வியாழன், 28 மார்ச், 2013

ஒரு சொட்டு தண்ணீர்...

ஒரு சொட்டு தண்ணீர் 


                                                                    



நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வெளியிட்ட தொகுப்பில் பிரசுரமான சிறுகதை  

மார்ச் 22, 2113

            திடீரென்று தூக்கி வீசியெறியப்பட்டவன் போல் பூபேஷ் எகிறி விழுந்தான். எந்த ஒரு அதிர்ச்சியின் காரணமாகவும் திடுக்கிட்டு விழிக்கும் போதெல்லாம் வியர்த்தொழுகி விதிர்த்து மிரளும் பூபேஷுக்கு ஆச்சர்யகரமாக வியர்க்கவே இல்லை.

            கண் விழித்தபோது வினோத உடைகள் அணிந்து மழிக்கப்பட்ட தலையுடன் நின்றிருந்த இருவர் எதிரே தென்பட்டனர்.

          சிரமப்பட்டு எழுந்துஎன்ன நடந்ததுஎன்றான் முனங்கலாக. பெயர் தெரியாத இருவரும் தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினர்.

           “ஐயாம்... பூபேஷ்என்று சினேகமாகக் கைநீட்டினான்.

           “நான்  IM 964327922, இவர் IM 801674430. உங்கள் எண் எது?”

         “எண்ணா? நம்பர் போடறதுக்கு நாம காரா இல்லை பைக்கா?.ஆமா மனுஷனுக்கு அடையாளமா நம்பரை வச்சிட்டா நான் எப்படி நம்ம ஜாதிக்காரனா இல்லையான்னு உங்களை தெரிஞ்சுக்கறது. ”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

          “பெயர்களைச் சுமந்தவர்கள் இன்னுமிருக்கிறார்களா IM 9 ?

           “குழப்பமாக இருக்கிறது IM 8.”

           “பேர் கெடக்கட்டும்இங்க அடிக்கிற புழுதியும், தூசும் தாங்க முடியாததா இருக்கே. உடம்பு கபகபன்னு எரியுது. ரெண்டு பக்கெட் தண்ணி கெடைக்குமா? பசி வேற வயித்த தொளைக்குது.”

IM 9-ன் பாக்கெட்டிலிருந்து இனிமையான இசை வெளிப்படுகிறது. சட்டையின் பல அறைகளில் ஒன்றிலிருந்து திரையுடன் கூடிய டிஜிட்டல் போனை எடுத்தான். திரைக்கு முன் விரலை நீட்ட, சென்ஸ் செய்த பின் குரல் ஒலித்தது.

            “எண்களால் அடையாளப்படுத்தப்படாத மனிதனொருவன் உங்களருகில் கால யந்திரத்தினால் தள்ளப்பட்டு விழுந்துள்ளதாக எங்கள் சென்சிங் டிவைஸ்கள்
தெரிவிக்கின்றன. அவனை உடனடியாக விசாரணை மன்றத்துக்கு அழைத்து வரக் கோரப் படுகிறீர்கள், IP 1-ன் உத்தரவு.”

            “உத்தரவு பணிவுடன் ஏற்கப்படுகிறது. ஆனால் இங்கு இயந்திரம் ஏதும் காணப்படவில்லையே...”

          “அது இறக்கி விட்டபின் மறைந்து விட்டது.”
               
           “ நன்றி. நாங்கள் உடன் அழைத்து வருகிறோம்.”
தொடர்பு துண்டிக்கப்பட்ட பின் பாக்கெட்டில் வைத்தான்.
நீங்கள் எங்களுடன் வரும்படி பணிக்கப்படுகிறீர்கள்.”
என்னய்யா ஒரே கூத்தா இருக்கு? என்ன தப்பு எம்மேல. ரெண்டு பக்கெட் தண்ணி கேட்டேனே என்னாச்சு?”
              
          “நீங்கள் கேட்கும் எதையும் தர இயலாத நிலையில் இருக்கிறோம். நீங்கள் ஒரு விசாரணைக் கைதி.”

          “எதாச்சும் கேட்கலாம்னா கொடுந்தமிழ்ல சொல்றீங்க. அதுசரி, நீங்க பேசறப்போ ரெட்டை குரலாட்டம் கீச் கீச்சுங்குதே. நீங்கள்லாம் மனுஷங்கதானே, ரோபோ இல்லையே?”
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.

