நான்தான்!
-நெய்வேலி பாரதிக்குமார்
மலை
முகட்டில் ஒட்டிக்கொண்டிருந்த மண் துகளொன்று பூமியைப் பார்த்தபடி இருந்தது.
பூமியில் படிந்து கிடந்த மண் துகளொன்று மலைமுகட்டில் இருந்த மண் துகளைப்
பார்த்துச் சொன்னது: “நான்தான் இந்த பூமியின் சகல
பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.”
“அப்படியா... நான் இந்த மாபெரும் மலையின் சிறுதுகள்.”
“அந்த மலையையும் தாங்கிக் கொண்டிருப்பது நான்தான்.”
அந்த வழியாக ஒரு சிங்கம் வந்தது. அதன் பாதங்கள்
பூமியில் பதிந்த வேகத்தில் புழுதி பறந்து அந்த மண்துகள் சிங்கத்தின் பிடரியில்
அமர்ந்தது.
அட்டகாசமாகச் சிரித்த அந்த மண்துகள் மலைமுகட்டில்
இருந்த மண்துகளைப் பார்த்து “இதோ பார் காட்டின் ராஜா என்னைச் சுமந்து
கொண்டிருக்கிறார். நீ மலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுதுகள்” என்று ஏளனமாகச்
சொன்னது.
சில காலம் கழித்து வீசிய புயல் காற்றில் பூமியிலிருந்து பறந்து சென்ற
மண்துகள் மேலேறி மலையுச்சியில் ஒட்டிக் கொண்டது.
ஏற்கெனவே
ஒட்டிக்கொண்டிருந்த மண் துகளைப் பார்த்து இறுமாப்புடன் சொன்னது: “இப்பொழுது நான் உன்னைவிட உயரத்திலிருக்கிறேன்” என்பதோடு
நிற்காமல் வானத்தில் திரண்டிருந்த மேகக்கூட்டத்தைப் பார்த்து “மேகமே.. மேகமே..
நான் தரையிலுமிருப்பேன்.. மலையிலும் இருப்பேன்.. நீங்கள் வானத்தில் மட்டும்தான்
ஓடிக்கொண்டு இருப்பீர்கள்” என்று எகத்தாளமாக சொன்னது. .
மேகங்கள்
கோபத்தில் கருத்து திரண்டன. அதன் காரணமாக பெய்த மழையில் மலையில் நீர் நிரம்பி அருவியாகக்
கொட்டியது. அருவியின் வேகத்தில் இரண்டு மண் துகள்களும் கீழே நதியில் விழுந்து பின்
நதியின் ஓட்டத்தில் கடலில் கலந்தன. மலைமுகட்டில் முன்னதாக ஒட்டியிருந்த மண்துகள்
சொன்னது: “வாயை மூடிக்கொண்டு நீ
இருந்திருக்கலாம். உன் ஆணவப் பேச்சால் இருவரும் கடலுக்கடியில் கிடக்கிறோம்”.
“யார் சொன்னது? நான்தான் இப்பொழுது கடலைத் தாங்கிக்
கொண்டு....”
என்று
சொல்லி முடிக்குமுன் அலை அந்த மண்துகளை இழுத்துக் கொண்டு வெளியே கரையில் போட்டது.
திரும்ப வாய் திறப்பதற்குள் மறுபடி கடலுக்குள் இழுத்துப் போட்டது. இனியொருபோதும்
பேசமுடியாதபடி அலை அந்த மண் துகளை உள்ளிழுப்பதும் வெளியே தள்ளுவதுமாக
அலைகழித்தபடியே இருந்தது. மெளனமாயிருந்த மண்துகள், கடலுக்கடியில்
பவளப்பாறையில் மினுமினுத்தபடி கதகதப்பாய் கிடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>