இடம்: மருத்துவமனை போல் தோற்றமளிக்கும் அறை.
பாத்திரங்கள்: டாக்டர். சரவணன், செல்லப்பா
(டாக்டரின் அறை, ஒரு மேஜை, நாற்காலி, மேஜைமேல் மருத்துவப் புத்தகங்கள், ஸ்டெத்தஸ் கோப் இத்தியாதிகள். டாக்டர் சரவணன் யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.)
டாக்டர்:
ஹலோ... டாக்டர் சரவணன் தான் பேசறேன்... சொலுங்க.
குரல்:
சார், நான் சிவராமன்... என் ஃபிரெண்டோட பையன் கொஞ்சம் மனநிலை சரியில்லை. நீங்க தான் கவுன்சில் பண்ணி அனுப்பி வைக்கனும்
டாக்டர்:
ஷ்யூர், அனுப்புங்க...
குரல்:
பய கொஞ்சம் எடக்கு மடக்கு... ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசுவான். இப்ப கூட நீங்க அவனுக்கு வேலை குடுக்கப் போறீங்கன்னு சொல்லியனுப்பியிருக்கேன். ‘இண்டர்வியூ' பண்ற மாதிரி பயலை ரிப்பேர் பண்ணி அனுப்புங்க.
டாக்டர்:
நீங்க பரவாயில்லை. ஒருத்தர் என்கிட்ட ஒரு பேஷண்டை அனுப்பறச்சே எனக்குத்தான் மறை கழண்டுடுச்சுன்னு அனுப்பிட்டார். அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வெளியே போய் ‘சரவணனுக்கு நாந்தான் வைத்தியம் பண்ணினேன்னு' சொல்லிட்டுத் திரியறானாம். அது போனாப் போவுது... கூட யார் வர்றா?
குரல்:
இண்டர்வியூவுக்கு எதுக்கு கூட ஒரு ஆளு... நானே போய்க்கறேன்னு சொல்லி அடம்பண்ணி கிளம்பிட்டான். மறுபடியும் சொல்றேன்... பய கொஞ்சம் எக்குத் தப்பா பேசுவான்... கோச்சுக்காதீங்க.
டாக்டர்:
ஒழுங்கா பேசிட்டா என்கிட்டே ஏன் அனுப்பறீங்க? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.
குரல்:
தேங்க் யூ சார். அப்புறம் ஒரு ஃப்ளாட் ஒண்ணு இருக்குன்னு சொன்னேன்ல...
வெளியிலிருந்து இன்னொரு குரல்:
மே ஐ கம் இன் சார்?
டாக்டர்:
(செல்லை பொத்தி) எஸ் ... கம் இன்... எது சிவராமன்?
மறுபடியும் வெளியிலிருந்து ஒரு குரல்:
ஜூன் ஐ கம் இன் சார்...
ஜூலை ஐ கம் இன் சார்...?
டாக்டர்:
சரி சரி... நீங்க சொன்ன ஆள் வந்துட்டான் போலிருக்கு. நான் அப்பறம் பேசறேன் ... உள்ள வாப்பா...
செல்லப்பா:
சாரி சார். செல்லுல பேசிகிட்டிருந்தப்ப தொல்லை பண்ணிட்டேனா? (கால் தாங்கி தாங்கி வருகிறான்)
டாக்டர்:
பரவாயில்லை உட்காருப்பா...
செல்லப்பா: (உட்கார்ந்தபடி)
மனுஷனுக்கும் மொபைலுக்கும் முக்கியமான ஒரு டிஃபரெண்ட் இருக்கு சார்... உங்களுக்குத் தெரியுமா?
டாக்டர்:
என்னப்பா டிஃபரண்ட்?
செல்லப்பா:
மனுஷனுக்கு கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ண முடியாது... மொபைல்ல பேலன்ஸ் இல்லன்னா ‘கால்' பண்ண முடியாது.
டாக்டர்:
வந்தவுடனேயே கோதாவுல இறங்கிட்டியே... உன் பேர் என்னப்பா?
செல்லப்பா:
இருபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடியே எங்கப்பா மார்டனா வச்சிட்டார்...
டாக்டர்:
அப்படி என்ன மார்டனான பேர்?
செல்லப்பா:
‘செல்'லப்பா
டாக்டர்:
சொல்லப்பா...