          “நாங்கள் மனிதர்கள் தான். ஆனால், நீங்க கேட்பது எங்கள் உண்மையான குரல் இல்லை. வாய்ஸ் சிந்தஸைசர். உங்க பாஷை எதுவா இருந்தாலும் அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு எங்களுக்குப் புரியும்படி பதியப் படுகிறது. எங்களின் பதில் நீங்கள் புரிந்து கொள்ளும் பாஷையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிந்தசைசர் மூலம் தெரியப்படுத்தப் படுகிறது. பல சமயம் எங்கள் குரல் என்ன பாஷை பேசுகிறதென்று எங்களுக்கே தெரியாது.”

           “அப்ப இந்த பாஷை தெரிஞ்சாதான் பப்பு வேகும்னுல்லாம் சொல்ல முடியாது! எங்கயோ போயிட்டிங்கப்பா. மூச்சு முட்டுதே உங்களுக்கு ஒண்ணும் ஆகலையா. இந்த தூசும் தும்பட்டையும் எனக்கு தாங்க முடியலைப்பா.”

          “ஆக்ஸிஜன் மட்டும் சுவாசிக்கத் தான் இந்த ட்யூப். நீங்களும் பிரத்யேகமாகப் பெற உங்கள் வங்கி அட்டை மூலம் ஆக்ஸிஜன் வழங்கும் பிரிவில் பெறலாம்.”

         “தண்ணி கேட்டேனே என்னாச்சு?”

         “உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்.”

          “சுத்தம்! எல்லாம் மெஷின் கணக்கா இருக்கீங்க. என்னய்யா வாழ்க்கை இது?”

          “நன்றி நண்பரே! விசாரணை மண்டபம் வந்து விட்டது.”
               
           எல்லாம் தானாகத் திறக்கும் வசதியுடன் அனிச்சையாகத் திறந்து அதேபோல் மூடியது. எதிரே தென்பட்ட அகன்ற திரை திடீரென ஒளியூட்டப்பெற்று அதில் மிகப்பெரும் உருவம் சிரித்தபடி பூபேஷையே கூர்ந்து பார்க்கிறது.

            “உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. வேற்று மனிதன் யாராகிலும் வரவேற்பது எங்கள் பண்பு.”

           “உங்க பண்புல போட்டு அடிச்சான். ரெண்டு பக்கெட் தண்ணி கேட்டா தரமாட்டேங்கறானுங்க உன் கைத்தடிங்க.”

திரை உருவம் சிரித்தபடி அவர்களைப் பார்க்கிறது.

          “விளக்கம் எதுவும் சொல்ல எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.”

          “நல்லது நண்பரே! உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றமே உங்களுக்கான பதிலாக இருக்கும். நீங்கள் நிலைமையின் யதார்த்தம் அறியாது, உங்கள் குற்றம் அறியாது, உங்கள் தரப்பில் நியாயம் இல்லாமலும் இருக்கிறீர்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.”
அட்லீஸ்ட், ஒரு பக்கெட் தண்ணி குடுப்பா. குளிக்கத் தான் முடியல. முகத்தையாவது அலம்பிக்கிறேன்.”

          “அலம்புதல், குளித்தல், கழுவுதல் எல்லாம் எங்கள் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. ட்ரையர்கள் மூலம் மட்டுமே சுத்தப்படுத்திக் கொள்கிறோம். உங்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தரும் முன் உங்களிடம் சில கேள்விகள்...”

          “என்னது... குளிக்கறதே இல்லையா! நீங்க பண்பைப் பத்திப் பேசறீங்க! அட பாண்டைங்களா ...அவ்வளவு தண்ணிப் பஞ்சமா இங்க?”
தண்ணீர் என்கிற வஸ்துவையே எங்கள் தலைமுறையில் பார்த்ததே இல்லை. அந்த மாபாதகம் உங்களையே சேரும். அதற்கான கடுமையான தண்டனை உங்களுக்கு உண்டு.”

            “தண்டனையா...? என்ன விளையாடறீயா நீ? தேமேன்னு விழுந்து கிடந்தவனை புடிச்சு இழுத்துகிட்டு வந்து உன்னிஷ்டத்துக்கு தீர்ப்பு சொல்றேன் அது இதுன்னு கலாட்டா பண்றே... என்னோட ஃபெமிலி லாயரைக் கூப்பிடறேன். எதுவானாலும் அவர்கிட்ட பேசிக்க. சட்டத்துல இருக்கற ஆயிரம் ஓட்டையில் எதிலயாச்சும் ஒண்ணுல என்னை புடிச்சு வெளியே இழுத்துடுவாரு. அவரோட விசிட்டிங் கார்டு கூட...” பூபேஷ் பாக்கெட்டில் தேடினான்.

