புதன், 23 நவம்பர், 2022

 

                           சலஞ்சலம்

                                                நெய்வேலி பாரதிக்குமார்





யல் என்று பெரிதாக எழுதப்பட்ட வள்ளத்தில் இசக்கியும் அவனது குழுவும் ஏறியபோது அதிகாலை மணி ஆறாகி இருந்தது, கடல் மிக சாதுவாக தள்ளாடிக் கொண்டிருந்தது. கரையில்தான் அலையின் ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும். மற்றபடி குறிப்பிட்ட தூரம் போனால் ரொம்ப சமர்த்துப் பிள்ளையாக இருக்கும். அதுவும் அதிகாலை நேரத்துக் கடல் தீராத தனிமையின் துயரம் ததும்ப பூமியின் மேலே கண்ணாடித் திரவம் போல மிதந்து கொண்டிருக்கும். ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ”பேசாம கெடக்குற பூதத்தைக் கூட நம்பிடலாம்.. ஆனா கம்முன்னு கெடக்கற கடலை நம்பாதே.. கெளம்புச்சின்னா அஞ்சாளு ஒசரத்துக்கு எகிறும்.”. என்று எச்சரிப்பார்கள்.. இளந்தாரிகள் அதை எல்லாம் கேப்பார்களா? 

ஏர் கம்ப்ரசர் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட நூறு மீட்டர் நீளமுள்ள குழாய், மாஸ்க், காலிலும் கைகளிலும் அணிய அலுமினியத் தட்டுக்கள், சங்கு பொறுக்கி வைத்துக் கொள்ள இடுப்புக் கச்சா, மணலில் பற்றிக்கொள்ள ஊன்று கம்பிகள், ஜிபிஎஸ் கருவி, இரண்டு வேளைக்கான கஞ்சி , தண்ணீர் சகிதமாக இசக்கியின் குழு சங்கு குளிக்க கிளம்பியது. இசக்கியின் அண்ணன் துரை, பெரியப்பா மகன்கள் முகுந்தன், சுப்பிணி, அப்புறம் அத்தைப் பிள்ளைகள் பாண்டியன், நொண்டிவீரன் என இந்த அறுவர் குழு எப்பொழுதும் பிரிவதே இல்லை. எப்படிப் பார்த்தாலும் இருபத்தி அஞ்சு வயசு துரைதான் அந்தக்குழுவில் மூத்தவன்.

“மாப்ளே.. அம்பா பாட்டு ஒண்ணு எடுத்து வுடு.. இன்னும் ரெண்டு மணி நேரமாவது ஆவும்” என்று துரை நொண்டி வீரனை உசுப்பினான். கால் கொஞ்சம் தாங்கி நடந்தாலும் வீரனுக்கு கணீர் என்று குரல் வளம்..

நானிட்ட வாளை நல்ல சமத்தன்

கோழைப் பயலே தீவட்டி தடியா

உனக்கா எனக்கா பல்லாக்கு

       தனக்கா இல்லே சரணம் சொன்னேன் வாராய்

 

ஆரம்பித்தது என்னவோ வீரன்தான் என்றாலும் பாண்டியனும் துரையும் ஆளுக்கொரு பாட்டை அடுத்தடுத்து பாட.. சுப்பிணி அலுமினியத் தட்டுக்களை வைத்துக்கொண்டு உற்சாகமாகத் தாளமிட ஆரம்பித்துவிட்டான் அவ்வளவுதான் அங்கே ஒரு கச்சேரி அறிவிக்கப்படாமல் களை கட்டியது.. நடுநடுவே காலை உணவு வயிற்றுக்குள் போனபடி இருந்தது.

சட்டென்று பாடுவதை நிறுத்திய துரை “மாப்ளே நட்சத்திர மீனு ஒண்ணு அப்படியே மெலுக்கா மேல வந்துட்டு உள்ளே போயிடுச்சு.. நிச்சயம் இங்க சங்கு இருக்கும்.. வள்ளத்தை நிறுத்து சொல்றேன்”

”மெய்யாலுமா?”

“அட ரெண்டு கண்ணால பார்த்தேங்கறேன்..”

“இரு இரு அவசரப்பட்டு நிறுத்தாதே.. அங்க ஒரு வள்ளம் எதுத்தாப்புல வருது பாயிண்ட்டை மார்க் பண்ணிக்க அவனுங்க கண்ணுல பட்டுச்சுன்னா நமக்கு போட்டியா இறங்குவானுங்க’’

ஜி.பி.எஸ். கருவியில் அந்த இடத்தை சரியாக குறித்துக் கொண்டார்கள்.

“யாருடா அவனுங்க.. உவரியா?”

“கிட்ட போனாத்தான் தெரியும்.. வள்ளத்தை மொள்ளமா ஓட்டு..” எதிர் வள்ளத்துக்கு கொஞ்ச நேரம் போக்கு காட்டிவிட்டு அவர்கள் இடம் மாறியதும் மறுபடி அந்த இடத்திற்கே வந்தார்கள்.

வள்ளம் நிலைநிறுத்தப் பட்டது. உடலில் மருந்தைத் தடவிக் கொண்டனர். அலுமினியத் தட்டுக்களை காலில் கட்டியபடியே பாண்டியன் கேட்டான்

“ஏண்டா மாப்ளே.. தாணுமலைக்கு இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கு?”

“என் கணக்கு முப்பதினாயிரம்.. தாயோளி.. வட்டி கிட்டின்னு எவ்வளவு குட்டி போட்டு வச்சிருக்கானோ தெரியல.. தோளுல தூக்கி வெளையாட ஒரு குளுவான் கெடையாது.. வட்டியை ம்ட்டும் தவறாம குட்டி போட வச்சிடறான்” என்று துரை சொன்னதும்

எல்லா வலிகளையும் மறந்து சிரிப்பொலி பரவியது

“ஆனாலும் அவனைவிட்டா நம்மளை நம்பி வேற யாரு பணம் தருவா? சங்குக்கும் அவனைப் போல வெலை தர இந்தத் தூத்துக்குடி ஜில்லாவிலேயே ஆளு இல்லை.. எல்லாப் பயலுகளும் ஏமாத்துக்காரப் பயலுக.. இவன் ஒருத்தன்தான் கேட்டதுக்கு மேலே அள்ளித் தருவான்.”

உடலை கடல் நீர் அலைக்கழிக்காமலும், எகிறி மேலே வராமலும் இருக்க இடுப்பில் இரும்புச் சங்கிலிகளைக் கட்டிக் கொண்டனர். கச்சா பிறகு ஊன்று கம்பி, மாஸ்க் அணிந்தபிறகு அம்பாவை வணங்கினர். சுவாசக்குழாயை பொருத்தி விட்டு கம்ப்ரசரை முடுக்கிவிட்டனர்.

அது தபதபவென சப்தமிட ஒவ்வொருவராக குதித்தனர்.

