் செப்பனிட்டவர்கள். ‘காஞ்சனை’ என்கிற அமைப்பின் மூலம் தமிழ் சினிமாவுக்கான மாற்றைத் தேடி பயணித்த சீனிவாசனின் முயற்சிகள் எப்பொழுதும் தன்னலம் கருதாத சமூக அக்கறை கொண்டவை.   

ஒரு நிமிடத்தில் அசரடித்த ‘சாலையின் பாடல்’  இன்றைய கல்வி முறையின் அச்சமூட்டும் சூழலை பதிவு செய்த லெனினின்  ‘மொட்டுக்கா’  ‘நாக் அவுட்  ஆகியன ஒரு புதிய பாட்டையை உருவாக்கின. எழுத்தாளர் மாலன் மெட்ரோ ரெயில் பயணத்தில் நடக்கும் கதையை ஒரு குறும்படமாக எடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். பிலிம் கேமராவில்தான் அந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் படத்தை காண்கிற வாய்ப்பு கிடைக்கவே இல்லை.   

இரா. நடராசனின் ஈரமிக்க வரிகளில் விளைந்த சிறுகதைதான் ஆயிஷா. ஒரு சிறுகதை மட்டும் தனியே அச்சிடப்பட்டு அது லட்சக்கணக்கான பிரதிகளை கடந்து இன்றும் விற்றுக்கொண்டிருப்பது ஆயிஷாதான். அந்த சிறுகதையின் அடர்த்தி சற்றும் குறையாமல் தனது அழகான திரைமொழியில் அழுத்தமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர் பா. சிவக்குமார். குழந்தை நட்சத்திரம் சுவேதா பொன்னென மின்னிய கதாபாத்திரம் அது. சி.ஜெ. ராஜ்குமாரின் கச்சிதமான ஒளிப்பதிவு படத்தின் இணை ஆளுமை. இன்றும் பல குறும்பட ஆர்வலர்களுக்கான  உந்து சக்தி அந்தப்படமே. அதற்குப்பிறகும் பல குறும்படங்களை இயக்கினார் சிவக்குமார். எனினும் சமீப காலங்களில் அம்முயற்சிகளில் இருந்து சற்று ஒதுங்கிவிட்டார்.  

அதன் பிறகு இலக்கியப்பிரதிகளைத் தேடித் தேடி வாசிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. ஆயிஷாவின் ஆகச்சிறந்த வெற்றி அதுவே.. கரிசல் இலக்கிய கர்த்தா கி.ராவின் ‘கதவு’ (இயக்கம் மதரா), தேசிய விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனின் கர்ணமோட்சம் (இயக்கம் முரளி மனோகர்), அசோகமித்திரனின் ‘கடன்’ (முரளி திருஞானம்), ஜெயகாந்தனின் சைக்கிள், தாம்பத்யம் மாதிரி பல சிறுகதைகள், ஜெயமோகனின் சிறுகதையைத் தழுவி தூதன் (புதுவை இம்மானுவேல்), என்.ஸ்ரீராமின் விசுவாசம் (மணிபாரதி), அ.முத்துலிங்கத்தின் ’சித்ரா. என பல படைப்புகள்..

பரிக்ஷா ஞாநியின் ‘ஆனந்தி’ சேலம் ஆண்டோவின் ‘தும்பலில் இன்று குடியரசு தினம்’ மதுரை அமுதனின் ‘பீ’, ஆர்.வி. ரமணியின் ‘தளர்ந்தது’ திண்டுக்கல் மணிமாறன் இயக்கிய ’18 தீக்குச்சிகள்’ பிரான்சின் அகீபன் பாலா இயக்கிய ‘நானாக நான்’ கார்த்திக் முத்துக்குமார்  இயக்கிய ‘ON DUTY’ சுப்புராஜின் ‘செடி’ போன்றவை அந்தந்த தளத்தில் அழுத்தமான உணர்வுகளை வழங்கியவை  

