வியாழன், 9 டிசம்பர், 2010

ஊர்ப்பாசம்

ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச்திக்கேற்ப வைத்துக்கொண்டால் என்ன என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

கோலிக்குண்டுகளின் கனம் தாங்காமல் கிழிந்து தொங்கிய ட்ரவுசர், ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில் விழுந்து தேய்த்த முழங்கை சிராய்ப்புக்குத் துணையாய் நைந்து போன முழுக்கை சட்டை, அம்மை குத்தியது போல ‘ஆக்கர்கள்' நிறைந்த பம்பரம், உருட்டி உருட்டித் தேய்ந்து போன தாயக் கட்டைகள் என்று... (இப்படி உங்களிடமும் ஒரு பட்டியல் இருக்கலாம்)

பால்யத்தின் ஒவ்வொரு துளியும் தளும்பி சிந்தாமல் இன்னமும் நினைவில் நிரம்பி வழியும் என் ஊர் தஞ்சை மாவட்டத்தில் பந்தநல்லூர் செல்லும் வழியிலுள்ள கீழக்காட்டூர்.. மலைகளோ, குன்றுகளோ கூட இல்லாத தஞ்சை மாவட்டத்தில்தான் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சிற்பக்கலைக்கு அடையாளங்களாக பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் கோயில்கள் இருப்பது எப்படி பேரதிசயமோ அது போல அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சையில்தான் மூன்று மதங்களின் அடையாளங்களான வேளாங்கன்னி தேவாலயம், நாகூர் தர்க்கா, தஞ்சை பெரிய கோயில் இருந்தன.. ஆனால் ஒரு போதும் மதக்கலவரங்கள் நிகழாத மாவட்டம் தஞ்சைதான்...

கிராமங்கள் தான் நம் பண்பாட்டின், கலாச்சாரத்தின் அழிக்க முடியாத அடையாளங்கள். வெறும் கொண்டாட்டங்களோடு முடிந்து விடுவதில்லை கிராமத்தில் அனுசரிக்கப் படும் பண்டிகைகள். அவை நம் வாழ்வியல் சூழலோடும், ஒவ்வொருவர் மனதோடும் பின்னிப் பிணைந்திருப்பவை. கிராமங்களில் பண்டிகைகள் பெரியவர்களுக்கு வேண்டுமானால் மதச் சம்பிரதாயங்களாய் இருக்கலாம், ஆனால் குழந்தை பருவத்தினருக்கு எல்லாமே கொண்டாட்டங்கள்தான்...

காட்டூர் என்றாலே காளியாட்டம்தான் நினைவுக்கு வரும் சித்திரை மாதங்களில் ஊர்ப் பெரியவர்களால் தீர்மனிக்கப்படும் அந்த திருவிழாவில் களி வேஷம் போடுவதற்காகவே பிரத்தியேகமான நபர்கள் இருப்பார்கள். தெரு தோறும் ஆடிக்கொண்டெ செல்லும் காளி வீடு தோறும் சென்றமர்ந்து ஆசுவாசமாய் ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போகும் மூன்றுநாட்களுக்கு குறையாமல் நடக்கும் அந்தத் திருவிழா முடிந்து, சிறுவர்கள் வாழை மட்டைகளை கொண்டு கை, கால் பட்டைகளாக்கி முகமும் தயாரித்து அட்டைக் கத்திகளோடு காளியை பிரதியெடுத்து ஆடுவது பெரியவர்களுக்கு கிடைக்கும் உபரி தரிசனம்.

பொங்கலை விட மாட்டுப் பொங்கல்தான் சிறுவர்கள் மத்தியில் பிரசித்தம் குறைந்தபட்சம் ஒரு பசுவும் கன்றாவது தங்கள் பால் தேவைக்காக கிராமங்களில் அப்போதெல்லாம் இருக்கும். தங்களின் பிரத்தியேக பிரியத்துக்குரிய மாட்டையோ, கன்றையோ நெட்டி மாலைகளாலும், கொம்புகளில் நெட்டி குஞ்சலங்களலாலும் அலங்கரிப்பதில்தான் எத்தனை நேர்த்தியிருக்கும்!! ஆனால் இன்று அதே கிராமங்களில் பராமரிக்க சோம்பல்பட்டு அவரவர் கைகளில் பாலித்தீன் பாக்கெட் பால்... இருக்கும் ஒன்றிரண்டு வண்டி மாடுகளுக்கும் கொம்புகளில் கட்சிகளின் வண்ணம் தீட்டி உறுப்பினர் அட்டை இல்லாத அங்கத்தினர் ஆக்கிவிட்டனர். ‘யாருடையது' என்ற பேதம் இல்லாமல் கைகளை நீட்டினால் வாஞ்சையோடு நாவால் வருடும் செல்லப்பிராணியாய் இருந்த அந்த ஜீவன்களை, இன்று எதிர்கொள்ள அச்சப்படும் அளவுக்கு எதிரிகளாக்கிவிட்டனர்..

