மூச்சிரைக்க
காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ கயிற்றால் கட்டி இழுப்பது போல் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு கோட்டை நெருங்கி விழுந்தான். பிரபஞ்சத்தின் காற்று முழுக்க அவன் உடலுக்குள் புகுந்து ஒரே நேரத்தில் வெளியேறியது போல வெப்பமாய் மூச்சு விட்டான். உடல் இரும்புப் பட்டறையின் உலை போலக் கொதித்தது. தெப்பலாக நனைந்திருந்தான். சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு பக்ரூவை உற்றுப் பார்த்தான்.
பக்ரூ முகத்தில்
எந்த உணர்ச்சியுமின்றி “10.58” என்றான்.
முகுந்தன் கைகளை தரையில் ஓங்கிக் குத்தி
‘ஷிட்' என்று சொல்லிவிட்டு எச்சிலைக் கூட்டித் துப்பினான். பக்ரூவைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். சாதாரணமாகவே பக்ரூவைப் பார்க்க அவனுக்குப் பிடிக்காது. ஒடுங்கிப் போன முகம், சவரம் செய்யப் படாமல் முட்புதர்
போல ஒழுங்கற்ற தாடி, குறுகுறுவென ஊடுருவும் கண்கள், உதட்டின் ஓரத்தில் தழும்பு என்று எவரும் எளிதாக கண்டவுடன் வெறுத்துவிடும் முகம் பக்ரூவுக்கு.
ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஏற்பாடு செய்திருந்த கோச் பக்ரூ. அவன் வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனோடு சொச்ச நாட்களில் எப்படிக் குப்பை கொட்டுவது என்பதை நினைத்தால் ஆயாசமாக இருந்தது முகுந்தனுக்கு.
எழுந்து சென்று வண்டியின்
மீது உலர்த்தியிருந்த டர்க்கி டவலை எடுத்து உடல் முழுக்க துடைத்துக் கொண்டான். “பெர்ணாண்டஸ், லாஸ்ட் மீட்ல 10.30 “ஐ நோ” எரிச்சலுடன் சொன்னான் முகுந்தன்.
“பக்ரூ, மொதல்ல இந்த செகண்ட்ஸ்
, செகண்ட்ஸ்ன்னு சொல்றத நிறுத்து. ஐ டோண்ட் வாண்ட் த வேர்ட்
ரிப்பீட்”
“ஓ கே... ஆனா உன்னோட வாழ்க்கை ‘செகண்ட்ஸ்' கூடத்தான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘செகண்ட்ஸ்' இல்லாம நீ நகரவே முடியாது. ‘செகண்ட்ஸ்' நின்னு போனா சகலமும் ஸ்டாப்.
இன்ஃபேக்ட் நாம ‘செகண்ட்ஸ்' கிட்டேயிருந்து தப்பிக்கவே முடியாது.”
அப்படியே பக்ரூவின்
முகத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட ஓங்கிக் குத்த வேண்டும் போலிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். பக்ரூவின் உடலிலிருந்து வெளியேறிய துர்நாற்றம் வயிற்றைக் குமட்டியது.
“பக்ரூ, உன்னை இங்கிருந்து இப்போது துரத்தாம காப்பாற்றுவதும் இந்த ‘செகண்ட்ஸ்'தான்.”
“அதெப்படி?”
“நான் எப்பவாச்சும் தண்ணியடிப்பேன். அப்ப யார் மேலயும் கோபம் வராது எனக்கு. அந்த சமயம் பார்த்து கேளு, சொல்றேன்.”
காருக்குள் ஏறியமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து பக்ரூவை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் அவனை அப்படியே விட்டுவிட்டு கிளம்பினான்.
பக்ருதின், ஒருகணம் திகைத்து பின் எதுவும் நடக்காதது
போல் தன் அறைக்கு நடந்து சென்றான்.