 சமீபத்தில் பிரபஞ்சனின் சிறுகதையைத் தழுவி ‘வலி’ என்கிற குறும்படத்தை வம்சி இயக்கத்தில் காண நேர்ந்தது. தீர்மானிக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து ஒரு அப்பாவியைத் தப்பிக்க வைக்க அவனைக் கருணைக் கொலை செய்வதே சாலச் சிறந்தது என்று மனம் வெதும்பி முடிவெடுக்கும் ஒரு காவல் துறை அதிகாரியைப்பற்றிய கதை. மிக அற்புதமான கலை நேர்த்தியுடன் படைக்கப்பட்டிருந்தது. அனாவசியமான நீட்டல்கள், உணர்ச்சிக் கொப்பளிக்கும் காட்சிகள், வளவளவென உரையாடல்கள் இப்படி எதுவுமின்றி கச்சிதமாக படமாக்கி இருந்தார்கள். பிரபஞ்சன் சமகால படைப்பாளிகளில் மிகச்சிறந்த கதை சொல்லி. அவரது கதையை மிக அழகாக இயல்பு கெடாமல் படமாக்கியிருந்தார் வம்சி..

இலக்கிய படைப்புகளை பிரதி செய்யும் முயற்சிகள் தமிழ்த் திரைப்பட உலகைக் காட்டிலும் குறும்பட உலகில் அதிகம் இருப்பதே ஒரு ஆரோக்கியமான சூழல் என்றே சொல்லலாம். அவர்கள் மீதான நம்பிக்கையை அதுவே அதிகரிக்க செய்கிறது. தொடர்ந்து அப்படைப்புகள் பல்வேறு விருதுகளை பெற்றுவருவது குறும்பட படைப்பாளிகளின் கவனத்தை இலக்கியம் பக்கம் ஈர்க்கச் செய்கிறது. வாசிப்பை நோக்கி நகர்த்துகிறது. கேரளா போன்ற மாநிலத்தில் நிலவும் பொது பண்பை அம்மொழியின் இலக்கியம், கலை ஆக்கங்களே நிர்ணயம் செய்கின்றன. எனவேதான் தமிழகத்திலும் அம்மாதிரியான பொதுப்பண்பு பரவலாக்கலை இலக்கிய கலை படைப்புகள் வழியே எதிர்பார்க்கிறேன்.

தொழில் நுட்ப அற்புதங்களினால் ஒரு கலைப்படைப்பை நேர்த்தியான பிரதியாக உருவாக்குவதில் நம் தமிழ் படைப்பாளிகள் பல மைல்கற்களை தாண்டிவிட்டனர். குறிப்பிடத்தக்க குறும்பட இயக்குனர் மணிமாறன் இயக்கிய ‘கடல்’ என்கிற நான்கே நிமிட குறும்படம்  ஒளிப்பதிவில் அசாத்தியமான காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. ஒரு அலையின் மோதல்களை இப்படியும் காட்சிப் படுத்த முடியுமா என்ன?  அவர் ஏற்கனவே ‘பங்களா நாய்’ என்கிற தனது குறும்படத்தில் ஹெலி கேமராவை கவித்துவமாக கதாபாத்திரத்தின் கூடவே ஓடவிட்டிருப்பார். கவனிக்கப்பட வேண்டிய தமிழின் மிக முக்கிய குறும்பட இயக்குனர் மணிமாறன்.

கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, பாவெல்  ஆகியோர் தங்களுக்கென ஒரு புதிய பாணியில் குறும்படங்களை உருவாக்கி புதியதொரு தலைமுறையை வழிநடத்துகிறார்கள்.

குறும்படங்களை திரைத்துறைக்கு இட்டுச் செல்லும் குறுக்கு வழியாக மட்டுமே சிலர் நினைத்துக்கொண்டிருப்பதால், வருடத்திற்கு சுமார் 5௦௦ குறும்படங்கள் வரை உருவாக்கப்படும் தமிழில் பல குப்பைகளே மலிந்து கிடக்கின்றன. சில மாணிக்கங்களே தென்படுகின்றன. இலக்கியம் குறித்த பிரக்ஞை இன்மை, நமது வரலாறு மரபு குறித்த பரிச்சயமின்மை,  தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே முன் உதாரணமாகக் கொள்ளும் குறுகிய பார்வை, பிற மொழி குறும் படங்களை காணும் வாய்ப்பிருந்தும் அதில் அக்கறையின்மை ஆகிய காரணங்களால் நல்ல குறும்படங்கள் உருவாவதற்கான முயற்சிகள் குறைவாக இருக்கின்றன. 

