ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பிரிதலும்.... சேர்தலும்....

                பிரிதலும்.... சேர்தலும்....
                                                                - நெய்வேலி பாரதிக்குமார்

                காற்று கரைத்திருக்குமோ
                இலையின் பச்சையை....?
                சேலை உருவப்பட்ட பாஞ்சாலியாய் படபடத்தது
                தரையில் கிடந்த சருகு....

                எந்த இடத்தில்  மறைந்திருக்கும்
                என் அதிகாலை மலர்ச்சி?
                என்ற இடையறாத துக்கத்தோடு
                வாடி வதங்கிக் கிடந்தது மல்லி...

                எங்குச் சென்று ஒளிந்திருக்கும்
                காலையில் கேட்ட ஆலயமணியொலி?
               
                எந்த நொடியில் கரிந்திருக்கும்
                வானிலிருந்து விழுந்த எரிநட்சத்திரம்?

                என்ன சொல்லி பிரிந்திருக்கும்
                மேகத்திலிருந்து நழுவி வந்த அந்தத் துளி?

                எல்லா கேள்விகளையும் சுமந்துகொண்டு
                காத்திருக்கும் விழிகளில்
                எல்லாமும் தெரிகின்றன
               
                ஏதோ ஒரு ஜீவனின்
                காத்திருத்தலை நிறைவு செய்ய
                எதனிடமிருந்தாவது
                ஏதேனும் ஒன்று
                விலகி வரத்தான் வர வேண்டியிருக்கிறது...
*******************************************************************
சொந்தத் தலைப்பில் ஒரு கவிதை...

பரிமா(ஆ) றுதல்
                                                                              

                ஆவி பறந்த தட்டில் இன்னொன்று விழாதா?
                என்று ஆவலோடு நோக்குகையில்
                கறாராய் வந்தது சொம்புநீர்
                கை கழுவுவதற்காக...

                ஒவ்வொரு முறை சாலையை
                கடக்கும்போதும் மிரட்டியது.,
                இனிப்பகங்களை அடுத்து அமைந்த
                இரத்த பரிசோதனை நிலையங்கள்....

                ஆசுவாசமாய் அருந்தமுடியவில்லை
                என்னுடல் வெய்யிலைக்
                குடிக்கும் ஒரு குளிர்பானத்தை...

                தெரிந்தவர் அறிந்தவர் விருந்துகளில்
                இனிப்புகளை பரிமாறுகிறவர்கள்
                கவனமாக தாண்டிச்செல்கிறார்கள்
                “ உங்களுக்குத்தான் ஒத்துக்காதே
                என்ற பரிதாபக்குரலுடன்...

                மதுபானக் கடையில் நிற்பதுபோல்
                மறைந்து மறைந்து நிற்கவேண்டியிருக்கிறது
                டிகிரி காபிக் கடையில்...

                பேத்தியின் வருகைக்காக காத்திருக்கிறேன்
                கடைசியாக கற்றுத்தந்த
                ‘காக்காய் கடிமிட்டாய்
  பரிமாறும் விளையாட்டை
                அவள் மறவாதிருக்கவேண்டும்...
*****************************************************






செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

எல்லாத் தடைகளையும் தாண்டி ...

கலகக்காரக் கலைஞர்கள்-5
                                    

மன்ஹாஸ் மஹம்மதி ( ஈரான்)



