ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

 

ஒரு மிடறு தேநீர் என்பது...

நெய்வேலி பாரதிக்குமார்




கணையாழி மாத இதழ் நடத்திய செண்பகம் இராமசாமி நினைவு குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற குறுநாவல் 

                              அத்தியாயம் 1

ரு மிடறு தேநீர் என்பது” இதுதான் நம்ம விளம்பரத்தோட மையமான கோல்டன் லைன்..” என்றான் திருமாறன். மூவாட்டுப்புழா ஸ்ரீதரன் சேட்டாவின் முகம் ஒன்றரை லிட்டர் ஆமணக்கு எண்ணையை அருந்தியது போல ஆனது. சேட்டா என்று சேர்த்துச் சொன்னால்தான் எல்லோருக்கும் புரியும்.. பல பேருக்கு அவர் சேட்டா.. சிலர்தான் அவரை ஸ்ரீதரன் சேட்டா என அழைப்பார்கள்.

      ”மிடறு’ அப்படிங்கற வார்த்தை ரொம்ப பழக்கமான வார்த்தையா இல்லையே” சட்டென்று மறுத்துச் சொன்னார் மூவாட்டுப்புழா ஸ்ரீதரன் சேட்டா

      ”ஆமா அதனாலதான் அந்த வார்த்தையை இங்க சொல்றோம் சார்….ஒரு புழக்கத்துல இல்லாத வார்த்தைதான்  எப்பவுமே கவனத்தை  ஈர்க்கும்  என்னோட இத்தனை வருஷ விளம்பர அனுபவத்துல சொல்றேன்

      ”ஆக்சுவலி திஸ் இஸ் குட் திங்கிங் சார்” என்றான் ஆன்டனி. திருமாறன் அவனை ஆறுதலோடு பார்த்தான்.

சிவந்த பறங்கிக்காய் முகத்தை இன்னும் அகல விரித்து சேட்டன் ”ம்..ம்.. கொஞ்சம் க்ரியேட்டிவா  சொல்லுங்க.. கலைத்தன்மையோட..” நக்கல் புன்னகை ஒன்றை வீசியபடி கேட்டார் சேட்டன்..

      இப்படியான கொந்தளிப்பு மனநிலையில் திரு எதுவும் பேச மாட்டான்.. கண்களை மூடி ஒரு கணம் தியானிப்பது போல மனதை அமைதிப்படுத்தினான். ஒரு படைப்பாளியும் ஒரு வியாபாரியும் உரையாடும் சூழல் என்பது ஒரு போதும் கடித்து விடாதே என்ற சத்தியம் வாங்கப்பட்ட  புலியும், ஆன மட்டும் விடாதே என உசுப்பிவிடப்பட்ட  சர்ப்பமும் நேருக்கு நேராக நின்று மோதுவதற்காக ஒத்திகைப் பார்ப்பது போல.. கூர் நகங்கள் கொண்ட தன்னுடைய கரங்களினால் ஒரே ஒரு அமுக்கு அமுக்கினால் போதும்.. அடிக்கக் கூட வேண்டாம். பாம்புச் சிதறல்கள் இரத்தச் சேற்றில் துடித்துக் கொண்டு கிடக்கும்.. என்ன செய்வது புலி நாவால் தன் தேகத்தை தானே நக்கிக் கொண்டிருந்தது. ஒரு டீ குடித்தால் தேவலாம் போல் இருந்தது வந்த உடனே ஒரு டீ வந்தது அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. சென்னையில் என்றால் டிஸ்கஷன் எப்பவும் ‘டீ’ஸ்கஷன் ஆகத்தான் இருக்கும்.   

      தேவாலா கிராமம் ஜன்னலுக்கு வெளியே ரம்மியமாக காட்சி அளித்தது. அறையில் பதிக்கப்பட்டிருந்த  கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது அதன் தோற்றம் இயற்கையின் தேவதை நளினமாக அமர்ந்திருப்பது போல காட்சியளித்தது. மனதை அதில் செலுத்தி சாந்தப்படுத்தினான். மனம் அடம் பிடிக்கும் அடாவடி குழந்தையைப் போல திமிறிக் கொண்டிருந்தது. மறுபடி அதைத் தோளில் இட்டுத் தூங்கப் பண்ணினான்.

      “உங்களை கசக்கிப் பிழியறேன்னு நினைக்காதீங்க.. எனக்கு கலையார்வம் எல்லாம் உண்டு நான் ஜட்ஜ் பண்ற படம் கண்டிப்பா ஓடும்” மறுபடி சீண்டியது நாகம்.

திருமாறன் முன் நகர்ந்து விவரித்தான். “அது ஒரு தேவபானம் அப்படின்னு அர்த்தம் வரணும்னு நெனச்சேன் சார்.. நம்ம படத்துல முதல் ஷாட்டுல முதல்ல வர்ற வசனம் ஒரு மிடறு தேநீர் என்பது சொர்க்கம் ..அப்படின்னு ஏதோ ஒரு அசாத்தியமான விஷயத்தை சொல்றோம். அப்படியே இந்த ஊர் அப்புறம்  எஸ்டேட்.. ஆவி பறக்கற கப் கண்களை மூடி ரசிச்சுக் குடிக்கிற யாரோ ஒரு ஆள்.. கடைசியிலே அதே வாசகம் ஒரு மிடறு தேநீர் என்பது... மார்னிங் ஸ்டார் டீ அப்படின்னு முடியும்..”

      ”ஓகே பரவாயில்லை..ஆனா ஏன் இந்த தமிழர்கள் கொஞ்சம் கிரியேட்டிவிட்டி கம்மியா இருக்காங்க?”

      ”யார் சொன்னது? நாங்க தமிழர்கள்தான் எங்களைத்தான் இப்ப விளம்பரப் படம் எடுக்க கூப்பிட்டிருக்கீங்க.“ கொஞ்சம் காட்டமாகச் சொன்னான் திருமாறன்..

      ”பட் தமிழ் ஃபிலிம் எல்லாம் அப்படி ஒண்ணும் தரமா இல்லையே”

      ”பாப்புலேஷன் எங்க அதிகமா இருக்கோ அங்க கலை இலக்கியம் எல்லாம் வியாபாரப் பொருளாகிவிடும். போன வருஷ கணக்குப்படி தமிழ்நாட்டோட  பாப்புலேஷன் 8,45 கோடி.. கேரளாவோட பாப்புலேஷன் 3.35 கோடி கிட்டத்தட்ட மூணு மடங்கு அதிகம்..அதனால பணம் புழங்கறதும் ஜாஸ்தி.. எங்கேயும் போல இங்கயும்  பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கமுடியும்னு நினைக்கிற ஆளுங்க அதிகம்.. இந்தியாவிலேயே வங்க மொழியிலதான் மிகச்சிறந்த படங்கள் எல்லாம் வந்திருக்கு.. இந்தியிலே ரொம்ப அபூர்வம்.. உலக அளவிலே ஈரானியன் ஃபிலிம், கொரியன் ஃபிலிம் பெஸ்ட்.. ஹாலிவுட் படங்கள் இல்லை  காரணம் அதேதான்”

      ”ரொம்ப சீக்கிரம் எமோஷனல் ஆயிடறீங்க திருமாறன்”

      ”ஆனா இவரோட அவுட்புட் ரொம்ப நல்லா இருக்கும் சார்” ஆண்டனி மெலிந்த குரலில் சொன்னான்

      ”சொன்னாங்க. ஓகே கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கங்க.. ஜீப் அரேஞ்ச் பண்றேன் ஓஃபிஸ் ரூம்ல மேனேஜர் அப்பச்சன் நம்பர் வாங்கிக்கங்க.. அவர் அரேஞ்ச் பண்ணுவார் அப்புறம்..” புருவத்தை உயர்த்திக் கேட்ட தொனி கொஞ்சம் தெனாவெட்டாகத்தான் இருந்தது.