            “உங்க சட்டமெல்லாம் காலாவதியாகிவிட்டது. நீங்கள் எங்கள் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதுமானது. உங்கள் தில்லுமுல்லுகளுக்கு இங்கு இடமில்லை. மரங்கள் அனைத்தையும் அசுரப்பசியில் வெட்டித் தீர்த்தீர்கள். நீங்கள் வெட்டியது வெறும் மரங்களையல்ல. தண்ணீர் தரும் கற்பக விருட்சங்களை.”

           “என்னமோ நான் மட்டும் தான் வெட்டின மாதிரி கேக்கிறியே.. அவனவன் தேவைக்கு அவனவன் வெட்டினான். நானும் என் பங்குக்கு வெட்டினேன். நான் வுட்டு வைச்சா வேற ஒருத்தன் வெட்டத் தானே போறான்..”

           “ஆக, உங்கள் ஒருவருக்கும் பொறுப்பில்லை. ஒட்டுமொத்தமாய் நீங்கள் அத்தனை பேரும் சுயநலவாதிகள். ஆனால் உங்களைப் போல் அல்லாமல் தன் நலமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த நதிகளைப் பாழ்படுத்தி, வீணடித்து கடலுக்குள் கரையேற்றி விட்டீர்கள். தண்ணீரின் அருமை பெருமை அறியாது அடுத்த தலைமுறைக்கு துரோகம் செய்து விட்டீர்கள்.

            “பூமியில் முக்கால் பாகம் தண்ணீர். கால் பங்குதான் நெலம். மிதமிஞ்சிக் கிடக்குற தண்ணியப் பத்தி எதுக்குய்யா கவலைப்படணும்?”

            “அந்த முக்கால் பாகத்துல உபயோகப்படுத்த முடியாத கடல் தண்ணியும், பனி உறைஞ்சு கிடக்கிற வட துருவத்தையும் கழிச்சுப் பார்த்தா நல்ல தண்ணீர் ஐந்து சதவீதம் தான் தெரியுமா?”

          “அதுக்குத்தான் கடல் தண்ணிய குடிதண்ணியா மாத்தற திட்டமெல்லாம் கைவசமிருந்துச்சே. செலவு பிடிச்சாலும் வழி இருக்கில்லே...”

           “கடல்தண்ணி முழுக்க அணு உலைக் கழிவுகளையும், யுத்தத்தின் போது செயலிழக்கப்பட்ட அணுகுண்டுகளையும் வீசி பயன்படுத்த முடியாதபடிக்கு ஆக்கிவிட்டீர்களே... போகட்டும்! இங்கிருக்கிற ஏரி, குளங்களை பராமரித்து ஒழுங்காக இணைத்து வைத்திருந்தீர்கள் என்றால் கூடப் போதுமே இத்தனை துயரமில்லையே...”

          “எல்லாம் எங்க தலைவனுங்க பண்ணுன தப்பு. அதெல்லாம் கிடக்கட்டும். ஒரு சொம்பு தண்ணி கொடப்பா... பேசிப் பேசி தொண்டை வறண்டு போச்சு. அட்லீஸ்ட் ஒரு சோடா...?”

          “உங்களைப் போலத் தானே உங்க தலைவர்களும்...?! உங்களின் பிரதிநிதிகள் வேறு எப்படி இருப்பார்கள்? தண்ணீர் பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட உங்களுக்கு இல்லையா?”

            “எவன் சொன்னான்? 1993-ம் வருஷத்திலிருந்து கொண்டாடிகிட்டு தானே இருக்கோம். தண்ணீரும் ஆரோக்கியமும்; தண்ணீரும், எதிர்காலமும்; 21-ம் நூற்றாண்டும் தண்ணீரும்; தண்ணீரும் பொம்பளைங்களும்... அப்படீன்னு வருஷத்துக்கு ஒரு கான்செப்ட்ல பண்ணிகிட்டு தானே இருந்தோம். ஆமா... இன்னிக்கு என்ன தேதி நண்பரே... சாரி... நம்பரே...?” அழைத்து வந்த இருவரையும் பார்த்துக் கேட்டான்.

