வியாழன், 17 ஜூன், 2010

நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர்;

“கடவுளின் பிரதி தாய்-கடவுளின் பரிசு குழந்தை”

உலகின் அதிகபட்ச சந்தோஷக்காரர்களாக இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுவார்கள். 1.மனநிலை பிறழ்ந்தவர். 2.குழந்தைகள்.
இரண்டு பிரிவினருக்கும் கள்ளங்கபடமில்லை. இரண்டு பிரிவினருக்கும் நீண்ட காலத் துயரங்கள் இல்லை. தாங்கள் எதுவாக ஆக நினைக்கிறார்களோ அதுவாகவே நினைத்த நிமிடத்தில் நினைத்த இடத்தில் ஆக முடிந்தவர்கள்.
பிரச்சனை அவர்களுக்கு சிகிச்சையளித்து நம்மைப் போலவே மாற்ற நினைக்கும் இடத்தில் துவங்குகிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தபடியே இருக்கிறது.
தேர்வுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மாதங்கள் துவங்கியவுடனே எழுகிற பதட்டம் குழந்தைகளை விடப் பெற்றோர்களுக்கு அதிகமாகி விடுகிறது.எவ்வளவு நீளமான பட்டங்களைப் பெயர்களுக்குப் பின்னால் தாங்கி நின்றாலும் குழந்தைகளை படிக்க வைக்கிற முயற்சியில் முட்டாளாக நம்மை உணர்கிற தருணம் உறுத்தியபடியிருக்கிறது.
நாமறியாமல் நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியர், பல சமயங்களில், பல விதங்களில் குழந்தைகளை மிரட்டியபடி கர்ஜிக்கிறார்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்தோமோ அதையெல்லாம் செய்து முடித்தபின் தோல்வியில் முடிகிறது நம் பாடம் புகட்டும் பொழுதுகள். நம்மை வாகனங்களாக்கிக் குழந்தைகளை நாம் நினைத்த இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதா? அவர்களின் வழியிலேயே அவர்களைப் பயணிக்க விடுவதா? என்ற குழப்பம் ஒருநாள் விட்டு ஒருநாள் மாறி மாறி வந்து நம்மை உறங்க விடாமல் செய்கிறது.
இன்றைய பெற்றோர்கள் தலைமுறை மீது என்னதான் ஆயிரம் ஆயிரமாகக் குற்றச் சாட்டுகளை அள்ளி வீசியபடி சபித்தாலும் ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். குழந்தைகளுடனான நெருக்கத்தில் அதிகபட்ச உச்சங்களை, முன் எப்போதையும் விட கண்டிருப்பதற்கு. இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக் கூட வாசல்களில் ஐஸ் விற்பவர்களையும், மிட்டாய் விற்பவர்களையும் மட்டுமே காண முடியும். இப்போதோ குழந்தைகளை விடுவதற்கும், அழைப்பதற்கும் அக்கறையுடன் காத்திருக்கும் பெற்றோர்கள்!
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் விவாதிக்கும் ஆர்வத்துடனும், சக்திக்கு மீறிய செலவுகளால் குழந்தைகளின் திருப்தியின் எல்லை எதுவென்று தேடிய படி தவிப்புடன் இருக்கும் பெற்றோர்களை இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் காண்பதரிது.
அதன் காரணமாகவே குழந்தைகளின் மீது சுமத்தப் படுகிற பளூ அவர்களின் சக்திக்கு மீறியதாகவே இருக்கிறது. அது அவர்கள் மீது செலுத்தப் படுகிற பாசமாக இருந்தாலும், அவர்களுக்கு விதிக்கப் படுகிற பாடதிட்டங்களாக இருந்தாலும், கூடுதல் சுமையாகவே உணரப் படுகிறது.
பட்ட மேற்படிப்பை முடிக்கும் வரை இன்றைய தந்தைக்கோ தாய்க்கோ ஆன செலவைவிட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கிற குழந்தைகளுக்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை புலப்படுகிற அதே சமயத்தில், பட்டமேற்படிப்பு முடிக்கும் வரை இன்றைய பெற்றோர்கள் சந்தித்த தேர்வுகளை விட இன்றைய மூன்றாம்-நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் சந்திக்கும் தேர்வுகள் அதிகமென்பதையும் மறுத்துவிட முடியாது.
வீக்லி டெஸ்ட், ஸ்லிப் டெஸ்ட், மந்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட், மாடல் டெஸ்ட், மெயின் எக்ஸாம், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் என்று மதிப்பெண்களைத் துரத்தியபடியே நகர்கிறது நம் குழந்தைகளின் நாட்கள். இதுவும் போதாதென்று இந்தி வகுப்பு, பாட்டு கிளாஸ், டான்ஸ் க்ளாஸ், யோகா க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று வகுப்புகளின் தொகுப்பாக குழந்தைகளை சகல கலா வல்லவர்களாக்கும் முயற்சிகள்!
நம்மால் இயலாதென்று விடுபட்ட விஷயங்கள், நமக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போன வித்தைகள், நம் கனவுகளில் சதா சஞ்சரிக்கும் நம்முடைய ஆசைகளைத் திணிக்கும் பையாகக் குழந்தைகளை ஆக்குகிறோமோ என்ற கவலை நம்மைக் குற்றஞ் சாட்டியபடியே இருக்கிறது.
எல்லாமுமாகச் சேர்ந்து குழந்தைகளைக் கல்வி ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ சராசரிக்குக் கீழே தள்ளி விடுகிறது.
போதனை முறைகளையும் கற்கும் சூழல்களையும் மாற்ற முடியாதவரை நமக்குள் விழித்திருக்கும் ஆசிரியரை சற்று சாந்தப்படுத்தி சிந்திக்க விடுவதே நல்லது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

1 கருத்து:

  1. நம்மால் இயலாதென்று விடுபட்ட விஷயங்கள், நமக்குக் கிடைக்காமல் கைநழுவிப் போன வித்தைகள், நம் கனவுகளில் சதா சஞ்சரிக்கும் நம்முடைய ஆசைகளைத் திணிக்கும் பையாகக் குழந்தைகளை ஆக்குகிறோமோ என்ற கவலை நம்மைக் குற்றஞ் சாட்டியபடியே இருக்கிறது.//

    ஒரு வகையில் உண்மை. அவர்களின் சக்திக்கு மீறி சகலகலா வல்லவர்களாக்கும் போது ஏற்படும் இழப்புகள் அதிகமே. ஆனால் அதே நேரம் சில குழந்தைகள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் திறமைகளை இழந்து போகிற சாத்தியங்களும் இங்கு உண்டு. மனத்தராசு முடிவெடுக்க வேண்டும் சரியான கோணத்தில்.

    பதிலளிநீக்கு

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...