வே.சபாநாயகம் |
இலக்கிய உலகில்
என்னைப் போன்றவர்கள்
தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பட்டியலொன்றைத் தயாரித்தால்,
எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும்
பெயர் வே.
சபாநாயகம் அவர்களுடையதுதான்!
கூடுதலாக நான்,
நாரணதுரைக்கண்ணன் பெயரையும்
சேர்த்துக் கொள்வேன். உண்மையில் நாரணதுரைக்கண்ணன் அவர்களுக்கு என்னைத் தெரியாது. அவர்
செய்த அற்புதமானதொரு
செயல், வே.சபாநாயகம் அவர்களின்
முதல் சிறுகதையை
‘ஆனந்த போதினி'
இதழில் பிரசுரிக்க
வைத்ததுதான்.
‘ஒருவேளை என்
முதல் சிறுகதையை
பிரசுரித்திருக்காவிட்டால் நான் எழுத்துலகில்
தொடர்ந்து இயங்கியிருக்கமாட்டேன்'
என்று வே.சபாநாயகம் அவர்களே
தனது ‘நினைவுத்தடங்கள்'
வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுமைப்
பித்தன் சொன்னது
போல் ‘இந்த
உலகை உத்தாரணம்
செய்யவேண்டுமென்ற நோக்கத்திலோ, சீர்கெட்ட சமூகத்தை திருத்தி
அமைக்க வேண்டுமென்ற
ஆர்வத்திலோ நான் எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவரால்
ஊக்குவிக்கப்பட்டு, அடையாளங்காணப்பட்ட பல படைப்பாளிகள் சமூகத்தின் பல்வேறு
கூறுகளைப் பிரதிபலிப்பவர்களாக
அல்லது பாதிப்பவர்களாக
இருக்கிறார்கள் என்பதே உண்மை.
இன்று புதிதாய்
எழுத்துலகில் பிறந்து ஒரு நல்ல படைப்பை
நீங்கள் தந்தவராக
இருந்தால், உங்களைத் தேடி வரும் முதல்
பாராட்டு வே.
சபாநாயகம் அவர்களுடையதாகத்
தான் இருக்கும்.
சனங்களின் கவிஞர்
த.பழமலய்
அவர்கள் அழகாகச்
சொல்வார்கள்; “அந்தக் காலத்தில், பூமிக்கடியில் நீரோட்டம்
அறிய, ஒரு
குச்சியை கைகளில்
சுழற்றிக் கொண்டு
கிராமத்து நிபுணர்
கீழே உற்று
நோக்கியபடி நிலத்தில் நடந்து வருவார். அதுபோலதான்
வே. சபாநாயகம்
அவர்கள் வாசிப்பு
என்கிற வலுவான
உபகரணத்துடன் மிகச்சிறந்த படைப்பாளிகளைத்
தேடிக் கண்டுபிடித்து
அவர்களை ஊற்றாகப்
பெருகச் செய்பவர்.”
என்று...
வே. சபாநாயகம்
அவர்களின் எழுத்து
நடையும், எடுத்தாளும்
‘கரு'க்களும்
இயல்பானவை. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர்
சந்தர்ப்பத்தில் நீங்கள் அந்த சம்பவத்தை சந்தித்திருப்பீர்கள்;
அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.
‘இனியொருதடவை' குறுநாவலில் பஞ்சு அடிக்கும் கதாபாத்திரத்தை
நீங்கள் வெவ்வேறு
வடிவில் வெவ்வேறு
சந்தர்ப்பத்தில் கட்டாயம் சந்தித்திருப்பீர்கள்.
அதே சமயம்
‘குயிற்குஞ்சு' போன்ற கதைகளில் உள்ளார்ந்த கனமான
உள்ளடக்கத்தை மிக எளிமையாக கையாளும் வல்லமை
படைத்தவர். அவரது
‘தேசதேசக் கதைகள்'
சிறுவர் நூலுக்கு
என் குழந்தைகள்
ரசிகர்கள்.
நேர்மறையான விமர்சகர்,
நேர்மையான விமர்சகரும்
கூட. ஆனால்,
கடுமையான விமர்சனங்களை
தனிமையில் சந்திக்கும்
போதும் நிறைவான
விமர்சனங்களை பலர் அறிய சொல்வதும் அவரது
உயர் பண்பு.
அந்தப் பண்பு
எல்லா விமர்சகர்களுக்கும்
வாய்க்கட்டுமென பிரார்த்திக்கிறேன்.
1995-ல் கணையாழி இதழில்
அதன் துவக்க
காலம் தொட்டு
வளர்ச்சி குறித்து
வே.சபாநாயகம்
அவர்கள் எழுதி
வந்தார். கணையாழி
ஆசிரியர், கி.
கஸ்தூரி ரங்கனுக்கும்
எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கும்
சற்று மன
வேறுபாடு இருந்த
சமயம் அது.
