புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துணை அழகாய் இருப்பதில்லை. எல்லாப் புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற முகங்களுக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை எப்படியோ கேமரா ஒளி வழங்கிவிடுகிறது.
அறிமுகமில்லாதவர்களின் வீடுகள் கூட எனக்குப் பெரும்பாலும் அந்நியமாய் இருப்பதில்லை. அந்த வீடுகளின் சுவர்களைப் புகைப்படங்கள் அலங்கரிக்கும் பட்சத்தில்... எதிர்பாராமல் ஆல்பங்கள் கிடைத்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறெதுவும் இல்லை.
ஏதேனும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட உங்களது முகம் ஆல்பத்தில் இருக்கும் என்கிற அனுமானம் இருந்தால் அப்பொழுது அந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அவை ஏற்படுத்தும் குறுகுறுப்பு அலாதி சுகம்தான் என்பதை நீங்களும்கூட சில சந்தர்ப்பங்களில் உணர்ந்திருப்பீர்கள்.
அப்படித்தான் ஒரு அபூர்வமான ஆல்பம் சில சிதிலங்களுடன் எனக்கு என் பாட்டி வீட்டில் பொங்கல் விடுமுறைக்குப் போனபோது கிடைத்தது. வீட்டை வெள்ளையடிக்க எல்லாப் பொருட்களையும் இறக்கி ஓரிடத்தில் சேர்த்தபோது இதுவரை புலப்படாத ஆல்பம் தட்டுப்பட்டது. வெள்ளையடிக்கும் போதும், வீட்டைக் காலி செய்ய முற்படும்போதும் தான் நீங்கள் உங்கள் வீட்டின் எல்லாப் பகுதிகளையும் முழுமையாகச் சுற்றி வருவீர்கள். அப்பொழுதுதான் உங்கள் வீட்டில் இதுவரை நீங்கள் பார்த்திராத பகுதிகளும் பொருட்களும் தென்படும்.
“பாட்டி, இதென்ன இங்க ஒரு ஆல்பம் கெடக்கு?”
“இந்த வீடு கிரஹப்பிரவேசத்தப்போ எடுத்த போட்டோவெல்லாம் அதுல இருக்கு. ஆமா, அது எப்படி உன் கையில் கிடைச்சுது?”
“கூடக் கொஞ்சம் பழைய போட்டோல்லாம் இருக்கு போல”.
“ஆமா... எல்லாத்தையும் அதுலதான் ஒரு சமயம் போட்டு வெச்சது. உங்கப்பன் உன் வயசுல மண்ணம்பந்தல் காலேஜில படிக்கறச்ச புடிச்ச போட்டோ கூட அதுல தான் இருக்கு. உன்னை மாதிரி உங்கப்பனும் லட்சணமா இருப்பான்.”
கிணறு தோண்ட, புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் ஓரமாய் அமர்ந்து ஆல்பத்தைப் புரட்டினேன்.
“இதென்ன பாட்டி எனக்கு காது குத்தின போது எடுத்தது போலிருக்கு”!
“கிரஹப்பிரவேசத்தோட சேர்த்து உனக்கு காது குத்தினோம். அப்பல்லாம் கறுப்பு வெள்ளைதான். அடையாளம் தெரியுதா அதிலே இருக்கறவங்களை உனக்கு?”
“காது குத்தினப்போ எடுத்ததா? அப்போ உன்னோட அழுமூஞ்சியைப் பார்க்கணுமே...” என்றபடி பிரவீணா என்னருகில் அமர்ந்தாள்.
“ஏன் பாட்டி, யார் மடியில உட்கார்ந்து எங்க அண்ணன் காது குத்திக்குது?” என்று கேட்க, பொருள்களை எடுக்க வந்த அப்பாவும் தாத்தாவும் கூட எங்களருகே வந்தனர்.
பாட்டியிடமிருந்து எந்த பதிலும் சற்று நேரம் இல்லை. பின், “செம்பரும்புல உங்கப்பாவுக்கு அக்கா முறை... சரோஜான்னு பேரு. அவ வீட்டுக்காரருதான் உங்களுக்கெல்லாம் மாமா முறை.”
