வெள்ளி, 18 செப்டம்பர், 2015

இன்றைய சிந்தனை-1 ( 18-09-2015)






அப்பா...

வலிக்கும்போது ஒலிக்கின்ற குரல்
‘அம்மா' என்றழைத்தாலும்
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
அழைப்பதென்னவோ
‘அப்பா' என்றுதான்..


தன்னையே தைத்துக்கொண்டு
தந்திடுவதால்
‘தந்தை' என்றானதோ?


உயிரில் உளி விழுந்தாலும்
வலியைத் தாங்கிக்கொண்டு
விழியில் தூசி விழுந்ததுபோல்
துடைத்துக்கொண்டு செல்லும் ஆத்மா ‘அப்பா'


தனக்குப் பிடித்த அத்தனையையும்
‘வயிறு சரியில்லை' என்ற ஒரு பொய்யால்
குழந்தைகள் பக்கம்
அடுக்கிடும் பாசமலை ‘அப்பா'


ஒரு ரூபாயை சேமிக்க
ஒன்பது கி.மீ. தான் நடந்தாலும்
நூறடிகூட பிள்ளையை நடக்கவிடாமல்
நூறு ரூபாயை நீட்டும் வள்ளல் ‘அப்பா'


பள்ளி வாசலில் துள்ளி வரும்
பிள்ளை முகம் பார்த்து
பசியை மறக்கும் பச்சை உள்ளம் ‘அப்பா'


வேர்வை துளிகளில் குளித்தபடி
சட்டைப்பை சேமிப்பை அள்ளி
பிள்ளைக்கு வாசனைத் திரவியம்
வாங்கித் தரும் மணமுள்ள மனம் ‘அப்பா'


தன்னையும் தாண்டி உயரே தெரிய
தன் தோளில் ஏற்றி
தழும்பேறி நிற்கும் தலைச்சிறந்த தத்துவம் ‘அப்பா'


கஷாயம் சாப்பிட்டால்
காய்ச்சல் கரைந்துபோகுமென
குறிப்புகள் சொல்லிவிட்டு
குழந்தையின் முகக்குறிப்புகள் சோர்ந்திருந்தால்
மருத்துவமனை வாசலில்
நிமிடங்களை விழுங்கும் மகத்துவம் ‘அப்பா'

அலட்சியப்பார்வை கூட அவமானமென்று

அணுக்கள் முழுக்க தன்மானம் நிரப்பி
வாழ்வைக் கடந்து
அத்தனையும்
பள்ளி வாசலிலோ, கல்லூரி வாசலிலோ
மிதிக்கப்படும்போதும்
கண்ணீர் மல்க பிள்ளைக்காக
கெஞ்சி நிற்கும் கடவுள்'அப்பா'


மொழியின் உயிர்ச்சொல் ‘அம்மா' என்றால்
மொழியின் மெய்சொல் ‘அப்பா'
உயிரும், மெய்யும் உடனிருக்கையில்
உயிர்த்திருக்கிறது ‘ நம் வாழ்வு'

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...