கடலோடிகள் என்கிற பெயர் சங்கு குளிப்பவர்களுக்குத்தான் ஒரு எழுத்து பிசகாமல் பொருந்தும். கடலுக்கு கீழே தண்ணீரின் அத்தனை வலுவையும் எதிர்த்து மணலின் அழுத்தத்தை உந்தி சங்கு கிளற அவர்கள் ஓடும் ஓட்டத்தை  எத்தனை குதிரைசக்தி என எப்படி வரையறுத்து அளப்பது?  கடலின் ஆழத்துக்குச் சென்று அடிமணல் காலில் பட்ட பிறகு இரு கைகளிலும் உள்ள ஊன்று கம்பிகளை மணலுக்குள் ஊனிவிட்டால், அப்புறம் அவர்கள் ஓட்டம் நிற்காது,

இரண்டு கால்களாலும் மணலைச் சரித்துச் சரித்து காலில் தட்டுப்படும் சங்குகளை லாவகமாக எடுத்து இடுப்பு கச்சாவில் சேமித்தபடியே இருப்பார்கள். ஒரு பக்கம் ஆடா திருக்கை வந்து கடிக்குமா இல்லை பாம்புகள் வந்து கொத்துமா என்று கவனமாக பார்த்தபடியே சங்கு கிளற வேண்டும். சமயத்தில் ஒன்றரை மணி நேரத்தில் கச்சா நிரம்பிவிடும்.. நாள் சரியில்லை என்றால் மூணு மணிநேரம் ஆனாலும் நிறையாது... அதுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.. அன்றைக்கும் அப்படித்தான் கால் மணி நேரம் சரித்தால் ஒன்றிரண்டு சங்குகள்தான் தேறின.. மூணு மணி நேரத்துக்கு உயிர் போக சரித்ததில் ஆளுக்கு பதினைந்து முதல் இருபது சங்குகள்தான் கிடைத்தன. உயிருள்ள சங்குகளை அவர்கள் எடுப்பதில்லை.. அது சாமி குத்தம் ஆகிவிடும். செத்து சில வருடங்கள் ஆன சங்குகள்தான் கழுவவும் பாலீஷ் போடவும் எளிது என்பதால் வியாபாரிகளும் அதற்குத்தான் விலை அதிகம் தருவார்கள்..

சங்கு எடுக்க  ஒரே இடத்தில் குதித்தாலும் தனித்தனியாக பிரிவதில்லை.. அருகருகேதான் சங்கு எடுப்பார்கள். அண்ணன் தம்பியும் அத்தை மகன்களும்தானே ஆபத்துதவிகள்..  

மூணு மணி நேரம் ஓயாமல் கால்களால் மணலை சரிப்பது ஒன்பது மணி நேரம் கரையில் ஓடுவதற்குச் சமம்.. அவர்களது தொடைகளும், இடுப்பும் இற்றுப் போயின.. கால் நரம்புகள் இறுகி முறுக்கி அறுந்து விடுமோ என்கிற அளவுக்கு கடினமாகின. குழாய் மூலம் சுவாசிப்பது அசூசையாகவே இருந்த்து என்னவோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் இறுதிகட்ட நோயாளியின் மனநிலையை தவிர்க்கவே முடியாது.

நகர்ந்து, நகர்ந்து சங்குக் கிளறும் ஆவலில் துரை மட்டும் அவர்களின் வரிசையிலிருந்து  விலகிச் சென்றுவிட்டான். ஊன்று கம்பிகளை ஆர்வக் கோளாறில் அவனை அறியாமல் இடம் மாற்றியதில்  இடைவெளி அதிகமானது தெரியாமல் போயிற்று.

கடைசியாக ஒரு தள்ளல் என்று மனசுக்குள் நினைத்தபடி அவன் இன்னும் நகர்ந்தபோது ஊன்று கம்பி தடுமாறிக் கை நழுவ அப்படியே அவன் குப்புற விழ முகத்திலிருந்த மாஸ்க் ரெகுலேட்டருடன் கழன்று விழுந்தது. விபரீதம் புரிந்து அவன் கைகளை ஆட்ட அவனைக் கவனிக்கும் நோக்கம் இல்லாமல் மற்றவர்கள் கீழே குனிந்து சரித்துக் கொண்டிருந்தனர்..அவன் எழுப்பிய குரல் அவனுக்கே கேட்காதது போல இருந்தது.

திரும்பவும் மாஸ்க்கை எடுக்க முயன்றபொழுது அது கைக்கு அகப்படாமல் போக்குக் காட்டியது. இன்னும் சில நிமிடங்கள்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்கிற நிலை வந்தபொழுது தண்ணீர் மெல்ல அவன் வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் நுழைய ஆரம்பித்தது. நல்ல வேளையாக முகுந்தன் எதேச்சையாக பார்க்க அத்தனை பேரையும் அணைத்து அவன் பக்கம் திருப்பினான். பாண்டியன் அப்படியே துரையை கையில் ஏந்திக்கொள்ள முகுந்தன் மாஸ்க்கைப் பிடித்து அவனது முகத்தில் மாட்டினான். இருந்தாலும் துரையின் கண்கள் செருகின.. மூச்சுத் திணறியது.. அத்தனை பேரும் அவனைத் தாங்கிப் பிடித்து மேலே எழும்பினார்கள்.. எத்தனை பதட்டம் இருந்தாலும் அவர்களின் இயக்கம் கடலில் ஒரு போதும் தடுமாறியதே இல்லை. விரைவாக வள்ளம் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். துரையை வள்ளத்தில் படுக்க வைத்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.. வழக்கத்தைவிட வேகமாக கரையை நோக்கிப் பறந்தது வள்ளம்.

 ன்னது சலஞ்சலம் சங்கு வேணுமா?” அதிர்ச்சியில் உறைந்தான் ராமநாதன்.. சிறிது நேரத்துக்குப் பிறகு நிதானத்துக்கு வந்தவன் “எந்த ஊரு சாமி இவங்க?”

“இமாச்சல பிரதேசமாம்.. குளு குளுன்னு இருக்குமே அங்கேர்ந்து வர்றாங்க. நம்ம சீனுதான் கூட்டிட்டு வந்திருக்கார். நீ சொல்லுண்ணே” அழைத்துக் கொண்டு ராமநாதன் இருக்கும் இடத்தை அடையாளம் காட்ட வந்த சவரிமுத்து அவர்களை விட்டுவிட்டுச் சிட்டாகப் பறந்துவிட்டான். 

டப்பிங் படத்தில் கராத்தே சண்டை போடும் ஜப்பானிய முகம் அவருக்கு.. கூட வந்த பெண்மணி நியூஸ் ரீலில் அமைச்சர்களின் வருகையின் போது இடுப்பில் கை கோர்த்து ஆடுவார்களே அது போல காதுகளிலும் மூக்கிலும் வளையங்கள் அணிந்திருந்தாள். மாராப்புச் சேலையை மாற்றிப் போட்டிருந்தாள். காலை வெயிலில் இருவரும் இளமஞ்சள் நிறத்தில் மின்னினர்.  

சீனு அந்த அன்னியரின் கைகளை ஆதரவாகப் பிடித்து “இவரு பேரு சுதீர் குமார் வாலியா இவங்க அவரோட மனைவி கம்பாரி தேவி. ஹிமாச்சல் பிரதேஷ் லாஹோல்லேர்ந்து வந்திருக்காங்க. கொல்லத்துலேர்ந்து பாலகிருஷ்ண ஜோசியர்  அனுப்பி இருக்கார் அவருகிட்ட பிரசன்னம் பாக்க வந்திருக்காங்க. அவருதான் இவங்க ஜாதகத்தைப் பார்த்துட்டு ஏழு ஜென்ம பாவம் ஒண்ணு சுத்திக்கிட்டு இருக்கு அந்த தோஷத்தைப் போக்கனும்னா சலஞ்சலம் சங்கை வீட்டுல வச்சி பூஜை செய்யனும்னு சொல்லி இருக்கார்”

“அவரு பாட்டுக்கு சொல்லிட்டா ஆச்சா.. சலஞ்சலம் சங்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கிற விஷயமாய்யா.? வைரம்யா. வைரம்... முன்னாடி சொல்லி வைக்கணும் கிடைச்சப்புறம் தகவல் அனுப்புவாங்க.. அப்புறமாத்தான் புறப்பட்டு வரணும் இப்படி பொசுக்குன்னு வந்தா எப்படி?”

