திங்கள், 27 ஜூன், 2022
மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் பரிசு பெற்றபோது 


இயக்குனர் பாரதிராஜாவுடன் பாராட்டுப் பெறுவது மகன் சிபிக்குமார் 
பாரதிராஜாவுடன் 


கவிஞர்  மனுஷ்யபுத்திரனுடன்   இயக்குனர் ஆர்.கே. செல்வமணியுடன்    
 

குவாலியரில் நடைபெற்ற அகில இந்திய தரக்கட்டுப்பாட்டுக் குழுக்களுக்கிடைஎயான போட்டியில் EXCELLENT AWARD பெற்றபோது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற தருணம்


எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடன் சென்னை பொதிகைத் தொலைக்காட்சி இலக்கிய தர்பார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபொழுது 


திரு சுபவீ அவர்களுடன் ..


எழுத்தாளர் அம்பை அவர்களுடன் 


திரைப்பட இயக்குனர் V. சேகர் அவர்களுடன்  
இலக்கிய சங்கமம் நிகழ்ச்சியில் சுபவீ அவர்களால் கௌரவிக்கப்பட்ட பொழுது
எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள் மற்றும் என்.எல்.சி இயக்குமார் கந்தசாமி அவர்களுடன் 

எழுத்தாளர் வே. சபாநாயகம் அவர்களுடன்.. அருகில் துணைவியார் நிலாமகள் 

 

கவிஞர் ரவி சுப்பிரமணியன் மற்றும் நிழல் திருநாவுக்கரசு அவர்களுடன் 


திசை எட்டும் ஆசிரியர் மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் மற்றும் புகைப்பட கலைஞர் என்.செல்வன் அவர்களுடன் 
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி வாழ்த்திய போது எழுத்தாளர் எ. சோதியுடன்  

    
                                    எழுத்தாளர் உத்தமச் சோழனுடன் 


                        நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் அன்றைய அதிபர் சஹாயிடம் பரிசு 


                                                                                                     தமிழகத்தின் டி.ஜி.பி ஆக இருந்த திரு ராஜேந்திரன் அவர்களுடன் 


                                    
 சென்னைத் தொலைக்காட்சி இயக்குனர் பாலரமணி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷனி, எழுத்தாளர் நளினி சாஸ்திரி, கவிஞர் சத்தியமோகன்  ஆகியோருடன் ..
எழுத்தாளர் பிரபஞ்சன், மேலாண்மை பொன்னுச்சாமி , குறிஞ்சி வேலன்


ஆகியோருடன் 
    
                                        
 அகில இந்திய அளவில் தரக்கட்டுப்பாட்டுக் குழுவுக்கான போட்டியில் உயர் அந்தஸ்துக்கான PAR EXCELLENT AWARD  வாங்கியமைக்காக என்.எல்.சி. நிறுவனம் குடியரசு தின விழாவின் போது பாராட்டும் பணப்பரிசும் வழங்கிய போது     இயக்குனர் எழுத்தாளர் ராஜூமுருகனிடம் நினைவுப் பரிசு பெற்றபோதும் அவருடன் திரைக்கலைப் பற்றிய உரையாடிய போதும் ..

 எனது நூல்கள்                                                         (மின்னூல்)
 

‘கண்ணுக்குத் தெரியாத காற்று ‘ நூலுக்கான எனது முன்னுரை

             


   ‘இடம்’அல்ல அவர்களின் இடம் ...

     அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் சிவபெருமான் தனது இடப்பாகத்தை, சக்தியாக விளங்கும் பரமேஸ்வரிக்குத் தந்ததாக நாம் புராணங்களில் படித்திருக்கின்றோம். உடலின் பாதியையே அவர் தந்து, பெண்ணினத்திற்கு மாபெரும் மரியாதையை அளித்திருக்கிறார் எனவே இந்த ஒட்டு மொத்த சமூகமும் அவ்வாறே பெண்ணினத்தை மதிக்க வேண்டும் என்பதே இந்த புராணக்கதையின் உள்ளடக்கம். ஆனால் உடலின் இடது புறத்தின் உறுப்புகள் அனைத்தையும் இயற்கையே ஒப்பீட்டு நோக்கில் வலது புறத்தைவிட பலம் குன்றியே வைத்திருக்கிறது. நாம் இயல்பிலேயே இடதுபாக உறுப்புகளை அலட்சியத்தின் குறியீடாக கவனப்படுத்துகிறோம். உதாரணமாக அவர் என்னை இடதுகையால்தான் ஆசீர்வதித்தார் என்று ஒருவர் குறிப்பிட்டால் அதன் பொருள் அவர் வெறுப்போடு அல்லது விருப்பமின்றி அங்கீகரித்தார் என்றுதான் அர்த்தப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் கால் மீது கால் போட்டு அமரும்போது கூட பெரும்பாலும் இடது காலின் மீது வலது கால் அழுத்த, இடது கைமீது வலது கை விழுமாறுதான் அமர்கிறோம். ஆக பெருந்தன்மையாக இடமளித்த சிவன் கூட இடது பாகத்தைத்தான் பெண்ணுக்குத் தந்திருக்கின்றார்.

