வியாழன், 17 ஜூன், 2010

தீவுகளின் திரள்;

“தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்கள், பக்கத்திலிருக்கும் இமைகளைப் பார்ப்பதில்லை”
இந்த வார்த்தைகளில் இருக்கும் நிஜம் சுட்டும் பொருள் அனேகம். உலகம் நாளுக்கு நாள் மெல்ல மெல்லச் சுருங்கி விரல் நுனியில் குவியத்தொடங்கி விட்டது. நினைத்த இடத்திலிருந்து, நினைத்த மாத்திரத்தில், யாரையும் எளிதாக செல்லிடைப் பேசிகள் மூலம் எண்களை ஒற்றித் தொடர்பு கொள்ள முடிகிறது.
கண்ணெதிரே விரியும் அலைதளத்தில், செய்திகள் இ.மெயில் சிறகில் சுகமாய்ப் பிரயாணிக்கின்றன விரைவாக...
ஏதோ ஒரு நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பந்தின் மீது படும் மட்டையின் மெல்லிய ஒலி சட்டென்று நம் காதருகே விழுந்து திடுக்கிடச் செய்கிறது சாட்டிலைட் ஒளிபரப்பின் மூலம்...
அனேகமாக தொலைபேசியில்லாத வீடுகளில்லை எந்த ஒரு நகரத்திலும்...
இருப்பினும் நகரம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று ‘அறிமுகமின்மை'. ஒருவருக்குமே தெரியாமல் ஒரு மனிதன் நகரத்தின் மையப் பகுதியில், நெரிசல் மிகுந்த வீதியில், கதவுகள் சாத்தப்பட்ட வீடொன்றில் வசித்து, சுவடில்லாமல் மறைந்துவிட முடியும். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அது மிக சாத்தியம்.
நம் முன் எழும் முக்கியமான கேள்வி ‘தொலைத் தொடர்பில் நாம் நினைத்துப் பார்த்திராத உச்சிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அருகிலிருக்கிறவரை அறிந்திருக்கிறோமா?'
இந்தியாவின் எந்த ஒரு பெயர் பெற்ற நகரத்திலும், எந்த ஒரு பிரதான அல்லது சந்தடியற்ற வீதிகளில் வசிப்பவர்களிடம் உங்களால் மெளனத்தை மட்டுமே பெற முடிந்த கேள்வியொன்றை தைரியமாகக் கேட்டுவிட முடியும். அது, ‘உங்கள் தெருவில் வசிப்பவர்கள் அனைவரின் பெயர் மட்டுமாவது உங்களுக்குத் தெரியுமா... சந்தேகத்திற்கிடமின்றி?'
கிராமங்களையும் மெல்ல மெல்ல நகரங்களாக்கி வருகிறோம். மனிதர்களை நாகரீகப் படுத்துவதில் அலாதி ஆர்வம் நமக்கு. மறுபடியும் அவர்களை ‘வெள்ளந்தியான' மனிதர்களாக மாற்ற முடியுமா சில விஷயங்களுக்காகவாவது...?
ஆனால், இவை யாவற்றுக்குமான குற்றவாளிகளென்று யாரையாவது கூண்டிலேற்றிவிட்டுத் தப்பித்தல் ஒருபோதும் தீர்வாகாது...
காரணிகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்க, அவிழ்க்க நமக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒவ்வொன்றாய்க் கலையும்.

1.வீடுகள் கிராமங்களில் உள்ளதுபோல் நெருக்கியடித்துக் கொண்டில்லாமல் தனித்தனியே விலகி பதவிசாக அமைந்திருக்கும் பொதுவான தெருக்கள் அமைப்பு.

2.வெளியேறிச் சென்று விடாமல் கண்களையும் கால்களையும் பிடித்திழுக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்...

3.கிராமவாசிகள் பெரும்பாலும் சுய தொழில் சார்ந்தவர்கள். நகரங்களில் ஏதோ ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் சூழல்களால் நேரங்களைப் பகிர்ந்தளிக்க முடியாதபடிக்கு நெருக்கடியான கால அட்டவணை.

4.கிராமங்களில் எவ்வளவு விமர்சையாக நடந்தாலும் திருமணம் போன்ற தனிமனித விழாக்கள் வீடுகளில் நடத்தப்படுவது வழக்கம். இதனால் தெருவாசிகள் ஒவ்வொருவரையும் திருமண வேலைகளில் பங்கேற்றச் செய்யும் சாதுர்யம். நகரங்களிலோ பிறந்தநாள் விழாக்கள் கூட ஒப்பந்தக்காரர்களை நம்பி மட்டுமே...

