செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

புலவர்களின் புரவலன்        காட்சி -1

இடம் : சேர மன்னன் பெருஞ்சேரல் அரசவை

பாத்திரங்கள் : மன்னர் பெருஞ்சேரல், அமைச்சர், காவலன் , அவையோர்

காவலன் :

மூவேந்தர்களில் முன்னவர், வீரபராக்கிரமர், சேரமாமன்னர் பெருஞ்சேரல் வருகிறார்... வருகிறார்...

பெருஞ்சேரல் :

அமருங்கள் அவையோரே! அமைச்சரே, இன்றைய நிரலில் விசாரணைக்கான  வழக்கு ஏதேனும் உண்டா?

அமைச்சர் :

ஆம் மன்னர் மன்னா! ஆநிரைகள் சில விளைநிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டன.. ஆநிரைகளையும், ஆயர்களையும் நமது சேர படைகள் பிடித்து வந்துள்ளன...

பெரு :

வாயில்லா ஜீவன்கள் வயிறு நிரம்ப உணவு கிட்டாத அளவு வறுமையில் உள்ளதா சேர நாடு?

அமை :

இல்லை வேந்தே! ஆயர்களின் வாழ்வும் செழித்தே இருக்கிறது, ஆநிரைகளும் கொழுத்தே இருக்கின்றன.. நாட்டின் வளத்தையும், அமைதியையும் குலைக்கும் முயற்சியில் கலகப்படைகளின் தலைவன் கழுவுள் செய்த சதி திட்டத்தில் இவர்கள் சிக்கிகொண்டார்கள்.. ஆநிரைகளும், ஆயர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நீதியாளர்களின் கருத்து

பெரு :

அடாத செயல் செய்த கழுவுள் எங்கோ இருக்க .. அப்பாவிகளும், ஆநிரைகளும் என்ன செய்வர்? இம்முறை இவர்களை மன்னித்து எச்சரித்து அனுப்புங்கள்.. பாழ்பட்ட  நிலங்களுக்கு ஈட்டுப்பொன் அளிக்க உத்திரவிடுகிறேன்

அவையோர் :

ஈகை பெருந்தகையாளன் பெருஞ்சேரல் வாழ்க !
ஈடில்லா எங்கள் குல பெருவேந்தன் வாழ்க! வாழ்க!!

பெருஞ்சேரல் :

வேறு ஏதேனும் வழக்குகள் உண்டா?

அமைச்சர் :

இல்லை மன்னர் மன்னா ! புலவர் அரிசில் கிழார் தங்களிடம் விடை பெற விழைகிறார்..

பெரு:

விருந்தில் நாம் தாழ்ந்தோமோ?

அமை :

அப்படி எவரேனும் கேட்டுவிட்டால் அரிசில் கிழார் துடித்துப் போய்விடுவார். விருந்து மயக்கத்தில் இத்தனை நாள் எழ மறந்தேன் என்று என்னிடமே அவர் கூறியிருக்கிறார்... புலவர்கள் பறவைகள் போல இருப்பவர்கள்.. இடம் பெயர்தல் என்பது அவர்களின் இயல்பு...

பெரு :

அமைச்சரே! எனக்குள் சில நாட்களாக பெரும் குழப்பம்...

அமை :

எம்மிடம் அதை பகிர்ந்து கொள்ளலாமா?

பெரு :

எனது தந்தை செல்வக்கடுங்கோ புலவர்களுக்கெல்லாம் எல்லையில்லா பரிசுகளை வாரி வழங்கியவர்.. கபிலர் எனும் பாவலருக்கு நன்றா எனும் குன்றில் அவரை ஏற்றி அவர் கண்ணுக்கு எட்டியவரை உள்ள ஊர்களை பரிசாக தந்தவர். அரிசில் கிழார் ஈடு இணையற்ற பாடல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருங்கொடையென தந்துள்ளார்.. என் தந்தையையும் விஞ்சி அவருக்கு பரிசளிக்க வேண்டும் ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை

அமை:
என்னே உங்கள் பண்பு! கொடையில் மிஞ்ச வேண்டும் என்ற தங்கள் வேட்கைதான் இந்த சேர திரு நாட்டை வற்றாத செல்வத்துடனும், குன்றாத சிறப்புடனும் வைத்திருக்கிறது..

பெரு :

புகழுரைகள் போதும் அமைச்சரே! சரித்திரத்தில் இடம் பெறும் பரிசு ஒன்றை புலவருக்குத்தர யோசித்து வாரும்..

அமை :

உத்திரவு மன்னா .


     காட்சி : 2

 (அரசவை முரசு கட்டில் அமைந்திருக்கும் இடம்)

பாத்திரங்கள்: வேலேந்தி, அறவாழி, அமைச்சர்.

வேலேந்தி :
என்ன அறவாழி, உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ தீர்க்கமுடியாத     கவலையில் இருப்பது போல் தோன்றுகிறதே..

அறவாழி :
ஒரு விதத்தில் உண்மைதான் வேலேந்தி

வேலே :
குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா?

அறவா :
அதெல்லாம் ஒன்றுமில்லை.. இன்று காலை அமைச்சர் என்னை         அழைத்து சொன்ன செய்திதான் என்னை வாட்டுகிறது.

வேலே:
அப்படியென்ன சொன்னார்?


அறவா:
முரசினை எடுத்துச்சென்று பழுதில்லாமல் தயார்நிலையில் வை என்று சொன்னார்.

வேலே:
அது அரசாங்கப் பணியிலிருக்கும் நமக்கு உள்ள கடமைகளில் ஒன்றுதானே. அதிலென்ன பிரச்சனை?

அறவா:
முரசை தயார் செய் என்றால் போர் மூளும் சூழல் ஏதேனும் ஏற்பட்டு விட்டதோ என்று அஞ்சுகிறேன்.

வேலே:
நம் வீர மரபுக்கு போர் ஒன்றும் அஞ்சக் கூடிய சொல் இல்லையே. அதுவுமில்லாமல் முரசை தயார் நிலையில் வை என்றால் போர் வருகிறது என்று மட்டுமா பொருள்? அரசு அறிவிப்பு ஏதேனும் இருக்கக் கூடும்...

