வியாழன், 4 ஆகஸ்ட், 2022

 

பெருந்(தொ)தலைவர்



 

 

அந்த முதியவரை பத்திரமாகத்

தொலைத்து விட்டோம்..

பிரிவினைவாதிகள் பட்டியலிலோ..

தேசத்துரோகிகளுக்கான

பட்டமளிப்பு விழாவிலோ....

சாதிச் சங்க அலுவலகத்திலோ

தொலைப்பதுதான்

வழக்கமான பழக்கம்.....

 

எதிலும் சிக்காத அவரை

இருக்கும் இடத்தில் அப்படியே

கை விட்டுவிட்டு

நாங்கள் ஒவ்வொரு நபராக

தப்பித்து வந்து விட்டோம்.

.

தேடிக் கண்டடையும்

எண்ணம் எவரிடமும் இல்லாததால்

பிரதிகள் என எவரையும்

உருவாக்கிடவில்லை...

புனிதராக்கி விட்டால்

பிறகு பின்பற்றத் தேவையில்லை...

என்கிற வசதியான

கோட்பாடுகளின் கோட்டையில்

ஒளிந்து கொண்டு அவரது சிலைகளையும்..

அவர் பெயரால் சாலைகளையும்

உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்...

 

நேர்மையின் புனைகதைகள்

யாவையும் அவரது பெயரால்

வெளியிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன..

 

தெருவோரங்களில்

உற்று நோக்கிக் கொண்டிருந்த

அவர் கண்கள்

தந்த உறுத்தலில் இருந்து தப்பிக்க

ஆளுயர ரோஜா மாலைகளால் மறைத்தோம்

சான்றிதழ் பெறவும்

உரிமங்கள் பெறவும்

இன்னபிற பெறவும்

எதையேனும் கையூட்டாக தரவும் ....

இப்பொழுது சங்கடம் எதுவுமில்லை..

 

வேலை வாய்ப்புக்கான

அறிவிப்புகள் வரும் போதும்..

சிறந்த கல்லூரியில்

ஒரு இடத்துக்காகவும்

தேர்ந்த ஊழல் நிபுணர்களின் பட்டியலை

கையிலெடுத்துக் கொண்டு

நமக்கான மீட்பர்களுக்காக

வலைகளை விரிக்கிறோம் ...

 

பத்திரப்பதிவு அலுவலகத்திலோ...

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலோ

அவரைப் போன்ற தோற்றம்

கொண்டவரைக் கண்டால் பதட்டமடைகிறோம்..

 

மாபெரும் ஊழல்களுக்காக

சிரித்த முகத்துடன்

கையாட்டிச் செல்லும்

நாசக்காரர்களை

தொலைக்காட்சிகளில் காணும் போது

கண்ணீர் மல்க அவரை நினைவு கூறுகிறோம்...

 

விருதுநகர் மக்கள்

ஏனிப்படி நேர்மையாளர்களைத்

தோற்கடிக்கிறார்கள்

என்று மறக்காமல் வசை பாடுகிறோம்...

 

அவருக்கும் நமக்குமான

இடைவெளி அதிகரித்து

பெருந்தொலைவர் ஆகிவிட்டால்

ஒருநாள் கடவுள் ஆக்கிவிடுவோம்...

 

இனி ஒருவர் இதுபோல் வரமாட்டார்

என்கிற நிச்சயத்திலும் ...

வந்தாலும் வந்து விடுவாரோ

என்கிற அச்சத்திலும்

ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரை

வாழ்த்திக் கொண்டே இருக்கிறோம்....


ஜூலை 15, 2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...