5.ஊர் நலனுக்கு ஊர் கூடி முடிவெடுக்கும் போக்கு இல்லாத நகர அமைப்பு...
இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.கொஞ்சம் கொஞ்சமாக மனித மனம் மரத்துப் போகும்படி செய்யும் வாழ்க்கை முறை நம்மை எங்கே இட்டுச் செல்கிறது? மனிதத் தீவுகள் மிதந்தபடி... சலனமற்றிருக்கிறது பிரபஞ்சம் பல சமயங்களில்.


சில உறுதிப்பாடுகள் மூலம் நம்மை நாமே நகர்த்த முடியும் எளிதாக...

1.அடிக்கடி வசிப்பிடம் மாறும் வாய்ப்பு கிடைப்பது புதிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கே என்பதைப் புரிந்து கொண்டு, நம்மை நாமே வலுக்கட்டாயமாகவாவது தெரு முழுக்க அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்-புதிதாகக் குடியேறுகையில்...

2.புன்னகையைப் பரிமாறுதல் செலவின்றி நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் தேகப்பயிற்சியல்லவா...? எதிர்ப்படுவோரிடம் புன்னகைக்க முயலுவோம்.

3.ஊர்களுக்கென்று அல்லது வட்டங்களுக்காக, குறைந்தபட்சம் தெருக்களுக்கென்று ஒரு நலச் சங்கம் அமைத்து அதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் முயற்சி சுவையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்தானே...!

4.குழந்தைகளை விளையாட்டு போன்ற தனித்திறன், அல்லது கல்வியின் பொருட்டு ஒருங்கிணைத்தல் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் நல்ல வழிகாட்டுதலாய் இருக்குமே...

5.ஒருநாளைக்கு ஒரு முறையேனும் நம் அண்டை வீட்டாருடன் பேசுவது என்று சங்கல்பமெடுத்துக் கொண்டால் மனிதர்களுக்கிடையே முளைத்திருக்கும் முட்புதர் கருகிவிடுமல்லவா? குறைந்தபட்சம் ஒரு ‘ஹலோ'...

நாம் என்ன செய்யப் போகிறோம்?

வரவேற்பறையில் பூத கணங்கள்:


