செவ்வாய், 28 ஜூன், 2011

KHUDA KAY LIYA (குதா கே லியே)

                                                                                                                                                                             பகட்டான நகைக் கடையிலோ அல்லது ஆடம்பரமான ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலோ பொருத்தமற்ற உடைகளோடும், உருவத்தோடும் நுழைய நேரிட்டால் நம் மீது வீசப்படும் ஏளனப்பார்வைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒரு சந்தேக வலை நம்மைச் சுற்றிப் பின்னப்படுவதை நுட்பமாக கவனிப்பவர்கள் உணர்ந்திருக்கலாம். எல்லை தாண்டி வேவு பார்க்க வந்த உளவாளியைப் போலவும், கிடைத்ததை அள்ளிச் செல்ல நுழைந்த கள்வனைப்போலவும் நம்மைப் பற்றி உருவாகும் சித்திரம் சிறிது நேரமேயானாலும், கூனிக் குறுக வைத்துவிடும். உதவுபவர் போல் உடன் வரும் கடைச் சிப்பந்தியின் பார்வை, நம்மை கண்காணிக்கத்தானோ என்ற அச்சம் எழுவது இயல்பு.
         அந்த ஒருசில நிமிடங்களில் மனம் நெரிபடுகின்ற அவஸ்தை, அந்த இடத்தை விட்டு அகன்றபின் தான் ‘விட்டு விடுதலையான' சுகத்தைத் தரும்.
 சந்தேகத்தின் வளையத்துக்குள் நாம் இருக்க நேரிடுகிற சூழலென்பது முதலை வாயில் பிடிபட்ட இரை உள்ளேயும் தள்ளப்படாமல், வெளியேயும் துப்பப் படாமல் உயிரின் வலியை ஒவ்வொரு அணுவும் அனுபவிப்பது போல் துயரமானது.
          சில நிமிட நேர சந்தேகப் பார்வைகளையே நாம் சகித்துக் கொள்ள முடியாத போது, வாழ்கின்ற வாழ்க்கை முழுதும் பிறருடைய சந்தேகக் கணைகளுக்கு இலக்காகி ரத்தம் கசியும் நொடிகளை நகர்த்துவது எத்தனை கொடூரமானது!
            செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பெரும்பான்மையான நாடுகளில் இஸ்லாமியர்கள் இப்படியான நரக வேதனையோடுதான் வாழ வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான்; அவர்கள் சதாசர்வ காலமும் குண்டு வைக்கும் திட்டத்துடன் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போன்றதொரு பார்வை படித்தவர்களிடம் கூட நிலவுகிறது. 
           இப்படியான தவறான பார்வை எப்படி ஒரு இஸ்லாமிய இளைஞன் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டதுதான் ‘குதா கே லியே'என்ற பாகிஸ்தானிய படம். குதா கே லியே என்பதற்கு ‘கடவுளின் பெயரால்' என்று பொருள். பொதுவாக பாகிஸ்தானில் அதிகமாக திரைப்படங்கள் உருவாக்கப் படுவதில்லை. எடுக்கின்ற ஒருசில படங்களும் இந்திப் படங்களின் தாக்கங்களில் எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
         ஷோயப் மன்சூர் இயக்கிய இப்படம், மூன்று வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இஸ்லாமியர்களின் வாழ்க்கையை ஒரு புள்ளியில் சேர்க்கிற நேர்த்தியான திரைக்கதையைக் கொண்டது.
          பாகிஸ்தானின் லாகூரில் வாழ்கிற மன்சூர், சர்மத் ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் இசைப் பிரியர்கள். நல்ல பாடகர்களும் கூட. காலப் போக்கில் சர்மத் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவரின் போதனையால், மெல்ல மெல்ல தீவிரவாத இயக்கத்தின்பால் ஈர்க்கப் படுகிறான். இசை மற்றும் ஓவியங்கள் இஸ்லாத்துக்கு எதிரானது என்று அந்த இயக்கத்தின் கொள்கைப் படி, இசையை விட்டு விலகி, நீண்ட தாடியுடன் இயக்கவாதியாகவே ஆகிவிடுகிறான்.
            மன்சூரின் இசை ஆர்வமிகுதியில், அமெரிக்காவில் உள்ள சிகாகோவுக்கு சென்று அங்கு இசைக்கல்லூரியில் பயில்கிறான். அங்கு அவனோடு இசை பயிலும் ஜென்னி என்கிற அமெரிக்க பெண்ணின் மீது காதல் பிறக்கிறது. ஜென்னி மன்சூரின் மீதுள்ள காதலால், தனக்குள்ள குடிப்பழக்கத்தை விட்டொழிக்கிறாள்.
           லண்டனில் குடியேறிய பாகிஸ்தானியரின் ஒரே மகள் மரியம் இங்கிலாந்தின் நவநாகரீக வாழ்வுக்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு வாழ்பவள். டேவ் என்ற ஆங்கிலேய இளைஞனைக் காதலிக்கிறாளவள். இது பிடிக்காத அவளது தந்தை அவனோடு பழகக் கூடாதென அச்சுறுத்துகிறார். வேடிக்கை என்னவென்றால், அவர் இங்கிலாந்தில் பிறந்த வெள்ளைக்காரப் பெண்மணியோடு திருமணமாகாமலேயே குடித்தனம் நடத்துகிறார். மரியம் தன் காதலில் உறுதியாக இருக்கவே, அவளது தந்தை அவளை பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லலாமென்று அழைத்துவந்து, தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பாகிஸ்தான் பழங்குடிப் பிரிவுகள் வசிக்குமிடத்தில் (FATA), தனது உறவினரான சர்மத்திடம் ஒப்படைக்கிறார். அவருடைய எண்ணம் டேவிடமிருந்து மரியத்தைப் பிரிப்பதே. தாலிபான்கள் இயக்கத்தின் பிடியில் உள்ள அந்தப் பகுதியில் முழுக்க முழுக்க பெண்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் முடக்கி வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் கொஞ்சமும் பொருந்திப் போகாத மரியம் அங்கு இருக்கும் பெண்களின் உதவியோடு அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். ஆனால் துரதிருஷ்டவசமாக சர்மத்திடம் அகப்பட்டுக் கொள்கிறாள். சர்மத் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்கிறான்.
          சிகாகோவில் வசிக்கும் மன்சூர், ஜென்னியுடன் இணைந்து இசையும் சந்தோஷமுமாக வாழ்கிறான். ஒரு முறை அவன் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் மேல் தளத்தில் குடியிருக்கும் குடிகார அமெரிக்க இளைஞன் வேண்டுமென்றே மன்சூரை வம்புக்கு இழுக்கிறான். மன்சூர் ஒதுங்கியே போனாலும் அவன் மீது குடிகாரனுக்குத் தீராத வெறுப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சமயத்தில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குடிகாரன், மன்சூர் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று அமெரிக்க உளவுப்படைக்கு தகவல் தந்துவிடுகிறான். மன்சூர் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்படுகிறான்.
           மரியம் தன் காதலன் டேவுக்கு ஒரு கடிதமெழுதி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறாள். டேவ் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, இங்கிலாந்து அரசு மற்றும் தூதரகம் மூலம் தாலிபான் தலைவர்களுக்கு நெருக்கடி தருகிறான். வேறு வழியின்றி சர்மத் மற்றும் அவனது இயக்கத்தினர் மரியத்தை விடுவிக்கின்றனர். மரியம் விடுதலையாகி, சர்மத்திடம் சட்டப் பூர்வ விலக்கு பெற பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறாள். வழக்கு நடைபெறும் தருணத்தில் வடக்கு கூட்டணிப் படையினருக்கும் சர்மத் சார்ந்த இயக்கத்தினருக்கும் சண்டை நடக்கிறது. அதில் தேவையில்லாமல் உயிர்கள் பலியாவது சர்மத்தை மனரீதியாக வெகுவாகப் பாதிக்கிறது. அவன் மெல்ல இயக்கத்தை விட்டு வெளியேறும் மனநிலைக்கு வருகிறான்.
           மன்சூர் அமெரிக்க உளவுப் படையினரிடம் சித்திரவதைப் படுகிறான். அவனிடமிருக்கும் எதேச்சையான பொருட்களுக்கும் கூட ஏதேதோ அர்த்தம் கற்பிக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தையும் அவன் மறுக்க கடுமையாகத் தாக்கப் படுகிறான். விசாரணைக்கு வரும் அதிகாரிகள் எல்லாம் அவன் அறையில் சிறுநீர் கழிப்பதும் அசிங்கம் பண்ணுவதுமாக கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவனது காதலி ஜென்னியால் அவனைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு சட்டம் மன்சூரை வலைப்பின்னலுக்குள் தள்ளுகிறது. அமெரிக்க அதிகாரிகளை நம்ப வைக்க அறை முழுதும் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதி வைக்கிறான். ஆனாலும் அவனை அதிகாரிகள் துன்புறுத்துவது நிற்கவில்லை. எப்பொழுதோ ஒரு முறை அவனது சகோதரன் சர்மத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதப் பெரியவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காட்டி, அவனை மேலும் சித்திரவதைப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ‘ஐ லவ் யூ எஸ்' என்று எழுதியிருப்பதை மாற்றி ‘ஐ லவ் ஒசாமா' என்று எழுதி விடுகிறான். இதனால் கொதிப்படைந்த அமெரிக்க அதிகாரிகள் அவனைக் கண்மூடித் தனமாகத் தாக்குகின்றனர். இதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு புத்தி பேதலித்தவனாக நடமாட முடியாத முடவனாக ஆகி விடுகிறான்.
           மரியம் தொடுத்த வழக்கில் இஸ்லாம் சம்மந்தப்பட்ட சில சந்தேகங்களை தெளிவுபடுத்த வாலி என்கின்ற முஸ்லீம் மதத் தலைவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறார். அவர் பெண்களை அடிமைப்படுத்துவதும், வலுக்கட்டாயமாக மணம் புரிவதும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை தர்க்க பூர்வமாக கூறுகிறார். அதன் பேரில் மரியம் விடுவிக்கப்படுகிறாள்.
 இந்த இடத்தில் இயக்குநர் மரியத்தை இங்கிலாந்து செல்வதாகக் காட்டாமல், தான் அடைபட்ட இடத்துக்கே திரும்புவதாகக் காட்டியிருப்பது சிறந்ததொரு முடிவு. அடைபட்ட இடத்தில் உள்ள பெண்களுக்குக் கல்வி புகட்ட அவள் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறாள். சர்மத் இயக்கத்திலிருந்து விலகி, மசூதியில் குர்-ஆன் ஓத ஆரம்பிக்கிறான்.
           மன்சூர் ஒரு வருட கால சித்திரவதைகளுக்குப் பிறகு ஒரு குற்றமும் நிரூபிக்கப்படாதவனாக, அதே நேரத்தில் மனநிலை பிறழ்ந்த, சக்கர நாற்காலியில் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துபவனாக அவனது தாய் தகப்பனிடம் சேர்க்கப்படுகிறான். அவன் ஒருநாள் குணமாகக் கூடுமென்ற நம்பிக்கையோடு அவனது குடும்பத்தினர் காத்திருக்கும் நெகிழ்வான காட்சியோடு படம் நிறைவடைகிறது.
           ஒரு சராசரி இந்திப்படத்தின் சாயலிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் வெளிவந்த படங்களில் மிகச்சிறந்த படமென்றே கருதப்படுகிறது. மூன்று வெவ்வேறு சூழல்களில் வாழும் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் இயல்பு, சூழல்கள் ஆகியவற்றை சிக்கலில்லாமல் நேர்த்தியான திரைக்கதை ஆக்கியிருக்கிறார் மன்சூர்.
 மன்சூராக நடித்திருக்கும் ஷான் மற்றும் சர்மத்தாக நடித்திருக்கும் ஃபலட் அப்சல்கான், மரியமாக நடித்திருக்கும் இமான் அலி ஆகியோர் கதாபாத்திரத்துக்கு ஒத்திசைவான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
              எல்லாவற்றையும் விட நீதிமன்றத்தில் வாலியாக வரும் இந்தி நடிகர் நசுருதீன்ஷாவின் நடிப்பு அபாரமானது. படத்தின் ஆகச்சிறந்த அந்த காட்சியில் கொஞ்சமும் மிகைத்தன்மை வந்துவிடாமல், மிகக் கவனமாகத் தேர்ந்த முகபாவங்கள், உச்சரிப்பு நேர்த்தியோடு பிரமாதப்படுத்தி விடுகிறார் ஷா. படத்தின் பாடற்காட்சிகள், இசை, பாடல் வடிவமைப்பு எல்லாவற்றிலும் ஒரு இந்தியத் தன்மைதான் தென்படுகிறது.
              கெய்ரோ படவிழாவில் சிறந்த படத்துக்கான விருது, ஜப்பான் திரைப்பட விருது, இத்தாலி படவிழா விருது, ஆசியாவில் தயாரான முதல் படங்கள் பிரிவில் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது இப்படம்.
             சந்தேகத்தின் நிழல் படர எவராலும் ஒருபோதும் இயங்க முடியாது. வன்முறைக்கும், போராட்டத்துக்கும் இடையே மெல்லிய இழைதான் இருப்பதாகப் பொதுப் பார்வையாளன் பார்வையில் கணிக்கப்படுகிறது.
 போராட்டமென்பது தன்னை பின்னியிருக்கும் வலையைத் தானே அறுத்துக் கொண்டு வெளிவருவது. இதன் வலியும், வேதனையும் போராடுகிறவன் தான் ஒருவனே ஏற்றுக் கொள்வது. வன்முறையென்பது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதையும் தயவுதாட்சண்யமின்றி அழிப்பது
.