“ஏன்...? அப்ப எங்க தண்டு மாமா எங்க போச்சு?”
பாட்டி ‘சொல்வதா, வேண்டாமா' என்று திரும்பி அப்பாவைப் பார்த்தாள்.
“அவங்களுக்கும் அரசல்புரசலாத் தெரியும்... சொல்லு, பரவாயில்லை” என்றார் அப்பா சன்னமான குரலில்.
“அப்பல்லாம் உங்க தண்டபாணி மாமாவுக்கும் உங்களுக்கும் போக்குவரத்து இல்லை. உங்கப்பாதான் உங்க அம்மா வீட்டு சம்மதம் இல்லாத லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்துட்டான்ல. அந்தக் கோவத்தில் அவங்க வர்றதில்லை அப்ப. இப்பல்ல ஒரு ஏழெட்டு வருசமா உறவு முளைச்சு வந்து போயிட்டிருக்காங்க!”
“ஆஹா, இங்க பாருங்க தாத்தா, யாரோ ஒரு ஆள் கூடப் பாட்டி ரொம்பக் க்ளோசா நின்னுகிட்டு இருக்காங்க” பிரவீணா குரலுயர்த்தி சற்று சத்தமாகச் சொல்ல, திகிலோடு தாத்தாவும் பாட்டியும் அவசரமாகப் பார்த்தார்கள்.
“அடச்சீ, கழுத... அது தாத்தாதான்... அப்பல்லாம் தாத்தாவுக்கு சுருள் சுருளா முடி நெத்தியில வந்து விழும்!” சொல்லும்போதே பாட்டிக்கு வெட்கமும் பெருமிதமும் கலந்து புதிய கிளுகிளுப்பு முகத்தில் வழிந்தது. பாட்டி ரொம்ப அழகாகத் தெரிந்தாள்.
“ஓஹோ... அதுதான் சங்கதியா...?! ஆமா தாத்தா, அது என்ன...? முன்னாடி ரயில் இன்ஜின் லைட் மாதிரி சுருட்டி நெத்தி மேல ரவுண்டு கட்டியிருக்கே... அதுக்கே தெனம் ஒருமணி நேரம் ஆகும் போலிருக்கு!”
“வாயாடிக் கழுத. அஞ்சு வயசு வரைக்கும் உனக்குப் பேச்சே வரலைன்னு பதறிப் போயி, கழுதைப் பாலு அது இதுன்னு குடுத்து உனக்கு பேச்சு வரதுக்குள்ள நாங்க பட்ட பாடு... இப்ப என்னடான்னா இந்த பேச்சு பேசறே!”
“நெனைச்சேன்... இவளுக்கு கழுதப்பாலுதான் குடுத்துருப்பீங்கன்னு!”
“ஏய், கொஞ்சம் கேப் கிடைச்சா சந்துல சைக்கிள் விடறே நீ? இரு... இரு.. உன்னோட காதுகுத்தி போட்டோவெல்லாம் இன்னும் பாக்கியிருக்கு. அம்மா, அங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? இங்க வா சீக்கிரம்!”
அடுத்த பக்கத்தை மெல்ல புரட்டினேன்.
“இது யாரு பாட்டி இந்தப் பொண்ணு?”
எட்டிப்பார்த்த பாட்டி, தாத்தா, அப்பா மூவரும் கொலேரென்று சிரித்தனர். எப்பேர்ப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தளர்த்திவிட ஒரு ஆல்பத்தல் முடியும்!
“அது வேடிக்கையான கதைப்பா. உங்கப்பாவுக்கு முடியிறக்க சமயபுரம் போவலாம்னு வேண்டுதல். என்னமோ தட்டிகிட்டே போயிட்டிருந்தது. அதுக்குள்ள முடி நீளமா அழகா பொம்பிளை புள்ளையாட்டம் இருந்தது. மெனக்கெட்டு பின்னி விட்டா அத்தனை ஜோரா இருக்கும். அப்ப பக்கத்து வீட்டில விஜயான்னு ஒரு பொண்ணு... இப்பக் கல்யாணம் ஆகி திருவானைக்காவுல இருக்கா. அவ பெரிய மனுசியானப்போ உங்கப்பன் ஒரே கலாட்டா. எனக்கும் புடவை எடுத்துக் குடுன்னு ஒரே அடம். அப்பத்தான் அவ தாவணிய எடுத்து புடவை மாதிரிக் கட்டிவிட்டு, பூபொட்டெல்லாம் வெச்சு ஒரு ஞாபகத்துக்கு எடுத்தது.”
