வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள். இடுப்பில் கட்டியிருந்த போத்தலிலிருந்து ஓஸ் வழியே தண்ணீரை சிறிது உறிஞ்சிக்கொண்டாள். ரெண்டு நாளாக அவர்களுக்கு தண்ணீர்தான் உணவு. பகலா, இரவா என்று தெரியாமல் இருண்டு கிடந்தது அவர்கள் பதுங்கி கிடந்த குழி. நல்ல வேளை விஷ சர்ப்பம் எதுவும் குழிக்குள் இல்லை. சில சமயம் வெட்டப்பட்ட பதுங்கு குழிக்குள் வாகாக சர்ப்பம் தங்கி விடும். செல் அடிக்கு பயந்து பதுங்கி சர்ப்பம் தீண்டி செத்தவர் அதிகம். வழமையாக பதுங்கு குழி ஆசுவாசமாய் உட்காருமளவு இருக்கும். யுத்தம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்ட நேரம். ஆமிக்காரன்கள் சல்லடை போட்டு தேடி பிடிச்சுகிட்டு இருக்கானுவ. இலை, தழை பரப்பி அறியாத மாதிரிக்கு சிறிசாய் குழி இருப்பதுதா பாதுகாப்பு.
செல் சத்தம் தொடர்ச்சியாக கேட்க துவங்கியது. ஆமிக்காரனுவ வெளிக்கிட்டானுவ போல.. கிளிநொச்சியிலிருந்து மெல்ல, மெல்ல புதுகுடியிருப்பு வரை வந்துட்டானுவன்னு கேசவண்ணை குழிக்கு வரு முன்னாலே சொன்னிச்சு. யுத்தம் இங்க வராது, யுத்தம் இங்க வராதுன்னு கெடையில கெடந்தாச்சு.. கனகம்பிகை குளத்து வயல்வெளிகிட்டே மூணு தரம் செல் விழுந்ததா அம்மம்மா கதைச்சப்போ சில்லிட்டுப்போச்சு. சேத்து வச்ச சொத்து எதுவும் ஒதவலை. கையிருப்பை கொப்பிக்கொண்டு றாபற்று தோணியில இந்தியாவுக்கு தப்பிச்சு போலாமுன்னா நேவிக்காரன் றோந்து சுத்திகிட்டெ இருக்கானுவ இன்னிக்கு சாட்டில்லே எண்டு தட்டிகழிச்சிட்டெ போயிட்டான். இனி கரைக்கு கூட போவ ஏலாது. அதுக்காவ வீட்டுக்குள்ளேயும் கெடக்க ஏலாது. செல்லம்மா வீட்டுக்காரன் இப்படித்தான் போனதரம் ஆமிக்காரன் ஒழுங்கை, ஒழுங்கையா றோந்து வந்தப்ப வெறகு எடுத்தாறேன்னு வெளிக்கிட்டான். உளவு சொல்ல வந்தியோன்னு துவக்கு கட்டையாலேயே அடிச்சுக் கொன்னுட்டானுவ. பொணம்கூட கிட்ட இல்ல.
தப்பிச்சால் போதுமெண்டு சகலத்தையும் விட்டுவிட்டு குழிக்குள் பதுங்கினார்கள் செல்லம்மாவும், மாதவியும்... பக்கத்து வீட்டு ஞனத்தாச்சி எங்க பதுங்கினாளோ? பூத உடம்புக்காரி நடக்கவே சிரமப்படுவா... ஏதேதோ பூச்சிகள் ஊறுவதும், உரசுவதுமாக இருந்தன. தூங்கிக்கொண்டிருந்த மாதவியின் வாயிலிருந்து ஒழுகிய எச்சில் பரவிய இடத்தில் மண்புழு ஒன்று நெளிந்தது. கடவுளே... என்ன கொடுமை இது.. எதுக்கு இந்த உசிரை இப்படி கெட்டியா பிடிச்சுகொண்டு கெடக்கணும்?
