ஞாயிறு, 30 டிசம்பர், 2012

என் ஊர்... ஒரு ‘குட்டி இந்தியா' !




எந்த தேசத்துக்குச் சென்றாலும் அங்கே ஏதேனும் ஒரு மூலையில் யாராவது ஒரு தமிழன் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதுபோல, தமிழகத்தின் எந்த கல்லூரிக்குச் சென்றாலும் அங்கு ஒரு நெய்வேலி மாணவனையோ, மாணவியையோ நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம். 


செம்மண் புழுதியை உடம்பெங்கும் அப்பிக்கொண்டு, கால் சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் கோலிக்குண்டுகளை திணித்துக்கொண்டு திரிந்த இளமைப்பருவத்தை இப்பொழுதும் அசைபோட்டபடி அலைகிறது மனது.


நான் படித்த மந்தாரக்குப்பம் என்.எல்.சி மேல்நிலைப்பள்ளியின் மிக விஸ்தாரமான மைதானத்தில் பின்னாளில் பிரபலமாவதற்கு வேண்டிய அத்தனை தகுதிகளும் கொண்ட அநேக மாணவர்கள், மாணவிகள் விளையாடிக் களித்திருக்கிறார்கள். அவர்களின் முழங்கால் சிராய்ப்பில் சிந்திய குருதித் துளிகளும், வியர்வைச் சொட்டுகளும் கலந்த மண்துகள்களின் மீது நடக்கையில் இப்பொழுதும் நெருடுகிறது.. எங்கேனும் ஒரு அலுவலகத்தில் கோப்புகளின் தூசியை நுகர்ந்தபடி, இயந்திரங்களின் அழுக்குகளுக்கிடையில் போராடியபடி தொலைத்துவிட்ட வாழ்க்கையை அவர்கள் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..


இரவானால் என் பள்ளியின் அதே மைதானம் எல்லோராலும் கைவிடப்பட்டவர்களின் புகலிடமாக இருந்திருக்கிறது. வயோதிகம் காரணமாக ஒதுக்கப்பட்டவர்கள், காதலித்து தோற்றுப்போனவர்கள், நோயின் கடுமை காரணமாக நலிந்து போனவர்கள் என்று பல தரப்பினரின் அடைக்கலம் அந்த மைதானம்.. நாற்பது வயதாகியும் வேலை கிடைக்காமல் வீட்டாரால் வெறுக்கப்பட்ட ஒரு அற்புதமான பாடகரை அன்றைய காலகட்டத்தில் மைதானத்துக்கு இரவானால் வருபவர்கள் அறிவார்கள். எவர் இருப்பதைப் பற்றியும் கவலைப்படாமல், பெருங்குரலெடுத்து துயரமான பாடல்களை அவர் பாடிக்கொண்டே இருப்பார். சில சமயம் வரிகளின் அர்த்தத்தில் மூழ்கி உடைந்து கமறும் அவரது அழுகுரலில் புதைந்து போன  சோகங்களை எவர் அறிந்திருக்கக்கூடும்? மெலிதாக வீசிக்கொண்டிருக்கும் காற்றுதான் அவரது நேர்மையான நிரந்தர ரசிகன்.. காற்றில் கரைந்து காலாவதியாகிப்போன  குரல்களை மீட்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?


தெருவுக்குத் தெரு எல்லா விளையாட்டுகளையும், விளையாடிக் கொண்டிருக்கும் ‘ ஆல்ரவுண்டர்' பசங்களை நெய்வேலியில் சில வருடங்கள் முன்பு வரை கூட பார்த்தவர்கள் உண்டு. ஆடு தொடா இலைச் செடியின் முனை வளைந்த குச்சிகளை ஹாக்கி பேட் ஆக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவன், பிறிதொரு தினத்தில் கைபந்து அணியில் விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருப்பான். கபடியிலிருந்து பூப்பந்து வரை கொடி கட்டிப் பறந்த நெய்வேலி வீரர்கள் அனேகம்.. நான் கல்லூரியில் படித்த ( 80 களில்) காலத்தில் நெய்வேலியின் கால்பந்து அணி தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற அணிகளில் ஒன்று. அத்தனை பெரிய கால்பந்தை ஒரு சிறிய கிரிக்கெட் பந்து விழுங்கிவிட்டது.