அறவா:
நீண்ட காலத்துக்குப் பிறகு இப்பொழுது தான் என் மனைவி உண்டாகியிருக்கிறாள். உடனிருக்க வேண்டிய தருணமிது. போரென்று வந்தால் எங்கு அனுப்பப் படுவோம், என்ன நிகழுமென்று தெரியாதல்லவா?

வேலே:
போரைக் கண்டு ஏன் அஞ்சுகிறாய்? நம் மாமன்னர் அரசேற்ற நாளிலிருந்து நாம் தானே வெற்றிக் கொடியோடு திரும்புகிறோம்...! மிகச் சாதாரணமான மனிதனைப் போல் நோயில் சாவதற்கா நாம் பிறந்தோம்..?! போரில் வீர மரணம் வாய்க்க என்ன பேறு பெற்றிருக்கவேண்டும்!

அறவா:
மரணத்துக்காக அஞ்சவில்லை. திருமணமான பத்தாண்டுகள் கழித்து இப்பொழுதுதான் எனக்கென்று ஒரு வாரிசு உருவாகிறது. அதன் முகம் பார்க்காமலேயே என் காலம் முடிந்து விட்டால் என் இத்தனையாண்டு தவம் வீணாகிவிடுமோவெனக் கலங்குகிறேன்.

வேலே:
இத்தனையாண்டுகள் காக்க வைத்த கடவுள் நிச்சயம் கைவிடமாட்டார். அதோ அமைச்சர் வருகிறார்.

அமைச்சர்:
கதிரவன் உதிக்கும் தருணத்தில் முரசை நீராட்ட எடுத்துச் செல்லுங்கள். ஆட்கள் தயாராக இருக்கிறார்களா?

வேலே:
எல்லோரும் தயாராக இருக்கிறார்கள்.

அமைச்சர்:
எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு உங்கள் பணிகளைத் துவக்குங்கள்.

வேலே:
அமைச்சர் பெருமானே! தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் களத்தில் சந்திக்கப் போவது எந்த நாட்டுப் படைகளை?

அமைச்சர்:
அடடா! சேர நாட்டு வீரர்கள் எள் என்றால் எண்ணெயாக இருக்கிறீர்களே... புதிதாகத் திருமணமான இளைஞன் பள்ளியறைக்குச் செல்லத் துடிப்பது போல போர்க்களம் புக அத்துணை வேகமா?!

வேலே:
வெற்றி என்பது தெவிட்டாத கனியாக இருக்கிறதே அமைச்சரே... ! ருசித்தபிறகு ஏங்குவது வழக்கமாகி விட்டது.

அமைச்சர்:
நல்லது வேலேந்தி! ஆனால், உங்கள் பசிக்கு இப்போது எங்களால் இரை போட முடியாது போலிருக்கிறதே... போர் முரசை எடுத்ததும் உங்கள் தோள்கள் துடிப்பது போல எதிரிகளின் கால்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றன. நாம் போர்க்கொடியைத் தூக்குவதற்குள் அவர்கள் சமாதானக் கொடியோடு சமரசத்துக்கு வருகிறார்கள். போகிற போக்கில் நம் ஆயுதக் கிடங்கிலுள்ள ஆயுதங்கள் வெறும் காட்சிப் பொருளாகிவிடுமோ எனக் கவலைப்படுகிறேன். (ஹஹஹா என்று சிரிக்கிறார். கூடவே வீரர்களும்.) சரி சரி, முரசை எடுத்துச் செல்லுங்கள்.

வேலே:
அறவாழி! இப்போது நிம்மதியாயிற்றா உன் மனம்?

அறவா:
அப்பா! உயிர் போய் உயிர் வந்தது என்று சொல்கிறார்களே... அதை இன்றுதான் உணர்ந்தேன். சரி, நம் பணியை கவனிப்போம்.

                                 காட்சி: 3

மோசிகீரனார்:
என்ன வெயில்... என்ன வெயில்! உஸ்... அப்பாடா!! மோசிகுடியிலிருந்து இந்தக் கருவூர் வந்து சேர்வதற்குள் ... அப்பப்பா...! கால்கள் தேய்ந்து விரல்கள் போல் மெலிந்து விடும் போலிருக்கிறதே! ம்.....! என்ன... இங்கே ஒருவரையும் காண முடியவில்லை?! சேர மன்னனின் ஆட்சியில் புலவர்களுக்குத்தான் எத்தனை மரியாதை! வாயில்காப்போன் எத்தனை பணிவுடன் நம்மை உள்ளே அனுமதித்தான்! ம்.... எப்பொழுது அரசர் வருவார்... எப்போது நாம் காண்போமோ... அட! அங்கே ஒரு கட்டிலிருக்கிறதே. அடடா! நம் உடல் உபாதையறிந்து துயரறிந்து சரியான இடத்துக்குத் தான் அனுப்பியிருக்கிறான் அந்த வாயில் காப்போன்! சிறிது நேரம் கட்டையை சாய்ப்போம்.

                                       காட்சி: 4

பாத்திரங்கள்:       வேலேந்தி, அறவாழி, அமைச்சர்,                             பெருஞ்சேரல், மோசிகீரனார் ,  வீரர்கள்.                             

வேலேந்தி:
பார்த்து... பார்த்து... பத்திரமாக எடுத்து வாருங்கள். அறவாழி... அறவாழி... அங்கே பார் யாரோ ஒரு பரதேசி... முரசு வைக்க வேண்டிய கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். என்ன துணிச்சல்!

அறவாழி:
ஐய்யய்யோ... விதி முடியப்போகிறவர் போலிருக்கே!

வேலே:
தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆறோ குளமோவா இவருக்குக் கிடைக்கவில்லை?! இப்படி முரசு கட்டிலில் படுத்து அரச தண்டனைக்கு ஆளாகி ‘போய்'ச்சேரவா?

அறவாழி:
எனக்கென்னவோ அவரைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. எழுப்பிவிட்டு துரத்திவிடலாமா?

வேலே:
இந்நேரம் உளவுப்படை வீரர்கள் உரிய நபர்களுக்குத் தகவல் அனுப்பியிருப்பார்கள். அவனை எழுப்பப் போய் நாம் அரசு கோவத்துக்கு ஆளாக வேண்டுமா?

அமைச்சர்:
யார் அரசு கோபத்துக்கு ஆளாகப் போகிறீர்கள்?

