ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

 

மரகதப்புறா

-நெய்வேலி பாரதிக்குமார்



பேசும் புதிய சக்தி இதழ் நடத்திய எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுபெற்றச் சிறுகதை 

கி.பி. 1838 ஆம் ஆண்டு

      ல்லிவன் துரைக்காக கன்னேரிமுக்கு பெருங்கல்லு வீட்டுக்கு எதிராக கடும் சினத்துடன் காத்திருந்தான் ஆயன். வரட்டும் இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது முறுக்கிய மீசையும் திண்ணென்ற தோள்களும், தேக்கு போன்ற வலுவான கைகளும் திமிறியபடி இருந்தன. கால்வளையங்கள் கூட தேவைப்பட்டால் ஆயனுக்கு ஆயுதங்கள்தான். மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்ட வெண்கல அணிகலன்கள் விரலிலும், செவிகளிலும் பொய்யாயினும் மின்னின.

      வேலா வீடு வந்து சேர்ந்தபொழுது மழை வலுத்திருந்தது. பில்லி ஒரு நைந்து போன பழைய புடவையைத் தரையில் விரித்து அதன் மீது நடுங்கியபடி படுத்திருந்தாள்.

      “அம்மா”என்று பில்லியின் அருகில் சென்று மெலிதாகக் குரல் கொடுத்தான் வேலா. அவனை நிமிர்ந்துப் பார்த்ததும் பரவசமான பில்லி “எப்படி மழை கொட்டுது.. கொஞ்சம் ஒதுங்கி நின்னு வரக்கூடாது?” என்று கடிந்தபடி தன் முந்தானையால் வேலாவின்  தலையைத் துடைத்துவிட்டாள்.

      வேலாவின் கையில் இருந்த தொரட்டிக்கம்பை பார்த்ததும் பில்லிக்கு புரிந்துவிட்டது, ஆயனுக்குப் பதிலாக தொரட்டிக் கம்பு வந்திருக்கிறது என்று....கம்பின் நுனியில் இருந்த கவைக் குச்சியை ஆதுரமாகத் தடவினாள் பில்லி.

      “வைத்தியர் வந்தாராம்மா”

      “வர்றாரு வர்றாரு.. நமக்கும் அவரை விட்டா ஆள் இல்லே..அவருக்கும் நம்மளை விட்டா கதி இல்லே.“.

      ட்டுக்கிடையில் மழை வெய்யிலுக்கு ஒதுங்க அமைத்திருக்கும் குடில் போல தரையோடுத் தரையாக, இளஞ்சிவப்பு மலர்கள் பூத்த வாகை மரம் தன் கிளைகளை கவித்திருந்தது. ஆயன் அதன் விரிந்த இலைகளுக்கு சற்றுத்தள்ளி அதேநேரம் நேர்த்தியாகத் தன்னை மறைத்துக்கொண்டு மிக வசதியாக அமர்ந்திருந்தான். வாகை மரத்தின் இலைகளைப் பார்த்தாலே பாய்ந்து தின்னும் பவழமல்லி அன்றைக்கு எந்தச் சலனமும் இல்லாமல் அவனருகில் அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஆடுகளுக்கு பெயர் வைத்து அழைப்பதுதான் ஆயன் குடும்பத்தினரின் வழக்கம். பவழமல்லியின் தாய்ஆடு பொன்னியை சல்லிவன் துரையோட ஆட்கள் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆயனின் வசம் இருந்தது வேலாவின் தொரட்டிக்கம்புதான்., அருகில் வைத்திருந்த அந்தத் தொரட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கொக்கைச் சத்தகக் கத்தியின் கூர்மையைச் சோதிப்பதற்காக தன் ஆட்காட்டி விரலால் தடவினான். தடம் தெரியாமல் அது விரலைப் பதம் பார்க்க.. மடி பெருத்த ஆட்டுக்குட்டியின் காம்பிலிருந்து பால் துளிர்ப்பது போல மளுக்கென்று இரத்தம் வெளிவந்தது.

