திங்கள், 16 ஏப்ரல், 2012

நில் ... கவனி... செல்...


மூன்று:

          காதலின் நண்பன் யார்?
          சந்தேகமென்ன ... ‘செல்'தான்.
          ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு அலைவரிசை இருக்கலாம்.
         ஆனால், காதலும் செல்லும் ஒரே அலைவரிசை
         இரவுகள்தான் இரண்டுக்கும் பிடித்தமான பொழுது
         தனிமைதான் இரண்டுக்கும் பிடித்தமான சூழல்
        இரண்டில் சில இதயத்தில் இடம்பிடிக்கும்
        சில இடுப்பில் இடம் கேட்கும்...
        விரல்கள் தேய்ந்தாலும்
        தொட அலுப்பதேயில்லை


       “அடே... சூர்யா, மொட்டைமாடியில ஒத்தையா என்ன பண்ணிகிட்டு இருக்கே?”
         “ம்... வடாம் காய வைச்சிட்டு இருக்கேன்.”
          “ஓ... எஸ்.எம்.எஸ்-ஐ பிழிஞ்சி உலர்த்திகிட்டிருக்கியா? என் கோடவுன்ல ஸ்டாக் இல்லே. ரெண்டு தேக்கரண்டி எஸ்.எம்.எஸ். கடனாக் குடேன். திருப்பிக் குடுத்துடறேன். சுவைக்கத்தக்க அளவு தேன் குழைச்சிக்கொடு.”
         “போடாங்... நானே வெந்து வெரைட்டி ரைசா கெடக்கேன். நீ வேற சாவடிக்கறே...”
        “பொறிக்கத்தக்க அளவு கொதிச்சுக் கெடக்கேன்னு புரியுது. அதென்னடா மச்சான் அப்படியொரு கண்டீஷன்?”
         “அந்த வயித்தெறிச்சலை ஏண்டா கேட்குற... இன்னிக்கு தேதி 3... கரெக்டா பத்து நாளு பாக்கக் கூடாதாம்; போன் பேசக் கூடாதாம்; எஸ்.எம்.எஸ் கூட அனுப்பக் கூடாதாம்!
         இந்தப் பத்து நாளும் ஒவ்வொரு மணி நேரமும் என்ன பண்றேன்னு இந்த டைரியில குறிச்சி வைச்சிருக்கணுமாம்... 14-ம் தேதி காலையில 9.00மணிக்கு அவளைப் பார்க்கும்போது குடுக்கணுமாம்...”
         “காதல்னா ஏர்க்கண்டிஷன் இருக்கலாம். போர்க் கண்டீஷன் இருக்கக் கூடாது... கர்மம்... இதுக்குத்தான் தமிழ் படிச்ச பொண்ணு வேணாம்னேன்... கேட்டியா?”
        டிங்... டிங்... இரண்டு முறை ஒலித்தது சந்தோஷின் செல்...
        “இங்க பார்த்தியா... என் ஆளு அனுப்புன எஸ்.எம்.எஸ்.... ‘காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம்? உடுக்கையிழந்தவன் கைபோல இடுக்கண் களைவது நட்பு... இடுக்கண் களைவதற்காக உடுக்கை களைவது காதல்!' ரெண்டு நாளா ஒரே நான்வெஜ் எஸ்.எம்.எஸ்.ஸா வருது. ஏண்டா பாவி எஸ்.எம்.எஸ்.க்கு என்ன எக்ஸ்பான்ஷன்?”
        “ம்... ஷார்ட் மெஸேஜ் சர்வீஸ்.”
        “அதான் இல்லே... ஸோல் மெயிண்டெனிங் சர்வீஸ்! பார்க்காம காதல், பேசாம காதல்ன்னு படத்துல பார்த்திருக்கேன். இது என்னய்யா காதலிச்ச பிறகு பார்க்காம, பேசாம...”
          “பேயே போய்த் தொலை...”
           சிரித்தபடி நகர்ந்தான் சந்தோஷ்.

ஏழு:
       
        புலர்ந்தது இரண்டாம் நாள்... 7.00 மணியானால் ஒரு வேக்-அப் கால் வரும். அப்புறம் வழக்கம் போல் எஸ்.எம்.எஸ். படையெடுப்பு... ம்...
 வாயில் பிரஷ்-ஐ வைத்தபடி செல்லுடன் வெளியே வந்த சந்தோஷ் பாப்பா குரலில் பாடினான்.
           “காலை எழுந்தவுடன் மிஸ்டுகால் பின்பு
            கனிவுதரும் நல்ல எஸ்.எம்.எஸ்.
            மாலை முழுதும் மணிக்கணக்கில் கடலை
           என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