ஆடிப்பெருக்கு தினத்தில் ‘சப்பரம்' என்று அழைக்கப்படும் சிறுதேர் தஞ்சை மாவட்டங்களில் அன்றைய வழக்கம்.. பெரும்பாலும் தச்சர்கள் பட்டறையில் எஞ்சிய மரத்துண்டுகளை தேர் போல சிறுவர்கள் இழுத்துச் செல்லும் அளவுக்கு செய்து கொள்வார்கள். ஊரின் பிரதான சிவன் கோயில் எதிரே நீண்டு கிடக்கும் வீதியில்தான் பெரும்பாலும் தேர் தயாரிப்பு பணிகள் நடக்கும். தேரை அலங்கரிப்பதற்கென்றே கை தேர்ந்தவர்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். வண்ண வண்ண காகிதங்களை வெட்டி கிளி போலவும், மயில் போலவும் சிறு சிறு பூக்களாகவும் தயாரிப்பதில் அவர்கள் கெட்டிக்காரர்கள். ஒவ்வொரு வருடமும் புதுமையாய் அலங்கரித்து செல்லும் தேர் யாருடையதென்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். தேரை வீதி தோறும் இழுத்துச்சென்று ஆற்றில் விடுவதற்கு ஓடும் சிறார் கூட்டம் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். சற்றே பெரிய குழந்தைகள் பங்கேற்கும் அந்த தேர் இழுக்கும் காட்சியைப் பார்த்து அடம் பிடிக்கும் சிறு குழந்தைகளுக்காக நுணாக் காய்களை விளக்குமாற்றுக் குச்சிகளால் இணைத்து தயாரிக்கப்படும் அவசரத் தேர்களும் உண்டு..

தீபாவளி என்றால் யார் வீட்டு வாசலில் அதிகம் வெடித்து சிதறிய காகித குப்பைகள் கிடக்கும் என்று ஒரு அறிவிக்கப்படாத போட்டியே இருக்கும். வெடிக்காத வெடிகளை சேகரித்து, உள்ளிருக்கும் மருந்தை ஒரு காகிதத்தில் கொட்டி கொளுத்தும் சந்தோஷம், ஒரு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்புக்கு இணையானது. பண்டிகைகள் என்றால் அருகாமை வீட்டார்க்கு பட்சணங்கள் தருவதில் ஒரு சகோதரத்துவமும், புத்தாடைகளை காட்டி குதூகலிக்கும் உற்சாகமும் இன்று மெலிந்து நலிந்து, எல்லாத் தரப்பினரையும் தொலைக்காட்சி சிறப்பு திரைப்படங்கள் வீட்டுக்காவலில் வைத்துவிட்டன... நடுஇரவில் மயானத்தில் கூட நடந்து செல்ல முடிகிற அளவு பயமற்று இருந்த கிராமங்களில், இன்று பகலில் கடக்க கூட அச்சப்படும் அளவுக்கு வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.. விளம்பர இடைவேளைகளில் மட்டும் பேசும்படி மக்கள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுவிட்டார்கள்.

தீபாவளி முடிந்து சில நாட்களில் வரும் கார்த்திகை தீபத்திருநாள் மினி தீபாவளி மாதிரி.... தீபாவளியின் போது வெடிக்காமல் சேகரித்து வைத்த வெடிகளை அன்றுதான் வீட்டுப்பெரியவர்கள் வெடிக்க அனுமதிப்பார்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி சிறுபிள்ளைகள், ‘கார்த்திகைப் பந்தம்' சுற்றும் வழக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனேகமாக எல்லாக் கிராமங்களிலும் அந்தக் காலத்திலுண்டு. கார்த்திகைப் பந்தம் சுற்றுவதற்கான தயாரிப்புப் பணி என்பது, ஒரு தொழிற்சாலையில் உற்பத்திப் பொருளின் தொழில் நுட்பத்துக்கு நிகரானது.