            2011 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி டெஹ்ரான் நகரில் ஈரானிய பெண் இயக்குனர் மன்ஹாஸ் மஹம்மதி மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவர் கைது செய்யப்பட்டதற்கு உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஈரானின்  விளையாட்டுத்துறையின் ஒரே புகைப்படக்கலைஞரும், பெண்ணுரிமைப் போராளியுமான மரியம் மஜித் கைது செய்யப்பட்டிருந்தார். மரியம் மஜித் ஜெர்மனியில் நடைபெறவிருந்த உலக பெண்கள் கால்பந்து போட்டி நிகழ்வுகளை புகைப்படம் எடுப்பதற்காக ஜெர்மன் கிளம்புவதற்கு சில மணி நேரம் முன்பாக கைது நடவடிக்கை நிகழ்ந்தது.
            காரணமற்ற கைதுகள், சமூகப் போராளிகள் வெளி நாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பயணம் தடை செய்யப்படுவது என்பது ஈரானில் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்த சமயம் அது. மன்ஹாஸ் மஹம்மதி பிரதான வேடத்தில் நடித்திருந்த "Wedding Ephemerals"'  என்ற திரைப்படம் கேன்ஸ் படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த படத்தை ஈரானின்  மற்றொரு பெண் இயக்குனர்  ரேசா இயக்கி இருந்தார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்ட போது சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்ள மஹம்மதிக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால் அந்த விழாவுக்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
            ஜனவரி 1, 1975 ஆம் ஆண்டு டெஹ்ரானில் பிறந்த  மஹம்மதி ஒரு நடிகையல்ல. இயக்குவதில்தான் அவருக்கு நாட்டம் அதிகம். குறிப்பாக ஆவணப்படங்கள் மூலம் தனது கருத்துக்களை எளிதாக பதிவு செய்யமுடியும் என்பதால் அதில்தான் அவரது கவனம் குவிந்திருந்தது. அவரது முதல் ஆவணப்படம் women without shadows 2003இல் வெளிவந்திருந்தது. ஈரானில் கைவிடப்பட்ட மற்றும் வீடற்ற பெண்களின் நிலை குறித்து அந்த படம் விரிவாக பதிவு செய்திருந்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை அந்த படம் பெற்றிருந்தது.
            அதற்குப் பிறகு அவர் எடுத்த ஆவணப்படம் வித்தியாசமான களத்தில் எடுக்கப்பட்டது. டெஹ்ரானிலிருந்து துருக்கியிலுள்ள அங்காரா வரை வாரம் ஒரு முறை (வியாழன் மட்டும்) செல்லும் ரயில் எப்பொழுதும் கூட்டமாகவே செல்லும். ஆனால் திரும்புகையில் பெரும்பாலும் காலியாகவே இருக்கும். காரணம் ஈரானிலிருந்து பலரும் துருக்கியிலேயே பிழைப்புத்தேடி அங்கேயே வாழவிரும்பி சென்றுவிடுவதுதான். மஹம்மதி அந்த புகைவண்டியிலேயே பயணித்து அந்த ரயிலில் செல்லும் பயணிகளின் மனநிலை, டெஹ்ரானில் அவர்களது துயரமிக்க வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் படமாக்கினார். அந்த படத்துக்கு Travelogue என்று பெயர். அவர்தான் அந்த படத்துக்கு ஒளிப்பதிவாளரும் கூட.
            ஈரானின் முதல் பெண் இயக்குனர் ரெக்ஷான் நேசா அவர் இயக்கிய  we are half the Iran population  என்ற படத்திலும் மஹம்மதியின் பங்கு பெருமளவு இருந்தது. அந்த படம் ஈரான் பெண்களின் உரிமைகள், சுதந்திரம் குறித்து ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அரசியல்கட்சிகளின் கொள்கைகளை விவாதித்தது. மொஜன் ஜமாதி இயக்கிய crossing the line என்ற படத்திலும் மஹம்மதியின் பேட்டி பதிவாகியிருந்தது. அந்த படம் ஈரான் பெண் இயக்குனர்கள் சந்தித்த சவால்களைப்பற்றிய மிகச்சிறந்த ஆவணமாக இருந்தது.
            ஆவணப்படம் எடுப்பது மட்டும் அவரது பணியில்லை அதையும் தாண்டி நேரடியான சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். பெண்ணுரிமைப் போராளிகளுடன் இணைந்து மறுக்கப்பட்ட நீதிக்காக போராடத்துவங்கினார். அதிலிருந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
            அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் அவர் 2007 இல் கைதானது.  2009 இல் ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மஹமூத் அஹமதிஜத் -ஐ எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டபோது நேடா அகா சுல்தானி என்ற இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கல்லறையில் கூடிய பெண்ணுரிமைவாதிகளுடன் மஹம்மதியும் இருந்ததால் இரண்டாவது முறை அவர் கைது செய்யப்பட்டார். ( அவருடன் கைது செய்யப்பட்ட மற்றொரு இயக்குனர் ஜாஃபர் பனாஹி) ஆனால் ஒரே நாளில் மஹம்மதி விடுதலை செய்யப்பட்டார்.