நல்ல திரை ரசனையை உருவாக்கும் பணியில் ‘நிழல்’ திருநாவுக்கரசு, ‘பதியம்’ பாரதி வாசன், ‘தமிழ் ஸ்டூடியோ’ அருண் ஆகியோர் தளராது முயற்சித்து வருகிறார்கள். ‘நிழல்’ திருநாவுக்கரசு தொடர்ந்து பல குறும்பட பயிற்சிப் பட்டறைகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார். சென்னையைத் தாண்டியும் சினிமா குறித்து நல்ல கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கம். ‘சொல்லப்படாத சினிமா’ என்கிற குறும்படங்கள் பற்றிய அவரது தொகுப்பு மிக முக்கியமானதொரு நூல்.

‘தமிழ் ஸ்டூடியோ’ அருண் மிக இளம் வயதில் மாற்று சினிமாவுக்காக ஒரு வெறியுடன் தன்னை ஒப்புக் கொடுத்தவர். ஆண்டு தோறும் அவர் நடத்தும் குறும்படப் போட்டிகள் மாற்று சினிமா படைப்பாளிகளுக்கான விருதுகள், இணையதளம் என பரவலாக அதற்காக இயங்கி வருகிறார்.

நெய்வேலி என்.செல்வன் தன்னுடைய குறும்படங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். நெய்வேலி மாணவர்களிடையே குறும்படங்கள் குறித்த ஆவலை ஏற்படுத்திய வண்ணம் இயங்கி வருகிறார். குவியம் வாஞ்சிநாதனும் அவரது நண்பர் ஒளிப்பதிவாளர் பாலாவும் மிக இளம் படைப்பாளிகளுக்கு பிரதிபலன் பாராது துணை நிற்கின்றனர்.

அம்ஷன்குமார், விஸ்வாமித்திரன், யமுனா இராஜேந்திரன் ஆகியோர் தொடர்ந்து மாற்று சினிமாவுக்கான கட்டுரைகளை காத்திரமாக எழுதி வருகிறார்கள். தியோடர் பாஸ்கரன், அ.ராமசாமி ஆய்வு ரீதியாக தங்களது எண்ணங்களை பதிவு செய்து வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவ்வப்பொழுது நல்ல முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறார். (அவரது மகன் ஹரிபிரசாத் சமீபத்தில் பெண் விளையாட்டு வீராங்கனைகளை சமூகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதை தனது கிளீன் போல்ட் குறும்படம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.) ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார், விஜய் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர்  தொடர்ந்து ஒளிப்பதிவு தொழில்நுட்பங்கள் குறித்த நூல்களை எழுதி வருகின்றனர்.

தமிழகமெங்கும் குறும்படப்போட்டிகள் பரவலாக நடத்தப்படுவது ஆரோக்கியமான ஒரு விஷயம். நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி மூலம் ஆண்டு தோறும் குறும்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய இணைய யுகத்தில் இளம் படைப்பாளிகள் போட்டிகள் மூலம் மட்டுமே சர்வதேச அளவில் சில லட்சங்கள் வரை பரிசாக பெற முடியும் என்கின்றனர். எனவே மெல்ல ஒரு தென்றல் வீசும் தருணத்தை விலகியிருக்கும் ஜன்னல் வழியே அனுபவிக்க முடிகிறது. குறைகளை மட்டுமே பறை சாற்றிக்கொண்டிருக்காமல் நமது வாசலை நாம் திறந்து வைப்போம் நல்ல குறும்படங்களை உருவாக்குவது, திரையிட செய்வது, விவாதிப்பது, அவற்றைப் பற்றி பதிவு செய்வது, அவர்களை ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம்.. தமிழ் சமூகத்தின் தேவை.. நாம் என்ன செய்யப் போகிறோம்..?  