         ஒரு சில குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள, பொது இடத்தில் ஏதுமறியாத அப்பாவிகளின் உயிரைப் பணயம் வைப்பதை ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் இலக்கணமென்று கூறும் போது, ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பது எத்தனை நியாயமோ அத்தனை நியாயம் ஒரு போராட்டம் என்பது எந்தவொரு அப்பாவியின் வாழ்வையும் பலிகேட்பதாக இருந்துவிடக் கூடாது.
          அதேசமயம் ஒரு தேசத்தில் நடக்கக்கூடாத ஒரு துர்ச்சம்பவம் நிகழ்ந்துவிட்டால் அதற்குக் காரணமாக இருப்பவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, மொழியைப் பேசுபவர்கள் என்பதற்காக, மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதற்காக ஒன்றுமறியாத ஜீவன்கள் உயிர்வதை செய்யப்படுவதோ, வாழத் தகுதியற்றவர்களாக ஆக்குவதோ நியாயமற்றது.
             போகின்ற இடமெல்லாம் நம் பின்னந்தலையில் விரலொன்று அழுத்தியபடி நம்மை அச்சுறுத்துவது போல சந்தேகத்தின் கண்கள் குத்துவதும், ஏளனப் பார்வை, போலிப் புன்னகை வீசப்படுவதும் ஒரு தனிமனிதனின் வலியை எத்தனை தூரம் அதிகப்படுத்துகிறதென்பது அவனது நிலையிலிருந்து பார்த்தால்தான் உணரமுடியும்.
             இந்த சமயத்தில் தலித்துகள் அரசு சலுகையினால் உயர்வதையும், சில நன்மைகள் பெறுவதையும் சுட்டிக்காட்டி, ‘அவர்களுக்கென்னப்பா... எல்லாம் கிடைக்கிறது' என்று மறைமுகப் பரிகாசம் செய்பவர்கள் பலருமிருக்கிறார்கள். உதாசீனத்தின் வலியென்பதும் அவமானத்தின் அடையாளமாய் இருப்பதும் எத்தனை துயர்மிக்கது என்பது அப்படியாக இருப்பவர்களுக்குத் தான் புரியும்.           இராசை. கண்மணி ராசாவின் ‘வலி' என்ற கவிதை அந்த வேதனையை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.
      சாணிப்பால் ஊற்றி
      சவுக்கால் அடித்தான்
      என் பூட்டனை உன் பூட்டன்
      காலில் செருப்பணிந்ததால்
      கட்டி வைத்து உதைத்தான்
      என் பாட்டனை உன் பாட்டன்
      பறைக்கு எதுக்கடா படிப்பு என
      பகடி செய்து ஏசினான்
      என் அப்பனை உன் அப்பன்

       ‘உங்களுக்கென்னப்பா
       சர்க்காரு வேலையெல்லாம்
       உங்க சாதிக்குத்தான்'-என
       சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!
      
       ஒன்று செய்
        உன்னையறியாத ஊரில் போய்
        உன்னைப் பறையனென்று சொல்!
       அப்போது புரியும்
       என் வலி!
           (‘கவிதையாவது கழுதையாவது' தொகுப்பிலிருந்து)
         
        ஏளனப் பார்வைகளுக்கும், சந்தேக வளையத்துக்கும் ஆளாகும் எல்லா மனிதர்களின் மனவலியை ரத்தம் கசியப் பதிவு செய்துள்ள இக்கவிதை இப்படத்தின் இஸ்லாமியர்களின் மனநிலைக்கும் பொருந்தும்.
 குதா கே லியே தன் பாணியில் அதே வலியை திரைமொழியாக பதிவு செய்துள்ளது.

                          