            சுட்டுக்கொல்லப்பட்ட நேடாவைப்பற்றி இந்த இடத்தில் நாம் அறிந்து கொள்வது நல்லது. நேடா ஜனவரி 23 1983 ஆம் வருடம் டெஹ்ரானில் பிறந்தவர். நேடா என்பதற்கு குரல் அல்லது கடவுளின் செய்தி என்று பெர்சிய மொழியில் பொருள். மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட நேடாவுக்கு படிப்பதிலும், இசையின் மீதும்  நாட்டம் அதிகம். திருமணத்துக்குப்பின்  இஸ்லாமியக் கோட்பாடுகள் பற்றிய ஒரு பாடப்பிரிவினை விரும்பி எடுத்து இஸ்லாமிக் அஸாத் பல்கலைக் கழகத்தில் படித்தார். ஆனால் அவரது கணவரின் குடும்பத்தினர் அவர் படிப்பதை ஆட்சேபித்ததால் அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அவர் விரும்பியவாறு உடைகள் அணிய பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தது இன்னொரு காரணம்.
            கணவருடன் கருத்துவேறுபாடுகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே போனதால் அவரது மணவாழ்க்கை முறிந்து போனது. விவாகரத்து ஆன பின் அவர் வயலின் வாசிக்கவும், பியானோ வாசிக்கவும் இசைப்பயிற்சி நிலையங்களை தேடிப் போனார். துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கும் அவர் செல்ல நேர்ந்தது அங்குதான் அவர் காஸ்பியன் மக்கான் என்னும் புகைப்பட நிபுணர்  மற்றும் ஆவணப்பட இயக்குனரை சந்திக்க நேர்ந்தது. அவரது வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையாக அந்த சந்திப்பு இருந்தது.
            புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தையும் அரசியல் ஈடுபாட்டினையும் அந்த சந்திப்பு அவருக்குள் மூட்டியது. இரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட முறை அவருக்குள் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த பேரணியில் கலந்து கொள்ள அவர் டெஹ்ரான் வந்திருந்தார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி அன்று அவரும் அவரது இசை ஆசிரியை ஹமிது ஹவேதியும் அந்த போராட்டத்தில் பங்கேற்றனர். வெய்யிலின் உக்கிரம் தாங்காமல் சுல்தானி மட்டும் தன் காருக்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு நின்ற போது அதிபரின் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஒருவன் சுல்தானியை சுட்டுவிட்டான். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
            சுல்தானியின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் சுடப்பட்ட காட்சி அங்கிருந்த ஊடக செய்தியாளர் ஒருவரால் வீடியோ படமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த படம் இணையதளம் வழியாக தீயைப்போல் பரவியதால் இன்னும் கொதிப்பு அதிகமானது. அவரது கல்லறைக்கு தினமும் கூட்டம் வந்து போனபடி இருந்தது. மஹம்மதி, ஜாஃபர் பனாஹி போன்றவர்கள் அங்கு வருவது இன்னும் எதிர்ப்பை பலமாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
            மஹமதியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. கடைசியாக அவரது Travelogue படம் பிரான்சில் 2010-இல் திரையிடப்பட்ட போது அவர் அங்கு அவர் சென்றிருந்தார். அதற்குப்பிறகு அவர் வெளிநாடு செல்வதை தடுக்கவே அவர் கைது செய்யப்பட்டு, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக நாடு முழுதும் உள்ள ஜனநாயகவாதிகள் கருதினார்கள்.
            கேன்ஸ் படவிழாவின் தலைவர் காச்டோ கவ்ராஸ்  மஹம்மதியை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ராபர்ட் நீரோ உள்ளிட்ட கலைஞர்களும் மஹம்மதியை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.  பல்வேறு சமூக அமைப்புகள், மனித உரிமை போராளிகள் அவர் விடுதலைக்காக முயற்சி செய்தனர். அவர் தேச நலன், பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. என்றாலும் அவர் தனிப்பட்ட முறையில் செய்த குற்றம் என்ன என்பது பற்றி எவரும் வாய்திறக்கவே இல்லை. பல்வேறு எதிர்ப்புக்குரலுக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து ஜூலை 28 ஆம் தேதி ( 2011 ஆம் ஆண்டு) அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவரது பாஸ்போர்ட் அவரிடம் திரும்பித் தரப்படவில்லை. காச்டோ கவ்ரஸ்க்கு மஹம்மதி எழுதிய கடிதத்தில் தான் ஒரு ஆவணப்பட இயக்குனராகவும், பெண்ணாகவும் இருப்பதுதான் எங்கள் நாட்டில் மாபெரும் குற்றம்' என்று மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

