ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

 

44

-நெய்வேலி பாரதிக்குமார்


எழுத்தாளர் இராம .செ. சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2023) சிறந்த  கதைகளில் ஒன்றாகத் தேர்வானச் சிறுகதை 

முதல் நாள்





னிப்பள்ளத்தின் உள்ளே சுருண்டு கிடந்த தமிழ்ச்செல்வனின் மீது பனித்துகள்கள் பன்னீர் மரத்திலிருந்து மலர்கள் விழுவது போல காற்றின் வீச்சில் பரவிப் படர்ந்தன. சிறுவயதில் மரப்பொந்துகளிலோ நெல்மணிகள் கொட்டி வைத்திருக்கும் குதிர்களின் பின்னோ ஒளிந்து கொண்டு யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க ’கடவுளே முருகா..முருகா’ என்று கண்மூடி, கை கோர்த்து பிரார்த்திக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது. இப்பொழுது யாராவது தன்னைக் கண்டுபிடிக்க வேண்டுமே என பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.

ஐந்தரை அடி உருவத்தை மூணே முக்கால் அடி இடத்துக்குள் சுருக்குவது நரக வேதனையாக இருந்தது. சக வீர்ர்களில் யாராவது ஒருவர் வந்து தான் விழுந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை எப்படியாகிலும் உயிர்ப்பறவையை பறக்க விடாமல் காப்பாற்றியாக வேண்டும். வாக்கி டாக்கியை உயிர்ப்பித்து ‘வொயிட் கோலா’ ‘வொயிட் கோலா’ என பலமுறை கூப்பிட்டான் எந்தப் பதிலும் இல்லை. வொயிட் கோலா என்பது லேன்ஸ் நாயக் மல்ஹோத்ராவின் ‘கோட் வேர்ட்’  அவனுடைய கால்களுடன்தான் தமிழ்ச் செல்வனின் கால்கள் பிணைக்கப்பட்டிருந்தன.

தமிழ்ச்செல்வன் தன் முதுகில் இருந்த சிறிய ரக பனிக்கோடரியை எடுத்து பள்ளத்தின் பக்கவாட்டில் அகலப் படுத்தும் நோக்கில் வெட்டினான். கைகளை உயர்த்தி மறுபடி தாழ்த்தி வெட்டுவதற்கு மிகுந்த ஆற்றல் தேவைப்பட்டது. இருபத்தி ஓராயிரம் அடிகளுக்கு மேலே செல்லும் போது, பூமியில் இருக்கும் அதே அளவு  ஆற்றலை எதிர்பார்த்தால் எப்படி இருக்கும்? பாதியளவு இருந்தாலே பெரிய விஷயம்தான்.. அதுவும் கையுறைகளுடன் இறுகப்பற்றுவது தண்ணீரை இரு கைகளுக்குள் பிடித்து சேமிப்பது மாதிரியான கடுமையான விஷயம்.

சிறிய ரக பனிக்கோடரி கூட அவர்கள் அணியின் கேப்டன் பானாசிங் உருவாக்கியதுதான். இரும்பில் செய்த கோடரிகளை பனிப்பிரதேசத்தில் அதுவும் மைனஸ் ஐம்பது டிகிரிக்கும் அதிகமாகக்கூட செல்லக்கூடிய இந்த காரகோரம் மலைப் பகுதியில் மிகுந்த கவனத்தோடுதான் பயன்படுத்த வேண்டும். பானாசிங் முழுக்கவும் ஈட்டி மரத்தில் (ரோஸ் வுட்) அந்தக் கோடாரியை செய்ததாகக் கூறுவார். இரும்பின் மீது வெறும் கைகள் பட்டால் சமயங்களில் அப்படியே பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொள்ளும். அப்புறம் தோலை உரித்து எடுத்துக்கொண்டுதான் கைகள் வரும். சில நிமிடங்களில் கைகள் சோர்ந்தன. தொடர்வதா வேண்டாமா என யோசித்த வேளையில் மேலிருந்த பனிக்கட்டிகள் சரிந்து உள்ளே விழுந்தன. இனி வெட்டுவது வீண் வேலை என்று புரிந்து போனது ஆயாசமாக சுருண்டு படுத்தான்.

