“அசையும் படம்”
ஆசிரியர் : ஒளிப்பதிவாளர். சி.ஜெ. ராஜ்குமார்
வெளியீடு : சினிமா கலை ரசனை இயக்கம் (faam)
பதிப்பகம் : கீற்றுப் பதிப்பகம்,
கிரீடு வளாகம்,
23, அரங்கநாத நகர்,
சிதம்பரம்-608 001.
விலை :ரூ.150/-
அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை புரட்சியிலோ, புத்தகங்களிலோ, சமகால சமூக வெளியீடுகளிலோ தேடாமல் திரையரங்கங்களில் தேடுபவர்கள் நம் தமிழர்கள். அரசியலில் மாற்றம் என்பது சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மூலம் அல்ல என்ற உணர்வு இல்லாமல் போனதற்குக் காரணம் நமக்கு அரசியல் குறித்தும் தெளிவு இல்லை; திரைப்படம் குறித்தும் தெளிவு இல்லை என்பதே...
திரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் அதீத ஆற்றல், பிரம்மாண்டம் எல்லாம் அந்தப் பாத்திரங்களாக நடிப்பவர்களின் வெளிப்பாடு அல்ல... அதற்குப் பின்னே பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.
ஒளிப்பதிவுக் கலையென்பது ஒரு திரைப்படத்தின் பிரதானமான தொழில்நுட்பக் கலை. ஒரு படைப்பாளியின் கற்பனையையும், ஒரு பார்வையாளரின் சிந்தனை ஓட்டத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கின்ற முக்கியமான பொறுப்பு ஒரு ஒளிப்பதிவாளருக்கு உண்டு.
உண்மையில் நாமெல்லாருமே ஒரு வகையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். நாம் சம்பந்தப்படாத ஒரு நிகழ்வை அல்லது ஒரு கதையை இன்னொருவர் நம்மிடம் விவரிக்கும்போது நம் மனசுக்குள் அந்தச் சம்பவத்தை, இடத்தை, காலத்தை கற்பனையில் காட்சியாகத் தீட்டியபடியே இருப்பது இயல்பே. ஆனால் அதற்குத் திரைவடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதல்ல...
தொழில்நுட்பத் திறனும் படைப்பாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் தான் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும். பார்வையாளராக இருக்கிற ஒருவன், திரைத்துறையில் ஆர்வம் காரணமாகப் பணியாற்ற முயற்சித்தால், பல்வேறு அலைகழிப்புகள், கரிப்புகளோடு அவனை நாலாபக்கமும் இழுத்துச் செல்லும் விசித்திரக் கடல் சினிமா. நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரமும்
அதன் ஆழத்தையும், அகலத்தையும், தன்னளவில் விளக்கவும், அளக்கவும் முனைந்திடும் புத்தகம் ‘அசையும் படம்' அனேகமாக, தமிழில் ஒளிப்பதிவு குறித்து இத்தனை விளக்கங்களுடனும் விரிவாகவும் வந்திருக்கும் முதல் புத்தகம் இது எனலாம்.
‘மண்', ‘கனவு மெய்ப்பட வேண்டும்' படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரு. சி.ஜெ. ராஜ்குமார் எழுதிய இந்தப் புத்தகம், கமலஹாசன், பாலுமகேந்திரா, நாசர், ஜனநாதன் போன்ற தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாலேயே பாராட்டப் பட்டது. ஒரு புகைப்படக் கருவி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா வரை அதன் வரலாற்றையும் படிப்படியான முன்னேற்றங்களையும் விரிவாக அலசியிருக்கிறது இந்தப் புத்தகம். எளிதான, நேரடியான, எந்த இருண்மைத்தன்மையும் அற்ற சி.ஜெ. ராஜ்குமாரின் மொழிநடை, வெறுமே எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மனிதரும் புத்தகத்துள் எளிதாக நுழைந்து உள்வாங்க முடியும்.