சீனு அதை அப்படியே மொழி பெயர்த்து அவர்களிடம் சொன்னான். இருவரும் கை கூப்பினார்கள். அவர்களது மொழியில் ஏதோ சொன்னார்கள்

“ஏற்கனவே அவங்க ஊரைவிட்டு வந்து பதினேழு நாள் ஆச்சாம். தும்கூர் எர்ணாக்குளம்னு சுத்தி இப்பத்தான் பாலகிருஷ்ணனை பிடிச்சி இருக்காங்க.. கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை இல்லை.. டாக்டருங்க ஒண்ணும் பிரச்சினை இல்லை எல்லாம் சரியாத்தான் இருக்கு. நேரம் கூடலை.. அப்படிங்கறாங்களாம்.. அவங்களோட ஒரே நம்பிக்கை இந்த சங்குதான்.. பாலகிருஷ்ணன் இங்க மட்டும்தான் கிடைக்கும்னு சொல்லி அனுப்பி இருக்காரு.  எப்படியாச்சும் மனசு வைங்கன்னு சொல்றாங்க..”

“எங்க தங்கி இருக்காங்க?”

“இனிமேதான் ரூம் பாக்கணும்”

“நீ இடம் பாத்து தங்க வை.. நான் தாணுவைப் பார்த்துட்டு வர்றேன்.. இருக்கும்னு உறுதியா சொல்ல முடியாது ஆனா தாணுவை விட்டா அவ்வளவு வெலை ஒசந்த சங்கு வேற யாருகிட்டேயும் வெலைக்கு வராது.. எப்படியும் இருவது முப்பது லட்சம் ரூவா கூட ஆவும்.. சொல்லி இருக்கியா?”

“அதெல்லாம் பாலகிருஷ்ணனே விவரமா சொல்லித்தான் அனுப்பி இருக்காரு.. அப்புறம் ஒரு வாமவர்த்தி சங்கும் வேணுமாம்..”

“வாமவர்த்தியா அப்படின்னா?”

“அதாம்பா ஊதுற சங்கு இடம்புரி சங்கு,, பூஜை அறையில அதை ஊதிட்டு அப்புறமாத்தான் சலஞ்சலம் சங்குக்கு பூஜை பண்ணனும்”

 

“அது கெடைக்கும்பா அதுல ஒண்ணும் பிரச்சினை இருக்காது” சொல்லிவிட்டு நகர்ந்தான் ராமநாதன்.

தியம் ஒரு மணிக்கெல்லாம் ராமநாதனிடமிருந்து ஃபோன் வந்தது.. “சீனு.. நான் தாணுகிட்டே பேசிட்டேன்.. அவன்கிட்ட சலஞ்சலம் வகையறாவே இல்லையாம் ஆனாலும் பார்ட்டியை நேரா பாக்கனும்னு சொல்றான்.. அட்வான்ஸ் கொடுத்தா எங்க இருந்தாலும் தேடிப் பிடிச்சுக் கொண்டு வரேங்கறான். சில சமயம் வச்சிகிட்டு கூட ஆவாட்டுவான்.. சண்டாளன்.. அவன் என்ன நினைக்கிறான்னு கடவுளுக்குக் கூடத் தெரியாது.. எமகண்டம் முடிஞ்சதும் தாணுவோட கமிஷன் மண்டிக்கு அவங்களை கூட்டிட்டு வந்துடு” எனச் சொல்லிவிட்டு பட்டென்று ஃபோனை வைத்தான்.

தாணு சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கும் எத்தனை சதவிகிதம் போய் இருக்கும் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பேச்சில் சமர்த்தன். அவனோடு உரையாடும் போது அதிர்ச்சிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். சமயத்தில் அது இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கலாம்..ஆனாலும் நம்பியவர்களைக் கைவிட மாட்டான்.

மூன்று மணியைத் தாண்டியவுடன் தாணுவின் மண்டிக்குச் சென்றார்கள். தாணு எப்பொழுதும் போல காவி ஜிப்பா.. கழுத்தில் ஏகப்பட்ட மணிகள், நெற்றியில் அளவெடுத்து வரைந்த்து போன்ற நாமம்.. கைகளில் வண்ண வண்ண கயிறுகள். அதில் தொங்கியபடி கிருஷ்ணரின் உருவம் பொறித்த டாலர்.. தாடையில் செல்லமாக முளைத்தது போல சிக்கனமான தாடி.. என்று அவன் உருவம் மாறுவதே இல்லை.. அவனுக்கு மட்டும் வயதாவதே இல்லையா என்று கூட சீனுவுக்குத் தோன்றும்.. சீனு எப்பொழுதோ ஒரு முறைதான் சந்திப்பான் ஆனால் அவன் எப்பொழுதுமே மாறாத அதே உருவத்துடன் இருந்தான். கீழே தரையின் மீது தடிமனான மெத்தை ஒன்றை அறை நிரம்பும் அளவுக்கு விரித்து அதில் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“வாங்க கிருஷ்ணா.. வாங்க.. உக்காருங்க..” கிருஷ்ணா அவனது ட்ரேட் மார்க் சொல் எல்லோரையும் கிருஷ்ணா என்றுதான் அழைப்பான்.

சீனு அமர்ந்தவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.“ராமநாதன் சொன்னாரா?”

“அதெல்லாம் அற்புதமா சொன்னார்.. மொதல்ல என்ன சாப்படறீங்க? அதைச் சொல்லுங்க”

“நீங்க சலஞ்சலம் இருக்குன்னு சொன்னா விருந்து சாப்பிட்ட மாதிரி”

அவ்வளவுதான் தாணு பலமாக சிரிக்க ஆரம்பித்தான்.. நீண்ட நேரம் நிறுத்தவே இல்லை. பிறகு “ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் ஒரு வாமவர்த்தி சங்கு கிடைக்கும். ஆயிரம் வாமவர்த்தி கூடும் இடத்தில் ஒரு வலம்புரிச் சங்கு கிடைக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கு கூடும் இடத்தில்தான் ஒரு சலஞ்சலம் கிடைக்கும்.. ஆயிரம் சலஞ்சலம் கூடும் இடத்தில்தான்.. ம்.. என்ன கிடைக்கும்?”

என்று ஒரு பள்ளி ஆசிரியர் போல அவர்களைப் பார்த்துக் கேட்டான். அனைவரும் திரு திரு வென விழித்தனர்

“ஒரு பாஞ்சஜன்யம் கிடைக்கும்// அந்த பாஞ்சஜன்யம் உலகத்திலேயே ஒருத்தர் கிட்டதான் இருக்கு.. யாருகிட்டே?”

பலமாகச் சிரித்தான். “கிருஷ்ண பரமாத்மாகிட்ட..”’ மறுபடியும் வெடிச் சிரிப்பு

“இப்பப் புரியுதா.. சலஞ்சலம் எத்தனை அபூர்வம்னு” அவனது ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி நிதானமாக மொழிபெயர்ப்பதற்குள் விழி பிதுங்கியது சீனுவுக்கு..

“ஆமா இவங்க எந்த ஊருன்னு சொன்னே?”