     சமூகத்தில் பெண்ணின் நிலையும் கூட அவ்வாறேதான் இருக்கிறது. உண்மையில் அவர்கள் தாங்கள் அழுத்தப்பட்ட இடத்திலிருந்து, அலட்சியப்படுத்தப்பட்ட உதாசீனங்களிலிருந்துதான் தாங்களாக வெடித்துக் கிளம்ப வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க ஜனநாயகம் செழித்து, தழைத்தோங்குவதாக முழங்கும் தேசங்களில் கூட பெண்கள் தங்களுக்கான நியாயமான உரிமைகளை போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அப்படியான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள், வழி நடத்திய பெண்கள் தங்களது சுயநலத்துக்காக இல்லாமல் முழுக்க, முழுக்க சமூக நலன் சார்ந்தே இயங்கி இருக்கிறார்கள் என்பது அவர்கள் மீதான மரியாதையை மேலும் உயர்த்துகிறது. யதார்த்தத்தில் சுயநலம் சாராமல் பொது நலன் இல்லை என்னும் கூற்று சமூகத்தில்  ஒரு அங்கீகரிக்கப்பட்ட பண்பாகவே இருக்கிறது. ஆனால் பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள் பணியில் பெரும்பாலும் அந்தக் கூற்று அர்த்தமற்று போயிருப்பதைக் நான் கவனித்திருக்கின்றேன். அவர்களின் இயல்பான தாய்மையுணர்வு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத அர்ப்பணிப்புத்தன்மைக் கொண்டது. அந்தத் தன்மைதான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது. உலகம் முழுக்க பெண்போராளிகள், பெண் சமூக செயற்பாட்டாளர்களின் வலி மிகுந்த போராட்டங்கள் நீர் மேல் எழுத்து போல் மறைந்தே இருக்கின்றன. எனவே அவற்றை ஓரளவேயாகிலும் வாசிப்பது, வாசிக்க வைப்பது நம் கடமை என்றே தோன்றியதன் விளைவே இந்த நூல்.

     இந்தக் கட்டுரைகளை தொடராக வெளியிட அனுமதித்த ஊக்குவித்த ‘ கிழக்கு வாசல் உதயம்’ திங்களிதழின் ஆசிரியர் திரு உத்தமசோழன் அவர்கள் என்றும் என் நன்றிக்கு உரியவர். அவர் அந்த பத்திரிகையைத் துவங்கிய காலக் கட்டத்தில் இந்தத் தொடரை எழுத என்னை அனுமதித்தார். இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ‘கிழக்கு வாசல் உதயத்தில்’ வெளியானவை. ஒரு சில கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழ் மற்றும் அம்ருதா, தாமரை. காக்கைச் சிறகினிலே. திருப்புமுனை ஆகிய  சிற்றிதழ்களில்  பிரசுரமானவை. அந்தந்த இதழ் ஆசிரியர்களுக்கு என் நன்றிகளை இந்த நேரத்தில் சமர்ப்பிக்கிறேன்.

     பதிப்புலகில் இன்றைக்கு நிலவும் சவால்கள் அனைத்தையும் ஒரு புன்னகையோடு எதிர்கொள்ளும் தேவகி ராமலிங்கம் அவர்களை தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்திருக்கும். நிவேதிதா, ஊருணி ஆகிய பதிப்பகங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ஆனால் அது பற்றி எந்தப் புகாருமின்றி தவம் போல் நிர்வகித்து வருகிறார். எம்.ஆர் என்று பத்திரிகை உலகில் எல்லோராலும் அறியப்படும் அவரது கணவர் இராமலிங்கம் அவர்கள் இடப்பாகத்தை அல்ல எல்லா பாகத்தையும் தந்து அவரை சுயமாக இயங்கத் துணை நிற்கின்றார். இருவருமே எனது மரியாதைக்கும், நன்றிக்கும் உரியவர்கள். இந்த இருவரையும் எனக்கு அறிமுகம் செய்த பல்லவிகுமாருக்கு பிரத்தியேகமான நன்றிகள்.

   அன்பின் அம்மா சாந்தாவுக்கும், எனது எல்லா இலக்கியப் பணிகளுக்கும் தனது உள்ளார்ந்த ஈடுபாட்டால் துணை செய்யும் எனது மனைவி நிலாமகள் என்னும் ஆதிலட்சுமிக்கும் எனது பேரன்பு பெருஞ்செல்வங்கள் பிருத்வி மதுமிதா மற்றும் சிபிக்குமாருக்கும் எனது பிரத்தியேக நன்றிகள்.

     இந்தக் கட்டுரைகள் வெளியான தருணத்தில் ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் நெகிழ்வோடு தனதுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பரமக்குடி பா.உஷாராணி மற்றும் தனது பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டுரைகளை வாசித்துக் காண்பித்த அவரது சகோதரி மதிப்பிற்குரிய பா.சரசுவதி அவர்களுக்கும்...

எனது படைப்புகள் மீதும் என் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து செல்லும் இடம் தோறும் என்னைப்பற்றி பெருமிதமாக குறிப்பிடும் அன்புக்குரிய தோழி கவிஞர் கிருஷ்ணப்பிரியா அவர்களுக்கும்...

தன்னைவிட ஒருபடி மேலே வைத்து என்னை மதிக்கும் அன்புக்குரிய எழுத்தாளர் மாலா உத்தண்டராமன் மற்றும் சக எழுத்தாளர்கள் ஜீவகாருண்யன், நளினி சாஸ்திரி, ஓவியர் கோவிந்தன், புகைப்படக் கலைஞர் நெய்வேலி என். செல்வன், மருதூர் அரங்கராசன், குறிஞ்சி வேலன் மற்றும் குறிஞ்சி ஞான வைத்தியநாதன், நாகை வெற்றிச்செல்வன்,புலியூர் முருகேசன், நண்பர்கள் பாலு, ஐயப்பன், பாபு ஆகியோருக்கும்..

என் நூல்கள் வெளிவரும்தோறும் அவற்றுக்கு ஒரு விமர்சன அரங்கை அமைத்துத் தருகிற செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்டத் தோழர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவரது நண்பர்கள் செந்தில்பாலா, நினைவில் வாழும் செஞ்சி செல்வன், இயற்கை சிவம், பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழினியன், ரிஷபன், தயாளன், நிழல் திருநாவுக்கரசு  இன்னபிற நண்பர்களுக்கும்.

இந்த நூலுக்கான அட்டை வடிவமைப்பு செய்த நண்பர் கீர்த்தி அவர்களுக்கும் அச்சிட்ட அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றிகள். 

நான் பணியாற்றும் என். எல்.சி. நிறுவனத்துக்கும், எனக்கு தமிழூட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் இனிய தமிழுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்..