      சியாச்சின் பகுதியில் காவல் பணியில் இருக்கும் எல்லோருக்கும் உறக்கமின்மை என்பது பெரும் நோயாக இருந்தது. கால் கை நீட்ட வழி இருந்தாலுமே உறக்கம் வர பல மணி நேரம் ஆகும். பள்ளத்துக்குள் பூனை மாதிரி சுருண்டு படுத்தால் உறங்குவது எப்போது? ஆகாஷ் திவாரி ஒரு யோசனை சொல்லுவான் கண்களை மூடி, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து அப்படியே சில நொடிகள் நிறுத்தி மெல்ல மெல்ல விடவேண்டும். அப்புறம் முக தசைகள், மார்பு இப்படி கால் வரை தளர்வாக வைத்து மனதுக்குள் நம்பர்களை சொல்ல வேண்டும் என்று.. சொல்லிவிட்டு அவன் ஐந்தே நிமிடத்தில் தூங்கி விடுவான். இவன் நூற்று  சொச்சம் எண்ணிக் கொண்டிருப்பான். நடுநடுவே எண்களை சொல்லாமல்  ஜம்ப் ஆகி இருப்பான். ஆனாலும் அடிக்கடி முயற்சிப்பான். இப்பவும் முயற்சித்தான்.

 

சியாச்சின் பங்கர்

ஞ்சீவ் குல்கர்னி பதட்டத்துடன் பேஸ் கேம்ப் அலுவலகத்தை சாட்டிலைட் போனில் தொடர்பு கொள்கிறார். கர்னல் குர்மீந்தர் சில நிமிடங்களில் இணைப்பில் வந்தார்.

“மெஸேஜ் பாஸ்..ஓவர்”

“அனெக்ஸ்பெக்டட் அவலாஞ் சார்.. பதிமூணு பேர் பனிச்சரிவுல மாட்டிகிட்டாங்க... ஆறு பேரை பத்திரமா மீட்டுட்டோம்..”

“எனி கேஷூவாலிட்டிஸ்?”

”நாலு பேர் இறந்துட்டாங்க.. ஹெலிகாப்டரை இம்மீடியட்டா அனுப்புங்க.. கூடவே டாக்டர்ஸ்..மெடிசின்ஸ்.. கெரசின், பேட்டரி.. ஃபுட் பாக்கெட் ப்ளீஸ் அர்ஜண்ட் சார்”

“இப்ப மணி என்ன குல்கர்னி?”

“மதியம் மூணு நாப்பது சார்”

“இப்ப அங்க ஹெலிபேட்ல நம்ம ஹெலிகாப்டர் லேண்ட் ஆகுமா குல்கர்னி?”

“சார்..”

“உங்க பதட்டம் புரியுது.. ரிஸ்க் எடுத்து ஹெலியை அனுப்பினா அங்க லேண்ட் ஆகவும் முடியாம.. அங்க உள்ள கிளைமேட்ல திரும்பவும் முடியாம போயிடும்.. குல்கர்னி, இன்னொரு ஆபத்தை உருவாக்க நான் விரும்பலை.. எர்லி மார்னிங் கிளம்பினா அங்க லேண்ட் பண்றது ஈசி.. மேனேஜ் யுவர்செல்ஃப்”

“ஓகே சார்”

“கணக்கு இன்னும் டேலி ஆகலை குல்கர்னி.. பதிமூணு பேர்னு சொன்னீங்க.. இன்னும் மூணு பேரு?”

“அவங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலை”

“எல்லாரும் கால்ல ஒண்ணா சேஃப்டி ரோப் கட்டி இருந்தாங்களா இல்லையா?”

“அது இல்லாம பங்கரை விட்டு வெளியே அனுப்பறது இல்லை சார்.. விழுந்த பனிக்கட்டி கனம் தாங்காம கயிறு அறுத்துகிட்டு விழுந்திருக்கு.. அதனால மூணு பேரு எங்க விழுந்தாங்கன்னு தெரியலை.. பனிப்பள்ளங்கள் புதுசா உருவாயிடுச்சு”

“ஓ .. மை காட்.. வாக்கி டாக்கி?”