      ஆண்டனி எழுந்து அவருக்கு கை குலுக்கினான். “ஓகே சார்.. நாங்க பாக்கறோம் ஒரு கம்ப்ளீட் ஸ்கிரீன் பிளே ரெடி பண்ணிட்டு வர்றோம்.. அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம்”

      ”ஒவ்வொரு முறையும் நீங்க என்னைப் பாக்கணும்னு இல்லை.. மார்க்கெட்டிங் செக்‌ஷன்ல ஜோர்ஜ் குட்டின்னு ஒருத்தர் இருக்கார் அவர் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட் மொதல்ல அவர்கிட்ட சொல்லுங்க ஃபைனல் ஸ்டேஜ்ல நாம டிஸ்கஸ் பண்ணிக்கலாம் ஓகே”

      ”ஓகே சார்” இருவரும் கிளம்பி வெளியே வந்தார்கள். மேனேஜர் நம்பர் வாங்கி அவரைத் தொடர்பு கொண்டான் ஆன்டனி

      ”ஆங்.. ஆமாம் சொன்னார் சொன்னார்..நீங்க ஓஃபீஸ்ல ஒரு வெயிட்டிங் ரூம் உண்டு.. நீங்க அவிட இருங்க நான் ஜீப் அனுப்பறேன்” சமீபத்தில் கேரளாவில் இருந்து வந்தவர் போல...

      ”ஓகே சார் தேங்க் யூ” ஃபோனை கட் செய்தான் ஆண்டனி.. சென்னையில் இருந்து நீண்டதொரு பயணம். இரவு தூக்கம் இல்லாதது எல்லாம் சேர்ந்து சோர்வு அழுத்தியது. திருமாறன் கடுப்பில் இருந்தது,முகத்தின் நெளிவு சுளிவுகளில் தெரிந்தது

      ங்கு வருவதற்காக சென்னை எக்மோர் தொடர்வண்டி நிலையத்தில் திருமாறனும் ஆண்டனியும் காத்திருந்த பொழுது திடீரென திருமாறன் கேட்டான்

      ”ஆண்டனி..இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம் எது?”

      ”என்ன திரு ஸ்கூல் பிள்ளைகளை கேட்கிற மாதிரி க்விஸ் ப்ரோக்ராம் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேக்குறே?”

      ”உனக்குத் தெரியுமா? தெரியாதா?”

      ”சில்லி கொஸ்டீன்.. சின்னப் பசங்க கூட சொல்லிடுவாங்க.. சிரபுஞ்சி”

      ”ஓகே.. அப்ப இன்னொரு சில்லி கொஸ்டீன் கேக்குறேன்.. தமிழ்நாட்டுல அதிக மழை பெய்யற இடம் எது?”

“ஓ .. மை காட்..இப்படி கஷ்டமான கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது..ஜெனரல் நாலட்ஜ்ல நான் ரொம்ப வீக்..”

திருமாறன் தலையை ஆட்டியபடி எங்கோ வெறித்தான்.

“இப்படி ஒரு கேள்வியை நான் யோசிச்சது கூட இல்லை. ஆமா அது எந்த ஊரு?”

“அங்கதான் நாம இப்ப போய்கிட்டு இருக்கோம் ஆன்டனி”

“தேவாலாவா?”

ஆமாம் என்று தலையாட்டினான் திருமாறன்

“அடப்பாவி இது தெரியாம இருந்திருக்கேனே.. அப்ப கிளைமேட் சூப்பரா இருக்கும்னு சொல்லு”

“ஆமாம் ஊட்டிக்கு பக்கத்துல இருக்கில்லே.. ஆனா மழை எப்ப வரும் எப்ப நிக்கும்னு தெரியாது..”

வெயிட்டிங் ரூம் சாவியை வாங்கிவிட்டு திரும்பி வந்த ஆண்டனி, திருவின் தோளில் கைவைத்து மிகுந்த ஆதுரத்துடன் “டேய் திரு.. அதையே நினைச்சுக்கிட்டு இருக்கியா  ஜஸ்ட் லீவ் இட் ..33 ஆட் ஃபிலிம் பண்ணிட்டோம். இந்த ஆளை மாதிரி எத்தனை பேரை பார்த்து இருக்கோம்?.. ஒரே ஒரு படம் வெளிய வந்துட்டா போதும் அப்புறம் நாமதான் ராஜா“  

”ஆன்டனி ..நீ ஒரு கேமராமேன் உன் கிட்ட அதிகம் வர மாட்டானுங்க.. காமன் மேனுக்கு அது பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது..ஆனா சினிமாவுக்கு கதை எழுதறவன், வசனம் எழுதறவன், பாட்டு எழுதறவன் நெலைமை ரொம்ப கொடுமை.. ராத்திரி பகலா யோசிச்சு மண்டையை ஒடைச்சிக்கிட்டு ஒரு கான்செப்ட் ரெடி பண்ணுவோம்.. யாராவது  ஒரு பொக்கிப் பய வந்து பெப் இல்லை இந்த சீனை தூக்குங்க அத மாத்துங்க அப்படிம்பான். அக்சப்ட் பண்ண ஒருத்தன் கூட இருக்க மாட்டான். ஆனா ரிஜக்ட் பண்ண ஆயிரம் பேரு..போற வர்ற ஜந்து எல்லாம் திருத்தம் பண்ணும்.. யோசனை சொல்லும்.. எங்க நிலைமையை யோசிச்சுப் பாரு.... காசு தர்றோம்கற திமிரு கிரியேட்டிவிட்டி இல்லையாம்.. ஆன்டனி ஒரு டீ சாப்பிடலாமா?”

இருவரும் எதிர்ப்பட்ட கடையில் டீ சொன்னார்கள்.

      திருமாறன் இன்னும் கடுப்பாக நகங்களை கடிக்கத் தொடங்கினான். ஆவி பறக்க தேநீர்த் துளி உதட்டில் பட்டது. ஒரு குளிர்ந்த காற்று சிலீரென பனித்துளியை சாரலாக வீசிவிட்டுச் சென்றது. ஆன்டனியும் திருமாறனும் சட்டென முகம் மாறி கண்கள் மூடி அதன் ஈரமொழியை உள்வாங்கினர்.

      ”செம கிளைமேட் இல்லே..ஆண்டனி..என்ஜாய் த மொமென்ட்” அதுதான் திருமாறன் சட்டென உணர்ச்சி வசப்படுவான்.. அதே வேகத்தில்  தணிந்து வெண் முயல்  போல மெத்தென உருமாற்றம் அடைவான். ஊட்டி மாதிரி அத்தனை கும்பல் இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக நபர்கள்.. ஊர் இன்னும் கெட்டு ஊசிப் போகாமல் இருந்தது. கரும்புகை தாக்காத பசுஞ்செடிகள் அப்பழுக்கற்ற குழந்தைகள் போல சிரித்துக் கொண்டிருந்தன.

                              அத்தியாயம் 2

      வர்களின் ஓய்வில்லம் மலை மேல் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டி ,ஒன்று முகட்டின் விளிம்பில் தொற்றிக் கொண்டிருப்பது போல கட்டப்பட்டிருந்தது. கேரள பாணியில் சிவப்பு கூம்புகள் வீட்டின் கூரையாக நீட்டிக் கொண்டிருந்தன. இருளை அதிகம் கரைத்து விடாத சாண்டலியர் விளக்குகள் விதம்விதமாக தொங்க விடப்பட்டிருந்தன. மர வேலைப்பாடுகள் நிரம்பியதாக இருந்தது.

      வர்க்கீஸ் வழுக்கைத் தலையுடன் தனது கட்டை மீசையின் முடிகளில் சிரிப்பை தவழ விட்டிருந்தான்

      “என்ன சாரே.. நீங்க சினிமாக்காரன்களா?”