அம்மாவும் கையைத் துடைத்துக் கொண்டே வந்து சுவாரசியமாக எங்களருகே வந்து பார்த்தாள். சிரிப்பை அடக்க முடியவில்லை அவளுக்கும்.
“அடடா... யாரு பாட்டி இவ்வளவு அழகா இருக்கா இந்தப் பொண்ணு?”
“அது மல்லிகா. அதான்... செம்பரும்புல ஒரு மாமா இருக்காருண்ணு சொன்னேன்ல. என்னோட ஒண்ணுவிட்ட தம்பி. அவரு பொண்ணு. உங்கப்பா அவளைக் கட்டிக்கலைன்னு இப்ப அவங்க பேச்சு வார்த்தைகூட இல்லை. அப்புறம் அவளை என்னமோ வடமட்டம் பக்கம் ஜவுளிக்கடைக்காரனுக்குக் கட்டிக் குடுத்ததாக் கேள்வி”.
“அடடா... மிஸ் பண்ணிட்டியேப்பா... எவ்வளவு அழகா இருக்காங்க! போயும் போயும் இதப் புடிச்சியே நீ” என்றாள் பிரவீணா அம்மாவைக் காட்டி.
“ஏன் இப்ப அதெல்லாம் ஞாபகப் படுத்தற? இப்ப வருத்தப்பட்டு ஆகப்போறதென்ன?” போலியாய் முகத்தில் சோகத்தைத் தேக்கி அப்பா சொல்ல, அம்மா செல்லமாக அப்பா முதுகில் மொத்தினாள்.
“பாட்டி, இது யாரு? மணாளனே மங்கையின் பாக்கியம்ன்னு பொதிகைல ஒரு படம் போட்டானே... அதுல நடிச்ச ஹீரோயினா?”
“போடி வாயரட்டை. அது நாந்தான். அப்பல்லாம் பஃப் கைதான் ஃபேஷன். தாத்தாக்கூட பாரேன். மெனக்கெட்டு முழுக்கை சட்டை தைச்சிட்டு, அதை முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிருக்காங்க...!”
“சண்டைக்கு போற சண்டியர் மாதிரி! ஏன் தாத்தா... அந்த மீசை என்ன வரைஞ்சதா இல்ல... வளர்த்ததா?”
தாத்தா பிரவீணாவின் காதைப் பிடித்து மெல்லத் திருக, “சரி, சரி... ஒத்துக்கறேன். வளர்த்ததுதான்” என்ற பிரவீணா இன்னொரு பக்கத்தில் படுத்திருந்த குழந்தையைக் காட்டி, “அய்யய்ய... கசம். இது யாருபாட்டி?”
“உங்கப்பா தான். எட்டு மாசத்துல எடுத்தது.”
“ஒரு ஜட்டி போடக் கூடாது? ஷேம் ஷேம் பப்பி ஷேம்.”
வீடே குலுங்கி ஒருமுறை சிரித்தது.
அப்பாவின் ஸ்கூல் போட்டோவைப் பார்த்ததும், எனக்கும் பிரவீணாவுக்கும் அதில் அப்பா யார் என்று கண்டுபிடிக்க சுவாரஸ்யமான போட்டி ஆரம்பித்தது. வேண்டுமென்றே ஏதோ ஒரு அப்பக்கா பையனைக் காண்பித்து இதுவா, இதுவா என்று இருவரும் அப்பாவைக் கலாய்த்தோம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேஷம் போட்ட புகைப்படத்தைக் காட்டி, “ஏம்பா, நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களூக்கு மஞ்சள் அரைத்தாயா, மாமனா மச்சானா...?! மானம்கெட்டவனே அப்படீன்னு வசனம் பேசியிருப்பியே... அத ஒருதரம் பேசிக் காட்டு” என்று இன்னும் சத்தாய்க்க, குதூகலமும் கும்மாளமும் பெருகியது.
எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப வாழ முடியாத நிமிடங்களை, கேமரா ஒரு ‘க்ளிக்'கில் சாதித்துவிடுகிறது. அவரவர்களுக்குத் தொலைத்து விட்ட நிமிடத்தில் திரும்ப வாழ்வது போல் ஒரு பிரமை.
“இது யாரு ஒரு பொண்ணு... சின்னப் பையன் கூட... பையனைப்பார்த்தா அப்பா முகம் மாதிரி தானிருக்கு!”
சட்டென்று ஒரு இறுக்கம் தழுவிற்று. தாத்தா, பாட்டி, அப்பா எல்லோர் முகத்திலும் இருள் சூழ்ந்தது. அடுத்த பக்கத்தை நகர்த்த முயன்ற அப்பாவிடம்
“யாருப்பா அது?” என்றேன் மறுபடி
“அந்தப் பையன் நாந்தான். அந்தப் பொண்ணு...” சற்றே தடுமாறி, “அது தெரிஞ்சவங்க பொண்ணு” என்று தலைகுனிந்தபடி நகர்ந்தார். பாட்டியும் தாத்தாவும் கூட சத்தமில்லாமல் நகர்ந்தனர். மனிதர்கள் பொய் பேசும் போது எவ்வளவு சகிக்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்!
என்னவோ இதில் இருக்கிறது என்று மட்டும் எனக்குத் தோன்றியது. பாட்டி இதைக் கிளியர் பண்ண சரியான ஆள் என்று எனக்குத் தெரியும். பாட்டிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தால் அவள் சென்றடைகிற இடம் அடுப்பங்கரைதான் என்றும் தெரியும்.
மெல்ல அடுப்பங்கரைக்குச் சென்றேன்.
“பாட்டி, என்ன எஸ்கேப் ஆகி இங்க வந்துட்ட?”
“ஒண்ணுமில்ல...” என்று என் பக்கம் திரும்பாமல் எரிகிற அடுப்பை என்னவோ இப்பதான் பற்ற வைக்கிறவள் போல் குச்சிகளைச் செருகியபடி இருந்தாள் பாட்டி.
“இங்க பாரு பாட்டி... கஷ்டத்தை எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுக்கக் கூடாது. கொட்டிடணும். என்கிட்ட மறைக்கலாமா நீ? நான் கேட்டா எதுவும் இல்லைன்னு சொல்ல மாட்டியே? அடுப்பைச் சீண்டினது போதும். அது எரிஞ்சுகிட்டுத் தானிருக்கு.”
சட்டென்று கண்ணில் துளிர்த்த நீர்த்துளிகளைச் சுண்டி அடுப்பு நெருப்பில் எரிந்துவிட்டு, என் கைகளை வாஞ்சையுடன் பிடித்துக் கொண்டாள். கரடுதட்டின கைகளூக்குத் தான் எத்தனை சக்து! எந்த எரிபொருளும் இல்லாமல் என்னுள் பற்றியது.
சுற்றும் முற்றும் பார்த்தபடி, சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்தாள். “அவ உனக்கு அத்தை முறை வேணும். உங்கப்பாவை விட ஏழு வயசு மூத்தவ. அத்தனை லட்சணமாயிருப்பா. மஹாலட்சுமின்னு அதனாலதான் அவளுக்குப் பேரே வெச்சோம். என்னமோ அவ தலைவிதி...” புடவைத் தலைப்பை எடுத்துக் கண்களைத் துடைத்தாள் பாட்டி.
“இப்ப எங்க இருக்காங்க?”
யாருக்குத் தெரியும்... கடவுளுக்கே வெளிச்சம் என்பது போல கைகளை மேலே உயர்த்திக் காட்டினாள்.
“அவ அழகுதான் அவளுக்கு வெனையாப் போயிடுச்சு. பொம்பளைப் புள்ள அழகாப் பொறந்துடக் கூடாதுய்யா. அது பெத்தவங்களுக்கும் கஷ்டம், அதுக்கும் கஷ்டம்.”