“லாஹோல் ஹிமாச்சல பிரதேசம்..”

“ஓ அப்ப லாஹோலி மொழி பேசுவாங்களா?”

“ஆமா.. இப்ப நான் இவங்ககிட்ட பேசறது இந்தியிலே”

“லாஹோலி மொழி ராமாயணத்துலே.. சீதையோட அப்பா ராவணன் அப்படித்தானே?’ அவர்கள் அசந்து போய் ஆமாம் என்று தலையாட்டினர்..

“கிருஷ்ணா.. கிருஷ்ணா ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதை.. ஆனாலும் நாம் அவரை ஒரு முகத்துடன் வணங்குகிறோம் இல்லையா?. சலஞ்சலம் நினைத்த உடன் வாங்கிச் செல்ல முடியும் என்று நினைக்காதீர்கள். ரொம்ப அபூர்வமான சங்கு.. ஏழு ஜென்மத்து பாவங்களைப் போக்கும் அதை வைத்திருப்பவர்கள் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆவார்கள் செல்வம் கொழிக்கும் குழந்தைச் செல்வமும் பெருகும். பெருமாள் கோயில் வாசல்ல இருக்கிற என்னைத் தேடி வந்துட்டீங்க எப்படியும் கிடைச்சிடும்.” வந்தவர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.

“கிராம் பத்தாயிரம் இருவதாயிரம் கூட போகும்.. எடையைப் பொறுத்து விலை மாறும்.. வீட்டில் அதை தரையில் வைக்கக் கூடாது.. முடிந்தால் தங்கத் தட்டிலோ வெள்ளித் தட்டிலோ வைக்கணும்.. பூஜை செய்வதற்கு முன் வாமவர்த்தி சங்கை எடுத்து ஊதணும் அப்புறமாத்தான் சலஞ்சலம் சங்குக்கு பூஜை பண்ணனும்.”

இருவரும் தலையாட்டினர்.

“இப்ப ஊருக்குப் போங்க.. கிடைச்சதும் தகவல் சொல்றேன் அப்ப கேஷா எடுத்துட்டு வந்து வாங்கிக்கங்க”

“இப்ப கிடைக்காதுங்களா?”

“சான்ஸே இல்லே.. கீழக்கரையிலே மரைக்காயர் ஒருத்தர்கிட்ட பேசினேன் அவரு கண்டிப்பா ஏற்பாடு பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கார்”

ஏமாற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்பொழுது வெளியே முகுந்தனின் பதட்டமான குரல் கேட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்தார் தாணுமலை..

“அண்ணே கடலுக்குள்ளே துரை தண்ணி குடிச்சிட்டான்,, மூச்சு விட முடியலை நம்ம இசக்கி சுப்பிணி எல்லாம் தூக்கிட்டு ஆசுவத்திரி போயிருக்காங்க..” தோளில் இருந்த கச்சாவை இறக்கினான்.. அதிலிருந்து ஒரு வலம்புரிச் சங்கை எடுத்தான்

“அண்ணே இந்த முறை நம்ம கையிலே ஒரு வலம்புரிச் சங்கு சிக்கிடுச்சு துரையோட கச்சாதான் இது மிச்ச சரக்கை அப்புறமா எடுத்துட்டு வந்து வெலை பேசிக்கறோம் இப்ப இது எவ்வளவு எடை இருக்குன்னு பாருங்க இப்போதைக்கு ஆசுவத்திரி செலவுக்கு பணம் குடுங்க பின்னாடி ரேட் பேசிக்கலாம்”

சங்கை  கையில் வாங்கும்போது தாணுவுக்கு உடல் சிலிர்த்தது.. அதை காதில் வைத்துப் பார்த்தான் கடல் அவனோடு பேசும் குரல் கேட்டது. உள்பக்க குழைவைப் பார்த்தான் இரண்டு சன்னமான கோடுகள் அழகாகத் தெரிந்தன. சலஞ்சலமேதான் சந்தேகமே இல்லை.. நடுக்கத்தைக் குறைக்க சங்கை இறுகப் பற்றினான் தாணுமலை.

சட்டென்று நிதானித்து “இதுல நாக தோஷம் இருக்கே வாங்க மாட்டானுகளே..”

“என்னண்ணே  சொல்றீங்க?”

“பாத்தியா நடுவுலே ரெண்டு கோடு படமெடுக்கற நாகத்தின் பின்னந்தலையில் இருக்கறது போல..”

“அண்ணே அவன் அங்க உசிருக்கு போராடிக்கிட்டு இருக்கான்ண்ணே”

உடனே தன் ஜிப்பாவில் கைவிட்டு பணத்தை கத்தையாக எடுத்து அவனிடம் கொடுத்த தாணுமலை “இந்தா இதை வச்சிக்க மொதல்ல அவனுக்கு வைத்தியத்தைப் பண்ணு.. எப்படியாச்சும் துரையைக் காப்பாத்தி கூட்டிட்டு வாங்க” முகுந்தன் கையில் தாணுமலை தந்தது எப்படியும் பத்து பனிரெண்டாயிரம் இருக்கும்

எடை மெஷினில் சங்கை எடுத்து வைத்தான் 388 கிராம் இருந்தது  

“கிராமுக்கு ஆயிரத்து இரநூறு தரலாம்.. இப்ப நான் கொடுத்த பணம் திருப்பித் தரவேணாம் அது துரைக்கு  நான் குடுத்ததா இருக்கட்டும். எத்தனை வருஷமா எனக்கு சங்கு கொண்டு வந்து தந்திருக்கான். மத்ததை அப்புறமா பேசிக்கலாம்  நீ போயி அவனைப் பாரு”

குரல் தழுதழுக்க “ரொம்ப நன்றிண்ணே” என்றபடி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான் முகுந்தன்.

உள்ளே வந்த தாணுமலை “ஏம்மா நீங்க மகம் நட்சத்திரமா சிம்ம ராசியா” என்று கேட்டான்

“அட ஆமாம்” என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

“நான் ஒண்ணும் மந்திரவாதி இல்லைம்மா வீட்டம்மா லட்சுமிகரமா கூட வந்து நினைச்ச காரியம் நினைச்சபடி நடந்தா சிம்மராசிக்குத்தான் அந்த பாக்கியம்னு எங்கம்மா சொல்லுவாங்க.. சலஞ்சலம் கிடைச்சிடுச்சும்மா”

இருவரும் சந்தோஷத்தின் எல்லைக்கே போனார்கள் வாலியா கண்களில் நீர் வழியே வானத்தைப் பார்த்து “ஹே பகவான்“ என்று வணங்கினார்..

“கோடியிலே ஒருத்தருக்குத்தான் இந்த கொடுப்பினை இருக்கும்.. வெலை கிராமுக்கு பன்னெண்டு ஆயிரம் சொல்றான் 388 கிராம் இருக்குது

சீனு “இன்னும் கொஞ்சம் கொறைச்சுக்க சொல்லுப்பா”

     “கிடைச்சதே பெரிய விஷயம் இதுலே பேரம் பேசுறே அதுலேயும் இது நடுவுலே நாமம் போட்டுருக்கு திருமாலின் அருள் பெற்றது அபூர்வத்திலேயும் அபூர்வம்” இதைப்பாருங்க சங்கை அவர்களிடம் காண்பித்தான் மெய்மறந்து போனார்கள்.

வாலியாவின் மனைவி அதெல்லாம் பேரம் பேச வேண்டாம் என சீனுவுக்கு சைகை செய்தாள்

“அப்படியே அட்வான்ஸ் கொடுத்து அமுக்கிட்டேன்” என்றான் தாணு பெருமிதமாக..