“சிக்னல் வீக் சார் கூப்பிட்டு பார்த்தோம் நோ ரெஸ்பான்ஸ்”

“இப்ப பீரியாரிட்டி அவங்களைத் தேடறதுதான்.. க்விக் குல்கர்னி”

“ஒகே சார் துர்க்கே மாதாகி ஜெய்”

“துர்க்கே மாதாகி ஜெய்”

இரண்டாம் நாள்

மிழ்ச்செல்வன் தன்னை அறியாமல் உறங்கி கண் விழித்த போது பக்கத்தில் இருந்த வாக்கி டாக்கியில் இருந்து சன்னமாக குரல் கேட்டது சட்டென்று எழுந்து கண்ணிமைகளின் மீது படிந்திருந்த பனித்துகள்களை துடைத்தான். சில நொடிகள் போராடியபின் கண்களைத் திறக்க முடிந்தது.. சூழ்ந்திருந்த இருட்டு இரவா பகலா என்று தெரியாதபடி போர்த்தியிருந்தது.

வாக்கி டாக்கியை எடுத்து அதன் வால்யூம் குமிழைத் திருகி அதிகமாக்கினான். ஒற்றை உருதுக்குரல் ’கேக்குதா கேக்குதா’ என்று தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்தது. தமிழ் எதுவும் பதிலளிக்கவில்லை. அது அவர்கள் வழக்கம். சில சமயம் எதிரிகள் கூட நம் அலைவரிசைக்குள் நுழைந்து நம் இருப்பிடத்தை அடையாளம் கண்டுபிடித்து விட முடியும். அதுவும் இது நிச்சயம் இந்தியக் குரல் இல்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆகவே அமைதியாகக் கவனித்தான்.

“சாக்லேட் பாய் கம் ஆன் லைன்” என அழைத்தது அந்தக் குரல்

டேய் நரி  அவ்வளவு சீக்கிரத்தில் உன் வலையில் விழுவேனா? என்று மிக ஜாக்கிரதையாக அமைதிகாத்தான் தமிழ்ச்செல்வன். தான் சந்தேகப்பட்டது சரிதான் என்று தன் தோளில் தானே தட்டிக் கொண்டான். எதிரியின் குரல்தான் ஆகவே மூச்சு விடக் கூடாது.

தாகமெடுத்தது தண்ணீருக்கு என்ன செய்வது என்று யோசித்த போதே விக்கலெடுக்க ஆரம்பித்தது. ‘கடவுளே இப்ப என்ன செய்யறது?’ என வாய் விட்டு சொல்லிக் கொண்டான். புகாரியில் சூடேற்றினாலே பனிக்கட்டி உருகி தண்ணீர் ஆக மூன்று மணி நேரம் ஆகும். முட்டையும் தக்காளியும் கூட பனியில் கூழாங்கல் போல இறுகிவிடும் நிலையில் தண்ணீரை எப்படி பத்திரப்படுத்த முடியும்.?

தோள் பையை முன்பக்கம் நகர்த்தி ஆராய்ந்தான் சாக்லேட் பட்டைகள் கிடைத்தன, எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். நல்லவேளை கெட்டுப்போகாமல் நன்றாகவே இருந்தன.