ஞாயிறு, 26 ஜூன், 2011

கசக்கும் சர்க்கரை

        சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால் திருவையாறு பக்கம் வராமலா போய்விடுவான், அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று திட்டம் ஏதாவது தோன்றினால் அதை சுத்தமாக மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.
         ஏனென்றால், சிதம்பரநாதனுக்கு சபாக்களில் கச்சேரி கேட்பதை விட, கேண்டீனில் என்னென்ன சுவையான ஐட்டம் கிடைக்கும் என்பதில்தான் நாட்டமதிகம். இப்பொழுது புரிந்திருக்கும் ... எதற்கவன் ரசிகனென்று.
        நளபாகம் அம்பி என்றால் நெய் சொட்டச் சொட்ட முந்திரிப்பருப்பு மணத்துடன் கிடைக்கும் பொங்கல் பற்றி நாவில் எச்சில் ஊறும்படி அவன் சொல்லும் அழகே கேட்பவருக்கு பசியைத் தூண்டிவிடும். சீனிவாசனின் தவளைவடைக்கு தலையையே தரலாமென்பான். தேசிகனின் இட்லி, கொத்சு சாப்பிடாதவன் மனிதனா என்பான். அதுமட்டுமல்ல. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் ஸ்பெஷல் அயிட்டம் எது; அதற்கு எந்த ஹோட்டல் பெயர்பெற்றது என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி.
         சரவணபவன் மினி இட்லி சாம்பார், கும்பகோணம் கெளரி ஹோட்டல் தயிர்வடை,  சிதம்பரம் நடராஜர் கோயில் மடப்பள்ளி சர்க்கரைப் பொங்கல், பெங்களூர் கையேந்திபவன்களின் இட்லி, காரசட்னி, மைசூர் ஹோட்டல்களில் மசாலா தோசை, கடலூர் மஞ்சகுப்பம் கையேந்தி பவன் நூடுல்ஸ், கொடைக்கானல் எக்ஸ்பிரஸ்ஸோ காபி, பாண்டிச்சேரி சப்போட்டா ஜீஸ் என்று எழுத எழுத பேப்பரும் பேனாவும் தீருமே தவிர அவன் பட்டியல் முடிவுற்றிருக்காது.
         எப்பொழுதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உற்சாகமாயிருப்பது ஒன்றே, தான் பிறவியெடுத்ததன் நோக்கம் என்பது போல அன்றைய பொழுதை ஓட்டுவதில் குறியாகயிருப்பான். வயது நாற்பத்தியேழு என்பது வெறும் புள்ளிவிபரக் கணக்கேயன்றி, வாழ்க்கைப் பயணத்தில் அதற்கு வேறொன்றும் முக்கியத்துவமில்லை என்று அதனைப் புறந்தள்ளிவிட்டு நாட்களை செலவழிப்பவன்.
        அப்படிப்பட்ட பிரகஸ்பதிக்கு வாயின் உள் கன்னப்பகுதியில் ஒரு வாரமாய் படுத்திக்கொண்டிருக்கும் வாய்ப் புண்தான் இப்போதைய தலையாய பிரச்சினை. வருகிற புண்ணுக்கு வேறு இடமா கிடைக்கவில்லை?! சதா பேசிக் கொண்டிருக்கவும், சளைக்காமல் சாப்பிடுவதற்கும் படைக்கப்பட்ட அந்த அற்புதமான புலன் இப்படி அவதிப்படுவது தான் சிதம்பரநாதனால் சகிக்க முடியாத கவலையாகிவிட்டது. கணிசமான சொத்து சேர்த்து வைத்திருந்த அப்பா; டீச்சர் வேலை பார்க்கும் மனைவி; அளவாய் ஒரு பெண், ஒரு ஆண் என சந்தோஷத்திற்கு குறைவில்லாத குடும்பம் அவனுடையது. கடைத்தெருவில் அவன் வைத்திருக்கிற பட்டாணிக் கடை, ஜீவனத்துக்காக அல்ல; இடைவிடாமல் அவன் கொறிப்பதற்கும், அவ்வழியே செல்லும் நடமாடும் தீனி ஸ்டால்களில் வரும் பதார்த்தங்களை நிறுத்தி ஒரு கை பார்ப்பதற்கும் தான்.
        பக்தனையும் கடவுள் சோதிப்பாரென்று பத்து நாட்களுக்கு முன் யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பான். வாய் திறப்பதே இமாலய சாதனை என்கிற மாதிரியான ‘இறுக்கமான' சூழலில், பக்கத்து தெருவில் குடியிருக்கும் தங்கை சாவித்ரி மிளகாய் பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் எடுத்து வந்த போதுதான், கடவுள் சோதனை இரட்டிப்பாகியது அவனுக்கு.
        சாப்பாட்டு ராமனாகிய அவன், வாய்ப்புண் உபயத்தால் அந்த பஜ்ஜிகளைக் கண்ணீரோடு வீட்டிலுள்ளோர்க்கு ‘விட்டுத் தந்த தியாக வரலாற்றை' யாராவது எழுதியிருந்தால் தமிழில் ஆறாவது பெருங்காப்பியம் கிடைத்திருக்கும். அப்படியும் ஆசை அடங்காமல் சுண்டுவிரலத்தனை பஜ்ஜியை விண்டு தின்றுவிட்டு வலியும் எரிச்சலும் தாங்கமாட்டாமல் வடித்த கண்ணீர் ஒரு குடம் தேறும்.
        மருத்துவமனையென்றால் பின்னங்கால் பிடறியில் பட ஓடக்கூடியவன், கடந்த ஒரு வாரமாக குடும்ப நண்பராகவும் மருத்துவராகவும் இருந்து தொலைக்கும் டாக்டர் வெங்கடாஜலத்திடம் உள்வாயில் தடவ களிம்பு, இடுப்பில் தினமொரு இன்ஜக்ஷன் தாக்குதல், திறக்க முடியும் இத்துணூண்டு வாய்க்குள் மாத்திரைகளின் சரமாரியான ஊர்வலமென கடுமையான சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. ஏதோ ஓரளவுக்கு வாய் திறந்து பேச முடிகிறதென்பதுதான் சற்று ஆறுதல். இப்படியானதே தன் குடும்பசாகரமென்ற சுயபச்சாதாபத்தில் நொந்து நூடுல்ஸாகிப்(!) போயிருந்தான்.
         “சார், பன்னெண்டாம் நம்பர் டோக்கன் நீங்கதானே... உள்ள போங்க” என்ற அட்டண்டரின் குரலில் தன் நினைவுக் குளத்திலிருந்து மேலெழும்பிக் கரையேறி, டாக்டர் ரூம் நோக்கி சென்றான்.
        “வாய்யா... சிதம்பரம். என்னாச்சு வாய்ப்புண்? சரியாச்சா?” சிரித்தபடி சகஜமாகக் கேட்டார் டாக்டர்.
         “நீங்க வேற... துக்கம் தொண்டைய அடைக்குது. ஒண்ணும் சாப்பிடமுடியாம மனுஷன் படற அவஸ்தை சொல்லி மாளாது”
        “அப்பவும் சாப்பிட முடியலைங்கறது தான் பெரிய கவலை உமக்கு! ஏன்யா முன்ன ஒரு முறை செரிக்கப் பத்தலைன்னு இங்க வந்தப்ப, கன்னாபின்னான்னு திங்கப்படாது; உடம்பை மெஷின் கணக்கா வச்சிக்கணும்னு சொன்னேனே... அதை தப்பா புரிஞ்சுகிட்டு ரைஸ் மில் மெஷினாட்டம் வெச்சிருந்தியா? வாயால மட்டுமில்ல... மனுஷன் காது, மூக்கு, கண்ணாலும் சாப்பிடலாம்னு...”
         “கண்டுபிடிச்சிருக்காங்களா அப்படி?!” ஆர்வக் கோளாறில் குறுக்கிட்டான் சிதம்பரநாதன்.
         “அப்படின்னு மட்டும் எவனாச்சும் கண்டு பிடிச்சான்னு வச்சிக்க... நானே அவனை தேடிக் கண்டுபிடிச்சு கொன்னேபுடுவேன். அந்த மாதிரி வசதி மட்டும் இருந்ததுன்னு வச்சிக்க, இப்படி நான் உட்கார்ந்து உன்கிட்ட பேசிகிட்டிருக்க முடியுமா? என்னையும் வறுத்து தின்னுட மாட்டே...!” வாக்கியத்துக்கொரு ‘வச்சிக்க' சொல்லும் வழக்கமுடைய டாக்டர்
       “சேச்சே... அந்தளவுக்கு நான் மட்டமான ரசனையுள்ள ஆளுன்னா நினைச்சீங்க? அப்படி வந்தாலும் வாட்டசாட்டமா ஒரு ஆளைப் பார்ப்பேனே ஒழிய காத்தடிச்சா பறக்கிறாப்புல இருக்கற உங்களைப் போயா....” சிரித்தான்.
        “வா வா மாட்டுக்குப் போடற ஊசி ரெண்டு போட்டு விடறேன்... காலைல என்ன சாப்பிட்ட?”
         “அட என்னங்க வயித்தெரிச்சலைக் கிளப்பிகிட்டு... கால் டம்ளர் காப்பி குடிக்க நான் பட்ட பாடு... நேத்து ராத்திரி மல்லுகட்டி கொஞ்சமே கொஞ்சம் ரவா உப்புமா சாப்பிட்டதோட கெடக்கேன்”.
       “பீரங்கிய சாப்பிடற ஆளுக்கு ரவைன்னு வச்சிக்க... கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும் நல்லதாப் போச்சு...”
       “நாசமாப் போச்சு!”
       “அவசரப்பட்டு குறுக்க குறுக்க பேசாதேய்யா... சொல்றதை முழுசாக் கேட்டன்னு வச்சிக்க... சரியா வைத்தியம் பண்ண முடியும். இந்தா... இதுல ஜி.டி.டி. டெஸ்ட் எழுதியிருக்கேன். நீயே வச்சிக்காதே... கொண்டு லேப்ல கொடு. சுகரிருக்கான்னு பார்த்துடுவோம். இருந்துச்சுன்னு வச்சிக்க... அப்ப இருக்குது உனக்கு.”
        ‘விதிகொடுமைடா... இந்த ஆளுகிட்ட மாட்டினது' என தனக்குத் தானே நொந்தபடி வெளியேறினான்.
         லேப்காரன் கொடுத்த குளுக்கோஸ் கரைசலைக் குடித்துவிட்டு அவன் கூப்பிடும்போதெல்லாம் யூரினும், ரத்தமும் எடுத்து தந்து சோர்ந்து போனவன், சொல்லொண்ணா துயரம் அப்பியவனாய் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
         இந்நேரம் கடையிலிருந்திருந்தால் இரண்டு படி அரிசிப் பொரி, அரைப்படி பொட்டுக்கடலை, முக்கால் படி வறுத்த பட்டாணி, நடுநடுவே கைப்பிடியள்ளலாய் கணக்கின்றி கெட்டி அவல் என எத்தனை எத்தனை ரசித்து ருசித்திருக்கலாம். பாழாய்ப் போன வாய்ப்புண் வந்ததிலிருந்து திரவ ஆகாரமே 'ததிங்கிணதோம்' ஆகிவிட்டது. இன்று அதற்கும் கேடு வந்தது. வாய்ப் புண் பற்றிய கவலை வயிற்றுக்கு உண்டா? அதுபாட்டுக்கு பசிக்கான ஆவர்த்தனத்தை இழுத்து இழுத்து பாட, தலை வேறு வலி பிளக்கிறது. பச்சைத் தண்ணி பல்லில் படாமல் இன்னும் எத்தனை தடவை ரத்தமெடுப்பானோ லேப்காரன். மாட்டுறவனை சாகடிச்சுட்டு  தான் மறு வேலை பார்ப்பான்கள் போல.
         அந்த நேரத்தில்தான் தன் கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க வருகிறான் இவனது பள்ளிக் கூடத் தோழமை ஆத்மாநாதன்.  இவனை நெருங்கியதும், “டேய் சிதம்பரம்... எப்படிடா இருக்கே... எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து... என்ன இந்த பக்கம்... சம்சாரம் ஏதாச்சும் சமாச்சாரமா? டெஸ்ட் பண்ண வந்தியா?” மூச்சிறைக்க கேட்டான்.
        படித்துப் பெரியாளாகி, நாதன்&நாதன் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ், நாதன்&நாதன் கார்மெண்ட்ஸ் என்றெல்லாம் கூட்டாக வியாபாரம் செய்து, ஊரில் பாதி இடத்தை சொந்தமாக்கி, ஆளுக்கொரு விலையுயர்ந்த காரில் வலம் வருவதெல்லாம் அவர்களின் சின்னவயசு காஸ்ட்லி கனவு. கல்லூரிக்குப் போகும் வழியில் பி.யு.சி. என்ற ஸ்பீட் பிரேக்கர் தடுக்கி விழுந்து திசைமாறிய சிதம்பர நாதன் பிற்பாடு பட்டாணிக்கடையில் தான் பள்ளிகொள்ள முடிந்தது.
         ஆத்மா ஏக் தம்மில் அப்படியே பி.எஸ்.சி. அக்ரி பாஸ் செய்துவிட்டு கவர்மெண்டி அக்ரிகல்சுரல் டிபார்ட்மெண்டில் இருபத்துநாலு வருட உத்தியோகம். சிறுவயதிலிருந்தே அனாயாசமாகப் படிப்பவன். சதா கூத்தும் கும்மாளமுமாக இருப்பதோடு இயல்பில் ரொம்ப குசும்பு பிடித்தவன்.
         “புள்ள பெக்கற வயசாடா இது? எனக்கு தான் ஜி.டி.டி.க்கு கொடுத்துட்டு நிக்கறேன் ரிசல்ட்டுக்கு. நீ எங்கே இந்தப் பக்கம்?”
         “எனக்கும் சர்க்கரைதான். ரெண்டு வருஷமா மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன். ரொட்டீன் செக்கப் இன்னிக்கு. எனக்கு மந்த்லி டெஸ்ட்... உனக்கு எண்ட்ரன்ஸ் டெஸ்ட்! இரு... பத்து மணியானா டீ குடிக்கப் போயிடுவான். பிளட்டைக் கொடுத்துட்டு வந்துடறேன்.” வழக்கமான சிரிப்போடு ஓடினான்.
          ஆத்மா எவ்வளவு ஹாஸ்யமாகப் பேசக் கூடியவனோ அவ்வளவுக்கு ஜலதரங்கம் போல் சிரிக்கக் கூடியவன். கையில் பஞ்சை வைத்து முட்டியை மடக்கியபடியே வந்தமர்ந்தான். “ஆமா... சர்க்கரைன்னு எப்படி சந்தேகம் வந்துச்சு...? அடிக்கடி ராத்திரியில எழுந்து ஒண்ணுக்குப் போக வேண்டியிருந்துச்சா?”
        “அட ஆமாண்டா. உனக்கும் அப்படித்தானிருந்துச்சா?”
         “ஆமாமா... பசிக்கும் ஆனா ருசியிருக்காது; அடிக்கடி தாகமெடுக்கும். நாக்கு வறண்டு வறண்டு போகும். உடம்பெல்லாம் அரிப்பெடுக்கும்; நல்லா அங்கங்க அடிச்சிப் போட்டாப்புல வலிக்கும். புண் வந்தா சாமானியமா ஆறாது... சனி! இன்னும் ஒவ்வொருத்தருக்கு ஒருவிதமாயிருக்கும்”.
         “சாப்பாட்டுல வேற ஆயிரத்தெட்டு கட்டுப்பாடாயிருக்கணும்ங்கறாங்க..?”
        “ஆமா... சாப்பிடற அளவைக் குறைக்கணும். வழக்கத்தைவிட அதிகமா வேலையோ உடற்பயிற்சியோ அட... வாக்கிங்காவது போகணும்ப்பா. கூடவே தவறாம மாத்திரைங்க, மாதாந்திர டெஸ்ட், வெங்காயம் வெள்ளைப்பூண்டு... கர்பிணிப் பொம்பளைக்காவது பத்துமாசத்துல விமோசனம் இதுங்கள்லயிருந்து. ஆயுள் சந்தா, ஆயுள் காப்பீடு மாதிரி வந்தா ஆயுசுக்கும் வைத்தியமும் கையுமாயிருக்க வேண்டியதுதான் நாம.”
         லேப் டெக்னீஷியன் ரிசல்ட்டுடன் வெளியே வர, பரபரப்புடன் எழுந்தனர்.            
      சிதம்பரத்துக்கு ஃபாஸ்டிங் சுகர் அளவு 180ம், தொடர்ந்த மணியளவுகளில் கணிசமான ஏறுமுகத்தில் இறுதி முடிவு 290ம் இருந்தது. வாங்கிப் பார்த்த ஆத்மா, “அடடே... எண்ட்ரன்ஸிலேயே என்னை விடக் கம்மிதான்.  படிக்கிறப்போ அதிகம் வாங்கினா பாஸ். இங்க ரிசல்ட் குறைவாயிருந்தாத்தான் பாஸ். அங்க குறைச்சு வாங்கி எனக்கடுத்து வந்த நீ, இங்கயும் குறைச்சு வாங்கி என்னையே முந்திட்டே. நம்ம தடியன் தண்டபாணியில்ல... ஞாபகமிருக்கா உனக்கு?மூணு வருஷத்துக்கொரு தடவை அடுத்த வகுப்பு போவானே...”
         “ஆமா... இப்ப தரகு தண்டபாணியாயிருக்கானே... அவன் தானே...”
          “அவனேதான். போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தான். அவனுடம்புல சுகர் இருப்பு எவ்வளவு தெரியுமா? எப்பவும் 400க்கு மேலதானாம். இன்சுலின் போடாட்டி கையக் காலை இழுத்துடும்னு டாக்டர் மிரட்டியிருக்காரு. கொஞ்சம் கூட அலட்டாம எங்க வீட்டுல வெச்ச ஸ்வீட் காரத்தை ஒரு வெட்டு வெட்டிட்டு, சர்க்கரை தூக்கலா காபி கேட்டான்னா பார்த்துக்கோயேன். மனுஷன் பாயோட படுக்குறதுக்குள்ள என் பொண்ணுக்கு நல்லதொரு வரனைக் கொண்டான்னு சொல்லி அனுப்பினேன்.
          போனவாட்டி டாக்டர் கிட்ட போனப்போ அவன் சாப்பாட்டுப் பழக்கத்தையெல்லாம் கேட்டுட்டு, இனி அதுல பாதியளவு... அதையும் அஞ்சு பங்காப் பிரிச்சு அஞ்சு வேளை சாப்பிடச் சொல்லியிருக்காரு. சர்க்கரைன்னு எழுதின எழுத்தக் கூடப் பார்க்கக் கூடாதுன்னும் சொல்லியனுப்பியிருக்காரு. இவன் என்னடான்னா...” பேசிக் கொண்டே இருந்தவன் தக்க எதிர்வினை இல்லாததால் சிதம்பரநாதனைத் திரும்பிப் பார்க்கிறான். பேயறைந்தாற் போலிருக்கும் அவனது மனவோட்டத்தை ஒருவாறாய் யூகித்தவனாய்,
        “நீ என்ன மிரண்டுட்டியா...? இதெல்லாம் இந்த காலத்துல ஜீஜீபி... சுகர், பி.பி., கொலஸ்ட்ரால் இல்லேன்னா டி.பி, கேன்சர் இப்படி ஏதாச்சும் வியாதியில்லேன்னா சமூகத்துல மதிப்பேயில்ல தெரியுமா...?! அசையா சொத்து, அசையும் சொத்தோட இதையும் சேர்த்தாச்சுப்பா... ஒண்ணா ரெண்டா அப்படீன்னா நம்ம சின்ன வயசில வேற அர்த்தம். இப்ப வேற. சுகரும் பி.பி.யும் தான் அது...”ஏதேதோ சொன்னான் ஆத்மா.
           “ஏதோ இருக்கறதை வெச்சுகிட்டு பொண்டாட்டி பிள்ளைகுட்டின்னு
உல்லாசமா காலத்தை கழிச்சிட்டிருந்த எனக்கு இதுவொரு கேடு காலமா  தோணுதுடா. ஏதேதோ பயம் வருது. வீணாக் கழிச்ச பொழுதெல்லாம் பூதாகரமா எழும்பி முன்ன நின்னு கெக்கேலி கொட்டுதுடா. என்ன சோதனைடா இது   ஆண்டவனே...”அரற்றினான் சிதம்பரம்.
         “ஏண்டா டேய்... ஏதாவது கல்யாணத்துக்கோ ஊருக்கோ போக காலங்கார்த்தால அலாரம் வெச்சு எழுந்துக்கறதில்லையா...? மனுஷ வாழ்க்கையில நரையும் வியாதியும் அலாரம் போலத் தாண்டா. இது கடவுளோட வேக்-அப் கால். எதைப் பத்தியும் கவலைப்படாம லெளகீக வாழ்க்கையில மூழ்கிக் கிடக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.
 நானும் இத கண்டுபிடிக்கிற வரை, வேலை, வீடு, சீட்டாட்டம், கிளப்ன்னு திரிஞ்சவன் தான். பையனும் உதவாத ஒரு படிப்பை படிச்சதா பேர்பண்ணிட்டு வேலை தேடுற போர்வையில சுத்திட்டிருந்தான். ‘போதும்டா நீ வேலை தேடுற லட்சணம்'ன்னு, சேவிங்ஸ்லேயிருந்து ஒருலட்சமெடுத்து பேன்சி ஸ்டோர் ஒண்ணு வெச்சி உட்கார வெச்சேன். ரெண்டே வருஷத்தில இப்ப நல்ல பிக்-அப். வந்த லாபத்தில ஒரு கவரிங் கடையொண்ணு வெக்கலாமான்னு பார்க்கிறான் இப்ப. இந்த வருஷம் படிப்பை முடிக்கிற மகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி விட்டுட்டா நாம படுக்கையில விழுந்தாலும் பாதியில போனாலும் கவலையில்ல இல்லையா... அதுக்கு தான் தண்டபாணியை கூப்பிட்டு விட்டேன்.
        இதெல்லாம் இந்த வியாதி வராட்டி நாம துரிதமா செய்வோமா...? என்னமோ இந்த உலகமே நம்ம கையிலன்னு மிதப்பா இல்ல திரிஞ்சிட்டிருப்போம்...?! “
        “நியாயம்தான் நீ சொல்றதும். தண்டபாணியை பார்த்தா என் வீட்டுக்கொரு தடவை வரச்சொல்லு. எம்மக ஜாதகத்தை கொடுத்து கல்யாண திசை வந்தாச்சான்னு பார்க்கச் சொல்லலாம்”.
                                    - ( ஜூன் 27 உலக நீரிழிவு நாள் ) 
  