  

         

புதன், 22 ஜூன், 2022

 

என்ன செய்யப் போகிறோம்? 2

வரவேற்பறையில் பூத கணங்கள்:

 


 

            மாடுகளும் ஆடுகளும் மேய்ந்தும் நடந்தும் செல்கின்ற புல்வெளி முற்றிலுமாய் அழிவதில்லை... மனிதன் நடக்கும் புல்வெளி ஒற்றையடிப் பாதையாகிவிடுகிறது'

            பழக்கங்களுக்கு அடிமையானவன் மனிதன். அவனது அனுதினப் பழக்கங்கள் அவனை மெல்ல, மெல்ல விஷமாக்கி விடுகிறது. குடிகாரர்களில் தீவிரக் குடிகாரர்களைத் தேனீர்க் கடைகளில் நாம் கண்டுணர முடியும். நுட்பமாக யோசிக்கையில் பழக்கங்கள் நம்மைத் தேய்த்து தேய்த்து நம்மில் ஏற்படுத்தியிருக்கும் பாதை சரியானதுதானா என்று ஆராய்ந்து பார்க்கையில், எல்லாவற்றையும் மறுபரிசீலிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

            சிலரது வீடுகளில் பார்வையாளர்கள் யாருமற்ற, வெளிச்சமான அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் யாராவது பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ இருக்கிறார்கள். அமைதியாக சலனமற்றுத் தெருக்கள் நீண்டு கிடக், வீடுகளுக்குள் அழையா விருந்தாளிகளாக நுழைந்த கதாபாத்திரங்கள் அழுதுகொண்டோ, விரல்களை நீட்டிக் கொக்கரித்துக் கொண்டோ இருக்கிறார்கள்.

            எல்லாவற்றுக்கும் நம்மிடையே புழங்கும் சுலபமான வார்த்தை பழக்கமாகிவிட்டது'

            ஞாயிற்றுக்கிழமை என்றொரு அற்புத தினத்தை நமக்காக... நமக்காக மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தோம். நட்புகளைப் புதுப்பிக்க, உறவுகளைக் கொண்டாட நமக்கென்று இருந்த தினம் அது ஒன்று தான்.    ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்போதெல்லாம் யார் வீட்டுக்கும் சென்று விட முடியாதபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நேர இடைவெளியின்றி கண்களுக்குள் பொங்கித் ததும்புகிறது.

            ஸ்பைடர் மேனிலிருந்து தலையில்லாத முண்டங்கள் வரை எல்லோர் வீட்டு வரவேற்பறைகளிலும் நமக்கு முன்னே சென்றமர்ந்து நிரம்பியிருக்கிறார்கள்.

            ஒவ்வொருவரையும் எழுப்ப எத்தனிக்கையில், திடுமென அதனைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட போதைக்காரர்கள்' நம்மிடம் மூர்க்கமாக உட்புகுந்து தடுக்கிறார்கள்.

            பெண்களில் சிலர் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக கவலைப் படுவதைக் காட்டிலும், தொடர்களில் வரும் அபிமான பாத்திரங்களுக்காக அழுவதும் குமுறுவதும் அதிகரித்து விட்டது.

            மைதானத்தில் கைநழுவ விட்ட கேட்ச்'களுக்காக பற்களை நெறித்தபடி கோபப் படுகிற ஆண்களில் சிலர் அடுத்தடுத்து வரும் மேட்ச்'களுக்காகவும், ‘கேட்ச்'களுக்காகவும் வேலைக்கு விடுப்பெடுத்து தவங்கிடக்கிறார்கள்.

            கார்டூன் படங்களுக்காக ரிமோட்டைத் தர மறுக்கும் குழந்தைகள் மந்திர தந்திர'த் தொடர்களில் ஓடும் தலையில்லாத முண்டங்களை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.

            மருமகள்களுடனும் நாத்தனார்களுடனும் விகல்பமின்றித் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கூட  இன்று, குரோதத்துடனும் ஒருவர் மீது பிறிதொருவர் சந்தேகத்துடனும் பார்க்கும் அளவுக்கு வில்லிகளாகவும், சதிகாரர்களாகவும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் சித்தரிக்கப் படுகிறார்கள்.

            வீட்டிற்குள் நுழைந்த போது அற்புத விளக்காகத் தோன்றிய தொலைக்காட்சிப் பெட்டிகள், தேய்க்கத் தேய்க்கப் பூதங்கள் முளைத்து விஸ்வரூபமெடுத்து நமது அறைகளை ஆக்கிரமித்து விட்டன. அவற்றுக்கு வேலை தர முடியாமலும், திருப்பியனுப்ப முடியாமலும் ஹால்'வுதீன்கள் ஆகிவிட்டோம். நம்மில் சிலரை நாற்காலியிலிருந்து பிய்த்து' எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்து நம்மை திடுக்கிடச் செய்கிறது.