பக்ருதின் அறைக்குள்
நுழைந்து பாத்ரூமுக்குள் ஆசுவாசமாகக் குளிக்கத் துவங்கினான். இந்தக் கோச், ரெஃப்ரி, அம்பயர் எல்லாம் என்ன வாழ்க்கை...! என்று ஒரு சில நேரம் சலிக்கத் தான் செய்தது. நாள் முழுக்க மைதானத்தில் நின்றாலும் வியர்வையும், எரிச்சலும், அவமானமும், சில சமயம் சாபமும்தான் மிச்சம். காலம் முழுக்க எவனையாவது உந்தி உந்தி தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். அவன் இலக்கைக் கடக்கும் போதெல்லாம் சலனமின்றி எவரும் கவனிப்பாருமின்றி அப்படியே நிற்க வேண்டும். இதோ முகுந்தன், வண்டியைக் கிளப்பிக் கொண்டு, இவனை அம்போ என்று விட்டுச் செல்வதைப் போல் வெற்றி பெற்றதும் விட்டுச் சென்று விடுவார்கள். கேமராக்கள் அவர்களை மட்டும் துரத்தும். உடம்பெங்கும் துடைத்துக் கொண்டு கைலிக்குள் நுழைந்தான். செல்போன் ஒலித்தது. முகுந்தன்...
“பக்ரூ, என்ன பண்றே?”
“இனிமேதான் சாப்பிடப்
போறேன். அகோரப் பசி.”
“அப்படியே என் ரூமுக்கு வா. ஃபுல் பாட்டில் ரெமி மார்ட்டின் இருக்கு. ஷேர் பண்ணிக்கலாம்.”
“வேண்டாம். எனக்குப் பழக்கமில்லே.”
“தோடா... நான் மட்டும் மொடாக் குடியனா? எப்பவாச்சும் தான். வா.”
“இல்ல, எனக்கு வேண்டாம், நான் தொடறதில்லே முகுந்தன்...”
“ஓகே. ஆனா, நான் யார் கிட்டேயாவது பேசியாகணும். எங்கூட சாப்பிட்டுக்கலாம். வரமுடியுமா?”
ஒருகணம் யோசித்த பக்ரூதின், “ஓகே, வரேன்” என்று கிளம்பினான்.
தனக்காகத் தருவிக்கப்பட்ட பரோட்டாவைப் பிய்த்துப் போட்டபடி, முகுந்தனிடம் “எனக்கு என்.வி. வேண்டாம் முகுந்தன், நிறுத்திட்டேன். நீயே சாப்பிட்டுக்க.”
“என்னப்பா, நீயெல்லாம் சைவமாயிட்டா இந்த ஆடெல்லாம் என்ன பண்றது. சும்மா புழுக்கை
போட்டு ஊரையே
நாறடிச்சிடுமே.”
“நம்மளைவிடவா?”
ஒருகணம் திகைத்த முகுந்தன்
குபீரென சிரித்தான்.
“குட் பாயிண்ட். மார்னிங் வாக் அமைதியா இருக்கேன்னு ஒதுக்குப் புறமா போக முடியல. எங்க
பார்த்தாலும் நாஸ்தி பண்றாங்க. இப்பல்லாம் மெயின் ரோட்ல போறது தான் சேஃப்.” ஒரு கிளாஸில் ஊற்றி விட்டு, பாட்டிலை மூடி திரும்ப எத்தனித்தான். முழங்கை
பட்டு டம்ளர் உருண்டது. உள்ளிருந்த ரெமி மார்ட்டின் கீழே சிதறிப் பரவியது.
“ஓ... ஷிட்.”
பழைய துணி தேடித் துடைத்து வெளியே போட்டான்.
மறுபடி கிளாஸை எடுத்து நிரப்பினான்.
வறுத்த முந்திரித் துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டான். “நைஸ். பக்ரூ, சின்ன வயசிலேயிருந்து எனக்கொரு ராசி உண்டு, எதுவுமே எனக்கு ரெண்டுதான்.”
“உன் லக்கி நம்பரா?”
