ஞாயிறு, 2 ஜூலை, 2017

பனியில் நனையும் கவிதைகள்


                   சங்கு இதழில் பிரசுரமான சிறுகதை 

                          
                                        





பனியில் நனையும் கவிதைகள் 
                                                                                                                      

               ழுக்கும் தூசுமாக இருந்த என் இடம், மூச்சடைக்க வைத்தது. யாராவது கொஞ்சம் சிரத்தை எடுத்து எங்கள் இடத்தை துடைத்து சுத்தம் செய்யலாம். கொஞ்சம் இடம் மாற்றி வைத்தால் கூட ஆசுவாசமாக இருக்கும். கைப்படாத கன்னிப் பெண்ணைப் போல் இருப்பது எங்களைப் பொறுத்தவரை அத்துனை புனிதமான விஷயமில்லை. பெரும்பாலும் நான் இருக்கும் அலமாரியின் தலையில் கவிதைகள்என்று எழுதியிருப்பதைப் பார்த்ததுமே எங்கள் வரிசைப் பக்கம் நுழையாமல் தவிர்த்து நகர்ந்து விடுவார்கள்.
               எப்பொழுதாவது நூலகத்தின் கடைநிலை ஊழியன் கையில் பறவையின் இறகைப்போல் மென்மையான துடைப்பானை எடுத்து வருவான். பெரும்பாலும் நான் இருக்கும் வரிசையில் ஆள் நடமாட்டமே இல்லை என்பதால் வசதியாக சுவரோரம் சாய்ந்து ஓய்வெடுக்க செளகர்யமாக இருக்கும் என்பதால் பெயருக்கு எங்கள் அலமாரிகளை ஒரு வீசு வீசிவிட்டு உட்கார்ந்து விடுவான்.
               அவனையும் கூட நூலகர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து துடைத்து வைக்கக் கூடாதா என்று அதட்டுவதே இல்லை. போன வாரம் இப்படித்தான் துடைத்துக் கொண்டே இருந்தவன் திடீரென்று என்னை அலமாரியிலிருந்து வெளியே எடுத்தான். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என்னது... வாசிக்கப் போகிறானா?!' என்று ஆவலோடு அவனையே பார்த்தேன். என்னைப் பிரித்து ஒரு தட்டு தட்டினான். வலிக்கவேயில்லை. அப்பாடி! புரட்டவாவது செய்கிறானே' என்று குதூகலமானேன்.
               ஒரு மூலையில் அழுக்கில்லாத பக்கத்தை சரக்கென்று கிழித்து உருட்டி காது குடையத் துவங்கினான். அடச்சே! அற்பப் பதரே! கண்களால் கெளரவிக்க வேண்டிய என்னை இப்படி அழுக்கு பிடித்த காதுகளால் நுகரலாமா?' என்று கதறினேன். அவன் காதுகளில் குடைதலின் சுகம் நுழைந்தபிறகு என் குமுறல் எங்கே விழப்போகிறது?!
               என்னைப் படைத்தவனைத் தேடுகிறேன்... எங்கே இருக்கிறான் அவன்? இந்தக் காது குடையும் காட்சியைப் பார்த்தால் உயிரையே விட்டுவிடுவான். நான் இங்கு வருவதற்கு முன் ஒரு கங்காரு தன் குட்டியை சுமந்து கொண்டு நிற்பதைப் போல் என்னை மார்போடு அணைத்தபடி திரிந்து கொண்டிருப்பான். ஒரு பிறந்த கன்றின் கழுத்துப் பகுதியை வருடுவது போல அச்சகத்திலிருந்து முதலில் வந்த எனது பக்கங்களை பிரித்து வருடுவது அபாரமான சுகம் என்று சொல்லிக் கொண்டே பலாச்சுளைகளை விரித்து அவற்றின் அழகையும் வாசத்தையும் ருசிப்பது போல் அத்துனை வாஞ்சையுடன் நுகர்வான்.
               பாதி வெட்டப்பட்டும் மீதி வெட்டப்படாமலும் இருக்கும் பக்கங்களின் மேல் மற்றும் கீழ் ஓரங்களை மயில் தோகையை வருடி பிரித்துப் பார்ப்பது போல நோகாமல் எடுத்து தனது மேசை இழுப்பறையில் பத்திரமாய் வைப்பான். தனது குழந்தையின் முதல் மொட்டை வைபவத்தின் போது விழுந்து கிடக்கும் கேசம் ஒரு தகப்பனுக்கு எத்தனை உசத்தியானதோ,அத்துனை உயர்வானது அவனது கவிதை புத்தகத்தின் ஒவ்வொரு பிசிறும்..
               யாராவது தெரிந்தவர்கள் வந்து விட்டால் முதல்  பரிசு பெற்ற ஓவியன் தனது தூரிகையின் குழந்தையான ஓவியத்தை  காண்பிப்பது போல குதூகலத்துடன் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொரு வரியையும் நிதானமாக வாசித்து காண்பிப்பான். அர்த்தம் புரிகிறதா என்று இடையிடையே கேள்வி வேறு.
               ஒருவரும் காது கொடுத்து கேட்கவேயில்லை என்பதை உணரவேயில்லை அவன்.
               எங்கே போனான் என்னைப் படைத்தவன்?
               ஆனாலும் ஒரு கட்டத்தில் என்னை அவனே ஒளித்து வைக்க வேண்டியிருந்தது. என்னைப் பார்க்கின்ற தருணத்திலெல்லாம் என்னுடைய முதல் கவிதை நூல் என்று யாரிடமாவது பீற்றிக் கொண்டால் கடன் கொடுத்த வட்டிக்கடைக்காரன்  கவிதையுமில்ல; மண்ணாங்கட்டியுமில்ல... என் அசலும் வட்டியும்யா அது..பொறுமானமில்லாத பொருளா போயிடுச்சு..உன் வாயை நம்பி கடன் குடுத்துட்டேன்' என்று புலம்பிவிட்டுப் போவான். நாள் செல்லச் செல்ல அடுப்பெரிக்க உதவுமா இது?' என்று உக்கிரத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தபோது நடுங்கிப் போன அவன், எப்படி கடன்காரன் கண்ணிலிருந்து மறைப்பது என்று திட்டமிட்டபடியே இருந்தான். அதற்குப் பிறகு, யார் காதுபடவும் தன் கவிதை நூல் பற்றி அவன் பிரஸ்தாபிப்பதேயில்லை.
               ரொம்ப நாள் கழித்து சந்திக்கும் நண்பர்களுக்குத் தருவதற்காக, தன்னிடமிருக்கும் மிக உயர்ந்த பரிசு தனது கவிதை நூல் என்பதில் அவனுக்கு ஒருகாலத்தில் அலாதி மகிழ்ச்சி இருந்தது. ஆனால், அந்தப் பரிசை யாருக்கும் தெரியாமல் அவனே ஒரு கட்டத்தில் ஒளிக்க வேண்டியதாயிற்று.
               எப்படியும் நூலகத்திற்குத் தேர்வாகிவிடுவேன் என்று நம்பி இருந்தான். ஆனால் கவிதைப் புத்தகங்களையெல்லாம் எடுப்பது குதிரைக் கொம்பு என்ற தகவல் இவனுக்குத் தாமதமாகத் தான் உரைத்தது. கடைகடையாக ஏறத் துவங்கினான். ஒருமுறை ஒரு புத்தகக் கடையில் ஏறி கல்லாவில் சுவாரஸ்யமாக கண்களை மூடியபடி பல் குத்திக் கொண்டிருந்த நபரை நெருங்கி, அவர் எப்போது கண் திறப்பார் என்று அவரது முகத்தையே உற்று பார்த்தபடியே நின்றிருந்தான். திருப்பள்ளியெழுச்சி பாடினால் கூட திறவாத கண்கள் போலிருக்கு அவருக்கு! சில நிமிடங்கள் கழித்து தன் முகத்தைச் சுற்றி வந்த ஈயைப் பார்த்தான். அவரது முகத்தை நெருங்கிச் சுற்றக்கூடாதா என்று எல்லாக் கடவுள்களையும் பிரார்த்தித்தான். மெதுவாக மனமிரங்கி அந்த ஈ, அவரது கண்களுக்கருகே அமர்ந்தது. சட்டெனத் தட்டிவிட்டு கண்விழித்து, “என்ன வேணும்?”
               “கவிதை... கவிதை புத்தகம்.
               “அதோ அந்தப் பக்கம் பாரு, ஒரு பத்து பதினைஞ்சி கெடக்கும்.
               “இல்ல ... நான் எழுதியிருக்கேன். என்னோட புத்தகம்..
               என்னை தன் கைப்பையிலிருந்து வெளியே எடுத்துக் கொடுத்தான். என்னவோ கரப்பான் பூச்சியை கையில் கொடுத்தது போல் அருவருப்பாக முகத்தை வைத்துக் கொண்டு,  “இத வச்சிகிட்டு என்ன பண்றது?”
               “இல்ல... உங்க கடையில வைச்சு வித்துக் கொடுத்தீங்கன்னா... உங்க கமிஷனை வேணா எடுத்துக்குங்க
               “எந்தப் பய கவிதையெல்லாம் வாங்கறான்? சினிமாவுல பாட்டெழுதியிருக்கியா நீ?”
               “இல்ல சார்.
               “கிழிஞ்சது. ஒண்ணும் போணி ஆவாதே.... ஒரே ஒரு வழிதான் இருக்கு. இப்படியே போனீன்னா நாலு மூலை ரோடு வரும். அங்க சாயந்திர நேரத்துல சரியான கூட்டம் வரும். அப்படியே போற வர்றவன் கிட்ட ஃப்ரீயா கொடுத்தா சீக்கிரம் தீர்ந்து போயிடும். வாங்கறவன், தெருமுனை வரைக்கும் பத்திரமா வெச்சிகிட்டுப் போனாலே சந்தோஷம்தான்... என்ன நான் சொல்றதுஎன்று கோணலாக வாயை வைத்துக் கொண்டு சிரித்தார்.
               “இல்ல சார். எல்லாம் ஆழமான கவிதைகள். வேணும்னா ஒண்ணு படிச்சிக் காட்டறேன்.
               “ஏம்பா, இது என்ன திருநெல்வேலி அல்வாவா? சாம்பிளுக்கு சாப்பிட்டு பார்க்கறதுக்கு? சத்தியமா வெலை போவாது. ஒன் ஆசைக்கு ஒண்ணு, ரெண்டு வச்சிட்டு போ. ரெண்டு வருஷம் வச்சிருப்போம். அதுக்கப்பறம் எடைக்கு போட்டுடுவோம். அதுக்குள்ள வந்து வாங்கிகிட்டா புத்தகம் மிஞ்சும்.
               “பரவாயில்லை சார். நான் வேற கடை பார்த்துக்கறேன்.
               “தோ பாரு தம்பி, பார்த்தா நல்லவனா தெரியற. இந்த வாஸ்து, ஜோசியம், சமையல் குறிப்பு இது மாதிரி புத்தகம் போடு. பிச்சுகிட்டு ஓடும். ஏன் இதைக் கட்டிகிட்டு மாரடிக்கிறே. எவ்வளவு செலவாச்சு?”
               “இருபதாயிரம் ....
               “அடப்பாவி! கண்ணை தொறந்துகிட்டே கெணத்துல போட்டுட்டியே. திரும்பவுமா கெடைக்கப் போவுது?”
               எல்லாப் போட்டிகளிலும் கடைசி நபராக வருபவன் போல துவண்டு போய் வெளியே வந்தான். அவன் கண்களில் விழுந்த நீர் என் மீது விழுந்தது. உஷ்ணத்தில் கொதித்தன என் பக்கங்கள்.
               சக கவிஞன் ஒருவனைத் தேடி என்னை எடுத்துக்கொண்டு பார்க்கச் சென்றான்.
               “வாடா, காலத்தை வென்ற கவிஞா!
               “சும்மா இருப்பா. நீயும் நக்கலடிக்கிறே.
               “எங்க போயிட்டு வரே?”
               “வழக்கம் போல புத்தகம் விக்கலாம்ன்னு தான்.
               “கேள்வி எதுவும் கேட்கப் போறதில்ல. பதில் உன் முகத்திலும் வார்த்தையிலும் இருக்கே. ஏன் உனக்கு இந்த விபரீத ஆசை?”
               “வாங்கிக்கலைன்னா கூட பரவாயில்லை. சும்மா கூட வைச்சிக்க மாட்டேன்னுட்டான். அலமாரியில எவ்வளவு இடம் காலியா இருந்துச்சு தெரியுமா? அப்படியே ஒரு ஓரத்தில இடம் கொடுத்திருந்தா அதுபாட்டுக்கு கெடந்திருக்கும். நானும் அந்தக் கடையில என் புத்தகம் இருக்குன்னு சொல்லிட்டிருந்திருப்பேன்.