            எல்லோருக்குமே இதிலிருந்து எப்படி விடுபடுவதென்ற குழப்பம் துவங்கிவிட்டது. அதற்கான தீர்வுகளாக சிலவற்றைப் பார்ப்போம்.

            1.குழந்தைகளுக்கான படிக்கும் நேரமென்றால், நமக்கும் அதுதான் படிக்கும் நேரமென்று நம்மை புத்தகங்களுக்கு ஒப்படைத்து விடலாம்.

            2.குழந்தைகளின் விளையாட்டு நேரம், நமக்கும் தேகப்பயிற்சி நேரம் என்று முனைந்தால், அவர்களும் கூட நட்போடு இணையலாம்.

            3.செலவுகளற்ற வெளிச்செல்லல்'(பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு) வாரத்துக்கு ஒன்றாவது நிச்சயித்துக் கொள்ளலாம்.

            4.குடும்பத்தினரை, குழந்தைகளை அழைத்துச் செல்லும் குறைந்த தூர வேலைகளுக்கு நடந்துதான் செல்லவேண்டுமென்று நமக்குள் ஓர் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.

            5.சாப்பிடுவது என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் (டி.வி. இல்லாத)ஒரே இடத்திலென்று தீர்மானித்து விட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும், இறுக்கமும் கூடக் குறையலாமல்லவா?

            நம்மால் இதற்கெல்லாம் சாத்தியப்படாது என்றால் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி பூதங்களைக் கொண்டு வரும் அற்புத விளக்கைத் தூக்கியெறிய வேண்டியதுதான்.

            நம் கையில் ரிமோட்' இருக்கும் வரை முடிவெடுப்பது எளிது. தள்ளிப் போட்டால் ரிமோட் கண்ட்ரோல்களால் நாம் இயக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

            நாம் என்ன செய்யப் போகிறோம்?

என்ன செய்யப் போகிறோம்?

 



 

 

தீவுகளின் திரள்;

----------------

 

            தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்கள், பக்கத்திலிருக்கும் இமைகளைப் பார்ப்பதில்லை

            இந்த வார்த்தைகளில் இருக்கும் நிஜம் சுட்டும் பொருள் அனேகம். உலகம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லச் சுருங்கி விரல் நுனியில் குவியத்தொடங்கி விட்டது. நினைத்த இடத்திலிருந்து, நினைத்த மாத்திரத்தில், யாரையும் எளிதாக செல்லிடைப் பேசிகள் மூலம் எண்களை ஒற்றித்  தொடர்பு கொள்ள முடிகிறது.

            கண்ணெதிரே விரியும் அலைதளத்தில், செய்திகள் இ.மெயில் சிறகில் சுகமாய்ப் பிரயாணிக்கின்றன விரைவாக...

            ஏதோ ஒரு நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பந்தின் மீது படும் மட்டையின் மெல்லிய ஒலி சட்டென்று நம் காதருகே விழுந்து திடுக்கிடச் செய்கிறது சாட்டிலைட் ஒளிபரப்பின் மூலம்...

            அனேகமாக தொலைபேசியில்லாத வீடுகளில்லை எந்த ஒரு நகரத்திலும்...

            இருப்பினும் நகரம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று அறிமுகமின்மை'. ஒருவருக்குமே தெரியாமல் ஒரு மனிதன் நகரத்தின் மையப் பகுதியில், நெரிசல் மிகுந்த வீதியில், கதவுகள் சாத்தப்பட்ட வீடொன்றில் வசித்து, சுவடில்லாமல் மறைந்துவிட முடியும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அது மிக சாத்தியம்.

            நம் முன் எழும் முக்கியமான கேள்வி தொலைத் தொடர்பில் நாம் நினைத்துப் பார்த்திராத உச்சிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அருகிலிருக்கிறவரை அறிந்திருக்கிறோமா?'

            இந்தியாவின் எந்த ஒரு பெயர் பெற்ற நகரத்திலும், எந்த ஒரு பிரதான அல்லது சந்தடியற்ற வீதிகளில் வசிப்பவர்களிடம் உங்களால் மெளனத்தை மட்டுமே பெற முடிந்த கேள்வியொன்றை தைரியமாகக் கேட்டுவிட முடியும். அது, ‘உங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவரின் பெயர் மட்டுமாவது உங்களுக்குத் தெரியுமா... சந்தேகத்திற்கிடமின்றி?'

