திங்கள், 28 ஜூன், 2010

August Rush





இசை என்ற பொருத்தமான சொல்லை எப்படி யார் நம் மொழியில் சூட்டினார்கள் என்பதை எண்ணி பல முறை வியக்கிறேன். “இசை“ என்று உச்சரிக்கும் போதே ஒரு “ஆணை“ இடுவது போல் எப்படிப்பட்டவரும் உடன்பட்டு இசைந்து விடுவர். எந்த ஒரு கலைக்கும் இல்லாத சிறப்பு “இசை“க்கு உண்டு. கேட்கிற சில நொடிகளில் நீங்களும் ஒரு வாசிப்பாளராக, பாடுபவராக உணர்கிற அல்லது மாற முயற்சிக்கிற அற்புதம் நிகழ்ந்தே தீரும். 


நாம் துக்ககரமாக இருக்கின்ற ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ சில உனனதமான இசை எங்கிருந்தோ மிதந்து வந்து வாழ்வின் அற்புத தருணங்களை, இருத்தலின் நியாயத்தை உணர்த்தியிருக்கும்.

மிக அற்புதமான விஷயம் என்று நீங்கள் கருதும் ஒன்றை வேறொருவர் “அற்புத“மென கருதலாம். நீங்கள் துச்சமென நினைக்கும் ஒன்றை இன்னொருவர் கூத்தாடி கொண்டாடலாம். ஆனால் இசையை வெறுப்பவர்கள் என்று எவரேனும் உண்டா என்ன?

எல்லோராலும் கைவிடப்பட்டவர்களைக் கூட இசை தன் தோளில் சுமக்கிறது என்பதை இரயில் பயணங்களில் குறுக்கிடும் பார்வையற்ற பாடகர்களை காணும் போதெல்லாம் உணர்கிறேன். “அகதிகள்“ என்று யாரை குறிப்பிடுவோம்? ஒரே தேசத்திலிருந்து இன்னொரு தேசத்துக்கு ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு துரத்தப்பட்டவர்களை மட்டும்தானா?

பெற்ற தாயும், தகப்பனும் உயிருடன் இருக்கும் போதே சமூக பொருளியல் காரணங்களால்  கைவிடப்பட்டு வாழும் குழந்தைகள் கூட ஒரு வகையில் அகதிகள்தானே...

கணநேர பாலுணர்வு தூண்டலால் கருவாகி பின் அற்ப காரணங்களால் பிரிய நேரிட்ட ஒரு பெண்ணின் குழந்தைதான் “இவான்“. அழிக்கப்பட்ட அடையாளத்தை இசை மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இயங்குகிற சிறுவனின் கதையே ஆகஸ்ட் ரஷ்.

ஒரு பயணச்சீட்டின் பின்புறம் எழுதிவிடக்கூடிய எளிமையான கதை. காலம் காலமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்த்து வரும் “மையக்கரு“ தான் இந்த படத்தின் கதையும். தொழில் நுட்ப ரீதியாக கலை ரீதியாக இந்த பழக்கப்பட்ட கதையை ஒரு ரம்மியமான திரைப்படமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு.

லூயிஸ் என்பிற கிதார் கலைஞனும், லைலா என்கிற செலோ வாத்திய கருவியை இசைக்கும் பெண்ணும் எதேச்சையாக ஒரு இசை நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். செலோ(Cello) என்பது வயலின் குடும்பத்தைச்சார்ந்த இத்தாலிய நாட்டு இசைக்கருவி. உட்கார்ந்தபடி  ஒரு ஆள் அதை வாசித்தால் அவர் உயரத்துக்கும் இருக்கும். பார்த்த மாத்திரத்தில் இருவரும் ஈர்க்கப்பட்டு உடல் ரீதியாகவும் அதே நிமிடத்தில் இணைந்தும் விடுகிறார்கள். விடிந்த பிறகு லைலாவின் தந்தை அவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விடுகிறார். லூயிஸ் சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று விடுகிறான்.

