வரலாற்றின் சிக்கல்களையும், சிடுக்குகளையும் களைய முற்படுகையில் நாம் பிழைகளின் தளைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். சரித்திரம் என்பது அளந்து முடிக்க முடியாத சமுத்திரம். ஆர்ப்பரிக்கும் அலை மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிய, கரையைத் தொட்டுவிட்டுச்செல்லும். ஆழ்கடலில் அமைதியாக மிதக்கும் துளிகள் பார்வைக்குப்படாமல் ததும்பிக் கொண்டிருக்கின்றன.
‘கூர்க்கா' என்றொரு சொல்லைக்கேட்டால் இரவில் ஏதாவது ஒரு சமயத்தில் இருளைக்கிழிக்கும் விசில் ஒலியோடு தெரியும் உருவம் மங்கலாக தெரிவதோடு மறைந்துவிடுகிறது. சிறுவயதில் கூர்க்காக்களைப் பார்த்தால், குறும்பாக ‘குட்மார்னிங்' சொல்வதுண்டு.. பதிலுக்கு மமதையின்றி வணங்கிச்செல்லும் காக்கி உருவம் அனேகமாக கூர்க்காவாக மட்டும்தான் இருக்க முடியும்.
‘கோரக்நாத்' என்ற கடவுளை வழிபட்டு வந்தவர்கள் என்பதால் அவர்களை ‘கூர்க்கா' வென அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதுண்டு, இமய மலையின் ‘கூர்க்' பகுதியில் அதிகம் வசித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அப்படி ஒரு பெயர் என்று சொல்லப்படுவதுண்டு. எது சரியோ ஆனால் ‘கூர்க்கா' என்றால் ‘விசுவாசம் கலந்த வீரம்' என்ற பொருள் இருக்குமாயின் அது மிகப்பொருத்தமாகவே இருக்கும். கூர்க்காக்கள் ஒன்று விவசாயத்தின் மூலம் ஜீவிப்பார்கள் அல்லது இராணுவத்திலோ, காவல் படையிலோ இருப்பார்கள்.
கூர்க்காக்களின் கைவசம் பொதுவாக ‘குக்ரி' எனப்படும் முனையில் வளைந்த குறுவாள் ஒன்று இருக்கும். அவர்கள் எந்த படைப்பிரிவில் இருந்தாலும் அவர்களின் பணிக்காலத்துக்குள் ஒருமுறையேனும் எதிரியின் குருதியை ‘குக்ரி' சுவைத்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல் போனால் ஓய்வு பெறும்தருவாயில் தங்கள் உடலைக் கீறியாவது அந்த கத்தி ரத்தம் பார்க்கவேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்கள். அவர்கள் எந்தப்படையில் பணியிலிருக்கிறார்களோ அதன் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள். உயிரே போனாலும் துரோகம் என்ற சொல்லுக்கு தங்கள் அகராதியில் இடம் தர விரும்பாதவர்கள். அதனால்தான் இன்றைக்கும் பிரிட்டிஷ் இராணுவத்தில் இங்கிலாந்தின் பிரஜை அல்லாத கூர்க்காக்களை தேடிப்போய் சேர்த்துக்கொள்கிறார்கள்.
1814 -இல் நேபாள படைக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையில் நடந்த கூர்க்கா யுத்தத்தின் முடிவில் கூர்க்காக்களின் போர் புரியும் உத்வேகம், அவர்களின் போர் ஒழுக்க கட்டுப்பாடுகள், தலைமைக்கு கீழ் படியும் தன்மையால் கவரப்பட்ட கி.இ. கம்பெனி ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. அதன்படி தனது படையில் கூர்க்கா பிரிவை ஏற்படுத்தி அதில் கூர்க்காக்கள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் போரை நிறுத்திக்கொண்டது. அன்றிலிருந்து இப்பொழுது வரை ஆண்டுதோறும் கூர்க்காகளுக்கான ஆள்சேர்ப்பு படலத்தை பிரிட்டிஷ் இராணுவம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
மான்செஸ்டரில் உள்ள பிரிட்டிஷ் பாதூகாப்புத்துறை அலுவலகத்துக்கு முன் கூர்க்காக்களின் சேவையை போற்றும் வகையில் கூர்க்கா வீரன் ஒருவனின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின்போது பிரிட்டிஷ்காரர்கள் அப்போதைய படையில் இருந்த கூர்க்கா படைப்பிரிவை அப்படியே தங்கள் இராணுவத்தில் இணைத்துக்கொண்டுதான் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். எதிரியையும் கவரும் வீரம் செறிந்தவர்கள் என்பதால்தான் அவர்கள் இந்திய, நேபாள், பிரிட்டிஷ் ஆகிய மூன்று இராணுவப்படைகளிலும் பேதமற்று சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கூர்க்காக்களின் பங்கு அளப்பரியது. பல கூர்க்காக்கள் காந்தியவாதிகளாக, அவர் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பிரிட்டிஷ் காவலர்களின் வெறிகொண்ட தாக்குதல்களில் பலியானவர்கள் பலர். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து கொண்டு ஆங்கிலேய ஏகாதியபத்தியத்தை எதிர் கொண்ட காரணத்தினால் சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் பலர். அதில் மிக இளம் வயதில் தூக்கு மேடையேறி இன்னுயிர் ஈத்த துர்கா மல்லா மற்றும் தல் பகதூர் தாப்பா ஆகியோரை இந்திய வரலாறு தனது பக்கங்களில் குறித்து வைத்திருக்கிறதா அல்லது அவர்களை நமது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களைக் காணும் உத்வேகத்தில் தொலைத்துவிட்டோமா? ... தெரியவில்லை..