வேலே:
அமைச்சர் பெருமானே, நீங்களே வந்துவிட்டீர்களா... அங்கே பாருங்கள், முரசு வைக்க வேண்டிய கட்டிலில் எப்படி ஒருவர் அச்சமில்லாமல் படுத்துத் தூங்குகிறார் பாருங்கள்.

அமைச்சர்:
 முகத்தைப் பார்க்கலாமென்றால், அவர் வேறு பக்கம் திருப்பிக்கொண்டு தூங்குகிறார். அரசர் கூட ,இன்று முரசை பார்வையிட வருகிறேனென்று சொல்லி இருக்கிறாரே...

வேலே:
வாயிற்காப்போன் எப்படி இவனை உள்ளே அனுமதித்தான்? நாமே இவனுக்குத் தக்க தண்டனை தந்துவிடலாமா?

அமைச்சர்:
ம்... சேர அவையில் ஒருவன் சுலபமாக உள்ளே நுழைகிறானென்றால் ஒன்று அவன் ஏதோ ஒரு நாட்டின் தூதனாக இருக்க வேண்டும். அல்லது புலவனாக இருக்க வேண்டும். இவரைப் பார்த்தால் தூதன் போல் தெரியவில்லை. ஒரு வேளை இவர் புலவராக இருக்கக்கூடும். அவசரப் படவேண்டாம். புலவர்கள் சேரனின் அரசாங்கத்தில் மரியாதைக்குரிய விருந்தினர்கள்.

அறவாழி:
அமைச்சரே, அரசர் வருகிறார். அவர் சினம் கொண்டால் எவரும் தடுக்க முடியாதே...

பெருஞ்சேரல்;
என்ன அமைச்சரே, இன்னும் ஏன் முரசினை அதற்குரிய இடத்தில் வைக்காமல் வெளியே வைத்திருக்கிறீர்கள்?

அமைச்சர்:
மன்னர் மன்னா...! அது வந்து... முரசு கட்டிலில் யாரோ ஒரு மனிதர் அயர்ந்து விட்டார். யாரென்று புரியாமல் குழம்புகிறோம். ஒருவேளை அவர் உங்கள் மரியாதைக்குரிய விருந்தினராக இருந்துவிட்டால்...

பெருஞ்சேரல்:
ம்.... அருகில் சென்று பார்ப்போம். அட, இவர்... புலவர் மோசிகீரனார்! ஒரு நாட்டுக்கு எது முக்கியமென்று கேட்டால் நெல்லும் நீருமல்ல; மன்னரின் உயிர்தான் என்று பாடியவராயிற்றே!

அமைச்சர்:
அடடா! பாவம்! மெலிந்து தளர்ந்து வாடிய பயிர்போல் வதங்கிக் கிடக்கிறாரே... முரசு கட்டிலென்று அறியாது வந்த களைப்பில் உறங்கி விட்டார் போலும்.

பெருஞ்சேரல்:
கட்டில் வடக்கு தெற்காக போடப்பட்டிருந்தால் நன்கு காற்று வந்திருக்கும். ஆனால் கிழக்கு மேற்காக இருக்கிறதே... உடனே ஒரு கவரி எடுத்து வாருங்கள்!

அறவாழி:
இதோ வருகிறேன் மன்னா!

பெருஞ்சேரல்:
அந்தக் கவரியை என்னிடம் கொடுங்கள். நான் வீசுகிறேன்.

வேலே:
மன்னர்மன்னா! நீங்கள் இந்தக் காரியம் செய்வதாவது! எங்களிடம் கொடுங்கள் ... நாங்கள் எதற்கு இருக்கிறோம்?!

பெருஞ்சேரல்:
இல்லையில்லை. நான் தான் வீசுவேன். இளைப்பாறுவது சாதாரண மனிதனல்ல. என்னுடைய  தாய்த்தமிழ்!

மோசிகீரனார்:
(பதட்டத்துடன்) ஐய்யோ... பேரரசர் பெருஞ்சேரல்... இந்த ஏழை மோசிகீரனுக்கு கவரி வீசுவதா...! என்ன கொடுமை!! களைப்பில் அறியாமல் உறங்கி விட்டேன். பிழை பொறுத்தருள்க பேரரசே!

பெருஞ்சேரல்:
பதற்றமடைய வேண்டாம் மோசிகீரனாரே. உங்கள் களைப்பைப் போக்க நானல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

மோசிகீரனார்:
உங்கள் பெருந்தன்மையான பேருள்ளம் தான் உங்களின் வெற்றிக்கு வித்தாக இருக்கிறது. என் களைப்பு மிகுந்த கண்களுக்கு முரசு கட்டில் என்பது புலப்படாமல் போய்விட்டது. மன்னியுங்கள் மன்னர் பெருமகனாரே!

பெருஞ்சேரல்:
உங்களைப் போன்ற புலவர்கள் தானே என்போன்ற மன்னர்களின் வரலாற்றை வரும் சந்ததியருக்கு அறிவிக்கும் முரசு! நீங்கள் உறங்கியதில் தவறேதுமில்லை. புலவர்கள் மனமறிந்து தவறுகள் செய்பவர்கள் இல்லையே.

மோசிகீரனார்:
ஆஹா! வறுமையே வாழ்க்கையென்று ஆனதே... என்ன பிறவி இது! என்று இத்தனை காலம் வருந்தியிருந்தேன். பேரரசர் பெருஞ்சேரலின் கவரியினால் உயிர்பெற்றேன். தென்றல் உள்ள வரை பெருஞ்சேரல் புகழ் பரவிப் பெருகட்டும்.. சேர மன்னர் வாழ்க வாழ்க!

வீரர்கள்:
வாழ்க! தமிழ்காத்த பெருஞ்சேரல் வாழ்க வாழ்க!!


                                   காட்சி: 5

இடம் :  சேரனின் அந்தப்புரம்

பாத்திரங்கள் : மாமன்னன் பெருஞ்சேரலாதன். மகாராணி அத்துவஞ்சள்ளை

அத்துவஞ்சள்ளை :

சேர நாட்டு மாமன்னரின் முகம் சில நாட்களாகவே வாட்டமாக காணப்படுகிறதே .. காரணத்தை அறியலாமா?

பெரு :

மகாராணியின் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதே இல்லை..