            பெண்களுக்கெதிரான குற்றங்கள், பெண்களின் உரிமைகள், அவர்களின் சுய பாதுகாப்பு குறித்த அச்சம் ஆகியவற்றுக்காக இறங்கிப் போராடியமைக்காக  மஹம்மதிபோன்ற படைப்பாளிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர்கள் தங்கள் இருப்பை நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மஹம்மதியின் குரல் எல்லாத் தடைகளையும் தாண்டி தன்னை விடுதலை செய்யும்...

நன்றி: 'நிழல்'

சனி, 2 ஆகஸ்ட், 2014

‘காபூலிவாலாவின் பெங்கால் மனைவி' - சுஷ்மிதா பானர்ஜி

கலகக்கார கலைஞர்கள்- 4

                           
  
     1995 ஆம் வருடம் ஜூலை மாதம் 22-ந்தேதி அந்த பெண்ணுக்கு மரணதண்டனை என நாள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எந்த நீதி மன்றத்தாலும் விசாரிக்கப்படவோ, தீர்ப்பு எழுதப்படவோ இல்லை. அந்த பிரதேசத்தை தனது அடக்குமுறைகளாலும், அச்சுறுத்தலாலும் மிரட்டி வந்த தீவிரவாதக் குழு ஒன்று அந்த தண்டனையை அறிவித்திருந்தது. அந்த பெண்ணுக்கு காவலாக மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.
                “ உன் கடைசி செய்தியை தெரிவித்தால், அதனை உன் கணவரிடம் சேர்ப்பிப்போம்என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.
                அந்த பெண்எதுவுமில்லை' என்பதுபோல் மௌனமாக தலையாட்டினார். எப்படியும் தப்பித்து விட முடியும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஊறுதியாக இருந்ததால் அந்த கேள்வியை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.   பக்திதா என்கிற அந்த கிராமத்தின் தலைவர் தருணே சாச்சா தனது ஆட்களுடன் அந்த பெண் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து அந்த மூவரையும் கொன்றுவிட்டு, அவரை பத்திரமாகக் காப்பாற்றி தனது ஜீப்பில் காபூல் நகருக்கு கொண்டுவந்து விடுகிறார். தருணே சாச்சாவின் அன்பு மகனை இதே போல் ஒரு துயரமான நாளில் அந்த குழு சுட்டுக்கொன்றுவிட்டது. புத்திர சோகத்தில் மூழ்கி இருந்த சாச்சா அந்த பெண்ணை காப்பாற்றுவதன் மூலம் தனது துயர எண்ணங்களில் இருந்து சற்று விடுபடலாம் என்ற நல்ல நோக்கில் அந்த இந்தியப் பெண்ணைக் காப்பாற்றினார். காபூலில் இருந்து விமான மூலம் பல தடங்கல்களை கடந்து புதுதில்லி வந்தடைந்தபோது பெருமழை அவருக்காக காத்திருந்ததுபின்னாளில் அவர் எழுதிய காபூலிவாலாவின் பெங்காலி மனைவி என்ற புத்தகத்தில் அந்த தருணத்தைப்பற்றி குறிப்பிடும்போது அவரது அத்தனை வலிகளையும் இந்திய மண்ணில் விழுந்த மழை கழுவிச்சென்றது.
                மாபெரும் தப்பித்தலுக்குப்பிறகு அவர் தனது சொந்த ஊரான கல்கத்தாவுக்கு 1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதி வந்து சேர்ந்தார். அவரது பழைய நாடகத் துறை நண்பர்கள் அவரை மிகுந்த அன்புடனும், ஒரு நாடகக்கலைஞர் கல்கத்தாவுக்கு திரும்பக்கிடைத்தார் என்ற மகிழ்வுடனும் அவரை அழைத்துச் சென்றனர்பெங்காலி நாடக நடிகையும், நாடக ஆசிரியருமான சுஷ்மிதா பானர்ஜிதான் அந்த பெண்மணி.
                1988ஆம் வருடம் கல்கத்தாவில் ஓரளவு அறிமுகமாய் இருந்த நாடகக்குழு ஒன்றுக்காக நாடகங்கள் எழுதியும், அதில் தேவைப்படும்போது நடித்தும் வந்த சுஷ்மிதா, ஆப்கானில் இருந்து தொழில் நிமித்தமாக கல்கத்தாவுக்கு அடிக்கடி வந்து போய்கொண்டிருந்த ஜான்பாஸ்கான் என்பவரை எதேச்சையாக சந்திக்க நேரிட்டது, அது பின் காதலாகவும் மாறியது. இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் சம்மதம் கிடைக்காது என்று அவர் அஞ்சியதால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
                திருமணத்துக்குப்பின் உண்மை வெளிப்பட்டபோது  சுஷ்மிதா வீட்டில் பெரிய பிரளயம் நடக்கவில்லை என்றாலும் சுமுகமான சூழ்நிலை இல்லை என்பதால் அவர் தன் கணவருடன் ஆப்கானில் உள்ள பக்திதா கிராமத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு சென்ற பிறகுதான் அவர் மிகப்பெரிய அதிர்ச்சிகளை சந்திக்க நேரிட்டது.
                அவரது கணவர் ஜான்பாஸ்கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. அந்த பெண்ணுடன் ஒரே அறையில் பார்த்தபோதுதான் அவருக்கு அந்த உண்மை தெரியவந்தது. ஆனால் ஜான்பாஸ்கானின் வீட்டில் சுஷ்மிதாவுடனான திருமணம் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் இயல்பாகவே இருந்தனர்.
                அந்த கிராமம் தாலிபான் குழு ஒன்றின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் வைத்ததுதான் சட்டம்  அதை மீறி எதுவும் செய்ய முடியாது. அப்படி எவரேனும் முயன்றால் அவர்களுக்கு மரணம்தான் பரிசு.
