வியாழன், 7 செப்டம்பர், 2023

 

மருந்து

-                       -நெய்வேலி பாரதிக்குமார்




ந்த பாசமுள்ள தாய்க்கு ஐந்து வயதில் சரவணன் என்று ஒரே மகன். சம்பாதித்துப் போட்ட கணவன் இறந்த பிறகு, அடுத்த வேளை சாப்பாடே கேள்விக் குறியானது. நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்தால் வயிறு கழுவி விடலாம்தான். ஆனால் செல்ல மகனை எப்படிப் படிக்க வைப்பது?

               டவுனிலிருந்து வந்த குழந்தையில்லாத பணக்காரர் சரவணனை எடுத்துச் சென்று நன்றாக வளர்த்துப் படிக்க வைக்க முன்வந்தார். ஆனால் தாயும் மகனும்  எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கூடாது என்று நிபந்தனை விதித்தார். கனத்த மனதுடன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மகனை அவருடன் அனுப்பிவைத்தார். அவ்வப்போது மகனின் நண்பன் பப்லு, தொலைபேசியில் டவுனில் இருக்கும் சரவணனுடன் பேசி இருவரது நலத்தையும் பரிமாற உதவி செய்தான்.

               ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் அந்தத் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பப்லு போனில் தாயைப் பற்றி மகனிடம் தெரிவித்தான். நிபந்தனையை மீறமுடியாதே... ஆகவே சரவணனுக்கு பணக்காரத் தந்தை செலவுக்குத் தரும் பாக்கெட் மணியிலிருந்து சில பழங்கள் வாங்கி, யார் மூலமாவது தாய்க்கு கொடுத்தனுப்பினான். மறுமுறை போனில் பேசும் போது பப்லுவிடம் தாயின் உடல்நிலை பற்றிக் கேட்டான்.

               அம்மா நோயிலிருந்து குணமாகவில்லை. முன்னை விட இன்னும் மெலிந்து போயிருக்கிறார்என்றான் பப்லு.

               அடுத்த நாள் பிரெட், சத்தான பானங்கள் வாங்கி அனுப்பினான் சரவணன்.

               அப்பொழுதும் பப்லுவிடமிருந்து அதே பதில்தான்.

               அடுத்தமுறை தேவையான வைட்டமின் மாத்திரைகள் வாங்கிக்கொடுத்து அனுப்பினான்.

               அப்பொழுதும் பப்லுவிடமிருந்து அதே பதில்தான்.

               சரவணனிடமிருந்த சேமிப்பு முழுவதும் தீர்ந்துபோனது. கவலையில் தோய்ந்தான். இன்னும் மிச்சமிருந்தது கையில் பேப்பரும் பேனாவும் மட்டுமே.

               அம்மாவுக்கு ஒரு கடிதமெழுதி அனுப்பினான். அடுத்த நாள் பப்லுவிடமிருந்து வந்தது உற்சாகமான குரல்.

               அம்மா குணமாகி வீட்டுக்கு வந்தாச்சு. நீ எழுதிய கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தானே படித்து படித்து சந்தோஷப்படறாங்க. அப்படியென்னடா எழுதியிருந்தே அதுல?”

                              அம்மா, நான் நலமாக இருக்கிறேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...