வே. சபாநாயகம்
அவர்கள் தனது
கட்டுரையில் அசோக மித்திரன் பற்றி சிறப்பாகவே
குறிப்பிட்டிருப்பார். ஆனால், யாரோ
ஒருவர், அதில்
அசோகமித்திரன் பற்றி இருட்டடிப்பு செய்யப்பட்டதாக அசோகமித்திரனிடம்
கூறிவிட, அசோகமித்திரன்
சற்று மன
வருத்தத்தில் இருந்திருக்கிறார். இலக்கியச்
சிந்தனை விழா
ஒன்றில் இருவரும்
எதேச்சையாக சந்தித்த போது, ‘என்னுடைய கட்டுரைத்
தொடரை வாசித்திருக்கிறீர்களா?
அதில் உங்களைப்
பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.”
என்று கூறினாராம்
வே. சபாநாயகம்
அவர்கள் . ஆனால்,
அசோகமித்திரன் அசிரத்தையாக, “படித்து என்ன ஆகப்
போகிறது. நீங்களும்
அப்படித்தான்” என்று வருத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்து
விட்டாராம். அத்தோடு அவருடனான தொடர்பு விட்டுப்
போனதாக குறிப்பிட்டிருக்கிறார்
வே.சபாநாயகம்.
வேறொரு சந்தர்ப்பத்தில்
அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்' நாவல் குறித்தும்
அவரது படைப்பாற்றல்
குறித்தும் விதந்தோங்கி விமர்சனமெழுதி பாராட்டியிருக்கிறார். அவரிடமிருந்து
ஒருபோதும் உண்மைத்
தன்மையைப் பிரித்து
எடுத்துவிட முடியாது.
பழமுதிர்ச்சோலைக்கருகே அழகர் மலை என்ற இடத்தில்
திருமால் கோயிலொன்று
இருக்கிறது. அங்கு தரிசிக்க வரும் பக்தர்கள்
‘நூபுர கங்கை'
எனும் ஆற்றில்
நீராடிவிட்டுத்தான் கோயிலுக்குச் செல்வர்.
‘நூபுர கங்கை'
எங்கிருந்து தோன்றியது என்று அதன் நதிமூலத்தைப்
பார்த்தால், முருகக் கடவுளின் பாதச் சிலம்பிலிருந்து
தெறித்து விழுந்த
ஆறு என்பதாக
ஐதீகமான கதையொன்று
உண்டு. அதனால்
தான் அதற்கு
சிலம்பு ஆறு
(நூபுர கங்கை)
என்று பெயராம்.
அந்த ஆற்றின்
தண்ணீர் தவிர
வேறு தண்ணீரில்
அபிஷேகம் செய்தால்,
திருமாலின் விக்ரகம் கறுத்து விடும் என்பதால்
இன்றுவரை அந்த
நதிலிருந்து தான் நீரெடுத்து வந்து அபிஷேகம்
செய்கின்றார்கள். சைவ, வைணவம் பேதமற்ற சமரசமான
மலை அது.
அந்த மலையில்
நின்று குரல்
கொடுத்தால் அது நம் குரலை எதிரொலிக்கும்
, அப்படியாக எதிரொலிக்கும் தன்மை கொண்ட சிலம்பு
மலை வகையைச்
சார்ந்த அழகர்
மலையில் ஓடுவதால்தான்
அது சிலம்பு
ஆறு
என்பதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
புஷ்பக விமானத்தில்
தினமும் காசிக்கு
சென்று கங்கையில்
நீராடிவிட்டுத்தான் திருமாலை தரிசிக்கும்
வழக்கம் உள்ளவன்
‘மலையத்துவசன்' என்னும் மன்னன். ‘ஒருமுறை காசியில்தான்
கங்கை இருக்கிறதா?
அழகர் மலையிலும்
ஒரு கங்கை
இருக்கிறதே' என்று அசரீரி கேட்டதால் அன்றிலிருந்து
அங்கேயே புனித
நீராடியிருக்கிறான். இலக்கிய உலகைப்
பொறுத்தவரை, ‘வே. சபாநாயகம் 'அவர்கள், ‘நூபுர
கங்கை' என்று
சொல்லலாம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும்
நூபுர கங்கையில்
நீராடுவது போல்,
ஆயிரம் பிறைகள்
கண்ட ‘வே.
சபாநாயகம் அவர்களோடு
இலக்கிய நீராடல்
செய்வதும் அற்புதமான
அனுபவமாக இருக்கும்.
1950-ல் துவங்கிய அவரது
இலக்கியப் பயணத்தில்
எந்த இலக்கிய
நிகழ்வு குறித்தும்,
படைப்பாளிகள் குறித்தும் அவரிடம் துல்லியமான நினைவுப்பதிவுகள்
இருக்கும். சிலம்பு மலை எதிரொலிப்பது போல
அது குறித்து
நேர்மையான விமர்சனங்களும்
இருக்கும். பொதுவாக கால் சிலம்பில் முத்துப்
பறல்கள் இருந்தால்
அதிலிருந்து வரும் ஒலி பாண்டிய ஒலி
என்றும், மாணிக்கப்
பறல்கள் இருந்தால்
சோழஒலி என்றும்
கூறுவார்கள். உங்கள் உள்ளடக்கம் எப்படியோ அப்படியே
இருக்கும் அவரது
எதிரொலி.