           “மார்ச் 22, 2113

         “அட்ரா சக்கை! யோவ், இன்னிக்கு வோர்ல்ட் வாட்டர் டே... கையைக் குடுய்யா. கரெக்டா நாளு பார்த்து தான் கூட்டிட்டு வந்துருக்கே. ஜமாய்ச்சுபுடலாம்.. அதான் நம்மளைக் கூப்பிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கியா நீ? ஏதாச்சும் க்விஸ் ப்ரோக்ராமா? டி.வி யில ஏதாச்சும் ஸ்பெஷல் ஃபிலிம் இருக்கா? தண்ணி பார்ட்டி உண்டா?” கண்ணடித்துக் கேட்டான்.
                “தண்ணீருக்கு என்றிருக்கும் புனிதமான பெயருக்கு கொஞ்சமும் மரியாதை தராமல், கண்டதுக்கும் தண்ணீரென்று பேர் வைச்சிருக்கீங்களே... தாயைப் பழிச்சாலும் தண்ணியைப் பழிக்கக் கூடாதுண்ணு தெரியாதா உங்களுக்கு?”

          “ அய்யய்ய.. யோவ், அதெல்லாம் ட்ரவுசர் பசங்க வயசுல பேசிக்கிறது... இதையெல்லாம் போய் சீரியஸா எடுத்துகிட்டு... சரியான லூசுங்கப்பா...”

          “சிரிக்காதீர்கள். உங்களுக்கு எல்லாமே கேலிப்பொருள்தான்... கேளிக்கைகள் தான். கழிவு நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் குறைந்த பட்ச முயற்சியை நீங்கள் செய்திருந்தால் கூட போதும். தண்ணீர் பிரச்சினையை ஒரு ஐம்பது வருஷம் தள்ளிப் போட்டிருக்கலாம்.”

           “நாத்தம் புடிச்ச தண்ணியையா? உவ்வே... சொல்லும்போதே கொமட்டுதைய்யா. நீங்க எதுவும் செய்வீங்க.. குளிக்காத பாண்டைங்க.”

           “மழைநீர் சேகரிப்புக் கூட உங்கள் வாழ்க்கையில் சம்பிரதாய ஏமாற்று வேலையாக இருந்திருக்கிறது.”

         “கட்டாய சட்டமாக்கினா அப்படித்தான் பண்ணுவோம். சட்டமெல்லாம் காலாவதியாயிடுச்சுன்னு சொன்னியே... எப்படிய்யா ஓடுது உங்க வாழ்க்கை சுவாரஸ்யமே இல்லாம... சட்டம் ஒண்ணு இருந்தாத்தானே அதை பைபாஸ் பண்ண முடியும்...?! அதெல்லாம் சரிதான்... ஒரு டம்ளர் தண்ணீ குடேன்... நா வறளுது.”

          “தொழிலக கழிவுகளைக் கொட்டிக் கொட்டியே நீங்கள் வீணடித்த தண்ணீர் எத்துனை உயிர்களை பலி வாங்கியிருக்குத் தெரியுமா? டயரியாவில் பல்லாயிரக் கணக்கில் பலியாகிப் போன துயரம் 2030 ல் நடந்தது.”

          “நாந்தான் நேரடியா 2013-லிருந்து வர்றேனே... நம்ம வண்டி பைபாஸ் ரைடர் மாதிரி நேரா இங்க தான் வந்திட்டு... பேசினது போதும் ஒரு வாய் தண்ணி கொடப்பா.”

          “திறந்து வைத்த பைப்பில் வீணடித்த சொட்டுக்கள்... எந்த நோக்கமும் இல்லாமல் தரையோடு திறந்து விடப்பட்ட தண்ணீர், கேளிக்கைகளுக்காக விசிறப்பட்ட தண்ணீர், பிணங்களையும் குப்பைகளையும் வீசி சீரழித்த தண்ணீர், கடலுக்குள் அலட்சியமாக திருப்பப் பட்ட தண்ணீர்... இப்படி எதுவுமே இந்த சந்தர்ப்பத்தில் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா?”

