திங்கள், 4 செப்டம்பர், 2023


மெஸ்ஸியின் மந்திரக்காலும் உருண்டோடும் அவதூறு குப்பைகளும்

    


நெய்வேலி பாரதிக்குமார்

டந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பொள்ளாச்சியில் கொலுசு இலக்கிய இதழ் சார்பாக அதன் ஆசிரியர் அறவொளி அவர்களின் பெரு முயற்சியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிலரங்கில் ஒரு பயிற்றுனராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் முடிவில் அறிவுத் தேடல் கொண்ட, இலக்கியத் தாகம் கொண்ட நெஞ்சங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தேன். இன்னொரு புறம் உலகக் கோப்பைக் கால்பந்து ஆட்டத்தின் இறுதிப்போட்டி அன்றுதான் என்பதால் மனம் அங்கும் இங்குமாகத் தாவிக்கொண்டிருந்தது. இறுதிப் போட்டியில் மோதும் அர்ஜென்டினா பிரான்ஸ் இரண்டு அணிகளுமே கால்பந்தின் அத்தனைச் சூட்சுமங்களையும் வெளிப்படுத்தும் மகத்தான வீரர்களைக் கொண்ட அணிகள்தான் என்பதால் கூடுதலான ஈர்ப்பு என்னைப் போன்ற தீவிர கால்பந்து ரசிகர்களுக்கு இருந்தது. அதிலும் லியோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை வாய்ப்பு. அடுத்த உலகக் கோப்பை ஆட்டத்துக்கு அவரது வயது அனுமதிக்காது. பிரான்சின் இளம் வயது ஆட்டக்காரர் கிலியான் எம்பாபே இந்த உலகக் கோப்பையில் அசாத்தியமான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். நிச்சயம் இந்த இறுதிப் போட்டி யாராலும் மறக்க முடியாத ஒரு உன்னதமான ஆட்டமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இரு அணிகளும் ஏமாற்றவில்லை. பொள்ளாச்சி நிகழ்வு முடிந்து நெய்வேலிக்கு 19 ஆம் தேதி அதிகாலை நான்கரை மணிக்கு வந்தபொழுது அர்ஜென்டினா கையில் உலகக் கோப்பை இருந்தது கத்தார் அரசின் மதிப்புமிக்க அரசு உடையான பிஷ்ட்டை  மன்னர் ஷேக் தமீம் ஹமாத் கலிஃபா அல் தானி மெஸ்ஸிக்கு அணிவித்து கௌரவித்தார்.  

வழக்கம்போல ஒன்றையணா கருத்துக் கந்தசாமிகள் கறுப்பு நிற பிஷ்ட்டை அணிவித்து அவர் அர்ஜென்டினாவின் அடையாள நிறமான வெள்ளை, நீல நிறத்தை திட்டமிட்டு மறைத்துவிட்டார் என்று ஊத ஆரம்பித்துவிட்டார்கள். .பிஷ்ட் எனப்படும் கறுப்பு நிற அங்கி அரபு நாடுகளின் அரசக் குடும்பங்கள், உயர்பதவியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட விழாக்காலங்களில் மட்டும் அணியும் ஒரு கௌரவமிக்க அங்கி.. டிசம்பர் 18 ஆம் தேதி கத்தார் நாட்டின் தேசிய தினமும் கூட.. அந்த நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்ப்பளித்ததை மிகக் கௌரவமாகக் கருதுகிறார்கள். ஆகவே அதன் இறுதிப் போட்டியில் வெல்லும் அணியின் தலைவருக்கு அணிவிப்பதை அவர்கள் கலாச்சார ரீதியான மரியாதையாகக் கருதுகிறார்கள் என்று இஸ்லாமிய தத்துவத்துறைப் பேராசிரியர்  டாக்டர் முஹம்மது பெய்க் விரிவாக விளக்கமளித்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஒன்றையும் ஆக்கப்பூர்வமாக யோசித்துப் பழக்கமில்லாத மங்குனிகள் இப்படி எல்லாவற்றையும் பற்றி வாந்தி எடுப்பது உலகம் முழுக்க வழக்கமாகிவிட்டது.