                 அந்தப் பகுதியை பொறுத்தவரை பெண்கள் கல்வி கற்கவோ, வெளியே வந்து வேலை பார்க்கவோ அனுமதி இல்லை. கணவர், தகப்பன், சகோதரன் ஆகியோரைத்தவிர பிற ஆண்களிடம் தவறியும் பேசிவிடக்கூடாது. பெண்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. கிராமத்தில் வசிக்கும் ஏதேனும் ஒரு தாதிப்பெண் அவளுக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்யலாம். இப்படியான கட்டுப்பாடுகள் சுஷ்மிதாவை அதிரச் செய்தன.
                ஜான்பாஸ்கானின் சகோதரி கர்ப்பமாய் இருந்தாள். ஏற்கனவே அவளுக்கு ஏழு குழந்தைகள். எட்டாவது குழந்தை பெறும் அளவு அவள் உடலில் வலு இல்லை. ஆனால் அவனது கணவனுக்கு இன்னும் அவள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசை. ஆகவே அவளது வலிகளும் அச்சங்களும் நிராகரிக்கப்பட்டன. கணவன் ஆசைப்பட்டுவிட்டால் அங்குள்ள பெண்கள் எத்தனை துயரங்களையும் தாங்கிக்கொள்ளவேண்டும். பிரசவ நாளில் குழந்தையின் உடலை கொடிச்சுற்றிக்கொள்ள, கடும் வேதனைகளை அந்த இரண்டு உயிர்களும் அனுபவித்தன. அவசரமாக அழைக்கப்பட்ட கிராமத்து மருத்துவச்சி எந்தவித மயக்கமருந்தோ, வலி நிவாரணிகளையோ தராமல் கத்தரிக்கோலால் அறுத்து அந்த குழந்தையை வெளியே எடுத்ததை சுஷ்மிதா பார்க்க நேரிட்டது. அந்த மரணப்போராட்டத்தில் தாய் இறந்துவிட்டாள். ஒரு உயிர் கண்ணெதிரே துடித்துக் கொண்டே போவதை எந்த சலனமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த அவர்கள், அவளது பிணத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக குழந்தைப் பிறந்த சந்தோஷத்தை கொண்டாடத் துவங்கிவிட்டனர்.
                பெண்களை ஒரு சக உயிராகக்கூட மதிக்க நினைக்காத அவர்களது மனநிலை சுஷ்மிதாவுக்கு பேரதிர்ச்சியை தந்தது. கல்கத்தாவில் நர்சிங் பயிற்சிமுடித்திருந்த சுஷ்மிதா மகப்பேறு மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். எனவே இனி ஆப்கான் பெண்கள் மருத்துவ உதவியின்றி மரணிக்கக்கூடாது என்று முடிவு செய்த சுஷ்மிதா, அருகிலிருந்த சரானா என்ற கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு மருந்தகத்தின் பின்புறம் ரகசியமாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். அங்கிருந்தபடி பெண்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பெண்கள் எந்த தொழில் ரீதியான பணிகளையும் செய்யக்கூடாது என்ற அங்குள்ள தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை  மீறி அவர் பணியாற்றியதால், அவர்களின் கோபத்துக்கு ஆளானார். ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருந்தபோது, திடுமென உள்ளே நுழைந்த ஒரு கும்பல் அந்த அறையை சூறையாடியது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்சுஷ்மிதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. காவல்துறையோ அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
                சுஷ்மிதா வேறு வழியின்றி அங்கிருந்து தப்பித்துவிடும் முடிவிலிருந்தார். நடமாட்டம் குறைந்த நடுப்பகலில் அவர் வீட்டிலிருந்து வெளியேறி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்ததுடன், திரும்பவும் தாலிபான்கள் வசம் ஒப்படைத்து விட்டனர். இரண்டாவது முறையாக அவர் கழிவு நீர் செல்லும் பாதாளப் பாதை வழியே தப்பிக்க முனைந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மீண்டும் அவர் மாட்டிக்கொண்டார்.
                இரண்டு முறை தப்பிக்க முயற்சி செய்த அவரை தாலிபான்கள் மன்னிக்க தயாரில்லை. சுஷ்மிதாவுக்கு மரணதண்டனை அறிவித்தனர். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ந்தேதி என அதற்கும் நாள் குறிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் தருணே சாச்சாவின் உதவியோடு தப்பித்து கல்கத்தா வந்தார். தனது பழைய நாடக நண்பர்கள் உதவியுடன் புதிய நாடகக்குழுவைத் துவக்கினார். கல்கத்தாவெங்கும் வீதி நாடகங்களை அரங்கேற்றினார்.
                ஆப்கானில் இருந்த போது தவறாமல் டைரி எழுதும் பழக்கம் அவருக்கு இருந்தது. தனது நாட்குறிப்புகளிலிருந்து தனது அனுபவங்களை மீட்டெடுக்க முடிந்தது. அதன் அடிப்படையில் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினார். ‘காபூலிவாலாவின் பெங்கால் மனைவி' என்று தலைப்பிடப்பட்ட அந்த புத்தகம் சுமார் ஏழு லட்சம் பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. அந்த புத்தகம் ஆப்கான் பெண்களின் இன்றைய நிலையை பிரதிபலிப்பதாகவும், சுஷ்மிதாவின் சுயசரிதையாகவும் இருந்தது. அந்த புத்தகம் திரைப்பட இயக்குனர் உஜ்ஜல் சட்டோபத்தியாயாவை மிகவும் பாதித்ததுஅதனை திரைப்படமாக்க விரும்பினார். உடனடியாக அவர் சுஷ்மிதாவை சந்தித்து அதற்கான அனுமதியை பெற்றார். அதற்கான திரைக்கதையை அவரே உருவாக்கினார். படத்தின் அத்தனை படபிடிப்புகளின் போதும் உடனிருப்பேன் என்ற சுஷ்மிதாவின் வேண்டுகோளுக்கு சம்மதித்தார். ‘Escape from Taliban'  என்ற பெயரில் இந்தி திரைப்படமாக உருவானது.
                            
