வியாழன், 7 செப்டம்பர், 2023

 

வளைதலும் வாழ்தலும்

-நெய்வேலி பாரதிக்குமார்

 

              
    ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக யாரைக் கண்டாலும் ஆடுவதும், நிமிர்த்த முடியாதபடிக்கு வளைந்தும் இருப்பதை அவமானமாகக் கருதியது. படைத்தவனிடம் சென்று வால் இல்லாமல் இனி நாய் ஜென்மத்தைப் படைக்கும் படி கேட்பதற்காக சென்றது.

               ஆட்டுக்குக் கூட அளவாய் அளந்து வைத்த நீங்கள் ஏன் எங்களுக்கு இத்தனை நீளம் வைத்துப் படைத்தீர்கள்?”

               கறிக்கு ஆட்டை வெட்டுகிற மனிதர்கள் உன்னை வெட்டாமல் விட்டு வைப்பதற்கு நன்றியாய் கொஞ்சம் வாலாட்டிப் போவதில் உனக்கு என்ன பிரச்சினை?”

               நாய் வாலை நிமிர்த்தவே முடியாது’ என்று திருத்த முடியாத ஜென்மங்களுக்கு உதாரணமாய் எங்களைச் சுட்டிக்காட்டுவது, ரொம்பக் கேவலமாக இருக்கிறது. பத்தாததற்கு அவ்வளவு நீளமாய் நாக்கு... ஓடும் போதெல்லாம் வாய்க்குள் இருக்காமல் தொங்கிக் கொண்டே இருப்பதால், பேராசைக்காரனுக்கு ஒப்பிடவும் எங்களைத்தான் சொல்கிறார்கள்... என்ன பிழைப்பு இது?”

               எல்லாவற்றுக்கும் ஈடு செய்வது போல நன்றியுள்ள ஜீவனுக்கு உதாரணமாக உன்னைத்தானே சொல்கிறார்கள்... அப்புறமுமா குறை?”

               சரி, நாக்கு இல்லாவிட்டால் ஜீவனம் செய்ய முடியாது. இந்த வாலால் என்ன பிரயோசனம்? குறைந்த பட்சம் அது நிமிர்த்தியாவது இருக்கக் கூடாதா?” - நாய்.

               கொஞ்சம் பொறுமையாக ஓரங்கட்டி நில்.. அடுத்த நபர் ஒரு புகாருடன் வருகிறான். அமைதியாகக் கேள்என்றார் கடவுள்.

               மிகுந்த அச்சத்துடன் உள்ளே நுழைந்த முள்ளம்பன்றி கடவுளே எனக்கு ஏன் இந்த முட்கள்?”

               ஒரு பாதுகாப்புக்குத்தான்... அச்சமூட்டும். எவராவது நெருங்கினால் சட்டென்று நிமிர்ந்து நிற்கும் வசதி செய்திருக்கிறேன், அப்புறமென்ன?”

               வளைக்க முடியாமல், நெளிவு சுளிவு இல்லாமல் ஒரு உறுப்பு உடம்பின் மீது இருந்தால் எவர் என்னிடம் நெருங்குவர்?”

               உனக்கு செளகர்யம் தானே?”

               வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாததால் வளர்ப்பு மிருகமாக எவரும் என்னை வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகளைத் தொட்டு  உணரும் பாக்கியம் எனக்கில்லை. முறைத்துக் கொண்டே இருப்பதால் எங்கள் இனமே அருகிக் குறைந்து விட்டது. பாடப்புத்தகங்களில் மட்டுமே எங்கள் படம் அடையாளத்துக்காக இருக்கிறது. அருங்காட்சியகத்தில் இருப்பதைப் போல...

நாய்க்கு இருப்பதைப் போல வளைந்து நெளியும் வால் இருந்திருந்தால் குழந்தைகள் ரசித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்... எவருமே விரும்பாத வாழ்க்கை அமையப்பெறுவது ஏதோ சாபம் போலிருக்கிறது. சதா முறைத்துக் கொண்டும் விரைத்துக் கொண்டும் இருப்பது பெருமைக்குரிய விஷயமில்லையே?” என்றது முள்ளம் பன்றி.

               சிடுசிடுவென விழுவதும், கடுகடுவென முகம் இருப்பதும் மேலாண்மையின் ஒரு தந்திரமிக்க பாவனை. நிறைய மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.. என்னைப் பார்த்தவுடன் அஞ்சும்படி மேலாடையாக முட்கள் இருப்பதால் நான் சிறந்த மனிதன் போல  ஆவேன் என்று நீதானே வரம் கேட்டாய்? நான் என்ன செய்ய முடியும்?” கடவுள் கைவிரித்து விட்டு நாயை அன்புடன் பார்த்தார். முள்ளம்பன்றி தலை குனிந்து வெளியேறியது

               நாய் நன்றியோடு முன்னைவிட வேகமாக வாலாட்டியபடி ஓடத்துவங்கியது.

 

1 கருத்து:

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...