இந்த மண்ணுல என்ன இன்னும் மிச்சமிருக்கு? மரம் செடியை கூட ஆமிக்காரன் வெட்டிட்டுப் போறானுவ. பெடியன்க ஒளிஞ்சிப்பானுகளாம்.. மொக்கையா நிண்ட மரங்களைப் பாத்து கும்பி எரிஞ்சது செல்லம்மாளுக்கு பாவிகளா மரம் என்ன பண்ணுச்சு வௌங்கவீங்களாடா எண்டு சபித்தாள் மனசுக்குள்.. செல் அடிச்சு, இருந்த மரங்களும் கருகி, மிச்சம் சில பூச்சிகளும், மண்ணும்தான்...பக்கத்தில் எங்கோ செல் விழ பூமி அதிர்ந்தது. அசைவில் விழிச்சிகிட்ட மாதவி “ என்ன அம்மை ஆச்சு? செல் ஆ ”
கண்களை மெல்ல தாழ்த்தி ஓம் என்பதுபோல் இமைகளை மூடித் திறந்தாள். “றொம்ப கதைக்க வேண்டா நா வறண்டு போச்சுன்னா.... தண்ணி கொறைச்சல் இங்கே ” எண்டாள் சன்னமாக..
“செரி ”யெண்டு தலையசைத்தாள் மாதவி சோர்வாக.
“பசிக்குதா மோளை? ”
“மரத்துப் போச்சு அம்மை... ”
ஒறங்கு என்பது போல் தட்டிக்கொடுத்தாள். ஓறங்கவே முடியாத மனம்... ஒறங்கவே முடியாத சூழல்.. எப்படி ஓறங்கறது?
மாலதி எப்படி இருக்காளோ? எங்க இருக்காளோ? கூட இருந்திருந்தாலும் இப்ப இருக்கிற குழியில சாட்டில்ல... பெடியளா இருக்கறச்ச விட்டுட்டு போயிட்டா..புத்துவெட்டுவானில் கடசியா பாத்ததா ரூபன் சொன்னான். பொழச்சியிருக்காளோ என்னமோ?
மாலதியும், மாதவியும் ரெணை பிள்ளையள்.. மாலதி இளையவ... ஒண்டரை மணித்தியாளம்தான் வித்தியாசம்... மாங்குளத்தில அவ படிச்சுகிட்டப்ப பொடி பசங்க போல ரீ சேட்டும், பேண்டும்தான் போடுவள். குணமும் அப்படித்தான் ஆனது. வெளையும் பயிரை மொளையில கெவனிக்கலை. டைப் பழக போறேன்... ரீயூசனுக்குப் போறேனிட்டு துவக்குச் சுட பழகிக்கிட்டா.. அவ முகத்துல கொதிக்கற கோவமும், குமுறலும் காணவே அச்சமாயிருக்கும்.. இறுகின முகமும், கைகளும் அவ சாதாரணமா வளரலைன்னு புரிஞ்சது... மாதவி எதுக்கெடுத்தாலும் பயப்படுவா.. தொட்டா சிணுங்கி.. எதச் செஞ்சாலும் அவ பயம் தெளியாது.. அந்த பயத்துக்கு சப்பகட்டு கட்ட அவளுக்கு அறிவு இருந்தது.. எப்படி இப்படி ஒரு வயித்துலன்னு புரியவே இல்லை!
கிளிநொச்சி பெடியனுக வசமிருந்தப்ப இடையில ஒரு தரம் மாலதி வீட்டுக்கு வந்திருந்தா.. எப்படி எப்படியோ மாறியிருந்தா.. தலை முடியெல்லாம் வெட்டி... ஒரு வடிவா இருந்தா பெத்த மனசு தாங்காம அழுதா செல்லம்மா...