அத்து :

  மன்னர் மன்னரின் மனம் நோக நடக்கும் துணிவு இங்கு எவருக்கும் இல்லையே?

பெரு :

உண்மைதான் அத்துவஞ்சள்ளை.. என் மன உளைச்சலுக்கு நானேதான் காரணம்

அத்து :

என்ன நீங்கள்தான் காரணமா?

பெரு :

சிக்கற்பள்ளி களத்திலே என் தந்தை செல்வக்கடுங்கோவை சோழனும், பாண்டியனும் சேர்ந்து தோற்கடித்தனர். தோல்வியின் துயர் தாங்காமல் என் தந்தை களத்திலேயே மாண்டார்.. இழந்த சேர நாட்டை போரிட்டு வென்றேன் போர்க்களத்தில் வேண்டுமானால் அவர் தோற்றிருக்கலாம்... ஆனால் கொடைத்திறத்தில் அவரை விஞ்ச முடியாது போலிருக்கிறதே..

அத்து :

உங்கள் கொடை திறத்தில் என்ன குறை?

பெரு :

கண்ணுக்கெட்டிய ஊர்கள் வரை கபிலருக்கு பரிசாக தந்தார் எம் தந்தை அதனையும் மிஞ்சிய கொடையை நான் எங்கே காண்பேன் ?

அத்து :

முரசுக்கட்டில் என்று அறியாது உறங்கிய மோசிக்கீரனாருக்கு சாமரம் வீசி பெருமை சேர்த்தீரே.. அதை விடவும் சிறப்பாக செய்ய யாரால் இயலும்?

பெரு :

நான் மோசிக்கீரனாருக்கு சாமரம் வீசவில்லை... அவருள் ஊறியிருந்த தமிழுக்கு சிறப்பு செய்தேன்.. பணிவிடை என்பது வேறு... புரவலர் கொடை என்பது வேறு...

அத்து :

                  உங்களால் சிறப்பு செய்யப்படாத புலவர்கள் எவரேனும் உள்ளனரா என்ன?


பெரு :

சேர மண்ணையும், எம்மையும் பற்றி பத்து தேனமுது பாடல்களால் உய்வித்த அரிசில் கிழார் நமது விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்..கபிலரையும் விஞ்சி அவர் மனம் குளிர நான் என்ன செய்வேன்?

அத்து :

அரிசில் கிழாரை அரசவை தலைமைப் புலவராக அறிவித்து விடுங்கள். அவருக்கு வேண்டும்போதும் அள்ளித்தரலாம்... நமக்கு தோன்றும்போதும் அள்ளித்தரலாம்..

பெரு :

அங்குதான் ஒரு சிக்கல்.. அரிசில் கிழார் ஓரிடத்தில் தங்குபவரல்ல..அவரை எப்படி சம்மதிக்க வைப்பது? கூட்டுக்குள் அடைத்து வைக்கமுடியுமா கவிக்குயிலை?

அத்து :

ஏதேனும் காப்பியம் எழுதும்படி அவரை வேண்டலாமே? அதனை முன்னிட்டு அவர் இங்கேயே தங்கலாம்..

பெரு :

அவர் இப்பொழுது இயற்றிய பாடல்களுக்கு இணையாகத் தரவே திணறுகிறேன்  இன்னும் படைத்தால் நான் எங்கே போவேன்?

அத்து :

உண்மையில் இது பெரும் சிக்கல்தான்.. ஆனால் சிக்கல்பள்ளியில் விழுந்த சிக்கலையே தீர்த்து வைத்தவர் நீங்கள்.. தீர்க்கத் தெரிந்தவர் இடத்தில்தான் சிக்கல்களைத் தருவான் கடவுள்...

பெரு :

அப்படியாக நீயும் தப்பிக்க முயற்சிக்கிறாய்..

அத்து :

இல்லை மன்னா ... என் சிற்றறிவுக்கு இந்த பெரு சிக்கலை தீர்க்கும் ஆற்றல் இல்லை

பெரு :

ம்.... ( பெருமூச்செறிகிறான்) எப்படியாகிலும் தீர்க்கவேண்டும் என் பேராவலை...

காட்சி : 6

இடம் :            சேரனின் அரசவை

பாத்திரங்கள் : பெருஞ்சேரல், அமைச்சர், கழுவுள், புலவர் புவனந்தி

பெரு :
         அமைச்சரே ! இன்றைய அவையில் என்னென்ன நிரல்கள்?

அமைச்சர் :
          அரசே ! பாவலர் மண்டபத்தில் ஒப்பற்ற நூல் ஒன்றை அரங்கேற்றிய புவனந்தி புலவரை தாங்கள் அரசவைக்கு வரச்சொல்லியிருந்தீர்கள்... அவர் இதோ இங்கே வீற்றிருக்கிறார்..

புவனந்தி :
          ஈடு இணையற்ற எங்கள் சேரப் பேரரசர் பெருஞ்சேரல் வாழ்க! அவரது தமிழ் பற்றும் கொடை உள்ளமும் வாழ்க.. வாழ்க..

பெருஞ்சேரல் :
          புவனந்தியாரே.. சேரனின் அவைக்கு வருக..வருக உமது கவித்திறத்தில் நான் சொக்கிப்போனேன்.. நீங்கள் இயற்றிய பாடல்கள் என் நெஞ்சை நிறைத்தது.. அதற்கீடாய் என்ன கொடுத்தாலும் தகும்... அதனால் உங்கள் விருப்பம் போல் கேளுங்கள்..

புவனந்தி :
           என்னே உங்கள் கொடை உள்ளம்.. ஆனால் புலவர்கள் கொடுத்ததை பெற்றுக்கொள்வார்களேத் தவிர, தானாக எதையும் கேட்கத்தெரியாதவர்கள்..

பெரு :
           அதை நாம் அறிவோம் நீங்கள் எங்களின் மாளிகையில் தங்கி உங்களுக்கு தோணும்போது கேளுங்கள்

புவனந்தி :
         சேர மாமன்னரின் அவைக்கு சென்றால் சில நாட்களாவது தங்க வைக்காமல் அனுப்ப மாட்டார் என்று வருகிற வழிதோறும் சொன்னார்கள் அடடா.. என்னை இந்த அரண்மனையிலேயே சில காலம் தங்க வைக்க எத்தனை அழகாய் உபாயம் கண்டீர்..

