வியாழன், 28 ஜூன், 2018

என் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...இன்னும் பத்து வருஷத்துக்கு
உடம்புக்கு
ஒரு பிரச்சினையும் இல்லை என்று
வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல்
வரம் தருகிறார் மருத்துவர்..

எனது கண்ணாடி
என்னை மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கிறது..
அழுக்கடைந்து, கீறல் விழுந்த
அதன் சிதைவுகளில்
என் பிம்பம் கரைந்து கொண்டிருக்கிறது..

என் கைகள் கொஞ்சிக் கொண்டிருந்த
பாலகர்கள் வளர்ந்து
பருக்கள் நிறைந்த முகங்களுடன்
என்னைக் கண்டதும்
அவசரமாக விலகிச் செல்கிறார்கள்..

பேச எத்தனிப்பதற்குள்
‘நீங்க ஓய்வெடுங்க’
என்று கட்டிலில் அமர்த்திவிட்டு
சாமர்த்தியமாக
நழுவி விடுகிறார்கள்
குடும்ப விழாக்களில் உறவினர்கள்  

அடையாளம் தெரியாதது போல
கடந்து செல்கிறார்கள்
பணியில் என் அதிகாரத்தின் கீழே
வணக்கம் செலுத்தியவர்கள்..

வரலாற்று உணர்வே நமக்கு இல்லை
என்று நம்மைச் சாடுபவர்களும்
‘இப்படித்தான் முன்பொரு சமயம்’
என்று ஆரம்பிப்பதற்குள்
நமட்டுச் சிரிப்புடன்
கண்களால் கேலி செய்கிறார்கள்..

நம் முன்னோர்கள் ஒன்றும்
முட்டாள்களில்லை என
வாட்ஸ் அப்பில் பகிர்ந்து  
குமுறுபவர்களும்
வேறு எங்கோ பார்த்தபடி
என் சொற்களை கொல்கிறார்கள்....

யாராலும் அழைக்கப்படாமல்
செத்துக் கிடக்கிறது அலைபேசி
நேரத்தை திரையில் காட்டியபடி..‘நூறாண்டுகள் வாழ்க ‘ என்பது
வாழ்த்தா சாபமா
என்று புரியாமல்
வெற்று வானத்தை வெறித்தபடி
கடக்கிறது என் பகல்.....