றந்து விட்டதாக லைலாவிடம் பொய் சொல்கிறார்.
ஓர் இரவில் ஏற்பட்ட உறவில் கர்ப்பமாகிறாள் லைலா. கலைக்க மறுத்து குழந்தையை சுமக்கும் லைலா ஒரு விபத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை லைலாவின் தந்தை போலியாக லைலாவின் கையெழுத்திட்டு அனாதை இல்லத்தில் சேர்த்து விடுகிறார். குழந்தை

அனாதை இல்லத்தில் வளரும் குழந்தை இவானுக்கு இசையின் மீது அளப்பரிய ஈடுபாடு. 11 வயது நிரம்பும் போது குழந்தை நல சமுக சேவகர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவனது இசை ஆர்வம் மற்றும் அவனது பின்னணி பற்றி அறிந்து இரக்கம் ஏற்பட்டு  தன்னை  நியுயார்க்கில்  வந்து சந்திக்கும் படி முகவரி அட்டையை தருகிறார். நியுஜெர்சியில் உள்ள அனாதை  இல்லத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி நியுயார்க் செல்கிறான்.  இவான் ஆனால் முகவரி அட்டையை தொலைத்த காரணத்தினால்  அவரை சந்திக்க முடியாத  இவான் சாலையோரம் கிடார் இசைத்து  பிச்சையெடுக்கும் ஆர்தரை சந்திக்கிறான்.

ஆர்தரிடம்  நட்பு  பாராட்டி  அவனோடு இரவில் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்கிறான். அது ஒரு  பாழடைந்த பழைய நாடக கொட்டகை அங்கு ஆர்தரைப் போன்ற அனாதை குழந்தைகள்  இசைக்கருவிகளை வாசித்து பிச்சையெடுப்பவர்களாக  இருக்கிறார்கள்  அவர்களை  விசார்ட் என்பவன் பாராட்டி பராமரித்து வருகிறான். விசார்டிடம் தனக்கு கிடார் வாசிக்க கற்றுத்தருமாறு கேட்கிறான். இவான். யாருக்கும் தெரியாமல் இரவில் கிடார்-ஐ பயிற்சி இல்லாமல் இவான் வாசிப்பதைக் கண்டு இவன் சாதராணமான ஆளில்லை என்று புரிந்து கொண்டு அவனுக்கு கிடார் வாசிக்க கற்றுத் தருகிறான். குழந்தைகளை அடைத்து வைத்து பிச்சையெடுப்பது பற்றி அறிந்த காவல்துறை அரங்கிற்குள் ரெய்டு செய்கிறது. அங்கிருந்து தப்பித்த இவான் ஒரு சர்ச்சிற்குள் சென்று மறைகிறான். அங்கு இசைக்கப்படும் ஒரு பாடலில் மயங்கி அங்கேயே தங்கி விடுகிறான். இசைக்குழுவில் பாடும் ஹோப் எனும் கறுப்பின சிறுமி அவன் பியானோ வாசிக்க அனுமதிக்கிறாள். முன் பின் தொட்டறியா பியானோவில் சுற்றுப்புற சப்தங்களை வைத்து இசைக்குறிப்புகளை உருவாக்குகிறான்.

அதிசயித்துப்போன ஹோப், சர்ச் பாதிரியாரிடம் காண்பிக்கிறான். பிரமித்துப்போன அவர் இவானை புகழ்பெற்ற ஜுலியார்ட் இசைக்கல்லூரியில் சேர்க்கிறார். அங்குதான் அவன் ஆகஸ்ட் ரஷ் என்று பெயரை மாற்றி பதிவு செய்கிறான்.

விடம் மகன் உயிரோடு நியுஜெர்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருப்பதாக கூறுகிறார். மகனைத் தேடி வரும் லைலாவிடம் இவான் யாரிடமும் சொல்லாமல் வெளியேறிய தகவல் சொல்லப்படுகிறது. குழந்தை நல சமூக சேவகர் மூலம் இவானின் புகைப்படம் கி்டைக்கிறது.லூயிஸ் ஒரு நிகழ்ச்சிக்காக நியுயார்க் வருகிறான்.
லைலாவின் தந்தை இறக்கும் தருவாயில் லைலா

மோனிக் இசை நிகழ்ச்சியில் வாசிக்க தேர்வு செய்கிறார்கள். அதே நிகழ்ச்சிக்கு வர இவானின் நம்பிக்கையைப்போல இசை அவர்களை இணைக்கிறது.
ஜுலியார்ட் கல்லூரியிலும் இவான் புதிய இசைக்குறிப்புகளை உருவாக்கும் வேகத்தைப் பார்த்து அவனை புகழ்பெற்ற பில் ஹார்