வியாழன், 23 ஜூன், 2011

என்னுடைய முதல் சிறுகதை

  என்னுடைய முதல் சிறுகதை 
 ஆனந்த விகடன்  11.3.1990 இதழில் பிரசுரமானது 

   மயில்குட்டி

                                                




             துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான். அவனை நோக்கித்தான் எத்தனையெத்தனை ஆயுதங்கள்! இரண்டு நாட்களுக்கு முன் அவன் வேலை பார்க்கும் கம்பெனி அவன் மீது எய்த சென்னைக்குச் செல்வதற்கான மாற்றல் ஆணை வந்தது. மாற்றல் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
        வழக்கம் போலவே, ‘இதைத் தவிர்க்க முடியாதா, வேறு வழிகள் கிடையாதா?' என்று மனைவி நிர்மலாவின் கேள்விக்கணையிலிருந்து தப்புவதற்காக அவனுக்குக் கிடைத்த கேடயம்தான் ‘எதற்கும் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லிப்பார்க்கலாம்' என்று காலையில் சொன்ன வார்த்தை. அவள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாயந்திரம் போய்ப் பாருங்கள் என்று நூறு முறை அரித்தெடுப்பாள் என்று தெரியாமல் போயிற்று. அவனுக்குத் தெரியும், அது இயலாதென்று. ஆனாலும், அவளுக்காக அவரைப் பார்த்துவிட்டு வந்தான்.
       கோபாலகிருஷ்ணன் ஒன்றும் கம்பெனி பிரம்மாக்களில் ஒருவரல்ல. சிவனேயென்று கிளையலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கிளை உதவி மேலாளர். அவ்வளவுதான். கோபாலகிருஷ்ணன் தன் வார்த்தைகளில் சர்க்கரை தடவி, அவரும் அவர் குடும்பத்தாரும் இந்த மாற்றல் உத்தரவால் வருந்துவதாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு, மாற்றலை நிறுத்துவது; உயிரை விடுவது இவ்விரண்டையும் தவிர மற்ற அனைத்து உதவிகளையும் தம்மால் செய்ய முடியும் என்பது போல் பேசினார்.
       ஆயிற்று... இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும். அவனுக்குள்ளே எதிர்பார்ப்புகள், கனவுகள் எதுவுமில்லை. ஆகவே அது உடையவுமில்லை. ஆனால், வீட்டில் நிலைமை அவ்வாறு இல்லையே! மனைவி நிர்மலா, குழந்தைகள் சரவணன், திவ்யா எல்லோரது எதிர்பார்ப்பும் உடைந்து போகுமே.
 அவர்களுக்கென்னவோ இந்த ஊர் மிகவும் பிடித்துப் போயிற்று. இதுவரை தங்கியிருந்த ஊர்களில் இந்த கும்பகோணம் மட்டும் சட்டென்று அவர்களது மனதில் இடம் பிடித்துக் கொண்டது.
        நிர்மலாவுக்கு இங்கு வந்த பிறகுதான் முன்னேற்றத்தின் படிகள் தெரிவதாக ஒரு நம்பிக்கை. அதற்கு அவளுக்கு ஆதாரமாய் திகழ்ந்தவள் மூன்றாவது வீட்டு சவுந்திரம்மாள்.
        சவுந்திரம்மாள் ரொம்ப கெட்டிக்காரி என்று அடிக்கடி நிர்மலா சொல்வாள். நிறைய வித்தைகள் தெரிந்தவளாம். வீட்டில் சின்னச் சின்ன கைவைத்தியம் செய்வது, புதுப்புது பலகாரங்கள் பண்ணுவது, கோலங்கள் கற்றுத் தருவது, நகரில் வந்திருக்கும் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் பண்ணுவது... இன்னும் நிறைய.
       அவற்றுள் ஒன்றுதான் பணம் பண்ணும் வித்தை. எப்படி சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பது, அப்படிச் சேர்த்த பணத்தை எப்படி விருத்தி செய்வது என்பதையெல்லாம் அவன் மனைவி அவளிடம் கற்று சமர்த்தானது குறித்து அவனுக்கும் மகிழ்ச்சிதான். அநாவசிய செலவுகள் குறைந்தது. அவனுடைய பாக்கெட் மணி வழக்கமும் ஒழிந்தது. அடுத்த மாதம் கூட ஏதோ சீட்டு பிடிக்கப் போவதாகச் சொன்னாள். இந்த வேளையில் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குப் புரியவில்லை.
          கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவதற்கு முன் நைசாகப் பேசி குழந்தைகளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், “மெட்ராஸ்ல அட்டகாசமான பீச் இருக்கு; பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களெல்லாம் இருக்கு; அப்புறம்... Zoo... 
அங்க இந்த சிங்கம் புலி கரடியெல்லாம் கர்புர்ன்னு சப்தம் போட்டுகிட்டு பார்க்கவே தமாஷாயிருக்கும். பொய்ய்ய்ங்ன்னு சத்தம் போட்டுட்டு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் இல்லே... அது இப்படியும் அப்படியும் போயிகிட்டு இருக்கும்; அப்புறம் என்னென்ன... ம்... துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாக்கின்னு திக்கி திக்கி திவ்யாகுட்டி கடைசியில டுமீல்ன்னு சுடுமே... அந்தக் குறள் எழுதுன வள்ளுவர் பேருல ‘வள்ளுவர் கோட்டம்'ன்னு... எப்பா... அந்த வானம் முட்டுக்கும் ஒரே ஒசரமாயிருக்கும் தேரெல்லாம்... ஆங்... மாடி பஸ் கூட உண்டு டட்டடய்ங்க்... அதெல்லாம் பார்க்க வேணாமா?” என்றான்.
       “ம்ஹீம்... வேணாம்ப்ப. நாம இங்கியே இருந்துடலாம். இருந்தா ஜாபரு மயில் தோகை தரேன்னு சொன்னான். அதை புத்தகத்துல வச்சி அதுக்கு தென்னை மரத்துலயிருந்து காய்ஞ்ச பட்டையை சுரண்டி வெச்சா குட்டி போடுமாம்!” என்றான் சரவணன், அவனது சால்ஜாப்புக்கெல்லாம் சற்றும் சலனப்படாமல்.
       “ஆமாம்ப்பா. நான் கூட தோட்டத்துல ரோஜா செடி வெச்சிருக்கேன். அது பூக்கறதைப் பார்க்காம எப்படிப் போறது?” என்றது மழலை மாறாமல் திவ்யா.
 தன் வித்தை பலிதமாகாமல், “அப்படியா... ரோஜாப்பூ வெச்சா உனக்கு ரொம்ப அழகாயிருக்குமே...” என்று அவளது கன்னங்களை வழித்து நெட்டி முறித்துவிட்டு, “சரி போய் விளையாடுங்க” என்று அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்த போது அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் சூடாக வழிந்தது.
       வீட்டுக்குள் வந்ததும், குழந்தை திவ்யாவை வாரி மடியில் போட்டுக் கொண்டு, சரவணனை ஒரு பக்கம் சாய்த்து, எப்படி அவர்களைச் சமாதானப் படுத்துவது என்று குழம்பி மெளனத்தை உபாயமாய் கையாண்டான். பின் அவர்களைப் படுப்பதற்காகப் பெட்ரூமுக்குப் போகச் சொன்னான்.
       அப்போது அடுப்படியிலிருந்து வந்த நிர்மலா, “ஏன் இவ்வளவு நேரம்? நான் இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சிட்டு இருக்கேன். சாப்பிட வேணாமா?” என்றாள்.
       “வேணாம். கொஞ்சம் காபி மட்டும் கொடு. பசிக்கலை”.
 அவள் காபி கலக்குவதற்காக மறுபடியும் அடுக்களைக்குள் சென்றாள். அங்கிருந்தவாறே குரல் கொடுத்தாள். “போய்ப் பார்த்தீங்களா? அவரு என்ன சொன்னாரு?”
        அவனுக்குத் தெரியும். நேரடியாக கேட்க மனமில்லாத போதெல்லாம் அவள் அடைக்கலமாகுமிடம் அடுக்களைதான்.
        “ம்... பார்த்தேன். ட்ரை பண்றாராம். ஆனால் நிறைய காசு செலவாகுமாம். அதுவுமில்லாம ட்ரான்ஸ்ஃபரையெல்லாம் மறுக்காம ஏத்துகிட்டா சீக்கிரம் ப்ரமோஷன் கிடைக்குமாம். அப்புறம் பிரச்சினையில்லாம ஜம்முன்னு ஒரே ஊருல இருக்கலாமாம். இப்பக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டு இதைச் சமாளிங்கன்னு சொன்னாரு. எனக்கும் அதுதான் தோணுது. நாம இங்கிருந்து போகறதுல அவருக்குத்தான் பாவம் ஏக வருத்தம். அவர் என்ன பண்ணுவாரு?”
       அவன் மேலும் அங்கிருக்க மனமில்லாமல், குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். குழந்தைகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டு தானிருந்தனர். ஒரு குற்றவாளியைப் போல குறுகுறுக்கும் மனத்துடன் அருகில் சென்றான்.
       “இன்னும் தூங்கலையா?”
       “ம்ஹீம்... ஏம்பா மெட்ராஸ்ல மயில்தோகை நிறையக் கிடைக்குமாமே... அம்மா சொன்னாங்க” என்றான் சரவணன்.
       இதை எதற்கு இப்போது கேட்கிறான் என்று புரியாமல், என்ன சொல்வது என்று விழித்த போது, காபியுடன் உள்ளே நுழைந்த நிர்மலா, கண்சிமிட்டி சமிஞ்சை செய்தாள்.
        இவன் புரிந்து கொண்டு, “ஆமாம்ப்பா... நிறைய கிடைக்கும்”.
       “அப்படின்னா மெட்ராஸ் போகலாம்ப்பா”.
        “ஆமாம்ப்பா... நான் கூட செடியை எடுத்துகிட்டு வந்திடறேன். மெட்ராஸ்ல ஆரஞ்சு கலர் ரோஜா, மஞ்சள் கலர் ரோஜா செடியெல்லாம் கிடைக்குமாமே...” இது திவ்யா.
       “சரி தூங்குங்க. காலையில சீக்கிரம் எழுந்திரிக்கணும்” என்று அவர்களை தூங்க வைக்க முயற்சித்தாள் நிர்மலா.
 படுக்க மனமில்லாமல், கேட்க எத்தனித்த கேள்விகளைத் தளராமல் ஸ்டாக் வைத்திருந்த சரவணன், அதிலிருந்து ஒன்றை சலித்துப் பொறுக்கியெடுத்து மீண்டும் சந்தேகத்துடன் கேட்டான். “ஏம்பா மயில் தோகை குட்டி போடுமா?”
       “ஓ! போடுமே”
        கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு நிம்மதியில் கண்ணயர்ந்தார்கள்.
        எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிர்மலா அவன் முன் வந்தமர்ந்தாள். மனதில் இருந்த எத்தனையோ கனவுகளையும் திட்டங்களையும் கலைத்துவிட்டு குழந்தைகளின் மனதில் தளர்ச்சி ஏற்படுத்தாமல் அவர்கள் வழியிலேயே தேற்றியிருக்கிறாயே... உன்னை நான் எப்படி சமாதானப் படுத்துவது? என்பது போல் பார்த்தான்.
        ‘எல்லாம் எனக்குத் தெரியும்' என்பதுபோல் கண்களைத் தாழ்த்திப் பார்த்துவிட்டு அவன் கைகளில் முகம் புதைத்து தூங்க முயற்சித்தாள் நிர்மலா. அவனுக்குத் தெரியும். அவள் எத்தனைக் காயப்பட்டிருப்பாளென்று. அவளது சின்னச் சின்ன ஆசைகளை எதிர்பார்ப்புகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்...
       கடவுளே... ஏன் என்னை ஒவ்வொரு முறையும் நிராயுதபாணியாகவே போர்க்களத்துக்கு அனுப்புகிறாய்...?
       தூங்கும் புஷ்பங்களைப் பார்த்தான். சரவணன் ஏதோ கேட்கப்போகும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
       மெட்ராசுக்குப் போனதும் எங்காவது மயில் தோகை வாங்கி வந்து மறக்காமல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.