 கையில் கிடைத்த ‘மக்'கை எடுத்து அவன் மீது வீசினான் சூர்யா.
        லாவகமாகக் குனிந்து தப்பிய சந்தோஷ் தன் முயற்சியில் சற்றும் தளராமல் பாடினான்...
         “பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது...
          பக்கத்திலே செல்லிருக்கும் காலும் வராது...
          ஒரு காலும் வராது...”
 ஒரு காலால் கில்லி தாண்டுவது போல் ஆடிக்  கொண்டே பாத்ரூமுக்குள் ஓடி மறைந்தான்.
           சூர்யா செல்லை அனிச்சையாக எடுத்துப் பார்க்க, ஸ்க்ரீன் சேவரில் மஞ்சு சிரித்தாள்.
            “சிரிக்காதே... எல்லாம் உன்னால்தான். கண்ட நாயெல்லாம் காலைத் தூக்கிட்டுப் போகுது... என்ன அப்படி ஒரு குரூரமான ஐடியா உனக்கு... என்ன பெரிசா சாதிக்கப் போற...உனக்கென்ன... என் தலைக்குள்ள ஆயிரம் வண்டுங்க சுத்தி சுத்தி குடையறமாதிரியில்ல இருக்கு...”

ஐந்து:
          கிழிந்த நார் போல் கம்பெனியை விட்டு வெளியே வந்தான் சூர்யா. மாலை நேரத்துக் காற்று இதமாக முகத்தை வருடிச் சென்றது.
          அரவிந்த் அவனருகில் வந்து, “டேய் சூர்யா, நானும் ரெண்டு நாளா பார்க்குறேன், பேய் அடிச்ச பேக்காண்டி மாதிரியே இருக்கே... என்ன ஆச்சு உனக்கு...?”
           “சும்மாதான்... லேசா ஜுரம்.”
           “நான் என்ன கேள்விப்பட்டேன்னா, மஞ்சு ஏதோ பத்து நாளைக்குப் பேசக்கூடாது, பார்க்கக் கூடாது, முக்கியமா எஸ்.எம்.எஸ். அனுப்பக் கூடாதுன்னும் சொல்லிட்டதா நம்பத் தகுந்த வட்டாரத்திலேருந்து தகவல்  கிடைச்சுதே...”
            “அதான் வெவரமா இருக்கீங்களே, அப்புறமென்ன ரொம்ப கவலைப்படற மாதிரி கேள்வி...? எட்டி உதைச்சுடுவேன், எட்டிப் போயிடு.”
           “கோபப்படாதே சூர்யா... ஒரு இடைக்கால நிவாரணமிருக்கு... அக்கவுண்ட் செக்ஷனில அனிதா இருக்கா தெரியும்ல... குட் கம்பேனியன்... என்ன அப்பப்ப ஷாப்பிங், தீம் பார்க்குன்னு கூட்டிட்டு போகணும்பா... கொஞ்சம் செலவு பிடிக்கும்; பரவாயில்லையா? உன் நம்பரைக் குடுக்கட்டுமா? மிஸ்டு கால் வரும். சும்மா பிரிச்சி மேய்ஞ்சுடுவா...”
              “டேய், டேய்... ஓடிப் போயிடு; எனக்குள்ள இருக்கற மிருகம் முழிச்சு சோம்பல் முறிக்குது. மவனே உன் கையை முறிக்கறதுக்குள்ள காணாமப் போயிடு...”

சுழியம்:
 
           நடுநிசி. மொட்டை மாடி. நட்சத்திரங்களைத் தாறுமாறாக தன்போக்கில் எண்ணிக்கொண்டிருந்தான். இத்தனை அழகா இந்த வானம்? இத்தனை இதமா இந்த இரவு...? இத்தனை நாள் உற்றுக் கவனித்ததேயில்லை சூர்யா. இந்த மொட்டை மாடி தூக்க ஸ்தலமாக மாறியதே மஞ்சுவுடனான காதலுக்குப் பிறகுதான்... இப்பொழுது இந்தத் தனிமையே கொடுமையாகிப் போனது...
 கண்டிஷனாவது ஒண்ணாவது... ஆவறது ஆவட்டும்னு போன் அடிச்சிடுவோமா... போனை எடுத்தான். அப்புறம் நிரந்தரமா பேச மாட்டேன்ன்னு மிரட்டல் வேற... மூணு நாளே தாங்களை... லைஃப் முழுக்கன்னா... தாங்காதே. செல்லில் போன் புக்கில் அவள் பெயரை டெலிட் செய்தான். செல்லை கோபமாகக் கீழே வைத்தான்.
           
            நீயும் நானும்
            உயிரும் உடலும்
            நீ உயிர்;
            நான் உடல்...
            அதனால்தான்
            நீ பிரிந்த பின்
            நானே வெந்து போகிறேன்.


              புரண்டு புரண்டு படுத்தான். எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாமல் தூங்கிப்போனான்.