“நோ, நோ... என் லக்கி நம்பர் ரெண்டு இல்ல. பட், எதுவும் எனக்கு ரெண்டாவதா
வர்றது தான் செட் ஆவும். சின்ன வயசில கியர் வச்ச சைக்கிள் ஓட்ட ஆசை. வாங்கிக் கொடுத்த அன்னைக்கே அதைத் தொலைச்சிட்டேன். அப்பறம் நான் நினைச்ச மாடலை வாங்கித் தரலை. ஒரு சாதா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் அப்பா. அதுவும் ஓல்ட் ஒன். எங்கிட்ட ரொம்ப நாள் இருந்துச்சு. பட், எனக்கு அது பிடிக்கவேயில்ல. ஏன் தெரியுமா? என்ன இருந்தாலும் அது ‘செகண்ட்ஸ்'” என்றபடி அடுத்த லார்ஜ்ஜை காலி செய்தான்.
“ரன்னிங்ல இன்னைக்கு
ஸ்டேட் லெவலுக்கு வந்திருக்கேன். அதென்னமோ தெரியல... இப்பவும் நான் செகண்டுதான். ஃபெர்னாண்டஸ் தான் எல்லாப் போட்டியிலும் முதல்ல வந்துடறான். 10.30” நறநறவென்று காராசேவைக் கடித்தான்.
“அதொண்ணும் பெரிய விஷயமில்லை முகுந்தன்... எல்லாம் நம்ம கையில இருக்கு.”
கடிகாரத்தை சுட்டிக்காட்டியபடி பக்ரூதின் சொன்னான். முகுந்தன் அவனை முறைத்தான்.
“சாரி, நம்ம கால்ல இருக்கு... ஓகே வா?”
“நானும் ரெண்டொரு தடவை ஃபர்ஸ்ட் வந்திருக்கேன். பட், அதெல்லாம் ரெக்கார்ட்ஸ் எதுவுமில்லாத டம்மி ரேஸ். இன்ஃபேக்ட், இப்ப இருக்காளே என் லவ்வர், அவ கூட ரெண்டாவது தான். ஸ்கூல் லைஃப்ல ஒருத்திய சின்சியரா லவ் பண்ணினேன். அவளும்தான். ரெண்டு பேருக்கும் சண்டை முத்தி ஒருத்தருக்கொருத்தர் இப்ப பேசிக்கறது கூட இல்ல. ஏன் இப்பிடி என்னை இந்த ‘ரெண்டாவது' தொரத்துதுன்னு தெரியல.”
“அதெல்லாம், நம்ம மன பிரம்மை. தோக்கறப்பதான் எல்லா செண்டிமெண்டையும் ஆராயறோம். எப்பவும் வெற்றிக்குக் காரணம் --------
“இப்பக் கூட பாரு, மொத கிளாஸ் கீழ ஊத்திகிச்சு. ரெண்டாவது கிளாஸ் உள்ள போயிடுச்சி.”
“நாம கொஞ்சம் கவனமா இல்லாட்டி
எல்லாமே ஊத்திக்கும்.”
“டேய், தண்ணியடிச்சது நானு, தத்துவம் நீ சொல்றியா... மேட்ச் ஆகலையே.”
“ப்ராப்ளம் என்னன்னா மொத கிளாஸ் ஊத்திடுச்சேன்னு கவலைப் படற.. ஆனா மொதல் லெக் பீஸை கடிச்சி சாப்பிட்டுகிட்டிருக்கே. அது கீழே விழலைன்னு சந்தோஷப்பட்டிருக்கியா? வாயில்லாத
ஏதோ ஒண்ணு மேல பழி போடறது தான் நம்ம பழக்கமாயிடுச்சே.”
“ரொம்ப பேசறே நீ... ரொம்ப பேசறே.”
மறுபடி ஒரு கிளாஸ் எடுத்து ஊற்றும் போது “பக்ரூ உன்னை பேர் சொல்லிக் கூப்பிடறேன்னு உனக்கு வருத்தமா? ரொம்ப பயந்து நடுங்கறாமாதிரி நடிக்கறது எனக்குப் பிடிக்காது.”
“என் பேரை சொல்லனும்
நீ. ஓடி ஜெயிச்சப்பறம். அதுக்காக எவ்வளோ அவமானத்தையும் தாங்கிக்குவேன்.”
