உனக்கு நினைவஞ்சலி செலுத்த
எங்களைவிடப் பொருத்தமானவர்கள்
எவருமில்லை...
எங்களைவிடப் பொருத்தமானவர்கள்
எவருமில்லை...
மைபொதி விளக்கு
நீர் ஊஞ்சல்
ஆடியபடி
நதியோடு
சல்லாபித்துக் கொண்டிருந்த
நிலவின் கருநிழல்
குளிரக்குளிரக்
குளித்துக்கொண்டு இருந்தது
அடிமணலில்...
சிற்றெறும்பின்
மெல்லுடலில்
மறைந்து மறைந்து
ஊர்ந்து கொண்டிருந்தது
அதன் பெருநிழல்...
துண்டாடப்பட்ட
இலையின் நிழல்
துளிக் காயமின்றி
படபடத்துக்
கொண்டிருந்தது
காற்றில்...
மின்மினிப்
பூச்சிகள் உலவும்
இடுக்குகளிலும்
வளைந்து மடங்கி
பறந்து
கொண்டிருந்தது ஒளிவட்ட நிழல்..
நிழலைப் பொசுக்கவே
முடியாத குமைச்சலில்..
பிம்பங்களைச் சுட்டெரித்துக்
கொண்டிருந்தது சூரியன்...
தனிமை என்னும்
சொல்லை
பொருளற்றதாக்கி
பேரழிவு காலம் வரை பேரண்டத்தில்...
ஒவ்வொரு பரமாணுவும்
வாழும்...
மைபொதி விளக்கென
அதனதன் நிழலோடு...
(தலைமைச்
செயலக குறிஞ்சி மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை..26-05-2022 )
கறுப்பு
ஒளி..... நெய்வேலி பாரதிக்குமார்
நிலவு
மறைந்திருந்த இரவில் ..
வீடுகள்
நிறைந்த காடு
ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்தது.
காட்டில்
முளைத்திருந்த
கான்கிரீட்
மரங்கள்
விளக்குகளை
அணைத்து விட்டு
அசையாமல்
நின்று கொண்டிருந்தன..
குளிர்சாதனப்
பெட்டிகள் மட்டும்
உறங்கா
மிருகம் போல
உறுமிக்
கொண்டிருந்தன..
கான்கிரீட்
மரங்களின்
இடிபாடுகளுக்கு
இடையில்
மின்தூக்கிகள்
நசுங்கிக் கொண்டிருந்தன..
வனங்களாக
மாறிக் கொண்டிருந்த
நகரங்களின்//
ஒவ்வொரு அடுக்ககத்திலும்
உறக்கத்தை
தொலைத்த
இரவுக்
காவலர்களின்
கறுத்த
விழிகளில் இருந்து
அலைந்து
கொண்டிருந்தது
தனிமையின்
ஒளி...
(தலைமைச்
செயலக குறிஞ்சி மன்றம் 19-06-2-22 அன்று நடத்திய கவிதைப் போட்டியில் மாலை 05.00 மணிக்கு முடிவடையும் என்பது 04-20 மணிக்குத் தெரிந்து பின்னர் எழுதி 04. 50 மணிக்கு அனுப்பி தேர்வுப் பெற்ற கவிதை..)
அடையாளக் குரல்
இரவெல்லாம் மருத்துவமனை
மர இருக்கையின் குளிர்மை
வெறுங்கையில் தலைவைத்து
உறங்கிய என்னைப் போர்த்திக்கொண்டு இருந்தது...
குளிக்கவும்
வேறு உடுத்தவும் மறந்து
கசங்கிய காகிதமாகக்
காற்றில் படபடத்தது என்னுடல்..
ரத்தப்பொட்டிட்ட
பஞ்சுப் பிசிறுகள் நிறைந்த
குப்பைக்கூடையின் அருகில் நின்று..
ஆறியது கூட உணராமல்
புளித்திருந்த பாலை
அருந்திக் கொண்டிருந்தேன்...
பறவைகளுடன் உரையாடி
இலைகளின் அசைவை அவதானித்து
கனிகளைப் புசித்து கழிந்தன நிமிடங்கள்...