ஏழு:

           மாலை நேரம் மணி 7.00. ஊர் மொத்தமும் டி.வி.க்கு முன் பவ்யமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. மாற்றி, மாற்றி கண்ணீரும் கம்பலையுமாகப் பெண்கள்... வெறுத்துப் போய் தன் அறைக்குள் அடைந்தான் சூர்யா. ரூமை ஒழுங்கு படுத்தினான். பழைய பிரஷ்களும் கேன்வாஸ் துணிகளும் கிடைத்தன. தூசி தட்டினான். சாஃப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்த பிறகு பரணில் போட்டாயிற்று வரைதலை. ஸ்டேண்டைப் பிரித்து கேன்வாசை ஃபிக்ஸ் செய்தான்.
            இரண்டு கண்களை மட்டும் வரைந்தான். பார்ப்பதற்கு மஞ்சுவின் கண்கள் போலவே இருந்தது. பிரித்து சுருட்டிப் போட்டான்.
            வேறொரு துணியை எடுத்து ஃபிக்ஸ் செய்தான். இப்பொழுது முகம் ஒன்றை வரைந்தான். ஒரே ஒரு கண்ணை வரைந்தான். முகத்துக்குக் கீழே மற்றொரு கண்னை வரைந்தான். இரண்டு கண்ணும் பிரிந்து கிடந்ததை உணர்த்துவது போலிருந்தது. அவனையுமறியாமல் கண்ணீர் பெருகி முகத்துக்குள் இருந்த கண்ணில் விழுந்து வழிந்தது.
         “அட, எக்ஸலெண்டா இருக்கு. என்னடா திடீர்னு ஓவியமெல்லாம் தூள் கிளப்பற. ஆனா இன்னும் கம்ப்ளீட் ஆகாம பாதியா நிக்கற மாதிரியிருக்கு.” பின்னாலிருந்து சந்தோஷின் குரல் கேட்டது.
          ‘ஆமாம்' போல் தலையாட்டிய சூர்யா சிறிது நேரம் யோசித்தான். பின் முகத்துக்குக் கீழேயிருந்த கண்ணில் சிவப்பு வர்ணம் தீட்டினான். ரத்தக் கண்ணீர் போல் தெரிந்தது.
           “அடடா... அற்புதம்... புறநானூற்றுப் பாடல் போல் கவித்துவமா ஆயிடுச்சி. பிரிவுத் துயரைப் பின்னியெடுத்துட்டே!”
          “அது மட்டுமா தெரியுது?”
          “வேற ஒண்ணும் விளங்கலையே...”
          “நாளைக்கு இத ஒரு ஹோர்டிங்கா வெளியில வைக்கப் போறேன். என்னென்ன அர்த்தம் கிடைக்குது பாரு.”
           இன்னும் கவனமாக மெருகேற்றினான்.

நான்கு:
 
        மேன்ஷனின் வெளியே இருந்த அந்த ஓவியம் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரையும் ஈர்த்தது. சொல்வதற்கு எதுவும் தோன்றாமல் சிலர் அவனைத் தேடி வந்து கைகொடுத்தனர்.
             ஒரு விளம்பரக் கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் அவனை சந்தித்து ஆயுள் காப்பீட்டுக் கம்பெனியின் விளம்பரமாகப் பயன்படுத்த அனுமதி கேட்டார். ஒரு உறுப்பினரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்குக் கண்ணீர் மட்டுமே மற்றொரு கண்ணுக்குக் கிடைக்கும் என்று அவனிடமே விளக்கம் சொன்னார். புன்னகையோடு கேட்டுக்கொண்டான்.
            இதற்குக் கீழே ஏதாவது இரண்டு வரி வாசகங்களை எழுதுங்கள். நாங்களே பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்.
            என்ன எழுதலாம்... எது எழுதினாலும் அது அடுத்தவர்களின் கற்பனையைத் தடுத்துவிடுமே... செல் ஏதோ எஸ்.எம்.எஸ். என்று கிணுங்கியது.  ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
             “எழுதுவேன். அது உங்களுக்குப் பொருந்துமா வேறு எவருக்காவது பொருந்துமா என்று தெரியாதே.”
            புரிந்து கொண்டு நகர்ந்தார்.

இரண்டு:

         அடுத்தநாள் விடிந்ததும் ஓவியத்தின் முன் கூட்டம் நிறைந்திருந்தது.
 யாரோ தங்களுக்குத் தோன்றிய இரண்டு வரிகளை எழுதியிருந்தார்கள். அதற்கு கீழே கையொப்பமிட்டுப் போக, இன்னும் சிலரும் கீழே...
 நெருங்கி வந்து படித்தான் சூர்யா.

          “துடைக்க நீளும் கைகள் இருந்தும்
           முயலாதவன் முடவன்...”

யாரோ அர்த்த்த்தைப் பூர்த்தி செய்து விட்டுப் போயிருந்தார்கள்...

         “ஈரம் உணர இதயம் இருந்து
           மறுப்பவன் மூடன்”

நான்கு:

        மார்வலஸ் சூர்யா... ரொம்ப நாளைக்கு அப்பறம் வரைஞ்சாலும் அதை பேச வைச்சிட்டே, கலை பேசணும் சூர்யா. பாக்கறவங்க கிட்டயெல்லாம் பேசணும். உன்னால முடியுது, இனிமே அடிக்கடி தோண்றப்பவெல்லாம் ஏதாவது வரை. எல்லாரையும் நம்ம பக்கம் திரும்பச் செய். உன் செல்-ஐ ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா? எனக்குத்தான் இப்ப நிறைய ‘கால்' வருது. எல்லாம் உன்னைத்தான் விசாரிக்கிறாங்க. ஆன் பண்ணுடா” என்றான் சந்தோஷ்

நான்கு:
         இப்பொழுது இரவு படுக்கும்போது படபடப்பு இல்லை. அடுத்த ஓவியம் பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது. டைரியை எடுத்தான்.

