அடையாளக் குரல்
இரவெல்லாம் மருத்துவமனை
மர இருக்கையின் குளிர்மை
வெறுங்கையில் தலைவைத்து
உறங்கிய என்னைப் போர்த்திக்கொண்டு இருந்தது...
குளிக்கவும்
வேறு உடுத்தவும் மறந்து
கசங்கிய காகிதமாகக்
காற்றில் படபடத்தது என்னுடல்..
ரத்தப்பொட்டிட்ட
பஞ்சுப் பிசிறுகள் நிறைந்த
குப்பைக்கூடையின் அருகில் நின்று..
ஆறியது கூட உணராமல்
புளித்திருந்த பாலை
அருந்திக் கொண்டிருந்தேன்...
பறவைகளுடன் உரையாடி
இலைகளின் அசைவை அவதானித்து
கனிகளைப் புசித்து கழிந்தன நிமிடங்கள்...
நாற்றம் என்னும் சொல்லுக்கு
நறுமணம் என்பதுதான் பொருள்
என அன்றுதான் ஏற்றுக்கொண்டேன்.
பெருநிலம் கீறி உலகின்
ஆதிமனிதன் எங்கேயென
துளைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
எல்லா சட்டைகளையும் உரித்து
எனக்குள் உறங்கிய பாசாங்கற்ற
ஆதிமனிதனை அடையாளப்படுத்திய
குரலாக ஒலித்தது
பிரசவ அறையின் வாசலில்
கிழிந்த துணியின் கதகதப்போடு
என் கரங்களில் தரப்பட்ட
என் குட்டி தேவதையின் அழுகுரல்...
- பாரதிக்குமார்
(தலைமைச் செயலக குறிஞ்சி மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>