‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது' வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான் மருதன். எரும மிதிச்ச கால் எரியறது மாதிரி வெய்ய மூஞ்சியில எரிச்சலைக் கெளப்பியது.
குத்துக் காலிட்டுக் குந்தியபடி கீழக் கெடந்த ரவக் குச்சிய எடுத்து மணல் தரை மேவாட்டத்துல ஒரு நோக்கமுமில்லாம என்னத்தையோ கிறுக்கினான். அது என்னமோவாக வடிவெடுத்தது. குச்சியை தூரப் போட்டுவிட்டு ஆட்காட்டி விரலால் அளைந்தான். மணல் துகள்கள் விரல் சந்துல பூந்து கிச்சுகிச்சு மூட்டுவதும் சொகமாத்தானிருந்தது. அந்தப் பொதையல்ல கிடைச்ச பீடித் துண்டு, அவனுள் நெனைப்பைக் கிளறி நெஞ்சுக் கூட்டுக்குள்ள பொகைஞ்சி இருமலாத் தெறித்தது.
இன்னைக்கு பொழைப்பு போச்சு! ‘கருப்பனை' குளிப்பாட்டணுமுன்னு நெனச்சிட்டிருந்தான். அதுக்குள்ள இப்படி கூட்டி வந்து வுட்டானுங்க துரைமாருங்க. அன்னன்னிக்கி வேலைய முடிச்சு கூலியக் கேட்டாலே முழுசாக் கெடைக்காது.
இன்னிக்கு ‘கருப்பனும்' சாணிப் பூச்சோடத் தான் கொட்டாய்க்குள்ள போயிருப்பான். கூட்டாளி பக்கிரிகிட்ட மாடுகளைச் சேர்த்து அனுப்பியாச்சு, பண்ணை கிட்ட கூலிய அவ்வளவு சுளுவா பேத்துர முடியாது.
ஆச்சு... மணி மூணு! வயித்துக்குள்ள எல்லாப் பயலும் பூந்துகிட்டு காக்கரே பூக்கரேன்னு சிரிச்சு எகத்தாளம் போட்டாப்புல பசி குதியாளம் போட்டது. எப்ப நம்மளக் கூப்புட்டு, எப்ப நம்மள் உடுவாங்கன்னு தெரியலையே... காலம்பற பதினோரு மணிக்கு வீரங்கோயில் வாசலாண்ட கெடச்ச செதறு தேங்காத் துண்ட ரவகாணும் பல்லால கரண்டித் தின்னது தான். ஒரு டீத்தண்ணி குடிச்சா நல்லாயிருக்கும். தொரமாருங்க மூஞ்சியப் பாத்தா டீக்கடைக்குப் போற அறிகுறியே இல்ல. அவங்களும் கோர்ட்டு வாசப்பக்கம் நின்னு ஒவ்வொரு ஊரு பேரச் சொல்லி போலிசுக் காரவங்களக் கூப்பிட்டுக்கிட்டிருந்த டவாலியையே பார்த்து கிட்டிருக்காங்க. அந்தந்த ஊரு போலிசுக்காரவங்க ஏகத்துக்கு பாவனை காமிச்சு, இப்பிடியும் கூட இவனுங்க இருப்பாங்களான்னு அம்புட்டு பவ்யமா, கூட கூட்டியாந்த ஆளுங்களைக் கூண்டுல ஏத்துனதை பார்த்தா மருதனுக்கு வாய் ஒலந்து போச்சு.
நெரிஞ்சி முள்ளு கணக்கா மொளஞ்சி கெடந்த தாடிய வறட்டு வறட்டுன்னு சொரிஞ்சான் மருதன். தாமரக் கொளத்துல குதிச்சு கொம்மாளம் போடுற நேரமிப்போ. இந்நேரம் ஊர்லயிருந்த அந்தப் பக்கிரியக் காட்டியும் ரெண்டு நிமிட்டாவது கூட தண்ணிக்குள்ள அமுங்கிக் கெடந்து மணிக்கடை ‘பன்'ன பந்தயப் பொருளா வாங்கிப்புடலாம்ன்னு ராத்திரி முச்சிடும் கூர்ப்பா திட்டம் தீட்டி வெச்சிருந்தான். அந்த நெனப்பே இனிப்பா இருந்துச்சு. எச்சிலக் கூட்டி முழுங்கி ‘விர்'ருன்னு கல்லெடுத்து விசிறினான் கோவமா...