“எதுக்கு அம்மை அழறியள்? அழப்படாது ”
“என்ன பண்ண சொல்றிய? ”
“எனக்கொண்டும் ஆகலை அம்மை. நல்லாத்தான் இருக்கன் ”
“ஒரு பொண்ணா ஒன்னை வளக்கலைன்னு கவலையா இருக்கு மோளை ”
“ஒரு கோழையா வளரலை அம்மை ”
“அப்பன் இப்படித்தான் கூடமாட ஒதவுறேனிட்டு காடயனுக கையில மாட்டிசெத்துப்போனாரு.. ஊருக்குள்ள நடுகல் வச்சாங்க... என்ன பிரயோசனம்? இங்க சாமியும் கல்லுதா.... மனுசனும் கல்லுதா.. ”
“காடையனுக காலை சொரண்டி பொழைக்கறதவிட கல்லா இருக்கலாம் அம்மை... அதுவும் நடுகல்லா இருந்தா செத்தப்புறமும் உசிரு இருக்கும் அம்மை... கிட்டப் போயி நிண்டு பாரு மூச்சடங்காம உள்ளோடி ஓடிகிட்டெ இருக்கும். யுத்தத்தில செத்தவங்களுக்கு சாவு இல்ல அம்மை... ”
“அப்பன் மாதிரி பொணம் கூட கெடைக்காம அனாதியா செத்துப்போவப் போறியளா மோளே ”
“உசிரா இருக்கறச்ச அனாதியாத்தான் இருக்கினம். இதுல பொணத்துக்கு என்ன பூசனை. சுதந்திரமா வாழனும் அம்மை.. ”
“இப்ப நீ இருக்கற எடத்துலயும் சுதந்திரம் இல்லையே மோளை. பீற்றரண்ணை கதைச்சுது. ”
“ஒழுங்கு வேற, ஒடுக்கறது வேற பீற்றர் ஓடுனது வேற காரணம்.. வெளிய சொல்றது வேற ”
“என்னமோ புரியலை போ... முடியெல்லாம் வெட்டி... என்ன இது கோலம்? ”
“முடிஞ்சா கர்ப்பபையைக் கூட வெட்டிப்பேன்... ஆனா அடுத்த தலைமுறை வேண்டுமே ... அதான்.. ”
மாலதி வினோதமானவளாய், முற்றிலும் விலகியவளாய் இருந்தாள். இனி மாற்றமுடியாது எண்டு செல்லம்மாவுக்கு புரிந்து போனது
அன்னிக்குப் போனவதான். பிறகு பாக்க இல்லை.
ஏதோ ஒரு ட்ரக் அதிர. அதிர நகரும் சத்தம் கேட்டது. மெல்ல, மெல்ல ட்ரக் நிற்கும் அரவம். சப்பாத்துக்கால் ஒலி தப, தபவென கேட்டது. இலைகள் நெரிபடும் ஒலி.. வயிற்றிலிருந்து ஒரு நெருப்பு சன்னமாய் பற்றிகொண்டு நகர்வது போல் நரக வேதனை.
அவொ கண்ணு அவிஞ்சு போவ... இந்த குழி அவனுவ கண்ணுல படக்கூடாது கதிர்வேலா.
மாதவி அச்சத்தில் பற்களை கடித்துக்கொண்டு அழுதாள்
“அழக்கூடாது மோளை. கண்டுபிடிச்சுடுவானுவ.. ”
சட்டென்று அழுகையை மென்னு முழுங்கினா மாதவி.. இன்னமும் இறுக்கி பிடிச்சுகொண்டாள்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சில் சிக்கிய நெரிஞ்சி முள்ளாய் நகர்ந்தது.
“அம்மை, அம்மை” எண்டு சன்னமாய் அழைத்தாள் மாதவி
வாயை ஒரு விரலால் மூடி “ச்சூ” எண்டாள் செல்லம்மா. மறுபடியும் முழங்கையை சுரண்டினாள் மாதவி.
என்ன என்பது போல் கையசைத்தாள்.
மாதவி தன் பாவாடை பக்கம் காட்டினாள். அப்போதுதான் படிந்த பச்சை ரத்தம் கறையாய் திட்டாகத் தெரிந்தது.
“ஐயோ பாவி மோளை நீ சாமர்த்தியப்படுவதற்கு இதுவா சமயம்... குமரன் அண்ணை வரும்தோறும் கேக்குமே எப்ப நீ சிலவு வைக்கப்போறியள் எண்டு.. வீடியோ எடுக்க இன்னின்னார், சினிமா சங்கீதத்துக்கு இன்னின்னார்னு லிஸ்டு போட்டுவச்சிருந்துச்சு.. இப்படி மண்ணுக்கடியில.. புழு பூச்சிக்கு இடையில... ஐயோ என்ன பண்ணுவன் மோளை... பற்களுக்கு இடையில் விரலை வைத்துக்கொண்டு கடித்தாள் செல்லம்மா..
வயிற்றுப் பக்கம் சுடு நீராய் சுட்டது மாதவியின் கண்ணீர். அப்படியே அவள் தலையை அழுத்தி அணைத்து அழுகையைத் தின்றாள்.
ரகசியக் குரலில் “மோளை கொஞ்சம் தண்ணி எடுத்து கழுவிக்கோ..”போத்தலை எடுக்க முயற்சித்தாள்.
“வேண்டாம் அம்மை.. கையில இருக்கற சாப்பாடு இது ஒண்ணுதான்.. அது பாட்டு காயட்டும்.”