‘மாடுகளும் ஆடுகளும் மேய்ந்தும் நடந்தும் செல்கின்ற புல்வெளி முற்றிலுமாய் அழிவதில்லை... மனிதன் நடக்கும் புல்வெளி ஒற்றையடிப் பாதையாகிவிடுகிறது'
பழக்கங்களுக்கு அடிமையானவன் மனிதன். அவனது அனுதினப் பழக்கங்கள் அவனை மெல்ல, மெல்ல விஷமாக்கி விடுகிறது. குடிகாரர்களில் தீவிரக் குடிகாரர்களைத் தேனீர்க் கடைகளில் நாம் கண்டுணர முடியும். நுட்பமாக யோசிக்கையில் பழக்கங்கள் நம்மைத் தேய்த்து தேய்த்து நம்மில் ஏற்படுத்தியிருக்கும் பாதை சரியானதுதானா என்று ஆராய்ந்து பார்க்கையில், எல்லாவற்றையும் மறுபரிசீலிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
சிலரது வீடுகளில் பார்வையாளர்கள் யாருமற்ற, வெளிச்சமான அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் யாராவது பேசிக்கொண்டோ, பாடிக்கொண்டோ இருக்கிறார்கள். அமைதியாக சலனமற்றுத் தெருக்கள் நீண்டு கிடக், வீடுகளுக்குள் அழையா விருந்தாளிகளாக நுழைந்த கதாபாத்திரங்கள் அழுதுகொண்டோ, விரல்களை நீட்டிக் கொக்கரித்துக் கொண்டோ இருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் நம்மிடையே புழங்கும் சுலபமான வார்த்தை ‘பழக்கமாகிவிட்டது'
ஞாயிற்றுக்கிழமை என்றொரு அற்புத தினத்தை நமக்காக... நமக்காக மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தோம். நட்புகளைப் புதுப்பிக்க, உறவுகளைக் கொண்டாட நமக்கென்று இருந்த தினம் அது ஒன்று தான். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இப்போதெல்லாம் யார் வீட்டுக்கும் சென்று விட முடியாதபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நேர இடைவெளியின்றி கண்களுக்குள் பொங்கித் ததும்புகிறது.
ஸ்பைடர் மேனிலிருந்து தலையில்லாத முண்டங்கள் வரை எல்லோர் வீட்டு வரவேற்பறைகளிலும் நமக்கு முன்னே சென்றமர்ந்து நிரம்பியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் எழுப்ப எத்தனிக்கையில், திடுமென அதனைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட ‘போதைக்காரர்கள்' நம்மிடம் மூர்க்கமாக உட்புகுந்து தடுக்கிறார்கள்.
பெண்களில் சிலர் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக கவலைப் படுவதைக் காட்டிலும், தொடர்களில் வரும் அபிமான பாத்திரங்களுக்காக அழுவதும் குமுறுவதும் அதிகரித்து விட்டது.
மைதானத்தில் கைநழுவ விட்ட ‘கேட்ச்'களுக்காக பற்களை நெறித்தபடி கோபப் படுகிற ஆண்களில் சிலர் அடுத்தடுத்து வரும் ‘மேட்ச்'களுக்காகவும், ‘கேட்ச்'களுக்காகவும் வேலைக்கு விடுப்பெடுத்து தவங்கிடக்கிறார்கள்.
கார்டூன் படங்களுக்காக ரிமோட்டைத் தர மறுக்கும் குழந்தைகள் ‘மந்திர தந்திர'த் தொடர்களில் ஓடும் தலையில்லாத முண்டங்களை மிரட்சியுடன் பார்க்கிறார்கள்.
மருமகள்களுடனும் நாத்தனார்களுடனும் விகல்பமின்றித் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தவர்கள் கூட இன்று, குரோதத்துடனும் ஒருவர் மீது பிறிதொருவர் சந்தேகத்துடனும் பார்க்கும் அளவுக்கு வில்லிகளாகவும், சதிகாரர்களாகவும் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் சித்தரிக்கப் படுகிறார்கள்.
வீட்டிற்குள் நுழைந்த போது அற்புத விளக்காகத் தோன்றிய தொலைக்காட்சிப் பெட்டிகள், தேய்க்கத் தேய்க்கப் பூதங்கள் முளைத்து விஸ்வரூபமெடுத்து நமது அறைகளை ஆக்கிரமித்து விட்டன. அவற்றுக்கு வேலை தர முடியாமலும், திருப்பியனுப்ப முடியாமலும் ‘ஹால்'வுதீன்கள் ஆகிவிட்டோம். நம்மில் சிலரை நாற்காலியிலிருந்து ‘பிய்த்து' எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்து நம்மை திடுக்கிடச் செய்கிறது.
எல்லோருக்குமே இதிலிருந்து எப்படி விடுபடுவதென்ற குழப்பம் துவங்கிவிட்டது. அதற்கான தீர்வுகளாக சிலவற்றைப் பார்ப்போம்.
1.குழந்தைகளுக்கான படிக்கும் நேரமென்றால், நமக்கும் அதுதான் படிக்கும் நேரமென்று நம்மை புத்தகங்களுக்கு ஒப்படைத்து விடலாம்.
2.குழந்தைகளின் விளையாட்டு நேரம், நமக்கும் தேகப்பயிற்சி நேரம் என்று முனைந்தால், அவர்களும் கூட நட்போடு இணையலாம்.
3.செலவுகளற்ற ‘வெளிச்செல்லல்'(பூங்கா, கோயில், நண்பர்கள் வீடு) வாரத்துக்கு ஒன்றாவது நிச்சயித்துக் கொள்ளலாம்.
4.குடும்பத்தினரை, குழந்தைகளை அழைத்துச் செல்லும் குறைந்த தூர வேலைகளுக்கு நடந்துதான் செல்லவேண்டுமென்று நமக்குள் ஓர் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.
5.சாப்பிடுவது என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் (டி.வி. இல்லாத)ஒரே இடத்திலென்று தீர்மானித்து விட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும், இறுக்கமும் கூடக் குறையலாமல்லவா?
நம்மால் இதற்கெல்லாம் சாத்தியப்படாது என்றால் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி பூதங்களைக் கொண்டு வரும் அற்புத விளக்கைத் தூக்கியெறிய வேண்டியதுதான்.
நம் கையில் ‘ரிமோட்' இருக்கும் வரை முடிவெடுப்பது எளிது. தள்ளிப் போட்டால் ரிமோட் கண்ட்ரோல்களால் நாம் இயக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

 எனது நூல்கள்                                                                       (மின்னூல்)