கோவாலு வீட்டுக் கல்யாணத்துக்கு சாந்தீரமா போய் தொப்ளான் தோப்புக் கொல்லையில வாழ மரம் வெட்டி எடுத்துட்டு வர்றதாச் சொல்லியிருந்தான். கோவாலுவுக்கு எதிலயும் கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும். எத்தன ‘த்தா' பாட்டு வுடறானோ தெரியல. அவனுக்கும் வேணும்... போன தரம் வேலிக்கருவ முள்ள வெட்டியாற சொல்லிட்டு எங்கியோ மூங்கிப்படலு ஓசியில கெடச்சிதில, ‘என்னா முள்ளு வெட்டியாந்திருக்க... எலிவாலு கணக்கா... இம்மாந்தடி வேணும்ல'அப்படின்னு தொடயத் தட்டிக் காட்டினான். அது ஆவற கதையில்லன்னு தெரிஞ்சும் என்ன பண்றதுன்னு பொத்திகிட்டுத்தான் போனான் மருதன்.
பதிலுக்கு இப்பிடி ஒரு அயனான சான்சு கெடைக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்ல. ‘நல்லா வேணும்டா மவனே'ன்னு நாக்க மடக்கி, பொறங்கையத் தட்டி சொல்லணும் போல இருந்தது அவனுக்கு. ஒரு தரம் வாயாற சொல்லி வாசாப்பும் உட்டான்.
‘பொளிச்'சுன்னு மறுபடி எச்சில துப்பி, அதுல மணலத் தள்ளித் தள்ளி மூட, அது செத்த நேரத்துக்கு பொழுது போக நல்லாத்தான் இருந்துச்சு.
‘எலேய் மருதப்பா, என்ன பண்ணிட்டு கிடக்கே' அதட்டலான குரல் கேட்டு மெரண்டு, துண்ட எடுத்து கமுக்கட்டில வச்சிட்டு, ‘ஒண்ணுமில்லிங்க சாமி'ன்னான்.
“தூங்கி கீங்கிப் புடாதே. அய்யா எப்ப வேணும்ன்னாலும் கூப்புடுவாங்க. டீத்தண்ணியெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். வெளங்குச்சா...” கூட்டி வந்த போலிசுக்காரரு அதட்டலா சொல்றாரு.
“சரிங்க எசமானே” சொல்லிட்டு திரும்பியும் குந்தி உக்காந்தான். கால் பூரா சில்லுன்னு என்னமோ ஒண்ணு ஓடி-ஓடியாந்தமாதிரி இருந்துச்சு.
மருதனுக்கு அவிச்ச மல்லாட்டன்னா அம்புட்டு இஷ்டம். அலமேலு கெழவி சந்தைக்குப் போயிட்டு நாலு மணி வாக்குல வரும். இன்னிக்கு கடைசி திங்கக்கெழமை.நிச்சயம் சந்தையில கூட்டமிருக்காது. மொத்த மல்லாட்டையும் விக்க ஒரு நாளும் அவளுக்கு பொசுப்பே இருக்காது. எப்படியும் மிஞ்சிக் கிடக்கும். நிச்சயம் கேட்ட காசுக்கு குடுத்துடுவா. இந்த நேரம் பார்த்து இங்க வந்து மாட்டிகிட்டமே. எப்ப வுடுவாங்கன்னு தெரியலயே...
அண்ணந்தம்பி ஒதவி ஒத்தாசைக்குன்னு ஒத்தனும் இல்லாம ஒத்தையா கெடக்கறது எம்புட்டுக் கஷ்டம்னு இந்த மாதிரி நேரத்துலதான் தோணும். மத்தபடி மருதனுக்கு பெருசா கவலயும் லட்சியமும் கெடையாது.
