கா ... கா...
காகம்
-நெய்வேலி
பாரதிக்குமார்.
அந்தக்
காகத்திற்கு தான் காக்கை இனத்தில் பிறந்ததன் வருத்தத்தை தாங்கவே முடியவில்லை. தனது
கருப்பு நிறத்தைப் பார்க்கும் போதெல்லாம் துக்கம் மிகுந்து தனிமையில் ‘கரைய’
தொடங்கியது. குளத்தங்கரையில் திரியும் கொக்குகளைப் பார்த்து அதன் ஆதங்கம்
அதிகரித்தது.
கடவுளை நோக்கி தவமிருந்தது. கடவுளும் பிரசன்னமானார். ‘தானும் கொக்கைப் போலவே வெள்ளையாக மாற வேண்டு'மென்று
கேட்டது.
‘ஏதேனுமோர் கொக்கு முழுமனதோடு காகமாக மாற சம்மதித்தால் அது காகமாகவும்
நீ கொக்காகவும் மாறலாம்' என்ற நிபந்தனையோடு கடவுளும் வரம்
கொடுத்தார்.
மெலிந்து சோர்வுற்று இருந்த ஒரே ஒரு கொக்கு மட்டும் காகமாக மாற
சம்மதித்தது. மகிழ்ச்சியோடு இரண்டும் ஒரு நாள் கடவுளை நினைத்து தியானித்து கொக்கு
காகமாகவும் காகம் கொக்காகவும் மாறிக்கொண்டன.
கொக்காக மாறிய காகம் மகிழ்ச்சியின் எல்லையில் துள்ளிக் குதித்தபடி
இங்கும் அங்குமாக சில காலம் ஓடிக்கொண்டிருந்தது. நாளாக நாளாக குளம் வற்றி இரை
இல்லாமல் எல்லாக் கொக்குகளும் வாடிவதங்கின. காகமாக இருந்தவரை மனிதர்கள் ஆளாளுக்கு
கா... கா... என்று வருந்தி வருந்தி அழைத்து உணவிட்டது ஞாபகம் வந்தது.
அதுமட்டுமல்லாமல், சிறிது இரை கிடைத்தாலும் சக காக்கைகள்
கூப்பிட்டு, பங்கிட்டுக் கொள்வதும் நினைவுக்கு
வந்தது. ஆனால் கொக்காக மாறிய பிறகு அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. போகப்போக
உயிர்வாழ்தலே கேள்விக்குறியாகி விடும் போலிருந்தது.
மறுபடியும் கடவுளிடம் வரம் கேட்டு தவமிருந்தது. திரும்பவும் கடவுள்
வந்தார். தான் மறுபடியும் காகமாக மாற வரம் கேட்டது. கடவுளும் பழையபடி
மாறிக்கொள்ளும் நிபந்தனையைக் கூறி வரம்
தந்து விட்டு மறைந்தார்.
அன்றிலிருந்து போகிற வருகிற காக்கைகளை நிறுத்தி ‘உங்களில் யாருக்காவது கொக்காக மாற ஆசையா?' என்று
கேட்டது.
எந்தக் காகமும் ஒப்புக்கொள்ளவில்லை.
“சரி, கொக்கிலிருந்து மாறிய காகம் எங்கே?”
என்று கேட்டது.
“தெரியாது” என்றபடி பறந்து சென்றன.
கொக்கிலிருந்து மாறிய காகமும் நன்கு உடல் பருத்து இருந்தது. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத
அக்காகம் கேட்டது, “ஏன் நீ அழகாக, நன்றாக,
வெள்ளையாகத்தானே இருக்கிறாய்? எதற்காக
காகமாக மாற ஆசைப்படுகிறாய்?”
“அழகாய் இருந்து என்ன செய்வது? வயிறு
காயுதே...”
“உன்னை யாரும் கூப்பிட்டு சோறு வைப்பதில்லையா?”
“அந்தக் கொடுப்பினை கொக்குகளுக்கு இல்லை. கொக்கிலிருந்து மாறிய
காகத்தை உனக்குத் தெரியுமா?”
மனதுக்குள் சிரித்தபடி, “எனக்குத்
தெரியாது. ஆனால், அதைக் கண்டுபிடிக்க ஒரு
வழியிருக்கிறது. கொக்காக இருந்து மாறியதால், அந்தக்
காக்கைக்கு ‘கா... கா...' என்று
கத்தத் தெரியாதாம். எந்தக் காக்கா கா... கா... என்று கத்தவில்லையோ அதுதான் நீ
தேடும் காகம்.” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
அன்றிலிருந்து கா... கா... என்று கத்தாத காகத்தை எதிர்பார்த்து
ஒற்றைக் காலில் நிற்கத் தொடங்கியது கொக்கு.
அன்றிலிருந்து எந்த இடத்தில் இருந்தாலும், காக்கைகள்
மறக்காமல் ‘கா... கா... என்றே கத்திக்கொண்டே
இருக்கின்றனவாம்.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு
ஆசைப்பட்டதால் கொக்கு தன் உருவத்தை இழந்து உணவு தேடும் பழக்கத்தை மறந்து
தவித்துக்கொண்டே ஒற்றைக்காலில் தவம் இருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>