விளக்கம் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று திரு “ஆமாம்” என்றான்.

“லாலேட்டனை வச்சி படம் எடுப்பீங்களா?”

“நாங்க தயார் அவரு ஒத்துக்கணுமே”

“அது செரி.. அது செரி”  மறுபடியும் மீசை சிரிப்பு.  

“சார்களுக்கு என்ன வேணும் என்டாலும் என்னை விளிக்கணும். ஒரு தயக்கமும் தேவையில்லை” இவன் போன வாரம் வந்திருப்பான் போலிருக்கு..

“அது மதி அது மதி” என்றான் ஆன்டனி கிண்டலாக..

“உங்களுக்கு..கேன் தண்ணி கொண்டு வந்து வச்சிருக்கேன் கொஞ்சம் பார்த்து செலவழிக்கனும் சாரே.. குடிக்கிற தண்ணி இங்க மட்டு”

“இந்த ஊர்லயா?” ஆச்சர்யமாகக் கேட்டான் ஆன்டனி.

அதற்குள் ஒரு லாரியின் அலறல் சத்தமும் ஜனங்களின் கசகச சத்தமும் ஒலித்தன. அவ்வளவுதான் பாய்ந்து ஓடினான் வர்கீஸ்..

அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். ஒரு தண்ணீர் லாரி வந்து நிற்க. மக்கள் பரபரத்து வரிசையில் இடம் பிடிக்கவும், கூட்டத்தை ஏமாற்றி கொஞ்சம் முன்னகரவும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.லாரியின் பின்புறத்தில் நெல்லியாளம் நகராட்சி என்று அவசரகால ஓவியர் தற்காலிகமாக எழுதியிருந்தது தெரிந்தது. 

“டேய் திரு..உன்னோட கூகுள் தப்பா இருக்கே..மலிவுவிலை பதிப்பா.? என்னவோ தமிழ்நாட்டிலேயே அதிக மழை பெய்யற இடம்னு சொன்னே..இங்க என்னடான்னா ஒரு குடம் தண்ணிக்கு ஒரு மைல் தூரத்துக்கு க்யூ நிக்கிது.. தண்ணி லாரி வருதுன்னு தெரிஞ்ச உடனே மீசைக்கார நண்பன் பாய்ஞ்சு ஓடறான்”

“சம்திங் ராங் ஆன்டனி.. என்ன ஒரு முரண்நகை பாரு.. இது ஒரு இன்ட்ரஸ்டிங் மேட்டர்.. உன்னோட கேமரா எடுத்துட்டு வா.. இதை ஷூட் பண்ணு.” சொன்னவுடன் ஆன்டனி அவசரமாக தன் பேக்கில் இருந்து கேமராவை எடுத்தான். இருவரும் தெருவுக்கு ஓடினார்கள்.

தெருவில் ரணகளமாக இருந்தது. ஒருவருக்கொருவர் முட்டி மோதி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியபடி குடங்களுக்கு இடம் பிடித்தனர். மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிற தீர்க்கதரிசனத்தின் மாதிரி காட்சியாகத் தெரிந்தது. எப்பொழுதும் போல வீட்டில் இருக்கும் அக்கா தங்கை அல்லது தாய் ஆகியோரை முன்வைத்து வசை மொழிகள் பரிமாறப்பட்டன. என்ன ஒரு கொடுமை.. மொத்தமாக இருநூறு குடும்பங்கள் இருக்கலாம். ஒரு குடம் தண்ணீர் எத்தனைப் பெரிய சுவரை ஒவ்வொருவருக்கும் இடையே கட்டிவிட்டது.

ஆன்டனி படம் பிடிப்பதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஆன்டனியின் ஒளிப்படக் கருவி கலைக்கண்களுடன் யாவற்றையும் தனக்குள் பதிந்து கொண்டது. அந்தச் சண்டைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாமல் தவித்தபடி ஓரமாக நிற்கும் சிறுமிகள், மூதாட்டிகள் ஏமாற்றங்களை குடத்துக்குள் நிரப்பியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் ஸ்ரீமுத்ரா யோக மையம் தண்ணீர் லாரிகள் அருகில் உள்ள சாலையில் கடந்து போய்க்கொண்டிருந்தன.

ஆன்டனி  அறைக்கு வந்த பிறகு பதிவான ஃபுட்டேஜ்களை பார்த்த திரு வியந்து போனான். ஆன்டனியிடம் ஒவ்வொரு கோணத்தையும் புட்டு புட்டு வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சின்னதாக ஒரு புள்ளியை வைத்துவிட்டால் அவன் ஒரு அற்புதமான ஓவியத்தை வரைந்து கொண்டு வந்திருப்பான். அப்படித்தான் இதுவும்..

“துயரமான விஷயம்தான் ஆன்டனி ஆனால் அந்தத் துயரத்தை ஒளியின் தூரிகைக் கொண்டு வரைந்துவிட்டாய். இயலாமையால் தனித்து நிற்கும் ஆத்மாக்களின் முகத்தில் அத்தனை பரிதாபம் என்னமோ செய்கிறது ஆன்டனி”

“எனக்கென்னவோ இதோட பின்னணியை ஆராயனும்னு தோணுது திரு..”

“ம்.. பார்ப்போம்”

வர்க்கீஸ்  திரும்பி இருந்தான்.

“தண்ணிக்கு இவ்வளவு போராட்டமா?”

“நான் இவிட வந்ததிலிருந்து மழையையே பாக்கலை சாரே.. இதுக்கு முன்ன வருஷத்துக்கு 120 நாளுக்கு குறையாம பெய்யுமாம்...இப்ப அம்பது அறுவது நாளுதான் பெய்யுதாம்”

“இங்க லோக்கல்ல எங்களுக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்ட விளக்கம் சொல்லவும் ஒரு ஆள் வேணும் வர்க்கீஸ்“

“அதெல்லாம் பிரமாதமான ஆள் உண்டு சாரே..எப்ப வரச்சொல்லட்டும்.?”

“இன்னிக்கு சாயந்திரம் வந்தாக்கூட தேவலாம்”

இருவருக்கும் தேநீர் போட்டுக்கொண்டு வந்தான் வர்க்கீஸ்

மாலையில் மிகச் சரியாக ஆறு மணிக்கு எல்லாம் ஒரு ஆள் வந்தான்

“வணக்கம் சார்.. வர்க்கீஸ் அனுப்பி வச்சார் என் பேரு மாதேஷ் குட்டன்”

“அப்பா.... கலப்படமில்லாத சுத்தமான தமிழ்”

“இங்கதான் தமிழ்நாட்டிலேயே அதிகம் மழை பெய்யுதுன்னு சொல்றாங்க.. குடிக்கிற தண்ணிக்கு இத்தனைப் போராட்டம் பண்றீங்களே”

“பேரு பெத்த பேரு நீலு தாவு லேதுன்னு வேடிக்கையா தெலுங்கு பழமொழி சொல்லுவோம்லே அது இங்க கண்ணால பாக்கலாம்.. இங்க மட்டுமில்லை அட்டி, வாழவயல்னு பல கிராமத்துல தண்ணிப்பஞ்சம் இருக்கு சார். மழை பெய்யற அளவு இங்க குறைஞ்சு வால்பாறையில அதிகம்னு சொல்றாங்க காரணம் ஏக்கர் கணக்குல காட்டை அழிச்சுதான் டீ எஸ்டேட் வர வேண்டி இருக்கு. அப்ப மழை எப்படி பெய்யும்?”