பெரு :
          ( ஹ... ஹ... ஹ.. ) எங்கள் விருந்தினராய் இருக்க சம்மதித்தமைக்கு நன்றி அமைச்சரே வேறு..?

அமைச்சர் :

மன்னர் மன்னா!  ஆயர்களைத் தூண்டிவிட்டு விளை நிலங்களை பாழாக்கிய பாதகன் கழுவுள் -ஐ பிடித்து வந்துள்ளோம்... சேர நாட்டுக்கு துரோகத்தையும், சீரழிவையும் தரத்துணிந்த கயவனுக்கு சிரச்சேதம்தான் மிகச்சரியான தண்டனையாக இருக்க முடியும்..

பெரு :

அமைச்சரே உமது நாட்டு பற்றை போற்றுகிறோம்.. அந்த வஞ்சகனைப் பிடித்து வந்த நமது வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் பரிசாக அளிக்கும்படி உத்திரவிடுகிறேன்

அமை :

அப்படியே அறிவித்துவிடுகிறோம்.. அந்த கயவன் கழுவுள் ஐ என்ன செய்வது ?

பெரு :

இழுத்து வாருங்கள் அவனை..

கழுவுள் :

அய்யோ கொடுஞ்செயல் செய்யத் துணிந்தேன்.. மகாபாவி என்னை மன்னித்துவிடுங்கள்.. மகாபிரபு..

பெரு :
                என் மேல் உனக்கு பகை என்றால் என்னோடுதான் நீ மோதி இருக்க வேண்டும்... அதை விடுத்து தெய்வத்துக்கு இணையாக யாம் வணங்கும் பசுக்களை விளை நிலங்களில் மேயச்செய்து பயிர்களையும் அழித்தாய், பசுக்களின் மீதும் தீராத களங்கத்தை உண்டாக்கிவிட்டாய்

கழுவுள் :

அறியாமை என் கண்ணை மறைத்துவிட்டது மன்னித்துவிடுங்கள் மாமன்னா..

பெரு :

மன்னிப்பா எவராலும் மன்னிக்க முடியாத மகாபாவத்தை செய்துவிட்டு எந்த முகத்தோடு கேட்கிறாய்?

புவனந்தி புலவர் :

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவேண்டும் வேந்தே! மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்க தெரிந்தவர் கடவுள் என்பது மன்னர் அறியாததல்ல

பெரு :

புவனந்தி புலவரே! பெருங்குற்றம் செய்த எல்லோரையும் மன்னித்துவிட்டால் பறி கொடுத்தவருக்கெல்லாம் எப்படி நீதி வழங்குவது?

புவனந்தி :

அவனை தண்டித்துவிட்டால் அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுமா என்ன தண்டனை என்பதே திருத்துவதற்குத்தானே? உங்கள் கொடை உள்ளம்தான் இழப்பீடாக ஈட்டுப்பொன் தந்துவிட்டதே...

பெரு :

ஒரு குற்றவாளிக்கு பரிந்துரை செய்து புலவர் புவனந்தியார் முன்வருவது விசித்திரமாக இருக்கிறது..

புவனந்தி :

மன்னிக்கவேண்டும் சேரப்பெருந்தகையே.. எத்தனையோ தான தர்மங்கள் செய்து வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றவர்கள் நீங்களும், உங்கள் தந்தையாரும்.. இப்பொழுது நான் அவனுக்காக கேட்பது உயிர்க்கொடை. அதுவும் நீங்கள் தானமாகத் தரவேண்டாம். இன்று பாவலர் மண்டபத்தில் அரங்கேறிய என் நூலுக்காக நான் என்ன கேட்டாலும் தருவதாக அறிவித்திருந்தீர்கள். எனக்குத் தரவிருக்கும் பரிசாகக் கருதி அவனை மன்னித்துவிடுங்கள்.

பெரு:
வறுமை உங்கள் வீட்டைப் பிடித்து வாட்டுகிறது. அடுத்தவேளை உணவுக்காக என்ன செய்வேனென்று தேடி வந்தீர்கள். ஆனால் இன்று இவனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கிறீர்கள்.

புவனந்தி:
கண்ணெதிரே உயிர்க்கொலை நிகழ்வதைத் தடுப்பது என் பசியைப் போக்குவதை விட புனிதமானது என்று கருதினேன்.

பெரு:
என்னே உங்கள் கருணை! புலவர் கேட்டதால் உன் உயிர் பிழைத்தது கழுவுள்! பிழைத்துப் போ! அமைச்சரே, புலவரின் புலமைக்கும் கருணைக்குமாகச் சேர்த்து ஐம்பதினாயிரம் பொன்னை பரிசாக தந்தனுப்புங்கள்.

புவனந்தி:
ஐம்பதினாயிரம் பொன்னைவிட உயர்ந்த பசும்பொன் உங்கள் உள்ளம் தான். ஒரு ஏழைப் புலவனின் கோரிக்கையை ஏற்று இந்த மாபெரும் சபையில் என்னை கெளரவித்தீர்! ஆஹா! என்னதவம் செய்தேன்.. சேர நாட்டில் பிறக்க! விடைபெறுகிறேன் மன்னா!

கழுவுள்:
வேந்தரில் வேந்தே! இந்த மகாபாவியை மன்னித்தீர். இந்த உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை நான் உங்கள் அடிமை!

பெரு:
ம்ம்... நீ செல்லலாம்.

அமைச்சர்:
மன்னர் மன்னா... அரிசில் கிழார் இந்த அவைக்கு வர தங்கள் அனுமதிக்காக விருந்தினர் மாளிகையில் காத்திருக்கிறார்.

பெரு:
ஏன் அவரைக் காக்க வைத்தீர்? உடனே அவரை சகல மரியாதையுடன் அழைத்து வாருங்கள்!

                                    காட்சி: 7

பாத்திரங்கள்: அரிசில் கிழார், பெருஞ்சேரல், அமைச்சர்.

அரிசில் கிழார்:
தென்னாட்டு சிங்கமே! சேரகுல மாமணியே! அரிசில் கிழாரின் சிரம்தாழ்ந்த வணக்கம்.

