கலகக்கார கலைஞர்கள் - 1
“ கலவர பூமியில் ஒரு பத்திரிகையாளனோ, புகைப்படக் கலைஞனோ பயணிப்பது என்பது பசி மிகுந்த சிங்கத்தின் குரல்வளைக்கு கீழே பயணிப்பது போல.. எப்போது வேண்டுமானாலும் அது விழுங்கிவிடும்...”
நம் இந்தியச் சூழலில் ‘கலகம்' என்ற சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘புரட்சி' என்ற சொல் தவறாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான எந்த சூழலையும் குலைக்க நினைப்பவர்களை ‘கலகக்காரர்கள்' என்றே அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையில் நிகழ் சமூகம் ஒட்டுமொத்தமாக அநீதியாக காணப்படும்போது அதனை அப்படியே புரட்டிப்போடுவது ‘புரட்சி' என்றும், அசந்தர்ப்பமான சூழலில், அதன் கால நிலை கருதி
எழும் எதிர் குரலை
‘கலகம்' என்றும் புரிந்துகொள்வோம்.
எங்கெல்லாம் மனசாட்சிக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் தங்களுக்கு ஏதுவான வழியில் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் அனைவரும் கலகக்காரர்களே.அந்த வகையில் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள்
படைப்புகளில் எப்படியாகிலும் எதிர்குரலை பதிவு செய்தபடிதான் இருக்கிறார்கள்.
திரைப்படத்துறை என்பது பெருமளவில் பணமும், புகழும் புரளும் இடம் என்பதால் அங்கே
பலரும் தங்கள் உணர்வுகளை அழுத்திக்கொண்டு எல்லாவற்றோடும் இயைந்தே இருப்பார்கள். ஆனால் மெய்யான கலைஞர்கள் எல்லா கட்டுக்களையும் மீறி கலகக்காரர்களாக இயங்குவார்கள். அதன் காரணமாக தங்கள் உயிரை,
வாழ்வை, உறுப்புகளை இழந்தவர்கள் அனேகம்.
அப்படியான கலைஞர்கள் சிலரை பற்றிய எளிய அறிமுகமே இத்தொடர்....
2009-ஆம் ஆண்டு செப்டெம்பர் 2-ந்தேதி எல்சால்வடார் நாட்டின் தலைநகர் சான்சல்வடாரிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள டான்கேட்பேவிலிருந்து கிறிஸ்டியன் பவெடா தனியே காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது
ஆவணப்படம் ‘லா விடா லோகா' அன்றுதான் டான்கேட்பேயில் திரையிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல்கள் இன்னபிற அச்சுறுத்தல்கள் இருந்த
சூழலில் அவர் அவ்வாறு தனியாக பயணித்திருக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்டியன் பவெடாவுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிட்டது. ‘லா விடா லோகா' ஆவணப்படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் அவர் முடிக்கவேண்டியிருந்தது. ஆனால் படப்பிடிப்பு சமயங்களில் அவரது பயணத்திட்டம், படப்பிடிப்புத்தளங்கள் ஆகியன வேறு யாராலும்
யூகிக்க முடியாத அளவு ரகசியமாகவே இருந்தது. ஆனால்
படம் வெளிவந்ததும் அவர் அசாத்திய துணிச்சலுடன் எல் சால்வடார் எங்கும் பயணிக்க தொடங்கிவிட்டார். ஆனால் எதிரிகள் அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
டான்கேட்பேவிலிருந்து தனியே திரும்பிக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத சிலர்
சூழ்ந்துகொண்டு சுட்டுக்கொன்றார்கள். தலையில் பலமுறை
சுடப்பட்ட நிலையில் காரில்
பிணமாகக்கிடந்தது சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆவணப்படம் ‘லா விடா லோகா'
எல் சால்வடாரில் கோலோச்சிக் கொண்டிருந்த ‘மரியா சல்வாருச்சா' என்ற குழுவினர் நடத்திய படுகொலைகள், பலாத்காரங்கள், ஆள் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் பற்றி வெளிச்சமிட்டுக்காட்டியதுதான் அவரது கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
‘மரியா சல்வாருச்சா' எனப்படும் M.S 13 என்ற குழு உண்மையில் எல் சல்வடாரில் துவக்கப்படவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 80-களில் துவங்கி அமெரிக்கவின் 37 மாநிலங்களில் கிளைத்த அபாயகரமான விடலைக்குழு. அது துவங்கப்பட்ட காரணத்தை பற்றி அறிந்து கொள்ள சில வருடங்கள் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்..