துர்கா மல்லா டெஹ்ராடூனுக்கு அருகிலுள்ள டொய்வாலா என்ற கிராமத்தில் 1913 ஆம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தவர். அவரது தந்தை கங்காராம் மல்லா அப்போதைய பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜமேதாராக பணியாற்றிக் கொண்டிருந்தார். எட்டுப்பிள்ளைகளில் மூத்தவர் துர்காமல்லா. படிக்கும் காலத்தில் மற்ற பிள்ளைகள் போல் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் ஆர்வமற்றவராக சதா புத்தகங்களில் தனக்கான உலகத்தை தேடிக் கொண்டிருப்பவராக இருந்தார். இலக்கியம் எளிதாக அவரை பற்றிக்கொண்டது. சிறுவயதில் அவரது கவிதைகள் உள்ளூர் பத்திரிகைகளில் பிரசுரமாயின. புத்தகங்கள் வாயிலாக சுதந்திரத் தாகம் மிக்கவராக அவர் மாறினார்.
குறிப்பாக காந்தியின் உப்பு சத்தியாகிரகம் அவருள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது காலத்தில் பிரபலமாய் அறியப்பட்ட காந்தியவாதிகள் கவிஞர் பகதூர் சிங் பரால் மற்றும் மித்ர சென் தாப்பா ஆகியோரால் பெரிதும் அவர் ஈர்க்கப்பட்டார். அடிக்கடி சுதந்திர இயக்க கூட்டங்களில் காணப்பட்ட மல்லாவை பிரிட்டிஷ் அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அதனால் அவர் அவர்களின் பார்வையிலிருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவுக்கு தப்பிச்சென்றார். ஆனால் அமைதிவழி போராட்டங்களில் தொடர்ந்து செயல்பட ஈடுபாடு அற்றவராக இருந்தார்.
சிலகாலத்திற்குப்பின் வீடு திரும்பிய அவர் குடும்பச்சூழல் காரணமாக இராணுவப்பணியில் சேரவேண்டியிருந்தது. அவர் அதனை பயிற்சியின் பொருட்டே ஏற்றுக்கொண்டார். அந்த காலத்தில் சற்று அதிகம் படித்தவர் என்கிற காரணத்தினால் அவர் இரகசிய குறிப்புகள் பயிற்சிப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மிக எளிதாக பயிற்சியில் தேறி பதவி உயர்வுபெற்றார். 1941- ல் மத்தியப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தைச்சார்ந்த சாரதா தேவி என்பவரை மணந்தார். அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் என்பதால் திருமணமான மூன்றாம் நாளே தலைமையகத்தால் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். செகந்திராபாத் படைப்பிரிவோடு அவர் உடன் சென்று இணையும்படி உத்திரவிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு உடன் அவர் அங்கு சென்று பணியாற்ற வேண்டியிருந்தது. பின்னர் ஜப்பானியப்படையுடன் மோதுவதற்காக மலேஷியா செல்லும் துருப்புகளோடு அவர் செல்லும்படி பணிக்கப்பட்டது. மும்பை சென்று கடல் வழிமார்க்கமாக மலேஷியா செல்லும் முன் கிடைத்த இடைவெளி விடுமுறை நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருக்க வாய்ப்புக்கிட்டியது. ஆகஸ்ட் 23, 1941-ல் அவர் மலேஷியா சென்றார்.