திடீரென சுபேதார் மேஜர்  அனுமந்தப்பா குரல் கேட்டது “ப்ளாக் டைகர் ப்ளாக் டைகர்” தமிழ்ச்செல்வனின் கோட் நேம் அது குரல் கொடுத்தால் எதிரி நிச்சய்ம் மோப்பம் பிடித்துவிடுவான். எப்படி அனுமந்தப்பாவுக்கு உணர்த்துவது. ஒருவேளை எதிரிகள் இடை மறிக்கலாம். அமைதியாக கவனிப்பதுதான் நல்லது என்று தோன்றியது. சப்தமில்லாமல் காதுகளை கூர்மையாக்கினான். ஏழெட்டு முறை கூப்பிட்டுவிட்டு பிறகு “ஃபார்ட்டி ஃபோர்” என அழைத்தார். இது தமிழின் பட்டப்பெயர் குழுவின் நண்பர்கள் வைத்த பெயர். அப்படியும் சில முறை அழைத்துவிட்டு நிறுத்தினார் அனுமந்தப்பா. எவரும் குறுக்கிடவில்லை. எதிரிகள் ஃபிரிக்வன்சி வட்டத்திலிருந்து விலகி தூரமாக சென்றுவிட்டார்களோ என்று யோசித்தபொழுது மறுபடி விக்கியது.

மீண்டும் சாக்லெட் துண்டங்களை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான். இப்பொழுது தான் முயற்சிக்கலாம் என்று வாக்கி டாக்கியை எடுத்து ”லிட்டில் லயன் வாக்கி டாக்கி திஸ் இஸ் 44.. ப்ளீஸ் கம் ஆன் லைன்.” ம்ஹூம் குரல் எதுவும் வரவில்லை. அவர் அழைத்தபோதே பேசி இருக்கலாம். எதிரி நுழைவான் என்று தப்புக் கணக்கு போட்டாயிற்று, பசித்தது. சாப்பிட்டு எவ்வளவு நேரமாகி இருக்கும் என்று தெரியவில்லை. பகல் பனிரெண்டு மணி அளவில் பதிமூன்று பேர் ஒருவர் காலில் மற்றொருவர் என எப்பொழுதும் போல கயிறு கட்டித்தான் கிளம்பினார்கள். வழக்கமான ரோந்துப் பணி. எழுநூறு மீட்டர் நடக்க கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.  பனி கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பளவு நிரம்பிவிட்டது, ஆறடுக்கு கொண்ட உடையை ஊடுருவி பனி கத்தியைப்போல செருகியது. காது மடல்களை மறைத்திருந்த கஃப் படபடவென காற்றில் ஆடி கன்னத்தில் அடித்த போது சுரீர் என்று வலித்தது.

பேசுவதால் உடல் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிவிடும் என்பதால் பனியாற்றைக் கடக்கும்போது பேசிக்கொள்வதில்லை. தேவைப்படும்போது சைகை மொழிதான். அஜய்சிங் அவ்வப்பொழுது குளிரின் குத்தல் தாங்காமல் ‘ஊ’ என்று கத்துவான், மற்றபடி வேறு குரல்கள் கேட்கவில்லை. உடல் பெருத்த பென்குவின்கள் மௌன ஊர்வலம் செல்வது போல அவர்களின் குழு  நடந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது, . திடீரென சுழல் காற்று ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க இயலாத அளவு ராட்சத பம்பரம் போல சுழன்று அடித்தது. அவ்வளவுதான் தெரியும் யார் யார் எங்கு விழுந்தோம். எங்கு புதைந்தோம் என்று தெரியவில்லை.

காலில் அணிந்திருந்த பாதணிகளில் கதகதப்பை ஏற்ற வைக்கப்பட்டிருந்த பேட்டரியின் சார்ஜ் இன்னும் எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை, அதிகபட்சம் நாற்பது நிமிஷம் மட்டும்தான் தாக்குப்பிடிக்கும்.

மறுபடி அந்த பாகிஸ்தானியின் குரல் வாக்கிடாக்கியில் கேட்டது.

:”சேவ் மீ ப்ளீஸ்..எஸ்.ஓ.எஸ் ப்ளீஸ் சேவ் மீ”.

நீ எப்படிடா ஃபிரிக்வன்சி எல்லைக்குள்ள நுழைஞ்சே? கேட்க வேண்டும் போலத் தோன்றியது ஆனால் கேட்கவில்லை.ஒருவேளை தான்தான் அவர்களது வட்டத்துக்குள் சென்றுவிட்டேனோ? வாய்ப்பில்லையே.. அனுமந்தப்பாவின் குரல் கேட்டதே..