“ஒகே அது எங்களுக்கு தேவையில்லாத விஷயம். நாங்க விளம்பரப் படம் எடுக்கறதுக்காக இங்க வந்திருக்கோம் எங்களுக்கு கூட வந்து எடத்தை காமிக்கணும் சில விளக்கம் தேவைப்படற இடத்துல சொல்லணும்”

“கண்டிப்பா வர்றேன் சார்”

 

 

 

 

 

 

 

                             

 

 

அத்தியாயம் : 3

திகாலை தேவாலா வனப்பு மிக்க இளவரசி போல இருந்தாள். அவளது மூச்சுக்காற்று வரவேற்பறையில் நின்று கொண்டு பன்னீர்த் தூவும் பேரழகுப்பெண் போல மிக மென்மையாக உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த கேமராவால் வண்ணங்களையும் பேரழில் வடிவங்களையும் அள்ளிச் சுருட்டி உள்ளே போட்டுக்கொண்டிருந்தான் ஆன்டனி. இப்படி ஒரு நடைப்பயிற்சியை அவர்களது வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. மாதேஷ் குட்டனும் அவர்களுடன் உற்சாகமாக நடந்து வந்தான்.

வெள்ளை வண்ணத்திலும் சிவப்பு வண்ணத்திலும் மிக அகலமான சால்வைகளை உடல் முழுக்கப் போர்த்தியபடி, வித்தியாசமான மிகச்சிறிய ரெட்டைச் சடைகளுடன் பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். போர்வைகளில் வடிவமைக்கப்பட்டிருந்த பூ ஒவ்வொன்றும் விசித்திரமான மொழியின் வரி வடிவம் போல காட்சியளித்தது.

நடந்து கொண்டிருந்த பெண்கள் குட்டனைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து பின்னர் அவர்களது மொழியில் ஏதோ கேட்டனர். குட்டனும் கரடு முரடான உச்சரிப்பில் மிக வேகமாக பதிலளித்தான். அவர்கள் கடந்து சென்றபின் ஆன்டனி மாதேஷ் குட்டனிடம் திரும்பி மர்மமாக புன்னகைத்தான்.

“சார் அவங்கல்லாம் எனக்கு சொந்தக்காரவங்க.. எஸ்டேட் வேலைக்குப் போறவங்க நீங்க வித்தியாசமா பாக்காதீங்க”

“அது என்ன மொழி நீங்க பேசறது?”

“தொதுவா சார். நாங்க தொதுவர்கள்”

“ஓ தோடர்களா?”

“அப்படி சொல்லக் கூடாது தொதுவர்கள்தான் சரி...இப்ப வேலைக்கு போறாங்க இல்லியா வர்றதுக்கு சாயந்திரம் ஆறு ஏழு ஆயிடும்..காலையிலேயே எந்திருச்சு பள்ளிக்கூடம் போற பிள்ளைக அப்புறம் தோட்ட வேலைக்கு போற வூட்டுக்காரன் எல்லாருக்கும் சாப்புடறதுக்கு சமைச்சி வச்சிட்டுத்தான் கெளம்புவாங்க.. சம்பாதிக்கறது  எவ்வளவு தெரியுங்களா? ஒரு நாளைக்கு முப்பது கிலோ இலை பறிச்சா 275 ரூபா. அவ்வளவுதான் பறிக்க முடியும்”

“என்னய்யா அநியாயமா இருக்கு.. 12 மணி நேரம் வேலைக்கா?”

“அதிகம் கேட்டாக்கா தொடர்ந்து இலை எடுக்க மாட்டாங்க..மாசம் முப்பது நாளு கூட சில கம்பெனியில இலை எடுப்பாங்க அதனால எங்க மக்க கொடுத்ததை வாங்கிக்கிட்டு வாயைப் பொத்திக்கிட்டு இருக்குங்க”

“அந்த போர்வை எல்லாம் கலர்ஃபுல்லா இருக்கு குட்டா”

“அவங்களே செய்யறதுதான்.. வயசுல சின்ன புள்ளைக வெள்ளைக் கலர். நடுவாந்திரமா இருக்கறவங்க செவப்பு கலரு.. வயசானவங்க கருப்புக் கலர் போர்வை.. அப்படியே கரெக்டா இருக்கான்னு செக் பண்ணாதீங்க அதெல்லாம் ஒரு வழக்கம்தான். இப்பல்லாம் கைக்குக் கிடைக்கறதை போர்த்திட்டும் வருவாங்க”

 வழியில் தேங்கியிருந்த மழை நீரில் ஒரு குருவி உற்சாகமாக தலையை நனைத்து நனைத்து குளித்துக் கொண்டிருந்தது.

“தோ பாரு ஆன்டனி .. பிடி..பிடி ஷூட் பண்ணு”

ஆன்டனி அது பறந்து விடாமல் லாவகமாக கேமராவுக்குள் சிறைப்பிடித்தான்.

“அது என்ன குருவி சொல்லுங்க பாப்போம்”

“அய்யோ குட்டா அவ்வளவு நாலேட்ஜ் எல்லாம் எங்களுக்குக் கிடையாது.”

“குண்டு கரிச்சான்.. அதுல இது ஆண் பறவை தலை கழுத்து எல்லாம் கன்னங்கரேல்னு இருக்கும். வயிறு பார்த்தீங்கன்னா வெள்ளையா இருக்கும். பெண் பறவைன்னா சாம்பல் கலந்து இருக்கும்”

“எப்படி ஞாபகம் வச்சிக்கறீங்க?”

“இந்த கேமரா, போன் எல்லாம் நம்ம ஏவலாளிங்க. சார்... பொதுவா நமக்கு ஒரு ஏவலாளி இருந்தா நாம ஒரு வேலையையும் செய்ய மாட்டோம், கத்துக்க மாட்டோம் அதுக்குத்தான் அவன் இருக்கானேன்னு விட்டுடுவோம். எதையும் வெறும் கண்ணால பாக்கணும் கொஞ்சம் உத்துப் பாக்கணும் அவ்வளவுதான் நம்ம மூளை அப்புறம் மறக்காது. இந்தக் குருவியை நாங்க பாட்டுக்காரன்னு சொல்லுவோம் அழகா பாடும் சார். கேக்க தித்திப்பா இருக்கும். ஆனா ரொம்ப டென்ஷன் பார்ட்டி.. பெண் குருவி வயித்துல குஞ்சுக இருக்குன்னா கூடுகிட்ட யாரையும் அண்ட விடாது.. பதட்டமா கத்திக்கிட்டே இருக்கும்.. பாக்க பாவமா இருக்கும்”

‘”உங்க பிள்ளைங்களுக்கு காது குத்துனா குருவி அடிச்சு திம்பீங்களா?” ஆண்டனி குதர்க்கமாகக் கேட்டான்.

“சார் நாங்க எல்லாம் சுத்த சைவம் ஆடு கோழி கூட சாப்பிட மாட்டோம் விலங்குக எல்லாம் எங்க தெய்வம் மாதிரி”

“சும்மா கதை விடாதீங்க குட்டன்.. மலை மேல,.. காட்டுக்குப் பக்கத்துல  இருந்துக்கிட்டு கறி சாப்பிட மாட்டேன்னு சொல்றீங்க?”

“உண்மையில நடக்கற கதை ஒண்ணு சொல்றேன்.. கேளுங்க ஆச்சர்யமா இருக்கும். கீழ் கோத்தகிரி, கரிக்கையூர் காட்டுக்குள்ள ஒசரமான கொம்புமரம்னு  இருக்கும். அதுல பொந்துங்க இருக்கும் திடீர்னு ஒரு நாள் அந்த பொந்து மண்ணு மூடி மறைஞ்சு இருக்கும்.. ஏன் தெரியுங்களா?”