உலகத்தின் ஏழு அதிசயங்கள் போல நெய்வேலிக்கென்று ஏழு அதிசயங்கள் உண்டு.


1. நீலச்சேலை அணிந்த இளம்பெண் ஒருத்தி, தன் கச்சிதமான உடலோடு வளைந்து நெளிந்து படுத்திருப்பது போல அழகான தார்ச்சாலைகளும், ஒழுங்கமைவுடன் கூடிய வீடுகளும்....


2. ஒரு குடும்பத்திற்கு தோரயமாக 350 என்ற கணக்கில் நகரெங்கும் நின்று மெளனமாகத் தலையாட்டிகொண்டிருக்கும் விதம் விதமான  மரங்கள்..


3. ஒரு ‘குட்டி இந்தியா' போல எல்லா மாநிலத்திலிருந்தும் எல்லா இனத்தவரும் வசித்தாலும் , இனத்துவேஷமோ, மொழித்துவேஷமோ இல்லை என்று பெருமிதத்தோடு வாழும் சகோதரத்துவம்...


4. சென்னையைப் போன்று இமாலய மக்கள் தொகையோ, மதுரையைப் போல அன்றாடம் வந்து போகும் ஜனத்திரளோ அற்ற மிகச்சிறிய நகராக இருந்தும் 15 வருடங்களாக நடை பெற்றுவரும் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி...


5. ஆசியாவின் மிகப்பெரிய ஐம்பொன் நடராஜர் சிலை


6. எகிப்தின் கிஸா பிரமிடுகளின் தூரக்காட்சி போல நெடிதுயர்ந்து நிற்கும் செம்மண் முகடுகள்


7. ஊசி வீதி துவங்கி, பக்கெட் வீல் வீதி வரை வேறெங்குமே காணமுடியாத விசித்திரமான பெயர்கள் தாங்கிய தெருக்கள்.



திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் வரை புரொஜக்டர் ஆப்பரேட்டர் என்று ஒரு நபர் இருக்கிறார் என்பது நினைவுக்கு வராதவர்கள், திரையில் கரு நிழல் படரத்தொடங்கியதும், ஆப்பரேட்டர் அறை பக்கம் திரும்பி ‘என்னடா படம் ஓட்டறீங்க' என்று கூக்குரலிடுவது போல, தமிழகத்தில் எங்கு மின்வெட்டு இருந்தாலும் ‘ நெய்வேலியில் வேலை நிறுத்தமா?' என்று கேட்கிறார்கள்.



தமிழகத்தின் பல பகுதிகள் பிரகாசமாக ஒளிர்வதற்கு காரணமாகவர்களாக நாங்கள் இருந்தாலும், அவ்வப்போது ஏற்படும் இருளுக்கு காரணமானவர்கள் இல்லை என்பது நம்ப முடியாத முரணாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. 


இலக்கியத்தை ஜனநாயகப்படுத்த விரும்பாதவர்களின் பொருமல் ஒன்றுண்டு.. நெய்வேலியின் மக்கள் தொகைக்கு இணையாக படைப்பாளிகளும், கலைஞர்களும் இருப்பதாக அவர்கள் கிண்டலடிப்பார்கள். இந்த மாயாஜாலம் நெய்வேலி நிர்வாகம் முன்னின்று நடத்தும் புத்தகக் கண்காட்சியால் நிகழ்ந்தது. ஒருவரிடமிருந்து ஆக்கப்பூர்வமான இன்னொருவரை ஜனிக்கச் செய்வது மன்னிக்க முடியாத குற்றமா என்ன?
இங்கே வசிக்கும் பெரும்பாலோருக்கு நெய்வேலி சொந்த ஊர் இல்லை. ஆனால் எல்லோருமே நெய்வேலிக்கு சொந்தமானவர்கள்தான். ஒரு உடற்கூறு நிபுணரைப்போல ஒரு நெய்வேலிக்காரரை பிரித்து மேய்ந்தால் கொஞ்சம் வெயில், கொஞ்சம் கரி, ஏதேனும் ஒரு புத்தகம், ஏதேனும் மரத்தின் இளந்தளிர், கொஞ்சம் செம்மண்.. என்று சரிசமமாய் கலந்த கலவையாக இருப்பார்.