          “காதலிக்கத் துவங்கும் போது
           உன்னை உணர்ந்தேன்
           காதலித்த பின்
           என்னையே உணர்ந்தேன்..”


        நாளை வந்து உன்னைப் பார்க்கப் போகிறேன் மஞ்சு. முழுசா பத்து நாளைக்கு அப்புறம்! உனக்கு என்ன கொடுத்தாலும் தகும் தான்; ஆனாலும், உனக்காக... உனக்காக மட்டுமே ஒரு ஓவியம்...
        புதிய கேன்வாசைப் பொருத்தி வரையத் தொடங்கினான். விடிய விடிய வரைந்தான்.

ஒன்பது:

        மணி 8.52... இதயம் இதமாகப் படபடத்தது. செல்-ஐ எடுத்தான். ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்தது. ஆன் செய்ய ஒரு கணம் நினைத்தான். வேண்டாம்... மஞ்சு வரட்டும். பார்க்கில் நடை பழகுபவர்களெல்லாம் அவனையே பார்ப்பதுபோல் இருந்தது. முதன்முதலாகக் கூச்சமாக இருந்தது. முதன்முதலாக அவளைப் பார்க்கக் காத்திருந்த போது உலகமே கண்ணுக்குத் தெரியவில்லை. இப்பொழுது தரையில் நெளியும் சிறு பூச்சி கூட இவனையே விசாரிப்பது போல் பட்டது.
           பின்னாலிருந்து அவள் வாசம் வீசியது. திரும்பினான். அவளேதான்...
          “எப்படி இருக்கீங்க...?”
            சட்டென்று பதிலே வரவில்லை அவனிடமிருந்து... இத்தனை நாள் கழித்து பார்த்தபோது மஞ்சு இன்னும் அழகாக இருந்தாள்.
         “அப்புறம்...” என்றாள். ஒரு கணம் சிலிர்த்து ஓடியது உள்ளுக்குள்...
          “கழுவி விட்ட நிலா போல் அழகா இருக்கே மஞ்சு...”
          “தேங்க்யூ சூர்யா. கவிஞனாகவும் ஆகிட்டீங்க போல... நானும் உங்களுக்குத் தெரியாம வந்து அந்த ஹோர்டிங்கைப் பார்த்தேன். க்ரேட் சூர்யா. உனக்குள்ள இப்படியொரு அற்புதமானவன் இருக்கானா?!”
            “எனக்குத் தெரியாது, கண்டுபிடிச்ச நீயே இப்படிக் கேட்டா நானென்ன சொல்றது? மறுபடி ஓவியம் வரைஞ்சதும் உனக்குத்தான் முதல்ல சொல்லனும்ன்னு நெனைச்சேன். உன் கண்டிஷன் என்னைக் கட்டிப் போட்டுடுச்சு. ஏன் திடீர்ன்னு இப்படியொரு யோசனை உனக்கு?”
              “செல் வந்தப்பறம் காதல் சுலபமா ஆயிடுச்சு. ஆனால், திரில் போயிடுச்சு. பொழுதன்னிக்கும் பேச்சு... பேச்சு.... பேச்சு... ஓயாம பேச்சு. அப்புறம் எஸ்.எம்.எஸ். உனக்கு உன் லட்சியம் போச்சு. எனக்கு என் சுவாரஸ்யம் போச்சு. ஒரு கட்டத்துல எனக்குள்ள குற்ற உணர்ச்சி வந்துடுச்சு.
         என் காதல் உன் நேரத்தைத் தின்னதுமில்லாம உன் அறிவை, உன் திறமையை, உன் உழைப்பை திங்க ஆரம்பிச்சுடுச்சோன்னு தோண தொடங்கிச்சு. இது இல்லை சூர்யா காதல்... உன்னையும் என்னையும் ஒரு அங்குலமாவது உயர வைச்சாதான் அது காதல். நேர் எதிரா திரும்பினா அது காதல் இல்லை ....சாதல்.
           எங்க போகப் போறோம் நாம... வாழ்க்கை பூரா பேசப்போறோம். எல்லாத்தையும் இழந்த பிறகு என்னத்தைப் பேச... நம் தோல்வியைப் பத்தியாஅ... என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் தோல்விங்கறது சேராம பிரிஞ்சு போறதில்ல... சேர்ந்த பிறகு ஒருத்தரை ஒருத்தருக்குள்ள தொலைஞ்சு போக வெச்சிக்கறது தான். உன் கிட்ட பேச வேணாம்னு சொல்லிட்டேனே தவிர ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் கடக்க பட்ட பாடு.... எனக்குத் தான் தெரியும்.              ஒரு கட்டத்துல நீ நிபந்தனையை மீறிப் பேசக் கூடாதான்னு தான் தவிச்சேன். நல்ல வேளை நீ போன் பண்ணலை. உன்கிட்ட சொன்னது போல செல்-ஐ நான் ஆஃப் பண்ணி வைக்கலை.”
           “தேங்க்ஸ் மஞ்சு” அவள் கைகளை இறுகப் பிடித்தான். ரொம்பப் புதுசாக இருந்தது.
             “இப்ப சொல்... காதலின் எதிரி யார் சூர்யா?”
             “சந்தேகமென்ன... செல்தன்” சொல்லி விட்டு செல்-ஐ தூக்கி விசிறப் போனான்.
           அவன் கைகளைப் பிடித்துத் தடுத்த மஞ்சு, “வீசாதே சூர்யா, இருக்கட்டும். இந்த பத்து நாளும் அம்மா கூட ஒத்தாசையா இருந்து வீட்டு வேலைகளைப் பழகிகிட்டேன். ஒரு ஆன்லைன் எக்ஸாம் எழுதி ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கியிருக்கேன். எனக்கு ஒரு பதிப்பகத்தில வேலை கிடைச்சிருக்கு. பதிப்பிக்க வர்ற புத்தகங்களை எடிட் பண்ற வேலை. இனி உன்னோட வெற்றியை என்கிட்ட சொல்றத்துக்கும் என்னோட வெற்றியை உன்கிட்ட சொல்றதுக்கும் இந்த செல் பயன்படட்டுமே.”
            “ஒரு விஷயம் தெரியுமா மஞ்சு.. என்னையும் மீறி எங்கே உனக்குப் போன் பண்ணிடுவேனோன்னு பயந்து உன் நம்பரை டெலிட் பண்ணிட்டேன். இப்ப யோசிச்சு பார்த்தா கொஞ்சம் கொழம்புது. ஐ ஆம் நாட் ஜோக்கிங். உன்நம்பரைச் சொல்லு...”
            மஞ்சு சொன்னாள்  “94424 70573”