“தலைக்கு தண்ணியூத்தாமப் போனாலும்.... கறையை கழுவக்கூட ஏலலையே ஐயோ” எண்டு தன்னயும் அறியாமல் அழுதாள்
அம்மையின் கண்ணிரைதுடைத்து வாயைப் பொத்திய நேரம் வீரெண்று அலறினாள் மாதவி. அவளது காலில் துவக்கின் நுனிக்கத்திப் பட்டு ரத்தம் பீறிட்டது. எதிர்பாராமல் சரேலென்று அவள் கால்களைப்பிடித்து இழுத்தது ஒரு முரட்டுக்கரம். அவளை உள்ளே இழுக்க முயன்று தோற்று அவள் பின்னாலேயே மேலே தூக்கி எறியப்பட்டாள் செல்லம்மா.
“அட, பெடியள் உள்ளே என்ன பண்றியள்?” தமிழில் ஒலித்தது சிங்களக்குரல் பலமாக சிரித்தபடி...
“அம்மையும் குட்டியுமா அசிங்கம் பண்றியள்?” கேலியாக கூக்குரலிட்டது இன்னொரு குரல்
அவள் பாவாடையின் ரத்தம் வழிந்த இடத்தைப் பார்த்த ஒருவன் “அட சிங்கமடெ நம்மாளு குறி பாத்து சுட்டுருக்கனம்” எண்டான்
“ஓ” வெண்டு கூச்சல் பீறிட்டது. கூசிப்போன மாதவி சிரமப்பட்டு குப்புறப் படுத்தாள். “அட என்னடி வெக்கப்படுதியள் திரும்படி” எண்டு துவக்கை அவள் இடுப்புக்கு கீழே வைத்து கெந்த முற்பட்டான் ஒருவன்
செல்லம்மா தவழ்ந்து தவழ்ந்து அவனருகே செண்டு “சேர், சேர் அவளை ஒண்ணூம் பண்ணுடாதேயள் சேர், சேர்...” எண்டு கெஞ்சினாள்
அப்ப இவளை ஏதும் பண்ணமுடியுமோடெ”
இவ கிழிஞ்ச கௌவிடே எண்டு ஒருத்தன் விழுந்து விழுந்து சிரிக்க. அவன் கால்களை பிடித்து அழுதாள் “அவளெ விட்டுரு சேர்.. என்னெ கொன்னுடு சேர்” செல்லம்மாவின் இடுப்பை பலம்கொண்ட மட்டும் உதைக்க அவள் சுருண்டு ஓடி மாதவியின் அருகில் விழுந்தாள். அப்படியே எழுந்து மாதவியின் மீது படுத்துக்கொண்டு படர்ந்த செல்லம்மா “என்ற மோளை தொட விடமாட்டன் என்னை கொண்டு போட்டுதான் இவளைத் தொடணும்” ஆக்ரோஷமாய் கேவினாள்.
துவக்கின் நுனியால் மாதவியின் பாவாடையை குத்தி கிழித்து ஒரு பகுதியை கொடி போல தூக்கி வேகமாய் ஆட்டினான். அவர்களைச்சுற்றி துவக்குகளை தூக்கிகொண்டு குதித்தார்கள்.
மாதவி அம்மையின் காதில் மெல்ல “அம்மை, அம்மை என்னை கொண்டுபோட்டுடு அம்மை”
ஒரு கணம் திகைத்தாள் செல்லம்மா
“தயை செஞ்சி கொண்டுபோட்டுடு அம்மை. எனக்கு திராணி இல்லை அம்மை”
ஒரு நொடி திகிலாகப்பார்த்த செல்லம்மா சட்டெண்டு அவள் குரல் வளையைப் பிடித்து நெரித்தாள். கூடவே பற்களால் கடித்தாள். குரல் எழும்பாமல் கைகளையும், கால்களையும் அடித்து துடித்தாள் மாதவி. உற்சாக மிகுதியில் வெறியாட்டம் ஆடியவர்களுக்கு உடனடியாக ஏதும் புரிய இல்லை.
மாதவியின் தொண்டையிலிருந்து குருதி கொஞ்சம் கொஞ்சமாக பரவி வெளியேறியது. அப்போதுதான் அவர்கள் கவனித்தார்கள்.