படத்தின் ஆரம்பக்காட்சியில் இவான் ஒரு வயல் பிரதேசத்தில் நிற்பான். காற்றின் இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப பச்சை பசேலென்ற பயிர்கள் நடனமாடியபடி இருக்கும். பயிர்களின் நடுவே நின்று இவான் ஒரு கோர்ப்பாளான் போல கைகளினால் இசையை சைகைகள் செய்யும் காட்சியில் ஒளிப்பதிவும், இசையும் நேர்த்தியான கச்சேரியை கண்முன் நிறுத்துகிறது. கண்ணுக்கு விருந்து என்ற சொல்லுக்கு பொருந்தும் காட்சி அது. காட்சி ஊடகங்களில் ஒரு உணர்வை எப்படி நேர்த்தியாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இந்த காட்சி மிகப்பெரும் உதாரணம். திரைப்படக்கலை பயிலும் மாணவர்கள் அவசியம் தங்கள் கவனக்குறிப்பில் கொள்ள வேண்டிய காட்சி இது. இவானின் உலகமே இசைதான் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

பறவைப் பார்வை எனப்படும் Bird’s Eye View கோணத்தில் கேமரா மெல்ல நகர்ந்து செல்ல கூடவே அதே உயரத்துக்கு நம்மை சுமந்து கொண்டு இசையும் உயர உயர காட்சி இலக்கணத்தில் சாட்சி கவிதை அது. ஜான் மெத்தனானின் கேமரா பசுங்கதிர்களின் ஈர்ப்பசைவைக் கூட உணர வைக்கிற அளவு துல்லியமாக பதிவு செய்திருக்கிறது.

தன்னைத் துருத்திக்கொள்ளாமல் கதையின் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ற லைட்டிங் பயன்படுத்தியிருக்கிறார் மெத்தினன். குறிப்பாக ஆர்தர் போன்ற சிறார்கள் அடைக்கப்பட்ட இடத்தினை குறைந்த மஞசள் வெளிச்சத்திலும் இவானும், லூயிஸும் கிடார் வாசிக்கும் இடத்தில் பளிச் சென்ற வெள்ளை பின்னணியிலும் படமாக்கியிருக்கிறார்.

லூயிஸ் நியுயார்க் வரும் காட்சியில் தூவும் பனிச்சாரல் இடையே லூயிஸ் நடந்து செல்லும் போது நீங்களும் நனைவீர்கள். ஒரு வேளை நீங்கள் துவட்டிக்கொள்ளவும் முயற்சிப்பீர்கள்.

சர்ச்சில் அடைக்கலமான இவான் பியானோ வாசி்க்கும் காட்சி தொழல்நுட்ப திருவிழா என்றே கூறலாம். சர்ச்சின் சுவர் துவாரங்கள் வழியே ஊடருவும் ஒளிக்கற்றை இவான் மற்றும் பியானோ மீது படர சச்சின் வெளியே கேட்கும் ஒவ்வொரு அசைவும் இசையாக பரிணமிக்கிறது. கூடைப்பந்து தரையில் படும் சப்தம், கண்ணாடி கோப்பையின் விளிம்பில் நீர் சுழலும் சப்தம், கால்கள் நடக்கும் சப்தம் தெரு வியாபாரியின் மணி சப்தம் இப்படி எலலாம் இசையாகிறது. ஜான் கேஜ்ன் பிரபலமான சொல்லாடலான் All Sounds are Music (எல்லா ஒலியும் இசையே) என்பதை அடிப்படையாக் கொண்ட காட்சி இது.

படத்தில் மார்க் மன்சினாவின் இசை பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. சர்ச்சில் வான நுழையும் பொது கறுப்பினக்குழுவினர் பாடும் Rise it Up’ என்ற பாடல் எவரையும் மயங்கவைத்து விடும். குழுவில் பாடும் ஹோப் என்ற சிறுமியின் முகபாவங்களும் அங்க அசைவுகளும் அபாரமானவை. இந்த பாடல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. விருது கிடைக்காவிட்டாலும் மிக ரம்மியமான பாடல் என்பதில் எவருக்கும் வேறு கருத்து இருக்கமுடியாது. இதைப்போல ஆர்தர் பாடும் Father” என்கிற பாடல் உயிரை ஊடுருவும்.






எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல இறுதி காட்சியில் இசைக்கப்படும் “Rhapsody” எனப்படும் சிம்பொனி இசைக்கோளம் நம் நரம்புகளில் ஓடி ஒவ்வொரு அணுவையும் துடிக்கச் செய்யும் இசை மிக அதிகமான வயலின் கருவிகள் அதில் பயன்படுத்தப்பட்டதால் அதில் இந்தியத் தன்மை இருப்பதும் ஒரு காரணம்.

எடிட்டிங் சில இடங்களில் குறைபாடுகளுடனும் சில இடங்களில் நிறைவாகவும் உள்ளது. இவான் வயல்வெளிகளில் வாசிக்கும் காட்சியில் ஜம்ப் கட் ஆகி அனாதை இல்லத்துக்கு வருவது பிழை. சர்ச் காட்சியி்ல் பியானோ வாசிக்கும் இடத்தில் நேர்த்தி படத்தின் ஒலிப்பதிவு மிக துல்லியம்.