கீழ கெடந்த குச்சிய மறுபடி எடுத்து கடவாப்பல்லுல ஏதோ கெடக்கற மாதிரி நெம்பி எடுத்தான். வந்தது பருக்கையா இல்ல ஒடஞ்ச குச்சி மொனையா தெரியல. ஏதோ சாதிச்சவன் மாதிரி மண்டைய மண்டைய ஆட்டி சிரிச்சிகிட்டே ‘தூ, தூ'ன்னு துப்பினான். சமய சந்தர்ப்பமில்லாம ஒத்த ஏப்பம் வந்த சுவடு தெரியாம வாயிலேர்ந்து கெளம்பிப் போனது. ‘அடக் கெரகமே... என்னாத்தக் கண்டேன்னு இப்பிடிக் காஞ்ச வயித்திலேருந்து கெளம்பி ஓடறே?'ன்னு சலிப்பா தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். மருதனுக்கு எதுக்காகவும் எதுத்தாப்ல ஆளு, தேளு தேவையில்ல. காத்து இருந்தாவே போதும்ன்னு எல்லாக் கதையும் சொல்லுவான்.
தூங்குமூஞ்சிக் காத்து சொகமாத்தான் இருந்தது. காசு இருந்தா ரெண்டு கேசு ஆடலாம் போலத்தானிருக்கு. அட. இந்த கோர்ட்டு கச்சேரி எல்லாத்துக்கும் எப்பிடித்தான் இப்பிடி சொகுசா எடம் கெடைக்குமோ தெரியலப்பா.
‘ம்ஹெகங் ம்ஹெகங்'ன்னு கனைக்கிற கொரல் கேட்டு வெளிப்பக்கம் திரும்பினான். கறுப்பும், வெள்ளையுமா திட்டுத் திட்டா கலந்த நெறத்தில மாசானம் ஊட்டு ஆடுமாதிரியே நின்னதப் பாத்ததும் தான் ‘ஆஹா'ன்னு மரைக்காயரு நெகா வந்தது. ஆட்டாம்புளுக்க ரெண்டு மூட்ட பெலா மரத்து அடிவேருக்குப் போட வேண்டியிருந்தது. பல்பு போட்ட மாதிரி மருதனுக்கு நெனப்பு மினுக்கிச்சு. நல்ல மனுசன்... அவரு கேட்டா எப்பவும் தட்டாம செஞ்சிடுவான். அறுவது ரூவா கெடைக்குந்தான். இன்னும் அரை மூட்ட சேர்த்தா ரெண்டு மூட்ட தேறிடும். பழம் பெருத்து அறுத்தா பத்து சொளையாச்சும் வஞ்சனையில்லாம கொடுப்பாரு. அந்த மரம் ஒரு ஒத்த காய்ச்சி மரம். ஒரு தாட்டிக்கு ஒரு காய்தான் காய்க்கும். ஆனாலும் அம்புட்டு ருசியாயிருக்கும். ஒனக்கு எனக்குன்னு அதுக்கு மரைக்காயரு சொந்தத்திலேயே ஏகப் போட்டி. அப்பிடியும் போன தடவ மருதன் கேட்டேபுட்டான். ‘ஏன் பாயி... எனக்கு ஒரு தரம் முழுப் பழமாக் குடேன்... தேனாட்டம் இனிக்குது!'
“இன்ஷா அல்லா அடுத்த முறை பார்ப்போம்.”
“அது என்னா பாய் எதக் கேட்டாலும் என்னுமோ அல்லாங்கிறே எப்பப் பாத்தாலும்...?”
“அல்லாவோட கருணையால நான் உசிரோட இருந்து, நீயும் நல்லபடியா இருந்து, என் மரமும் பிலுபிலுன்னு காய்ச்சா ஒனக்கு ஒண்ணு தர்றேன்னு அர்த்தம்”.
“அடேங்கப்பா! அம்முட்டோண்டு வார்த்தைக்கு இம்மாம் பெரிய அர்த்தமா?! சுளுவாத்தான் இருக்கு பாய் ஒன் பாசை” ஆட்டாம்புளுக்கைய இந்த தடவ கொஞ்சம் கூட கொடுத்தா தகிரியமா இன்னும் பத்து சொள சேர்த்து குடுன்னு கேக்கலாம். ‘என்னுமோ அல்லா நிறையக் காய்க்கணும்'ன்னு கன்னத்தில போட்டுகிட்டான். பாய் மாதிரி சொல்ல வரலேன்னாலும், ஒரு மாதிரியா தேத்தி சொல்லிப்புட்டோம்னு சந்தோசப்பட்டுகிட்டான்.