      சொரசொரத்த பாறைகளைப் பார்த்துவிட்டால் வேலா அப்படியே நின்று தன் குழை அறுக்கும் கத்தியை கூர் தீட்ட ஆரம்பித்துவிடுவான். ‘புல்லு கண்ட இடத்துலே வெட்டனும் கல்லு கண்ட இடத்துலே தீட்டனும்’ என்பான் அடிக்கடி.. தேக்கை விட வலிமையான தோதகத்தி மரத்தின் கழியில்தான் கொக்கைக் கத்தியைக் கட்டுவான். ’ஈட்டி செய்யற மரம்டா அது. நாம வளக்கறது வரையாடுங்க எல்லாம் பணக்கார வீட்டு செல்லப்பிள்ளைங்க மாதிரி காட்டுமரத்து இலையைத் தின்னாத்தான் பசியடங்கும் வலுவான மரத்துலதான் கழி போடனும்” என்பான் வேலா.

      வரையாடு வளர்ப்பதற்கு மலை மேல்தான் வரவேண்டும். அதுவும் பாறைகள் மேல்தான் வரையாடுகள் பெரும்பொழுது கிடக்கும். ஒவ்வொன்றும் நூறுகிலோ வரைக்கும் கூட பெருக்கும். அதனால்தான் ஆயனும் வேலாவும் காடு, மலை, பாறை என்று பார்க்காமல் ஏறிவிடுவார்கள். அடிக்கடி களவு போகிறது என்பதால்தான் பட்டியை இந்த முறை தரையிலும் போடாமல். மலையிலும் போடாமல் இடைப்பட்ட  முள்ளியில் போட்டிருந்தார்கள். அப்படியும் கண்ணயர்ந்த நேரத்தில் களவாணிகள் பொன்னியைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். சல்லிவன் துரை வீட்டில்தான் கட்டிப் போட்டிருப்பார்கள் என்று ஆயன் யூகித்தான். துரைக்கு வரையாட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்கும். நேரம் கிடைத்தால் வேட்டைக்கு கிளம்பிவிடுவான். அது தெரிந்த சல்லிவனின் எடுபிடிகள், மீந்து போகும் மதுவுக்கும் வறுத்த கறிக்கும் ஆசைப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் வரையாட்டை களவாடி வந்துவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் இருவது முப்பது ஆடுகளை வீடுகளில் இருந்தும் படிகளில் இருந்தும் திருடிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அதிகாரமும் ஆயுத பலமும் கையில் இருப்பதால் எவரும் அஞ்சுவதே இல்லை. பொன்னுசாமியின் கிடையில் இருந்து கடந்த மூன்று மாதத்தில் அஞ்சு ஆடுகளை களவாண்டு சென்று விட்டார்கள் என்று சென்ற முறை பார்த்த போது சொல்லி அழுதான். கிடை பிடிப்பதையே விட்டுவிடலாமான்னு பாக்கறேன்.. ஆனா வேற என்ன வேலை செஞ்சு வயித்தைக் கழுவரதுன்னு தெரியலையே அன்று அவன் புலம்பியபோது பாவமாக இருந்தது.

வாசல்ல நிற்கிற காவல்கார ஆளுங்க கொஞ்சம் அசரட்டும் துரையின் சங்கை அறுத்துவிடுவது என்று கருவிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.. இந்த பொணந்தின்னி இருக்கற தைரியத்துலதானே கள்ளனுக ஆட்டை அள்ளிட்டு வந்துடறானுங்க.. வேலா கூட அதெல்லாம் ஒண்ணும் பண்ணிடாதே வெள்ளைக்கார துரைங்க ரொம்ப மோசமான ஆளுக.. அத்தனை சுலபத்துல  விட்டு வைக்க மாட்டானுங்க என்று எச்சரித்தான். வீடு நிலம் எப்படி மத்தவங்களுக்கு சொத்தோ அது மாதிரிதானே ஆடும் நமக்கு.. அதெப்படி விடறது? இப்படி ஆயன் பதில் சொல்லவில்லைதான் வேலா ஊருக்கு போகட்டும் ஒரு கை பார்த்துக்கலாம் என்றுதான் அவனை அனுப்பி வைத்தான்.