செல்லப்பா:
சார் எனக்கு ஒரு சின்ன ப்ராப்ளம்... எங்கயாவது பஸ்லயாவது... டிரெய்ன்லயாவது போனேன்னா... அடுத்த ஆள் ‘செல்'லுல ‘கால்' வந்துகிட்டே இருக்குது. ஆனா என் செல்லுல ‘கால்' வரலை. அந்த மாதிரி சமயத்துல பயங்கர டென்ஷன் ஆயிடறேன் சார்... நான் அப்நார்மலா?
டாக்டர்:
சீச்சீ... நீ தான் ரொம்ப நார்மல்... செல் வச்சிருக்கிற எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கு... அதுவும் நாம தனியா இருக்கறப்போ 1008 ‘கால்' வந்துகிட்டே இருக்கும்... கும்பலா இருக்கறச்சே ஒரு ‘கால்' வராது. டென்ஷன் ஜாஸ்தியாகி நாம சும்மா கிடக்கிற எந்த பயலுக்காவது போன் பண்ணி ‘சவுகர்யமா'ன்னு கேக்க வேண்டியிருக்கு... போன வாரம் அப்படித்தான்... திருச்சிக்கு ட்ரெய்ன்ல போனேன்... முறுக்கு விக்கற பயலுக்கு மூணு ‘கால்' வந்துச்சு... பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு கிட்டே வா சொல்றேன்... அஞ்சு நிமிஷம் கழிச்சு அலாரம் அடிக்கிற மாதிரி ‘டைம்' செட் பண்ணிட்டு பாக்கெட்டுல பேசாம போட்டுக்கணும்... அலாரத்துக்கு சவுண்டா ரிங்டோன் ‘செட்' பண்ணிக்க... அடிச்ச வுடனே போனை எடுத்து பிசியா இருக்கேன் அப்புறம் பேசறேன்னு சொல்லி கட் பண்ணிடணும். டென்ஷன் ரிலாக்ஸ் ஆயிடும்...
செல்லப்பா:
சூப்பர் சார்... செம ஐடியா... நான் கூட உள்ளே வரும்போது நீங்க ‘செல்' பேசிட்டு இருந்ததை பார்த்து நிஜம்ன்னு நம்பிட்டேன்... கடைசியில அலாரம்தானா?
டாக்டர்:
அடப்பாவி! வரம் குடுத்தவன் தலையிலேயே கையை வைச்சிட்டியே... ஆமா, உள்ளே வர்றப்ப கால் தாங்கி, தாங்கி வந்தியே என்ன ப்ராப்ளம்?
செல்லப்பா:
வர்றப்ப மவுண்ட் ரோட்ல ஒரு அநியாயமான விஷயம் நடந்துச்சு சார். ஒரு ‘ரோப்'ஐ எடுத்துட்டு போறதுக்கு ரெண்டு லாரி... தேவையா சார்? என்னவோ தேர் கொண்டு போற மாதிரி முன்னாடி ஒரு லாரி, பின்னாடி ஒரு லாரி. நடுவுல கயிறு. எவ்வளவு டீசல் வேஸ்ட்!
டாக்டர்:
அடப்பாவி! பின்னாடி வந்த லாரி பிரேக் டவுன் ஆயிருக்கும். முன்னாடி வந்த லாரி இழுத்துட்டு போயிருக்கும்... ஆமா... அதுக்கும் நீ கால் நொண்டறதுக்கும் என்ன சம்பந்தம்?
செல்லப்பா:
அந்த அநியாயத்தை எப்படியாவது தட்டிக் கேக்கனும்னு தோணிச்சு. பக்கத்துல மலை எங்காவது இருக்கான்னு பார்த்தேன்...
டாக்டர்:
மலையா...?! அது எதுக்கு?
செல்லப்பா:
என்ன சார்... எத்தனை சினிமாவில பாத்திருக்கேன்...
குறுக்கு வழியில ஓடிப் போய் பிடிக்கறதுக்கு மலை மேல ஏறி தானே அடுத்த பக்கம் இறங்கிப் பிடிப்பாங்க...!
டாக்டர்:
ஓ... அதுக்குத்தான் மவுண்ட்ரோட்ல மலை தேடினியா ? கில்லாடியான ஆளுப்பா நீ...
செல்லப்பா:
பேரே மவுண்ட் ரோடு. அங்க தானே மலை இருக்கும்!