               “இப்பல்லாம் கவிதை எழுதறது கள்ளத் தொடர்பு வச்சிக்கிற மாதிரி. சொல்லவும் முடியாது. ரிஜிஸ்ட்டர் மேரேஜ் பண்ணவும் முடியாது. ரகசியமா உனக்குள்ளேயே முணங்கிக்க. கொஞ்சம் கவிதை சத்தம் கேட்டாக் கூட போதும். தெறிச்சி ஓடிடுவானுங்க. இந்த லட்சணத்துல புத்தகம் விக்க தூக்கிகிட்டு அலையிற நீ!
               “அட வச்சிக்கிலன்னாலும் பொறுத்துக்கலாம். அந்த ஆளு கிண்டல் வேற பண்றான். சுண்டல் கொடுக்கற மாதிரி முக்குட்டுல நின்னு சும்மா குடுன்றான்.
               “அவன் சொல்றான்னு குடுத்து கிடுத்து வைக்காதே. வீட்டுக்கு கூட எடுத்துட்டு போவமாட்டானுவ. மூல நோய் நோட்டீஸ் மாதிரி தெருவுல உன் கண்ணு முன்னாடியே தரையில போட்டு எவனாவது மிதிச்சிட்டு போயிட்டிருப்பான்.
               “என்னமோ திருட்டுப் பொருள விக்க முடியாத மாதிரி என் கவிதைப் புத்தகத்தை நான் வச்சிகிட்டு அலைய வேண்டியிருக்கு.
               “கவிதைகள் விற்பனைக்கு அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானவை அப்படின்னு கெளரவமா சொல்லிட்டு பத்திரமா உள்ளயே வச்சிக்க. திடீர்னு ஒரு ரூபா நோட்டு செல்லாதுன்னு சொன்னா மாதிரி.. யாரோ கவிதை புத்தகங்கள் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க போல.. விக்கறதுங்கறதை மறந்துடு.. யாராவது ஒர் ஆளு உன் கவிதையை படிச்சு மனசுக்குள்ளயாவது ஒரு நிமிஷம் ரசிச்சா அது கூட திருப்தியான விஷயம்தானே?”
               “ ஆமா
               “ அப்ப ஒண்ணு பண்ணு... நீயா  லைப்ரரிக்குப் போயி ஃபிரியா குடுத்துடு.. இது சுண்டல் குடுக்கற மாதிரி இல்லை.. படிக்க ஆர்வம் உள்ளவன் கையில காசு இல்லன்னா லைப்ரரிக்குத்தானே வருவான்.. அவன் கைக்கு கிடைக்கட்டும்.
               அப்படியாக நான் இங்கு வந்து சேர்ந்தேன். என் முதல் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கும் தாளில் இது வரை ஒரே ஒரு தேதி முத்திரை கூட குத்தப்படவேயில்லை..
               என்ன செய்து கொண்டிருப்பான் என்னைப் படைத்தவன்..?
               திடுமென எனது அலமாரிக்கு நான்கைந்து பேர் வந்தனர். ஒவ்வொரு புத்தகமாக எடுத்து உதவியாளர்கிழிந்து போன பக்கங்கள், ஒடியும் நிலையில் உள்ள தாள்களுடன் உள்ள புத்தகங்கள் என்று எடுத்து நூலகரிடம் தலைப்பைச்சொல்லி தனியே எடுத்துவைத்தான். என்னருகே வந்து நூலகர் என்னை எடுத்தார்.
               “ சார், இந்தப் புத்தகம் அப்படி ஒண்ணும் பழசா இல்லை. ஆனா இது வரைக்கும் ஒருத்தரும் எடுக்கவே இல்ல..
               “யார் எழுதுனது இது?”
               “ யாரோ ஒரு ஆள்... கவித புத்தகம்..
               “ இதுவும் இருக்கட்டும்யா... எல்லாமே கிழிஞ்ச புத்தகமா இருந்தா ஏலம் கேக்கறவன்.. எடுக்க மாட்டான்.. ஒண்ணு ரெண்டு புதுசு மாதிரி இருந்தாத்தான் வெலை கூடவச்சு கேப்பான்.. ஏல கட்டுல சேரு..
               நீண்ட நாள் கழித்து அலமாரியிலிருந்து இறக்கப்பட்டேன். ஒரே இடத்துல நின்னுகிட்டே இருந்தது உடம்பெல்லாம் வலிக்குது. சட்டென்று வீசிய ஒரு அவசரக்காற்றில் சிலிப்பிக்கொண்டேன். என் தாள்கள் படபடத்தன. சுகமாக இருந்தது.
               ஒரு கைதியின் கரங்களை பின்புறமாக கட்டி அழைத்துச் செல்வதைப்போல என்னை சக புத்தகங்களோடு கட்டி ஏலம் நடக்கும் அறையில் வைத்தனர். அலமாரியில் இருந்த போதாவது அப்படி இப்படி உடலை சாய்க்கும் வசதி இருந்தது. இப்போது நகரக்கூட முடியவில்லை.. கட்டுண்டோம் பொறுத்திருப்போம்...
               ஒரு வழியாக பழைய புத்தக  மொத்த வியாபாரி ஒருவன் எங்களையெல்லாம் ஏலத்தில் எடுத்தான். ஏலம் விடும்போது என்னென்ன புத்தகங்கள் கட்டில் உள்ளன என்று சொல்லப்படுவதில்லை. ஒரு கட்டை எடுத்து மேஜையில் வைப்பார்கள். இதுல பத்து புத்தகம் இருக்கு.. அப்படியே இருபது ரூபாஎன்பார்கள். புத்தக கனத்தை வைத்து விலை கூடும், குறையும். நல்ல வேளை கட்டில் இருப்பதில் கவிதைப் புத்தகமும் உண்டு என்று சொல்வதில்லை. தெரிந்திருந்தால் மொத்த வியாபாரி என்னை கழித்துக் கட்டியிருப்பான்.
               அலமாரியில் இருந்த வரை ஒருவரும் சீண்டவில்லை. என்றாலும் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் கட்டுக்குள் வந்த பிறகு நாடு கடந்த அகதியைப்போல் ஆனது என் நிலைமை. காற்றோட்டமற்ற கோணிப்பைக்குள் கிடந்தேன். குமுறி அழக்கூட முடியாது. மனிதர்களுக்கு தனிமைச்சிறை என்பார்களே அது போல கும்பலுக்குள் தனிமைச்சிறை, சாக்குப்பை வாசம்.
               ஏதோ என்னுடைய அட்டைப்படம் கொஞ்சம் அழகாக இருந்ததைப் பார்த்து ( ஏமாந்து) ஒரு ஃபிளாட்பாரக் கடைக்காரன் பாடபுத்தகங்களோடு என்னையும் வாங்கிவந்து கடை விரித்துவிட்டான். படிப்பறிவு இல்லாதவனால்தான் ஒரு கவிதைப் புத்தகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்.
               இங்கும் என்னை சீண்டுவாரில்லை. என்றாலும் காற்றோட்டமாகக் கிடந்தேன். எப்பொழுதாவது வீசும் மெல்லிய தென்றல் காற்று, என்னைப் புரட்டி படித்துவிட்டுச் செல்லும். உங்கள் மீது உரசிவிட்டுச் செல்லும் தென்றல் ஏன் அத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் யோசித்திருக்க மாட்டீர்கள். உண்மையில் அது என்னைப்போன்ற படிக்கப்படாத கவிதைகளைச் சுமந்த  புத்தகங்களை வருடிவிட்டு வந்திருக்கும்.
               இப்படியாக நாட்கள் கழிந்தன. கூட்டம் இல்லாத நாட்களில், தூசு தட்டும் நேரங்களில் எல்லாம் கடிந்துகொள்ளாமல், எங்களைத் திட்டாமல் ஃபிளாட்பார வியாபாரி அட்டைப்பெட்டிக்குள் வைப்பதே இல்லை. வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞனை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ( குறிப்பாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது) திட்டிக்கொண்டிருக்கும் தகப்பனைப்போல அவன்இந்த எழவை, புள்ளைவோ பாட புத்தகம் மாதிரி இருக்கேன்னு தெரியாம சேத்து எடுத்தாந்துட்டேன் அந்த மொள்ளமாறியும் சொல்லவே இல்ல.. ஒண்ணுக்கும் ஒதவாம கெடக்கு..என்று பீடியை வலித்தபடியே புலம்புவான்.
               திடீரென ஒரு நாள் எனக்கு மிகப்பரிச்சயமான குரல் கேட்டது. கண் விழித்து உரக்கக்கேட்டேன்.
               “ பெரியவரே இந்த புத்தகம் எவ்வளவு?” என்று என்னை கையிலேந்திக்கொண்டு கேட்டான். அட  பாசத்தின் வாசம் வீசும் அதே விரல்கள்.  பசியால் தவித்த குழந்தை குழந்தையை விட்டுவிட்டுப்போன ஒரு தாயின் மடியைத் திரும்பவும் பற்றி முந்தானையை இழுப்பது போல காற்றின் உதவியோடு அவன் கைகளை என் தாள்கள் தடவின. எனது பிரம்மா... அடப்பாவி எங்கு இருந்தாய் நீ இத்தனை நாளாய்..?..
               கண்களை அகல விரித்து அவனை நெருக்கத்தில் பார்த்தேன். முகத்தில்  இரு கண்கள் என்ற பெயரால் இரண்டு குழிகள். நாசி தவிர பிற அனைத்தும் மயிர்க்காடுகளில் மறைந்து கிடந்தன. எண்ணெய் காணாத தலை செம்பட்டை வண்ணத்துடன் பறக்கவும் தெம்பின்றி துடித்துக்கொண்டிருந்தது.
               “ இதுவா.... பத்து ரூவா குடு..
               பைகளைத் துழாவியவன். ஒன்றிரண்டாக சில்லறைகளை பொறுக்கினான். திருப்பித் திருப்பி எண்ணினான்.
               “ ஒரு ரூவா குறையுது...
               வந்த கிராக்கி கை நழுவி போய்விடக்கூடாதே என்று அவசரமாக ...
               “ பரவாயில்ல வச்சுட்டு புத்தகத்தை எடுத்துட்டுப்போ.. இது மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு வெளங்காத புத்தகம் இருக்கு.. வேணும்னா வந்து வாங்கிக்க
               உதடுகளை பிதுக்கினான் என்னுகிட்ட பணம் இல்ல
               “ பணம் இருந்தா கண்டிப்பா வாங்கிடுவ இல்ல.. முருகா இவனுக்கு இன்னும் முப்பது நாப்பது ரூவா பாத்து கருணை காட்டுப்பாஎன வாய்விட்டு வேண்டிக்கொண்டான் வியாபாரி.
               நீண்ட நாள் கழித்து என்னை அணைக்கும் கைகள் கிடைத்தன. ஆதியில் அவனிடமிருந்த உற்சாகம் இல்லை. ஆனால் அதே அரவணைப்பு.. அதே நேசம்.
               நடக்கவே சிரமப்பட்ட அவன் என்னைச் சுமக்கும் அளவுக்குக்கூட தெம்பில்லாதவனாக இருந்தான். மிக மிக மெல்ல நகர்ந்து, கடற்கரை பக்கம் வந்தான். ஆளரவமற்ற இடத்தில் அமர்ந்துகொண்டு என்னை ஒவ்வொரு பக்கமாக பிரித்துப் படித்தான். குரல் எழும்பவில்லை என்றாலும் அந்த ஒலி கவித்துவமாக வெளிவந்தது. பாதி படித்துக்கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் செருகின. காய்ந்த உதடுகளை நாவால் வருடினான். மீண்டும் படிக்க எத்தனித்தான்.
               சோர்வுற்ற அவனது உடல் அவனை படுக்கும்படி கெஞ்சியது. மார்பில் என்னை மலர்த்தியபடி அப்படியே கீழே சரிந்தான். அவனிடமிருந்து பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. காற்று மெல்ல என்னை சரித்து கீழே போட்டது. அவனிடமிருந்து பிரிந்து வந்து சற்றுத்தள்ளி விழுந்தேன். கறுத்த இரவில் தனியாக அவன் உடலோடு கிடந்தேன்.
               இரவு கவிய கவிய மெல்ல பனி பெய்தது. காற்று பக்கங்களை நகர்த்த நகர்த்த பனி ஒவ்வொரு வரியாக நனைத்தது. என்னைப் படைத்தவன் மரணத்துக்கான கண்ணீர் என்று சட்டென தோன்றியது எனக்கு. காற்றின் ஈரம் ஒவ்வொரு எழுத்தாக நனைத்து, என் ஒவ்வொரு எழுத்தும் பனி வழியே காற்றில் கலந்தது.
               எவருமே படிக்காத கவிதைகள் இப்படியாக பனியில் மிதந்தபடி காற்றினூடே.....
              