“பக்ரூ, இன்னிக்கு
நீ செம மூட்ல இருக்க போலிருக்கே. ஆக்ச்சுவலா உன்னை எனக்கு பிடிக்கலை பக்ரூ. எனக்கிருக்கிற செல்வாக்குக்கு உன்னைத் திருப்பி அனுப்பியிருப்பேன். பட், அதுவும் ‘செகண்டா'ன்னு யோசிச்சேன். அதுலதான் நீ தப்பிச்சுட்டே.”
விளையாட்டில் அரசியல் கட்சிகள் நுழைந்தபிறகு அரசியல்வாதிகள் தானே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பக்ரூதின் சொல்ல நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. இவனும் அனுப்பி விட்டால் அப்புறம் வீட்டிலேயே உட்கார்ந்து ‘களி'தின்ன வேண்டியது தான்.
“பக்ரூ, உனக்கு கோபமில்லையே?”
“கோச்சிக்காம இருக்கறதால தான் என்னைக் ‘கோச்'ன்னு கூப்பிடாம பக்ரூன்னு கூப்பிடறயோ...”
முகுந்தன் வயிற்றைப்
பிடித்துக் கொண்டு சிரித்தான். “யோவ், முடியல. பேசாம உன்னை பகடி பக்ரூன்னு கூப்பிடலாமா?”
பக்ரூதின் மெல்ல எழுந்து கை கழுவிய பிறகு கைகால்களைத் துடைத்துக் கொண்டு, “அப்ப நான் கிளம்பட்டுமா?”
“என் ‘செகண்ட்ஸ்' புராணத்த இன்னும் நான் முடிக்கலையே, உட்காரு. வீட்ல கூட நான் ரெண்டாவது பையன். முதல் குழந்தை அபார்ஷனாகி செத்துடுச்சு. அதுமட்டுமா, என்ன படிச்சாலும் என்னோட க்ளாஸ்ல என்னால விச்சுவை முந்த முடியாது. அவன் தான் எப்பவும் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூ வரைக்கும் என் கிளாஸை விட்டு அவன் மாறவேயில்ல. ஃப்ரைடு சிக்கன் ஃபைனா இருக்கு... ஒரேயொரு துண்டு...”
“நோ.”
“பிடிவாதக்காரன்யா நீ. ஓகே. அப்பறம், கிரெளண்டிலியும் என் அதிர்ஷ்டம், எப்படி நுரை தள்ள ஓடினாலும் ‘செகண்ட்' தான். அதுவும் மூணு செகண்ட்ல சில சமயம் மிஸ் பண்ணியிருக்கேன். அதனால தான் இந்த செகண்ட்ஸ் மேல எனக்கு அப்படியொரு கோவம். பக்ரூ நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணு. நாளைக்கு ஸ்டாப் வாட்சை ஆன் பண்ணிட்டு என் கூடவே ட்ராக்ல ஓடி வா.”
“நானா... எனக்கு ஓடற வயசில்லை இப்போ.”
“என்னைவிட நாலே நாலு வயசு தான் உனக்குக் கூட. இதுவொரு பெரிய வயசா?”
“ஓடறதுல ஒரு நிமிஷத்துல, ஒரு நொடி வித்தியாசத்துல ஒரு ப்ளேஸ் போயிடுது. அப்படிப் பார்த்தா, நாலு வருஷம்ங்கறது எவ்வளவு வித்தியாசம்?! கோச்சுன்னு முடிவாயிடுச்சின்னா அப்பறம் ட்ராக்கில நிக்கக் கூடாது.”
“பரவாயில்ல. நீ காம்படீஷனா வேணாம். கம்பெனியா ஓடி வா.”
“குதிரை ரேஸ்ல போடுவாங்கல்ல, நிச்சய வெற்றின்னு. அதுமாதிரி ஏங்கூட ஓடினா நிச்சயம் நீ ஜெயிச்சுடுவே தான். ஆனா, உன்னுடைய எய்ம் ஃபர்ஸ்ட் இல்ல.. 10.30. மைண்ட் இட்.”