                                           மிக்க அன்புடன்

                                     நெய்வேலி பாரதிக்குமார்

 அமைதிப் புயல் அன்னி'

 


அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் அமைதிப் புரட்சியாளர் என்று சொன்னால் அது அன்னிபெசண்ட்'ஐக் குறிக்கும். அவர் அணுகுமுறையில் அமைதியானவர் என்றாலும் முடிவுகள் எடுப்பதில் அதிதீவிரமானவர். அவரது பன்முகத் தன்மைகள் அதிகம் அறியப்படாதவை. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய பலரைப் பெயரளவில் தான் அறிந்திருக்கிறோம். அன்னி, இந்திய சுதந்திரத்திற்காக ஆற்றிய பணிகள், இந்திய தேசிய காங்கிரசில் அவரது மகத்தான பங்கு ஆகியவை விரிவாகப் பேசப்பட வேண்டியவை.

                இந்தியா சுதந்திரம் அடைவதற்கு மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் (1847) அக்டோபர் 1ம் தேதியன்று லண்டன் வில்லியம் பேஜ்வுப், எமிலி மோரிஸ் தம்பதியர்க்குப் பிறந்தார். அன்னிக்கு ஐந்து வயதாகும்போது அவரது தந்தை திடீரென மறைந்தார். மருத்துவராகப் பணிபுரிந்தாலும், வில்லியம் எந்த சொத்தையும் பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்கவில்லை. அவர் இறந்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்ட ஆல்பர்ட் என்னும் அன்னியின் இளைய சகோதரன் இறந்து போனான். அன்னியின் குடும்பம் வறுமையில் உழன்றது. அன்னியின் தாயார் எமிலி, மாணவர் விடுதியொன்றில் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக அன்னியின் பள்ளிப் படிப்பு மூன்றாம் வகுப்போடு நின்றுபோனது.

                கல்வியில் நாட்டம் கொண்ட அன்னியின் ஆர்வத்தைக் கண்ட எமிலியின் குடும்ப நண்பர் மிஸ் எலன் மேரியம் என்பவர் அன்னியை தன் பொறுப்பில் பள்ளியில் படிக்க வைத்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவரை வளர்த்து 16ம் வயதில் மீண்டும் அவரது தாயாரிடம் ஒப்படைத்தார்.

                கவிதைகள், கதைகள் எழுதுவதில் விருப்பம் கொண்ட அன்னி, பல்வேறு படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரம் பெற்று சிறிதளவு தொகையை ஈட்டித் தந்தன.

                லண்டனில் மதபோதகராக இருந்த ஃபிராங்க் பெசண்ட் அன்னியை மணக்க விரும்புவதாக எமிலியிடம் தெரிவித்தார். அன்னி 21 வயதில் பிராங்க் பெசண்டை மணந்தார். திங்பே, நோபல் என்று இரண்டு குழந்தைகளை அவர்களுக்குப் பிறந்தன. ஆனால் அவர்களது திருமண வாழ்வு கசப்பான முரண்பாடுகளுடனே ஆறு ஆண்டுகள்தான் நீடித்தது.

                ஃபிராங்க் பெசண்ட் மனதளவிலும் ஒரு பிற்போக்குவாதியாக இருந்தார். இங்கிலாந்தில் அப்பொழுது திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, அன்னியின் படைப்புகளுக்காக பத்திரிகைகள் தரும் தொகையைத் தாமே பெற்றுக் கொண்டார். லண்டனின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளுக்கு எதிராக அன்னி இறங்கியபோது ஃபிராங்க் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்தார். இருவருக்குமான கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததன் காரணமாக, வேறுவழியின்றி இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

                மன அழுத்தம் காரணமாக ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற அன்னி, தாமஸ் என்பவரின் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு சுய சிந்தனை இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார்.

                சுய சிந்தனை இயக்கத் தலைவராக இருந்த சார்லஸ் பிராட்லாவுடனான அன்னியின் நட்பு, பலவிதமான மாற்றங்களை அவருள் ஏற்படுத்தியது. சமூக சேவைக்கான பேபிள் சங்கத்திலும், பெண்கள் சங்கத்திலும் உறுப்பினராகி பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார்.

                அன்னியும் பிராட்லாவும் இணைந்து ஒரு பதிப்பகத்தைத் துவங்கினர். சாமுவேல் கோடன் என்பவர் எழுதிய சர்ச்சைக்குரிய தத்துவங்களின் கனி' என்கிற நூலை வெளியிட்டனர். அதில் கருத்தடையை ஆதரித்துச் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஒரு அமைப்பு இதன் பொருட்டுத் தொடர்ந்த வழக்கில் அன்னி, பிராட்லா இருவருக்கும் ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேல் முறையீட்டில் அந்த தண்டனை நீக்கப்பட்டது.

                பிரம்மஞான சபையின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அன்னி, அந்த அமைப்பின் கொள்கைகளைப் பரப்பினார். பிரம்மஞான சபையில் தீவிரமாக இயங்கிய பிளாவாட்ஸ்கி' அம்மையார் மறைந்த பிறகு, அவரது பணிகளை ஏற்றுக் கொண்ட அன்னி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பிரம்மஞான சபை குறித்து பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.

                சார்லஸ் பிராட்லா இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் அப்பொழுதிருந்த இங்கிலாந்து நாடாளுமன்ற சட்டப்படி, கிருத்துவத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டு சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய விரும்பாத பிராட்லே பதவியேற்காமலேயே திரும்பி விட்டார்.

                சுவாமி விவேகானந்தர் 1893ல் சிகாகோவில் சகோதர சகோதரிகளே' என்று துவங்கி நிகழ்த்திய புகழ்பெற்ற உரை பற்றி நாமறிவோம். உலக சமய மாநாட்டுக் கூட்டத்தில் இந்து சமயம் சார்பில் சுவாமி விவேகாநந்தர் அந்த உரையை நிகழ்த்தினார். அதே மாநாட்டில் பிரம்மஞான சபை சார்பாக அன்னி கலந்து கொண்டு உரை நிகழ்த்தியது பலரும் அறியாத செய்தி.

                அதேபோல் பேட்ரியன் கழகத்தில் இணைந்து பணியாற்றிய காலத்தில் அவருடன் அந்தக் கழகத்தில் இயங்கிய மற்றொரு பிரபலமான நபர் பெர்னாட்ஷா

                உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு இந்தியா மீதும் இந்து சமயம் மீதும் அன்னிக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1893ம் ஆண்டிலேயே அவர் இந்தியாவுக்கு வந்தார்.