388 கிராம்னா  எவ்வளவு ஆகுது” சீனு கேட்டான்.

46 லட்சத்து 56 ஆயிரம் ஆகுது ஆறாயிரத்தை தள்ளுபடி பண்ணிக்கறேன்.. ஒரு வாமவர்த்தி சங்குக்கு நீங்க காசு தர வேணாம்.. அது ஃபிரி.. திருப்தியா?” என்று கேட்க..

இரண்டு பெரும் சந்தோஷமாகத் தலையாட்டினர்.

“இருங்க சங்கை பாலிஷ் போட்டு பூஜை பண்ணித் தரேன்,,” கொடவுனுக்குள் திரும்பி “டே,,, இங்க வாங்கடா இதை சுத்தம் பண்ணி பாலிஷ் போடுங்க.. அப்புறம் நாலு பூஸ்ட் பக்கத்துலே வாங்கிட்டு வாடா” சொல்லிவிட்டு இவர்கள் பக்கம் திரும்பி  “சர்க்கரை கம்மியா இருக்கலாமா?”

“அரைச் சர்க்கரை” என்று சொல்ல

“அப்படியே வாங்கிட்டு வா...” அவனை அனுப்பிவிட்டு இவர்கள் பக்கம் திரும்பி  “கேஷா இருக்குங்களா?”

அவர்கள் தலையாட்டினர்.. “காரிலே இருக்கு”

“கிருஷ்ணா கிருஷ்ணா. உங்களுக்கு நல்ல மனசு கடவுளின் பேரருள் பெற்றவர்கள் நீங்கள்... என் வாழ்க்கையிலேயே உங்களை மறக்க மாட்டேன்.. இத்தனை அதிர்ஷ்டசாலிகளை நான் பார்த்ததே இல்லை..’

‘பூம்’ என்று சங்கொலி தூரத்தில் கேட்டது.. அனேகமாக தெருமுனையாக இருக்கலாம். மீண்டும் ஒரு முறை ஒலித்த பொழுது தாணுமலை கூர்மையாக காதுகளை அந்தத் திசை பக்கம் திருப்பி வைத்துக் கேட்டான்.

சட்டென்று தாணு மலையின் உடலில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.. இந்த நேரத்துக்கு சங்கு சத்தம் கேட்கிறதென்றால் அது கரி மூஞ்சனாகத்தான் இருக்கும்.. வாலியா பக்கம் புன்னகையுடன் பார்த்தபடி “நீங்க சங்கு எப்படி பாலீஷ் போடுவாங்கன்னு பார்த்திருக்கீங்களா?”

இல்லை என்று அவர்கள் தலையாட்டினர்.

“கிருஷ்ணா  இவங்களை உள்ளே கூட்டிட்டு போயி பாலீஷ் பண்றதைக் காமிங்க..பாக்க ரொம்ப அழகா இருக்கும் பூஸ்ட் வந்ததும் உள்ளேயே அனுப்பறேன்” சீனுவுடன் அவர்கள் உள்ளே சென்றனர். தாணுமலை வெளியே செல்ல எழுந்த போது மிகச்சரியாக பூஸ்ட் கப்புகளுடன் வாசு வந்தான்.

“டேய் தெருமுனையிலே சங்கு ஊதிகிட்டு வர்றது யாரு பண்ணாடி நாகலிங்கமா?”

“ஆமாண்ணே... கரிமூஞ்சன்தான்”

“போயி .. அவனைத் தொரத்துடா,, பெருமாள் கோயிலுக்கு பிச்சை எடுக்கத்தான் வந்துகிட்டு இருப்பான்.. அவனை விடாதே.. சங்கு வாங்குறவங்க அவனைப் பாத்துட்டு கிளம்பினா அவ்வளவுதான் ஒண்ணு ஆக்சிடென்ட் ஆகுது இல்லை பணத்தை தொலைக்கிறாங்க.. இல்லை.. சங்கு சுத்தமில்லைன்னு இங்க வந்து யாராச்சும் பிரச்சினை  பண்றாங்க.. அவன் மூஞ்சிலே முழிச்சாலே வில்லங்கம்தான்.. இந்த ஐநூறை எடுத்துட்டுப் போயி அவன் மூஞ்சிலே விட்டு ஏறி.. நம்ம கொடவுனுக்கு நேராத்தான் எப்பவும் உக்காருறான் இம்சையா இருக்கு” பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிய வாசு நாகலிங்கத்தை வழிமறித்தான்.

ஊதுவதை நிறுத்திவிட்டு நாகலிங்கம் அவனைப் புரியாமல் பார்த்தார். தோளில் காவி வண்ண துணிப்பை தொங்கியது. இடது கையில் ஊது சங்கு வலது கையில் பிச்சைக் காசுகளை சேகரிக்க இன்னொரு சங்கு. அவற்றுக்கு காவியால் ஆன துணி உறை.. முகம் முழுக்க பரவிக்கிடந்த தாடியும் மீசையும் இடையில் தெரிந்த கொஞ்ச முகமும் கறுத்துச் சுருங்கி விகாரமாய் காட்சி அளித்தது.

“இன்னிக்கு இங்க கோயில் வாசல்ல பிச்சை எடுக்கக் கூடாது.. வேற இடம் பாரு எங்க வியாபாரம் கெடுது” வாசு மிரட்டும் தொனியில் உரக்கக் கூறினான்.

“இன்னிக்கு சனிக்கிழமை தம்பி பெருமாள் கோயிலுக்கு இன்னிக்கு ஒரு நாள்தான் கூடம் வரும் பொழப்பை கெடுக்காதே ராசா.. வழிவுடு”

“என்ன ஒரு நூறு ரூபா சம்பாதிப்பியா? இந்தா எரநூறு ரூபா வச்சிக்க.. அண்ணன் நூறு ரூவாதான் குடுக்கச் சொன்னாரு.. நான் பாவம் பாத்து எரநூறா தரேன்..” இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை அவனது சங்கில் போட்டான்.

“இன்னிக்கு இடத்தை விட்டா அப்புறம் நாளை பின்னே அங்க பிச்சை எடுக்க எங்க ஆளுங்க விட மாட்டாங்க தம்பி”

“அடிங்க.. சொல்லிகிட்டே இருக்கேன் திருப்பி திருப்பி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கே,, ஓடுடா..” அவன் முதுகில் கைவைத்துத் தள்ளினான். கையில் இருந்த சங்கு, துணிப்பை எல்லாம் தடுமாறி விழ அதிலிருந்த நோட்டுக்கள் சில்லறைகள் சிதறின.