                                    நன்றி : 'சங்கு ' காலாண்டு இதழ்  ஏப்ரல் 2017
              

               

படைப்பாற்றலை பலி கேட்கும் பாகுபலி

                                         

      அனேகமாக இந்தியா முழுமைக்கும் ஒரு நாளில் ஒரு முறையேனும் உச்சரிக்கப்படும் பெயராக பாகுபலி அமைந்துவிட்டது. தென்னிந்தியாவிலிருந்து இப்படி ஒரு பிரம்மாண்டம் வெளிவந்து, ஆக்கிரமிப்பு மொழியான இந்தியைத் தாண்டி கோடிகளை வாரிக் குவித்ததில் மும்பைத் திரையுலகம் முழுக்க புகைச்சலான மௌனம் படர்ந்திருக்கிறது. சம்பிரதாயமாகக் கூட ஒரு ‘கானு’ம் வாழ்த்துத் தெரிவிக்க வில்லை அல்லது கருத்துத் தெரிவிக்கவில்லை. ‘இறுதிச்சுற்று’ அளவுக்கு காத்திரமான படைப்பாக இல்லாவிட்டாலும் அமிர்கான் நடித்ததால் ‘டங்கல்’ பெருமளவு பேசப்பட்டது. நாமும் கொண்டாடித் தீர்த்தோம். தருண் விஜய் சொன்னது போல தென்னிந்தியர்களை ரொம்பவுமே பொறுத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள் போலிருக்கிறது.
      உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் முந்தைய சாதனையின் அளவுதான் புதிய வீரனுக்கான இலட்சியக் கோடாக இருக்கும். அதுபோல இனி இந்தியத் திரையுலகம் முழுக்க நேரடியான அல்லது மறைமுகமான புதிய எல்லையாக ‘பாகுபலி’ அமைந்துவிட்டது. இப்பொழுதே இயக்குனர் சேரன் தமிழில் பாகுபலியை விஞ்சிய படைப்பு ஒன்று வரவேண்டும் என பிரம்மாண்ட இயக்குனரை மறைமுகமாக உசுப்பேற்றி இருக்கிறார். எப்படியாகிலும் அதைத்தாண்டிய ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற   இலட்சியக்கனவை தனது கண்களில் தேக்கி  ஒவ்வொரு தேநீர்க் கடையிலும் அக்கவுண்ட் புக்கில் அன்றைய தேனீர்க் கடனை எழுதிவிட்டு காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் தாகமுகம் என் மனதில் நிழலாடுகிறது.
      உண்மையில் இந்த பிரம்மாண்ட போதை இதுவரை இருந்ததைவிட அதிகம் தலைக்கேற பாகுபலி காரணமாகிவிட்டது. இதுவரை ஒரு பிராந்திய மொழியில்  மிக அதிக முதலீட்டில் ஒரு திரைப்படம் உருவாக்குவதில் பலருக்கும் ஒரு தயக்கம் இருந்தது. வணிக சாத்தியங்கள் குறைவான இந்த டிஜிட்டல் சமூகத்தில் ஒரு படம் தனது மொத்தத் தயாரிப்பு செலவு மற்றும் லாபத்தை ஒரு வாரத்தில் ஈட்டியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எல்லா பிராந்திய மொழி திரையுலகமும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிறந்த குழந்தை ஐசியூ வார்டில் தனது உயிர் குறித்த உத்திரவாதத்தை எதிர் நோக்கி இருப்பது போல.
      ஆனால் பாகுபலி ஒரு வாரத்தில் அதன் தயாரிப்பு செலவு போல இரண்டு மடங்குக்கு மேலே சம்பாதித்துவிட்டது. அதன் இயக்குனர் ராஜமவுலி தனது அடுத்த அணுகுண்டை ‘ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மகாபாரதம்’ என எறிந்து விட்டார். ஆக எல்லா ‘பிரம்மாண்டங்க’ளும் அடுப்பு மேல் அமர்ந்து நெருப்பை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகுக்கும் இது ஆரோக்கியமான சூழலா? ஏன் பிரம்மாண்டங்களின் மேல் இத்தனைக் காதல்?
      திரை உலகம் என்பது குதிரைப் பந்தயம் போல, ஓடுகிற வரைதான் குதிரையின் மேல் பணம் கட்டக் கூட்டம் காத்திருக்கும். நடிகர், நடிகைகள் தங்களது முந்திய தோல்வியில் விட்ட இடத்தை வேறொரு படத்தில் பிடித்துவிட முடியும். ஆனால் ஒரு இயக்குனர் மற்றும் ஒரு  தொழில் நுட்பக்கலைஞன் ஒவ்வொரு படத்தையும் வணிக ரீதியாக வெற்றிப் படமாக  ஆக்குவதில்தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. ஆகவே ஒரு பிரம்மாண்டம் உருவாகி அது வெற்றியும் பெற்றுவிட்டால் தன் எஞ்சிய வாழ்நாளுக்குத் தேவையான தொகையை அடுத்த படத்தில் சம்பளமாக பெற்றுவிட முடியும் என்கிற கனவு, மறைமுகமாக இயக்குனர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அந்தக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது பிராந்திய மொழித் திரைப்படங்களின் குறுகிய வியாபாரத் தளம்தான். பாகுபலி அந்தத் தடையை இப்போழுது உடைத்து  இருக்கிறது. இனி ஒவ்வொரு இயக்குனரும் பாகுபலியை முன்னுதாரணமாகக் காட்டுவார்கள். பிரம்மாண்டங்களின் தயாரிப்புச் செலவு கண்மண் தெரியாமல் எகிறும். எத்தனை கோடியில் தயாராகிறது என்பது இயக்குனரின் கவுரவப் பிரச்சினை ஆகிவிடும். இனி பாட்டி வடை சுட்ட கதையை திரைப்படமாக்குவது கூட கோடியில்தான்  சாத்தியம் என்கிற மனோபாவம் பிசாசைப் போல் எல்லோரையும் ஆட்டிவைக்கும். அதன் தொடர்ச்சியாக அதிகம் சம்பளம் பெறுவதும், அதனை மீடியாக்களில் கேட்பவர், வாசிப்பவர்களுக்கு  விழிகள் தெறிக்கும் அளவுக்கு அவர்களின் சம்பளம் இருந்தாக  வேண்டிய கட்டாயமும் உருவாகும். கிட்டத்தட்ட அரசியலில் திருமங்கலம் ஃபார்முலா போல இந்தியத் திரை உலகுக்கு பாகுபலி.
      பணமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக எந்தத் துறையில் தலைவிரித்து ஆடுகிறதோ அந்தத் துறையில் மக்களுக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் எந்த நன்மையையும் கிடைக்காது. குறிப்பாக கலைத்துறையில் ஒரு உன்னதப் படைப்பு உருவாக விடாமல் தடைக்கற்களை பண எல்லைகள் உருட்டிவிடும். கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள முக்கியத்துவத்தை  குறைத்து கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகளால் நிரம்பிய மாயாஜால வித்தையாக மாற்ற எல்லா படைப்பாளிகளும் முனைவார்கள். நாம் ஹாலிவுட்டுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் முயற்சி ஒரு காய்ச்சலைப் போல எல்லோரையும் ஆக்ரமிக்கும்.
      உண்மையில் ஒரு கலைப்படைப்பில் அறிவியல் ரீதியான தொழில்நுட்ப சாதனை எல்லோருக்கும் ஒருகாலகட்டத்தில் சாத்தியமாகும். சிலருக்கு வருடங்களில்.. சிலருக்கு மாதங்களில்.. இன்னும் கர்வமாக சொல்வதானால் தமிழர்களுக்கு எந்தத் தொழில்நுட்பமும் பெரிய சவாலில்லை. இந்தியத் திரையுலகில் எல்லாத் தொழில்நுட்ப சாதனைகளிலும் ஏதேனும் ஒரு தமிழ்க்கலைஞன் பின்னாலிருப்பான். இந்திய மொழிகளில் கணினிப் பயன்பாடு, இணைய ஆக்கங்களில் இந்தியையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்தான் முன் நிற்கிறது என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அதனை ஆராய்ந்து பார்க்கத் தேவையே இல்லை. அது உண்மையாக இருக்க நூறு சதவிகித வாய்ப்பு உண்டு. எனவே தொழில் நுட்ப ஈடுபாட்டில் தமிழர்கள் சுயம்பு லிங்கங்கள். ஆகையினால் தமிழ்த் திரையுலகினர் பாகுபலியை எல்லையாக கொள்ள வேண்டியதில்லை.  சில்ட்ரன் ஆஃப் ஹெவன் தொடங்கி இன்றைய தி சேல்ஸ் மேன்  வரையிலான ஈரானின் திரைப்படங்கள், ‘தி வே ஹோம்’ மாதிரியான கொரியன் திரைப்படங்கள். ‘தி போப்ஸ் டாய்லட் ’ மாதிரியான தென்னமெரிக்கத் திரைப்படங்கள்தான் நமது எல்லையாக இருக்க வேண்டும்.