                இந்து சமய புராணங்கள், இதிகாசங்களை முறையாக அறிந்து கொள்ள சமஸ்கிருத மொழியை கற்றுத் தேர்ந்தார். பகவத்கீதையை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் சுமார் 10 லட்சம் பிரதிகள் விற்று சாதனை புரிந்தது.

                இந்து சமயம் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தார். அந்தப் பிரயாணத்தின் போது தான் இந்து மக்களுக்குப் போதிய கல்வியைத் தரும் பாடசாலைகள் இல்லாத குறையை உணர்ந்தார்.

                அதைப்போலவே இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா மீள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். ஆகவே அவர் இந்திய தேசிய காங்கிரஸில் தம்மை இணைத்துக் கொண்டு, இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார்.

                அதே சமயம் பிரம்ம ஞான சபையின் நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சென்னை அடையாறில் 1895ம் ஆண்டு தியாசபிகல் சொசைட்டி'யை நிறுவி, அதையே தலைமையகமாகக் கொண்டு ஆன்மீகப் பணியாற்றினார். சைவ உணவு பழக்கத்தின் மேன்மையை உணர்ந்து, அன்னி இந்தியா வந்த பிறகு கடைபிடிக்கத் துவங்கியவர் தன் வாழ்நாள் இறுதி வரை சைவ உணவாளராகவே இருந்தார்.

                இந்திய மக்களின் கல்வியறிவைப் பெருக்க பல கல்வி நிலையங்கள் துவங்க முயற்சியெடுத்தார். குறிப்பாக பனாரசில் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரி ஆரம்பிக்க அன்னி பெரிதும் காரணமாக இருந்தார்.

                இந்தியாவில் இருந்தபடியே லண்டனில் வெளியாகும் பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்தியாவிலும் இரண்டு பத்திரிகைகள் துவங்கி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை அதில் பிரசுரித்தார்.

                இந்திய தேசிய காங்கிரசில் அப்பொழுது திலகர் தலைமையில் தீவிரவாத தன்மை கொண்ட' குழு ஒன்றும், கோகலே தலைமையில் மிதவாத குழு' ஒன்றும்  என இரண்டாகப் பிரிந்து இயங்கி வந்தன. இதனால் பல போராட்டங்களில் ஒருமித்த கருத்துடன் அவர்களால் செயல்பட முடியாமலிருந்தது. அன்னி இந்த முரணைப் போக்குவதற்கு பெரு முயற்சிகள் எடுத்தது, இந்திய தேசிய காங்கிரசை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஏதுவாக இருந்தது. இருபக்கமும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து அவர்களுடன் விவாதித்து இரண்டு குழுக்களையும் 1916ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள வைத்தது அவரது பெரும் சாதனை என்றே கூறலாம்.

                ஆங்கிலேய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லி சீர்திருத்த சட்டத்தில் பல குறைபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தன. அவற்றை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவற்றைக் களைய பெருமுயற்சி எடுத்தார் அன்னி.

                இந்தியாவின் விடுதலைக்காக இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அரங்கில் பல நாடுகளின் ஆதரவைத் திரட்டியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

                1917ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக அன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாத்மாவோடு இணைந்து பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

                ஒருபுறம் அரசியல் நடவடிக்கைகள், மறுபுறம் ஆன்மீகத் தேடல்கள் இன்னொரு பக்கம் பத்திரிகை மற்றும் கல்விப்பணி என பன்முகத்தன்மையில் இயங்கிய அன்னி சில ஆண்டுகளில் அரசியலை விட்டு விலகி தியாசபிகல் சொசைட்டி' பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார். வயோதிகம் மட்டும் அதற்குக் காரணமல்ல. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்கிற ஜே.கே.அப்பொழுதுதான் ஒரு தத்துவ ஞானியாக எழுச்சி பெற்ற சமயம் என்பதால் அவரோடு இணைந்து பணியாற்றுவதில் அவருக்கு மன நிறைவு கிடைத்தது.

                1933ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அவரது பணிகள் தியாசபிக்கல் சொசைட்டியைச் சார்ந்தே இருந்தன.

                பெசண்ட் என்கிற முரண்பாடான மதவாதியான சுயநலமிக்க நபருடன் அன்னி என்கிற மாபெரும் ஆளுமையைப் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.

                இந்திய அரசியலிலும் ஆன்மீகத்திலும் கல்வித்துறையிலும் இந்திய விடுதலை இயக்கத்திலும் இதழியல் துறையிலும் ஓய்வறியாது உள்ளார்ந்து செயல்பட்ட அன்னியின் பணிகள் மகத்தானவை. இந்திய சுதந்திரப் போராட்டம் எனும் பெருங்கடலில் கரைக்கப்பட்ட பல தியாகங்கள், பணிகள் மறக்கப்பட்டனவோ அதுபோல் சுலபமாகக் கடந்து போய்விட முடியாத ஆளுமை அன்னி'.

 

காவிரிக்கரையில் துவங்கிய போர்ப்பரணி

விதைத்த வீரமங்கை வேலுநாச்சியாரும், தீர மங்கை குயிலியும் 
      இந்திய சுதந்திரப்போர் பிரகடனம் என்பது கங்கைக்கரையில்தான் துவங்கியது என்றுதான் வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது ஆனால் அது காவிரிக்கரையில்தான் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது என்றார் அறிஞர் அண்ணா.  அது வெறும் சொல்விளையாட்டு இல்லை. உண்மையான வரலாறு அதை சரி என்றே நிரூபிக்கின்றது.