                ஆப்கானுக்கே சென்று படபிடிப்பை நடத்தலாம் என்று சுஷ்மிதா ஆலோசனை தெரிவித்தார். அவரது துணிச்சல் உஜ்ஜலுக்கு ஆச்சர்யத்தை தந்தது. எந்த நேரத்திலும் அங்கு அவர் சென்றால் கொல்லப்படலாம் என்று தெரிந்தும் அவர் தைரியமாக அந்த யோசனையைச் சொன்னது பிரச்சினைகளைக்கண்டு அவர் அஞ்சுபவர் இல்லை என்பதை உணர வைத்தது. அதற்கான முறையான அனுமதி பெற தயாரிப்பாளர்களும் முயற்சித்தனர், ஆனால் அரசியல் சூழல் காரணமாக அனுமதி கிடைக்கவில்லைஎனவே இந்திய எல்லையான லே மற்றும் இந்திய பகுதிகளிலேயே நடத்தப்பட்டது. சுஷ்மிதா முதல் கட்ட படபிடிப்பில் ஒரு உதவி இயக்குனர் போல ஆர்வமுடன் செயல்பட்டார்.       
                சுஷ்மிதா கதாபாத்திரத்தை மணிஷா கொய்ராலா ஏற்று நடித்திருந்தார். இந்தி மொழியில் எடுக்கப்பட்டதால், வர்த்தக ரீதியான சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுஷ்மிதாவுக்கு இதில் உடன்பாடில்லை. “மிகை உணர்ச்சியான காட்சிகள் வடிவமைக்கப்பட்டன.சில காட்சிகள் கணவரால் துன்புறுத்தப்படுவதாக காண்பிக்கப்பட்டிருந்தது. எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. என்னுடைய நோக்கம் ஆப்கானில் உள்ள பெண்களின் நிலையை பிரதிபலிப்பதுதான்என்று  சுஷ்மிதா பின்னர் வருத்ததுடன் குறிப்பிட்டார். அடுத்த கட்ட படபிடிப்புகளுக்கு அவர் செல்லவில்லை.
                என்றாலும் படம் முழுமையாக முடிவடைந்து 2003-ல் வெளிவந்தபோது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானில் அந்த படம் தடை செய்யப்பட்டது. திருட்டு விசிடிக்கள் மூலம் படம் ஆப்கானுக்கும் சென்றது. பெண்கள் தங்கள் புர்காக்களுக்குள் மறைத்து வைத்து டிஜிட்டல் கேமராவில் படத்தை ஒளிபரப்பச்செய்து பார்த்தனர். அங்கிருந்து ஒரு சிலர் பிரிட்டனுக்கு படத்தின் பிரதியை கடத்திச்சென்று அங்கு பார்வையாளர்கள் மத்தியில் திரையிட்டனர். இந்தியாவில்  அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்றாலும், கணிசமான வரவேற்பை பெற்றது. ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.