எல் சால்வடார் நம் தமிழகத்தின் மக்கள் தொகை அளவே கொண்ட மிகச்சிறிய நாடு ( 2009 மக்கள் தொகை கணக்குப்படி
5 கோடியே 77 லட்சம் பேர்தான் )
எல் சால்வடாரின் மக்களை பூர்வகுடி அமெரிக்கன்கள், ஐரோப்பிய குடியேறிகள் என இரண்டு பிரிவாக சுருக்கிவிடலாம். சால்வடாரின் இயற்கை வளங்கள், மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக
அவ்வப்போது குமுறும் எரிமலைகள் காரணமாக இருந்தன. எனவே அடிப்படை வேலைவாய்ப்புகள், கல்வி, தொழிற்சாலைகள் இல்லாமை காரணமாக பெரும்பாலானோர் அமெரிக்காவை நோக்கி இடம் பெயரத்தொடங்கினர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது இடத்தில் சால்வடேரியன்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டினரிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்காக எனக் கூறித்தான் மரியா
சால்வருச்சா குழு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 13 வது தெருவில் துவங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழுவின் செயல்பாடுகளுக்காக தேவைப்படும் நிதியைத் திரட்ட வாகனத் திருட்டு, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல் , ஆயுதக்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடத்துவங்கினர். ஆனால் நாளடைவில் கேளிக்கைகள், மற்றவர்கள் பயந்து விலகிச் செல்வதில் கிடைக்கும் குரூர
திருப்தி காரணமாக வேலையற்ற இளைஞர்கள் பலர் அதில்
சேர்ந்து பல வன்முறைச்செயல்களில் ஈடுபட்டனர்.
அமெரிக்கவில் துவங்கப்பட்ட இந்த குழு கனடா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, குவாதிமாலா, ஆஸ்திரேலியா என பரவத்தொடங்கினர். அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு பெரும்
தலைவலியாக மாறிப்போன அவர்களை தேடி அமெரிக்க அதிகாரிகள் வேட்டையாடத்தொடங்கினர். கைதானவர்களை எல் சால்வடாருக்கு திருப்பியனுப்பினர். அமெரிக்காவிலிருந்து தாயகம்
திரும்பிய அவர்கள் தங்கள்
குற்றச்செயல்களை சொந்த நாட்டிலும் அரங்கேற்றினர்.
தங்கள் முகத்திலும், கைகளிலும் டாட்டூஸ் எனப்படும் வினோத உருவங்களை பச்சைக்குத்திக்கொண்ட அவர்கள் கொலை,
கொள்ளை, கடத்தல் போன்றவற்றை இரக்கமற்ற முறையில் நடத்தினர். போதாதற்கு 90-களில் அதே லாஸ் ஏஞ்சல்ஸ்-சில் துவக்கப்பட்ட மாரா18 என்ற குழுவும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை
என்பது போல வன்முறை வெறியாட்டங்களை சல்வடாரிலும் , அமெரிக்கவிலும் நிகழ்த்தினர். குறிப்பாக 13லிருந்து 20 வயது வரையிலான இளம்பிராயத்தினர்தான் அதிகம்
இந்த குழுக்களில் சேரத் தொடங்கினர். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்களை அந்த குழுக்கள் ஈர்த்த காரணம்.. போதைமருந்துகள், எந்த வேலைக்கும் போகாமலேயே கையில் புரளும் பணம், கட்டுப்பாடுகளற்ற பாலியல் தொடர்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தவர்களை மிரட்டுவதில் கிடைக்கும் அளவற்ற ஆனந்தம் ஆகியவையே.. மற்றபடி இந்த குழுக்கள் வேறு எந்த உயர்ந்த லட்சியங்களையும் முன் வைக்கவில்லை..
ஒருகட்டத்தில் மாதத்திற்கு 300 கொலைகள் வீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது
சராசரியாக தினம் 10 கொலைகள். பவெடா கொலையில் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் கொஞ்சமும் அச்சமின்றி இன்றைய 10 பேர் பட்டியலில் பவெடாவின் பெயரும் இருந்திருக்கிறது போலும் என்று
சொன்னானாம்.. எனில் எல்சால்வடாரின் அன்றைய
கொடூரமான சூழலை கற்பனை
செய்து பார்க்கலாம்.. வேடிக்கை என்னவென்றால் எல் சால்வடார் என்றால் அவர்களது பாரம்பரிய மொழியில் 'பாதுகாப்பான தேசம்' என்று பொருளாம்..