“எங்களுக்கு எப்படி தெரியும்.? உனக்குத்தான் தெரியும்”

“இருவாச்சி பறவைங்கன்னு ஒரு இனம் இருக்கு ஹெலிகாப்டர் கணக்கா பாக்க வடிவா அழகா இருக்கும். றெக்கைங்க, அலகு எல்லாமே கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும். அதுல பெண் பறவைக பேறு காலம் வந்துட்டா ஆண் பறவைங்க கூட சேர்ந்துகிட்டு இது மாதிரி கொம்பு மரத்துல பெரிசா பொந்து இருக்கான்னு தேடும்.. பெருசா கெடைச்சாலும் அதோட றெக்கைங்க பெருசு அதனால பெண் பறவைக தன்னோட றெக்கையை அலகால கொத்தி கழிச்சு விட்ரும். அப்புறம் அந்தப் பொந்துக்குள்ள போயி பெண் பறவை உக்காந்துடும். ஆண் பறவைக மண்ணு, அப்புறம் தன்னோட  எச்சிலை வச்சி பொந்தை அடைச்சிடும்.. மூச்சுவிட,  இரை குடுக்க மேல சின்னதா ஒரு ஓட்டை... கழிவு போவறதுக்கு கீழ ஒரு ஓட்டை போட்ரும்.. அப்பத்தான் பாம்பு தேளுக உள்ள போயி கடிக்காது”

“லைலா நிலைமை மாதிரி இருக்கே?”

“உண்மையிலேயே பறவைகள்லே லைலா மஜ்னு இருவாச்சிதான் சார். குஞ்சு பொறிக்கற வரைக்கும் ஆண் பறவை அலகாலேயே பழம், பல்லி, பூச்சி எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து அந்த ஓட்டை வழியா குடுக்கும். மூணு வாரமோ நாலு வாரமோ எத்தனை நாளு ஆனாலும் பெண் பறவைக ஆண் பறவையை நம்பித்தான் பொந்துக்குள்ள இருக்கும்.. றெக்கை முளைச்சப்புறமா பூசி இருக்கற மண்ணை கொத்தி ஒடைச்சுட்டு வெளியில வரும்.. தன்னோட வாழ்நாள்ல ஒரே ஒரு பெண் பறவை கூடத்தான் ஆண் பறவை வாழும். அதே மாதிரிதான் பெண் பறவையும். பொந்துக்குள்ள குஞ்சு பொறிச்சு றெக்கை மொளைக்கற வரைக்கும் ஆண் பறவையை  நம்பித்தான் உள்ள இருக்கும்...நெனச்சுப் பாருங்க அப்படி இரை தேட வந்த ஆண் பறவையை வேட்டையாடிட்டா அதை நம்பி பொந்துக்குள்ள இருக்கற பெண் பறவை, குஞ்சுக நிலைமை என்னவாகும்னு..”

திக்கென்று இருந்தது. இருவரும் அப்படியே நின்றுவிட்டார்கள்

“என்னப்பா இப்படி எங்களை யோசிக்க வச்சிட்ட? இனிமே நாங்க இலை தழையைத்தான் சாப்பிடனுமா?”

“இப்ப ஒரு டீ சாப்பிடலாமா? சூடா?” என்று திரு கேட்க எல்லோரும் சம நிலைக்கு வந்தனர்.

 “மலைப்பிரதேசத்தில் அதிகாலைப் பனியில் சாலையோரத்தில் நின்றபடி ஆவி பறக்க தேநீர் அருந்துவது எத்தனை அற்புதமானது?” திரு லயித்துப் போயிருந்தான்.

copy sir with a small change..மலைப்பிரதேசத்தில் அதிகாலைப் பனியில் சாலையோரத்தில் நின்றபடி ஆவி பறக்க தேநீர் அருந்திய பின் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகைப்பது எத்தனை அற்புதமானது?” என்றபடி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான் ஆன்டனி.

“உடல் நலத்துக்குத் தீங்கானது மற்றும் உயிரைக் கொல்லும்” என்று விளம்பரக் குரலில் திரு சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர்.

“இன்னும் கொஞ்சம் காலையிலேயே வந்தா அட்டகாசமா இருக்கும் இல்லே..” தைல வாசனை கலந்த காற்றை உள்ளிழுத்தப்படி .சொன்னான் ஆன்டனி.

“சார் அதெல்லாம் வேண்டாம் ரிஸ்க் சார். கைத்தொல்லியில் இருந்து யானைங்க எப்ப வேணுனாலும் ஊருக்குள்ள வந்துடும். அய்யன்கொல்லி, சேரங்கோடு,காபிக்காடு, கோராஞ்சல் இங்கெல்லாம் வீட்டுக்கு வீடு பட்டாசு இருக்கும் யானைங்க வந்தா வெரட்டறதுக்குன்னு வாங்கி வச்சிருப்பாங்க. எப்பன்னாலும் சொல்லுங்க நான் வந்துடறேன்”

“வனத்துறை எல்லாம் என்ன பண்றாங்க யானையை எல்லாம் வராத மாதிரி பாத்துக்க மாட்டாங்களா?”

“நாமதான் சார் அதுங்க இடத்துல வீட்டைக் கட்டி, மாட்டைக் கட்டி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் அதுங்க சொத்தைப் பிடுங்கிட்டு அதுங்களையும் தொரத்தறோம்”

“ஆன்டனி.. குட்டன் பேசறதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணி இருக்கியா?”

“இப்படி பேசுவார்னு எதிர்பார்க்கலை. அலர்ட்டா இல்லை பாஸ்”

“ரொம்ப சிந்திக்க வைக்கிறாருப்பா..” என்றான் திரு..

மூவரும் அறைக்குத் திரும்பினார்கள்..

குட்டன் அவர்கள் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மாலை வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

இருவரும் அமர்ந்து காட்சிகளை வடிவமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஜோர்ஜ் குட்டியிடமிருந்து போன் வந்தது.

“ஞான் ஜோர்ஜ் குட்டி..ஈவினிங் ஒரு ஆறு மணிக்கு ரெடியாயிட்டு இருக்கணும் ஞான் வண்டி அனுப்பி வைக்கிறேன் ஸ்ரீ முத்ரா யோகா சென்டர் வரைக்கும் போயிட்டு வரணும்”

“அங்க எதுக்கு?”

“லோககுரு விஜயானந்தா குருஜியை மீட் பண்றோம்...அவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் பாக்க முடியாது நம்ம எம்டி அவரை மீட் பண்றார். அது சமயம் நீங்களும் இருக்கணும்னு எம்டி சொன்னாரு”

“அப்படிங்களா சரி”

அவ்வளவுதான் தொடர்பு கட்டானது. எப்படி திமிராக இருப்பது என்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது இடம் வசதி எப்படி இருக்கிறது? சாப்பாடு ஓகேவா எதுவும் கேட்கவில்லை..

“ஆன்டனி.. சாயந்திரம் அங்க போறதுக்குள்ள நாம டீ எஸ்டேட்டுக்கு போயிட்டு வந்துடுவோம்”

“ஏன் அவ்வளவு அவசரம்.. நமக்குத்தான் டைம் இருக்கே.. இன்னொரு நாள் பாக்கறது..

“இல்லை ஆன்டனி அந்த யோகா மாஸ்டரை ஏன் ஸ்ரீதரன் சேட்டா பாக்கறாரு. அதுக்கு நம்மளை ஏன் கூப்படனும்? சம்திங் ராங்க். நாம அதுக்கு முன்னாடி சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்”

“ஒகே மதியம் சாப்பிட்டுட்டுப் போகலாம்.”

 

.   