     1857-ல் கிளர்ந்த சிப்பாய்க் கலகம்தான் இந்திய சுதந்திர போராட்டுத்துக்கான முதல் படியாக கருதப்படுகிறது. ஆனால் சிவகங்கை பகுதியை ஆண்ட முத்துவடுக நாதரின் படையில் பணியாற்றி பின்னர் சிவகங்கையை நிர்வகித்து வந்த மருது சகோதரர்கள் ஐரோப்பியர்களின் வருகை மற்றும் அவர்களது அராஜகமான போக்கு ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்ததுடன், ஒத்தக் கருத்துடைய சிற்றரசர்களை ஒருங்கிணைக்கவும் செய்தனர். பொது மக்களையும் தங்களது போராட்டங்களில் உடன் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு கிராமங்கள் தோறும் ரகசியமாக பனை ஓலைச்சுவடிகளில் செய்திகள் பரிமாறப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் திருச்சி கோட்டையில் ஒட்டப்பட்டது.

     அந்த அறிக்கையில் மேன்மை தாங்கிய நவாப் அலி ஐரோப்பியர்களிடம் அடிபணிந்து போய்விட்டார். ஐரோப்பியர்கள் தங்கள் வாக்குறுதிகளை மீறி, அவரது ஆட்சியை தங்களுடைய ஆட்சியாக பாவித்து நம் மக்களை நாயினும் கீழாக கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால், ஐரோப்பியர்களின் சூழ்ச்சியை அறியாது ஒருவருக்கொருவர் தூற்றிக்கொண்டு நாட்டையும் அன்னியரிடம் அடகு வைத்துவிட்டீர்கள்.

     மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாய் இருந்தாலும் இறுதியில் ஒருநாள் செத்துதான் போகவேண்டும். எனவே பாளையத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாட்டை மீட்கும் இந்த போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இதில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி பங்கேற்று, இந்த ஈனர்களின் பெயர்கள்கூட இனி இந்த தேசத்தில் ஒலிக்கக்கூடாது என்ற உறுதி ஏற்கவேண்டும்..எனதொடரும் அக்கடிதத்தின் பிரதிகள் திருச்சியின் கோட்டையில் ஒட்டப்பட்டன. அதுதான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட ஒலித்த முதல் கலகக்குரல்...

     மருது சகோதரர்கள் சிவகங்கை பாளையத்தை ஆண்டு வந்ததால், பிற அரசுகளோடு எளிதாக தொடர்புகள் கிடைத்தன. அதன் மூலம் இணக்கமான அரசுகளுடன் தொடர்புகள் கிடைத்தன. கேரளம், மராத்திய-கர்நாடக எல்லைப் பகுதியை ஆண்ட அரசுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தார். குறிப்பாக ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் முனைப்பு காட்டிய துந்தாஜி வாக்-உடனான நட்பு மருது சகோதரர்களுக்கு கிடைத்தது. அவர்களோடு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி பரஸ்பரம் குதிரைகளையும், வீரர்களையும் பரிமாற்றம் செய்து கொண்டனர். துந்தாஜி மூலம்  மராத்திய மன்னன் சிந்தியாவின் நட்பு கிடைக்கிறது. இப்படியாக காவிரிக்கரையில் துவங்கியசுதந்திரப் போர் கங்கைக்கரைக்கு மெல்ல மெல்ல பரவியது..

     மருது சகோதரர்களுக்கு சுதந்திர வேட்கை வளர்வதற்கு அவர்கள் படைத்தளபதிகளாகப் பணியாற்றிய சிவகங்கை பாளையத்தின் அரசர் முத்துவடுகரும், அவருக்குப்பின் சிவகங்கையை மீட்கப்போராடிய அவரது துணைவியார் வேலுநாச்சியாருமே காரணமாக இருந்தவர்கள்.

     முத்துவடுகநாதர் சிவகங்கையை நிர்வகித்து வந்தபோது, மதுரையை ஆண்ட விஜயகுமார நாயக்கருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. 1752-இல் நவாப்பின் தூண்டுதலின் பேரில் அப்பொழுது இந்தியாவில் வியாபாரம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனியின் படை ஒன்று கேப்டன் கோப் தலைமையில் மதுரையை கைப்பற்றியது. முத்துவடுகநாதர் தனது நண்பரின் அரசை மீட்கும் பொருட்டு மதுரையின் மீது தனது படைகளை அனுப்பி, கம்பெனி படைகளை விரட்டிவிட்டு மீண்டும் விஜயகுமார நாயக்கரின் தலைமையின் கீழ் மதுரையை கொண்டுவந்தார். இந்த நிகழ்வு காரணமாக நவாப்புக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கும் முத்துவடுகநாதர் மீது பெரும் காழ்ப்புணர்வு இருந்து வந்தது.

     எப்படியாவது முத்து வடுகநாதரை சிவகங்கையை விட்டு விரட்டி விட்டுவிட்டு அதனை கைப்பற்ற திட்டமிட்டனர். என்றாலும் முத்துவடுகநாதரின் வசம் இருந்த படை வீரமும், விவேகமும் கொண்டதாக இருந்ததால் அவர்களது முயற்சி வெற்றி பெறுகின்ற சூழல் இல்லாமல் இருந்தது. கேப்டன் ஸ்மித் என்பவன் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக பொறுப்பேற்ற பின் சிவகங்கை தனது கட்டுப்பட்டுக்குள் வரவேண்டும் அல்லது கப்பம் கட்ட வேண்டும் என மிரட்டினான். ஆனால் அதற்கெல்லாம் பணிய மறுத்த முத்து வடுகநாதர் மீது படையெடுக்கப்போவதாக அறிவித்தான். அவனுக்கு துணை போக நவாப்பும் காத்திருந்தான். 1772-இல் ஆப்ரஹாம் பான்ஜோர் என்பவன் தலைமையில் ஒரு படை சிவகங்கைக்கு அருகிலுள்ள பாளையங்கள் சிலவற்றை அடிபணிய வைத்துவிட்டு சிவகங்கையை நோக்கி கிளம்பத் தயாரானது. அவனுக்குத்துணையாக நவாப்பின் மகன் உம்தத் உம்ரா என்பவனும் தனது படைகளோடு வந்தான். ஆனால் உளவுப்படைகள் மூலம் கிடைத்த தகவல்படி முத்துவடுகநாதரின் படை பலத்துக்கு இணையாக கி.இ கம்பெனி படை இல்லை என்பதையும், முத்து வேலரின் மதியூக மந்திரி தாண்டவராயன் வகுத்த  வியூகங்களை யூகிக்க முடியவில்லை என்பதையும், மருது சகோதரர்கள் என்கிற தளபதிகள் அரணாக இருக்கும் வரை முத்து வடுகநாதரை தோற்கடிப்பது சுலபமல்ல என்பதாலும் முத்து வடுகநாதருடன் சமாதானமாக போகும்படி கி.இ கம்பெனியின் தலைமையகத்திலிருந்து ஆலோசனை சொல்லப்பட்டது.