மூக்கைச் சிந்தி பக்கத்திலிருந்த மரத் தூணில் தடவினாள். சுருங்கிச் சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் திரண்டோடியது.
“அப்ப இங்கதான் கும்மோணம் கோர்ட்ல கிளார்க்கா வேலை பார்த்தான் சவுந்திரபாண்டியன்னு ஒருத்தன். ஆளும் ஒண்ணும் அப்பிடி லட்சணமா இருக்கமாட்டான். அவ படிக்கப் போறச்ச எப்பிடி பழக்கமாச்சோ என்ன எழவோ... அவன் கிட்ட அப்பிடி என்னத்தக் கண்டாளோ... அவனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலுல நின்னா. யாரு என்ன சாதின்னு தெரியாம, குடுக்க மாட்டேன்னு தாத்தாவும் பிடிவாதமாச் சொல்லிட்டாரு. அப்பறம் ஒரு நாளு யாருக்கும் தெரியாம அவன் கூடப் போயி சாமிமலையில தாலி கட்டிகிட்டா. உள்ளக் காலெடுத்து வெச்சா வெட்டிபுடுவேன்னு தாத்தா ஒரே சத்தம். அப்ப உங்க தாத்தா கூடப் பொறந்தவங்க ரெண்டு பேரு அவங்களும் சேர்ந்துகிட்டு அவளை உள்ளேயே விடலை.”
அடைத்துக்கொண்ட தொண்டையை ஒரு முறை செருமிச் சரிசெய்த பாட்டி, “என்னமோ அவனும் நல்லவந்தான். ரெண்டு மூணு வருஷம் இந்த ஊர்லயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடித்தனம் பண்ணினாங்க. அவன் கவர்ண்மெண்டுல வேலை செஞ்சதால அவனை அடிச்சு ஒதைக்க முடியல. அதான் அவ பண்ணின ஒரே புண்ணியம். ஒரு பொம்பிளைப் புள்ளை கூடப் பொறந்துச்சு. அப்பவும் தாத்தாவுக்கு மனசு மசியல. அப்புறம் அவளைப் பத்தித் தகவலே இல்லை. ஒரு தரம் மகாமகத்துக்கு இங்க வந்து குளிச்சுட்டுப் போனதா பாக்கியத்தம்மா வந்து சொல்லிச்சு. ரோஷக்காரி. வீட்டுப் பக்கம் காலடி எடுத்தே வைக்கலை. இப்ப எங்க இருக்கான்னே...” பாட்டியிடமிருந்து வந்த விசும்பல் நெஞ்சை என்னவோ செய்தது. “கோர்ட்லதான் வேலை பார்க்கறதாச் சொன்னீங்க. ஈசியா கண்டுபிடிச்சுடலாமே... ஒண்ணும் கம்பசித்திரமில்லையே...”
“யாரு மெனக்கிடறது? இத்தினி ஆம்பிளைங்க இப்பிடிக் கல்லு மனசோட இருக்கறச்ச, ஒத்தப் பொம்மனாட்டி என்ன பண்ண முடியும் சொல்லு?”
“அப்ப அப்பாவை மட்டும் எப்பிடி ஒண்ணும் சொல்லாம ஒத்துகிட்டார் தாத்தா?”
“அதான்...” குரலை சற்று வேகமாக உயர்த்தி, அடுப்பின் ஓரத்தில் வெளியே ஒதுங்கியிருந்த விறகை இன்னும் உள்ளே தள்ளினாள். ‘பட் பட்'டென்று வெடித்த விறகிலிருந்து நெருப்புப் பொறி பறந்து வெளியே விழுந்தது.