      உண்மையில் ஆஸ்கார் கூட நமது எல்லையாக இருக்க வேண்டியதில்லை. ஆஸ்கார் விதிகளில் முக்கியமானது தேர்வுக்கு அனுப்பப்படும் திரைப்படம் அமெரிக்கத் திரையரங்குகளில் ஒரு வாரகாலம் மூன்று காட்சிகள் ஓடியிருக்க வேண்டும் என்கிறது. மேலும் அதன் பிரதான உறுப்பினர்கள் (அமெரிக்கத் திரையுலக பிரமுகர்கள் இடம் பெற்ற குழு) பரிந்துரைக்க வேண்டும் என்று அதன் சட்டத் திட்டங்கள் பிற நாட்டு திரைப்படங்கள் கலந்துகொள்ள  முடியாதவாறு கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு பிரிவில் (பிறமொழித் திரைப்படங்கள் பிரிவு) மட்டுமே நாம் கலந்துகொள்ள முடியும். அதாவது உலகின் பல்லாயிரக்கணக்கான மொழித் திரைப்படங்களுக்கு ஒரேஒரு விருது மட்டுமே சாத்தியம். ‘விசாரணை’ திரைப்படம் விருது பெறமுடியாமைக்குக் காரணம் அதன் தரம் அல்ல அதற்கும் மேலே உள்ள பல விதிகளே காரணம்.
      உலகின் பல உன்னதத் திரைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ள, காலங்கள் கடந்தும் காவியங்களாக போற்றப்படக் காரணம், அவை எடுத்துக்கொண்ட கதைக்கரு மற்றும் அதன் உயரிய சமூக நேயம்தான். இன்னும் சொல்லப்போனால் அவை பெரும்பாலும் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சுயசரிதை போன்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை என்பதுதான் மிக முக்கியக் காரணம் . இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என எடுத்துக்கொண்டால் இன்னமும் நாம் பதேர் பாஞ்சாலி, தீன் கன்யா, சாருலதா, மேக தக்க தாரா, தி ப்ளு அம்ப்ரல்லா, மதிலுகள் ஆகியவற்றைதான் சொல்கிறோம். இவை அனைத்துமே நாவல்களை அடிப்படையாகக் கொண்டவைதான். தமிழிலும் நாம் ஒருமித்தக் குரலில் சொல்லும் படம் ‘ உதிரிப்பூக்கள்.’ அது புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்தப்பாதையில் பாலா (நான் கடவுள்) , வசந்த பாலனின் அரவான் (காவல் கோட்டம் ஒரு பகுதி) , வெற்றிமாறன் (விசாரணை) என பயணிக்க எத்தனிக்கையில் எல்லாவற்றையும் புரட்டிப்போட பாகுபலி வந்திருக்கிறது.
      பாகுபலி தன் பிரம்மாண்டத்துக்கான பலியாக கேட்பது இந்த படைப்பாற்றல்தான். இனி கதையை எப்படி திரைக்கதையாக்குவது என்று யோசிப்பதற்குப் பதில் எப்படி கண்கவர் காட்சியாக்குவது என்று கனவு காண ஆரம்பித்துவிடுவான். ஒரு படைப்பாளி மரணிக்கத்துவங்கும் புள்ளி அதுதான். சமீபத்தில் எனக்கு அலைபேசி மூலம் அவசரமாக உரையாடிய ஒரு வெளியூர் புகைப்படக் கலைஞர் ‘காற்று வெளியிடை திரைப்படம் ஒரு காட்சி ஊடக அற்புதம் அவசியம் பாருங்கள் என்று பரிந்துரை செய்தார். அறிவுஜீவிகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று சினிமா என்பது காட்சி ஊடகம் ஆகவே காட்சியினால் மட்டுமே எல்லாவற்றையும் உணர்த்திவிட வேண்டும் என்பது. சமூக பொறுப்புள்ள எல்லா கலைக்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது அதன் உள்ளடக்கம்தான். அவற்றின் நோக்கம் பார்வையாளனை பரவசமாக்குவதல்ல. கேட்கவும் பார்க்கவும் மட்டுமே உள்ள கேளிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப் படவேண்டியதில்லை. உதாரணமாக ஒரு மேஜிக் கலைஞன் செய்யும் அத்தனையையும் நாம் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டியதில்லை. அவை கண நேர கேளிக்கை. ஆனால் திரைப்படம், நாடகம், எழுத்து ஆகியவை ஒரு உயரிய நோக்கத்தோடு உன்னத கலையாக படைக்கப்பட வேண்டியவை. இதை நான் கவனமாக எழுதுகிறேன் எல்லாவற்றிலும் ஒரு செய்தி இருக்க வேண்டும் என்னும் மொண்ணையான வாதமில்லை என்னுடையது.  ஒரு படைப்பின் மைய இலக்கு பார்ப்பவனை அல்லது வாசிப்பவனை ஒரு கணமேனும் சிந்திக்க வைப்பதாக  (தொடர்ச்சியாகவோ.. எதிராகவோ) இருக்க வேண்டும். அந்த உயரிய நோக்கத்துக்கு தொழில்நுட்பம் கலாப்பூர்வமாக துணை நிற்க வேண்டும்.
      அப்படியானால் ஒரு தொழில்நுட்பக்கலைஞன் தனது ஆகச்சிறந்த சாதனையை எப்படி நிகழ்த்துவது? என்ற கேள்வி எழலாம். கர்நாடக இசைக்கச்சேரியில் ஒரு பாடகனுக்கு பின்னிருக்கும் இசைக்கலைஞனின் வெளிப்பாட்டுக்கும், தனியே ஒரு இசைக்கருவி கச்சேரி செய்யும் போது அந்தக் கலைஞனின் தனி ஆவர்த்தனத்துக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டால் எப்படி ஒரு தொழில் நுட்பம் சினிமா போன்ற கூட்டுக் கலையில் பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
      டைட்டானிக்  போன்ற மாபெரும் திரைக்கலையை நாம் நிகழ்த்துவதும் ஒரு நியாயமானக் கனவுதானே என்ற கேள்வியும் எழலாம். அப்படியானால் ஒரு உண்மையான வரலாற்றை நம் தலைமுறைக்கு கண்முன் கொண்டுவர உங்கள் பிரம்மாண்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துங்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சின்ன சின்ன கூறுகளை, தனித் தனி ஆளுமைகளை பற்றிய திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் இது வரை இல்லை. அவற்றை பாகம் பாகமாக எடுத்துத் தள்ளலாம். புத்தத்தின் வரலாற்றை, சமணத்தின் வரலாற்றை, சோழர்களின் சாம்ராஜ்யத்தை கண்முன் கொண்டு வாருங்கள். சரித்திரத்தை மறந்த தலைமுறைக்கு அது பாடமாக இருக்கும். ஆயிரம் துப்பாக்கிகள் முளைக்கும் எந்திரனுக்கும், நான்கு அம்புகளை ஒரே சமயத்தில் எய்யும் பாகுபலிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உடைகளை, ஒப்பனைகளைத்  தவிர...  பேராசைகளின் கனவு அவை.  
      பிரம்மாண்டமே பேரின்பம் என்றிருப்பவர்கள் தயவு செய்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கை பின்பற்றலாம். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈடி போன்ற பிரம்மாண்ட படங்களை (அவை கூட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஃபேண்டசி வகைத்  திரைப்படங்கள்)   இயக்கிய  அதே சமயத்தில் அவரது செவ்வியல் திரைப்படங்களான ஷின்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், லிங்கன் ஆகியவற்றையும் அவரால் தரமுடிகிறது. பாவத்தைக் கழுவி பரிகாரம் தேட அங்கேயே வழியும் இருக்கிறது, முன்னோடிகளும் இருக்கின்றனர்.   
      திரைப்பட இயக்குனர்களை நூலகம் நோக்கி திருப்ப பகீரதப் பிரயத்தனத்தைப் பலரும் செய்து கொண்டிருக்கையில் இப்படியான பிரம்மாண்டங்கள் பரவசத்துக்குப் பதில் சோர்வையே அளிக்கின்றன. இப்பொழுது நம் கையிலிருக்கும் ஒரே நன்னம்பிக்கை முனை மாற்று சினிமாதான். என்னை சந்திக்கும்  குறும்பட இயக்குனர்களிடம் சிறுகதைகளை வாசியுங்கள் .. கவிதைகளை படமாக்க முயற்சியுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரு கோடி பட்ஜெட்டில் பத்து நிமிடக் குறும்படம் ஒன்றை யாரும் இயக்காமல் இருக்க வேண்டுமே என பிரார்த்தித்துக் கொண்டும் இருக்கின்றேன்...
        