“ஏ, கௌவி, கௌவி என்ன பண்றிய” எண்டு அவளைப்பிடுங்கி புரட்டினார்கள். செல்லம்மாவின் வாயெல்லாம் ரத்தம். அதற்குள் அடங்கிப் போயிருந்தாள் மாதவி. வெறிப்பிடித்த குரங்கு போல் ஏய் எண்டு கத்தியபடி அவள் வயிற்றில் துவக்கு கட்டையால் செருகினான் ஒருவன். வயிற்றிலிருந்த கொஞ்ச நஞ்ச மிச்சமும் கழிவாய் வெளியேறியது அவளிடமிருந்து. வானமே இடிந்து விழுவது போல ஓவென கேவினாள் செல்லம்மா..
இன்னும் வெறியாகி அவளை உதைக்கப்போன இன்னொருவனை தடுத்தான் வேறொருவன். “விடடெ அவளை... முகாமிலெ உயிரோட சில பேரை கணக்கு காட்ட வேண்டியிருக்கு..” எண்டவன் கையோடு கொண்டு வந்த உடுப்புக் கூடையை எடுத்தான். அதில் பெடியனுக உடுப்பு மாதிரி ஒன்ரை எடுத்தான். மாதவியின் உடலில் மாட்டிவிட்டான்.“வேன்ல ஒரு ரிப்போர்ட்டர் இருக்கான் பிஸ்கட் கொடுத்து உக்கார வச்சிருக்கன் அவனை கூட்டி வா”
சிறிது நாழிக்குப்பின் ஒருவன் கேமரயோட வந்தான். மாதவியையும் செல்லம்மாவையும் போட்டோ எடுத்தான். “அம்மைக்கு பிடிக்காம நாட்டுக்கு துரோகம் பண்ணினா அதான் அம்மை நெரிச்சுக் கொன்னுட்டாள்னு எழுது.”
“சரி”யெண்டு தலையாட்டினான் நிருபன். செல்லம்மா சுற்றிலும் பார்த்தாள் எங்கெங்கோ பதுங்கிக் கிடந்த அவர்களது ஒழுங்கையில் இருந்த சனம் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்தனர் அருகருகே... ஞானத்தாச்சி அவளைப் பார்த்தபடிகிடந்தனள். கௌவியா இருந்ததால கெடச்ச உபகாரம் உயிர்.. ட்ரெக் ஒன்று வந்து பிணங்களை மரக்கிளைகளை வாரிப் போடுவது போல ஏற்றிக்கொண்டிருந்தது.
நிருபன் செல்லம்மா அருகே வந்து குட்டியோட பேரு என்ன?
சிறிது யோசித்து பின் தெளிவாகச்சொன்னாள் “ மாலதி”
ஞானத்தாச்சி வெருட்டெண்டு அவளை நிமிர்ந்து பார்த்தாள் . செல்லம்மா அவளைக் கவனியாமல் வேறெங்கோ பார்த்தாள். அதற்குள்ளாக ஒரு ஆமிக்காரன் அவர்களருகே வந்து “ம்...ம்..ம்ம் போதும் மக செத்த துயரத்துல கௌவிக்கு விசிர் பிடிச்சிடுச்சு போதும் கேள்வியெல்லாம்” எண்டு வெருட்ட நிருபன் தலயாட்டிவிட்டு நகர்ந்தான்.
ஞானத்தாச்சி சன்னமான குரலில் “அவொகிட்ட ஏன் அப்படி சொன்ன? போயி ஆமிக்காரன் காலில் விழுந்து அவ பொணத்தைக் கேளு அவனுவ கும்பலா போட்டு எரிப்பானுவ.. பாதி எரியாம கெடக்கும் கழுகு கொத்தும்.. போ..போயி கெஞ்சு..”
“ போவட்டும் ஆச்சி... பொணமானப்புறம் எப்படி போனா என்ன?” எண்டவளை அதிசயமாகப்பார்த்தாள் ஆச்சி.
“ அது போவட்டும் ஏன் மாலதியினிட்டு பேர் மாத்தி சொன்னே?”
“அது மாலதியின்னு நெனச்சு போகட்டும். அப்பம்தான் அவளைதேட மாட்டானுக. அதுவுமில்லாமெ தொடர்ந்து பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.. அதுவுமில்லாம சாவுறவரைக்கும் மாலதியா ஆவ முடியல... செத்தப்புறமாவுது ஆவட்டும்” எண்டு தேம்பத்துவங்கினள் செல்லம்மா. எவர் காதையும் எட்ட முடியாத அவள் கதறல் காற்றில் துடித்து கடலில் கரைந்தது