     மருது சகோதரர்கள் மனவலிமை, உடல் வலிமை, முடிவெடுக்கும் திறன், மக்கள் செல்வாக்கு என  அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்கள். முத்துவேலர் ஒரு முறை வேட்டைக்குச் சென்றபோது எதிர்பட்ட வேங்கையை விரட்டியடித்தவர்கள். நவாப் அவரது எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளியிட்ட கனத்த வெள்ளி நாணயம் ஒன்றை, சின்ன மருது தனது விரல்களாலேயே மடித்து வளைத்தவர்.  மருது சகோதரர்கள் என்கிற சிவகங்கையின் தீரமிக்க வீரர்கள் கி.இ. கம்பெனிக்கும், நவாப்புக்கும் சிம்ம சொப்பனமாகவே விளங்கினர்.

     நவாப்பினால் இந்த தோல்வியைத் தாங்கமுடியவில்லை. எனவே வஞ்சகமாக முத்துவேலரை கொல்வதற்கு கேப்டன் ஸ்மித் மற்றும் பாஞ்சோர் ஆகியோருடன் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தை தீட்டினான். முத்துவேலருக்கு சமாதான ஓலை அனுப்பிவிட்டு, பின் அவரை தனியே வரவழைத்து கொன்றுவிடுவது என்பதே அந்தத்திட்டம்..

     அதன்படி முத்துவேலர் தனது இஷ்ட தெய்வத்தை வணங்க காளையார் கோயிலுக்கு குறைந்த பாதுகாப்புடன் வந்த போது, அவரை பாஞ்சோர் மரியாதை நிமித்தமாக சந்திப்பதாகக்கூறி அனுமதி கேட்டான். பெருந்தன்மையுடன் நம்பி வந்த அவரையும், அவரது இரண்டாவது மனைவி கவுரி நாச்சியார் மற்றும் அவரது உறவினர்கள், பாதுகாவலர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றான். அத்துடன் வாரிசு இல்லாத அரசுகளை கி.இ கம்பெனி எடுத்துக்கொள்ளும் என்ற புதிய சட்டத்தை காரணம் காட்டி சிவகங்கையைக் கைப்பற்றினர்.

     செய்தி அறிந்து துடித்துப்போய் அங்குவந்த வேலு நாச்சியார், தனது கணவரின் இறந்த உடலைப் பார்த்து கதறி அழுதார். கணவரின் கொலைக்கு காரணமான ஸ்மித்தையும், பாஞ்சோரையும் பழிவாங்கியே தீருவேன் என்று உறுதியெடுத்த அவருக்கு மருது சகோதரர்களும், அமைச்சர் தாண்டவராயனும் துணை நின்று மிகபத்திரமாக ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்த திண்டுக்கல் பகுதிக்கு உட்பட்ட விருப்பாட்சி கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.

     வேலு நாச்சியார் விருப்பாட்சி செல்லும் வழியில், அரியாக்குறிச்சி அய்யனார் கோயில் அருகே மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த யாரோ ஒரு ஆட்காட்டி அது பற்றி ஆங்கிலேய அதிகாரிகளிடம் சொல்லிவிட, வேலு நாச்சியார் சென்ற இடத்தை தெரிவிக்கும்படி அந்த சிறுமியை துன்புறுத்தினர். ஆனால் உயிர் போனாலும் தான் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக அந்த சிறுமி சொல்லியதால் அந்த சிறுமியின் தலையை வெட்டிக்கொன்றனர். அந்த சிறுமியின் மீது இருந்த பற்று காரணமாக வேலு நாச்சியார் தனது பெண்கள் படைக்கு உடையாள் படை  என்று அவளது பெயரை சூட்டியிருந்தார். அதோடு மட்டுமல்ல உடையாளை வணங்கும் தெய்வமாகவே கருதி கொல்லங்குடியில் ஒரு ஆலயத்தைக் கட்டினார். அந்த ஆலயம் இப்பொழுது வெட்டுடை காளியம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது. அந்த ஆலயத்தில் தனது காணிக்கையாக வேலு நாச்சியார் வைத்த திருமாங்கல்யம் இன்றும் அங்கிருப்பதாக சொல்கிறார்கள்.

     வேலு நாச்சியார் இளமையிலேயே வில் பயிற்சி, குதிரையேற்றம், சிலம்பு பயிற்சி இவற்றுடன் தமிழ், தெலுங்கு, உருது, பிரெஞ்சு மொழிகளில் பேசும் திறன் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவராக இருந்தார். இந்த வல்லமை காரணமாக அவரால் எளிதாக ஹைதர் அலியின் ஆதரவை பெற முடிந்தது.

     தாண்டவராயன்தான் முதன்முதலாக பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுடன் போராடவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக வாள் படைக்கு சின்ன மருதுவும், வளரிப்படைக்கு பெரிய மருதுவும், பெண்களை உள்ளடக்கிய உடையாள் படைக்கு குயிலி என்ற பெண்ணையும், மக்களை ஒன்றுபடுத்த தாண்டவராயனும் தலைமை வகித்தனர்.