நன்றி: 'மனமாற்றம் ' சிறுகதை தொகுப்பு, ஜூலை - 2009ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

போட்டுத்தள்ளு

          எப்படியோ ஒரு கசகசப்பு மரணம் நிகழ்ந்த வீட்டில் புகுந்துவிடுகிறது. சம்பூரணத்தாச்சிக்கு எழுபத்தி மூன்று வயதாகிறது. படிக்கட்டிலிருந்து விழுந்த அதிர்ச்சியில் இறைவனடி சேர்ந்துவிட்டார். மல்லிகாதான் முதலில் அவரது மரணத்தை உணர்ந்தவள் பின்பு பிரகடனப்படுத்தியவளும் அவளே... மரணம் பற்றிய செய்தி மனிதர் விட்டு மனிதர் பரவுகையில் இயல்பான வருத்ததை மீறி மெல்லிய மகிழ்ச்சி இழையோடுவதை கவனித்திருக்கிறீர்களா? அதிர்ச்சி மிக்க ஒரு புதிய செய்தியை  முதலில் அறிவித்த பரவசம் அது.
          சம்பூரணத்தாச்சி மரணத்தை எல்லோரும் கல்யாண சாவு என்றார்கள். ஒருத்தரையும் படுத்தாம அவரது ஆத்மா போய் சேர்ந்தது என்று ஆறுதலாக சொல்ல ஏதுவாக பனிப்புகை போல் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
          மல்லிகா மெல்ல விசும்ப ஆரம்பிக்க “ம்....ம்.. வழிகூட்டி சூடம் ஏத்திட்டுதான் அழணும்' பெரியம்மாவின் கண்டிப்பான குரல் கேட்டது.
          வாசல் எதிரே தெருகூட்டி சூடம் ஏற்றியபின் முறையான அழுகுரல்கள் எழும்பின.
        ஈஸ்வரனிடம் மெல்லிய குரலில் எல்லோரும் வந்து சொல்லவேண்டியவங்களுக்கு தகவல் சொல்லியாச்சில்ல என்று கரிசனமாக கேட்டனர்.
      அதான்... இப்ப செல்ஃபோன் வந்திடுச்சில்ல.. வாயு வேகத்துல செய்தி போயிடுச்சு..
         அக்கம் பக்கம் கேள்விப்பட்டவர்கள் ஒன்றிரண்டாக வரத்துவங்கினர். யாரொ ஊதுவத்தியை கொளுத்தி ஆச்சியின் தலைமாட்டருகே வைத்தனர். ஊதுவத்தி வாசனைகூட அச்சத்தையும், இறுக்கத்தையும் தன்னுள் ஏற்றிப் பரவியது.
           மாணிக்கம் எங்கிருந்தோ பந்தல் போடும் ஆட்களையும், சங்கு சேகண்டிக்காரர்களையும் அழைத்துவந்திருந்தான். நாட்டாமைக்காரர் லேசான தள்ளாட்டத்துடன் அவர்களோடு பேரம் பேசிக்கொண்டிருந்தார். அடுத்தவர் மரணம் அவரைப்போன்ற சிலருக்கு கொண்டாட்டம்.
          ஈஸ்வரன் யாரையோ அழைத்து சொன்னார் போயும் போயும் அவங்ககிட்ட  பேரம் பேசிட்டு... சரின்னு சொல்லிட்டு  அடுத்துஆக வேண்டிய காரியத்தை பாருங்க..
           ஒரு ஓரமாக உட்கார்ந்து சங்கு ஊதுகிறவர் தன் கைங்கர்யத்தை ஆரம்பித்தார். சப்தம் கேட்டோ என்னவோ அகிலாகுட்டி தூக்கத்திலிருந்து கண்ணைக் கசக்கியபடியே சிறு விசும்பலுடன் வெளியேவந்து ஈஸ்வரனின் கால்களைக் கட்டிக்கொண்டாள்.
        "அப்பா பசிக்குது"
        "ஏய், மல்லி என்ன பண்றே அங்கே? பாப்பாவுக்கு ஏதாவது கொடு."
         மல்லிகா அழுத முகத்தோடு வெளியே வந்து
        'என்னடி எழுந்தவுடனே படுத்தற? எதுக்கு இப்ப அழுவுற?"
        "நீ எதுக்கு அழுவற?"
         "ஆச்சி செத்துப்போயிட்டாங்க.வா உள்ளே."
        "எந்த ஆச்சி?"
        "நம்ம ஆச்சிதாண்டி.. இன்னிக்கு ஒரு நாள் படுத்தாம கம்முன்னு இரு தெரியுதா?"
          அகிலாகுட்டியைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அகிலா வாகாக அமர்ந்து மல்லியின் தோளில் இருகை பூட்டி சாய்ந்துகொண்டாள். மெல்ல மல்லியின் காதருகே கேட்டாள்...
       "அப்ப ஸ்கூல் லீவா?"   
         "அதுல இரு. ஆச்சியை பாக்கணும்னு இல்ல..."
 