     

       

 

 

 

 

 

 

                        அத்தியாயம் 4

மார்னிங் ஸ்டார் டீ தொழிற்சாலைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது மணி நான்காகிவிட்டது. வளாகமெங்கும் அழகுக்காக சில்வர் ஓக் மரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இன்னும் பெயர் தெரியாத மண்ணுக்கு அன்னியமான பெயர் தெரியாத பல மரங்களும் குரோட்டன்ஸ் செடிகளும் நிரம்பி இருந்தன. எப்பவும் போல எதற்கும் இருக்கட்டும் என்று எல்லாவற்றையும் ஒளிப்படக் கருவியில் காணொளியாக பதிவு செய்து கொண்டே வந்தான்.

 வாசலில் தலையில் மூட்டைகளைச் சுமந்தபடி வரிசையில் ஆணும் பெண்ணுமாக நின்றிருந்தார்கள். அவர்கள் முதலில் எடை மிஷினில் வைத்து தங்கள் மூட்டைகளின் எடையை நிறுத்தி பெறப்பட்ட சீட்டைப் பத்திரமாக வைத்துக் கொண்டனர் அதன் பிறகு இலைகளின் ஈரத்தை உறிஞ்சும் விதரிங் பிராஸசுக்காக இலைகளைக் கொட்டினர். இலைகள் நகர்ந்தன. மேனேஜர் போன்ற ஒருவர் வந்து அவர்களது எடைச் சீட்டை வாங்கி முத்திரை இட்டு தந்தார்.

அவரிடம் சென்ற திருமாறன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“சார் நான் திருமாறன். ஆட் ஃபிலிம் பண்றேன். இப்ப நம்ம கம்பெனி டீத்தூளுக்கு விளம்பரப் படம் எடுக்க வந்திருக்கோம்..பேக்டரியை சுத்தி பாக்கணும். அப்பத்தான் ஒரு ஐடியா கிடைக்கும்.”

“ஓ அப்படியா நான் சசிதரன் ஃப்ளோர் மேனேஜர்.. தாராளமா பாக்கலாம் இந்த டிரஃபட்லேர்ந்து டிரையர்க்கு போகும் அப்புறம் பவுடர் ஆக்குவோம் அதுக்குப் பிறகு கிரேட் பிரிக்கப் போயிடும்”

“ஊலாங் டீ, வொயிட் டீ அப்படின்னு எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனா அது எப்படின்னு தெரியாது”

“ஊலாங் டீன்னா சைனீஸ் மெத்தேட் கிரீன் டீ சார். நம்ம கிரீன் டீ கொஞ்சம் கசக்கும். ஊலாங் டீ அந்த கசப்பை எடுக்கறதுக்குன்னு ஒரு பிராசஸ் பண்ணுவோம். வொயிட் டீ அப்படீங்கறது கொழுந்து தேயிலையை பொடியாக்கி தூளாக்குறது சாதா டீத்தூளை  இலையிலேர்ந்து தயாரிப்போம்.. கொழுந்து டீத்தூள் காஸ்ட்லி. ஏன்னா ஒரு நாள் காலையிலேர்ந்து சாயந்திரம் வரைக்கும் ஒரு ஆளு முப்பது கிலோ இலைப் பறிக்க முடியும். ஆனா அதே ஆள் ஒரு நாளைக்கு ஒரு கிலோ கொழுந்துதான் பறிப்பார்”

“முப்பது கிலோ இலை பறிச்சா எவ்வளவு சம்பளம் தருவீங்க? ஒரு கிலோ கொழுந்து பறிச்சா எவ்வளவு சம்பளம்?”

“முப்பது கிலோ பறிக்க 275 ரூபா சார் ஒரு கிலோ கொழுந்துன்னா.. சார் கேமராவை ஆஃப் பண்ணுங்க இதை எல்லாம் எதுக்கு ரெக்கார்ட் பண்றீங்க? ஆட் ஃபிலிம் பண்றீங்களா? இல்லை பிராங்க் பண்றீங்களா?”

“அதெல்லாம் இல்லை சார் விலை ஏன் வித்தியாசம்னு தெரியனும்லே”

“நீங்க மிச்சத்தை நாளைக்கு ஜோர்ஜ் குட்டியோட வந்து எடுத்துக்கங்க. இப்ப கிளம்புங்க” முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு சொன்னான் சசிதரன்.

“ஓகே சார்” என்று கிளம்பினார்கள் ஆனால் ஆன்டனி கேமராவை ஆஃப் செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல் எப்படி எடுக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். பறந்து விரிந்த அந்தத் தொழிற்சாலை ஆக்கிரமித்திருந்த இடம் பல ஏக்கர் கணக்கில் இருக்கும் இதே போன்று ஊட்டி குன்னூர் பகுதிகளில் மொத்தம் ஐந்து இடங்களில் சேட்டனுக்கு எஸ்டேட்கள் இருகின்றன.. அவரது மனைவி, மருமகன் பெயர்களில் அவற்றை நடத்தி வருகிறார் என்று தெரியும். தெரியாமல் இன்னும் சில இடங்களை அவர் கெஸ்ட் ஹவுஸ், ரிசார்ட், ஹோட்டல்கள் என்று காட்டை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி ஆக்கிரமித்து இருந்தார்.

எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஏதோ மோட்டார் இயங்கும் கொடூர சத்தம் கேட்டது. இருவரும் தொழிற்சாலையை விட்டு வெளியே வந்து, சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தார்கள். திருமாறன் போனை எடுத்து குட்டனுக்கு பேசினான்.

“குட்டன் நாங்க இப்ப ஸ்ரீதரன் சேட்டா ஃபேக்டரிக்குப் பக்கத்துல இருக்கோம்/ அங்க வர முடியுமா?”

அவன் வருவதாகச் சொன்னதும் போனை கட் செய்தான்.

“அவன் எதுக்கு இப்ப திரு?”

“இருக்கட்டும் ஆன்டனி..உள்ளூர் காரன் ஒருத்தன் பக்கத்துல இருக்கறது நல்லது. அனேகமா அங்க மரம் வெட்டறாங்கன்னு நெனைக்கிறேன். போய் பார்ப்போம்”

சிறிது நேரத்தில் அங்கு மாதேஷ் குட்டன் வந்து சேர்ந்தான். அவர்கள் சத்தம் வந்த இடத்துக்கு சென்றார்கள். அவர்கள் கணித்தது போலவே கையடக்க மரம் அறுக்கும் கருவி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கிளைகளை முதலில் வெட்டி பிறகு மரத்தை வேரோடு சாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சார்.. எல்லாம் அபூர்வமான மரங்க.. வெண் அகில், ஈட்டி மரம், வேங்கை, தோதகத்தி மரங்கள் சார்.. அய்யோ அது நாவல் மரம் அது எங்க தெய்வம் சார் நாங்க அதை நகத்தால கூட கீற மாட்டோம்”

அந்தோணி வாயில் விரல் வைத்து’ உஷ்’ என்று அவனை எச்சரித்து விட்டு அப்படியே எல்லாவற்றையும் படம் பிடித்தான். அவர்கள் எந்த அச்சமுமின்றி தொடர்ந்து தங்கள் பணிகளை செய்தபடி இருந்தனர். ஸ்ரீமுக்தா யோக மைய வாகனங்கள் துண்டாடப்பட்ட கிளைகளை ஏற்றிக் கொண்டிருந்தன.

“நாங்க கும்புடற கம்பட்ராயன் இவங்களை எல்லாம் சும்மாவே விடமாட்டார் சார் எங்க சொந்தங்களுக்குத் தெரிஞ்சா சாமிகிட்ட ஒரு வேண்டுதல் பூசை நடத்திடுவாங்க.. அவ்வளவுதான் இவங்க” என்று புலம்பினான் குட்டன்.

“குட்டா இப்ப கொஞ்சம் சத்தம் போடாம இரு. ஒரு நாள் உன்னை தனியா வச்சு ஷூட் பண்றேன் அப்ப எல்லாத்தையும் விவரமா சொல்லு.”