பெரு:
என்னபேறு பெற்றோம் யாம்! தமிழே என்னை வாழ்த்தி ஆசீர்வதித்தது போலுள்ளது. வருக அரிசில் கிழாரே!

அரி:
மன்னரின் மகத்தான பணிச்சுமைகளுக்கிடையில் எனக்காக சில மணித்துளிகள் ஒதுக்கியமைக்கு நன்றி.

பெரு:
புலவர் பெருமானின் வருகையினால் புனிதமானது இந்த அவை. உங்களது தெவிட்டாத பாடல்களால் எமக்கு  பெருமை சேர்த்ததோடு அல்லாமல் தகடூர் மீது எமது வில்கொடி படை, வீறு கொண்டு போர் செய்தபோது எம்மோடு தங்கியிருந்து எனக்கும், எனது வீரர்களுக்கும் மனோபலத்தை தந்தீர்கள்.. புலவர்கள் என்றால் ஏதோ பாடி பரிசில் பெற்று சுகமாய் வாழ்பவர்கள் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல ராஜ்ஜியங்கள் நீதியோடும், நெறிகளோடும் நிலைக்க புலவர்களுக்குத்தானே பெரும் பங்கு

அரி: 
              நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன்? போரிட்டது நீங்கள்.. ஒரு பார்வையாளனாக கண்டு களித்தது நான் அவ்வளவுதானே..

பெரு : 
              அதியமானும் அத்துணை சாதாரணமானவனில்லை..புகழும் வீரமும் ஒருங்கே பெற்றவன் அவனை வீழ்த்துவது அத்தனை எளிதில்லை

அரி : 
             அதனால்தானே தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று இந்த சேர வள நாடே உங்களை போற்றிப் புகழ்கிறது..

பெரு : 
             விருந்தினர் மாளிகையில் தங்களை சரியாக கவனித்துக்கொண்டார்களா...?


அரி:
சேரநாட்டின் இணையற்ற விருந்தோம்பலில் இன்னும் சற்று பெருத்து உருமாறிவிட்டேன். இப்படியே இன்னும் சிலகாலம் தங்கினால் என் ஊரும் வீடும் மறந்துவிடும்போலிருக்கிறது. அவர்களுக்கும் என்னை அடையாளம் காண்பதில் சிக்கல் வருமோவென அஞ்சுகிறேன்.

பெரு:
உங்கள் மனம் நிறைக்க எங்கள் விருந்தோம்பல் போதுமானதா என்ற ஐயமிருந்தது. அந்த குறை இன்று தீர்ந்தது.

அரி:
அப்படியானால் யாம் விடைபெறும் தருணம் வந்துவிட்டது என்றே உணர்கிறோம்.

பெரு:
இணையற்ற பாடல்கள் பத்தை அருளி எம்மை வரலாற்றில் நிலைக்கச் செய்தீர். என்ன செய்வோம் அதற்கீடாய்...?!

அரி:
செயற்கரிய செயல்களைச் செய்து சேர மண்ணைக் குளிரச் செய்த மாமன்னரின் வீரம் ஈரம் பற்றி மெய் சிலிர்க்க சந்தர்ப்பம் வாய்த்தது எமக்குக் கிடைத்த பேறு அல்லவா?! கைமாறு கருதி செய்யப்பட்ட கவிகள் அல்ல அவை.

பெரு:
புலவர் பெருமகனாரின் மனம் புண்பட்டிருந்தால் பொறுத்தருள வேண்டும். தங்கள் பாடல்களுக்கு இணையாக எதையும் எடுத்தியம்ப முடியாததே எமக்கெழுந்த பெரும் சிக்கல்.

அரி:
சிக்கலெடுக்க சிரமப்பட வேண்டாம். மாமன்னர் பெருஞ்சேரலாதரின் இதயத்தில் இடம் கிடைத்தால் அதைவிட வேறென்ன வேண்டும்?

பெரு:
இருக்கிறது புலவரே.. எல்லாவற்றிலும் செழித்து விளங்கும் எம் சேரப் பேரரசு இருக்கிறது! கவிக்கோவுக்குப் பொருத்தமாய் சேர மகுடம் காத்திருக்கிறது. இனி இந்த சேரப் பேரரசு உமது. நீர் தான் இந்த நிமிடத்திலிருந்து சேரமாமன்னன்.

அரி:
(பதறியபடி) அய்யோ... என்ன காரியம் செய்யத் துணிந்தீர்?! ஈயின் தலையில் மாமலையா...? தகுமா?

அமைச்சர்:
புலவர் பெருமகனே... இந்த மண்ணுக்கு நீர் தந்த கவிகளூக்கு இணையாக எதைத் தரப்போகிறோம் என்ற கேள்வி எங்களை உறங்க விடாமல் குடைந்து கொண்டேயிருந்தது. எங்களது மாமன்னன் எத்தனையழகாய் தீர்வுகண்டு விட்டார்! வள்ளலுக்கெல்லாம் வள்ளல்! எமது சேரமாமன்னன் பெருஞ்சேரலாதன் வாழ்க வாழ்க!

அரி:
அமைச்சரே... இக்கட்டான தருணங்களில் அமைச்சர் தான் அரசருக்கு ஆலோசனை வழங்க வேண்டும். ஆனால் நீங்களும் அரசருடன் சேர்ந்து கொண்டு என்ன விளையாட்டு இது?

பெரு:
மறுக்காதீர்கள் புலவர்பெருமானே... ஒரு மகாகவிஞனை பேரரசராக பெறும் பாக்கியம் சேர மக்களுக்கு வாய்க்கட்டும்.

அரி:
பெருஞ்சேரலாதன் என்ற இணையற்ற வள்ளலை, மாசற்ற மாமன்னனை இழக்கும் நிலைக்கு சேர மக்களைத் தள்ளாதீர்கள்.

பெரு:
ஒன்றை இழந்தால் தான் சிறந்த இன்னொன்றைப் பெற முடியும்.

அரி:
ஒருக்காலும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். பாடல்களோடு வந்த என்னை பழிச்சொல்லுக்கு ஆளாக்கிவிடாதீர்கள்.

பெரு:
ஆன்றறிந்த சான்றோர்கள் முன்னிலையில் பாரம்பர்யம் மிக்க சேர அவையில் சேர மன்னன் தருவதாக ஒரு பொருளை அறிவித்துவிட்டு திரும்பப் பெற்றான் என்ற அவச்சொல் எனக்கும் வேண்டாம் புலவரே.