இங்கே பணிபுரிபவர்கள் மிக அதிகமாக சம்பாதிப்பவர்கள் என்ற கருத்து பரவலாக உண்டு.. அதிகம் அறியாதது.. நிறைய கொடுப்பவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். எங்கு இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும், எங்கு அநாதரவான குரல் கேட்டாலும், முதலில் கை கொடுப்பவர்கள் அனேகர் இங்குதான் இருக்கின்றனர்.


எனது புனைபெயருக்கு முன்னால் ‘நெய்வேலி' என போட்டுக்கொள்வதை பார்த்து, எனக்கு மிக நெருங்கிய கவிஞர் ஒருவர் “ நாங்கள் எல்லாம் உலகக் கவிஞர்கள்.. நீங்கள் உள்ளூர் கவிஞர்தானா?” என்று குறும்பாக கேட்பது உண்டு. புன்னகையோடு அந்த கேள்வியை எதிர் கொள்கிறேன். பத்திரிகைகளில் எனது படைப்புகள் பிரசுரமாகும்போதெல்லாம் , என்னையும் அறியாமல் ஒரு பார்வையற்றவர் பிரெயில் எழுத்துக்களை தடவி உணர்வது போல, ‘நெய்வேலி' என்ற என் ஊரின் பெயரை மெல்ல வருடுவதுண்டு.. கண்களிலிருந்து வெம்மையான நீர் கொப்பளிக்கிறது... நெய்வேலி நான் பிறந்த ஊர் அல்ல... என்னிலிருந்து என்னை பிறக்க வைத்த ஊர்...
                            - நன்றி : என் விகடன் இணைய இதழ் 


வியாழன், 20 டிசம்பர், 2012

உலகம் ஒருபோதும் அழியாது



        பசு, எலி, பூனை, காளை நான்கும் ஓரிடத்தில் நின்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தன.
“மனிதர்களுக்கு நான் தான் பால் தருகிறேன். எனவே நான் தான் இங்கு மிக முக்கியமானவன். நான் இல்லையென்றால் உலகம் அழிந்துவிடும்” என்றது பசு.
   
       “நான் இல்லையென்றால் பசு தாய்மை அடையாது... மனிதர்களுக்கு பாலும் கிடைக்காது.. என்னை விட முக்கியமானவர் யார்?. ” என்றது காளை

        “நான் இல்லாவிட்டால் பூனைகள் என்ன சாப்பிடும்? மனிதர்கள் உணவைத் தானே திருடி சாப்பிடும்? எனவே நான் தான் இங்கு மிக முக்கியம். நான் மரணமுற்றால் இந்த  உலகமும் மரணம்” என்றது எலி.

“நான் மட்டும் இல்லையென்றால் மனிதர்களின் பசியாற்றும் பயிர்களை எலிகள் தின்று அழித்துவிடும் எனவே நான்தான் மிக மிக முக்கியம். நான் இல்லையெனில் சர்வமும் இல்லை” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டது பூனை.

          குறுக்கே நடந்து சென்ற மனிதன் “ ஆக என்னைச் சுற்றிதான் உங்கள் வாழ்வும், இயக்கமும்.. நான் இல்லையென்றால் நீங்கள் எல்லாம் தேவையே இல்லை. நான்தான் இந்த உலகமே” என்றான் கர்வத்துடன்..

          பல்லாயிரம் ஆண்டுகளாய் இவர்கள் யாரும் இல்லாமலேயே பூவுலகில் இயங்கிப் பழகிய சூரியனும், நிலாவும் எப்பொழுதும் போல ஒளியை வீசியபடி எதுவும் பேசாமல் கடந்தன இவர்களை..!

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...