டாக்டர்:
முடியல... மேல... மேல...(கையை உயர்த்தி சொல்கிறார்)
செல்லப்பா:
மலையே இல்ல... ஆனா பக்கத்துல ஒரு பஸ் சும்மா நின்னுகிட்டு இருந்துச்சு. ஒரு கால்குலேஷன் போட்டேன். பஸ்ஸை எப்படியாவது குறுக்கே கொண்டு நிறுத்திட்டா தடுத்துடலாம்ன்னு... பஸ் பின்னாடி வுட்டேன் ஒரே உதை. (காலால் உதைத்துக் காண்பிக்கிறான்) கால் தான் பஞ்சராயிடுச்சு.
டாக்டர்:
ஏம்பா... பஸ்ஸை ஒரு தனிமனுஷன் உதைச்சா நகருமா?
செல்லப்பா:
என்ன சார்... சினிமாவுல ஒட்டடைக்குச்சி மாதிரி ஒரு ஹீரோ ஒம்பது பேரை ஒரே உதையில பறக்க வைக்கிறான். கால்ல கயிறை கட்டி ட்ரெயினை இழுத்துப் பிடிக்கிறான்... இதையெல்லாம் 100 ரூபாய் கொடுத்து பார்க்கறீங்க...
டாக்டர்:
அது ஒண்ணுமில்லையப்பா.
எல்லா மனுஷங்க கிட்டயும் கொஞ்சம் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம்
இருக்கு. ஒரு சிலருக்கு சினிமா பைத்தியம், ஒரு சிலருக்கு செல் பைத்தியம். ஒரு சிலருக்கு புடவை பைத்தியம் ... எவ்வளவு பர்சண்டேஜ் அப்படீங்கறதுதான் வித்தியாசம்.
செல்லப்பா:
கரெக்ட்... இப்ப புதுசா ஒரு துணி வாங்கி அதைக் கிழிச்சா என்ன சொல்லுவீங்க?
டாக்டர்:
‘நட்' கொஞ்சம் லூசாயிடுச்சின்னுதான்...
செல்லப்பா:
ஆனா ரோட்டுல பேனர் கட்டியிருப்பாங்க பார்த்திருக்கீங்களா... அத புதுசா வாங்கி அங்கங்க ஓட்டை போடறாங்களே...
டாக்டர்:
தம்பி... அது காத்து பலமா அடிச்சு பேனரைக் கிழிச்சிடக் கூடாதுன்னு அங்கங்க காத்து போக ‘ஓட்டை' போட்டிருப்பாங்க.
செல்லப்பா:
பார்த்தீங்களா... ஒருத்தன் கிழிச்சா ‘கிறுக்கு'ங்கறீங்க... அதையே இன்னொருத்தன் செஞ்சா லாஜிக் இருக்குங்கிறீங்க...
டாக்டர்:
வெவரங்கெட்ட ஆளுன்னு நெனைச்சேன்... ஆனா நீ வெவகாரமான ஆளா இருப்பே போலிருக்கு...
செல்லப்பா:
நானா வெவரங்கெட்ட ஆளு? இப்ப கூட நீங்க என்னை இண்டர்வியூ பண்றதுக்காக கூப்பிட்டிருக்கீங்கன்னு உங்க ஃப்ரெண்ட் சிவராமன் சொன்னாரு... எனக்குத் தெரியும் நீங்க கவுன்சிலிங் பண்ணக் கூப்பிட்டிருக்கீங்கன்னு...
டாக்டர்:
அட... எப்படிப்பா கண்டுபிடிச்சே...?
செல்லப்பா:
எம்.ஏ. தமிழிலக்கியம் படிச்சவனை எவன் சார் வேலைக்கு கூப்பிடுவான்?
டாக்டர்:
ஏம்பா எம்.ஏ. தமிழிலக்கியம் படிச்சவனை வேலைக்குக் கூப்பிடக் கூடாதா?
செல்லப்பா:
எங்க சார் வேலை கிடைக்குது? எவன் குடுப்பான்?
டாக்டர்:
யாராவது எதையாவது குடுப்பாங்களான்னு கைநீட்டிகிட்டு இருக்கிறது அடிமைத்தனம். கூட ஏதாவது ஃபாரீன் லாங்வேஜ் பிரெஞ்ச், ஜெர்மனி, சீனமொழின்னு படி... டிராஸ்லேட் பண்ண ஆளே குறைவாயிருக்கு. வெப்சைட்ல தமிழ்ல கண்டெண்ட் எழுத ஆளே கிடையாது தெரியுமா உனக்கு...? முயற்சி பண்ணாம விரக்தி ஆகாதே. ஆமா.. தமிழ் இலக்கியம் விரும்பிதானே படிச்சே..