எப்பக் கூப்புடுவாங்கன்னு தெரியல கெரவம்.இன்னிக்குப் பாத்து தங்கச்சிமேட்டுல மேய்ச்சலுக்கு வந்தது தப்பு. கொடுக்காப்புளியங்கா கெடைக்கும்ன்னு அந்தப் பக்கிரிப் பய பேச்சக் கேட்டுகிட்டே வந்தது தான் குத்தம். கடசியில அந்தப் பக்கிரிப்பய எங்கியோ ஓடிப் பதுங்கிட்டான். தொரைமாருங்களும் ‘ஓடன பயல வுடு' அப்படின்னு அத லேசுல வுட்டதுதான் மருதனுக்கு ஆச்சரியமாப் போச்சி. மாடு போனா மசிரே ஒண்ணாச்சின்னு எங்கனா ஓடிப் பதுங்கியிருக்கலாம். இப்பிடி வந்து மாட்டிகிட்டமேன்னு ஒரே வெசனமாப் போச்சு மருதனுக்கு.
மேக்க சூரியன் நிக்கறதப் பாத்தா மணி நாலாயிருக்கும். அலமேலுக் கெழவி இன்னேரம் போயிருக்கும். சாயறதுக்குள்ள வூட்டுக்குள்ள அடைஞ்சிடணும். அவிச்ச கல்ல போச்சு... எவனுக்கு அடிச்சுதோ லாட்டரி. மொத்தமா வாரிக் கொடுத்திருப்பா. நாம்பளும் இல்லைன்னா போட்டிக்கு ஆளு இல்லாம இன்னும் அம்பது காசு கொறச்சே குடுத்துருப்பா. எந்த பயலுக்கு மச்சம் இருந்துச்சோ தெரியல. வெள்ளோட்டந்தான்னு நெனச்சிகிட்டு சுத்தும் முத்தும் ஒரு தரம் பாத்தான். அவனவனுங்க பொண்டாட்டி புள்ளங்களோட வந்து கெடக்கறதப் பாத்தா ஏக்கமாத்தான் இருக்கு. வூட்டுக்காரனுக்கு டீயும் பொறையும் வாங்கி வந்து கூடயே கெடக்கறாளுவ. நமக்குத்தான் அந்த அம்சமே இல்லயே. எரும சாணத்தோடயும், ஆட்டாம் புளுக்கையோடயுந்தான் சகவாசம்னு ஆயிப்போச்சு. அப்பறம் ஏக்கப்பட்டும், துக்கப்பட்டும் ஆவப்போறதென்ன?
“இருப்புக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்... இருப்புக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்...” வெளியே நின்ன டவாலி கத்தினான்.
அவ்வளவுதான்... மருதப்பனைக் கூட்டி வந்த போலீஸ்காரர்கள் இருவரும் அவன் தோள் மீது கை வைத்து நெட்டியபடி கோர்ட்டுக்குள் நுழைந்து கூண்டில் அவனை நிற்க வைத்தனர்.
நீதிபதி இவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். “உன் பேர் என்ன?”
“கும்பிடறேனுங்க மருதப்பன் சாமி”
“என்ன வேலை பாக்குற?”
“ ஆடுமாடு மேய்க்கிறேனுங்க” சொல்லிவிட்டு, ‘சரியா சொல்லிட்டேனா' என்பது போல் கூட்டி வந்த போலீஸ்காரர்களைப் பார்த்தான்,
“உன்னை பயங்கரவாதத் தடை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா?”
கேட்பதற்கும் புரிவதற்கும் சிரமப்பட்ட மருதப்பன் ஒருகணம் திடுக்கிட்டு பின் சொன்னான், “புரிலீங்க எசமானே”
நீதிபதி ஒரு முறை கண்ணாடியைக் கழற்றி நிமிர்ந்து பார்த்து மறுபடி தலைகுனிந்து பின் கேட்டார்.
“போலீசாரால் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளுடன் சேர்ந்து தேசவிரோதச் செயல், பிளவுபடுத்துதல், கூட்டுச்சதி செய்து அரசுக்கு எதிராக நடத்தல் ஆகிய ஜாமீனில் விட முடியாத குற்றங்கள் உன் மீது சுமத்தப் பட்டிருக்கிறது. நீ இவற்றை ஒப்புக் கொள்கிறாயா...?”
வெள்ளி, 15 ஜூலை, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார் அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...
-
மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனி...
-
காட்சி : 13 பாத்திரங்கள் : வ . உ . சி , , வடுகராமன் , ஜெயிலர் வடுகராமன் : ஐயா கப்பலோட்டிய தமிழரே...