“எனிபடி ஹியர் மீ சார்.. ஐயாம் இன் ட்ரபிள் சார் ப்ளீஸ் ஹெல்ப் மீ” அந்தக்குரல் நிஜமான தவிப்பாகத்தான் தோன்றியது.

“டெல் மீ யுவர் நேம்” வாக்கி டாக்கியின் பக்க வாட்டு பொத்தானை அழுத்தி கேட்டான் தமிழ்

அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அச்சம் வருவது இயல்புதானே..

கழுத்துப் பகுதியில் இருந்து வியர்வை வழிந்து நெஞ்சுக்கு வருவதை உணர முடிந்தது. கைகளை அவசரமாக உள்ளே நுழைத்து எட்டிய தூரம் வரைத் துடைத்தான் தமிழ். கொஞ்சம் தாமதித்தாலும் இறுகி பனிப்படலமாகிவிடும்.

பேஸ் கேம்ப் ட்ரெயினிங் ஸ்கூலில் சோனம் சாதில் அடிக்கடி சொல்கிற வாசகம் நினைவுக்கு வந்தது If you sweat more in Peace you bleed less in war”  யாரிடம் இப்பொழுது போராடிக் கொண்டிருக்கிறோம் இரத்தம் இழப்பதற்கு?

 

 

 

பங்கர் அறையில்..

ங்கரில் உயிர் பிழைத்தவர்களின் காலில் உள்ள ஷூக்களையும் , சாக்ஸ்களையும் அவிழ்த்து தேய்த்துவிட்டபடி இருந்தது மருத்துவக் குழு.

“சார் இரண்டு பேருக்கு ஃப்ராஸ்ட் பைட். கை எல்லாம் கலர் மாறுது மணிக்கட்டு எலும்பு இறுகுது. உடனடியா வார்ம் அப் பண்ணனும்“ என்றார் டாக்டர் நாயர்

“”பேட்டரி லேம்ப் சார்ஜ் இருக்கா அதை காமிக்கலாமா?”

“நோ சார் ..தண்ணியை ஹீட் பண்ணி அதுலதான் வார்ம் அப் பண்ணியாகணும்.”

“கடவுளே .. மூணு மணி நேரம் ஆகுமே. ஒகே.., அமர்நாத்.. கோ ஃபாஸ்ட்  கெரசின், புகாரி வெசல் எல்லாம்  எடுத்துட்டு வா.. கவிக். கவிக்”, எல்லோரும் பறந்தார்கள். வெவ்வேறு புகாரிகளில் பனிக்கட்டிகள் சூடாக்கப்பட்டு தண்ணீராக மாற காத்திருந்தார்கள்.

மூன்றாம் நாள்

திகாலை ஹெலிபேடில் இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து பொருட்களை வேகவேகமாக இறக்கிக் கொண்டிருந்தனர். கேம்ப்பின் உள்ளிருந்து ஸ்லிப்பிங் பேக்கில் படுக்க வைக்கப்பட்ட, உடல் நலம் குன்றிய  வீரர்களும்   ஃப்ராஸ்ட் பைட்டில் பாதிக்கப்பட்ட வீரர்களும் பத்திரமாக ஏற்றப்பட்டனர்.

பொதுவாக சியாச்சின் பகுதிக்கு வந்த பிறகு பசிப்பதே இல்லை. டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவின் சுவை தமிழுக்கு பிடிப்பதில்லை. ஆனால் இங்கு  எதையும் தேர்வு செய்யும் சூழலில் எவரும் இல்லை. எது எந்த நிலையில், எந்த நேரத்தில் தரப்படுகிறதோ அதை அப்படியே பெறுவதும் ஏற்பதும்தான் விதி.

மறுபடி தாகம் எடுத்தது இந்த முறை பையில் இருந்த உலர் திராட்சைப் பழங்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். திராட்சை இருப்பை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான் நீண்ட நாட்களுக்குப் பிறகு பசித்தது. வெளியே வெய்யில் இல்லை இருந்திருந்தால் பனி உருகி உள்ளே பனிக்கட்டிகளாக உருளத் துவங்கி இருக்கும்.