செல்லப்பா:
இல்லை சார் எனக்கு டாக்டருக்கு படிக்கனும்னு ஆசை மார்க் எடுக்கலை இதான் கெடைச்சுது
டாக்டர் : ( சிரிக்கிறார் ) விதி
செல்லப்பா : ஏன் சார் சிரிக்கிறீங்க ..
டாக்டர் :
எனக்கு தமிழ் இலக்கியம் படிக்கனும்னு ஆசை.. மார்க் அதிகமா எடுத்துட்டேன் அப்பா பிடிவாதமா டாக்டருக்கு படிக்க வச்சிட்டார்..
செல்லப்பா :
நீங்க இந்த சேருக்கும், நான் அந்த சேருக்கும் மாறிக்கலாமா?
டாக்டர் : ஆசை பட்டபடி படிக்க முடியலைன்னு ரெண்டு பேரும் ஒரே ஸ்டேஜ்ல இருக்கோமென்னு கேட்டுட்டியா?
செல்லப்பா :
( மேடையை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு ) ஆமா சார் ஒரே ஸ்டேஜ்...
டாக்டர் :
சரி அதை விடு... உனக்கு யாரையாவது,, இல்லை எதையாவது பார்த்தா கோவமா, எரிச்சலா வருதா?
செல்லப்பா : இந்த புத்தகத்தை யெல்லாம் பார்த்தா பயங்கர கோவமா வருது,... இந்த எழுத்துக்களை பார்த்தா புழு நெளியற மாதிரி இருக்கு...இவ்வளவு ஏன், என்னை பார்த்தாலும் எனக்கு எரிச்சலா வருது சார்.. என்னால யாருக்கும் பிரயோஜனம் இல்லை ... நான் சுத்த வேஸ்ட் சார்
டாக்டர் : அது என்ன பண்ணுது உன்னை?
செல்லப்பா :
எவ்வளவு பேப்பர் வேஸ்ட்... ஒரு புத்தகம் தயாரிக்க எத்தனை மரம் அழியுது ? தேவையா சார்?
டாக்டர்:
அப்படி பார்த்தா ,இத்தனை மனுஷங்க இந்த உலகத்துக்குத் தேவையா?
செல்லப்பா :
கரெக்ட் சார்.. அதுவும் இந்தியாவுக்கு தேவையே இல்லை எங்க பார்த்தாலும் கூட்டம், கூட்டம், க்யூ, நெரிசல் சே... சே..
டாக்டர் :
அப்ப ஒரு வேலை பண்ணுவோம்..
இந்த கூட்டத்தை கொஞ்சம், கொஞ்சமா நாமளே குறைப்போம்... முதல் போணி நீதான்.. இப்ப வேலை வெட்டி இல்லாம சும்மா கெடக்கே... உன்னை போட்டுடலாமா ?
செல்லப்பா :
என்ன சார் டாக்டர்கிட்ட வந்தா தீர்த்து கட்டிடுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனா நீங்க அதை தொழிலாவே செய்யறீங்க போல இருக்கு.. நான் வாழணும் சார் எங்கப்பாவுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயில்.. எனக்கும் கீழ ரெண்டு தங்கச்சிங்க... நாந்தான் குடும்பத்தை பார்த்தாகனும்
டாக்டர் :
இப்பதான் நான் சுத்த வேஸ்ட் ... ஒரு பிரயோஜனமும் இல்லன்னே?
செல்லப்பா :
கையில பரம் பைசா இல்லை ஓட்டாண்டி சார்..
டாக்டர் :
அப்ப ஒண்ணு பண்ணலாம் .. என் கிட்ட ஒரு பேஷண்ட் இருக்கார் பெரிய கோடீஸ்வரர் இருக்கார் ... ஆனா ரெண்டு காலும் கெடையாது.. காலுக்கு ரெண்டு லட்சம் கொடுத்துடறேன்கறாரு
உன் காலை குடுத்துடுவோமா?
செல்லப்பா :
ஓடி போய் பஸ்ல துண்டு கூட போட முடியாது ... கால் இல்லாம என்ன பண்றது
டாக்டர் :
அப்ப வேற ஒருத்தருக்கு ரெண்டு கண்ணும் தேவைப்படுது அஞ்சு லட்சம் தருவாரு என்ன சொல்ற?
செல்லப்பா :
காலம் பூரா பவர் கட்... என்னால முடியாது...
டாக்டர் :
ம்... என்னப்பா இப்படி சொல்லிட்ட.. உன் மூளைதான் கொஞ்சம் கழண்டு லூசாயிருக்கே... கோடி கணக்குல கெடைக்கும்.. என்ன சொல்ற?