அவசரமாக சங்குகளை எடுத்துக் கொண்ட நாகலிங்கம் எதையோ சொல்ல முனைந்த போது “வாயைத் தொறந்து ஏதாச்சும் சாபம் வுட்டே... அப்படியே  கொன்னுடுவேன் ஓடிப்போயிடு” என்று பக்கத்தில் இருந்த ஒரு நீண்ட கழியை எடுத்தான். மிரண்டு போன நாகலிங்கம் கையில் அகப்பட்ட சில்லறைகளை பொறுக்கிக் கொண்டு தலைத்தெறிக்க அடுத்த தெருவுக்கு ஓடினார். தெருமுனையில் இருந்து திரும்பிப் பார்த்தபொழுது வாசு நிற்பது புள்ளியாகத் தெரிந்தது நிச்சயம் காதில் விழாது என்று உறுதியாகத் தெரிந்தபின்

“தெருப் பொறுக்கி நாயே.. நீ நாசமாப் போயிடுவே .. மண்ணா போயிடுவே முப்பது வருஷமா அதே தெருவிலே.. அதே கோயில் வாசல்ல பிச்சை எடுத்துகிட்டு இருக்கேன்.. நேத்தி வந்த பயலுக என்னை வெரட்டுவீங்களா..” சங்குகளை எடுத்து உறையை கழட்டி சோதித்துப் பார்த்தார். சங்குகள் இரண்டுமே முப்பது வருடமாய் எந்தச் சேதாரமும் இல்லாமல் சிறு கீறல் கூட விழாமல் வழுவழுப்புக் குறையாமல் அவரோடு பயணித்துக் கொண்டே இருக்கின்றன. வலது கையில் இருந்த வலம்புரிச் சங்கின் உட்புறம் கிடந்த சில்லறைக் காசுகள் நாற்பது ஐம்பது ரூபாய்க்குத் தேறும். ராசியான சங்கு...

அனுதினமும் பூஜை செய்து ரொம்பக் கவனமாக வைத்திருக்கிறார். காசுகளை நீக்கி உள் ஓட்டில் பார்த்தபொழுது நாமம் போன்று இரண்டு  கோடுகள் நாகத்தின் பின்னந்தலையில் தெரிவது போலவே இருந்தன.. பெயரே தெரியாமல் இந்த ஊருக்கு வந்தபொழுது ஏதேச்சையாக மண்ணில் குழி தோண்டியபோது கிடைத்த சங்குகள் அவை,,, அதிலிருந்த நீண்ட புள்ளிகள் நாகத்தின் கோடுகள் போல தெரிந்ததால் நாகலிங்கம் என்று தன் பெயரை சொல்ல ஆரம்பித்து பிறகு அதுவே நிலைத்துவிட்டது இடது கையில் வைத்திருந்த வாமவர்த்தி சங்கை எடுத்து “பூம்’ என்று ஊதியபடியே, வீடுகள் நிரம்பிய அந்தத் தெருவில் கம்பீரமாக நடந்தார் பண்ணாடி நாகலிங்கம்...   


(கருமாண்டி ஜங்க்ஷன் நடத்திய எழுத்தாளர் இராம சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டச் சிறுகதை மொத்தம் தேர்வான 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்ட கருமாண்டி ஜங்க்ஷன் மற்றும் எழுத்தாளர் தேவ சுப்பையா அவர்கள் அந்த நூலுக்கு இந்தச் சிறுகதையின் தலைப்பான சலஞ்சலம் என்பதையே தேர்வு செய்தனர்)

 

     

         

 

     

 

 

 

.

 

 

.   

 

    

    

திங்கள், 21 நவம்பர், 2022

 

மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள்

நெய்வேலி பாரதிக்குமார்.




மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள்” என்று கணேசன் எட்டு மணிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியை பதினோரு மணிக்குத்தான் பார்த்தான் பார்த்திபன். பதறியபடியே கணேசனுக்கு போன் செய்தபோது அவனது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக குரல் சொல்லிக் கொண்டிருந்தது. கணேசனிடம் வேறு தொலைபேசி இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகப் படித்துப் பழகிய நட்பில் இன்று தொடர்பில் இருப்பது அவன் மட்டுமே. ஆகையினால் கணேசனைத் தெரிந்த மற்ற நண்பர்களின் எண்கள் எதுவும் கைவசம் இல்லை  

நேற்றைய இரவு கம்பெனி கெஸ்ட் ஹவுசில் நடந்த மதுவிருந்தின் மயக்கம் இன்னும் கலையாமல் இருந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை கம்பெனி நிர்வாகமே வைக்கும்.. பதவி உயர்வு,, பிறந்தநாள், திருமண நாள் என எல்லா கொண்டாட்டத்துக்கும் அங்கு நிர்வாகம் அனுமதித்து விட்டதால் யாரும் தப்பவே முடியாது. ஊழியர்கள் வெளியில் மது அருந்தி பிரச்சினைகளில் சிக்க வேண்டாம் என்கிற உயரிய எண்ணத்தில் அனுமதிப்பதாக ஹெச் ஆர் வெங்கட்ராமன் நிர்வாகத்தை மெச்சி அதன் ரகசியத்தை அவிழ்த்தார். அங்கேயே இரவுத் தூங்கி ஞாயிறு காலை விடியலை தரிசிக்கவும் சிறப்பு அனுமதியை வெங்கட்ராமன் பெற்றுத் தந்திருந்தார்.

கோயம்புத்தூருக்கு நேரடியாக கிளம்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. சென்னையில் இருந்து அத்தனை தூரம் பயணிப்பதை நினைத்துப் பார்த்தால் ஆயாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தச் செய்தி தந்த பதட்டம் அடங்குவதாக இல்லை.

கோயம்பேட்டில் பேருந்தைப் பிடித்து அமர்ந்த பொழுது ‘இதெல்லாம் தேவையா?’ என்று தோன்றியது. மறுபடி மொபைலை எடுத்து கணேசனுக்கு முயற்சித்தான். ம்ஹும்.. அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அதே குரல்.. அதே செய்தி.. தன்னிச்சையாக வாட்ஸப்பை திறந்துப் பார்த்தான். அரிக்காத மணிக்கட்டை அனிச்சையாக சொறிவது போல காரணமே இல்லாமல் வாட்ஸப்பை திறந்து திறந்து பார்ப்பது நோய் போல ஆகிவிட்டது. கணேசன் அனுப்பிய செய்தி அபத்தமாக இருந்தது. மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள் என்பது என்ன ஒரு பிழையான வாக்கியம். எதிரே ஒரு உயிர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது எப்படி ஒருவனால் மெசேஜ் டைப் செய்து கொண்டிருக்க முடியும்? தற்கொலைக்கு முயற்சி என்றால் கூட ஒரு அர்த்தமிருக்கிறது

மாதவி கல்லூரிக் காலத்தில் அவர்களது கல்லூரியின் இணயற்ற பேரழகி.  அதைவிட அவளது விஞ்ஞான அறிவு அசாத்தியமானது.  வகுப்பிலும் லேப்-லும் அவளது பரபரப்பான அதிதீவிரமான  ஈடுபாடு அவளுக்கு மேரி க்யூரி என்கிற ரகசிய பட்டப்பெயரை தந்திருந்தது. ஒவ்வொரு அறிவியல் வகுப்பிலும் தர்க்க ரீதியாக எல்லா பேராசியர்களுடன் விவாதித்துதான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வாள். அவளை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பலரும் காதலித்துக் கொண்டிருந்தனர். பண பலத்தில் மிதக்கும் செல்வா அவளது கடைக்கண் பார்வைக்காக கல்லூரியில் எவருமே வைத்திராத கவர்ச்சியான மோட்டார் பைக்கில் அவளின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தது பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.. படிப்பைத் தவிர ஸ்போர்ட்ஸ், டான்ஸ், கராத்தே என உடல் சார்ந்த அனைத்துக் கலைகளிலும் வித்தகன்..

போதாதற்கு கல்லூரியின் முதல் மாணவன் புள்ளைபூச்சி என்று பட்டப்பெயர் தாங்கிய சந்துருவும் அவளைத் தன் பக்கம் கவர படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான். கல்லூரியே அவள் யார் பக்கம் திரும்புவாள்? என்று அறிவிக்கப்படாத போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது.