இத்தனை தொழில் நுடப சிறப்புகள் இருந்தும் படத்தை உச்சியில் வைத்து கொண்டாட முடியாத படிக்கு தடுப்பது மிக பலவீனமான கதையும் ஓட்டைகள் நிறைந்த திரைக்கதையும்தான்.

சந்தித்த நிமிடத்தில் உறவு அதன் விளைவாக கர்ப்பம் தமிழ்படங்களில் உள்ளது போல் அப்பாவின் கெடுபிடி ரொம்ப சுலபமாக தத்து கொடுத்துவிடுதல், மருத்துவமனையில் எவருமே இது பற்றி லைலாவிடம் சொல்லாதது. 11 வருடங்கள் வரை காதலியைத் தேடாத லூயிஸ் அதன் பிறகு செல்போனில் முயற்சிப்பது எந்த இசைக்கருவியையும் முன்பின் தொடாமலே ராகத்துடன் வாசிப்பதும் இசைக்குறிப்புகள் எழுதுவதும் என்று ஏகப்பட்ட லாஜிக் இல்லா மேஜிக்குகள்.

நியுயார்க் டைம்ஸ்-ன் பிரபல திரை விமர்சகர் ஸ்டீபன் ஹோல்டன் இரு ஒரு நகைச்சுவையான மாயாஜால கற்பனை என்று விமர்சித்தார். Docwell எனும் இசை விமர்சக குழு உண்மையான இசைக் கலைஞர்களை இது இழிவுப்படுததுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

எந்த ஒரு கலை இலக்கிய படைப்புக்கும் உயிர் அதன் உள்ளடக்கம்தான். திரைப்படங்களை பொருத்தவரை கதைதான் பிரதானம் மற்ற அனைத்து தொழில் நுட்பங்களும் கதைக்கு நேர்மையாக உற்ற துணையாக இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப காரணங்களால் ஒரு படம் ஓடினால் அது விதிவிலக்கே தவிர உதாரணமில்லை. திரைப்படக்கலை பயில்பவர்கள் இந்தப்படத்தை காட்சியமைப்பை உருவாக்க தெரிந்து கொள்ள அவசியம் பார்க்க வேண்டும்.

ஜுன் மாதம் 20ம் தேதி ஆண்டு தோறும் உலக அகதிகள் தினமாகவும், ஜுன் மாதம் 21ம் தேதி உலக இசைதினமாகவும் அனுசரிக்கப்படுவதால் பெற்றோர்களால் கைவிடப்பட்டு அகதியைப்போல் திரியும் ஒரு குழந்தை இசை மூலம் அவர்களை அடையும் இப்படத்தை இம்மாதம் குறிப்பிட்டுள்ளேன்.

துயரங்கள் சூழந்த இந்த வாழ்க்கையில் இழப்புகள் குறித்த கவலைகள் நம்ம இநுக்கிய படியே இருக்கின்றன். என்றாலும் அன்னையின் பாரபட்சமற்ற கனிவான பார்வை போல் இயற்கையின் வனப்பு மிக்க காட்சிக்கும் மனத்தெம்பூட்டும் ஒரு தந்தையின் கரங்கள் போல தமூட்டும் இசையின் வருடல்களும் இருக்கும் வரை நம்மில் எவரும் அனாதை இல்லை என்றுதான் தோன்றுகிறது.





வியாழன், 17 ஜூன், 2010

ஒரு கணம்

அழிக்க முடியாமல்அடுத்தடுத்து
ஒன்றன் மீது ஒன்றுஅழுத்துகிறது...
ஒப்பனை முடிந்து பூசப்பட்ட வர்ணங்களை
உரிக்க முயன்று வரிவரியாய் எரிகிறது உடல்...
உளிகொண்டு
செதுக்கிய இடத்தில்வழிகிறது
உதிரம் சொட்டு சொட்டாய்...
காற்றுத் தூவிய மகரந்தத் துகள்கள்
சுடுமணலாய் கொதித்தது மனத்தழும்புகளில்...
ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன
முட்கள் கீறிய புண்களில்...
இறக்கி வைக்க முடியாமல் கனக்கிறது
கடந்தகால நினைவுகள்...
அச்சமூட்டுகிறது
மனதைச் சுமந்தபடி திரியும் மனிதம்...
புல்வெளியெங்கும் புரண்டு
உடல் தேய்ந்து
நாவால் முதுகு வருடி
சில கணமாவது
மனமற்ற பாழ்வெளியில்
ஐந்தறிவு மிருகம் போல்
கிடக்கத் தவிக்கிறது
ஆறாவது அறிவு.

நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர்;

“கடவுளின் பிரதி தாய்-கடவுளின் பரிசு குழந்தை”

உலகின் அதிகபட்ச சந்தோஷக்காரர்களாக இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுவார்கள். 1.மனநிலை பிறழ்ந்தவர். 2.குழந்தைகள்.
இரண்டு பிரிவினருக்கும் கள்ளங்கபடமில்லை. இரண்டு பிரிவினருக்கும் நீண்ட காலத் துயரங்கள் இல்லை. தாங்கள் எதுவாக ஆக நினைக்கிறார்களோ அதுவாகவே நினைத்த நிமிடத்தில் நினைத்த இடத்தில் ஆக முடிந்தவர்கள்.
பிரச்சனை அவர்களுக்கு சிகிச்சையளித்து நம்மைப் போலவே மாற்ற நினைக்கும் இடத்தில் துவங்குகிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தபடியே இருக்கிறது.
தேர்வுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மாதங்கள் துவங்கியவுடனே எழுகிற பதட்டம் குழந்தைகளை விடப் பெற்றோர்களுக்கு அதிகமாகி விடுகிறது.எவ்வளவு நீளமான பட்டங்களைப் பெயர்களுக்குப் பின்னால் தாங்கி நின்றாலும் குழந்தைகளை படிக்க வைக்கிற முயற்சியில் முட்டாளாக நம்மை உணர்கிற தருணம் உறுத்தியபடியிருக்கிறது.
நாமறியாமல் நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர், பல சமயங்களில், பல விதங்களில் குழந்தைகளை மிரட்டியபடி கர்ஜிக்கிறார்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்தோமோ அதையெல்லாம் செய்து முடித்தபின் தோல்வியில் முடிகிறது நம் பாடம் புகட்டும் பொழுதுகள். நம்மை வாகனங்களாக்கிக் குழந்தைகளை நாம் நினைத்த இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதா? அவர்களின் வழியிலேயே அவர்களைப் பயணிக்க விடுவதா? என்ற குழப்பம் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வந்து நம்மை உறங்க விடாமல் செய்கிறது.
இன்றைய பெற்றோர்கள் தலைமுறை மீது என்னதான் ஆயிரம் ஆயிரமாகக் குற்றச் சாட்டுகளை அள்ளி வீசியபடி சபித்தாலும் ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். குழந்தைகளுடனான நெருக்கத்தில் அதிகபட்ச உச்சங்களை, முன் எப்போதையும் விட கண்டிருப்பதற்கு. இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக் கூட வாசல்களில் ஐஸ் விற்பவர்களையும், மிட்டாய் விற்பவர்களையும் மட்டுமே காண முடியும். இப்போதோ குழந்தைகளை விடுவதற்கும், அழைப்பதற்கும் அக்கறையுடன் காத்திருக்கும் பெற்றோர்கள்!
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விவாதிக்கும் ஆர்வத்துடனும், சக்திக்கு மீறிய செலவுகளால் குழந்தைகளின் திருப்தியின் எல்லை எதுவென்று தேடிய படி தவிப்புடன் இருக்கும் பெற்றோர்களை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் காண்பதரிது.
அதன் காரணமாகவே குழந்தைகளின் மீது சுமத்தப் படுகிற பளூ அவர்களின் சக்திக்கு மீறியதாகவே இருக்கிறது. அது அவர்கள் மீது செலுத்தப் படுகிற பாசமாக இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப் படுகிற பாடதிட்டங்களாக இருந்தாலும், கூடுதல் சுமையாகவே உணரப் படுகிறது.
பட்ட மேற்படிப்பை முடிக்கும் வரை இன்றைய தந்தைக்கோ தாய்க்கோ ஆன செலவைவிட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கிற குழந்தைகளுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை புலப்படுகிற அதே சமயத்தில், பட்டமேற்படிப்பு முடிக்கும் வரை இன்றைய பெற்றோர்கள் சந்தித்த தேர்வுகளை விட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சந்திக்கும் தேர்வுகள் அதிகமென்பதையும் மறுத்துவிட முடியாது.
வீக்லி டெஸ்ட், ஸ்லிப் டெஸ்ட், மந்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட், மாடல் டெஸ்ட், மெயின் எக்ஸாம், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் என்று மதிப்பெண்களைத் துரத்தியபடியே நகர்கிறது நம் குழந்தைகளின் நாட்கள். இதுவும் போதாதென்று இந்தி வகுப்பு, பாட்டு கிளாஸ், டான்ஸ் க்ளாஸ், யோகா க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று வகுப்புகளின் தொகுப்பாக குழந்தைகளை சகல கலா வல்லவர்களாக்கும் முயற்சிகள்!
நம்மால் இயலாதென்று விடுபட்ட விஷயங்கள், நமக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போன வித்தைகள், நம் கனவுகளில் சதா சஞ்சரிக்கும் நம்முடைய ஆசைகளைத் திணிக்கும் பையாகக் குழந்தைகளை ஆக்குகிறோமோ என்ற கவலை நம்மைக் குற்றஞ் சாட்டியபடியே இருக்கிறது.
எல்லாமுமாகச் சேர்ந்து குழந்தைகளைக் கல்வி ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ சராசரிக்குக் கீழே தள்ளி விடுகிறது.
போதனை முறைகளையும் கற்கும் சூழல்களையும் மாற்ற முடியாதவரை நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியரை சற்று சாந்தப்படுத்தி சிந்திக்க விடுவதே நல்லது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