      அம்மாவைப் பார்க்கத்தான் வேலா அடிவாரத்துக்கு போய் இருக்கிறான். அம்மாவுக்கு சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லை. இந்த முறை ஊருக்குப் போக வேண்டியது முறைப்படிப் பார்த்தால் ஆயன்தான். ஆனால் வேலா கிளம்பிவிட்டான். அவன்தான் எட்டுப் பிள்ளைகளில் கடைசிப் பிள்ளை. அம்மாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவன்தான் கொள்ளி வைக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் திசைக்கு இருவராகக் கிளம்பி கிடை பார்க்கிறார்கள். கிடை பார்க்க ஊர் ஊராகச் செல்லும் போது வீட்டில் உள்ளவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் குறிப்பிட்ட நாட்கள் கழித்து கிடையில் இருந்து கிளம்பி, ஊருக்கு யாராவது ஒருவர் வருவதுதான் வழக்கம் ஆனால் அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதாக ஊரில் இருந்து மாட்டுக்கிடை ஓட்டி வந்த பொன்னுசாமியை நேற்று எதேச்சையாக முள்ளியில் பார்த்தபொழுது அவன் சொன்னதால் வேலா கிளம்ப வேண்டியதாயிற்று. ஆயன் எப்பொழுதும் வைத்திருக்கும் கவைக்குச்சிக் கட்டி இருக்கும் தொரட்டியைத் தன் சார்பாக வேலாவிடம் கொடுத்துவிட்டு அவனுடைய கொக்கைத் தொரட்டியை வாங்கிக் கொண்டான். பெற்ற தாய் இறந்தாலும் கிடையை விட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரண்டு பேர் போக முடியாது. நினைக்கும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது ஆயனுக்கு.

      ஆயனின் அத்தனை கேள்விகளுக்கும் பில்லிதான் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருப்பாள். ஆயனுக்கு வலுவும் அதிகம் அறிவும் அதிகம் என்பாள் அடிக்கடி. அவளுக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதான் என்றாலும் ஒரு தோழியைப் போல அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பவன் ஆயன்.

வாகைமரத்தின் கிளையில் மரகதப்புறா ஒன்று தனது கூட்டில் குஞ்சுகளோடு உட்கார்ந்திருந்தது. அது மரகதப்புறா என்பதை பில்லிதான் ஒருமுறை அடையாளம் காட்டிச்சொன்னாள். அதன் இறகுகள் பசேலென்று மயில்தோகை நிறத்தில் இருந்தது. அம்மாவுடன் பார்த்த அன்றைக்கு அது குஞ்சுகளோடு வாய் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தது.

      “அது கொஞ்சலைடா.. பால் கொடுக்குது.. மனுசங்க மாதிரியே அதுக்கும் குஞ்சுக பொறந்தவுடனே அதுங்க தொண்டையிலே பால் சுரக்கும்.. அதைத்தான் குஞ்சுக வாய் வச்சி குடிக்குதுங்க.. குஞ்சுக தானா இரையை கொத்தி சாப்பிடற வரைக்கும் தாய்ப் பறவை தானியம் சாப்பிடாதுங்க.. தொண்டையிலே தானியம் அடைச்சிக்கிட்டா பால் சுரக்காதில்லே.. அது வரைக்கும் தாய்ப்பறவை பட்டினிதான்”

      ஆட்டுப்பாலுக்கும், வயலுக்கு உரமாகிற ஆட்டுப்புழுக்கைக்கும் கிடைக்கும் கேழ்வரகோ, கம்போ கஞ்சியாக மாறும் நாள் அவர்களுக்குத் திருவிழாதான். ஆனாலும் அம்மாவுக்கு மிச்சம் இருக்காது. எல்லா பிள்ளைகளும் சாப்பிட்ட பிறகு சட்டி வெறுமையாகத்தான் இருக்கும். தழை பறிக்கப் போகும்போது கிடைக்கும் முருங்கைக் கீரையையோ, அகத்திக் கீரையையோ கூட்டாக்கி சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவாள். ஒரு நாளாவது அவளுக்கு ஒரு குவளைக்கஞ்சியை ஆசைத்தீர குடிக்கவைத்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றுவரை நிறைவேறவேயில்லை.