லியோனல் மெஸ்ஸியே இப்படியான அவதூறு கற்களை எல்லாம் வலியோடு எதிர்கொண்டு தன் கால்களில் அல்லாடும் கால்பந்துகளை உதைத்து விளையாடுவது  போல உதைத்து உதறிவிட்டு வந்துதான் இன்றைக்கு கத்தாரில் உலகக்கோப்பை கிண்ணத்தை நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதே கத்தார் உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் அர்ஜென்டினா தோற்றபோது அர்ஜெண்டினாவின் கால்பந்து கடவுள் டிகோ மரோடனாவின் மகன் கருத்து கந்தசாமி ஜூனியர் மாரோடோனா கடுங்கோபத்துடன் “தோற்றது பைத்தியம்” என்று வசைபாடியபோது “எங்களை நம்புங்கள் நாங்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை அர்ஜென்டினா மக்களுக்கு பரிசாகத் தருவோம்” என்று  மெஸ்ஸி தன்னம்பிக்கையோடு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். சவூதி அரேபிய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அல்தாவ்சாரி சம்மர் ஷாட் கோல்-ஐ அத்தனைச் சுலபமாக எதேச்சையானது என்று சொல்ல முடியாது அது மதிப்புமிக்க கோல் என்று மெஸ்ஸி அதற்குரிய மரியாதையை அளித்தார். ஒரு திறமையாளனின் மதிப்பு இன்னொரு திறமையாளனுக்குத்தான் தெரியும். அல்தாவ்சாரி என்கிற திறமையாளனுக்கு அன்று மெஸ்ஸி அளித்த மரியாதை  இன்று அரேபியர்கள் அணியும் மதிப்புமிக்க பிஷ்ட் வழியாகத் திருப்பி அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகக்கோப்பை ஆட்டங்களில் இப்படியான அதிர்ச்சிகரமான தோல்விகள் இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்கின்றன. இதே கத்தார் உலகக்கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் பிரான்சை செனகல் அணி தோற்கடித்து அதிர்ச்சி அளித்திருக்கிறது. செனகளிடம் தோற்ற பிரான்ஸ்தான் இன்று இறுதிச்சுற்று வரை வந்திருக்கிறது. ஜப்பான் பலம் மிக்க ஜெர்மனியை தோற்கடித்தது. மொராக்கா அணி போர்ச்சுக்கல்லையும், பிரேசில் அணியை குரேஷியா அணியும் வெல்லும் என கனவில் கூட நம்பியிருக்க மாட்டார்கள். கால்பந்து வரலாற்றில் இப்படியான அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அர்ஜென்டினா கடந்த பத்தாண்டுகளில் எங்கு தோற்றாலும் மெஸ்ஸியின் தலையை உருட்டுவது ஒன்றுக்கும் பயன்படாத  உதாவாக்கரைகளின் பொழுது போக்காக இருக்கிறது.. மெஸ்ஸி அவர்களுக்கு தன் இடது காலால் பதில் சொன்னபடி இருக்கிறார்.

கடந்த உலகக் கோப்பை ஆட்டங்களில் அர்ஜென்டினா தோற்ற போதும் மற்றொரு புகழ் பெற்ற போட்டியான கோபா அமெரிக்க கோப்பைக்கான போட்டியில் சிலியிடம் தோற்றபோதும் அவதூறான  விமர்சனங்கள்  வீசப்பட்டிருக்கின்றன. கால்பந்து என்பது அணியின் ஒட்டுமொத்த திறனின் அடிப்படையில் அதன் வெற்றி தோல்வி இருக்கும் அதில் தனிப்பட்ட வீரரின் ஆட்டம் ஒரு பெரிய அதிசயத்தை எப்பொழுதும் நிகழ்த்த முடியாது. அதற்கு பெரிய உதாரணம். போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் உலகின் எந்த வீரருக்கும் சமமாக கருதப்படும் திறமைசாலி ஆனால் அவரால் போர்ச்சுக்கல் அணியை ஒட்டு மொத்தமாக தலையில் சுமந்து செல்ல முடியாது. உலக விமர்சகர்கள் யாரும் அதற்காக அவரைக் குறை சொல்வதில்லை. ஆனால் மெஸ்ஸி மீண்டும் மீண்டும் குதறப்பட்டார்.. மகத்தானவர்கள் தங்கள் பதில்களை தங்கள் செயல்பாடுகள் வழியாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கு மெஸ்ஸியும் ஒரு உதாரணம்.

இந்த ஆண்டின் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி உண்மையில் மறக்க முடியாத அற்புதமான ஆட்டம். இரண்டு அணிகளிலுமே திறமையான ஆட்டக்காரர்கள் அவர்களின் சளைக்காத போராடும் குணம்...  ஒரு பக்கம். மெஸ்ஸி என்னும் மாயாஜாலக்காரன் இன்னொரு பக்கம் பிரான்சின் கிளியன் எம்பாபே என்னும் அபாரமான மந்திரவாதி. என இறுதி ஆட்டம் உலகக் கோப்பையின் மகுடம் என்று சொல்லலாம்



முடிவைத் தெரிந்து கொண்டபிறகு ஆட்டத்தைப் பார்ப்பது சற்று அயற்சி தரும் அனுபவமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எத்தனை நேர்த்தியான ஆட்டம் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பவும் பார்க்கலாம். தனி மனித சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் இலக்கு என்கிற எம்பாபே- யின் ஆட்டம் கால்பந்து தொடக்க நிலை வீரர்களுக்கு ஒரு பாடம். உலகக் கோப்பை ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை (ஒரே நபர் ஒரு ஆட்டத்தில் மூன்று கோல் அடிப்பது) என்பது பெரும் கொண்டாட்டமான விஷயம். அதுவும் இறுதிப் போட்டியில் என்றால் எத்தனை அளப்பரிய சந்தோஷத்தைத் தரக்கூடியது. இதற்கு முன்னர் 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின்  ஜியோப் ஹர்ஸ்ட் அடித்ததுதான் இது வரையிலான சாதனையாக இருந்தது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு எம்பாபே அடித்துதான் ஹாட்ரிக் ஆனால் அதற்குப்பின்னும்  ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் ஒரு நொடியைக்கூட வீணாக்காமல்  எம்பாபே  பந்தைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது கைத்தட்டத் தோன்றுகிறது. ஒருவேளை கோப்பையை பிரான்ஸ் வென்றிருந்தால் இந்த டிசம்பர் 20 தேதி அவரது பிறந்தநாளுக்கான ஈடு இணையற்ற பரிசாக இருந்திருக்கும்.  ஆனாலும் இது ஒன்றும் பேரிழப்பில்லை அவருக்கு இப்பொழுது 23 வயதுதான் ஆகிறது. உடல்தகுதியை சரியாக பராமரித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் இல்லாமல் சென்ற உலகக்கோப்பையை பிரான்ஸ் வென்றது. அந்த அணியில் இடம்பெற்று அந்த வெற்றியின் ருசியை அனுபவித்தவர்தான். அவருடைய கொண்டாட்டங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது.