                   
            
             


திக்குகள் எட்டும் பாயும் அம்பை
                  

(அம்பையின் ‘திக்கு’ மற்றும் ‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ கதைகளை முன்வைத்து) 
ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதியிலிருந்து வரையறுக்க முற்படுபவர்கள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றிலிருந்து தங்களுக்கான தரவுகளைக் கண்டடைவது மரபான ஒரு வழிமுறை . அவர்களின் மற்றொரு துழாவல் இலக்கியங்களின் ஊடே நிகழும். பொதுவாக எல்லா மொழியிலும், எல்லா தேசத்திலும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் பதிவு செய்யும் அவர்களின் சமகால சமூகத்தின் வாழ்வியல் கூறுகள், பண்பாடு, ஆட்சிமுறை ஆகியவற்றின் வழியே வரலாற்றுக்கு உத்திரவாதமான முழுமையை ஆய்வாளர்களால் தர முடியும்.
சிங்களர்களின் காப்பியமான .‘மகாவம்சம்‘ நூலின் மூலம்தான் தமிழர்கள் இலங்கையை தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்த வரலாற்றை நிறுவ முடிகிறது. ஆக இலக்கியம் என்பது தனிமை அடர்ந்த நீண்டதொரு சாலையில் பயணிப்பவர்கள் இளைப்பாறிச் செல்லும் நிழல் பரப்பு மட்டுமல்ல. இருளைப் பிளந்து செல்லும் ஒளிச்சிதறலும் கூட. ஆனால் இன்றைய தமிழிலக்கியச் சூழலில் சமகால அரசியலைப் பேசுவது.. பதிவு செய்வது என்பது ஒரு ஆபத்தான விளையாட்டாக அல்லது இலக்கிய அந்தஸ்தை பெறத் தகுதியற்ற முயற்சியாக இருக்கிறது  என்பதே யதார்த்தம் . இன்று வெளியாகும் பல புத்தகங்களின் அட்டையை கிழித்துவிட்டால் அவை எந்தக் காலகட்டத்தில், யாரால்  எழுதப்பட்டவை  என்று யாராலும் அனுமானிக்க முடியாது.
அரசியலை விமர்சித்து எழுதப்படும் பல படைப்புகளில் திராவிட இயக்கங்களை மட்டும் பகடி செய்து எழுதும்  ஆபத்தில்லாத, எளிதான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் மேலோட்டமான அரசியல் பார்வையாளர்களால் அவை  ஆமோதிக்கப்படுவதும்  ஒரு  காரணம். தேசியம் பேசும் அரசியல்வாதிகளை அதிகம் கேலி செய்வதில்லை. தேசவிரோதி என்னும் பட்டத்துக்கு உரியவராகிவிடும் அச்சமும், சாகித்ய அகாதமி மற்றும் பத்ம விருதுகள் கானல் நீராகிவிடும் என்பதும் மற்றொரு காரணம். ஞானபீட விருது என்னும்  தொலை நோக்குத் திட்டத்தோடு இயங்கும் போலி தேசபக்தர்களின் கபட ஆட்டம் இன்னும் அட்டுழியமானது. எனவே பயனற்ற வெற்று படைப்புகள், நேர்மையற்ற விமர்சனங்கள், பொருத்தமற்ற விருதுகள் தமிழ் இலக்கிய சூழலின் சாபக்கேடாகி விட்டது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அம்பையின் ‘திக்கு’ மற்றும் ‘கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’ ஆகிய சிறுகதைகள் அன்றைய காலகட்டத்தின் அரசியல் மற்றும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்ட சீரழிவுகளை துணிச்சலாகப் பேசியவை. தமிழ் இலக்கிய சூழலில் வெகு அபூர்வமாக காப்பிய நாயகர்களை, கடவுள்களை பகடி செய்தவை.
அம்பையின் பகடி என்பது வெறுப்பரசியலின் வெளிப்பாடு இல்லை. அது துவேஷத்தை தூவுகிற துஷ்டத்தனமும் இல்லை. ஒரு நேர்மையான மத நம்பிக்கையாளன், அரசியல் பார்வையாளனின் மனதிலும்  எழும் தவிர்க்க முடியாத  இயல்பான கேள்விகளின் பதிவு. ரசூலின்  மைலாஞ்சியில் எழுப்பும் கேள்விகளைப் போன்றே வாசகனை தெளிவு நோக்கிய தேடலுக்கு இட்டுச் செல்வது. இன்னொரு வகையில் பார்த்தால் பெரும்பான்மை கருத்துக்களின் மூச்சுத்திணறலிருந்து சற்றே நாசியை சுவாசத்துக்கு நகர்த்தும் முயற்சி எனலாம்.
அம்பையின் கதைகளை குறிப்பாக ‘திக்கு’ போன்றவற்றை வெறும் பிரச்சாரம் என்று புறந்தள்ளுவது ஒரு திட்டமிட்ட அரசியல். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம், அந்தக் காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய சமநிலைக்குலைவு மற்றும் ஒரு நியாயமான நடுநிலையாளரின் மனதில் தோன்றும் கலவையான சிந்தனைகள் ஆகியவற்றை ஆழமாக பதிவு செய்த  கதை ‘திக்கு’. பொதுவாக அம்பை தன்னுடைய படைப்புகளில் ஆணுக்கு எதிராக மூர்க்கமாக பெண்ணை நிறுத்துவதோ, கடவுள் என்கிற தத்துவத்திற்கு எதிராக ஆவேசமாக ஒரு கதாபாத்திரத்தை புனைவதோ இல்லை. ஒரு எளிய மனிதனின் வெள்ளந்தியான வினாக்களை சற்று பகடித் தூவி பரிமாறிவிடுவார். எதிர்மறையான வாசகன் கூட ஒரு புன்முறுவலோடு கடந்து விடுகிற வரிகளை அனாயசமாக அழுத்தம் குறையாமல் எழுதிச் செல்லும் ஆற்றல் அம்பைக்கு உண்டு.
      கதையின் துவக்கத்தில், புறநகர் வீதியொன்றை காட்சிப் படுத்தும் போது, முந்தின இரவில் சுத்தமாகக் காணப்பட்ட நடைபாதை, விடியும்போது விழிக்கையில் திடுமென கூரை எழுப்பப்பட்ட ஒரு சிறிய கோயில் ஒன்று உருவெடுக்கும். இரண்டொரு நாளில் உண்டியலும், மணியும் வந்து சேர்ந்துவிடும் என்று குறும்பாகத் துவங்கும். கோயிலின் அருகிலேயே துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டி இருக்கும். ஒரு பக்கம் கடவுளைப் பார்ப்பவர்கள், கன்னத்தில் போட்டுக்கொண்டே மறுபுறம் மூக்கைப் பிடித்துக்கொள்வர் என எழுதிவிட்டு கோயிலை ஒப்புக்கொண்ட அதே ஏற்புடன் குப்பைத் தொட்டியையும் ஒப்புக்கொண்டனர் என எழுதியிருப்பார். இந்த வாக்கியங்களை வாசிக்கும் ஒரு மதப்பற்றாளன், மதநம்பிக்கையின் மீதான சாடலாக எடுத்துக்கொண்டான் எனில் அது மேலோட்டமான வாசிப்பாகத்தான் இருக்கும். ஒரு புனிதத்தை வணங்குகிறவர்கள், அதன் அருகில் கிடக்கும் குப்பையை அகற்ற முயலுகிற மனோபாவம் கூட இல்லாமல் தங்கள் சுயநல பிரார்த்தனைகளோடு நகர்ந்து செல்கிற பொறுப்பற்ற இந்திய மனநிலையை மறைமுகமாக புலப்படுத்துகிற வரிகள் அவை.        