“அதான்யா... அதான்! ஆம்பிளைக்கு ஒரு நியாயம்; பொம்பிளைக்கு ஒரு நியாயம்! உங்கப்பன் வெவகாரம் காதுல விழுந்தப்ப என்னமோ கெரகவாட்டம்னு உங்க அப்பன் புத்தி பேதலிச்சுப் போச்சோன்னு அவன் ஜாதகத்தை எடுத்துகிட்டு ஊர் ஊரா ஜோசியனைத் தேடிகிட்டு ஓடுனாரு உங்க தாத்தா. அதுல எவனோ ஒருத்தன் சொன்னானாம்... அவன் இஷ்டத்துக்கே அனுசரிச்சுப் போகலைன்னா கொள்ளி போட உங்களுக்குப் புள்ளை இருக்கமாட்டான்னு... சரின்னு தாத்தா ஒத்துகிட்டாரு. கொள்ளி என்னா கொள்ளி...?! இதோ எரியலை அடுப்பு?!” என்று ஒரு குச்சியை எடுத்து உள்ளே செருக, முன்னைவிடத் தகதகவென எரிந்தது.
“அதுக்காக உங்கப்பனைக் குறை சொல்லலை. உங்கம்மாவும் நல்ல பொண்ணுதான். ஒரு குத்தம் குறையில்லை. ஆனா எம்மவ பண்ணுன குத்தம் என்னா? அப்பிடி என்ன கொலைபாதகம் அது?”
“கவலைப்படாதே பாட்டி. இப்பத்தானே எங்களுக்கு விபரம் தெரிஞ்சிருக்கு. எப்பிடியும் அத்தையை தேடிக் கண்டு பிடிச்சிடுவோம்.”
“பிரயோசனம்?” உதட்டைப் பிதுக்கினாள். “என்ன பிரயோசனம் சொல்லு? கரிக்கட்டையை மறுபடி விறகாக்க முடியுமா? பதினைஞ்சு இருவது வருஷம் ஆச்சு அவங்க இங்கயிருந்து போயி. என்ன இருந்தாலும், அவ மகதான் எனக்கு முதல் பேத்தி. அவளுக்கு ஒரு காதுகுத்தி, மஞ்சத் தண்ணி, ஏன்... ஒருவேளை கல்யாணம் கூட ஆகியிருக்கலாம்.
அப்பல்லாம் அவ பக்கத்துல ஒரு மக்க மனுஷா இல்லாம எப்பிடியெல்லாம் எம்மவ துடிச்சியிருப்பா? போன வாழ்க்கையும் காலமும் திரும்ப வருமா?
கேட்டா, அவ தலைவிதிம்பாங்க. அவ திமிரும்பாங்க. அது அவளுக்கு மட்டுமில்லைய்யா... பொம்பிளை ஜன்மம் மொத்தத்துக்கும் விதிக்கப்பட்டதுய்யா.
உங்கம்மாவுக்கு மட்டுமென்ன... சின்ன வயசிலேயே உங்கம்மாவைப் பெத்த பாட்டி செத்துப் போயிட்டாங்க. உங்கப்பன் கல்யாணம் பண்றதை அந்த தாத்தா ஒத்துக்கவேயில்ல. அவரு சாவுக்குப் போயி தான் உங்க மாமா உறவு உங்களுக்கெல்லாம்.
அதனாலதான் உங்கம்மாவை ஒரு சுடுசொல்லு சொன்னதில்லை நானு. அவளும் எம்மவ மாதிரிதானே. இன்னொரு தரமா அவ என் வயத்துல பொறந்துடப் போறா? நாந்தான் அவ வயித்துல பொறந்து பாவத்தை அனுபவிச்சுத் தீர்க்கணும்” கண்ணீர் பெருகி அவளது அத்தனை துக்கத்தையும் சுமந்து கொண்டு ஓடியது.
அதுவரை கையில் தொடும் போதும், கண்ணில் படும் போதும் ‘தண்'ணென்று எப்போதும் இருந்த நிழற்படங்கள் முதன்முறையாக சுட்டது.
அடுப்படி வாசலருகே நின்றபடி தாத்தா, “என்ன வடிவு... என்ன அடுப்பில் ஒரேயடியா பொகையுது?” என்றார் எரிச்சலோடு.
“ஒண்ணுமில்ல... ஈரம்... அதான் பொகையுது” கண்களைத் துடைத்துக் கொண்டாள் பாட்டி.
எனக்குப் புரிந்தது... இந்தப் புகைச்சல் யுகயுகமாய்த் தொடர்வது என்று!