     குயிலி என்ற அருந்ததியர் இனத்துப் பெண் வேலு நாச்சியார் அன்பையும், ஆதரவையும் பெற்றதற்குப்பின்னணியில் நீண்ட வரலாறு இருக்கிறது. வேலு நாச்சியாருக்கு சிறுவயதில் சிலம்பம் கற்றுத்தந்தவர் வெற்றிவேல் என்பவர். வேலுநாச்சியாருக்கு அவர் பாதுகாவலரும் கூட. முத்துவேலருடன் வேலுநாச்சியாருக்குத் திருமணம் முடிந்து அவர்கள் தேனிலவுக்குச் சென்றபோது கூட அவர்களுக்கு பாதுகாவலராகச் சென்றவர் வெற்றிவேல். அந்த அளவுக்கு அவர்களது நம்பிக்கையை பெற்றிருந்த அவர், பின்னாளில் பணத்துக்கு ஆசைப்பட்டு வேலுநாச்சியார் விருப்பாட்சியில் இருந்தபடி ஆங்கிலேயருக்கு எதிராக படை திரட்டுவது பற்றிய தகவல்களை, எதிராளிகளுக்கு தரத்துணிந்தார். அவருக்கு பக்கத்து வீட்டிலிருந்த குயிலி தன் தாயாரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப்பார்க்க சிவகங்கை செல்ல கிளம்புவது அறிந்து அவரிடம் ரகசியமாக ஒரு கடிதத்தை கொடுத்து, அங்குள்ள ஆங்கிலேயரின் கையாள் மல்லாரி ராயனிடம் தருமாறு கூறினார். குயிலிக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்று நினைத்து, அந்த கடிதத்தில் நாச்சியாரின் திட்டங்கள், அவரை கொல்வதற்கான வாய்ப்புகள் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தை எதேச்சையாக படித்துவிட்ட குயிலி ஆவேசம் கொண்டு தனது வாளால் அவரை வெட்டிக்கொன்றுவிட்டார்.

     செய்தி அறிந்த நாச்சியார் உடனே விரைந்து வந்து அந்த கடிதத்தைக் கைப்பற்றியதுடன், குயிலியை தன்னோடு அழைத்துக்கொண்டார். அன்றிலிருந்து குயிலி அவரது மனதுக்கு இனிய தோழியாகிவிட்டார். நாச்சியாரின் மகள் வெள்ளை நாச்சியாரோடு ஒரே அறையில் தூங்கும் அளவுக்கு அவரின் மனதில் இடம் பிடித்தார் குயிலி. ஒருமுறை அப்படி உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களது அறையில் எவனோ  அடையாளம் தெரியாத ஒருவன் குறுவாளை வீசினான், அது வெள்ளை நாச்சியாரைத் தாக்கும் முன் குயிலி பாய்ந்து சென்று தன் கைகளில் தாங்கிக்கொண்டாள்.

     இந்த சம்பவம் வேலுநாச்சியார் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மறு நாள் தனது படை வீரர்களிடையே அவர் உரையாடுகையில் இந்த கொலை முயற்சி வெள்ளை நாச்சியாரை நோக்கியா அல்லது குயிலியை குறிவைத்தா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எவரது திட்டமும் தன்னிடமிருந்து குயிலியை பிரித்துவிட முடியாது. குயிலி தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால் அவளுக்கு நான் தரும் முக்கியத்துவத்தை, பலரும் வேறுபடுத்தி பேசுவதாக அறிகிறேன். அப்படி யாரேனும் இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் உடனே எனது படையை விட்டு வெளியேறிடவெண்டும். சாதி, மத வேறுபாடுகளுக்கு எனது படையில் இடமில்லைஎன்று காட்டமாகக்கூறினார். அதோடு நின்றுவிடாமல் தனது பெண்கள் படைக்கு குயிலியையே தலைமைத் தாங்க வைத்தார்.

     தக்க சமயத்துக்காக காத்திருந்த நேரத்தில் தாண்டவராயன் இறந்து போனார். என்றாலும் மருது சகோதரர்கள் துணையோடும், ஹைதர் அலி அனுப்பிய ஆயிரம் படை வீரர்களோடும், ஆயிரம் குதிரைகள் மற்றும் 12 பீரங்கிகளோடும்   தனது யுத்தத்தை ஆங்கிலேய படையை எதிர்த்து 1780-ல் வேலு நாச்சியார் துவங்கினார்.

     அவரது படை திண்டுக்கல்லைக் கடந்து திருப்புவனம் வந்தபோது மல்லாரிராயன் தனது படைகளோடு அவர்களை எதிர்த்து நின்றான். அவனையும் அவனது படைகளையும் தோற்கடித்துவிட்டு, சோழவந்தான், வண்டியூர் ஆகியவற்றைக் கடந்து சிலைமான் வந்தபோது மல்லாரிராயனின் தம்பி ரங்காராயன் தனது படைகளோடு அவர்களை எதிர்த்தான் பெரிய மருது தனது வளரி என்கிற கையெறி ஆயுதத்தால் அவனைக்கொன்றார். அத்துடன் அவனது படை பின் வாங்கி ஓடியது.

     மானாமதுரையில் கர்னல் மார்ட்டிஸ், பிரைட்டன் ஆகியோர் ஒரு படையோடு வருவதை அறிந்து பெரிய மருது தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பிவைத்தார் வேலு நாச்சியார். அந்த படை கி.இ கம்பெனிப்படையை சின்னாபினமாக்கியது.

     வேலு நாச்சியாரும், சின்ன மருதுவும் தலைமை தாங்கிய படை திருப்பாச்சேத்தி வழியாக முத்தனேந்தல் வந்தடைந்தது. சிவகங்கையில் பாஞ்சோர் நாச்சியாரின் படைக்கு அஞ்சி அடிக்கொரு வீரரை நிறுத்தி வைத்திருப்பதாக செய்தி கிடைத்து, அதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனை நடத்தினார் நாச்சியார். அப்பொழுது அந்த அவைக்குள் நுழைந்த மூதாட்டி ஒருவர் ஆண்டு தோறும் விஜய தசமி அன்று, சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை வணங்க பெண்களை மட்டும் அனுமதிப்பதால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள்படையை அவர்களோடு ஊடுருவி அனுப்பிவிட்டால் எளிதாகத் தாக்கிவிடலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவ முற்பட்டார்.