ஆனால் அங்கு நடந்த போரில் ஜப்பானிய படைகளின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டிஷ் கூட்டுப்படையின் தளபதி ஹண்ட் ஜப்பானிய படைகளிடம் தனது அணியை சரணடைய செய்துவிட்டார். கூர்க்கா படையினரின் விவேகமிக்க வீரத்தினால் ஈர்க்கப்பட்ட ஜப்பானிய தளபதி ஃபியூஜிவாரா அவர்களை கனிவோடே நடத்தினார். அந்த சமயத்தில்தான் நேதாஜி ஜப்பானிய அரசுடன் பேசி பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட உடன்பாட்டை ஏற்படுத்தி ‘இந்திய தேசிய படையை' (INA) உருவாக்கும் முயற்சியில் இருந்தார். அவரது எண்ணப்படி 1943-ல் INA நேதாஜியின் தலைமையின் கீழ் வந்தது. மல்லா இந்த தருணத்துக்காகவே காத்திருந்தவராக INA வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
துவக்கத்தில் ஒரு சிப்பாயாக சேர்ந்த அவர், ஏற்கனவே இருந்த இராணுவ அனுபவம் காரணமாக உளவுப்பிரிவு மேஜராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போர்ப்பணியில் களத்தின் சூழல், எதிரியின் படைபலம், வியூகம் ஆகியவை குறித்து தகவல் அனுப்பும் மிக முக்கியமான பொறுப்பு மல்லாவுக்கு தரப்பட்டிருந்தது. தனக்கு இடப்பட்டிருந்த வேலையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக மல்லா 1944ஆம் வருடம் மார்ச் 27ம் தேதி பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டார். பிரிட்டிஷ் அரசு INA வில் பணியாற்றிய எவரையும் அத்தனை சுலபமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆயுதம் ஏந்திய அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பதை உணர்ந்துகொண்டிருந்தது. எனவே அவர்களை மிரட்டி தனக்கு கீழ் பணியவைக்க முயற்சித்தது அல்லது அவர்களை அடியோடு அழிக்க நினைத்தது.
டெல்லி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்க சம்மதித்தால், விட்டுவிடுவதாக சொன்னது. ஆனால் அதற்கு மல்லா சம்மதிக்கவில்லை. மண்டியிடுவதைவிட மரணத்தை ஏற்பதே மேல் என்று அவர்களுக்கு பதிலளித்தார். அவரது மனைவி சாரதாவை அனுப்பி அவரை சம்மதிக்கவைக்க முயற்சித்தது. “ சாரதா உனக்கு இலட்சக்கணக்கான இந்திய சகோதரர்கள் இருக்கிறார்கள் அஞ்சாதே. மரணத்தின் வலி என்னை அச்சுறுத்தவில்லை. இந்தியா இன்னும் விடுதலை ஆகவில்லையே என்ற வேதனைதான் என்னை உருக்குகிறது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் என் தேசம் விடுதலையாகும்” என்று உக்கிரத்துடன் சொன்னார். மல்லா 1944, ஆகஸ்ட் 25ம் தேதி செங்கோட்டையின் தூக்கு மேடையில் அடங்காத வேங்கையைப்போல துணிவோடு தூக்குக்கயிற்றில் தன் உயிரை நிரப்பினார். மல்லாவிற்குப்பிறகு 1945 ஆம் வருடம் தல் பஹதூர் தாப்பா INA வில் பணிபுரிந்த காரணத்தால் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவின் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா ஒருமுறை கூர்க்காக்களை பற்றி குறிப்பிடும்போது “ ஒருவன் தன்னுடைய உயிரை துச்சமென கருதுவேன் மரணத்துக்கு அஞ்சேன் என்று கூறுவானாகில் ஒன்று அவன் பொய்யனாக இருக்கவேண்டும் அல்லது அவன் கூர்க்காவாக இருக்கவேண்டும்” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார். அதற்கு உதாரணமாக மல்லாவும், பஹதூர் தாப்பாவும் நிரூபித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இந்த வருடம் மல்லாவின் நூற்றாண்டு. தன்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பதவி தூசு உதிர்ந்தாலே பதறிப்போகும் தலைவர்களின் பிறந்த நாளுக்காக டிஜிட்டல் பேனர்களை தயாரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல் உலகம் மல்லா போன்ற சரித்திரம் புறக்கணித்துவிட்ட மறவர்களை முற்றிலும் மறந்துவிட்டிருக்கிறது.
‘ஹிஸ்டரி' என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ‘விசாரணை' என்று பொருளாம். கடந்த காலங்களை நாம் விசாரித்தபடியே இருக்க வேண்டும் இல்லையேல் சரித்திரம் நம்மை கூண்டிலேற்றிவிடும்.மல்லாவின் கல்லறை வேண்டுவது சில துளி கண்ணீரையோ, ரோஜா இதழ்களையோ அல்ல... விசாரியுங்கள் கடந்து போன காலங்களை....
ஒருவேளை கிடைக்கின்ற தடயங்களில் தொலைந்துபோன நீங்களும் கிடைக்கலாம்..
நன்றி: 'காக்கைச் சிறகினிலே'