மெஸ்ஸியும் எம்பாபேவும் பிரான்சின் புகழ் பெற்ற அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மாயின் க்ளப் அணிக்காக ஒன்றாக விளையாடுபவர்கள். இந்த வினோதம் கால்பந்து விளையாட்டில் இயல்பாக நடக்கக் கூடியது. உலகக் கோப்பையில் அவரவர்கள் நாட்டுக்காக எதிர் எதிராக விளையாடுபவர்கள் அதற்குப்பிறகு வெவ்வேறு தனியார் க்ளப் அணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றாகவும் விளையாடுவார்கள். ஒரே கிளப்பைச் சேர்ந்த இருவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இடம் பெற்ற அணிகளின் தலைவர்களாக இருப்பதும் ஒரு புதுமையான செய்திதான்.

என்னுடைய பிரியத்துக்குரிய அணி பிரேசில்தான். அவர்கள் கால்பந்தை விளையாட்டாக நினைப்பதில்லை ஒரு கலையாகக் கருதுபவர்கள். அவர்களின் ஆட்டத்தில் ஒரு நளினம் இருக்கும் பந்தைக் கடத்துவதில் நேர்த்தி இருக்கும். இந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் எனக்குப் பிடித்த கோல் என்றால்  பிரேசிலின் ரிச்சல்சன் அடித்த பைசைக்கிள் கோல்தான். அற்புதமான சிலிர்க்க வைக்கும் கோல் அதே போல போலந்தின் செஸ்னி  இந்த உலகக் கோப்பையின் எனக்குப் பிடித்தமான கோல்கீப்பர் இரண்டு அபாரமான பெனால்டி கார்னர் ஷாட்களை தடுத்து எல்லோரையும் கொள்ளை கொண்டவர். . அனால் இருவருக்கும் இறுதி ஆட்டம் வரை வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு உலகக்கோப்பை ஆட்டம் மறக்க முடியாத பல அற்புதங்களை நிகழ்த்தியது என்றால் அதில் மிகையில்லை. அரை இறுதி ஆட்டம் நடந்த சமயத்தில் இனி சர்வதேச கால்பந்து ஆட்டங்களில் இருந்து ஒய்வு பெறப் போகிறேன் என்று மெஸ்ஸி அறிவித்த போது அர்ஜென்டினா மக்களைப் போல நானும் அதிர்ச்சி அடைந்தேன். அவரது நளினமான ஆட்டம் தொய்வுறாமல் அதே தரத்தில் இருந்தது. அபாரமான உடல்தகுதியும் இருக்கிறது பிறகு ஏன் இந்த மனிதர் இப்படியான முடிவை எடுத்தார் என்று யோசித்தேன் நல்லவேளையாக உலகக்கோப்பையை வென்ற கையோடு அந்த முடிவை மாற்றி இனி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருக்கிறார். உலகக்கோப்பை இறுதி ஆட்டம் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் 98வது ஆட்டம். இன்னும் இரண்டு ஆட்டங்கள் ஆடினால் நூறாவது என்கிற சாதனையை அவர் எளிதாக எட்டிவிட முடியும் என்பதை யாராவது அவருக்கு நினைவுப்படுத்தி இருக்கக்கூடும்.

வழக்கம் போல் இந்த முடிவு மாற்றத்துக்கும் யாராவது விமர்சனக் குப்பை வண்டிகளோடு காத்திருக்கலாம். அவர் பணத்தாசை மிக்கவர் அல்லது புகழ் போதை கொண்டவர் என்றெல்லாம் விமர்சிக்கலாம். மெஸ்ஸி இதையும் வழக்கம்போல தனது இடதுகாலால் இடறிவிட்டு போய்க்கொண்டே இருக்கும் காட்சியை நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் டிசம்பர் 19ஆம் தேதி புன்னைகையோடு கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.

வசையாளர்கள் எதையும் செய்யும் திராணியற்று விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திறமையாளர்கள் தங்கள் பதில்களை தங்கள் செயல்களின் வழியே தங்களுக்கான களங்களில் பதிவு செய்தபடி இருக்கிறார்கள்  .

                                                                               கொலுசு மாத இதழ் ஜனவரி 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...