நாற்றம் என்னும் சொல்லுக்கு
நறுமணம் என்பதுதான் பொருள்
என அன்றுதான் ஏற்றுக்கொண்டேன்.
பெருநிலம் கீறி உலகின்
ஆதிமனிதன் எங்கேயென
துளைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
எல்லா சட்டைகளையும் உரித்து
எனக்குள் உறங்கிய பாசாங்கற்ற
ஆதிமனிதனை அடையாளப்படுத்திய
குரலாக ஒலித்தது
பிரசவ அறையின் வாசலில்
கிழிந்த துணியின் கதகதப்போடு
என் கரங்களில் தரப்பட்ட
என் குட்டி தேவதையின் அழுகுரல்...
- பாரதிக்குமார்
(தலைமைச் செயலக குறிஞ்சி மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை )
பெருந்(தொ)தலைவர்
அந்த முதியவரை பத்திரமாகத்
தொலைத்து விட்டோம்..
பிரிவினைவாதிகள் பட்டியலிலோ..
தேசத்துரோகிகளுக்கான
பட்டமளிப்பு விழாவிலோ....
சாதிச் சங்க அலுவலகத்திலோ
தொலைப்பதுதான்
வழக்கமான பழக்கம்.....
எதிலும் சிக்காத அவரை
இருக்கும் இடத்தில் அப்படியே
கை விட்டுவிட்டு
நாங்கள் ஒவ்வொரு நபராக
தப்பித்து வந்து விட்டோம்.
.
தேடிக் கண்டடையும்
எண்ணம் எவரிடமும் இல்லாததால்
பிரதிகள் என எவரையும்
உருவாக்கிடவில்லை...
புனிதராக்கி விட்டால்
பிறகு பின்பற்றத் தேவையில்லை...
என்கிற வசதியான
கோட்பாடுகளின் கோட்டையில்
ஒளிந்து கொண்டு அவரது சிலைகளையும்..
அவர் பெயரால் சாலைகளையும்
உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்...
நேர்மையின் புனைகதைகள்
யாவையும் அவரது பெயரால்
வெளியிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன..
தெருவோரங்களில்
உற்று நோக்கிக் கொண்டிருந்த
அவர் கண்கள்
தந்த உறுத்தலில் இருந்து தப்பிக்க
ஆளுயர ரோஜா மாலைகளால் மறைத்தோம்
சான்றிதழ் பெறவும்
உரிமங்கள் பெறவும்
இன்னபிற பெறவும்
எதையேனும் கையூட்டாக தரவும் ....
இப்பொழுது சங்கடம் எதுவுமில்லை..
வேலை வாய்ப்புக்கான
அறிவிப்புகள் வரும் போதும்..
சிறந்த கல்லூரியில்
ஒரு இடத்துக்காகவும்
தேர்ந்த ஊழல் நிபுணர்களின் பட்டியலை
கையிலெடுத்துக் கொண்டு
நமக்கான மீட்பர்களுக்காக
வலைகளை விரிக்கிறோம் ...
பத்திரப்பதிவு அலுவலகத்திலோ...
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலோ
அவரைப் போன்ற தோற்றம்
கொண்டவரைக் கண்டால் பதட்டமடைகிறோம்..
மாபெரும் ஊழல்களுக்காக
சிரித்த முகத்துடன்
கையாட்டிச் செல்லும்
நாசக்காரர்களை
தொலைக்காட்சிகளில் காணும் போது
கண்ணீர் மல்க அவரை நினைவு கூறுகிறோம்...
விருதுநகர் மக்கள்
ஏனிப்படி நேர்மையாளர்களைத்
தோற்கடிக்கிறார்கள்
என்று மறக்காமல் வசை பாடுகிறோம்...
அவருக்கும் நமக்குமான
இடைவெளி அதிகரித்து
பெருந்தொலைவர் ஆகிவிட்டால்
ஒருநாள் கடவுள் ஆக்கிவிடுவோம்...
இனி ஒருவர் இதுபோல் வரமாட்டார்
என்கிற நிச்சயத்திலும் ...
வந்தாலும் வந்து விடுவாரோ
என்கிற அச்சத்திலும்
ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரை
வாழ்த்திக் கொண்டே இருக்கிறோம்....
ஜூலை 15, 2022
வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார் அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...