“உலகம் முழுக்க ஜெயிக்கறவனெல்லாம், இலக்கைக் குறி வெச்சு ஓடறதனாலே இல்ல... ஏதோ ஒண்ணு அவனை துரத்திகிட்டு இருக்கும். இதுக்கு முன்ன கிடைச்ச தோல்வி, உருப்படவே மாட்டேன்னு எவனாவது விட்ட சாபம், ஏதாவது ஒரு பெண்ணோட அலட்சியம் இப்படி ஏதாவது ஒண்ணு
துரத்துறதால தான் அவன் ஜெயிக்கிறான்.”
பக்ரூ தயங்கினான்.
“தயங்காதே பக்ரூ.
உன் பேரை நாளைக்கு நான் சொல்லனும்ல.”
“நான் ஒனக்கு சமமான போட்டியாள் இல்ல முகுந்தன். என் கூட ஓடறது உனக்கு சுவாரஸ்யமா இருக்காது.”
“அப்ப ஃபெர்ணாண்டஸ்ஸை ஏற்பாடு பண்றயா?”
பக்ரூதின் ஒரு கணம் திகைத்து அவனைப் பார்த்தான்.
“முடியாதுல்ல, நீதான் வரனும்.
வேற வழியே இல்ல.”
கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்துக் கொண்டே, “எனக்கு தூக்கம் வருது பக்ரூ, நீ இங்க தூங்கறயா?”
“இல்ல, கிளம்பறேன்.”பக்ரூ வெளியே போக கதவருகே சென்றான்.
“பக்ரூ, மறந்துடாதே, நாளைக்கு நீ வரே, ட்ராக்ல என் கூட ஓடறே.”மெல்லத் தலையாட்டிவிட்டு நகர்ந்தான் பக்ருதீன்.
அடுத்த நாள் மைதானத்தில் வழக்கத்தை விட உற்சாகமாகக் குதித்துக் கொண்டிருந்தான் முகுந்தன். எப்பொழுதும் லேட்டாக வருவது அவன் குணம். ஆனால் இன்று முந்திக் கொண்டு வந்து விட்டான்.
“குட்மார்னிங் பக்ரூ,
இன்னிக்கு எவ்வளவு சீக்கிரம் வந்துட்டேன் பார். இதுவே நல்ல முன்னேற்றம் இல்ல... ஆர் யூ ரெடி?”
“ஓகே.”
“ஆமா, இன்னிக்கும் என்ன ஃபுல் ட்ராக் பேண்ட்ல வந்திருக்கே. என்னை மாதிரி ஆஃப் ட்ரெளசர் போடு”
“பரவாயில்ல இருக்கட்டும்.”
“அப்பறம் தோத்துட்டா இத ஒரு காரணமா சொல்லக் கூடாது”
“நிச்சயம் தோக்கத் தான் போறேன்.
காரணம் நேத்தே சொல்லிட்டேன். புதுசா காரணம் கண்டுபிடிக்க அவசியமில்ல. இதான் எனக்கு வசதி.”
“ஓகே. “ உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கினான் முகுந்தன்.
இருவரும் ட்ராக்கில் நின்றார்கள். மைதானத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு பக்ரூ ஸ்டாப் வாட்சை ஆன் செய்தான். இருவரும் ஓட ஆரம்பித்தார்கள்.
முகுந்தன் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல மிக வேகமாக ஓட்டத்தைத் துவக்கினான். பக்ரூதினால் அவனது வேகத்தில் பாதியைத் தான் தொடமுடிந்தது. இருந்தாலும் தளராமல் திணறத் திணற வேகத்தைக் கூட்டினான். இருவருக்குமான இடைவெளி குறைந்தது. முகுந்தன் அலட்சியமாக ஓடுவதை ஒதுக்கி விட்டு இப்பொழுது மிக எச்சரிக்கையாக வேகத்தைக் கூட்டினான். முகுந்தன் இறுதிக் கோட்டைத் தொடும்போது 10.42-ல் ஸ்டாப் வாட்சின் முள் நின்றது. ஆனால், அவனுக்கும் சற்று முன் பக்ரூதின் ஒரு காலை முன் வைத்து விழுந்த போது 10.40 ல் முடித்தான். கோட்டைத் தாண்டி தரையில் சாய்ந்து மெதுவாக அமர்ந்தான் பக்ரூ. முழங்கால் பக்கம் ரத்தம் கசிந்து பேண்டை நனைத்து வெளியே தெரியும் படி பரவியது. அதைக் கவனித்த முகுந்தன், “ஐயய்யோ, என்ன இது பக்ரூ, ரத்தம்!” என்று பதறினான்.