பார்த்திபன் அவளோடு சகஜமாக பேசுவதுண்டு. ஆபத்தில்லாத பிராணிகள் பட்டியலில் சர்வ நிச்சயமாக தன் பெயர் உண்டு என்பது பார்த்திபனுக்குத் தெரியும். ஆதலால் கல்லூரியின் சகல ஜீவ ராசிகளும் அவ்வப்பொழுது கள நிலவரத்தை அவன் மூலம் அறிய முற்படும். அதில் கொஞ்சம் கெத்தாகவும் இருந்தான் பார்த்திபன். ஆனால் யாருமே எதிர்பாராதபடி அவள் நரேனை காதலிப்பதாக அறிந்தபோது கல்லூரியே அதிர்ச்சியில் உறைந்து போனது.

.நரேன் எப்பொழுதும் வானத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பான் உடன் படித்த மாணவர்களின் பெயர்களை  விட அதிகமாக நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். சொல்லப்போனால் அவன் மாதவியின் பக்கம் அதிகம் நாட்டம் கொண்டவனாக யாராலும் யூகிக்கக் கூட முடியவில்லை. எப்படி அவன் தன்னை காதலிப்பதாக மாதவி தெரிந்து கொண்டாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

மிகச்சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவன் நரேன். அவ்வப்பொழுது குடிப்பவன் என்பதால் அவன் மீது ஒரு ஒவ்வாமை எல்லோருக்கும் இருந்தது. மதிப்பெண்கள் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவனில்லை. அவனது மூளை எப்பொழுதும் பாடத்திட்டத்துக்கு வெளியே யோசித்துக் கொண்டிருந்தது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக அழைப்பிதழை ப்ரூஃப் பார்க்கப்போன சந்துரு அதன் காப்பியை எடுத்து வந்த போது எதேச்சையாக அதனை வாங்கிப் பார்த்த நரேன்,

August presence இல் ஆகஸ்ட்ல உள்ள A வுக்கு ஏண்டா கேபிட்டல்? அப்படி போட்டா..ஆகஸ்ட் மாசம்னு அர்த்தம் மாறிடும். ஸ்மால் லெட்டர் ஏ போட்டாத்தான் மதிப்பு மிக்க வருகைன்னு அர்த்தம் வரும். Capitonyms னு அதுக்கு பேரு”என்ற போதுதான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே எங்களுக்குத் தெரிந்தது.

 ஜோனஸ் சால்க் பிறந்தநாள் என்று அக்டோபர் 28 ஆம் தேதி எல்லோருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடினான். போலியோவுக்கு சொட்டு மருந்து கண்டுபிடித்து இது மக்களுக்கானது என்று கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை இழந்து அதற்கான பேடண்ட் ரைட் வாங்க மறுத்ததால்தான் இன்றைக்கு இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கிறது என்று விளக்கம் சொன்னான்.

முதலாம் ஆண்டு துவங்கி வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்று ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு பயனற்ற பொருட்களைக் கொண்டு பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வண்டியை கல்லூரி உபயோகத்துக்காக உருவாக்கியது அவனது பெயரை நீண்ட நாளுக்கு சொல்லிக்கொண்டிருந்தது. என்றைக்காவது ஒரு நாள் ஸ்டீபன் ஹாக்கிங் போல ஒரு சயிண்டிஸ்டாக வருவேன் என்று அவன் கூறிக்கொண்டிருந்ததை கேலி செய்து கொண்டிருந்தது ஒரு கூட்டம்.   

மாதவி அந்த அதீதத்தின் மீதுதான் கவரப்பட்டாள் என்பது அவளோடு பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நரேனும் அவளும் ஒரு முறை சுவாரசியமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக பார்த்திபன் அதில் ஒரு பார்வையாளனக மட்டுமே இருக்க முடிந்தது. ஏனெனினில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது பிக்பேங்க் தியரியைப் பற்றி... நரேன் அப்பொழுது ஜெயெந்த் விஷ்ணு நர்லிகர் என்பவரின் சூர்ய குடும்ப கொள்கை பற்றி  காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.

இடையில் புகுந்து பார்த்திபன் அசட்டுத்தனமாக....

“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிகிட்டு இருக்கீங்களாமே?”

“ஆமா அதுக்கென்ன இப்போ?”

“இல்லை.. உங்க குடும்பத்தைப் பத்தி பேசிகிட்டு இருக்காம சூரிய குடும்பத்தை பத்தி பேசிகிட்டு இருக்கீங்களே?”

“ஸ்டுப்பிட்.. நாம எல்லோருமே சூரிய குடும்பம்தான்..”என்று எரிச்சலாக சொல்லிவிட்டு அவளிடம் பேச்சைத் தொடர்ந்தான் நரேன்.

மாதவியே அவனது எல்லா செலவுகளையும் பார்த்துக் கொண்டாள். அட்டெண்டன்ஸ் குறைந்து அவன் எக்ஸாம் எழுத முடியாது என்ற நிலை வந்தபோது பிரின்சிபல் மற்றும் நிர்வாகத்திடம் கெஞ்சிக் கூத்தாடி அவனை எழுத வைத்தாள்.

பார்த்திபன் அதற்காக மாதவியிடம் சற்று கோபமாகவே

“ஏன் இந்த நொண்டிக்குதிரையை பிடிவாதமாக தலையில் சுமந்து கொண்டு ஓடிக்கிட்டு இருக்கறே?” என்று கேட்டான்.

“ஏன்னா அது மூளையுள்ள குதிரை..” என்று புன்னகையோடு பதில் சொன்னாள்.

கல்லூரியை விட்டு வெளியே வந்து பல வருடங்களுக்குப் பிறகு மாதவி தன் வீட்டில் உள்ளவர்களை எதிர்த்துக்கொண்டு அவனையே திருமணம் செய்து கொண்டதாகவும், நரேன் ஒரு கம்பெனியில் நிலைத்திருக்காமல் குரங்கு போல தாவிக்கொண்டிருப்பதாகவும் செவி வழிச்செய்திகள் பார்த்திபனை வந்தடைந்தன. மிகச் சமீபமாக கணேசன் அவளை கோவையில் சந்தித்ததாக இதே போல் ஒரு வாட்ஸப் செய்தியை அனுப்பினான். ஆர்வத்தோடு அவனைத் தொடர்பு கொண்டு பேசிய போது நரேன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும், கல்லூரிக்குச் செல்லாமல் எப்படி மட்டம் போட்டானோ அதே போல வேலைக்கும் செல்வதில்லை என்றும் மாதவிதான் மறுபடி மறுபடி வேதாளத்தைச் சுமக்கும் விக்கிரமாதித்தன் போல அவனைச் சுமந்து கொண்டு கஷ்டப்படுகிறாள் என்றும் சொன்னான்.

ண்டி கோவையை அடைந்த போது விடிந்திருந்தது. கணேசனின் வீட்டு கதவைத் தட்டி அவன் வெளியே வந்து இவனை விட அதிகமாக திகைத்தான்.

”என்னடா இப்படி திடுக்குன்னு வந்து நிக்கிறே?”

“போடா.. இவனே.. நீ பாட்டுக்கு மாதவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்னு மெசேஜ் அனுப்பிட்டு செல்லை ஆஃப் பண்ணிட்டு எனக்கென்னான்னு தூங்கிட்டு இருக்கே?”