ரொம்ப நேரம் கழித்து அதிலருந்த ஒரு ஆள் “யாருங்க நீங்க என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்ப படம் புடிக்கறீங்க?”

“சும்மா சார் மரம் வெட்டுவது எப்படின்னு ஒரு டாக்குமெண்டரி எடுக்கறோம் அதுக்காக எடுக்கறோம்”

“எடுத்த வரைக்கும் போதும் கிளம்புங்க.. கிளம்புங்க... காண்ட்ராக்டர் வந்தா சத்தம் போடுவார். போங்க போங்க “

“ஒகே சார் ரொம்ப நன்றி” ஆன்டனி கிண்டல் செய்வது தெரியாதபடி நக்கல் செய்வதில் சமர்த்தன்.

“ஒரு டீ சாப்பிடலாமா குட்டன்?”

“இங்க ஒரு அருமையான டீக்கடை இருக்கு வாங்க சார் சாப்பிடலாம்”

 

.  

 

  

 

 

 

 

 

 

 

                        அத்தியாயம் 5

லோககுரு விஜயானந்த குருஜியின் கண்கள், பற்கள் தவிர முகத்தின் பெரும்பாலான இடங்களில் நரைத்த முடி பரவலாக முளைத்திருந்தது’

“நீங்க என்னோட சத்சங்கம் ஏதாவது வந்திருக்கீங்களா?”

“இல்லை குருஜி ஆனா உங்க மகளோட திருமண நிகழ்ச்சியை லைவ்வா டிவியிலே பார்த்திருக்கோம். பயங்கர கிராண்ட்ஆக பண்ணி இருந்தீங்க”

சிலிங்கென்று உடைபடும் சப்தம் கேட்டது. இருந்தாலும் குருஜி சமாளித்துக் கொண்டு தனது முத்திரைச் சிரிப்பை உதிர்த்தார். அதற்குள் டீ எடுத்து வந்து அவர்களுக்கு பரிமாறினாள் ஒரு சிஷ்யை. வயது மிஞ்சிப்போனால் இருபத்தி ஐந்து இருக்கலாம். அதற்குள் துறவி ஆகியிருந்தாள். முகத்தில் ஏதோ ஒரு சோகம் அப்பியிருந்தது.

“இது வொயிட் டீ சாப்பிடுங்க நம்ம சேட்டனோட கம்பெனி பிராண்ட்” என்று குதுகலாமாக சிரிக்க.. சேட்டன் முகம் முழுக்க சிரித்தார்.

“ஆசிரமம் முழுக்க உங்க பிராண்ட்தான்” சேட்டன் எழுந்து தன் பணிவான வணக்கம் ஒன்றை செலுத்தினார்.

“அப்புறம் சேட்டன்.. வர்ற பிப்ரவரி மாசம் வேட்டைக்கொருமகன் கோவில் தேர் திருவிழா வருது இல்லையா..இந்த ஊரு மக்கள் அதுக்காக ஆசிரமம் மூலமா சில விஷயங்களை நடத்தித் தரணும்னு வந்து கேட்டாங்க. சிங்காரி மேளம், நாதஸ்வரம், பூக்காவடியாட்டம், காரமடை மேளம், ஆதிவாசி மேளம், தோடர் நடனம், அம்மன்குடம், செண்டைமேளம், தாலபொலியோட தேர் ஊர்வலம் எல்லாம் நடத்தனும்னு அவங்களுக்கு ஆசை. நடத்திடுவோம்னு சொல்லிட்டேன்:

“ஆஹா பரந்த மனசு உங்களுக்கு”

மறுபடியும் ஒரு நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

“அந்த அருமையான நாளில் நமது விசுத்தி மூலிகை தேநீர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அன்றைக்கே அது வெளி உலகிற்கு விற்பனைக்கும் வந்து விடும். உங்கள் நிறுவனம் வழியாக.. விரைவில் ஆசிரம அருள் தொண்டர்கள் அதற்கான தயாரிப்பு ரகசியங்களை உங்கள் பணியாளர்களுக்கு கற்றுத்தருவார்கள்”

“எங்கள் பாக்கியம் குருஜி”

“விசுத்தி என்றால் உங்களுக்குத் தெரியுமா?”

“தியானத்தின் ஒரு நிலை அப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்றான் திரு.

“அது தொண்டைக்குழியில் இருக்கும் உன்னத சக்கரம். மூலாதாரத்தில் எழுப்பப்பட்ட சக்தி நிலை மெல்ல மேலேறி விசுத்திக்கு வந்து ஆக்ஞையில் நிலை கொள்ளும். அதுவே ஞான நிலை. பிறகு சஹஸ்ரஹாரம் அது எல்லோருக்கும் வாய்க்காது அத்தனை சுலபமில்லை. நாம் நினைத்தால் உணவு விஷமாக இறங்கினால் அதை விசுத்தியிலேயே நிறுத்திவிட முடியும். நாம் அறிமுகப் படுத்தும் மூலிகைத் தேநீர் அப்படியான சக்தி தூண்டப்பட்ட இலைகளில் தயாரிக்கப்பட்டது”

“அதற்காகத்தான் மற்ற தூள்கள் தயாரிக்கும் இடத்தை விட்டு தனியாக இதற்கு மட்டும் ஒரு தயாரிப்பு நிலையத்தை கட்டுகிறோம் குருஜி”

“அது மிக மிக நல்லது சேட்டா”

“ஓ அதுக்காகத்தான் நம்ம ஃபேக்டரிக்குபக்கத்துல மரம் எல்லாம் வெட்றாங்களா?”

“அதுக்கு இணையாக மரங்களை ஆசிரமம் நட்டுவிடும்”

“ஆனா எல்லாம் சில்வர் ஓக் மாதிரி வெளிநாட்டு மரங்கள் நட்டிருக்கார் நம்ம சேட்டா ஃபேக்டரிக்குள்ள..”

“எல்லாம் உயிர்தானே“ மறுபடியும் சிரித்தார் குருஜி.

“குருஜி உங்களிடம் ஒண்ணு கேக்கலாமா?” ஆன்டனி மிகப்பணிவாக குரலை வைத்துக்கொண்டு கேட்டான்.

“அதுக்குத்தானே உங்களை இங்க வரச்சொன்னேன். குருஜியோட வார்த்தை ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அர்த்தம்.. கவனமா கேட்டுக்கங்க”

“ஏன் குருஜி எல்லா குருமார்களும் இது போல இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களில் மட்டும் ஆசிரமம் அமைக்கிறீர்கள். வேலூர், இராமநாதபுரம் மாதிரி வறண்ட, வெயில் கொளுத்தும் சமவெளிகளில் ஆசிரமங்கள் வைப்பதில்லை. சக்தி நிலை அங்கெல்லாம் தூண்டப்படாதா?”

ஒரு கணம் அவனையே உற்றுப்பார்த்தார் பிறகு “ உன் பெயர் என்ன?”

“ஆன்டனி குருஜி”

இன்னும் பகபகவென உரக்கச் சிரித்தார். பிறகு சேட்டனை குறும்பாகப் பார்த்தார். அவர் தலையை ஆட்டிக்கொண்டு “புரியுது குருஜி” என்க அவ்வளவுதான் என்று கையசைக்கிறார் குருஜி.

“சரி நீங்க கெஸ்ட் ஹவுஸ் போங்க. டிரைவர்கிட்ட சொல்றேன் நான் சுவாமிஜிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன்” என்றார் சேட்டா. இருவரும் எழுந்து கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினார்கள்.