            கிராமங்களையும் மெல்ல மெல்ல நகரங்களாக்கி வருகிறோம். மனிதர்களை நாகரீகப் படுத்துவதில் அலாதி ஆர்வம் நமக்கு. மறுபடியும் அவர்களை வெள்ளந்தியான' மனிதர்களாக மாற்ற முடியுமா சில விஷயங்களுக்காகவாவது...?

            ஆனால், இவை யாவற்றுக்குமான குற்றவாளிகளென்று யாரையாவது கூண்டிலேற்றிவிட்டுத் தப்பித்தல் ஒருபோதும் தீர்வாகாது...

            காரணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவிழ்க்க நமக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்க் கலையும்.

            1.வீடுகள் கிராமங்களில் உள்ளதுபோல் நெருக்கியடித்துக் கொண்டில்லாமல் தனித்தனியே விலகி பதவிசாக அமைந்திருக்கும் பொதுவான தெருக்கள் அமைப்பு.

            2.வெளியேறிச் சென்று விடாமல் கண்களையும் கால்களையும் பிடித்திழுக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்...

            3.கிராமவாசிகள் பெரும்பாலும் சுய தொழில் சார்ந்தவர்கள். நகரங்களில் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சூழல்களால் நேரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாதபடிக்கு நெருக்கடியான கால அட்டவணை.

            4.கிராமங்களில் எவ்வளவு விமர்சையாக நடந்தாலும் திருமணம் போன்ற தனிமனித விழாக்கள் வீடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தெருவாசிகள் ஒவ்வொருவரையும் திருமண வேலைகளில் பங்கேற்றச் செய்யும் சாதுர்யம். நகரங்களிலோ பிறந்தநாள் விழாக்கள் கூட ஒப்பந்தக்காரர்களை நம்பி மட்டுமே...

            5.ஊர் நலனுக்கு ஊர் கூடி முடிவெடுக்கும் போக்கு இல்லாத நகர அமைப்பு...

            இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.கொஞ்சம் கொஞ்சமாக மனித மனம் மரத்துப் போகும்படி செய்யும் வாழ்க்கை முறை நம்மை எங்கே இட்டுச் செல்கிறது? மனிதத் தீவுகள் மிதந்தபடி... சலனமற்றிருக்கிறது பிரபஞ்சம் பல சமயங்களில்.

            சில உறுதிப்பாடுகள் மூலம் நம்மை நாமே நகர்த்த முடியும் எளிதாக...

            1.அடிக்கடி வசிப்பிடம் மாறும் வாய்ப்பு கிடைப்பது புதிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கே என்பதைப் புரிந்து கொண்டு, நம்மை நாமே வலுக்கட்டாயமாகவாவது தெரு முழுக்க அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்-புதிதாகக் குடியேறுகையில்...

            2.புன்னகையைப் பரிமாறுதல் செலவின்றி நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் தேகப்பயிற்சியல்லவா...? எதிர்ப்படுவோரிடம் புன்னகைக்க முயலுவோம்.

            3.ஊர்களுக்கென்று அல்லது வட்டங்களுக்காக, குறைந்தபட்சம் தெருக்களுக்கென்று ஒரு நலச் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சி சுவையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்தானே...!

            4.குழந்தைகளை விளையாட்டு போன்ற தனித்திறன், அல்லது கல்வியின் பொருட்டு ஒருங்கிணைத்தல் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் நல்ல வழிகாட்டுதலாய் இருக்குமே...

            5.ஒருநாளைக்கு ஒரு முறையேனும் நம் அண்டை வீட்டாருடன் பேசுவது என்று சங்கல்பமெடுத்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையே முளைத்திருக்கும் முட்புதர் கருகிவிடுமல்லவா? குறைந்தபட்சம் ஒரு ஹலோ'...

     நாம் என்ன செய்யப் போகிறோம்?


ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

என்ன செய்யப் போகிறோம்?