அதற்குப்பிறகும் அம்பையின் பகடியான எழுத்து தொடர்கிறது. ‘கன்னத்துக்குப் பக்கத்தில் மூக்கை வைத்த இறைவனின் “அறிவாற்றலை வியந்தபடி” என்கிற எள்ளலை ரசிக்காமல் யாராலும் நகர்ந்துவிட முடியாது. இது கடவுள் நம்பிக்கையாளர்களை முற்றிலும் மறுதலிப்பவர்களின் இறுக்கமான குரல் இல்லை. பொதுக்காரியங்களை தட்டிக்கழித்துச் செல்லும் சகக் குடிமகனை உரிமையுள்ள ஒரு படைப்பாளி  நிமிண்டும் செல்லச் சீண்டல் அது.
இப்படியாகச் செல்லும் கதையில் உள்ளேயே மற்றொரு கதை கிடைக்கிறது. பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுவுக்கு அருகில் வெய்யிலின் உக்கிரம் தாங்காமல். மகாலஷ்மி தனக்கும் வசதியாக புரண்டு படுக்க தனியே பாம்புப் படுக்கை வேண்டுமென ஆதிசேஷனனிடம் கேட்கிறாள். லக்ஷ்மியின் ஆதங்கங்கள் இதுவரை எந்த படைப்பாளியாலும் இதற்கு முன் சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. தெய்வம் என்றாலும் அவளும் பெண்தானே?, விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி சிலாகிப்பவர்கள் கூடவே அவரது மனைவியின் பாடுகளை பேசியிருப்பார்களா? இராம அவதாரத்தில் அவரது தர்மபத்தினி அசோகவனத்தில் பாதங்கள் வெடித்து, கைகள் சொரசொரத்து, சருமம் வறண்டு கிடந்த தருணங்களைப் பற்றி... பிற அவதாரங்களின் போது ஆமையாகவும், மீனாகவும், பன்றியாகவும் உருமாறிய அவளது சிரமங்களைப் பற்றி யாராவது நினைத்திருப்போமா?. இந்தக் கவலை எல்லாம் ஏதுமற்று தான் மட்டும் வசதியாக தனியாக பாம்பு படுக்கையில் உறங்கும் விஷ்ணுவைப் பற்றி   ஆதிசேஷனிடம் புலம்பி தனக்கொரு படுக்கைக் கேட்கும் லக்ஷ்மியின் குரல் வாசகனின் அகக்கண்களை விழிக்கவைக்கும்.
மதநல்லிணக்கம் என்பது சமபந்தி போஜனம் என்கிற அரசு சடங்குகளில் சாத்தியமாகிற விஷயமில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின் ஆங்காங்கே நடக்கும் இப்படியான விருந்துகள் மீடியா வெளிச்சத்துக்கான தீனியே ஒழியே வேறில்லை. அடிப்படை மனமாற்றம் நிகழாதவரை நல்லிணக்கம் என்பது ஒரு சம்பிரதாய சொல்லாகவே அர்த்தமற்றுவிடும். விஷ்ணுவின் காலடியிலிருந்து எழுந்து வந்து பாத்திமாவின் கைப்பிடித்து உலாவ முற்படும்போதோ, மேரியை இடுப்பில் தூக்கி கொஞ்சும் போதோ மட்டுமே அது சாத்தியமாகும் என லக்ஷ்மிக்குத் தெரியும். பாவம் மனிதர்களுக்கு மட்டும் ஏனோ புரிவதே இல்லை..
பாபர் மசூதி பிரச்சினைக்குப் பிறகு தனது நடைப்பயிற்சி பாதையை மாற்றிக்கொள்ளும் போது அங்குள்ள தெரு நாய் ஒன்று அவளையே முறைத்துக்கொண்டிருக்கும். புது ஆட்கள் உள்நுழைந்தால் நாய்கள் அப்படித்தான் விரோதமாக பார்க்கும். அத்துடன் அந்தக் கதை முடிந்து போகிறது. பல அர்த்தங்களுடன் அந்த வரியில்  வாசகனை சிந்திக்க வைத்துவிட்டு சட்டென நகர்கிறார் அம்பை.
. கடற்கரையில் ஒரு காவிநிறப் பிள்ளையார் என்கிற அவரது மற்றொரு கதையும் மதத்தின் பெயரால் நடக்கும் அரசியலின் மீதான எதிர்வினை. இதுவும் ஒரு நடைப்பயிற்சியின் போதான சிந்தனைப் பதிவுதான். பொதுவாக மனிதர்களின் சிந்தனை விரிவு அவர்களுக்கான தனிமை அவர்களுக்கு வாய்க்கும்போதுதான் சாத்தியமாகும். பெரும்பாலும் நடைப்பயிற்சியின்போது ஒரு புத்தனைப்போல் உருமாறும் சக்தி எல்லோருக்குள்ளும் ஒரு கணமாவது நிகழும். அத்தனை சிந்தனைகளையும் நாம் வியர்வைத் துளிகளைத் துடைத்தெறிவது போல விட்டுவிடுவோம். அன்றாடப்பணிகள் நம்மை இயல்பு நிலைக்குத் திருப்பிவிடும். ஆனால் ஒரு படைப்பாளியின் பணி நடைப்பயிற்சியின் போதே துவங்கிவிடும்.
இந்தக் கதையிலும் வழக்கமாக எதிர்ப்படும் நாய்கள், இரண்டடுக்கு பேருந்துகள் என அவரது வழமையான காட்சி விவரணைகள். கூடவே சமகால சமூக நிகழ்வுகளை அசை போடும் அவரது விரிந்த சிந்தனை என்று நாமும் அவருடன் நடந்து செல்வோம். விநாயகர் சதுர்த்தியின் போது நடக்கும் ஆர்ப்பாட்டமான ஊர்வலங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் முன்பு இல்லை. மும்பை போன்ற வட மாநிலங்களில் அவை மாபெரும் கொண்டாட்டங்கள். இப்பொழுது அங்கிருந்து இங்கே தொற்றிக்கொண்டதால் இங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. முந்தின நாள் கடலில் கரைப்பதர்காகத் தள்ளப்பட்ட பிள்ளையார், கரை ஒதுங்கிவிட அதனை மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்துகிறான் ஜோசப் என்கிற கிருத்துவன். ‘பாவம் அதுவும் யாரோடோ சாமிதானே .. (அனாதையாக ஏன் கரையில் கிடக்க வேண்டும்) என்கிற அவனது வார்த்தைகள் சமபந்தி போஜனம் போலல்லாத நிஜமான நல்லிணக்கம்.
அங்கிருக்கும் பத்து வயது சிறுமியின் மனதில் எழும் அச்சங்களை பதிவு செய்கையில் ‘சாமிக்குள்ளே இருக்கிற கம்பி மீனைக் குத்தி ரத்தம் வரும்.. அப்புறம் அந்த பிளாஸ்டிக் பையை மீன் சாப்பிட்டா செத்துடும் என்கிற கவலைகள் அசலானவை. ஆனால் அவற்றைப் பேசுவது இந்திய மண்ணில் சாத்தியமே இல்லை. பேசுபவரின் தேசபக்தியும், மெய்யறிவும் கேள்விக்குள்ளாக்கப்படும். முதுகெலும்புள்ள ஆண்களே பேசமுடியாத விஷயங்களை துணிச்சலாக பேசுகின்ற அம்பையை பெண் எழுத்தாளர் என்றோ பெண்ணியம் பேசுகிறவர் என்று மட்டுமே சுருக்குவது அவரை ஒரு ‘கேரிபேக்கில்’ அடக்கி பிராண்ட் செய்யும் தந்திரமான அரசியல். அந்த அரசியல்தான் அவர் முக்கியமற்ற படைப்புகளை படைத்திருப்பதாக, பிரச்சார நெடி வீசும் கதைகளை எழுதியிருப்பதாக புறக்கணிக்கச் செய்கிறது. இந்தப் புறக்கணிப்பு அவரது படைப்புகளை யாரும் வாசித்துவிடக்கூடாது என்பதற்காக குறுக்கே போடப்படும் சாலைத் தடுப்புக்கள். அவற்றைப்  புறந்தள்ளிவிட்டு அவரது படைப்புகள் வாசகனை தானே சென்றடையும். 
             நன்றி : பேசும் புதிய சக்தி 'மே' 2017                  
     

   

மார்லன் பிராண்டோ


       