செல்லப்பா :
என்ன வெளையாடறீங்களா? எனக்கு மூளை எல்லாம் நல்லாதான் இருக்கு சும்மா நடிச்சேன் ... வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கேன்னு யாராச்சும் திட்டிட போறாங்கன்னு நடிச்சேன்... அதுக்குன்னு எதையாவது வெட்டி குடுத்துட முடியுமா?
டாக்டர் : கை குடு தம்பி..
செல்லப்பா :
நாந்தான் எதையும் குடுக்க மாட்டேன்னு சொல்றேன்.. மறுபடியும் கையை குடு அதை குடுங்கறீங்க
டாக்டர் :
அட அத சொல்லலைப்பா... இப்பதான் கையில பரம் பைசா இல்லேன்ன உன் உடம்பு முழுக்க கோடி கோடி பொறுமானமுல்ல பொருளா வச்சிருக்க.. பெரிய கோடீஸ்வரன் நீ கைகுடு..
செல்லப்பா : அட ஆமா சார்...
டாக்டர் :
இவ்வளவு புத்தகங்கள் தேவையான்னு கேட்டியே.. எத்தனை புத்தகம் இது வரைக்கும் உன் லைஃப்ல படிச்சிருப்பே..
செல்லப்பா :
பள்ளிக்கூட
புத்தகத்தை தவிர வேற ஒண்ணும் படிச்சதில்லையே
டாக்டர் :
இப்படி சில பேரு பெருமை பட்டுக்கறாங்க.. பெருமையா இது? வாய் இருக்கு ஆனா, இது வரைக்கும் நான் சாப்பிட்டதே இல்லன்னு பெருமை பேசற ஒருத்தனை தேடறேன். ஒருத்தனும் அகப்படமாட்டேன்கறான்
செல்லப்பா : அது எப்படி சார் பிடிக்கலைன்னாலும் உள்ள தள்ளிட மாட்டோம்?
டாக்டர் :
அப்புறம் கண்ணு இருந்தும் ஏன் குருடனா இருக்கீங்க? எதையும் படிக்காம அவ்வளவும் வேஸ்ட்டுன்னு தீர்ப்பு சொல்றீங்க? உங்க உடம்புல இருக்கற உறுப்புகள் எவ்வளவு உபயோகம்னு கூட உங்களுக்கு தெரியலை... ஆனா புத்தகங்கள் மட்டும் வேஸ்ட்.. எனக்கு படிக்கற பழக்கமே இல்லன்னு ஸ்டேட்மெண்ட் குடுக்கறீங்க..
செல்லப்பா : ( தலையை சொறிந்தபடி ) ஆமா சார்..
டாக்டர் :
உலகத்துல எந்த புரட்சி நடந்தாலும் அதுக்குப் பின்னால நிச்சயம் ஒரு புத்தகம் இருக்கும், அரிச்சந்திரனோட கதையை யாரோ ஒருத்தர் நாடகமா எழுதி நாடகமா நடிச்சதை பாத்துதான் காந்தி இனிமேல உண்மையயே பேசுவேன் உறுதி எடுத்தார். அவரோட சத்திய சோதனையை படிச்ச மண்டேலா தென்னாப்பிரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்.. ரஷ்ய புரட்சியிலேர்ந்து, எகிப்து புரட்சி வரைக்கும் புத்தகங்கள்தான் அடிப்படை.. படிச்சவங்களே எனக்கு படிக்கற பழக்கம் இல்லன்னு சொல்றது நம்ம தேசத்துலதான்பா..
செல்லப்பா :
கரெக்ட் சார் எனக்கே இப்ப வெக்கமாத்தான் இருக்கு.. நான் கெளம்பறென் சார்..
டாக்டர் : எங்கப்பா?
செல்லப்பா :
ஜூலை 5-லிருந்து ஜூலை - 14 வரைக்கும் நெய்வேலியில புத்தகக் கண்காட்சி
நடக்கப் போகுது... நான் அங்க போறேன். இத்தனை வருஷங்களை வாசிக்காம வீணாக்கிட்டேன். வாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள்னு இப்பதான் புரிஞ்சுது. என்னால முடிஞ்ச அளவு புத்தகங்களை வாங்க போறேன்
டாக்டர் : மறந்துடாதே நூலகம் இல்லா வீட்டில் குடியிருக்க வேண்டாம்..
(ஏப்ரல் 23... உலக புத்தக தின நல் வாழ்த்துக்கள் )