அரி:
ஓ.... அப்படியா... இருவருக்கும் பழிச்சொல் வராமல் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்னிடமொரு உபாயமுண்டு.

பெரு:
தாமதிக்காமல் உடனே அதைச் சொல்லுங்கள் புலவரே.

அரி:
நீங்கள் உங்கள் மணிமுடியை எனக்குப் பரிசாகத் தந்து விட்டீர்கள். இனி அது என்னுடையது. அதை யாருக்கு வேண்டுமானாலும் நான் தருவேன். நீங்கள் தடைசொல்லக் கூடாது.

பெரு:
எனக்கந்த உரிமையில்லையே...

அரி:
அப்படியானால் இந்த நிமிடத்தில் இதனை உமக்கு என்னுடைய பரிசாக அளித்துவிட்டேன். ஒரு நிபந்தனையுடன்.... இனி உங்கள் மணிமகுடத்தை யாருக்கும் தானமாகவோ பரிசாகவோ தரக்கூடாது.

பெரு:
மறுத்துப் பேசவும் முடியாமல் என்னை மடக்கிவிட்டீரே! நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலொரு நிபந்தனையுடன்... நீங்கள் இந்த சேர அவையில் வீற்றிருந்து எமது அரசை செம்மைப்படுத்த உங்கள் ஆலோசனைகளையும் பாடல்களையும் தரவேண்டும். நீங்கள் இங்கே வீற்றிருக்கும் வரைதான் நான் இந்த மணிமுடியைச் சுமப்பேன்.

அரி:
எக்கட்டிலும் சிக்காத என்னை இந்த இக்கட்டில் சிக்க வைத்தீர்கள். தமிழுக்கு மகுடம் சூட்டிய உம்மை அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் எனக்கு இறைவனால் அருளப்பட்டிருக்கிறது எனில் அதுவே எனது சித்தமாகட்டும்.

அமை:
தருவதிலும் பெறுவதிலும் உங்களிருவருக்கும் நிகர் நீங்கள் தான் என்பதை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். புலவர்களுக்கெல்லாம் புலவர் அரிசில் கிழார் வாழ்க!வள்ளலுக்கெல்லாம் பெரும் வள்ளல் எங்கள் மாமன்னர் பெருஞ்சேரலாதன் வாழ்க வாழ்க!! புரவலர்களின் புலவர் எங்கள் அரிசில் கிழார் வாழ்க! புலவர்களின் புரவலர் எங்கள் சேர மாமன்னர் வாழ்க வாழ்க!

                                                -நிறைவு-

நன்றி: புதுவை வானொலி நிலையம்.

சனி, 16 பிப்ரவரி, 2013

‘இந்த முறை நீ வெடி'


அன்புள்ள அண்ணா,

சப்தமென்றால் உனக்குப் பிடிக்காது. அதனால்தான் ஊரடங்கிய அமைதியான சூழலில் உறக்கமற்ற நள்ளிரவில் உனக்கு இதை எழுதுகிறேன். எப்பொழுதும் விட்டுக்கொடுக்கிறவனாகவே நீ இருந்திருக்கிறாய். சிறுவயதிலிருந்து உனக்கு அது பழக்கமாகிவிட்டது. எடுத்து வந்த சட்டைகளில் எனக்கு எது பிடிக்கும் என யூகித்து, அதை தவிர்த்த மிச்சமிருக்கும் சட்டையை உனக்கு பிடிப்பதாக வலுக்கட்டாயமாக சொல்லிவிட்டு எடுத்துக்கொள்வாய். உனக்கு மிகப்பிடித்தமான வெளிர் பச்சை வண்ணத்தில் வந்த உடையைக்கூட நன்றாகத்தான் இருக்கு, ஆனால் இந்த முறை நீ போட்டுக்கோ என்றாய்.

       செய்து வைத்த பலகாரங்கள் தீர்ந்து போகும் சமயத்திலதான் நீ சாப்பிட கிடைக்கும். கேட்டால் இந்த முறை உனக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட் நீயே சாப்பிடு என்பாய்.

        உனக்கு விட்டுக்கொடுக்க முயன்று பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன். சமாதானங்களால் எதையும் சரிகட்டிவிடும் ஆற்றல் உனக்கு.

        மும்பைக்கு நீ சென்ற பின் தொலைபேசியில் பேசும்போது இங்கே ஒரே சத்தம். இரைச்சலாயிருக்கு என்றாய்.ஊசி விழும் சப்தம் கூட உறுத்துவதாய் தோணும் உன்னை, உரலில் இட்டது போல், காலம்  மும்பைக்கு தூக்கி விசிறிவிட்டது.

        சிறு வயதில் வெடிகள் வெடிக்கும்போது, இந்த முறை நீயே வெடி என்று ஒவ்வொன்றாக எனக்கே வெடிக்க கொடுத்துவிடுவாய். நானும் ஆசைஆசையாய் உனக்கு வாய்ப்புத்தராமல் எல்லாவற்றையும் வெடித்துவிடுவேன்.

        என் சுயநலம் தணிந்தது உன் பிரிவுக்குப்பின்.. உனக்கு விட்டுத்தர ஏங்குகிறது மனது. தீபாவளி வரட்டும் இந்த முறை நீ வெடி என எல்லாவற்றையும் விட்டுத்தரலாம் என்றிருந்தேன்.

இடியாய் வந்தது  எவனோ வைத்த வெடிகுண்டு உன்னை பலி வாங்கிய செய்தி

       ‘இந்த முறை நீ வெடி' என்று நான் சொல்ல நினைத்த வாசகம் இப்படியா பலிக்கவேண்டும்?

        இனி வெடிக்கப்போவதில்லை அண்ணா,  எப்போதும் வெடிக்கப்போவதில்லை..ஒரு முறை வெடிதயாரிக்கும் கம்பெனிக்கு சென்று பார்த்துவிட்டு வந்த அதிர்ச்சியில் நீ சொன்ன வாசகம் இப்பொழுதும் நினைவிலிருக்கிறது, ‘ ஒவ்வொரு திரியை பற்றவைக்கும்போதும் ஒவ்வொரு பிஞ்சு விரலை பற்றவைப்பதுபோல் இருக்கிறது' என்றாய்.