மனிதனெனும் வகையில் மார்லன் பிராண்டோ ஒரு தேவன்
நடிகனெனும் வகையில் அவன் ஒரு பிசாசு
                                  _பெர்னார்டோ பெர்ட்டுலூசி
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி பிறந்துவிட்டால் ஆஸ்கார் ஜுரம் உலக சினிமா வெளியில் பற்றிக்கொள்ளும். உலக திரைக்கலைஞர்களின் ஒருமித்த ஒரே கனவு ஆஸ்கார் மேடையில் ஏறுவதாகவே இருக்கும். ஆஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பிடித்து விட்டால் கூட போதும், திரைக் கலைஞனாக உருவெடுத்ததன் பலன் கிடைத்துவிடும் என ஏங்காகாதவர்கள் இல்லை. ஆனால் அத்தகைய ஆஸ்கார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, அதுவும் பிரதான விருதான சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தும் அதனை வாங்க மறுத்து உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்தவர் மார்லன் பிராண்டோ. ஆஸ்கார் அறிவிக்கப்பட்டு வாங்க மறுத்த அல்லது அங்கு மறுத்த கலைஞர்கள் வுடி ஆலன், கோடார்ட், டுடி நிக்கலஸ் உட்பட ஏழு பேர். ஆனால் பிராண்டோ தவிர மற்ற ஆறு பேர் மறுத்ததற்கு அவர்களின் சொந்த பிரச்சினைகள் அல்லது அவர்கள் சார்ந்த தனியார் அமைப்புகளின் பிரச்சினைகள்  காரணம். ஆனால் பிராண்டோ மருத்தற்குக் காரணம்   தன் சொந்த பிரச்சினைக்காக அல்ல, புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக என்பது இன்னமும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்றுதானே..
      1973 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 45-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா. கிளிண்ட் ஈஸ்ட்வுட், சார்லஸ் ஹெஸ்டன், ரோஜர் மூர் உள்ளிட்ட ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் திரை விழா இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாகத் தொடங்குகிறது. 1972-ல் வெளியாகி உடனடியாக கிளாஸிக்அந்தஸ்தைப் பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த தி காட்ஃபாதர்படத்துக்கு சிறந்த படம், தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் 3 விருதுகள் கிடைக்கின்றன. சிறந்த நடிகருக்கான விருது, ‘தி காட்ஃபாதர்படத்தில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாகவும் பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும் கார்லோன் என்னும் அற்புதமான கதாபாத்திரத்தினை  தன் நடிப்பால் உயிரூட்டிய மார்லன் பிராண்டோவுக்கு அறிவிக்கப்படுகிறது. அவரது பெயரை அறிவிக்கிறார், நடிகர் ரோஜர் மூர். அனைவரின் கண்களும் மார்லன் பிராண்டோவைத் தேடுகின்றன. ஆனால், அவருக்குப் பதில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில்ஃபெதர் மேடையேறுகிறார்.
பிராண்டோவின் பிரதிநிதியாக சாஷீன் வந்திருக்கிறார் என்பதாகப் புரிந்துகொண்டு, ஆஸ்கர் விருதை அவரிடம் நீட்டுகிறார் ரோஜர் மூர். கையை உயர்த்தி அதை மென்மையாக மறுக்கும் சாஷீன், மைக் முன் சென்று நிற்கிறார். தனது கையில் இருக்கும் கடிதத்தைப் பார்வையாளர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். விருதை வாங்க மறுத்து பிராண்டோ எழுதிய கடிதம் அது.
இந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!என்கிறார். சாஷீன் நடிகை மட்டுமல்ல  நேஷனல் நேடிவ் அமெரிக்கன் அஃபர்மேடிவ் இமேஜ் கமிட்டிஎனும் அமைப்பின் தலைவரும் கூட!
பிராண்டோவின் தார்மிகக் கோபத்தைப் புரிந்து கொண்ட பார்வையாளர்கள் ஒரு சிலர் கைதட்டி வரவேற்கிறார்கள். நேரமின்மைக் காரணமாக அந்தக் கடிதம் அங்கு முழுமையாக படிக்கப்படவில்லை. உண்மையில் அக்கடிதத்தை சாஷீன் வாசிக்கையில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் அவர் இமைகளை முட்டுகிறது. அதுவும் கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். அதற்கு அடுத்த நாள் அந்தக் கடிதம் நாளிதழ்களில் முழுமையாக வெளியாகிறது.
அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை முற்றிலுமாக ஒடுக்கி தங்கள் அதிகாரத்தை  நிறுவிய வெள்ளை இனத்தவர்கள், திரைப்படங்களிலும் அம்மக்களை மோசமான விதத்திலேயே சித்தரித்தனர். அத்துடன், செவ்விந்திய இன நடிகர்களை மோசமாக நடத்தினர்., அது மட்டுமல்லாமல்  அதே ஆண்டு பிப்ரவரி மாதம்  தெற்கு டகோடா மாகாணத்தின் வவூண்டடு நீ (Wounded Knee) பகுதியில் ஒக்லாலா இன நல்வாழ்வுத் துறைத் தலைவர் ரிச்சர்டு வில்ஸன்  ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகப் போராடிய செவ்விந்திய இனப் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில், 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரே ராபின்சன் என்னும் மனித உரிமை ஆர்வலர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டபொழுது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டது.  இந்தச் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் காயம்பட்டிருந்தார் பிராண்டோ. அவரது அறச் சீற்றத்தின் பின்னணி இதுதான். இந்த விருது மறுப்பு விளம்பரம் தேடி அல்ல மார்லன் மறுத்தப் பிறகுதான் வவுண்டட் நீ படுகொலைகளைப் பற்றி இந்த உலகம் அதிக கவலையுடன் விவாதிக்கத் தொடங்கியது.
போராட்டம் என்பது களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்துவது, கோஷம் எழுப்புவது மட்டுமல்ல. வீட்டுக்குள் உறைந்து கிடக்கும் உள்ளங்களை கிளறச்செய்து செய்து அவர்களை வெளியே இழுத்து வருவதும் கூட. அந்த வகையில் பெரிதாக கூக்குரலிடாமல் அமைதியாக சாதித்தார் மார்லன் பிராண்டோ.  
சமூக அக்கறை மிகுந்த ஹாலிவுட்  கலைஞரான மார்லன் பிராண்டோ பிறந்தது 1924 வருடம் ஏப்ரல் 3ம் தேதி,  அமெ‌ரிக்காவிலுள்ள நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஓமாஹா நகரில். அவரது அப்பா மார்லன் பிராண்டோவின் பெயரையே மகனுக்கும் வைத்தனர். தாய் டோரதி ஜூலியா பென்னிபேக்கர். இவரது மூதாதையர் ஜெர்மானிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள். மார்லன் பிராண்டோவின் அப்பா பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் உயர்பதவி வகித்தவர். தொழிலின் நிமித்தம் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்ததால், தன் குழந்தைகளுக்காக அவர் நேரம் செலவழிக்கவில்லை. குடிப்பழக்கம் உடைய அவர் எப்போதாவது வீட்டுக்கு வரும்போது பிள்ளைகளிடம் ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்துகொண்டார். குழந்தைகளின் கண் முன்னே மனைவியை பெல்ட்டால் அடிப்பார். குழந்தைகளை மிரட்டி உருட்டுவதும் அவரது பழக்கம்.
பிராண்டோவின் அம்மா டோரத்தி ஜூலியா ஒரு நாடக ஆசிரியை. சிறந்த நாடக நடிகை. ஓமாஹா நகரின் புகழ்பெற்ற நாடகக் குழுவான ஒமாஹா கம்யூனிட்டி பிளே ஹவுசின்இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். இதனால் பிராண்டோவின் வீட்டுக்கு எந்த நேரமும் நாடகாசிரியர்களும், நடிகர்களும் வருவதும் செல்வதுமாக இருப்பார்கள்.
டோரத்தி ஜூலியா நவீன உலகின் அடையாளமாக திகழ்ந்தவர். ஆண்களைப் போல கிராப் முடியுடன், அரைக்கால் சட்டை, மேல்சட்டை அணிவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். கூடவே  அளவுக்கதிகமான மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை கொண்டிருந்தார். பிராண்டோவின் இளம் வயது செல்லப் பெயர் ‘புட்’ . அவரது சிறு வயது நண்பன் ஜார்ஜ் இங்க்லன்ட் பிராண்டோவுடனான நட்பின் நினைவுகளை விவரிக்கையில் சிறுவயதிலேயே பிராண்டோ அடுத்தவர்களைப் போல மிமிக்ரி செய்வதில் சிறந்தவராக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.. பண்ணையில் உள்ள மாடு மற்றும் குதிரைகளைப் பார்த்து அவற்றைப் போல குரலெழுப்பிக்  காட்டுவார். தன் தாயின்  குடிப்பழக்கத்தைத் திசை திருப்ப பிராண்டோ அவ்வப்போது பலகுரல் நடிப்பினைச் செய்து வந்தார். அவரது அந்த கேளிக்கைகளை ரசிப்பதற்கென ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. தனது கவலைகளை அப்படித்தான் அவரால் மறக்கமுடிந்தது. ஆனால் பிராண்டோவின் இரண்டு மூத்த சகோதரிகளில் ஒருவரான ஜோசலின் பிராண்டோ தான் முதலில் நடிப்புத் துறையில் நுழைந்தவர். அவர் அமெரிக்க நாடகம் மற்றும் நடிப்புக் கல்லூரியில் சேர்ந்தார்.
அப்பொழுது மார்லன் கல்வி கற்க பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார். பள்ளியில் பல பிரச்சனைகளை வீணே இழுத்து வந்ததால் அவரது தந்தை படித்த இராணுவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஒரு முறை அவரது அறையில் இருக்க வேண்டிய மார்லன், நகரின் பிரதான வீதிக்கு ஊர்சுற்ற வந்தததின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். மிலிட்டரி ஸ்கூலை விட்டு நின்ற பிராண்டோவைப் பார்த்து அவரது அப்பா ,”நீயெல்லாம் உருப்படவே மாட்டே!என்று சாபமிட்டார். தொடர்ச்சியான தோல்வி மற்றும் அவமானங்களினால்  இருபது வயதை தொடுவதற்கு முன்னரே தீவிர நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. மனப்பிறழ்வுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று  மீண்டு வந்தார் பிராண்டோ. பின்னர் தனது சகோதரி படித்த அதே நாடகப் பள்ளியில் மார்லனும் சேர்ந்தார்.
அந்தப் பள்ளியில்தான் மார்லன் உற்சாகமாக இருக்க முடிந்தது. ரஷ்யக் கலைஞர் ஸ்தனிஸ்லாஸ் அறிமுகப்படுத்திய ‘மெத்தட் ஆக்டிங்’ வகை நடிப்பு முறையை அங்குதான் அவர் மிகச் சிறப்பாக கற்று தேர்ந்தார். ஒருமுறை வகுப்பில் எல்லோரையும்  முட்டை ஈனும் கோழி போல் நடிக்க சொன்னார் ஆசிரியர். எல்லோரும் அப்படியே அமர்ந்து நடித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருகில் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் சப்தம் கேட்க. எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் மார்லன் மட்டும் அமர்ந்த நிலையில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஆசிரியர் அவரருகே வந்து உனக்கு வெடிசப்தம் பயமாக இல்லையா எனக் கேட்டார். அதற்கு மார்லன் நான் கோழி ஆயிற்றே எனக்கு வெடிகுண்டு பற்றியெல்லாம் தெரியாது எனக்கூற ஆசிரியர் அசந்து போனார். அப்படியாக தனது பாத்திரத்தில் ஒன்றிப் போனவர் பிராண்டோ   
அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குனர் பிரெட் சினோமன் திரைப்படத்தில் நடிக்க பிராண்டோவை அணுகியபோது தனது வழிகாட்டியான ஆசிரியர் ஸ்டெல்லா ஆல்டரிடம் ஆலோசனை பெற்ற பின் ஒப்புக் கொண்டார் பிராண்டோ. பிராண்டோவின் முதல் திரைப்படம் தி மென்ஆகும். காயமடைந்த ஒரு போர் வீரனைப் பற்றிய படமென்பதால் சில மாதங்கள் ராணுவ மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பழகி, அங்கிருந்த நோயாளிகளின் மன நிலையைக் கூர்ந்து கவனித்தார். நடிப்புக்காக மட்டுமல்லாமல் வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வாக அவருக்கு அது அமைந்தது. அவரது முதல் படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதான பொருளாதார வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிராண்டோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்து பிராண்டோ ஏற்கனவே நடித்து 855 முறை மேடையேறிய எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்த திரைப் படம் 1951ல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டாலர்களைச் சம்பாதித்தது. பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த கலை போன்ற பிரிவுகளில் விருதினை வென்றது. தனது இரண்டாவது படத்திலேயே சிறந்த நடிகர் பிரிவில் பிராண்டோ பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது ஆறாவது படமான ஆன் த வாட்டர் ஃபிரண்ட்அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுத் தந்தது.
மார்லன் நடிக்கும் பல படங்களில் அவரது பாத்திரம் வறிய நிலை மக்களை பிரதிபலிப்பதாக இருந்தது. உதாரணமாக மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு உழவர் புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில், ஜபாட்டா என்கிற கூலி விவசாயிகளினுடைய தலைவன் பாத்திரத்தை மார்லன் பிராண்டோ ஏற்று நடித்தார். யுவான் ஜபாட்டா (ஜபாட்டா வாழ்க) என்று அந்தப் படத்திற்குப் பெயர்.
1969ம் ஆண்டு மரியோ பூஸோ எழுதிய நாவலான காட்ஃபாதர் வெளியான நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நாவலின் மீது கண் வைத்த பாரமவுண்ட் சினிமாஸ் கதை உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு இயக்குநரைத் தேடி வந்தது. அதன் பொறுப்பிலிருந்தவர் ராபர்ட் இவான்ஸ். காட்ஃபாதர் கதைக்களம் இத்தாலிய பின்னணியில், மாஃபியா கும்பலைப் பற்றியதாக இருந்ததால் இத்தாலியர் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று பிரான்சிஸ் கொப்பல்லாவை அணுகினார். இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட கொப்பல்லா போட்ட ஒரே நிபந்தனை பிராண்டோ நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் ராபர்ட் இவான்ஸ் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. திமிர் பிடித்த ஆள், யாருக்கும் அடங்காதவர் மேலும்  அவரது படங்கள் வரிசையாகத் தோல்வி கண்டன போன்ற காரணங்களைச் சொல்லி பிராண்டோவை புறக்கணித்தார். இதைக் கேள்விப்பட்ட பிராண்டோ தனது ஒப்பனையாளரை வைத்தே கார்லோன்பாத்திரத்துக்கான ஒப்பனையைப்  போட்டுப் படங்களை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த கொப்பல்லோவும், பூஸோவும் தாங்கள் மனதில் நினைத்திருந்த கதாபாத்திரம் நேரில் வந்ததாகவே உணர்ந்தனர். பிராண்டோ நாயகனாக ஒப்பந்தமானார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் கொப்பல்லாவின் போக்கில் திருப்தியடையாத பாரமவுண்ட் அவரை மாற்ற முடிவு செய்தது. விஷயத்தை அறிந்த பிராண்டோ, “கொப்பல்லோ இல்லையென்றால் நான் இந்தப் படத்தில் தொடரப் போவதில்லைஎன்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த பிடிவாதமான அறிவிப்புதான் கொப்பல்லோ இப்படத்தில் தொடர்ந்து பணியாற்றக் காரணமாக இருந்தது.  
டைம்பத்திரிக்கை 2000ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐம்பது படங்களில் காட்ஃபாதர்படமும் இடம் பெற்றது. உலகம் முழுக்க எத்தனையோ தாதா கதைகள் வந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் முன்னோடி காட்ஃபாதர் திரைப்படம். அந்த படத்தில் நடித்தமைக்குத்தான் அவருக்கு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதைத்தான் அவர் வாங்காமல் புறக்கணித்து சரித்திரத்தில் இடம் பெற்றார். இப்படி அவர் விருதை புறக்கணிப்பது எதிர்காலத்தில் அவருக்கு மற்ற எந்த விருதுக்கு தேர்வு செய்யவும் ஒரு தடையாக அமையும் என்பதும் மார்லனுக்குத் தெரியும் இருப்பினும் அதை உதாசீனப்படுத்திவிட்டு மன உறுதியுடன் அந்த முடிவை எடுத்தார்.  
பொதுவாகவே இரக்க குணமும், விளிம்பு நிலை மக்கள் மீது ஆழ்ந்த அன்பும் கொண்டிருந்தார் பிராண்டோ. அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் தனது நண்பனுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். இருவரும் தங்கள் சட்டைப் பையில் வைக்கும் பணம் அடிக்கடி திருடு போவதை உணர்ந்தனர். பிராண்டோவின் நண்பர் அறையைச் சுத்தம் செய்யும் நபர் தான் பணத்தைத் திருடுகிறார் என்பதை ஒரு நாள் கண்டுபிடித்து அவரைப் போலீசில் மாட்டிவிடலாம் என்று பிராண்டோவிடம் சொன்ன போது, ‘பாவம் அவனுக்கு நம்மை விடத் தேவை அதிகம் போலிருக்கிறது. இல்லையென்றால் அவன் இப்படி செய்பவனில்லைஎன்று சொல்லி அவனுக்காகவே தனது சட்டைப் பையில் பணத்தை வைக்கத் துவங்கினார்.
               படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது தென்னாப்பிரிக்க தூதரகத்திற்கு முன்பு, தென்னாப்பிரிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நடந்து கொண்டிருந்த போராட்டத்தைப் பற்றி அறிந்து படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டார். 1963_ஆம் ஆண்டு மாரட்டின் லூதர் கிங் உரை நிகழ்த்திய ஆகஸ்ட் மக்கள் உரிமைப் பேரணியில் பங்கேற்றார். ‘ எனக்கு ஒரு கனவு இருந்தது’ என்று மார்ட்டின் லூதர் கிங் முழங்கியது அப்பொழுதுதான். மார்ட்டின் மறைந்த பொழுது கண்ணீருடன் தனது படபிடிப்புக்களை ரத்து செய்துவிட்டு அவருக்கான அஞ்சலி கூட்டங்களில் பங்கேற்றார். ஜான் எஃப். கென்னடி அதிபராகப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகப் பல கூட்டங்களில் படப்பிடிப்பைப் புறக்கணித்து விட்டுப் பங்கேற்றார்.
மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் மரண தண்டனைக்கு எதிராகவே அவரது எண்ணமும் உறுதியும் இருந்தன. சான் குவென்டின்சிறையில் ஒரு கைதியின் மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
               உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம்.என்று கோபமாக  அவர் கொந்தளித்தார்.
      1959 ஆம் ஆண்டிலேயே  ஹென்றி ஃபாண்டா, மர்லின் மன்றோ, ஆர்தர் மில்லர் போன்றவர்களுடன் இணைந்து அணு ஆயுதத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டார். தனது படங்களை இனவெறி கொண்ட பார்வையாளர்கள் முன்பு எக்காலத்திலும் காண்பிக்கக் கூடாது என, திரைப்படக் கதாசிரியர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துமாறு கோரி முன்னணியில் நின்று செயல்பட்டார்.         
இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி ஆவணப் படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு அமெரிக்காவில் பெருந்தடைகள் எழவே அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை!என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.
                பிராண்டோவின் திரைப்பட வாழ்வில் ஐம்பது ஆண்டு காலத்தில் முப்பத்து ஒன்பது திரைப்படங்களில் மட்டுமே  அவர் நடித்துள்ளார். அவர் இப்படியான அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தனது தொழிலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நூறு படங்களைத் தொட்டிருக்கக் கூடும். இன்னும் பல விருதுகள், கோடிகள் அவரை அடைந்திருக்கும்.
அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அவரது இறுதி காலம் வரை துன்பங்கள் நிறைந்தவையாகவே இருந்தன. அவரது ஒரு மகன், தனது ஒன்றுவிட்ட சகோதரியின் காதலனை கொன்றதற்காகக் சிறையிலடைக்கப்பட்டான். பிராண்டோவின் மகள் அவளது காதலனைப் பறிகொடுத்தத் துயரினைத் தாங்க இயலாமல்  தற்கொலை செய்துகொண்டாள் என்றாலும்  கடைசிவரை ஒரு போர்க்குணம் உடையவராகவே அவர் இருந்திருக்கிறார். ஈராக் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து, கண்டித்து அறிக்கை விட்டதோடு மட்டுமில்லாமல், தனது 78 வது வயதில், இராக் யுத்தத்துக்கு எதிராக  நடுநிலையாளர்கள் ஊர்வலம் போனபோது அவர்களில் ஒருவராக மார்லன் பிராண்டோவும் போயிருக்கிறார்.
தனது கடைசி நாட்களில் அவரது நண்பர் மைக்கேல் ஜாக்சனின் நெவர்மேன்ஸ் லாண்டில்கழித்தார் பிராண்டோ. தாகித் தி எனும் பூர்வகுடி இந்தியப் பிரதேசத்தில் அமைந்த தனித்த வீட்டில் சிலநாட்கள் கழித்தார் 'அம்மா எனக்குச் சொன்ன பாடல்' எனும் தனது சுயசரிதையை 1996_ஆம் ஆண்டு பிராண்டோ எழுதி வெளியிட்டார். அவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை தமிழில் அஜயன் பாலா எழுதி இருக்கிறார். மார்லன் பிராண்டோ 2௦௦4 ஆம் ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.

சர்ச்சைகளும், அவதூறுகளும், விமர்சனங்களும், துன்பியல் சம்பவங்களும் நிறைந்த ஒரு சாகசப்படம் போன்ற அவரது வாழ்க்கையில் அவரது போராட்டக்குணம்தான் அவரது அழிக்க முடியாத அடையாளமாக இன்றும் கருதப்படுகிறது. 

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...