தீவுகளின் திரள்;

“தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்கள், பக்கத்திலிருக்கும் இமைகளைப் பார்ப்பதில்லை”
இந்த வார்த்தைகளில் இருக்கும் நிஜம் சுட்டும் பொருள் அனேகம். உலகம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லச் சுருங்கி விரல் நுனியில் குவியத்தொடங்கி விட்டது. நினைத்த இடத்திலிருந்து, நினைத்த மாத்திரத்தில், யாரையும் எளிதாக செல்லிடைப் பேசிகள் மூலம் எண்களை ஒற்றித் தொடர்பு கொள்ள முடிகிறது.
கண்ணெதிரே விரியும் அலைதளத்தில், செய்திகள் இ.மெயில் சிறகில் சுகமாய்ப் பிரயாணிக்கின்றன விரைவாக...
ஏதோ ஒரு நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பந்தின் மீது படும் மட்டையின் மெல்லிய ஒலி சட்டென்று நம் காதருகே விழுந்து திடுக்கிடச் செய்கிறது சாட்டிலைட் ஒளிபரப்பின் மூலம்...
அனேகமாக தொலைபேசியில்லாத வீடுகளில்லை எந்த ஒரு நகரத்திலும்...
இருப்பினும் நகரம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று ‘அறிமுகமின்மை'. ஒருவருக்குமே தெரியாமல் ஒரு மனிதன் நகரத்தின் மையப் பகுதியில், நெரிசல் மிகுந்த வீதியில், கதவுகள் சாத்தப்பட்ட வீடொன்றில் வசித்து, சுவடில்லாமல் மறைந்துவிட முடியும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அது மிக சாத்தியம்.
நம் முன் எழும் முக்கியமான கேள்வி ‘தொலைத் தொடர்பில் நாம் நினைத்துப் பார்த்திராத உச்சிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அருகிலிருக்கிறவரை அறிந்திருக்கிறோமா?'
இந்தியாவின் எந்த ஒரு பெயர் பெற்ற நகரத்திலும், எந்த ஒரு பிரதான அல்லது சந்தடியற்ற வீதிகளில் வசிப்பவர்களிடம் உங்களால் மெளனத்தை மட்டுமே பெற முடிந்த கேள்வியொன்றை தைரியமாகக் கேட்டுவிட முடியும். அது, ‘உங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவரின் பெயர் மட்டுமாவது உங்களுக்குத் தெரியுமா... சந்தேகத்திற்கிடமின்றி?'
கிராமங்களையும் மெல்ல மெல்ல நகரங்களாக்கி வருகிறோம். மனிதர்களை நாகரீகப் படுத்துவதில் அலாதி ஆர்வம் நமக்கு. மறுபடியும் அவர்களை ‘வெள்ளந்தியான' மனிதர்களாக மாற்ற முடியுமா சில விஷயங்களுக்காகவாவது...?
ஆனால், இவை யாவற்றுக்குமான குற்றவாளிகளென்று யாரையாவது கூண்டிலேற்றிவிட்டுத் தப்பித்தல் ஒருபோதும் தீர்வாகாது...
காரணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவிழ்க்க நமக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்க் கலையும்.

1.வீடுகள் கிராமங்களில் உள்ளதுபோல் நெருக்கியடித்துக் கொண்டில்லாமல் தனித்தனியே விலகி பதவிசாக அமைந்திருக்கும் பொதுவான தெருக்கள் அமைப்பு.

2.வெளியேறிச் சென்று விடாமல் கண்களையும் கால்களையும் பிடித்திழுக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்...