(நன்றி: ஆனந்த விகடன் - 11.3.1990)

திங்கள், 20 ஜூன், 2011

PEEPLI (LIVE)

    PEEPLI (LIVE)

       சமீப காலமாக தேநீர்க் கடைகள், திரையரங்கங்கள், திருமணக்கூடங்களில் சக மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் சலிப்பான உரையாடல் ஒன்றை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இந்தியா எந்திரமயமாகி வருகிறது. நகரங்களில் மக்கள் நிமிடங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அவசரகதியில் சக மனிதர்களைப் பற்றிய அக்கறையில்லாமல் பறக்கிறார்கள். வீடுகள் நெருக்கமாகி இருக்கின்றன. மனிதர்கள் தூரம்தூரமாக விலகிவிட்டார்கள் என்ற அர்த்தம் தொனிக்கிற பேச்சுக்களை வெவ்வேறு குரல்களில் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.
       தொழில் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சியென்று இந்தியாவின் வளர்ச்சி, உலக நாடுகளோடு சமபலத்தில் மோதும் அளவிற்குப் பெருகிவிட்டது. ஆனால் மனிதம் வீழ்ந்து கொண்டிருக்கிறதே என்ற கவலை, இரண்டு மூன்று தலைமுறைகளை ஒருங்கே பார்க்க முடிந்தவர்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது இயல்பாகி விடலாம்.
       யோசித்துப் பார்க்கையில் எல்லாப் பொருளாதாரக் காரணங்கள் சமகால நியாயங்களையும் தாண்டி, மூலகாரணமாய் ஒன்று தோன்றுகிறது. சில பத்து வருடங்கள் முன் வரை ‘இந்தியா ஒரு விவசாய நாடு' என்பதுதான் சர்வதேச அரங்கில் நமக்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா ஒரு வளர்ந்து வரும் தொழில்துறைகள் சார்ந்த நாடு என்பதுதான் சரியாக இருக்கும். வயல்கள் நிரம்பியிருந்த ஊர்களில் இன்று ‘கான்கிரீட் காடுகள்' என்னும் அளவுக்கு கட்டடங்கள் பெருகி விட்டன. உயிர்ப்பான ‘பயிர்கள்' நம் பிரதான உற்பத்திப் பொருளாக இருந்தவரை நம்மிடையே ‘மனிதமும்' உயிர்ப்புடன் இருந்தது. விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘உயிரற்ற' பொருட்களின் உற்பத்திப் பெருகப்பெருக மனிதமும் செத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
       தை மாதம் பிறந்துவிட்டால் திரும்பிய பக்கமெல்லாம் பசேசென்று வயல்கள் பூத்துக் குலுங்க இந்த தேசமே உயிர்ப்புடனிருப்பது போல் பார்க்கச் சிலிர்ப்பாக இருக்கும். நாற்று நடும்போதும், களைபறிக்கும் போதும், அறுவடையின் போதும் பாட்டு, கேலி, கிண்டல் என்று பணிபுரியும் சூழலில் கூட சகமனிதர்களோடு கலந்து உறவாடுவது நம் வாழ்வின் மரபாக இருந்து வந்தது. கூட்டமாக, குதூகலமாக கொண்டாடப்படவேண்டிய திருவிழாக்கள் கூட இன்று 14”,21” பெட்டிகளுக்குள் சுருங்கி விட்டன. தேசத்தின் பசுமைக் குறையக் குறைய மனிதர்களின் மனதிலும் பச்சையம் குறைந்து விட்டது.
      இது வழக்கமாகக் கேட்கும் பழமையின் குரலல்ல... இழப்பின் வலி.
 உணவுதான் மனிதனின் அத்தியாவசியத் தேடல். ஆனால், அதனை இலக்காகக் கொண்டு இயங்கும் விவசாயம் இன்று ஏளனத்துக்கும், அலட்சியத்துக்கும் உரிய சொல்லாகிவிட்டது. நம் கல்வித் திட்டத்தில் கூட விவசாயம் ஒரு அத்தியாவசியமான பாடமாயில்லை. எப்படி நம் தமிழ்க் குழந்தைகள் தமிழையே புறக்கணித்துவிட்டுப் பட்டப் படிப்பை முடித்து விடும் சூழல் இருக்கிறதோ அதுபோல, விவசாயம் என்றால் என்னவென்று கடுகளவும் தெரியாமல் ஒரு மனிதனின் ஆயுட்காலம் கடந்துவிடுமளவு நம் பிழைப்புலகம் முற்றிலும் வேறாக விவசாயத்திலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனில், ஒரு விவசாயியின் துயரங்களை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை எப்படி ஒரு சராசரி மனிதன் உணர்ந்து கொள்வான்?
       எங்கோ ஓர் ஊரில், ஏதோவொரு சாலையில், யாரோ ஒரு முகமறியாத மனிதன் விபத்தில் மரணமடைவதைச் செய்திகளில் கேட்டுக் கடந்து விடுவதைப் போல், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை எளிதாகக் கடந்து விடுகிறோம்.
       கடந்த ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர், விவசாயிகள் பட்டினிச் சாவு பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கிறார். வருந்துவதைக் காட்டிலும் அவமானப்பட வேண்டிய செய்தியிது. நமக்கான பருக்கைகளை அனுப்பிவிட்டு, பட்டினியால் கடன் தொல்லையால் சாகிறான் என்றால், நாமெல்லாம் நன்றிகெட்டவர்கள் ஆகிவிட்டோமோ என்ற உறுத்தல், ஒவ்வொரு கவளத்தை உண்ணும் போதும் நமக்கு ஏற்பட வேண்டும்.
       இந்த உறுத்தல் இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கானுக்கு இருந்ததன் விளைவுதான் PEEPLI (LIVE) என்கிற படம். உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் ரித்விக் கட்டக், சத்யஜித்ரே, ஷ்யாம் பெனகல், மிருணாள்சென், அடூர் கோபால கிருஷ்ணன், மீரா நாயர், தீபாமேத்தா என்று நம் இந்திய இயக்குநர்களை எந்தச் சலனமுமின்றிச் சேர்க்கலாம். நம் தமிழில் கூட, ருத்ரய்யா, ஜெயபாரதி, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா என்று சிலரைக் குறிப்பிட முடியும். என்ன பிரச்சினை என்றால், இவர்கள் விருதுப்பட இயக்குநர்கள் என்று முத்திரையிடப்பட்டு இவர்களுடைய திரைப்படங்கள் என்றாலே மிதமிஞ்சிய சோகம் அல்லது மெதுத் தன்மை இருக்கும் என்று பெரும்பாலான பார்வையாளர்கள் ஒரு அச்சத்துடன் புறக்கணிக்கிறார்கள்.
        அமீர்கானின் இந்தித் திரைப்படங்கள் (அவரது தயாரிப்பில் உருவானவை) பிரதானமான பிரச்சினையை எப்படி ஜனரஞ்சகமாக பொதுப் பார்வையாளர்கள் மிரண்டுவிடாதபடி தருவது என்கிற அறிதலோடு உருவாக்குகிறார். அவரது முந்தைய படங்களான லகான், தாரே ஸமீன் பர் ஆகியன இப்படியான ஜாக்கிரதையோடு எடுக்கப்பட்டவை தான். அவை விமர்சகர்கள், வெகுஜன ரசிகர்கள் இருதரப்பாலும் வரவேற்பைப் பெற்றன.
       முழுக்க முழுக்க கலைத்தன்மை என்று சொல்ல முடியாமலும், முழுதும் ஜனரஞ்சகமான படமென்று சொல்ல முடியாமலும் ஒரு சமரச பாணியில் அவரது  படங்கள் இருக்கின்றன. PEEPLI (LIVE) சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட நல்ல திரைக்கதைக்கு மிகச்சிறந்த உதாரணம்.
       முக்கியப் பிரதேசமென்னும் கற்பனையான மாநிலத்தில் ‘பீபிலி' என்ற கிராமத்தில் நந்தா தாஸ் மற்றும் அவரது அண்ணன் புதியா தாஸ் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். இருவருக்கும் விவசாயம்தான் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான மூலாதாரம். பொதுவான அவர்களின் நிலத்தில் விளைச்சல் குறைந்து தினசரி வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. வங்கிக் கடனுக்காக அலைகின்றனர். ஆனால் எதுவும் கிடைத்தபாடில்லை. உள்ளூர் அரசியல் தலைவரிடம் வங்கிக் கடன் பெற்றுத் தரும்படி கேட்கிறார்கள். ஆனால் அவரோ ‘அது சாத்தியமில்லை; எனினும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசு ஒரு லட்சம் உதவித் தொகை தருகிறது' என்று நக்கலாகக் கூறி அனுப்பி விடுகிறார்.
        சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கடைசியில், நந்தாதாஸ் தான் தற்கொலை செய்து கொள்வதால் கிடைக்கும் ஒருலட்ச ரூபாய் பணத்தில் இருவரது குடும்பத்தையும் காப்பாற்றும்படி அண்ணனிடம் கூறிச் சம்மதிக்கச் செய்கிறான். இருவரும் அந்த முடிவுக்கு வந்தபின், சாராயம் குடிக்கிறார்கள். போதையோடு ஒரு தேநீர்க்கடையில் அவர்கள் நந்தாதாஸ் தற்கொலை செய்யப் போகும் விஷயத்தை உளறி விடுகிறார்கள். தேநீர்க் கடையில் தற்செயலாக அமர்ந்திருந்த உள்ளூர் நிருபர் ராகேஷ், இந்தப் பரபரப்பான செய்தியை பெரிய அளவு கொண்டு செல்வதன்மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம் என்ற முடிவோடு ITVN எனும் ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நந்திதா மாலிக்கிற்குத் தகவல் தெரிவிக்கிறான்.
       முக்கியப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர்தொல்லை காரணமாக, மாநிலத்தின் இடைத்தேர்தல் அறிவிக்கப் படுகிறது. இந்தச் சூழலில் நந்தாதாஸ் தற்கொலைச் செய்தியைப் பரபரப்பாகத் தருவது சேனலுக்கு பெரியதொரு பெயரைத் தருமென யோசித்த நந்திதா, பீபிலி கிராமத்துக்கு நேரலை ஒளிபரப்புச் சாதனங்களோடு வருகிறார்.
        பாரத் லைவ் என்னும் ஹிந்திச் சேனலுக்கும் இந்த ஆசை தொற்றிக் கொள்ள அவர்களும் நேரடி ஒளிபரப்புச் சாதனங்களோடு பீபிலி கிராமத்துக்குள் நுழைகின்றனர்.
        உள்ளூரிலிருக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு இது பெரிய தலைவலியைத் தருகிறது. காவல்துறைத் துணையோடு நந்தா தாஸ் மற்றும் புதியா தாஸை அழைத்து மிரட்டுகிறார். ஆனால் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் இதை லேசில் விடுவதாயில்லை. ஒரு தேதியைக் குறிப்பிட்டு, அதற்குள் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால் தாங்களே தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அச்சுறுத்துகிறார்கள்.
       சேனல்காரர்கள் மாற்றி மாற்றி இருவரது பேட்டியையும் ஒளிபரப்பப் போட்டி போடுகிறார்கள். ஆனால் இரண்டு பேரும் அரசியல் கட்சிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
 ITVN-ன் நந்திதா, உள்ளூர் நிருபர் ராகேஷின் உதவியோடு எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் எதிர்பார்த்த நாட்டை அதிரச் செய்யும் நந்தாதாஸ் பேட்டி கிடைக்கவில்லை.
       பாரத் லைவ் சேனல்காரர்கள் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்து நந்தாதாஸின் அண்டை வீட்டார்கள், சிறுபிராய நண்பர்கள் ஆகியோரின் பேட்டியை ஒளிபரப்புகிறார்கள். அதோடு, உயரமான மரக்கோபுரம் அமைத்து அதன் வழியே ஊர் முழுக்கத் தெரியும்படி நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
       ஆளுங்கட்சி ஏதாவது செய்து இதைத் தடுத்தாக வேண்டிய கட்டாயம். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்கின்றன. எனவே, இருக்கின்ற உதவித் திட்டங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு கைப்பம்பு தரலாம் என முடிவெடுத்து, அரசு அதிகாரியொருவர் ஒரு ஜீப்பில் அரசுப் பட்டாளத்துடன் வந்து கைப்பம்பை நந்தா தாஸின் தலையில் கட்டிவிடுகிறார். இதை நிலத்தில் இறக்க பண உதவி கிடைக்குமா என்று கேட்கிறான் நந்தாதாஸ். கோப்புகளைப் புரட்டிப் புரட்டிப்  பார்த்துவிட்டு, விதிமுறைகளின்படி இல்லை என உதட்டைப் பிதுக்கிவிட்டுக் கிளம்புகிறார்கள்.
        எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தந்து விட்டுப் போகிறார். தட்டுமுட்டு சாமான்கள் கூட வைக்க இடம் போதாத அவர்களின் சிறிய வீட்டில் நடுநாயகமாக பிரயோஜனமற்ற கைப்பம்பும், டி.வி.யும்!
        ஆளும் சம்மான் கட்சியின் முதல்வர் ராமபாவு யாதவ், இந்தத் தலைவலியைத் தீர்க்கும் பொறுப்பை விவசாயத் துறை அமைச்சர் சலீம் இத்வாய் (நசுருதீன் ஷா) வசம் ஒப்படைக்கிறார்.
         நந்தாதாஸின் ஒவ்வொரு அசைவும் நேரடி ஒளிபரப்பாகிறது. தற்கொலைக்கான தினத்தின் அதிகாலை மலம் கழிக்கச் செல்லும் நந்தாதாஸ், திடீரென தலைமறைவாகி விடுகிறார். எல்லோரும் எதிர்பார்த்த பரபரப்பு நாடு முழுதும் பரவுகிறது.
       பீப்லி கிராமத்தில் தன் விவசாய நிலத்துக்காகக் கிணறு வெட்டும் பணியைத் தன்னந்தனியாக ஆரம்பித்து, முடிப்பதற்கு முன் பசிக் கொடுமையில் இறந்து போகிறார் இன்னொரு விவசாயி.
        ராகேஷ் அவரைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பலாமென நந்திதாவிடம் சொல்கிறான். ஆனால், நாடு முழுக்க நந்தாதாஸ் மேல் கவனத்துடன் இருக்கும் சூழலில், இறந்து போன விவசாயியைப் பற்றி செய்தி தயாரிப்பது அத்தனை புத்திசாலித்தனமில்லை என்று நந்திதா மறுத்து விட, ராகேஷ் ஏமாற்றமடைகிறான்.
        சலீம் தான் நந்தாதாஸை கடத்தி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார்.
        நந்தாதாஸை எல்லோரும் தேடிக் கொண்டிருக்கும் போது, ஊரில் பூட்டிக் கிடந்த கூரை வீடொன்று தற்செயலாகத் தீப்பிடித்துக் கொள்கிறது. தீ விபத்தில் எதேச்சையாக மாட்டிக்கொண்ட ராகேஷ் அடையாளம் தெரியாதபடி கருகிவிடுகிறான். இறந்து போனது நந்தாதாஸ் என்றும் அது எதிர்பாராத விபத்து என்றும் தவறாக நினைத்துக் கொள்ளும் சேனல்காரர்கள், நந்தாதாசுக்குக் காவலாக வந்த காவல்துறையினர், அவர்களை எல்லாம் நம்பி தற்காலிகமாக ஆரம்பிக்கப் பட்ட கடைகள் எல்லாம் ஒரே நேரத்தில் ஊரை விட்டுக் கிளம்பி விடுகின்றனர்.
         நந்தாதாஸின் மரணம் விபத்துதான்; தற்கொலையல்ல என்று முடிவெடுத்த அரசு, தற்கொலைக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சத்தைத் தர முடியாது எனக் கைவிரித்து விடுகிறது. கடைசிக் காட்சியில் நந்தாதாஸ் சாகவில்லை. அவனது தாடி மீசை எடுக்கப்பட்டு, ஒரு பாலம் கட்டும் பணியில் தினக்கூலியாக அடையாளம் தெரியாத நபரைப்போல காட்டப்படும் போது நாம் அதிராமல் இருக்கவே முடியாது.
       