கிறிஸ்டியன் பவெடாவுக்கு இந்தச் சூழல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.. ஒட்டு மொத்தமாக ஒரு தலைமுறையே உழைக்கவோ, கல்வி கற்கவோ
விரும்பாமல், காட்டுமிராண்டித்தனமாக அடுத்தவர்களை அடித்துப்பிடுங்கி, அச்சுறுத்தி வாழ்வது அந்த தேசத்தையே சீரழித்துவிடும் என்று உணர்ந்தார். இத்தனைக்கும் அவர் எல்சல்வடார் நாட்டை சேர்ந்தவர் இல்லை.
1957 ஆம் ஆண்டு ஜனவரி
12-ந்தேதி அல்ஜீரியாவில் பிறந்தவர் பவெடா.
ஒரு சிலர் அவர் பிறந்த வருடம் 1955 என்று சொல்கிறார்கள். பவெடாவின் தாய் வழி மற்றும் தந்தை வழி பாட்டனார்கள் இருவரும் அரசியலில் சித்தாந்த ரீதியாகவே வெவ்வேறான கருத்து உடையவர்கள். ஒருவர் ‘அரசு' என்ற ஒன்றே தேவையற்றது மக்கள் கூட்டாட்சியாக இருக்கவேண்டும் என சொல்பவர், மற்றவர் தீவிர பொது உடைமைவாதி.. இருவருக்குமான கருத்து மோதல்களுக்கு இடையேதான் பவெடா வளர்ந்தார். இருவரின் வாதங்களில் ஈர்க்கப்பட்ட பவெடா
இயல்பிலேயே சமூக அக்கறையுடன் இயங்கிவந்தார், அவரது குடும்பம் ஸ்பெயினிலிருந்து அல்ஜீரியாவுக்கு இடம் பெயர்ந்த பல குடும்பங்களில் ஒன்று. அல்ஜீரிய விடுதலைக்குப்பின் ஃபிரான்ஸில் குடியேறினர்.
பவெடாவின் 19 ஆம் வயதில் புகைப்படங்கள் விற்பனையாளராக இருந்தார். அதன் பிறகு அந்த கலையின் மீது இருந்த ஆர்வம்
காரணமாக புகைப்படக்காரனாக மாறினார். ஆனால்
அவரது நாட்டம் வர்த்தக ரீதியான புகைப்படங்கள் எடுப்பதில் இல்லை.
அப்போது லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்கள் மீது கவனம்
குவிந்தது.
ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட
பவெடா இயல்பிலேயே துணிச்சலானவர். அவருடன் பல்வேறு யுத்தபூமிக்கு பிரயாணித்த நிக் பிரேஸர் என்ற மற்றொரு புகைப்படக்காரர் “நான் பணியாற்றியதிலேயே பவெடா
போல நெஞ்சுரம் மிக்க வேறொருவரை கண்டதில்லை. பல சமயங்களில் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்தும் எந்த சலனமுமின்றி அங்கே பயணிப்பார்
மக்களுக்கு நன்மைபயக்கும் செயலுக்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருக்குமெனில் அதற்காக 99 சதவிகிதம் உயிரை பணயம்
வைக்கலாம் என்பார்” என்று
வியப்போடு குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் மேட்ச்,
டைம் போன்ற பத்திரிகைகளில் அவரது
புகைப்படங்கள் வெளியாகி மிகப்பிரபலமாகி இருந்தார்.
1980 களில் அவருக்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் நாட்டம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த களங்களில் அவரது ஆவண முயற்சி இருந்தது. போகப்போக யுத்தங்கள், கலவரங்களின் போது உண்மை நிலவரத்தை வெளிக்கொணரும் பணியை
தனது கடமையாகக் கருதினார்.
சிலி, மெக்ஸிகோ, குவாதிமாலா என்று பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அவர் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்ட போது மகிழ்வோடு அதை எதிர்கொண்டார். ஏனெனில் அவருக்கு எல்சல்வடார் நாட்டில் வசிக்க
பெரும் ஆவல் இருந்தது. குடும்ப பந்தம் என்பது
அதற்கு தடையாக இருப்பதாக அவருக்குத் தோன்றியது. என்ன காரணத்தினாலோ எல்சல்வடார் அவருக்கு பிரியமான தேசமாக இருந்தது.