3.கிராமவாசிகள் பெரும்பாலும் சுய தொழில் சார்ந்தவர்கள். நகரங்களில் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சூழல்களால் நேரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாதபடிக்கு நெருக்கடியான கால அட்டவணை.

4.கிராமங்களில் எவ்வளவு விமர்சையாக நடந்தாலும் திருமணம் போன்ற தனிமனித விழாக்கள் வீடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தெருவாசிகள் ஒவ்வொருவரையும் திருமண வேலைகளில் பங்கேற்றச் செய்யும் சாதுர்யம். நகரங்களிலோ பிறந்தநாள் விழாக்கள் கூட ஒப்பந்தக்காரர்களை நம்பி மட்டுமே...

5.ஊர் நலனுக்கு ஊர் கூடி முடிவெடுக்கும் போக்கு இல்லாத நகர அமைப்பு...
இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.கொஞ்சம் கொஞ்சமாக மனித மனம் மரத்துப் போகும்படி செய்யும் வாழ்க்கை முறை நம்மை எங்கே இட்டுச் செல்கிறது? மனிதத் தீவுகள் மிதந்தபடி... சலனமற்றிருக்கிறது பிரபஞ்சம் பல சமயங்களில்.


சில உறுதிப்பாடுகள் மூலம் நம்மை நாமே நகர்த்த முடியும் எளிதாக...

1.அடிக்கடி வசிப்பிடம் மாறும் வாய்ப்பு கிடைப்பது புதிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கே என்பதைப் புரிந்து கொண்டு, நம்மை நாமே வலுக்கட்டாயமாகவாவது தெரு முழுக்க அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்-புதிதாகக் குடியேறுகையில்...

2.புன்னகையைப் பரிமாறுதல் செலவின்றி நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் தேகப்பயிற்சியல்லவா...? எதிர்ப்படுவோரிடம் புன்னகைக்க முயலுவோம்.

3.ஊர்களுக்கென்று அல்லது வட்டங்களுக்காக, குறைந்தபட்சம் தெருக்களுக்கென்று ஒரு நலச் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சி சுவையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்தானே...!

4.குழந்தைகளை விளையாட்டு போன்ற தனித்திறன், அல்லது கல்வியின் பொருட்டு ஒருங்கிணைத்தல் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் நல்ல வழிகாட்டுதலாய் இருக்குமே...

5.ஒருநாளைக்கு ஒரு முறையேனும் நம் அண்டை வீட்டாருடன் பேசுவது என்று சங்கல்பமெடுத்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையே முளைத்திருக்கும் முட்புதர் கருகிவிடுமல்லவா? குறைந்தபட்சம் ஒரு ‘ஹலோ'...

நாம் என்ன செய்யப் போகிறோம்?









வரவேற்பறையில் பூத கணங்கள்:


‘மாடுகளும் ஆடுகளும் மேய்ந்தும் நடந்தும் செல்கின்ற புல்வெளி முற்றிலுமாய் அழிவதில்லை... மனிதன் நடக்கும் புல்வெளி ஒற்றையடிப் பாதையாகிவிடுகிறது'
பழக்கங்களுக்கு அடிமையானவன் மனிதன். அவனது அனுதினப் பழக்கங்கள் அவனை மெல்ல, மெல்ல விஷமாக்கி விடுகிறது. குடிகாரர்களில் தீவிரக் குடிகாரர்களைத் தேனீர்க் கடைகளில் நாம் கண்டுணர முடியும். நுட்பமாக யோசிக்கையில் பழக்கங்கள் நம்மைத் தேய்த்து தேய்த்து நம்மில் ஏற்படுத்தியிருக்கும் பாதை சரியானதுதானா என்று ஆராய்ந்து பார்க்கையில், எல்லாவற்றையும் மறுபரிசீலிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
சிலரது வீடுகளில் பார்வையாளர்கள் யாருமற்ற, வெளிச்சமான அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் யாராவது பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ இருக்கிறார்கள். அமைதியாக சலனமற்றுத் தெருக்கள் நீண்டு கிடக், வீடுகளுக்குள் அழையா விருந்தாளிகளாக நுழைந்த கதாபாத்திரங்கள் அழுதுகொண்டோ, விரல்களை நீட்டிக் கொக்கரித்துக் கொண்டோ இருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் நம்மிடையே புழங்கும் சுலபமான வார்த்தை ‘பழக்கமாகிவிட்டது'
ஞாயிற்றுக்கிழமை என்றொரு அற்புத தினத்தை நமக்காக... நமக்காக மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தோம். நட்புகளைப் புதுப்பிக்க, உறவுகளைக் கொண்டாட நமக்கென்று இருந்த தினம் அது ஒன்று தான். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்போதெல்லாம் யார் வீட்டுக்கும் சென்று விட முடியாதபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நேர இடைவெளியின்றி கண்களுக்குள் பொங்கித் ததும்புகிறது.
ஸ்பைடர் மேனிலிருந்து தலையில்லாத முண்டங்கள் வரை எல்லோர் வீட்டு வரவேற்பறைகளிலும் நமக்கு முன்னே சென்றமர்ந்து நிரம்பியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் எழுப்ப எத்தனிக்கையில், திடுமென அதனைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட ‘போதைக்காரர்கள்' நம்மிடம் மூர்க்கமாக உட்புகுந்து தடுக்கிறார்கள்.
பெண்களில் சிலர் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக கவலைப் படுவதைக் காட்டிலும், தொடர்களில் வரும் அபிமான பாத்திரங்களுக்காக அழுவதும் குமுறுவதும் அதிகரித்து விட்டது.
மைதானத்தில் கைநழுவ விட்ட ‘கேட்ச்'களுக்காக பற்களை நெறித்தபடி கோபப் படுகிற ஆண்களில் சிலர் அடுத்தடுத்து வரும் ‘மேட்ச்'களுக்காகவும், ‘கேட்ச்'களுக்காகவும் வேலைக்கு விடுப்பெடுத்து தவங்கிடக்கிறார்கள்.
கார்டூன் படங்களுக்காக ரிமோட்டைத் தர மறுக்கும் குழந்தைகள் ‘மந்திர தந்திர'த் தொடர்களில் ஓடும் தலையில்லாத முண்டங்களை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.
மருமகள்களுடனும் நாத்தனார்களுடனும் விகல்பமின்றித் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கூட இன்று, குரோதத்துடனும் ஒருவர் மீது பிறிதொருவர் சந்தேகத்துடனும் பார்க்கும் அளவுக்கு வில்லிகளாகவும், சதிகாரர்களாகவும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் சித்தரிக்கப் படுகிறார்கள்.
வீட்டிற்குள் நுழைந்த போது அற்புத விளக்காகத் தோன்றிய தொலைக்காட்சிப் பெட்டிகள், தேய்க்கத் தேய்க்கப் பூதங்கள் முளைத்து விஸ்வரூபமெடுத்து நமது அறைகளை ஆக்கிரமித்து விட்டன. அவற்றுக்கு வேலை தர முடியாமலும், திருப்பியனுப்ப முடியாமலும் ‘ஹால்'வுதீன்கள் ஆகிவிட்டோம். நம்மில் சிலரை நாற்காலியிலிருந்து ‘பிய்த்து' எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்து நம்மை திடுக்கிடச் செய்கிறது.
எல்லோருக்குமே இதிலிருந்து எப்படி விடுபடுவதென்ற குழப்பம் துவங்கிவிட்டது. அதற்கான தீர்வுகளாக சிலவற்றைப் பார்ப்போம்.
1.குழந்தைகளுக்கான படிக்கும் நேரமென்றால், நமக்கும் அதுதான் படிக்கும் நேரமென்று நம்மை புத்தகங்களுக்கு ஒப்படைத்து விடலாம்.
2.குழந்தைகளின் விளையாட்டு நேரம், நமக்கும் தேகப்பயிற்சி நேரம் என்று முனைந்தால், அவர்களும் கூட நட்போடு இணையலாம்.
3.செலவுகளற்ற ‘வெளிச்செல்லல்'(பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு) வாரத்துக்கு ஒன்றாவது நிச்சயித்துக் கொள்ளலாம்.
4.குடும்பத்தினரை, குழந்தைகளை அழைத்துச் செல்லும் குறைந்த தூர வேலைகளுக்கு நடந்துதான் செல்லவேண்டுமென்று நமக்குள் ஓர் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.
5.சாப்பிடுவது என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் (டி.வி. இல்லாத)ஒரே இடத்திலென்று தீர்மானித்து விட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும், இறுக்கமும் கூடக் குறையலாமல்லவா?
நம்மால் இதற்கெல்லாம் சாத்தியப்படாது என்றால் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி பூதங்களைக் கொண்டு வரும் அற்புத விளக்கைத் தூக்கியெறிய வேண்டியதுதான்.
நம் கையில் ‘ரிமோட்' இருக்கும் வரை முடிவெடுப்பது எளிது. தள்ளிப் போட்டால் ரிமோட் கண்ட்ரோல்களால் நாம் இயக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...