        ஆச்சியின் உடலருகே சென்று அவரது கால்களைத் தொட்டு அகிலாவின் கண்களில் அவளே ஒற்றினாள். பிறகு கீழே இறக்கிவிட்டாள்.
         இறங்கிய உடனே அவளது கைகளை சுரண்டி , "அம்மா, அம்மா ஆச்சிக்கு தலையில அடிபட்டுடுச்சா?"
        "இல்லையே."
         "அப்புறம் ஏன் கட்டு போட்டிருக்கீங்க?"
         "செத்துப்போனா அப்படித்தான்."
        "அப்ப குமாரு மாமா தலையில கட்டுப்போட்டுட்டு வந்தாங்களே அவங்க செத்துப்போகலை?"
        "அய்யோ, தரித்திரம் வாயை மூடு.. புரியாம ஏதாவது உளறாதே."
         "உனக்குத்தான் எதுவும் புரியலை...' என்று முணுமுணுத்தாள் அகிலா. 

       'மணி என்னம்மா ஆச்சி?'
        "இப்ப நீ எந்த ஆபீசுக்கு போகனும்னு மணி கேக்கறே?"
        "படுத்தாதேம்மா ... கடிகாரம் நின்னுபோயிடுச்சு ஏன்?"
       "நிக்கலை.. நாந்தான் நிறுத்தினேன்."
       "அதான் ஏன் நிறுத்தினே?"
       "அது அப்படித்தான். சும்மா ஏதாவது தொணதொணன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்ககூடாது."
        அப்போது உள்ளே வந்த பெரியப்பா,  "குளிகை சாயந்திரம்தானே வருது இப்ப மணி என்ன ஆவுது ?"
        "தாத்தா நீ ஆபிஸூக்கு போறியா?" 

       "பல்லுல போடுவேன்"  என்று அவள் முதுகில் சாத்தினாள்.
       அகிலா 'வீல்' என்று கத்ததுவங்கினாள்.
        "அடிக்காதே மல்லி சின்னப்புள்ளதானே அவளுக்கு என்ன தெரியும். அவளுக்கு கொஞ்சம் பால் குடு.. பசியிலதான் அடம் பண்றா"
என்று பெரியம்மா அவளை ஆதரவுடன் தன்னருகில் இழுத்துக்கொண்டாள்.
         "ரொம்ப வாய் பெரியம்மா.. எந்த நேரத்துல என்ன சொல்லி வைக்குமோன்னு பயமா இருக்கு."
        "நாம பேசரதான் அது கத்துகிட்டு பதிலுக்கு பேசுது அழாதே அகிலு."
         உள்ளே சென்ற மல்லி கொஞ்சம் பால் எடுத்துக்கொண்டு வந்தாள்.

         மணியாரு கொல்லையில
         மல்லியப்பூ பறிச்சு வந்தேன்
         அடி என் கண்ணே அந்த
         மல்லியப்பூ வாடலையே
        ஒன் உசிரு வாடிடுச்சே

         ராவுத்தரு தோப்புக்குள்ளே
        தேன்கதளி எடுத்து வந்தேன்
        தேன்கதளி அழுவலையே பாவி
        ஒன் தேகம் இப்ப அழுவிடுச்சே

  என்று மூக்கை சிந்தி ஒப்பாரி வைத்தாள் பட்டுக்கோட்டை மாமி.           