        இனி எப்படி வெடிப்பேன்? உனக்கு ஏற்பட்ட நடுக்கம் எனக்கும் வருகிறது. சிறுவயதிலிருந்து சப்தமென்றால் பிடிக்காதென்பதால்தான் அமைதியான இடத்தி உறங்கப்போய்விட்டாய் போலும். நிம்மதியாய் தூங்கு அண்ணா.. இனி வெடிக்கமாட்டேன்.

என்றும் உன் அன்பு தம்பி.

நன்றி: 'சங்கு' இலக்கிய இதழ்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

கடுதாசி" ஏன்வே வள்ளிநாயகம், என் பேருக்கு மணியார்டர் எதாச்சும் இருக்கா?"

         திண்ணையில் அமர்ந்துகொண்டு, வெற்றிலையை சவைத்தபடி எப்போதும்போல் கேட்டார் பெரியசாமி.

       "எம்.ஓ.தானே நாளைக்குத் தாரேன்." என்று வழக்கம் போல் சொல்லிவிட்டு, "இப்போதைக்கு கார்டுதான் இருக்கு" என்றார் போஸ்ட்மேன் வள்ளி நாயகம்.

        " அட, எதுக்குய்யா கார்டு? போறபோக்கில போஸ்ட் ஆஃபீசையே இளுத்து மூடிட வேண்டியதுதான். இந்த போன்லாம் வந்தப்புறம் தந்தி ஆபீசை மூடுனாமாதிரி... இந்த கல்யாணப் பத்திரிகை, போன் பில்லு, கருமாதி பத்திரிகை இல்லன்னா உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காது போல.. இப்பம்தான் பணத்தை எந்த ஊர் பேங்க்ல வேணும்னாலும் கட்டலாம் போலிருக்கே..."

        இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே ரிடையர்மெண்டுக்கு என்று நினைத்த போது மலைப்பாக இருந்தது வள்ளி நாயகத்துக்கு. கட்டிலிருந்த கார்டை எடுத்து பெரிய சாமியிடம் கொடுத்தார். 

       வாங்கிப் பார்த்த அவர், "ம்க்கும், வழக்கமா வர்றதுதான் ஆச்சிதான் போட்டிருக்காக..அந்த காலத்து அஞ்சாங் க்ளாஸ். இன்னும் தடுமாறாம எளுதுது..  என்னவே மழையில நனச்சிட்டீரா.. எழுத்தெல்லாம் அழிஞ்சி கலங்கி கெடக்கு"

        "இத்தனை கடுதாசி இருக்கு.. இது மட்டும் எப்படி நனையும் அண்ணாச்சி. இப்படி குடுங்க." என்று வாங்கிப் பார்த்த வள்ளிநாயகம், "ஆச்சி அளுதிருக்குமோ" என்றார்.

        சற்று திடுக்கிட்டுப் பின் சுதாகரித்த பெரியசாமி "சவம், இங்க வந்து கெடன்னா கேக்கமாட்டேங்கா..  கடுதாசி எல்லாம் ஒண்ணப்போல இருக்கும் அது இல்லை, இது இல்லன்னுட்டு.. அங்க எவன் மல்லுகட்டச் சொன்னாங்கறேன்... நான் பலத படிச்சவொடனே கிழிச்சுடறது, சிலத படிக்கறதே இல்லை. போன் வந்தப்புறம் எவன் கடுதாசியை எல்லாம் மதிக்கான்?"

       “ ஆச்சிகிட்ட போன்ல பேசுவீயளோ?”

       “ ம்க்கும் காது ரெண்டும் பங்சர். பெறவு எப்படி பேசுவா போன்ல. அதான் கார்டா கிழியுது வாரந்தவறாம..”

        அப்போதுதான் பெரியசாமி இடுப்பில் புத்தம்புதிதாக முட்டிக்கொண்டிருந்த பச்சை பெல்ட்டைப் பார்த்தார் வள்ளிநாயகம். "அது என்ன அண்ணாச்சி, புதுசா பெல்ட்டெல்லாம் தரவுக்காரவுக மாதிரி.."

" அத ஏன் கேக்குதீய... கோவில்பட்டி மாப்புள போனதரம் வந்தப்ப ஒரு ‘செல்' ஐ வாங்கி குடுத்துட்டாக.. நமக்குத்தான் மேச்சட்டை போடற பளக்கமே இல்லயே.. அது என்னமோ பவுசாமே"

"பவுச் அண்ணாச்சி"

"அந்த கருமந்தான். அதுல வச்சிக்கலாம்னாங்க. களுத நமக்கு அதெல்லம்  சரிபட்டு வருமா? அதான் புது பெல்ட்." பெருமிதமாக இடுப்பில் தட்ட அந்த நேரம்பார்த்து செல் அடித்தது. 

         "அட மக்கா, தட்டினவுடனே அடிக்கி" என்றபடி செல்லை காதில் வைத்தவர் ‘அல்லோ' என்றார்.

" அண்ணாச்சிங்களா... இங்க செத்த மின்னாடி ஆச்சி தவறிட்டாக. நீங்க கொஞ்சம் வொடனே பெறப்புட்டு வந்திங்கன்னா பரவால்லை"

          சட்டென்று கைகள் நடுங்கின பெரியசாமிக்கு. காற்று வந்து அவரது கையிலிருந்த கார்டை பறித்துச்சென்றது. 

         "அண்ணாச்சி பதட்டப்படாதீக.. இப்பமே கெளம்புங்க. கேக்கறனேன்னு தப்பா நெனக்காதீக ஆச்சியை  போட்டோ புடிச்சு வச்சிருக்கீகளா.. இல்ல அவுக குரலை புடிச்சி வச்சிருக்கீகளா டேப்புல..?"

        இல்லையென்று உதட்டை பிதுக்கிய பெரியசாமியின் கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அருகிலிருந்த பேரனின் முதுகில் தட்டி விரட்டிய பெரியசாமி பதட்டமாக கத்தினார், 

       "ஏலே அந்த கார்டை புடிலே.. ஆச்சியோட மிச்ச உசுரு அதுலதான் இருக்கு..."     

நன்றி: 'சங்கு' இலக்கிய இதழ்                   

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...