            “இப்ப இருக்கிற தாகத்துக்கு நீ சொன்ன ஒரு சொட்டு தண்ணிதான் ஞாபகத்துக்கு வருது... லேசா ஒரு சொட்டு தண்ணிய நாக்கில விடப்பா... உயிரே போயிடும் போலிருக்கு. காசு பணம் வேணும்னா சொல்லு தள்றேன். நான் எங்க கட்சி மாவட்டப் பொறுப்புல இருக்கேன். உனக்கு ஒரு எம்.எல். சீட் வாங்கி கொடுத்துடறேன். இன்னிக்கு தேதிக்கு வெலை ஜாஸ்தியான போஸ்டிங்யா ஏகப்பட்ட பொலிட்டிக்கல் பிரெய்ன் எனக்கு. பின்னாடி உபயோகப் படுவேன். ஒரு சொட்டு தண்ணியாவது கொடுப்பா...”

         “அட, திருந்தாத ஜென்மமே, இன்னமும் உன் தகிடுதத்தமும், தான்தோன்றித் தனமும் போகலையே. கொஞ்சமாவது உறைக்கும்னுதான் உன்னை இவ்வளவு நேரம் விட்டு வைச்சோம். விசாரணை முடிந்தது. நீ இப்படியே தவிச்சு செத்துப்போ.”
              
             “அப்படிச் சொல்லாதீங்க கனவான்களே... வருங்காலத் தமிழகமே... எங்கள் வாழ்வின் விளக்கே... ஒளியின் ஒளியே... உயிரின் உயிரே... தன்னிகரில்லா தானைத் தலைவனே... சொட்டுத் தண்ணீரைத் தரப்போகும் சொக்கத் தங்கமே...”
                “ஐயோ தாங்க முடியலை IP 1 ... இவனுக்கு தாகமே மரத்துப் போகும் ஊசியைப் போட்டு விடவா?”

          “வேண்டாம்... போட்டுவிடாதே .தாகத்தை அதிகப்படுத்தும் தர்ஸ்ட்டி-600 இரண்டு டோஸாக அவனுக்கு கொடுத்து, கால யந்திரத்தில் மறுபடியும் 2013க்கே செல்லும்படி உருட்டிவிடுங்கள். அவன் ஜென்மம் முழுக்க தீராத தாகத்துடன் திரிய இரண்டு டோஸ் போதும். “தாகத்தால் மனிதர்கள் இறக்கவும் செய்வார்கள் என்பதற்கு இவன் ஒரு சாட்சியாக இருக்கட்டும். அழுவதற்குக் கூட ஒரு சொட்டுத் தண்ணீரைச் சுரக்க முடியாத கொடுமைக்கு நம்மைத் தள்ளிய இவன் அணுஅணுவாகச் சாகட்டும். ஒரு சொட்டுத் தண்ணியின் மகத்துவத்தைப் புலம்பியபடியே அழியட்டும்.”

                “தண்ணி... தண்ணி... ஒரு சொட்டுத் தண்ணி... ... ண்... ணீ... தண்.... ணீ..
... ண்... ணீ..               . த..ண்.... ணீ...”.”
                                                ------------------------

 நன்றி: 'தமிழ்த் தாராமதி' 15.03.2013

                

புதன், 6 மார்ச், 2013

கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி

    
           தனது எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்திருந்த கடலூர் கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி  அவர்கள் நேற்று(05.03.2013) பகல் 11.30 மணியளவில் தன்னுயிரை தமிழோடு இணைத்து உடல் கிடத்தினார் எனும் செய்தி தமிழ் கூறும் நல்லுலகை வேதனையில் ஆழ்த்துகிறது.

       அவரது  மகன்கள் திரு.இளந்திரையன் , திரு. இளம்பரிதி ஆகியோர் எனது உற்ற தோழர்கள் ... கல்விக் காலத்திலிருந்து .

       கடந்த மாதம் தனது தந்தையின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக என்னிடம்  தொலைபேசியில் தெரிவித்தார் பரிதி. புதுச்சேரி சென்று மருத்துவ மனையில் கண்டு வந்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதுபவரும், தனது 25-வது நூலை (மரபும் திரிபும்) நலக்கேடான உடலின் உபாதைகளையும் மீறி மாறா தமிழ்க்காதலில் எழுதி, மின் வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை மூலம் அச்சேற்றி நூலாக்கியவருமான அவரிடம் நான் எழுதிய நூல்களில் சிலவற்றை கையளித்தேன் பழங்களுடன். ஆர்வம் மிக அந்நூல்களைப் பார்வையிட்டார் அந்நிலையிலும்.(சைகையிலும் குறைந்த வார்த்தைகளிலும் இருந்தது அவரது உரையாடல்)

      நேற்று இழப்பின் செய்தியறிந்து சென்ற என்னை துக்கம் மிகுத்தது, படுத்த படுக்கையிலும் நான் தந்த நூல்களை அவர் வாசித்தார் என்பதும் தன இருபத்தைந்தாம் நூலை மறக்காமல் எனக்குத்  தரும்படியும் சொன்னார் என நண்பர் வாயிலாக அறிந்தபோது என்னுணர்வை கண்ணீராகத் தான் உகுக்க முடிந்தது.