திரைத் துறையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொள்வது என்பது குருகுல வாசம் போல. பெரும்பான்மையான வித்தகர்கள் தங்கள் வித்தைகள் அனைத்தையும் அத்தனை எளிதாகக் கற்றுத் தருவதில்லை. காயமின்றிக் கசிவின்றி ஒரு கலையை இன்னொருவருக்கு மடை மாற்றுவதென்பது ஜீரணிக்கவே முடியாதவர்கள் நிரம்பியிருக்கும் திரைத் துறையில், தன் சிராய்ப்புகள், முறிவுகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் விலையாகத் தந்து பெற்ற அனுபவங்களை, அதன் வலிகள் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் வரும் தலைமுறைக்குத் தந்திருக்கிறார் சி. ஜெ. ராஜ்குமார்.
நூலின் உள்ளடக்கத்தை மறைமுகமாக இரு பெரும் பகுதியாக பிரித்திருக்கிறார் ஆசிரியர். முதலில் ஒரு ஒளிப்பதிவு கருவியின் தொழில்நுட்ப கூறுகள், அதன் பயன்பாடுகள் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் அதே சமயம் எளிமையாகவும் குற்¢ப்பிடும் அவர், அதோடு விலகிச் சென்றுவிடாமல் திரைத்துறையின் இன்ன பிற பிரிவுகளான படத்தொகுப்பு, மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றையும் அழகாக விளக்கியிருக்கிறார். எனவே ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்லாமல், இயக்குனராகப் போகிறவரும் தனக்கான கையேடாக இந்நூலை வைத்துக்கொள்ளலாம். கூடவே ஒரு ஒளிப்பதிவு கருவி தோன்றிய வரலாறு, உலகத் திரைப்படங்களின் அட்டவணை, இது வரை வெள்ளித் தாமரை விருது பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அந்த படங்கள் என பல தகவல்கள் அடங்கிய சிறு கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது புத்தகம்.
நூலில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள்,குறிப்பாக பல இடங்களில் தகவல்களுக்கு துணை நிற்கும் வரைபடங்கள்,புத்தக வடிவமைப்பு ஆகியவற்றுக்காக கடுமையாக உழைத்திருக்கும் கோவை அரவிந்தனின் பணியும் அற்புதமானது.
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்களுக்கான கலைச் சொற்களை எடுத்தாள்வதற்கும், மற்றும் மெய்ப்பு பணிகளில் அக்கறையோடும் பங்காற்றியிருக்கும் திருமதி. இராஜேஸ்வரியின் பங்கு புத்தகத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.
பதிப்புலகில் அதிகம் அறியப்படாத, அதே நேரம் அதிக உழைப்பைத் தந்து புத்தகத்தை உருவாக்கியிருக்கும் சிதம்பரம் கீற்றுப் பதிப்பகத்தார் (திருநாவுக்கரசு), நூலிற்கு மிகக் குறைந்த விலையையே நிர்ணயித்துள்ளது பின்பற்றப் பட வேண்டியதொரு நல்ல விஷயம்.
எடிசன் ஒரு முறை இரயிலில் பயணித்தபோது, பக்கக் காட்சிகளாக ஓடிய மரங்களையும், மனிதர்களையும் பார்த்து ‘அசையும் சித்திரங்கள்' என்று முணுமுணுத்தாராம். பின்னாளில் சினிமா கேமராவின் முன்னோடியாகக் கருதப்படும் அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பான ‘கைனடோ ஸ்கோப்' என்ற பெயருக்கு இலத்தீன் மொழியில்(கைனடோ-அசையும்; ஸ்கோப் -படம்) அசையும் படம் என்றுதான் பொருள். அன்று எடிசன் மெல்ல உச்சரித்த சொல், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி ஒன்று உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது.
இன்று திரைத்துறையில் நுழைய விரும்புகிற, ஒளிப்பதிவாளராகும் வேட்கையுடனிருப்பவர்கள் உரக்க உச்சரிக்கப் போகும் சொல் ‘அசையும் படம்' எனும் இப்புத்தகத்தின் பெயராக இருக்கும் எனலாம்.