      “ஏம்மா உனக்கு பில்லின்னு பேரு வச்சாங்க?”

      “அது நம்ம குலசாமி பேருடா.. என்னிக்காச்சும் ஒருநாளு உங்களை எல்லாம் அங்க கூட்டிட்டுப் போகணும்னு ஆசை.. ஆடுங்க வாலைப் பிடிச்சுக்கிட்டுத்தான் நீங்க எல்லாம் நிக்க கத்துக்குவீங்க.. உங்களுக்கு எல்லாம் நடக்க தெரிஞ்சிட்டாலே போதும் கெடைக்கு அனுப்பிடுவாரு உங்க அப்பா.. அப்புறம் எங்க கோயிலுக்குப் போறது? எட்டு பிள்ளைக... வயித்தைக் கழுவனும்லே”

ல்லிவன் துரையைப் பார்க்க நாலைந்து பேர் வந்தார்கள். வேதக்கார சாமியார் சல்லிவனிடம் வந்து நெஞ்சின் குறுக்கேயும் நெடுக்கேயும் கைகளால் ஏதோ செய்தார். அருகில் இருந்த இரண்டு பேர் துரையின் கைகளைப் பிடித்து மிகச் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லுவது போல எதையோ சொன்னார்கள். சல்லிவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பிறகு சாமியார் கைகளை முன்பக்கம் கட்டியபடி தலை குனிந்தவாறே சப்தமாக பிரார்த்தனை செய்தார்.

      உடன் வந்த பட்டு வேட்டி, பட்டுச்சட்டை, சரிகை தலைப்பாகை அணிந்த உள்ளூர் பெருந்தனக்காரர் தாத்தநாடு ஊர் தலைக்கட்டு ராமய்யா தழுதழுக்கும் குரலில் “மாட்சிமைப் பொருந்திய கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் சல்லிவன் பிரபு,..  உங்கள் உறவுகளின் இழப்பை எப்படி ஈடு செய்வது என்று புரியவேயில்லை. மேன்மை பொருந்திய தங்களது துணைவியார் மேடம் ஹென்ரிட்டா கடவுளின் கருணைப் பாதங்களில் அடைக்கலமான ஒரு வாரத்திற்குள் தங்களது மகள் ஹாரியட்டையும் இழந்துவிட்டீர்களே.. இந்த ஒத்தகமந்து மக்களுக்கும் ஊருக்கும் எத்தனையோ நல்ல காரியங்களை செய்து தந்திருக்கிறீர்கள். தாங்கள் அமைத்துத் தந்த சாலையில்தான் நாங்கள் சிறுமுகையில் இருந்து குதிரை வண்டியில் வசதியாகப் பயணித்து வந்திருக்கிறோம்”

      சல்லிவன் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

“கடவுளே ஏன் இவருக்கு இப்படி ஒரு தீராத துயரத்தைக் கொடுத்தாய்?. மாட்சிமைப் பொருந்திய பிரபு,,.. தாங்கள் வெட்டி வைத்த ஏரியின் நீரை இந்தச் சிறிய செம்பில் எடுத்து வந்திருக்கிறேன். எங்களைப் பொறுத்த வரை அது புனித நீர். அவர்களின் கல்லறைகளில் தெளியுங்கள்” சல்லிவனின் உதவியாளர் ஆர்தர் அதை வாங்கிக் கொண்டார்.  