      படத்தின் இயக்குநர் அனுஷா ரிஸ்விக்கு இதுதான் முதல்படம். அமீர்கான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் என்றாலும், அவர் தான் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் படங்களின் திரைக்கதை மீது செலுத்தும் அதீத கவனம் நல்ல சினிமாவுக்கான சிறந்த முயற்சி எனலாம். தமிழில் பிரகாஷ்ராஜ் இப்படியான கவனத்தோடு தயாரிக்க முயல்கிறார்.
        படத்தில் நந்தாதாஸ் காணாமல் போனபிறகு, தொலைக்காட்சிச் சேனல் தொகுப்பாளர், நந்தா மலம் கழித்த இடத்தை வட்டமிட்டு, ‘இது தான் அவர் மலம் கழித்த இடம்' என்று சென்ஷேஷனல் நியூஸ் சொல்லும் காட்சி இந்தச் சமூகத்தின் மீதான, அரசியல் வாதிகள் மீதான, ஊடகங்கள்  மீதான சவுக்கடி விமர்சனம்.
        ஒரு ஜீவாதாரமான பிரச்சினையை, எப்படி ஒரு பொதுப்பார்வையாளனின் ரசனைக்கும், புரிதலுக்குமான பக்குவத்தோடு சொல்வது என்று, தீர்க்கமாக யோசித்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘பீபிலி லைவ்' பாணி, திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழில் சேரனும், வசந்தபாலனும் இந்த வகை பாணியைக் கையாள்கிறார்கள்.
 சற்று எள்ளலுடன் சொல்லப்பட்டாலும் ‘பீபிலி லைவ்' மிகச் சிறந்த இந்தியப் படங்களில் ஒன்றாக, அது எடுத்துக் கொண்ட பிரச்சினையின் அடிப்படையில் சொல்லலாம்.
        ‘ஒரு விவசாயியின் மரணமென்பது ஒரு தேசத்தின் மரணம்' என்பதை எப்போது நாம் உணரப்போகிறோம்?

அனுஷா ரிஸ்வி:

தில்லி பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் பட்டம் பெற்ற அனுஷா, பத்திரிகையாளராகத்தான் தன் இலட்சியப் பணியைத் துவங்கினார். பீப்லி லைவ் படத்துக்கான கதையுடன் அமீர்கானை அணுகியபோது, முதலில் இவரால் டைரக்ட் செய்ய முடியுமா என்று தயங்கினார். அதன் பிறகு சற்று தயக்கத்துடன் படம் எடுக்கச் சம்மதித்தார். படப்பிடிப்பின் போது இவரது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்ட பிறகு, நம்பிக்கையுடன் முழு பணியையும் ஒப்படைத்தார். தனது முதற் படத்திலேயே ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப் படும் பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.(2011 ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் போட்டியில்,  சிறந்த அயல்மொழிப் படத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.)


 

திங்கள், 13 ஜூன், 2011

IN THIS WORLD

      நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும்.
       ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
       உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக ஆப்கான் என்றால் தாலிபான்கள், பழமைவாதிகள் என்கிற பிம்பங்களைத் தாண்டி வேறெதுவும் பெரும்பாலோனோர்க்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில், அங்குப் புகைப்படக்காரர்கள், நிருபர்களுக்கு அனுமதியில்லை. இரண்டாவது அதிமுக்கிய காரணம், வல்லரசுகளின் கடைக்கண் பார்வை படுமளவு அங்கு எண்ணெய் வளமோ, பரவலான சந்தைப் பொருளாதாரமோ இல்லை. எனவே, ‘ஜனநாயகக் காவலர்கள்' பொருட்படுத்தக் கூடிய தேசமாக ஆப்கான் இல்லை. லிபியாவில் ‘ஜனநாயகம் தழைக்க' உள்ளே புகுந்த உலக நாடுகள் ஆப்கன் பக்கம் திரும்புவதேயில்லை. ஈழத்தைப் போலவே புறக்கணிக்கப்பட்ட தேசமான ஆப்கானின் அவலமான இன்றைய நிலைக்கு மிக முக்கியக் காரணங்கள் அதன் ஒழுங்கற்ற நில அமைப்பு (Gelogical Structure). ஒன்றையொன்று எதிரிகளாகக் கருதிக்கொள்ளும் பழங்குடிப் பிரிவுகள், போதை மருந்து கடத்தல், மத அடிப்படைவாதிகள் என்பனவற்றைச் சொல்லலாம்.
       ஆப்கானில் இரண்டு கோடிபேர் தற்பொழுது வசித்து வருவதாக ஒரு கணக்கு கூறப்பட்டாலும், ஆப்கானைப் பொறுத்தவரை எந்தக் கணக்கும் உண்மையாக இராது. ஏனெனில், உள்நாட்டுப் போரினாலும் பட்டினியாலும் ஒரு மணிநேரத்துக்குப் பதினான்கு ஆப்கானியர்கள் இறக்கின்றனர். அறுபது ஆப்கானியர்கள் தங்கள் உடைமைகளை விட்டு அகதிகளாக ஏதோ ஒரு தேசத்துக்குள் அபாயங்களைச் சந்தித்தபடி நுழைய முற்படுகிறார்கள். எனவே, ஆப்கானின் மிகச் சரியான மக்கள்தொகையை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. உலகெங்கிலும் ஆப்கான் அகதிகள் அறுபத்தேழு லட்சம் பேர் இருப்பதாக உலக அகதியமைப்பு கணக்கிட்டுச் சொல்கிறது.
       ஆப்கன் நாட்டின் அதிகபட்சப் பழங்குடி இனமாக ‘பஷ்தூன்' மக்கள் அறுபது லட்சம் பேர் இருக்கின்றனர். அடுத்தபடியாக ‘தாஜிக்குகள்' நாற்பது லட்சம் பேரும், பத்து லட்சம் பேர் கொண்ட ‘ஹஜாரக்'குகளும், ‘உல்பெக்கு'களும் அதற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட ‘இமாக்', ‘பார்ஸ்', ‘பலூச்', ‘துர்க்மன்', ‘க்யுசெல் போச்' போன்ற சிறு குழுக்களும் உள்ளனர்.
       கடந்த கால வரலாற்றில், ஒட்டு மொத்த ஆப்கானை ஆண்டவர்கள் ‘பஷ்தூன்' இனத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்களுக்கு மற்ற பழங்குடி இனத்தவர் மேல் அக்கறையில்லை. அதே போல் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்வதேயில்லை. தங்கள் இனத்திற்கென்று தனியாகத் தலைவர்களை உருவாக்கி அவர்கள் சொல்படி மட்டுமே நடப்பார்கள். இதனால் ஒரு இனம் மற்றொரு இனத்துக்கு எப்பொழுதுமே நேரெதிர்தான். எந்த அளவுக்கு என்றால், ஒரு பொது மருத்துவமனை இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு இனம் வைத்தியத்துக்காக வரும்போது, பிற இனத்தவர் வருவதற்கு அனுமதிப்பதில்லை. எனவே ‘பஷ்தூன்'களுக்கு ஒரு நாள் வைத்தியமென்றால், மற்றொரு நாள் ‘தாஜிக்கு'களுக்கு என்று முறை வைத்துதான் பார்ப்பது.
       இப்படியான சூழலில் இவர்களுக்கு தாங்கள் ‘ஆப்கானியர்கள்' என்ற உணர்வே அவர்களது நாட்டில் இருக்கும் வரை இருப்பதில்லை. தாங்கள் சார்ந்த இனம் என்னவோ அதைத்தான் தங்கள் அடையாளமாகக் கூறுவார்கள். இவர்களுக்குள் நடக்கும் உள்நாட்டுச் சண்டைகள், மற்றும் நாட்டின் அதிகபட்ச பணம் புரளும் தொழிலான அபின் பயிரிடுதல் வியாபாரமிருக்கின்றன. இதன் காரணமாகவும் கொலைகளும், வன்முறைகளும் அதிகம். எனவே இவர்கள் அபாயகரமானவர்களாக உலகின் பார்வையில் இருக்கிறார்கள்.
        உலகத்தின் கவனத்தைப் பெறும் கவர்ச்சிகரமான விஷயங்களெதுவும் இல்லாததால், அன்றாடம் நிகழும் பட்டினிச்சாவுகள் காரணமாக ‘புலம் பெயர்தல்' ஒவ்வொரு நிமிடமும் நிகழ்கிறது.
        ஆனால் ஆப்கானியர்கள் என்றால் பல நாடுகளும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. எனவே, ஆப்கானிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் ஆப்கானியர்கள், தங்களை பாகிஸ்தானிகள் என்றோ அல்லது அங்கிருந்து ஈரானுக்குள் புகுந்து பின் ‘ஈரானியர்கள்' என்றோ பொய் சொல்லி லண்டனுக்கோ, பாரிசுக்கோ அகதிகளாக நுழைய முற்படுகிறார்கள்.
        ஆப்கானின் பெரும்பகுதியான நிலம் மலைகளால் ஆனது. எனவே சரிசமமான சாலைப் போக்குவரத்து சாத்தியமில்லாத ஒன்று. இதன் காரணமாக எந்த ஒரு தொழில் நிறுவனமும் அங்கு முதலீடுகளுக்கு முன்வருவதில்லை. போதை மருந்து பயிரிடுதலுக்கும், கடத்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு போதை மருந்து வர்த்தகம் மட்டுமே அங்கே அமோகமாக நடக்கிறது.
       போதாதற்கு, அடிப்படைவாதிகளின் கெடுபிடிகள். பெண்கள் பர்தா இல்லாமல் நடமாட முடியாது. அதாவது ஒரு கோடி பேர் முகங்களை மற்ற ஒரு கோடி பேர் பார்க்க முடியாது. நாட்டில் திரையரங்குகள், பொதுவான பத்திரிகைகளுக்குத் தடை. பெண்கள் வேலை பார்க்க அனுமதியில்லை. அத்தியாவசியமான மருத்துவத் துறையில் கூட பெண்கள் பணியாற்ற முடியாது. ஆண் மருத்துவர்கள் மட்டுமே என்பதால் அவர்களிடம் மருத்துவம் பார்க்கும் பெண்கள் கூடவே சகோதரன், மகன், கணவன், தந்தை என யாரையாவது அழைத்துவர வேண்டும். மருத்துவருக்கும், நோயாளிப் பெண்ணுக்கும் இடையே திரைச்சீலை இருக்கும். மருத்துவரின் கேள்விகளுக்கு உடன் வரும் ஆண் பதில் சொல்ல வேண்டும்.
        ஆப்கான் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஈரான் இயக்குநர் மக்மல் பஃப், பல இன்னல்களுக்கிடையே, ஆப்கான் அரசிடம் அனுமதி பெற்று எடுத்த படங்கள் ‘தி சைக்கிளிஸ்ட்' மற்றும் ‘காந்தஹார்'  . பின்னர் சித்திக் பர்மர் இயக்கிய ‘ஒசாமா'. இதற்குப் பிறகு சில ஆவணப் படங்கள்.