முதலில் பனம்பூக்களை சேகரிப்பர். வளையும் தன்மையுள்ள ஆடுதோடா, அகத்தி குச்சிகளுள் ஏதாவதொன்றை வெட்டி வந்து இரண்டடி ஆழக் குழி தோண்டி, அதனுள் பரப்பி அதன் மேல் பனம்பூக்களைக் கொட்டி அதன் மேல் தேங்காய் மட்டை நார் அல்லது நிலக்கடலைத் தோல் தூவி பற்றவைத்து மேலாக பூசணியிலைகளை பரப்பி, மண் தூவி மூடிவைக்க வேண்டும்.

குறைந்த காற்றோட்டத்தில் கனன்று கனன்று பற்றும் நெருப்பு,பனம் பூக்களை தனலாக்கும். பெரிய கார்த்திகைக்கு முதல் நாள் இந்த முன்னேற்பாடெல்லாம் முடிந்து விடும். திருவண்ணாமலையில் தீபமேற்றும் பெரிய கார்த்திகைத் திருநாளன்று, கவைக்குச்சிகளை மேலும் கீழுமாய் இணைத்து, நடுவில் கிடைக்கும் வெற்றிடத்தில், பதப்படுத்தப்பட்ட பனம்பூக்களை வரகு உமியுடன் துணியில் இறுகச் சுற்றிக் கிடித்து, நெருப்பேற்றுவர்.பிடித்துச் சுற்ற வாட்டமாய் இரு முழக் கயிறு ஒன்றும் இணைக்கப் படும்.

சூழலைப் புகையாகவோ, பெருஞ்சப்தமாகவோ மாசுபடுத்தாமல் விளையாடிக் களிக்க ஆண் பிள்ளைகளுக்கு ஒரு சாதனம் கிடைத்துவிடும். பெண் குழந்தைகள் கார்த்திகைத் திருநாளை, தீபங்களேற்றியும், பொரி உருண்டை பிடித்தும் கொண்டாடிட, தத்தம் வீட்டு வாசலில் சூழ்ந்திருக்கும் இருளை, ஆண்பிள்ளைகள் தம் சாகசத் திறன் மூலம் உருவாக்கிய கார்த்திகைப் பந்தத்தின் கயிறு பிடித்து தலைக்கு மேல் சுழற்றிக் கிளம்பும் தீப் பொறிகளால் விரட்டி வெளிச்சமாக்குவர். துவக்கத்தில் இலேசாகச் சுழலும் பந்தம் , நேரமாக நேரமாக வேகமெடுத்து, அப் பிள்ளைகளைச் சுற்றிலும் தீப்பொறிகளை இறைப்பது பரவசமான காட்சி.

மறுநாள் நாட்டுக் கார்த்திகை அல்லது சண்டைக் கார்த்திகை. ஒரு கம்பின் இரு புறமும் கார்த்திகைப் பந்தம் தயாரித்து சிலம்பம் சுற்றுவது போல் சுற்றுவது. விளையாட்டுத் தோழர்களோடு நட்பு குலையாமல் போட்டியிடுவது. மூன்றாம் நாள் விடையாற்றி கார்த்திகை . இப்பழக்கம் எல்லாம் தற்போது அருகி விட்டன.

ஊர் விட்டு ஊர் வந்து, இன்று ‘வயிறே' பிரதானமான பின் எத்தனை வழக்கங்கங்கள் நம் கைவிட்டுப் போயிருக்கின்றன...! ‘பொரி'யும் ‘பொறி'யுமாகக் கழியும் கார்த்திகை தீபத் திருநாள் இன்று அகல் விளக்குகளில் மட்டும் துளியாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. எரியும் விளக்குகளில் ஊற்றிய எண்ணெய் போல தீர்ந்து கொண்டிருக்கின்றன நம் மண்ணின் திருவிழாக்கள்.

சுழலும் ஒளிவட்டத்துடன் நகரும் சிறார் கூட்டத்தை எங்கேனும் காண நேரிடும் போதெல்லாம் நினைவில் ஒளிர்கிறது என் ஊர்...!!
(கல்கியில் வெளிவந்தது)

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...