       அகிலா மெல்லிய குரலில் வெறொரு சுருதியில் தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
         ஆற்றிய பாலை டம்ளரில் ஊற்றி அகிலாவிடம் நீட்டினாள் மல்லி.

       அகிலா கோபத்தோடு அதை வாங்காமல் இன்னும் சற்று சத்தம் கூட்டி அழுதாள்.
         "தே... நிறுத்து ராகம் போடாதே."
         "நான் ஒண்ணும் ராகம் போடலை. அந்த பொகயிலை பாட்டிதான் ராகம் போடுது."
          கோபத்தின் உச்சிக்கேப் போன மல்லி அவளை அடிக்க கை ஓங்க, சிரிப்பை பெரும் சிரமத்துடன் அடக்கிய பெரியம்மா, அகிலாவை லாவகமாக அணைத்து அவளிடமிருந்து காப்பாற்றினாள்
           "பாத்தில்ல பெரியம்மா... நல்லவேளை அந்த மாமிக்கு கொஞ்சம் காது கேக்காது. இப்படித்தான் என் உயிரை எடுக்குது."
         "சரி, சரி அந்த பாலை என்கிட்ட கொடு. நான் கொடுக்கிறேன்" என்று அவளிடமிருந்து வாங்கி அகிலாவிடம் கொடுத்தாள் பெரியம்மா.
         கொஞ்சம் குடித்ததும், "இவளை மாடியில விட்டுடறேன். இங்க இருந்தா ஏதாவது வாயடிச்சுகிட்டே இருப்பா விடு பெரியம்மா" என்று அகிலாவைத் தூக்கிகொண்டு போய் மாடியில் விட்டுவிட்டு கீழே வந்தாள்.
           சோழவந்தான் அத்தை தனது பரிவாரங்களுடன் 'ஓ' வென ஓலமிட்டபடி உள்ளே நுழைந்தாள். ஆச்சிக்கு ரொம்ப நெருக்கம். ஒப்பாரி களைகட்டியது.
          ஈஸ்வரன் தனக்கு தெரிந்தவர்களை ஆச்சியின் சடலத்துக்கருகே அழைத்து வந்து நிறுத்திவிட்டு சோகமே உருவாக சிறிது நேரம் நிற்பதும், வெளியேறுவதுமாக இருந்தார்.
           திடீரென்று ஹை வால்யூமில் டீ.வியின் அலறல் கேட்டது.
          "அண்ணே, அண்ணே நம்ம பாண்டியனை போட்டுத்தள்ளிட்டானுங்க அண்ணே..."
         "யார்ரா... அவன் நம்ம ஆளுங்க மேலேயே கையை வச்சவன்?"
        "அந்த முத்துவேலோட ஆளுங்க அண்ணே."
        "நம்ம பசங்களை கூப்புட்ரா.. அவன் ஆளு ஒருத்தன் மிஞ்சக்கூடாது. அத்தினி பேரையும் போட்டுத்தள்ளுங்கடா... பாத்துடுவொம்."
        மல்லி வேகமாக மாடியேறினாள். அகிலாக்குட்டியோட வேலையாத்தான் இருக்கும். அதுதான் எதை சாப்பிட குடுத்தாலும் டீ.வியை போட்டுக்கும்.
        ரூமுக்குள் நுழைந்த உடனே தெரிந்துவிட்டது அகிலாதான். பாய்ந்து சென்று டீ.வியை நிறுத்தினாள் மல்லி.
        "சனியனே.. நேரம் காலம் இல்லை... எந்த நேரத்துல டீ.வி போடற நீ?" கோபமாக கத்தியபடி ப்ளக்கை பிடுங்கினாள்.
         அகிலா ரிமோட்டை எடுத்து அழுத்தி அழுத்திப் பார்த்துவிட்டு "டி.வியை போடு சனியனே" என்றபடி அழ ஆரம்பித்தாள்.
       "வாயில போடுவேன் எருமை..ஆச்சி செத்ததுக்கு அழுவலை.. டீ.வியை நிறுத்தினா அழுகை பொத்துகிட்டு வருதோ?" என்று அவள் முதுகில் போட்டாள்.
        மேலே வந்த ஈஸ்வரன், "அடடா என்ன சத்தம் மல்லி? வந்தவங்களை கவனி. இவளை என்கிட்ட விடு" என்றதும் மல்லி வேகவேகமாக கீழே இறங்கி வந்தாள்.
        ஈஸ்வரன் சமாளித்துவிடுவார். ஆனால் அந்த கோட்டான் அடங்காதே. என்று நினைத்தபடி நடந்தாள்.
         கீழே சடங்கு பொருட்களை வாங்கச் சென்ற மூர்த்தி வேர்க்க விறு விறுக்க நின்றிருந்தான்.
        "என்னடா மூர்த்தி?"
        'அக்கா, அத்தான் எங்கே?'
       "மாடியில...."
        கீழே ஈஸ்வரனும் இறங்கி வந்தார். "என்ன மூர்த்தி?"
       மூர்த்தி ஈஸ்வரனை தனியே அழைத்துச் சென்று, "அத்தான் கடைத்தெருவே களேபரமா இருக்கு. நம்ம பஞ்சாயத்து தலைவர் பன்னீரை யாரோ போட்டுத்தள்ளிட்டாங்க அத்தான்."
         "அய்யய்யோ... எப்படா?"
        "காலையிலதான். ஜீப்பில போயிட்டு இருந்திருக்காரு. எவனோ நாட்டு வெடிகுண்டை போட்டுட்டான். ஜீபிலேர்ந்து எகிறி விழுந்து ஸ்பாட்டிலேயே அவுட். ரெண்டு பேரு ரொம்ப சீரியஸா இருக்காங்களாம்."
        "போட்டவன் எவனாம்?"
        "எல்லாம் தேர்த‌ல் தகராறுதான் காரணம்னு பேசிக்கிறாங்க. போலிங் அன்னிக்கு பன்னீரோட ஆளுங்க ரெண்டு பேரை போட்டுட்டாங்கல்ல. அதான் பதிலுக்கு இவரை போட்டுட்டாங்க. கடையெல்லாம் அடைச்சி கெடக்கு. பன்னீரோட ஆளுங்க கத்தி, கபடாவோட வெறிபுடிச்சா மாதிரி சுத்திகிட்டு இருக்கானுங்களாம்."