அப்பொழுது சல்லிவனின் வயதான வளர்ப்புத்  தாயார் மார்க்கரெட் உள்ளிருந்து வெளியில் வந்தாள். வேதக்கார சாமியைப் பார்த்ததும் கண்ணீர் சடசடவெனப் பெருகியது அவளுக்கு

“சேசுவே.. எனக்கு ஏன் இப்படி ஒரு கொடுமை ஃபாதர்.. இத்தனை வயதில் நான் எதுக்கு இந்த உயிரைச் சுமக்கனும்?.. அழுகிப் போன கனி நானிருக்க.. இளம் பிஞ்சுகளை எதுக்கு எங்களிடமிருந்து பறிக்கனும்.. ”

“அவர்கள் கர்த்தரின் ஆத்மாவுக்குள் நித்திரை கொண்டார்கள். அதுதான் கர்த்தரின் விருப்பமாக இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அம்மா”

ஆயனுக்கு அவர்கள் பேசியது பெரும்பாலும் புரியவில்லை ஆனால் உணர முடிந்தது அம்மாவின் நினைவு வந்தது. ஒரு கணம் மனம் தடுமாறியது. குலசாமி கண் முன் வந்து தன் அகன்ற விழிகளை உருட்டி உருட்டி அதட்டுவது போலத் தோன்றியது. ஏற்கனவே இரண்டு இரண்டு உயிர்களை இழந்து தவிக்கும்போது எப்படி இன்னொரு பலி கொடுப்பது? தாயிருக்கையில் மகனைக் கொல்வது தர்மமா?

அம்மா பில்லி என்னை ஏன் இந்த இக்கட்டில் நிறுத்தினாய். இல்லாதப் பட்டவர்களின் கண்களுக்கு முன்னால் மட்டும் ஏன் எப்பொழுதும் நியாயத்தின் தராசு ஆடிக் கொண்டே இருக்கிறது? உலகின் மிக அதிகமான பாரம் கொண்ட கருணையை நாங்கள் மட்டும்தான் சுமந்து கொண்டே இருக்க வேண்டுமா? அம்மா பில்லி.. இரக்கத்தின் தேனடையை ஏன் சமமாக பிரித்துத் தர மறுக்கிறாய்?        

‘மே’ திடீரென்று ஒலித்த குரல் வந்த திசையைப் பார்த்தார் சல்லிவன். அங்கே பொன்னி கட்டப்பட்டிருந்தாள். கோபமான சல்லிவன் ஆங்கிலத்தில் “யார் இந்த வேலையைச் செய்தது? அதை அவிழ்த்துவிடுங்கள். மடியைப் பார்த்தால் தெரியவில்லையா? பால் கொடுக்கும் தாய் அல்லவா அது? எவ்வளவு நல்லது செய்து என்ன பயன்? எத்தனைத் தாயை, குட்டியிடமிருந்து பிரித்தேனோ இன்றைக்கு மனைவியையும் மகளையும் இழந்தேன்” மறுபடியும் அழுதார்.

ஆர்தர் பயந்து ஒடிப்போய் பொன்னியை அவிழ்த்துவிட்டான். அது ஏற்கனவே குட்டி இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டது போல பவழமல்லி இருக்கும் பக்கம் பாய்ந்து ஒடி வந்தது. சில பேருக்கு  கருணையை தண்டனைகள் வழியே பில்லி கற்பிக்கிறாள் போலிருக்கிறது.

ஆயன் வாகை மரத்தை நிமிர்ந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தான். அவன் நினைத்தது போலவே மரகதப்புறாவின் குஞ்சுகள் தாயின் அலகில் வாய்வைத்து பாலருந்தத் தொடங்கின.

ரில் தொரட்டிக்கழியைப் பிடித்தபடியே படுத்திருந்த பில்லி நினைவு தப்பினாலும் “ஆயன் இன்னுமா வரலை?” என்று வாசல் தட்டியைப் பார்த்தபடி முனகினாள். அவள் கண்களில் அவளது உயிர் பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்தது.... ஒருவேளை அடுத்த முறைக்கு ஆயன் வரட்டும் என்று காத்திருக்கிறதோ என்னவோ..?

 

     

     

.

 

              

          

             

     

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...