“கிடங்கில் தீட்டப்பட்டுக் காத்திருக்கும்
போராயுதங்களைவிட
கையில் வைத்திருக்கும் ‘ஒரு வாக்கு'
கூர்மையானது”

வரலாற்றின் திறந்த பக்கங்கள் ஜனநாயக ஆட்சிமுறையே சிறந்ததென்று தெரிவிக்கிறது. அதன் கூறுகளை நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சராசரி இந்தியக் குடிமகனோ அதன் மீது அதிருப்தியுற்றவனாகவே காணப்படுகிறான். ஆனால் அவ்விதமான அதிருப்திகளை எதிரொலிக்க வேண்டிய தேர்தல் களத்தில் திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தவற விட்டவர்கள் போல தங்கள் முன்தீர்மானங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு கையில் கிடைக்கும் கொழுகொம்பைப் பற்றியபடி பரிதவிக்கிறார்கள்.

தற்போதைய தேர்தல் முறை பற்றியும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் தேர்தல் காலங்களில் மட்டும் விவாதிக்கப்பட்டு பின் அவை மறக்கவும் படுகிறது. தேர்தல் முறை பற்றி விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் தேவைப்படுவது ஒரு புறமிருந்தாலும், இருக்கின்ற விதிகள் பற்றியும், அவை பற்றிய விழிப்புணர்வும், நம்முடைய உரிமைகள் குறித்தும் நாம் அறிய வேண்டியவை ஏராளம்.

பெரும்பான்மையான வாக்காளர்கள் இன்றைய அரசியல் மீது ஆர்வமில்லாத காரணத்தாலும், இதனால் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்கிற அபிப்ராயத்தினாலும் வாக்களிக்கச் செல்வதில்லை. ஆனால் எத்தனையோ தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப் படுகிற பொழுது, ஒவ்வொரு வாக்கும் எத்தனை அதிமுக்கியமானது என உணர முடியும்.

இன்னும் சிலர் தாங்கள் வாக்களிக்கப் போகும் முன்பே தங்களது வாக்கினை வேறு எவரோ கள்ளத்தனமாகப் போட்டு விடுகிறார்களே என்றும் பிறிதொரு பிரிவினர் நிற்கும் வேட்பாளர்கள் எவருக்குமே வாக்களிக்கும் விருப்பமில்லையே என்றும் அதற்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.

இரண்டுக்குமே நமது தேர்தல் விதிமுறைகளில் வழிமுறைகள் உண்டு. நம்முடைய வாக்கினை வேறு எவரோ போட்டுவிட்டால், நாம் நம்முடைய ஆட்சேபணையை அந்த வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, நம்முடைய இருப்பிட மற்றும் அடையாளச் சான்றுகளைக் காண்பித்து நிரூபித்தபின் புதிய வாக்குச் சீட்டில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த வாக்குச் சீட்டு பெட்டியில் போடப்படாமல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு வித்தியாசம் ஒற்றை இலக்கத்திலிருந்தால் அப்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே இது பற்றி குமுறிக் கொண்டிராமல் உரிமையோடு கடமையைச் செய்யலாம்.

அடுத்ததாக ‘எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை' என்றால் வாக்குச் சாவடியிலுள்ள தேர்தல் அதிகாரியிடம் எல்லா வாக்காளர்களையும் போல் நம் பெயரையும் கையொப்பத்தையும் பதிந்து விட்டு 17-A படிவம் பெற்று அதில்

‘49-O' விதிப்படி எவருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என பதிவு செய்யலாம். இதனால் என்ன பயனென்றால், ஒன்று, நம் பெயரில் வேறு எவரேனும் வாக்களித்து விடாமல் தடுத்து விடலாம். அடுத்து, இதே போன்று அதிகம் பேர் வாக்களித்தால் புதியதொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய அவசியத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

எனவே நம்முடைய ஒரு வாக்கு மதிப்பு மிக்கது. மாற்றத்தைத் தரவல்லது. ஆட்சி அதிகாரத்தையே கூட முடிவு செய்ய வல்லமை பெற்றது.

விருப்பமான எவருக்காவது வாக்களியுங்கள். அல்லது எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாவது வாக்களியுங்கள்.

ஒருபோதும் வாக்களிக்கும் உரிமையை விட்டுத்தராதீர்கள். நம் தீர்மானங்கள் எல்லாம் நிர்மாணிக்கும் உரிமையும், பொறுப்பும் நம் விரலருகில்... நாம் என்ன செய்யப் போகிறோம்?

வெறியாட்டு

    வெறியாட்டு     (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)         ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...