பக்ரூ அதை உற்றுப் பார்த்து விட்டு,
“ஒண்ணுமில்ல அது அடிக்கடி வரதுதான்” என்றான்.
“முதல்ல, பேண்ட்டைக் கழற்று பக்ரூ. என்னன்னு பார்க்கலாம்” முகுந்தன் படபடத்தான்.
“வேண்டாம் முகுந்தன், வழக்கமா வரதுதான். இப்ப தானா நின்னுடும்.”
“அட, பேண்ட்டைக் கழட்டுய்யா”என்று வலுக்கட்டாயமாக பக்ரூவின் பேண்டை சரசரவென இழுக்க முயற்சித்தான்.
“ஓகே ஓகே, நானே கழட்டறேன்” பேண்டை மடக்கி மெதுவாக கழற்றிய போது அவனது செயற்கைக் காலில் முழங்கால் இணையுமிடத்தில் பதிந்து அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
“ஓ மை காட். என்னது இது?”
“ஒண்ணுமில்ல முகுந்தன். நீயெல்லாம் பேண்ட்டை மட்டும் தான் கழட்டுவே. நான் காலையே கழட்டலாம்”
“இதோடவா ஓடின”
“ஒரு ஆக்ஸிடண்ட்ல கால் போச்சு. அதுக்கப்பறம் ஓடறதை நிறுத்திட்டேன். ஆனா எனக்கு ரன்னிங்கைத் தவிர வேறொண்ணும் தெரியாது. ரத்னசபாபதி மாஸ்டர் தான் என்னை ‘கோச்'சாக்க ஹெல்ப் பண்ணினார். என்னோட ஃபேமிலிக்கு மூணு வேளை சோறு போடறது இந்த கோச் வேலை. அதிகம் பேருக்கு எனக்கு கால் போனது தெரியாது.”
“நீ சொல்றது நெஜமா?”
“நீயும் துரத்திட்டா இப்ப இருக்கற நிலையில என்னை யாரும் ‘கோச்'சா வைச்சிக்க மாட்டாங்க. காலில்லேன்னா
கத்துக்குடுக்க முடியாதுன்னு நெறைய பேர் நம்பறாங்க.”
ஒருகணம் யோசித்த முகுந்தன், “என் கிட்ட நேத்தே சொல்லியிருந்தேன்னா இன்னிக்கு ஓடக் கூப்பிட்டிருக்கவே மாட்டேன். என்ன ஒரு முட்டாள் நீ? நான் அவ்வளவு இரக்கமில்லாதவனில்லே பக்ரூ.”
“நேத்தி நீ சொன்னா கேட்டிருப்பே. ஆனா உணர்ந்திருக்க மாட்டே. இப்பவும் நீ வேணாம்னு அனுப்ப உனக்கு சகல உரிமையும், செல்வாக்குமிருக்கு.”
“என்ன மனுஷன்யா நீ. இத வைச்சிக்கிட்டா 10.40 வை க்ராஸ் பண்ணின...
இப்பவும் நா செகண்ட் தான்.”
“ஆனா, என்னிக்குமே எனக்கு ‘ரெண்டு’ சாத்தியமே
இல்ல முகுந்தன்.” செயற்கைக் காலைத் தூக்கிக் காண்பித்த பக்ரூ, எப்பவுமே என்னோட நிறைவேறாத கனவு ரெண்டு தான்.
‘ஏன்'னா நான் எப்பவும் ‘ஒன்றரை' தான்.” மறுபடி மாட்டினான்.
“யூ ஆர் கிரேட் பக்ரூ...
சாரி, யூ ஆர் கிரேட் சார்.”
நன்றி : சங்கு இலக்கிய இதழ்