                சுஷ்மிதா அந்த திரைப்படத்துக்குப்பிறகு தனது ஆப்கான் அனுபவங்களின் எஞ்சிய பகுதிகளை அடிப்படையாகக்கொண்டு புத்தகங்களை எழுதினார். தனது வாழ்க்கை அனுபவங்களின் தொடர்ச்சியான இரண்டு வால்யூம்கள் வெளிவந்து 5 லட்சம் பிரதிகள் விற்றன. ஆங்கிலத்தில் Mulla umar, Taliban and I  மற்றும் பெங்காலி மொழியில் ஏக் பொர்னொ மித்யா நய் ( Not a word Lie) ஆகிய அவரது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாயின.
                ஒரு பக்கம் எழுத்தாளராகவும், மறுபக்கம் நாடகத்துறையிலும் இயங்கி வந்தாலும் திரைப்படம் மீதான ஈர்ப்பு சுஷ்மிதாவுக்கு குறையவே இல்லை. தனது அடுத்த புத்தகங்களை அடிப்படையாகக்கொண்டு திரைப்படங்களை தானே இயக்கத் தீர்மானித்தார்.

                இந்தி மொழியில் எடுத்தால் வணிகரீதீயான விஷயங்களுக்கு இடம் கொடுக்க நேரிடும் என்பதால் பெங்காலி மொழியில் எடுக்கத் திட்டமிட்டார். Talibani Atyachar - Deshe o Bideshe , Mullah Omar, Taliban O Ami (Mullah Omar, Taliban and I ) ஆகிய அவரது புத்தகங்களை அடிப்படையாக வைத்து அதன் திரைக்கதை உருவானது. Kabuliwalas Bangali Bou  ( காபூலிவாலாவின் பெங்காலி மனைவி) என்று பெயரிடப்பட்டது. அதன் திரைக்கதையை எழுதும்போதே மற்றொரு திரைப்படத்துக்கான கதைக்கருவும் அவர் மனதில் தோன்றியது அவரது Sabhyatar Sesh Punyabani (The Swansong of Civilisation )  என்கிற அவரது மற்றொரு நூலின் கருவை வைத்து Shaheb Kamal   என்ற படத்துக்கான திரைக்கதை அமைக்கப்பட்டது.
                வங்காளத்தின் சிறந்த நடிகையான தேபஸ்ரீ ராய் கதநாயகியாக நடிக்க வைப்பது என்றும், வங்காளத்தின் சிறந்த இயக்குனர் கௌதம் கோஷ், சுஷ்மிதாவின் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றவும் சம்மதித்திருந்தார். படத்தினை சிக்கிமின் சாங்கு ஏரி பகுதியிலும், மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டது.
                அந்த தருணத்தில் சுஷ்மிதாவின் கணவர் ஜான்பாஸ்கானிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆப்கானில் நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. ஓரளவு பெண்களுக்கு சுதந்திரமான சூழல் கனிந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஜான்பாஸ்-ன் உறவினர்களும் அவரை அன்போடு அழைத்தனர். உண்மையில் சுஷ்மிதாவுக்கு தனது கணவர் ஜான்பாஸ் மீதோ அவரது உறவினர்கள் மீதோ தனிப்பட்ட முறையில் புகார்கள் ஏதும் இல்லை. ஜான்பாஸ் மீது அவருக்கு இருந்த அளவுகடந்த அன்பு குறையவே இல்லை. ‘Escape from Taliban' படத்தில் அவரை கணவர் துன்புறுத்துவது போல் காட்சிகள் இடம்பெறுவதை அவர் எதிர்த்தார்ஏனெனில் அவரது கணவர் அவரிடத்தில் அன்பாகவே இருந்தார். கணவரின் முதல் மனைவி குல்குலாத்திக்கு சுஷ்மிதா மீது மிகப்பெரிய பிரமிப்பு இருந்தது. சுஷ்மிதா ஒரு அறிவாளி, துணிச்சல் மிக்கவர் என்பதால் குல்குலாத்திக்கு சுஷ்மிதா ஒரு அதிசயப் பெண்ணாகவே தோன்றினார். அவர்தான் சுஷ்மிதாவுக்கு சாஹேப் கமல் என்ற பெயரை சூட்டினார். அதோடு மட்டுமல்லாமல் ஜான்பாசின் சகோதரரின் மகன் டினியை சுஷ்மிதா தத்தெடுத்திருந்தார். டினிக்கும் அவர் மீது அதிக பாசம். இந்த காரணங்கள் அவரை மீண்டும் ஆப்கான் செல்ல தூண்டின.