அவருக்கு இருந்த பணப்பயன் மிகுந்த வேலைவாய்ப்புகள், புகழ் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு எல்சல்வடாரில் குடியேறினார். அங்கு நிகழ்ந்த குழுச்சண்டைகள், பாலியல் கொடுமைகள், இளவயது மரணங்கள், எதிர்காலம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் குழுக்களுக்கு அடிமையாக போதையின் பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறை என எல்லாம் அவரை கவலையில் ஆழ்த்தின.
எல் சல்வடாரின் வன்முறைக்குழுக்களின் செயல்பாடுகளால் இளமையை
தொலைத்த ஒரு தலைமுறை பற்றி வரும் தலைமுறைக்கு எச்சரிக்கை செய்யவேண்டும் என அவருக்கு தோன்றியது. இரும்புகோட்டையாக விளங்கிய இரண்டு குழுக்களிலும் என்ன நடக்கிறது என்பது பற்றி
எல்லோரும் சொல்ல அஞ்சினர். குழுவிலிருந்து வெளியேறியவர்கள் வாய்திறக்க பயந்தனர் வெளியேற்றப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. இந்த சூழலில் அவர்களைப்பற்றி வெளிப்படையாக ஒரு ஆவணப்படம் என்பது பெரும்
சவாலாகவே இருந்தது.
2005-ல் முயற்சிக்கத் துவங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் குழுக்களின் அச்சுறுத்தல்கள், பணப்பற்றாக்குறை, உடன் பணியாற்ற தயங்கிய தொழில்நுட்பக்காரர்கள், இயற்கை தடங்கல்கள், பேசப்பயந்த மக்கள் என எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் முறியடித்து 2008-ல் சான் செபஸ்டின் உலகத்திரைப்படவிழாவில் படம் வெளிவந்தது. அந்தப்படம் அந்த குழுவினர் பற்றி வெளிவராத அதிர்ச்சியளிக்கும் அரியத்தகவல்களுடன் 90 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. பொதுவாக திரைப்படங்களுக்குத்தான் திருட்டு டி.வி.டி.கள் வரும். ஆனால் இந்த ஆவணப்படத்தின் திருட்டு டி.வி.டிகள் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் எங்கும் பரவின.
படத்தை எடுத்த போதும்
, படம் வெளிவந்தபிறகும் அவரது நண்பர்களும், அவரது எதிரிகளும் சொன்ன ஒரே விஷயம் அவர் எல்சல்வடாரிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்பதே.. ஒரு தரப்பு அன்பின் மிகுதியாலும் மற்றொன்று அச்சுறுத்தலாகவும் அந்த கோரிக்கையை வைத்தன.
பவெடா நினைத்திருந்தால் இதை விட எளிதான சுகமான பிரபல்யம்
வாய்ந்த வாழ்க்கை அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கு எல்சல்வடார் மீது இருந்த
அக்கறை, அந்த சமூகத்தின்பால் கொண்டிருந்த கவலை, இளைய தலைமுறை மீது கொண்டிருந்த பரிவு அவரை அனாதை போல இறக்க வைத்தது.
ஆனால்
அவர் மீது அன்புகொண்ட புகைப்பட மற்றும் திரை கலைஞர்கள் செப்டெம்பர் 2-ல் அவரது நினைவஞ்சலி கூட்டங்களில் அவரது
பொறுப்பு மிக்க கலை உணர்வை போற்றுகின்றனர். அவரது ‘லா விடா லோகா' ஆவணப்படம் இன்றைக்கும் லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள திரைப்பட கல்லூரிகளில் தவறாது திரையிடப்படுகிறது. அவரது
ஆவணப்படம் வெறும் பரபரப்பு கருதி உருவாக்கப்பட்ட படம் இல்லை
. அது ஒரு சமூக எச்சரிக்கை பதிவு. அதற்காக தன் உயிரையே பணயம்
வைத்த கிறிஸ்டியன் பவெடா ஒரு கலகக்காரரே..
- நன்றி : நிழல் ( மாற்று சினிமா இதழ் )
- நன்றி : நிழல் ( மாற்று சினிமா இதழ் )