“அட்டா.. மெசேஜ் டைப் பண்ணிகிட்டு இருக்கும்போதே பேட்டரி ட்ரெயின் ஆகி சுவிட்ச் ஆஃப் ஆயிட்டுதுடா.. அதை சார்ஜ் போட்டுட்டு வேற ஃபோன் யூஸ் பண்ணிகிட்டு இருந்தேன். இதுல உன் நம்பர் இல்லை. அந்த மெசேஜ் உனக்கு வந்துடுச்சு போல சாரிடா. இன்னும் அந்த ஃபோனை ஆன் பண்ணலை.”

“மாதவிக்கு என்னடா ஆச்சு?”

“அவளுக்கு ஒண்ணும் ஆகலை ஆனா நரேன் ஒரு மாதிரி சித்த பிரம்மை பிடிச்சா மாதிரி ஆயிட்டான்..”

“இதுக்காடா அப்படி ஒரு மெசேஜ் அனுப்புவே.. நான் பதறி சிதறி ஓடி வர்றேன்” அப்படியே தலையில் கை வைத்து கீழே அமர்ந்தான்.

”இல்லடா... மாதவி வேலையை விட்டுட்டா....நரேனை பார்த்துக்க ஒரு ஆள் வேணுமாம்”

“என்னது வேலையை விட்டுட்டாளா? லூசாடா அவ..”

“யார் சொல்லியும் கேக்க மாட்டேங்குறா. தன்னை நம்பி வீட்டை எதிர்த்துகிட்டு உறவை எல்லாம் விட்டுட்டு வந்துட்டானாம்.. அவனைக் காப்பாத்த வேண்டியது அவ பொறுப்பாம்”

“சரி கிளம்பு அவளைப் பார்ப்போம்” நரேன் மருத்துவமனையில் இருந்ததால் அங்கேயே சென்றார்கள்.

.     கோர்ஸா காஃப் சிண்ட்ரோம்” என்றாள் மாதவி.  

     ”அப்படின்னா?”

     ”குடியால அவரோட மூளை பாதிக்கப்பட்டிருக்கு நினைவுகள் அழிஞ்சிகிட்டே வருது.”

     ”ஏன் அப்படி அவனை குடிக்க விட்டே.?”

     ”நான் குடிக்க விட்டேனா?.. காதலி சம்மதம் சொன்னா குடிப்பீங்க.. ஒத்துக்கலைன்னா குடிப்பீங்க.. பாஸ் பண்ணிட்டா குடிப்பீங்க.. வேலை கிடைச்சா குடிப்பீங்க.. கிடைக்கலைன்னாலும் குடிப்பீங்க.. அக்ரிமெண்ட் சைன் ஆயிடுச்சின்னா கம்பெனியே குடிக்க வைக்கும்.. அஞ்சு நாள் வேலை செஞ்சுட்டா சாட்டர்டே ஃபீவர்னு சனிக்கிழமை சாயங்காலம் குடிக்க கிளம்பிடுவீங்க.. ஒரு சயிண்டிஸ்ட்டா வர வேண்டியவனை இந்த சனிக்கிழமை பார்ட்டிகள்தான் குடிக்க வச்சி மொடாக்குடியன் ஆக்கிடுச்சு..” ஒரு தம்ளர் தண்ணியை குடித்து சிறிது ஆசுவாசமானாள்.

“சாட்டர்டே ஃபீவர் இவரை நிரந்தர நோயாளி ஆக்கிடுச்சு. கேட்டா சோஷியல் டிரிங்கர்.. இன்னிக்கு பிரைவேட் கம்பெனி சனிக்கிழமை பார்ட்டி வைக்க காரணமே சம்மந்தப்பட்டவர்களை நோயாளியாக்கி அவனை வெளியேற்ற ஒரு காரணத்தை செயற்கையாக உருவாக்கத்தான்.. மூளையை கசக்கிக்கிட்டு ஆயிரம் ப்ரோக்ராம் பண்றீங்க உங்களை எவாக்குவேட் பண்ண கம்பெனி ப்ரோக்ராம் பண்றதை கண்டுபிடிக்க முடியலன்னா உங்களுக்கு மூளை இருந்து என்ன பிரயோஜனம். .

இப்ப அவர் மூளை இருந்தும் முழு முட்டாள்.. ஒரு மனநோயாளியைக் கூட ட்ரீட்மெண்ட்ல ஒரு நாள் சரி பண்ணிடலாம்.. மூளைப்பிசகிய குடி நோயாளியை எப்படி சரி பண்றது? இனிமே அவர் நடைப்பிணம்.. குடிக்கலைன்னா அவருக்கு கை கால் நடுங்க ஆரம்பிச்சிடும் குடிச்சா மூளை இன்னும் மோசமாகிடும்“குமுறி அழுதாள்.

     ”எல்லாம் தெரிஞ்சும் உன் வாழ்க்கையை ஏன் நாசமாக்கிக்கிட்டு இருக்கே?”

     ”நான் ஒண்ணும் நளாயினி தமயந்தி இல்லே அவரோட குடும்பத்துக்கு தகவல் சொல்லி அனுப்பினேன் செத்தாக் கூட தகவல் சொல்லாதேன்னு இரக்கமில்லாம விட்டுட்டு எட்ட போயிட்டாங்க. இப்ப அவருக்குத் தேவை ஒரு கருணையுள்ள துணை. எல்லா பொம்பளைங்களும் காவியத்துல வர்றதுக்கோ, கட்டுன பாவத்துக்கோ, ஊர் உலகத்துக்கு பயந்துகிட்டோ குடிகாரனை காப்பாத்தறதில்லே..கருணை..இரக்கம்.. விட்டுட்டுப் போக முடியாம தடுக்குற தாய்மை. இப்ப அவர் புருஷனில்லை எனக்கு பிள்ளை

     “வேலையை விட்டுட்டு செலவுக்கு என்ன பண்ணுவே?”

     “மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் .. வீட்டுலேர்ந்தே செய்து  தர ஆர்டர் கிடைச்சிருக்கு எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவு பணம் இப்போதைக்கு நரேனையும் பார்த்துகிட்டு செலவையும் சமாளிக்க இதுதான் ஒரே வழி”

ஸ்டீபன் ஹாக்கிங் போலவே நரேனும் சக்கர நாற்காலியில் ஒரு பொட்டலம் மாதிரி மடங்கிக் கிடந்தான் .ஆனால் மூளை முற்றிலும் சிதைந்து......சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தவர்களிடமிருந்து மேரி க்யூரி கைமாற்றி ஸ்டீபன் ஹாக்கிங்கை சரிந்துவிடாமல் கைகளால் தாங்கியபடி தள்ளிக் கொண்டு வந்தாள். நரேனின் கைகால்கள் வெலவெலத்து நடுங்கிக் கொண்டிருந்தன. இப்பவும் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் சிந்தனைகளற்று ஒரு ஜடம் மாதிரி.. கைகளில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்தனர்..

ருவரும் வெளியே வந்து காரில் ஏறியபொழுது இருவருக்கும் இடையில் பேச ஒன்றுமில்லை. இன்னோவா காரின் கேப்டன் சீட் தனித்தனியாக கைப்பிடி வைத்து வசதியாகத்தான் இருந்தது ஆனால் அமரும் போது சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு பிடிமானத்துக்கு இறுகப்பிடித்திருப்பது போலவே தோன்றியது பார்த்திபனுக்கு. .....    

                     - கொலுசு இலக்கிய திங்கள் இதழ் , அக்டோபர் 2022

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...