என்னுடைய ஒன்றிரண்டு
கதைகளே பிரசுரமாயிருந்த
நிலையில் , இமயம், கண்மணி குணசேகரன், இரத்தின.புகழேந்தி, தமிழ்ச்செல்வி, பல்லவிகுமார் போன்ற
பல்வேறு ஆளுமைகளைத்
தந்த விருத்தாசலம் நகரில் நடந்த இலக்கியக்
கூட்டம் ஒன்றுக்குச்
சென்றிருந்தேன். கவிஞர் எஸ். அறிவுமதி, த.
பழமலய், பட்டி
செங்குட்டுவன், தெய்வ. சிகாமணி, கரிகாலன் போன்ற
மிகச்சிறந்த படைப்பாளிகள் இருந்த அவையில் நாயகனைப்போல்
வீற்றிருந்தார் ‘வே. சபாநாயகம்' அவர்கள். எழுத்தாளர்
ப. ஜீவகாருண்யன்
அவருக்கு ஏற்கனவே
அறிமுகமானவர். அவரை அழைத்து ‘நெய்வேலி பாரதிக்குமார்
யார்?' என்று
கேட்டாராம். ‘அவரும் இந்த கூட்டத்தில் பார்வையாளரில்
ஒருவராக இருக்கிறார்'
என்று ஜீவகாருண்யன்
சொன்னதும் சட்டென்று
இறங்கி என்னருகே
வந்து என்னுடைய
சிறுகதை ஒன்றை
குறிப்பிட்டு வெகுவாக பாராட்டியதோடு, மேடையிலிருந்த அனைவருக்கும்
என்னை அறிமுகம்
செய்து வைத்தார்கள்.
அவருடைய அனுபவத்திற்கும்,
வயதிற்கும் ஒப்பிடமுடியாத கடைநிலை படைப்பாளி நான்,
என்றாலும் அவரது
பெருந்தன்மையான குணம் என்னை நெகிழ வைத்தது.
கையெழுத்துப்
பத்திரிகை ஒன்றில்
அவரது முதல் முயற்சியாக
பிரசுரமானபாடல்..
“
எண்ணி எண்ணி
பார்க்க மனம்
வெண்ணையாக உருகுதே”
என்ற வரிகளோடு
துவங்கும்.. அன்றைய நிகழ்ச்சியை எண்ணிப்பார்க்கும் தோறும் எனக்கும் அப்படி பாடத்
தோன்றுகிறது.
அவரது முதல்
நடைச் சித்திரத்துக்குத்
தெரிந்தோ தெரியாமலோ
‘‘எங்கள் வாத்தியார்'
என்று பெயரிட்டிருப்பார்.
கடலூர், விழுப்புரம்
மாவட்ட படைப்பாளிகளைப்
பொருத்தவரை உண்மையில் நெஞ்சம் நெகிழச் சொல்லுவோம்
அவர் ‘எங்கள் வாத்தியார்'
வே. சபாநாயகம்
அவர்கள் மிகச்சிறந்த
எழுத்தாளர் மட்டுமல்ல... மிகச் சிறந்த புகைப்படக்காரரும்,
நேர்த்தியான ஓவியரும் கூட.. அவர் தனது
உருவத்தை
புள்ளிகளைக் கொண்டே உருவாக்கி,
தனது வலைப்பூவில்
பதிவிட்டிருக்கிறார். இன்று இலக்கிய
உலகில் பிரபலமாக
இருக்கின்ற பெரிய புள்ளிகள் முதல் சிறிய
புள்ளிகள் வரை
ஏதேனும் ஒரு
கோட்டில் இணைத்தால்
வருகின்ற உருவம்
அனேகமாக வே.சபாநாயகம் அவர்களாகத்தான்
இருக்கும். அந்த புள்ளிகளில் ஏதோ ஒரு
புள்ளியாக இருந்துவிடமாட்டோமா
என்ற ஏக்கத்துடன்
அவரது உருவத்தை
உற்று நோக்குகிறேன்..
அவரது பேருள்ளம்
என்னையும் கைவிடாது
இணைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்.....!
( கடலூர் மாவட்ட முதுபெரும் எழுத்தாளர் திரு.வே.சபாநாயகம் அவர்களின் 80 வயது நிறைவை முன்னிட்டு பிப்.9,2014ல் விருத்தாசலத்தில் எடுக்கப்பட்ட விழாவில் வெளியிடப் பட்ட விழா மலரில் இடம்பெற்ற எனது கட்டுரை.)