       அதற்குப் பிறகு வெளிவந்த படம் IN THIS WORLD-. பாஃப்டா விருது பெற்றது. ஆப்கானின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஓரளவு பிரதிபலித்த படங்கள், ‘தி சைக்கிளிஸ்ட்', ‘காந்தஹார்', ‘ஒசாமா' என்றால், ஆப்கானியர்கள் அகதிகளாக தேசம் விட்டு தேசம் பயணிக்கும் போது ஏற்படும் சிக்கல்களைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் IN THIS WORLD-.

       ஜமால் மற்றும் இனாயத்துல்லா இருவரும் ஆப்கானிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவரில் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர்கள். நிச்சயமற்ற அந்தச் சூழலில் இருந்து அவர்கள் தப்பிக்க, லண்டன் சென்றால் மட்டுமே முடியும் என்று அவர்கள் குடும்பம் கருதுகிறது. தங்களது கையிருப்பில் உள்ள சேமிப்பிலிருந்து கள்ளத்தனமாக எல்லை கடந்து அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மூலம் அனுப்புகிறார்கள். ஹவாலா முறையில் அவர்களுக்குப் போகின்ற இடங்களில் பணம் கிடைக்கும் அளவு புரோக்கர்கள் தொடர்பு பலமாக இருக்கிறது.
        15 வயது ஜமாலும், 20 வயது இனாயத்துல்லாவும் குவாட்டா வருகிறார்கள். அங்கிருந்து ஈரானின் எல்லை நகரான டாஃப்பின், அதன் பிறகு பேருந்து வழியாக ஈரானுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லையோர காவல்படையிடம் அகப்பட்டு மறுபடி பெஷாவருக்கே திரும்புகிறார்கள்.
 கண்டெய்னர் லாரியில் இவர்களைப் போன்றே இன்னும் சில அகதிகளும் இருக்கின்றனர். காற்றுப் புகவும் வசதியில்லாத அந்த இடத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பயணம் செய்ய முடியாமல் பலரும் மூச்சுத் திணறி, கதவைத் திறக்கும்படி கதவுகளைத் தட்டுகின்றனர். ஆனால் அவர்களது ஓலம் கேட்கப்படாமல் காற்றில் கரைந்து விடுகிறது. கண்டெய்னர் தன் இலக்கை அடையும் போது உள்ளிருந்த இனாயத்துல்லாவும் இன்னும் சிலரும் மரணமடைந்து விடுகின்றனர். ஜமால் மட்டும் குதித்த வேகத்தில் தப்பித்து நகரை அடைகிறான். அங்கு ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடி, கிடைக்கும் தொகையில் ஸன்கெட்டா அகதிகள் முகாமில் தஞ்சமடைகிறான்.
       அங்கு யூசுப் என்னும் இளைஞன் பழக்கமாகிறான். இருவரும் சேர்ந்து ஒரு லாரியின் அடிப்பகுதியில் படுத்தவாறே இலண்டன் வந்தடைகின்றனர்.
       ஜமால் லண்டன் வந்ததும் தன் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கிறான். இனாயத்துல்லாவின் உறவினர்கள் ஜமாலிடம், இனாயத்துல்லா அங்கு இருக்கிறானா என்று ஆவலுடன் கேட்கிறார்கள். அவன் இந்த உலகத்திலேயே இல்லை (He is not in this World) என்று பதிலளிக்கிறான். கேமரா திரும்பவும் பெஷாவர் அகதிகள் முகாமைக் காண்பிக்க, படம் முடிகிறது.        ஆப்கன் நிலைமை இதுதான். ஆப்கானில் வசித்தால் பசியோ, ஏதேனுமொரு தோட்டாவோ எந்த நேரத்திலும் மரணத்தைப் பரிசளிக்கும். வாழ்வைத் தேடிப் பயணித்தாலும் மரணம் இருகை நீட்டி வரவேற்கும். ஆப்கானில் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு ஆப்கானியர்கள் என்ற அடையாளமில்லை. ஏதோ ஒரு பழங்குடி இனத்தவன் என்றுதான் அவர்கள் அழைக்கப் படுவார்கள். ஆப்கானுக்கு வெளியேயும் அவர்கள் ஆப்கானியர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. முகங்களற்ற உருவங்களோடு திரியும்படி சபிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
        திடுக்கிடும் திருப்பங்களோ, இரத்தம் உறையும் காட்சிகளோ படத்திலில்லை. ஆனால், பதட்டத்துடனே தான் ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். படத்தின் உண்மைத் தன்மைக்காக எதனோடும் சமரசம் செய்யாத இயக்குநர் மைக்கேல் விண்டர் பாட்டம்-ஐப் பாராட்ட வேண்டும்.
        படத்தில் ஜமாலாகவும், இனாயத்துல்லாவாகவும் வருகிற இருவரும் நடிகர்கள் அல்ல. அவர்கள் தான் நிஜ கதாபாத்திரங்கள்.(இனாயத்துல்லா இறந்துவிடுவதாகக் காட்டப்பட்டாலும், நிஜத்தில் திரும்ப பெஷாவர் அனுப்பப் படுகிறான்). இன்னமும் ஜமால் சவுத் ஈஸ்ட் லண்டன் பகுதியில் ‘தஞ்சமடைந்தவர் பட்டிய'லில் சேர்க்கும்படி இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்து விட்டுக் காத்துக் கொண்டிருக்கிறான்.
 பிறப்பும் இறப்பும் தீர்மானிக்க முடியாத நிலையற்ற ஒன்றாக இருப்பது இயற்கை. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் இருப்பே நிலையற்றது எனில் அது என்ன வாழ்க்கை?!

மைக்கேல் விண்டர் பாட்டம்:

இங்கிலாந்தின் லங்காஷையரில் பிறந்த விண்டர் பாட்டம் திரைப்படப் பள்ளியில் பயின்று, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். பிரபல திரைப்பட இயக்குநர் இங்க்மர் பெர்க்மன் பற்றி இரண்டு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு திரைத்துறையில் வர்த்தகரீதியாக சில படங்களை இயக்கினாலும், புறக்கணிக்கப்பட்ட மக்களைப்பற்றிய அக்கறையுடன் சில படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ‘வெல்கம் டூ சரஜேவா', ‘தி ரோட் குவாண்டனமோ' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. பாலஸ்தீனியர்களின் பிரச்சினைகள் குறித்த ‘தி பிராமிஸ் டு லேண்ட்' என்ற படத்தை தற்போது இயக்கி வருவதோடு, இந்தியாவின் ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு ‘திரிஷ்னா' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வியாழன், 9 ஜூன், 2011

THE POPE'S TOILET

       