     மூதாட்டியின் யோசனை பயனுள்ளதாகப்பட்டலும், அவர் அங்கிருந்து நகர முயற்சித்த போது சந்தெகப்பட்டு சின்ன மருது அவரை வழிமறித்து நீ யார்?” என்று கேட்டார். வேறு வழியின்றி தனது வேடத்தைக்களைத்த போது அது குயிலி என்று புரிந்தது. குயிலியின் விவேகமான ஆலோசனையின் படி 1780 ஐப்பசித் திங்கள் 5-ந் தேதி ( அக்டோபர் 21) அன்று சிவகங்கை அரண்மனைக்குள் நாச்சியார் தனது பெண்கள் படையோடு உள்ளே நுழைந்தார். தீரமான உக்கிரத்துடன் பாஞ்சோர் படையுடன் உடையாள் படை போரிட்டது. அப்பொழுது அங்கிருந்த வெடி மருந்துகளுடன் கூடிய ஆயுதக்கிடங்கை குயிலி பார்த்துவிட்டார். அவளுக்குள் விரைவானத் திட்டம் ஒன்று தோன்றியது. அந்த ஆயுதக்கிடங்கை எப்படியாவது அழித்துவிட்டால், ஆங்கிலேயப்படையை தோற்கடிப்பது சுலபம் என்பதால் சற்றும் தாமதியாமல் தனது உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு அதனுள் குதித்தாள். ஆயுதக்கிடங்கு பற்றிக்கொண்டு வெடித்து சிதறியது. மனரீதியாகவும், படைபல ரீதியாகவும் தளர்ந்து போன பாஞ்சோரின் படை பின்வாங்கி சிவகங்கை அரண்மனையை விட்டு வெளியேறியது. இந்திய சுதந்திரப்போரின் முதல் தற்கொலைப்போராளி குயிலிதான்.

     வேலுநாச்சியார் சிறிது காலம் சிவகங்கையை ஆண்டு வந்தார். அவரது பேத்தியின் எதிர்பாராத மரணம் காரணமாக விரக்தியடைந்த வேலு நாச்சியார் சிவகங்கை நிர்வாகத்தை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, திண்டுக்கல் அரண்மனையில் கடைசி காலத்தை கழித்துவிட்டு பின் மரணமுற்றார்.

     மருது சகோதரர்கள் ஆட்சியில் சிவகங்கை செழித்து வளர்ந்தது. தமிழ்ச்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பல தமிழ் நூல்களை அரங்கேற்றினர். ஆலயங்கள், சாலைகள் சீர்படுத்தப்பட்டன. மத நல்லிணக்கத்துடன் சருகணியில் ஒரு மசூதியையும் , மாதாக்கோயில் ஒன்றையும் கட்டித்தந்தனர். காளையார் கோயில் கோபுரத்தை கட்டினர். கூடவே ஆங்கிலேயர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் செய்து வந்தனர்.

     கட்டபொம்மனின் மரணத்துக்குப்பின் அவனது தம்பி ஊமைத்துரை என்றழைக்கப்பட்ட குமாரசாமிக்கும், மற்றொரு தம்பி சிவத்தையாவுக்கும் அடைக்கலம் தந்து அவர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட துணை நின்றார்கள். இராமநாதபுரத்தை ஆண்ட மைலப்பனை கைது செய்ய கி.இ கம்பெனி துடித்தபோது, அவருக்கும் அடைக்கலம் தந்து காப்பாற்றினார்கள். தொடர்ந்து வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதால், கொதித்துப்போன ஆங்கிலேஎயர்கள் பிரித்தாலும் நோக்கோடு மருதிருவர்கள் அரச பரம்பரை அல்ல. வெறும் படைத்தளபதிகள்தான். அவர்கள் ஆல்வது மற்ற பாளையத்தார்களுக்கு இழுக்குஎன்று கர்னல் அக்னியூ என்பவன் தூபம்போட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டான்.அந்த அறிக்கைக்குப் பதிலாகத்தான் தனது பிரசித்திப்பெற்ற திருச்சி பிரகடனத்தை சின்ன மருது வெளியிட்டார்.

     மருதிருவர்களைத் தோற்கடிக்கவே கூடுதல் படைகளை வரவழைத்த ஆங்கிலேயப்படை தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் பலதுரோகிகளை உருவாக்கியது. பல நவீன ஆயுதங்கள், பல ஆயிரம் பேர் கொண்ட படைகள், துரோகிகளின் தொடர் வஞ்சகங்கள் இவற்றின் உதவியால் சிவகங்கையை தாக்கியது. ஆங்கிலேயப்படை அரண்மனையை கைப்பற்றினாலும் மருதிருவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவர்கள் உயிராக மதித்த காளையார் கோயிலை இடிக்கப்போவதாக அறிவித்தனர். தங்களால் கோயில் சிதைந்துவிடக்கூடாது என்பதால் தாங்களாகவே ஆங்கிலேயர் முன்வந்தனர்.

     1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ந்தேதி இரண்டு மருதுகளையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். கொலை வெறி அடங்காமல் சின்ன மருதுவின் தலையை கொய்து நட்டு வைத்தனர். ஊமைத்துரையும், சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர். 1802 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சின்ன மருதுவின் மகன் 15 வயது துரைச்சாமி, வேலு நாச்சியாரின் மருமகன் பெரிய வேங்கடத்தேவர், ஆகியோர் உட்பட 73 பேர் மலேசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். பின் அங்கேயே இறந்தும் போயினர்.துரோகங்களால்தான் அன்றிலிருந்து இன்று வரை வீழ்ந்து வருகிறது தமிழ் இனம். இன்னமும் தொடர்கிறது நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகள்.. தேசமும் தன்மானமும் இன்னுயிர் என்று கருதியவர்களுக்கு இந்த உடலும், உடல் சார்ந்த மூச்சுவிடுதலும் ஒரு பொருட்டில்லை என்பதை உடையாள், குயிலி, மருது சகோதரர்கள். ஊமைத்துரை, சிவத்தய்யா ஆகியோர் நிரூபித்து விட்டனர். நாம் நம்மை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பங்களை வெற்று கூச்சல்களாலும், வறட்டு தர்க்கங்களாலும் இழந்துவிட்டோம்...

    

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...