        ”என்ன எழவுடா இது... இந்த நேரத்துல? நம்ம காரியத்துக்கு வர்றவங்க பத்திரமா  வந்து சேர்ந்து, அவங்களுக்கு வேண்டியதை பார்த்து நாம செய்ஞ்சு பத்திரமா அனுப்பியாகணுமே... எப்ப நாம பாடியை எடுக்கறது?” ஈஸ்வரனுக்கு தலை சுற்றியது.
       ”ஓரளவு கலவரம் நின்னாத்தான்...”
          ஆச்சியின் சாவு செய்தி சுவாரஸ்யம் குன்றி அதைவிட சுவாரஸ்யமான பன்னீரின் சாவுச் செய்தி பரபரப்பாக பரவியது அங்கே...
       வேறு எந்தெந்த ஊரிலோ யார் யாரையோ போட்டுத் தள்ளிய கதைகளும், அதில் கோரமாக உறுப்புகள் வெட்டப்பட்டு வீசப்பட்ட பராக்கிரமங்களும் கூடுதல் கற்பனை கலந்து பரிமாறப்பட்டன. ஆச்சி சாவு கல்யாண சாவு என்று சொன்னவர்கள் இப்போதோ... இருந்திருந்து கிழவி இப்பயா மண்டையப் போடணும்?' என்று கரித்தார்கள்.
        அகிலாக்குட்டி மாடியிலிருந்து கூட்டத்தில் அங்குமிங்குமாக நடந்து மலங்க மலங்க விழித்தாள். இதற்குள் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தான் கண்ட அந்த அற்புதக் காட்சியை விலாவாரியாக ஒரு திரைக்கதை போலச் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கொலேரென்று அவரைச் சூழ்ந்து கொண்டு குறுக்குக் கேள்விகளால் சம்பவத்தை இன்னும் சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தது. ஒருவர் பெண்கள் பகுதிக்கு நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தார். செய்தி கைகால் முளைத்து புதுப் புது வடிவங்களில் உருவெடுத்து அலைந்து கொண்டிருந்தது. குண்டு வீசியவன் அருகிலிருந்தால் அவன் கூட சுவாரஸ்யமாக நின்று கேட்குமளவு கதை படு பரவச நிலையை எட்டியிருந்தது.
         அகில் குட்டி நின்று நிதானமாக எல்லாக் கதைகளையும் உள்வாங்கிக் கொண்டு புதிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
 ஈஸ்வரனிடம் சென்ற அகிலா அவரது சட்டையைத் தன் சிறு விரலால் சீண்டி அழைத்தாள்...
         “அப்பா... அப்பா...”
         “என்ன?”
         “கிட்ட வா”
         அவளைத் தூக்கி நெஞ்சருகே அமர்த்திக் கொண்டார். சட்டென்று சப்தமாகக் கேட்டாள்...
         “நம்ம ஆச்சியை யாருப்பா போட்டுத் தள்ளினது?”
        ஒருநிமிடம் எல்லாப் பரபரப்பையும் தூக்கிச் சாப்பிட்டது அவளது கேள்வி.
         கூட்டம் எதுவும் பேசாமல் அந்தக் கணம் ஸ்தம்பித்தது.


        ம‌ர‌ண‌ம் என்ப‌து இய‌ற்கையாக‌ நிக‌ழ்வ‌து என்ப‌தை அந்த‌ ஆறு வ‌ய‌து குழ‌ந்தையிட‌ம் எப்ப‌டி விள‌க்குவ‌து என்று புரியாம‌ல் விழித்தான் ஈஸ்வ‌ர‌ன்.


நன்றி: செளந்தர சுகன் ,- ஏப்ரல் -2012

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...