        கடந்த ஆண்டு (2010) நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் வழக்கமாக இந்த இந்த நாடுகள் தான் கோப்பையை வெல்லும்; இந்த இந்த நாடுகள் தான் இறுதிப் போட்டிக்கு செல்லுமென ஊடகங்கள் ஆரூடங்கள் சொன்னபடி இருந்தன. அப்படிப் பட்டியலிடப்பட்ட நாடுகளில் பல, இறுதிச் சுற்றிலேயே மண்ணைக் கவ்வின. கொஞ்சமும் சளைக்காமல் ஊடகங்கள் ஜெர்மன் உயிரியல் காட்சியகத்திலிருந்த ‘பால்' என்கிற ஆக்டோபஸ்ஸின் காலில் சரணடைந்தன. “உங்கள் ஆரூடங்கள் என்னவாயிற்று?” என்று யாரும் கேட்டுவிடாத படிக்கு கனகச்சிதமாகத் திசைதிருப்பினர். இனி, பிரச்சினை பால்-ன் தலையில் விடிந்தது.
      பரபரப்புப் பத்திரிகைகள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ‘ஹீரோ' ஆக்கிவிடலாம் என்பதற்கான சான்றுதான் ‘ஆக்டோபஸ் பால்.' போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஜெர்மன், பிரேசில், அர்ஜெண்டினா நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் ஆக்டோபஸ் பாலைக் கொல்ல வேண்டுமெனக் கூக்குரலிட்டனர். பாவம், என்ன பாடு படுத்தினார்களோ தெரியவில்லை. பால், சென்ற நவம்பரில்(2010) இறந்துவிட்டது. ஒரு ஆக்டோபஸின் சராசரி ஆயுளை விடக் குறைந்த வயதில் அது இறந்து போனது. அது இறந்த பிறகும் ஆத்திரம் தீராத அர்ஜெண்டினா பயிற்சியாளரும், முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரருமான மாரடோனா “மிக்க மகிழ்ச்சி” என்றாராம்!
      ஆக்டபஸ் பால்-க்கும் ஜாம்பவான் நாடுகள் தோற்று வெளியேறியதற்கும், ஏதேனும் சம்மந்தம் உண்டா? மெத்தப் படித்த, மிதமிஞ்சிய நாகரீகம் மிக்க மனிதர்களின் பிற்போக்குத் தனம் எந்த விமர்சனமுமின்றி வெறும் செய்தியாக கடந்து போகிறது. விளிம்பு நிலைக்கு துரத்தப்பட்ட மக்களின் இயலாமை ஏதேனும் ஒரு தீர்வுக்காக ஒரு நம்பிக்கையைத் தொற்றிக் கொண்டிருந்தால் அது  மூடர்களின் செயல் என்று விமர்சிப்பதும் வர்க்க பேதம்தானோ...?!
 யாராலும் கணிக்க முடியாத் உருகுவே, நெதர்லாந்தையே திணறடித்தது. உருகுவே தென் அமெரிக்க நாடுகளில் இரண்டாவது மிகச்சிறிய நாடு. (மிகவும் சிறிய நாடு கரிநாம்... ஒருமுறை ஒலிம்பிக்கில் இந்தியா வெறுங்கையுடன் திரும்பியபோது ஒரு தங்கத்தை வென்ற குட்டி நாடு).
      உருகுவே நாட்டின் எல்லப்புற ஊரான ‘மெலோ'வுக்காக மற்றொரு ‘பால்' வருகையை (போப் இரண்டாம் ஜான் பால்) முன்னிட்டு, ‘மெலோ'வுக்கு மிக அருகிலிருந்த பிரேசில் பத்திரிகைகள் கிளப்பிய பூதாகரமான தோற்றமும், ஆரூடங்களும் எப்படி அந்தக் கிராமத்து மக்களின் வாழ்வைச் சின்னாபின்னப் படுத்தியது என்பதைக் கருவாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “த போப்ஸ் டாய்லட்”.
      1988-ம் வருடம் போப் இரண்டாம் ஜான்பால் உருகுவே வருவதாக அறிவிக்கப் பட்டதிலிருந்து அவர் வருகையை எதிர்நோக்கி ‘மெலோ' அல்லோகலப்படுகிறது.
       பிரேசிலின் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து ‘மெலோ'வுக்கு பிரேசிலிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் சுமார் ஐம்பதினாயிரம் பேர் வரக் கூடுமென்று அனுதினமும் தெரிவித்தபடியிருக்கின்றன. குறிப்பிட்ட தினத்தில் பிரத்யேக நிகழ்ச்சிகளும், நேரடி ஒளிபரப்புகளும் இருக்குமென அறிவிக்கின்றன.
      ‘மெலோ' கிராம மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள். உருகுவேயில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பது சட்டப்படிக் குற்றம். எல்லைப்புற ஊரான மெலோவுக்குப் பிரேசிலிலிருந்து தான் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் வந்தாக வேண்டும். சைக்கிளில் தான் பெரும்பாலான பொருட்கள் எடுத்து வரப்படும். அதுதான் செலவு குறைந்த எளிமையான போக்குவரத்து. மெலோ கிராமத்து ஆண்களில் பெரும்பாலோனோர், சைக்கிளில் பொருட்களை எடுத்து வந்து அதற்கான கூலி பெற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டு ஆடம்பர, அலங்காரப் பொருட்களைக் கடத்திவருவதுமுண்டு. உருகுவேயின் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இந்தச் சைக்கிள்காரர்கள் மேல் எப்போது ஒரு கண் உண்டு. குறுக்கு வழியில், வயல்களூடே மறைந்து மறைந்து வரும் அவர்கள், பிடிபட்டு விட்டால் சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களது பொருட்களைச் சிதைத்து, உடைத்துக் கீழே போட்டு விடுவதும், தங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்வதும் உண்டு.
      ‘பெடோ' என்பவன் இப்படிக் கடத்தல் வேலை செய்கிறவர்களில் ஒருவன்.  எப்படி மறைந்து மறைந்து வந்தாலும், ஏதோ ஒரு தருணத்தில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டுவதும் உண்டு.
      அப்படியான ஒரு சமயம், சுங்க அதிகாரிக்கு எப்படியாவது பெடோவைக் கைது செய்வது நோக்கமற்று, அவனைப் பணிய வைத்து, தனக்கான கடத்தல் வேலையை செய்ய வைக்க முயல்கிறார்.
      பெடோவின் மகள் சில்வியாவுக்கும், அவனது மனைவிக்கும் பெடோ கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சில்வியாவுக்கு எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிவிட வேண்டுமென்பது கனவு. கையில் கிடைக்கிற காகிதங்களைச் சுருட்டி, வாயருகே வைத்து தனிமையில் தொகுப்பாளரைப் போல் பேசி எப்போதும் பாவனை செய்து பழகியபடியிருக்கிறாள்.
      இச்சூழலில் போப் ஜான்பாலின் வருகையை ஒட்டி, மெலோவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற ஐம்பதினாயிரம் பேரைக் குறிவைத்து, மெலோ மக்கள் என்னென்ன வியாபாரம் செய்யலாமெனத் திட்டமிடுகின்றனர். பெரும்பாலானோர் திண்பண்டம், உணவுப் பொருட்கள் விற்க முடிவு செய்தனர்.
 பெடோவிற்கு வித்தியாசமான யோசனை தோன்றுகிறது. பொதுக் கழிப்பறை ஒன்றைக் கட்டி முடிந்தவரை கல்லாக் கட்டுவது என்று முடிவெடுக்கிறான். அவன் வீட்டிலும் கழிப்பறை வசதியில்லை. எனவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
      ஆனால், கழிப்பறை கட்ட போதிய பணமில்லை என்பதால் கடத்தல் தொழிலை இன்னும் சிறிது காலம் செய்வது; அதுவும் அந்த சுங்க அதிகாரிக்காகச் செய்வது; கழிப்பறை கட்டுவதற்கான தொகையை முன்பணமாக அவரிடமே பெறுவதெனத் திட்டமிடுகிறான். மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் அவருக்காகக் கடத்தல் தொழில் செய்கிறான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டு அவனே கழிப்பறைக்கும் வேலையைத் துவங்குகிறான்.
      சுற்றுச்சுவர், கூரை எனக் கொஞ்சம் கொஞ்சமாக எழும்புகிறது கழிப்பறை. இன்னும் ‘பேசின்' வைக்க வேண்டியதுதான் பாக்கி. இந்தச் சூழலில் அவன் அதிகாரிக்காகக் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது தெரிந்து கொண்ட சிவியாவும், அவன் மனைவியும் சண்டை போடுகிறார்கள். கழிப்பறை வந்துவிட்டால் அதில் கிடைக்கும் வருமானத்தில் ஏதேனும் தொழில் செய்யலாமெனச் சமாதானப் படுத்துகிறான் அவர்களை.
      சில்வியாவோ தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காகச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, பேசின் வாங்கிவந்து கழிப்பறை வேலையை முடிக்கும் படியும், இனி கடத்தல் தொழில் செய்ய வேண்டாமென்றும் கண்டிப்புடன் கூறுகிறாள். ஒப்புக் கொண்ட பெடோ, அதிகாரியிடம் சென்று, இனி கடத்தல் தொழில் செய்ய முடியாதெனக் கூறித் திரும்புகிறான்.
       போப் வரும் நாள் வந்து விட்டது. பிரேசில் சென்று பேசின் வாங்கி சைக்கிளில் திரும்பும் போது அதிகாரியால் வழிமறிக்கப் படுகிறான் பெடோ. சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு செல்கிறார் அவர். பேசினைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து ஊரையடைந்து பொருத்திவிடுகிறான். போப் வந்து விடுகிறார். ஆனால் கொஞ்சமும் எதிர்பாராமல் முந்நூற்று சொச்சம் பேரே அங்கு வந்திருந்தனர்.
      போப் பத்து நிமிடம் மட்டுமே மேடையேறிப் பேசிவிட்டு, பின் இறங்கிப்போய் விடுகிறார். பெடோ, அங்கு குழுமிய கூட்டத்தில் சிலரை ஓடி ஓடிக் கழிப்பறையைப் பயன்படுத்தும்படிக் கெஞ்சுகிறான். குறைந்த நேர நிகழ்ச்சி என்பதால், எவரும் அவனைப் பொருட்படுத்தாமல் கலைகின்றனர்.
 கழிப்பறை மட்டும் எஞ்சுகிறது. சில்வியாவின் உயர்கல்வி கனவு கலைந்து போகிறது. அப்பாவுக்குத் துணையாக நேர்மையான முறையில் தொழில் செய்ய பெடோவுடன் நடந்தே செல்கிறாள்.
      உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘சிட்டி ஆஃப் காட்'-ன் ஒளிப்பதிவாளர் சீஸர் சார்லோன் உருகுவேயில் பிறந்து பிரேசிலில் வசிப்பவர். அவர் 1988-ல் போப் மெலோ வந்த போது எதேச்சையாகப் பதிவு செய்த ஒளிப்படக் காட்சி, மற்றும் மெலோ மக்கள் ஏமாந்து போன உண்மைச் சம்பவம் ஆகியவற்றை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கினார். மெலோவைச் சேர்ந்த என்ரிக் ஃபெர்ணாண்டஸ் என்பவரோடு சேர்ந்து இப்படத்தை இயக்கினார். ‘சிட்டி ஆஃப் காட்' படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
      பெடோவும் அவனது நண்பர்களும் கடத்தல் பொருள்களுடன் சைக்கிளில் வயல்வெளிகளில் புகுந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சியில், மிக அற்புதமான நிலக் காட்சிகளை வெவ்வேறு சிறந்த கோணங்களில் பதிவு செய்த கேமரா, கதையோட்டத்துக்குத் தக்கவாறு நேர்த்தியாக பிரயாணிக்கிறது.
       சடையர் (Satire) என்று சொல்லப்படும் எள்ளல் பாணித் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் ‘த போப்'ஸ் டாய்லட்'. எளிமையான மூலக்கதையை மெருகேற்றி அழகான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
      கழிப்பறை கட்டப்பட்ட பின் வரும் கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்று  பெடோ, மகள் சில்வியாவுக்கும், மனைவிக்கும் நடித்துக் காட்டும் காட்சி நகைச்சுவையான சிறப்பான காட்சி.
      கூட்டத்தை வரிசையில் நிற்கும்படிக் கட்டுப்படுத்துவது போலவும், கழிப்பறைக்குள் இருப்பவரை எப்படித் தட்டி அழைப்பது என்றும் பெடோ நடித்துக் காட்டும் காட்சியில், ‘சீஸர் ட்ரான்சானிகோ' பிரமாதப்படுத்தியிருப்பார். இயல்பில் நாடக நடிகரான அவர், இலாவகமாக நடிப்புத் திறனை அக்காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார்.
      போப் வந்து சென்ற பிறகு மெலோ மக்கள் விற்காத உணவுப் பொருட்களை வீதியில் வீசியெறிந்து விட்டு நகர்வதும், மீண்டும் தொலைக்காட்சி நிறுவனங்கள் போப் வருகையை ‘ஆஹா ஓஹோ' எனப் புகழ்ந்து ஒளிபரப்பும் போது பெடோ ஆத்திரமடைந்து தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் காட்சியும், அந்தச் சமூகத்தின் மீதான காட்சி ரீதியிலான விமர்சனமென்றே கூறலாம். மிகைப்படுத்தப் படாத யதார்த்தமான திரைக்கதை அமைப்பில் படம் மனதில் கிளர்ச்சியூட்டாத படிப்பினையை ஏற்படுத்தி விடுகிறது.
      ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்ட இப்படம், கடைசியில் அதன் தலைப்பு காரணமாக நிராகரிக்கப் பட்டது.
      உருகுவேயின் வாழ்வியல் சூழல், ஊடகங்களின் அதீத பரபரப்பு, மதத்தின் மீதான சரியான விமர்சனமாக இப்படம் அமைந்திருக்கிறது.
 பீடங்கள், பொய்யுரைகள், பணம் பண்ணும் மாய்மாலங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடலாம். ஆனால், ஏமாளிகளாய் இருக்கும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் எஞ்சியிருப்பவை நிறைவேறாக் கனவுகள் மட்டுமே.

சீஸர் சார்லோன்:

      1958-ம் வருடம் உருகுவேயில் பிறந்து வளர்ந்த சீஸர், ஒளிப்பதிவுத் துறையில் கொண்ட அதீத ஆர்வம் காரணமாக, அதற்கு வாய்ப்புகள் மிகுந்த பக்கத்து நாடான பிரேசிலில் தற்போது வசிக்கிறார். “சிட்டி ஆஃப் காட்” படத்தில் பணியாற்றியதற்காக தற்போது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர். ஒளிப்பதிவு, இயக்கம், திரைக்கதையாசிரியர், நடிகர் என்று பல பரிமாணங்கள் உடையவர். போப் வருகைக்கு மெலோ கிராம மக்கள் ஆற்றிய எதிர்வினையை நேரில் காணும் சந்தர்ப்பம் அவருக்கு. அதை, மிகச் சாதாரணமான கையடக்க கேமராவில் பதிவு செய்தவர். பிறகு, அவற்றை ஒருங்கிணைத்து, தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு திரைக்கதையை உருவாக்கினார். மிகக் குறைந்த செலவில் இப்படத்தை எடுத்து முடித்த அவருக்கு ஆஸ்கரை வழங்கி வரும் நிறுவனம், தனது நிறுவன சிறப்பு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கியது.

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...