       சராசரித் தராசுகளால் நிறுத்துப் பார்க்க முடியாதவர் கவிச்சித்தர் என புலவர் மு. அழகப்பன் சொன்னது போல் அவரது நூலும் என் கைகளில் கனத்தது.

     தனது எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியின்றி வாழ்ந்தவர்; குறையாத தமிழ்ப் பற்று; எண்ணங்களை வெளிப்படுத்துவதில் துணிவு; மாற்றுக் கருத்துக்களை வரவேற்கும் நற் பண்பு; வளர்கின்ற திறனாளிகளைக் கண்டுபிடித்துப் பாராட்டும் பெருங்குணம்; தனது படைப்புகளின் வீச்செல்லை, விளைவுகள் குறித்துக் கற்பனை கலவாத தெளிவு, எளிமை... என விரித்துச் சொல்லத் தக்க தகைமையாளர் எனும் ப.மணவாளனின் கூற்று அத்தனையும் சத்தியம்.

     இன்று பகல் (06.03.2013) 11. 30 மணியளவில் கடலூரில் தன் இல்லத்தில் இப்போதைக்கு இருக்கும்  அன்னாரின் பொன்னுடல் புதைபடப் போகிறது தமிழ் மண்ணில்... 

     இருக்கும் நாமெல்லாம் இறைஞ்சுவோம் அவரின் ஆன்ம சாந்திக்காக.....



('''க. பொ. இளம்வழுதி''' (பிறப்பு: [[ஜனவரி 6]], [[1936] இறப்பு: மார்ச் 5, 2013]) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். [[புதுச்சேரி]]யிலுள்ள கலிதீர்த்தாள் குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தந்தை வெ. பொன்னுச்சாமி, தாய் தனபாக்கியம். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிவப்பு நிலா, குறுநூறு, சிவப்புச் சிந்தனைகள் உள்ளிட்ட 11 கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் வெளியிட்டவர். இவர் எழுதிய ''"விளையாட்டுகள் அன்றும் இன்றும்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.- நன்றி: http://ta.wikipedia.org )



கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதியின் இலக்கியப் படைப்புக்கள்:

TitleCategoryDownload
 சிவப்பு நிலா (தமிழக அரசின் பரிசு பெற்றது)காவியம்PDF
 நந்திவர்மன் காதலி"PDF
 வேர்கள் (புதுவை அரசின் பரிசு பெற்றது)கவிதை-நிகழ்வுகள்PDF
 ஆண்டவன் அறுபது"PDF
 நிறங்கள்"PDF
 குறுநூறுகவிதைத் தொகுப்புPDF
 சிவப்புச் சிந்தனைகள் (தமிழக அரசின் பரிசு)"PDF
 வண்ணத்தமிழ்"PDF
 சில்லுகள்"PDF
 வாக்கு மூலம்"PDF
 வெடித்து முளைத்த விதைகள்"PDF
 தளிர்"PDF
 வெண்பூக்கள் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு)"PDF
 நாளங்கள் (கரூர் இலக்கிய அறக்கட்டளைப் பரிசு)"PDF
 வெற்றியின் அறிமுகம் (நேரு)உரைநடை-வரலாறுPDF
 இலக்கை நோக்கி (மண்டேலா)"PDF
 வைகரைப் புள் (கவிஞர் வாணிதாசன்)"PDF
 கார்ககில் கதை (கார்க்கில் போர்)"PDF
 போராட்டப் பூமி (வியட்நாம்-ஹோசிமின்)"PDF
 நம்முடன் நல்லவர் (நல்லகண்ணு)"PDF
 ஆரங்கள் (உடல் நலன்)உரைநடைPDF
 இலக்கிய அறிமுகம் (இலக்கியம்)"PDF
 தமிழைத்தேடி (மொ.ழி)"PDF
 விளையாட்டுக்கள்-அன்றும் இன்றும்   (தமிழக அரசின் பரிசு பெற்றது)   "PDF
 மரபும் திரிபும் (இலக்கிய ஆய்வு)"PDF


நன்றி: http://www.senthamizh.com

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...