                        அத்தியாயம் 6

றைக்குள் வந்ததும் திருமாறன் ”ஆன்டனி நாம இப்ப விளம்பரப்படம் எடுக்கப்போறது இல்லை டாக்குமெண்டரி எடுக்கப்போறோம்.. குட்டப்பனை வரச் சொல்லுவோம் அவன் ஏற்கனவே பேசுன விஷயங்கள் எல்லாத்தையும் திரும்பப் பேச வச்சி எடுப்போம்.. சே..இந்த போலிச்சாமியார் பேசினதை ரெக்கார்ட் பண்ணாம விட்டுட்டமே”

“நான் மொபைல்ல வீடியோவா ரெக்கார்ட் பண்ணி இருக்கேன் அது போதும்னு நினைக்கிறேன்” போனை எடுத்து அதை ப்ளே செய்கிறான். அத்தனையும் பதிவாகி இருந்தது. குட்டப்பனை உடனே வரச்சொல்லுகிறான்

“சூப்பர்டா..இது போதும்.. அக்கிரமம் பிடிச்சவனுங்க காட்டை அநியாயமா திருடித் திங்கறானுங்க அதுக்கு ஆயிரம் அயோக்கியத்தனமான பேரு..”

மழை வருவதற்கான அறிகுறி தெரிந்ததே ஒழிய வானம் சற்று இருண்டு பிறகு புரண்டு வெளிச்சமானது. வீசிய சாரல் மழையின் முன்னறிவிப்பு என்று நினைத்தால் அது வெடிக்காத பட்டாசு போல சிறு பொறியை மட்டும் சிந்திவிட்டு அணைந்துபோனது.

குட்டப்பன் வீடியோ கேமரா முன் நின்ற போது

“இதோ பாரு குட்டப்பா நீ என்ன சொல்லனும்னு நினைக்கறியோ அதை எல்லாம் சொல்லு. எதை வேணாம்னு நினைக்கறியோ அதை விட்டுடு நாங்க ஸ்க்ரிப்ட்ல பாத்துக்கறோம் உனக்கு எதுவும் ஆயிடக்கூடாது”

“ஒண்ணும் பயமில்ல சார்..” என்று பேசத் தொடங்கினான்.

“நாவல் பழம்கறது நாங்க கடவுளோட கனின்னு சொல்லுவோம். விநாயகர் விரும்புற பழம். கருநீல நிறம் கொண்ட கிருஷ்ணரின் கனி. எங்க குலசாமி கம்புட்ராயன் குடிகொண்ட மரம். எங்க குல கல்யாணத்துல மணப்பெண் நாவல் மரத்தடியில நெய் விளக்கேற்றி மணமகனுக்காக காத்துக்கிட்டு இருப்பா. காட்டுக்குள்ள இருக்கற செடியில வில் அம்பு செஞ்சுகிட்டு மாப்பிள்ளை அந்த இடத்துக்கு வருவாரு. அந்த வில் அம்பை நெய்விளக்குக்கு முன்னால வச்சி கும்பிடுவோம் அப்பத்தான் எங்க வாழ்க்கை நல்லா இருக்கும். இது எங்க திருமணச் சடங்கு அப்படிப்பட்ட நாவல் மரத்தை படுபாவிக அடியோட வெட்டி எலும்பை ஒடைச்சி சடலமா வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போறப்போ.. என் உயிரே போயிடுச்சுங்க..”

“சரி நாவல் மரத்தை மட்டும் விட்டுட்டு மத்த மரத்தை வெட்டுனா உங்களுக்கு பிரச்சினை இல்லையே”

“எந்த மரமா இருந்தா என்ன உசிருதானே” சாமியார் சொன்ன உயிர்தானேவுக்கும் குட்டப்பன் சொன்ன ‘உசிர்’தானேவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது. 

“ஆனா உங்க ஊரு மக்கள் பலருக்கும் வாழ்வாதாரமா இருக்கறது தேயிலைத் தோட்டம்தானே .. அதுக்காகத்தானே மரத்தை வெட்டி ஃபேக்டரி கட்டப் போறாங்க?”

“மனுஷன் வாழ நானூறு சதுர அடி எடமும் போதும் நாலாயிரம் சதுர அடியும் போதும். எங்க கட்டறோம் அப்படிங்கறதுலதான் இருக்கு. ஆஸ்பத்திரியை இடிச்சுட்டு அப்பார்ட்மென்ட் கட்டுவீங்களா? இது எங்க ஆஸ்பத்திரிங்க அதைத்தான் மொள்ள மொள்ள இடிக்கறீங்க.. தேயிலை தயாரிக்கறதை குடிசைத் தொழில் மாதிரி சின்னதா நடத்தனும் அப்பத்தான் காடும் வாழும் நாடும் வாழும்”

“புரியலை குட்டப்பன்”

“எங்க சனங்கக்கிட்ட மட்டும் தயாரிக்கற  உரிமையை குடுங்க. கூட்டுறவா தொழில் பண்ணி நாங்க எங்களையும் காப்பத்திக்கவோம்.. காட்டையும் காப்பாத்திக்குவோம். நேத்திக்குச் சொன்னனே இருவாச்சி பறவை அதை வேடன் அழிச்சாத்தான் உண்டா.. இன்னிக்கு பாத்தமே அந்த அக்கிரமக்காரவங்க வெட்டுன மரத்துப் பொந்துல பெண் பறவையும் குஞ்சுகளும் இருந்திருந்தா..? யோசிச்சுப் பாருங்க.. இருவாச்சி பறவைங்க பழத்தைத் தின்னு போடற கொட்டைதான் வனமா மாறி இருக்குங்க.. உங்களால ஒரு காட்டை கட்ட முடியுமா? ஆனா ரெண்டு இருவாச்சி பறவை நினைச்சா சின்ன காட்டை கட்டிடும்ங்க”

பார்க்க படிக்காதவன் போலிருக்கும் குட்டப்பன் அறிவுதான் எத்தனை விசாலமானது.. எத்தனை நுட்பமானது எத்தனை அறம் மிக்கது.. வியந்து போனான் திரு..

“சரியா பேசியிருக்கேனா சார்?”

“குட்டப்பா நீங்கதான் நிஜமான குரு உங்களைத்தான் இந்த ஜனம் கவனிக்கணும் சொல்றதை கேக்கணும். முடி வளர்த்தவன் எல்லாம் இங்க ஞான குரு யோகா பண்றவன் எல்லாம் ஆன்மீக குருன்னு ஆனதுதான் மகா கொடுமை”

“இதை என்ன சார் பண்ணுவீங்க”

“என்ன பண்ணுவோம்னு சொல்றதைவிட இதைத்தான் நாங்க பண்ணனும் சொல்லுவேன்.. இது கலை இல்லை எங்க கடமை.. ஊதுற சங்கை ஊதி வைப்போம் உறைக்கறவனுக்கு உறைக்கட்டும்”

“அதுக்குள்ளே விசுத்தி மூலிகை டீ நாடு பூரா பரவிடுமே”

“விஷம் வெரசாத்தான் பரவும்.. ‘மிடறு’ன்னாலும் தொண்டைக்குழிதான்.. பார்ப்போம் நம்மால முடிஞ்சதை நாம செய்றதும் ஒரு வகையில தியானம்தான் யோகம்தான்..”

“ஒரு டீ சாப்பிடுவோமா சார்” என்றான் குட்டப்பன்

திரு யோசித்தான் “காசிக்குப் போனா எதையாவது விடணும்னு சொல்லுவாங்க இல்லே அது போல தேவாலா வந்து டீயை விட்டுட்டேன்.. ஆனா டெம்பரவரியாத்தான் இந்தப் படம் வெளியில வந்து அதன் மூலம் ஏதாச்சும் நல்லது நடந்தா அப்புறம் சாப்பிடலாம் ஒரு டீ”

“படத்தோட கடைசியில அதே வரிதானே வைக்கறோம்”

“ஆமாம்

ஒரு மிடறு தேநீர் என்பது.. நீங்கள் அழித்துக் கொண்டிருக்கும் வனம்..”

         

 

   

  

 

. 

 

 

  

   

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...