                அதையெல்லாம் விட மிக முக்கிய காரணம் அவர் தான் இயக்கப்போகும் திரைப்படங்களுக்கான மேலதிக தகவல்களுக்காகவும், தான் எழுத உத்தேசித்திருந்த புதிய புத்தகத்துக்காகவும் செல்ல தீர்மானித்தார். ‘Escape from Taliban திரைப்படத்தை கேமராவுக்குள் பார்க்கும் துணிச்சல் ஆப்கான் பெண்களுக்கு இருக்கும்போது, தன்னால் அங்குள்ள காட்சிகளை, பெண்களின் நேர்காணல்களை பதிவு செய்ய முடியாதா? என்ற கேள்வியும் அவரை அந்த முடிவுக்கு இழுத்துச்சென்றது. 2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அங்கு அவர் பயணித்தார். அங்கே அவரை அவரது உறவினர்கள் அன்பாகவே வரவேற்றனர். அவர் முடிவு செய்தது போல் ரகசிய கேமராவால் சில காட்சிகளை படம்பிடித்தார். அவற்றை ஆவணப்படமாகவோ, அல்லது திரைப்படத்தில் துணைக்காட்சிகளாகவோ இணைக்க முடிவு செய்தார். சர்வதேச சமூகத்துக்கு ஆப்கான் பெண்கள் நிலையை தனது படங்கள் மூலம் உணர்த்த முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் அவரையும், அவரது நம்பிக்கைகளையும் மத அடிப்படைவாதிகள் தங்கள் துப்பாக்கிகளால் தகர்த்து எறிந்தனர்.
                கடந்த  செப்டம்பர் மாதம் 5-ந்தேதி அவரது வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் வீட்டிலுள்ள மற்றவர்களை கட்டிப்போட்டுவிட்டு, சுஷ்மிதாவை வெளியே இழுத்துச்சென்றனர்
     துப்பாக்கி குண்டுகள் சுஷ்மிதாவின் உடலை சல்லடையாக துளைத்தன. கிட்டத்தட்ட 20 குண்டுகள் அவரது உடலில் இருந்ததாக போலீஸ் தரப்பினர் கூறினர். இன்னமும் அவரது மரணத்துக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
                தாலிபான் குழுவினர் தாங்கள் அவரை கொல்லவில்லை அப்படி கொன்றிருந்தால் அதை வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்தனர். அவர் மரணமுற்ற செய்தி செரனா கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. மருத்துவம் மட்டுமல்லாது எல்லா பொது விஷயங்களிலும் தாமாக முன்வந்து அவர் எல்லோருக்கும் உதவுபவர் என்று அவரது கிராமத்தினர் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.
                அவரது உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டனர். சில நாட்களில்  அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று இரண்டு நபர்களை ஆப்கான் போலீஸ் கைது செய்துள்ளது. இன்னமும் விசாரணை நடக்கிறது. சுஷ்மிதாவின் சகோதரர் கோபால் பானர்ஜிநாங்கள் ஆப்கான் செல்ல வேண்டாம் என்று அவரை எவ்வளவோ மன்றாடினோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அன்பான ஆத்மாக்கள் ஆப்கானிலும் இருக்கிறார்கள்அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று எங்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றுவிட்டார். ஆனால் அவரது ஆத்மா எங்களை ஏமாற்றிவிட்டு பிரிந்துவிட்டதுஎன்று துயரத்தோடு குறிப்பிட்டார்.


                அவர் திட்டமிட்டிருந்த படம் எடுக்கப்படவேயில்லை.. அவர் கடைசியாக பதிவு செய்த காட்சிகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஆனால் ஆப்கானின் துயரம் மிக்க இன்றைய நிலையை பிரதிபலிக்கும் அழிக்கமுடியாத ஆவண சாட்சியாக  அவரது மரணம் அமைந்துவிட்டது.
            
நன்றி: 'நிழல்' பத்திரிக்கை 

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...