கேம்பில் நிச்சயம் தன்னை பதற்றத்துடன் தேடிக் கொண்டிருப்பார்கள் என்பதை உணர முடிந்தது. எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள் எத்தனை பேர் தன்னைப் போல் பனிச்சரிவில் புதைந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. லேசாக மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்தான். உடனடியாக பிரணாயாமம் செய்யத் துவங்கினான். மைனஸ் ஐம்பது டிகிரியிலும் தன்னைக் காத்துக் கொண்டிருப்பது உடைகள் அல்ல தனது நீண்ட கால ஆசனப் பயிற்சிதான் என்பதை முழுமையாக நம்பினான் தமிழ்.

“ரோஜர்” பாகிஸ்தானியின் குரல் மறுபடி அழைத்தது.

“ஆங் சொல்லுங்க நீங்க யாரு?” என்று பதிலளித்தான் தமிழ்.

“நான் நான் ..கிரீன் ரோஸ்“

“பிரதர் கோட் வேர்ட் எல்லாம் வேண்டாம்.. நான் இப்ப பனிச்சரிவிலே சிக்கி எந்த இடம்னு தெரியாத பனிப் பள்ளத்துக்குள்ளே விழுந்து கிடக்கிறேன். நீங்களும் ஏதோ இக்கட்டுலே இருக்கீங்கன்னு புரியுது. இப்ப நாம ரெண்டு பெரும் எனிமி இல்லே நமக்கு இந்த கிளைமேட் தான் இப்ப பொது எதிரி பரவாயில்லை சொல்லுங்க” என்றான் சுமாரான உருதுவில்..

“.நான் அஸ்லம் இங்கேயும் கடுமையான பனிப்புயல் ஏதோ ஒரு சரிவுக்குள்ளதான் நானும் இருக்கேன் ..சூரியனோ நிலாவோ இல்லாத உலகத்தில் இருக்கேன் வேற்றுக் கிரகத்தில் இருப்பது போல உணர்வு. இந்தக் குழந்தையை கூட்டமே இல்லாத இந்த ஊரில் என் நண்பர்கள் தொலைத்துவிட்டார்கள்”

அந்தத் துயரத்திலும் பலமாக சிரித்தான் தமிழ் “நண்பர்கள் தொலைத்தால் போனால் போகிறது.. குழந்தையிடம் பால் பாட்டில் இருக்கிறதா?”

அந்தப்பக்கம் அஸ்லம் சிரித்தான் “இருந்தாலும் பயனில்லை உறைந்து போயிருக்கும் .நல்லது உங்கள் பெயர்?” 

“தமிழ்ச்செல்வன்.. விதியைப் பாருங்கள் உங்கள் அலைவரிசையில் உங்கள் நண்பர்கள் வரவில்லை. என்னுடைய அலைவரிசையில் என்னுடைய நண்பர்கள் கிடைக்கவில்லை. நாமிருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம்”

A Friend in Hard Time Not in Big Dinner” அப்படின்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோட இருப்போம்னு தெரியலை இக்கட்டான தருணத்தில் துணைக்கு இருப்பவன் நண்பன்தானே. இப்ப நாமிருவரும் நண்பர்கள்.”

“எப்படி என்னை நம்புகிறீர்கள்? இப்படியே பேசிக்கொண்டே உன்னைக் கண்டுபிடித்து சிறை பிடிக்க வாய்ப்பிருக்கிறதே“

“சிக்கிரம் சிறை பிடியுங்கள் நண்பரே.. இந்தியர்கள் எங்களுக்கு எதிரிகள்தான் ஆனால்.. இரக்கமும் அறமும் உள்ளவர்கள் என்று என்னைப் போன்ற சிலர் உண்மையாக நம்புகிறோம். அதுவுமில்லாமல் சரிவில் விழுந்து செத்தான் என்பதைவிட எதிரியின் கையில் சிக்கி இறந்தான் என்கிற பெருமை கிட்டுமே”

“அப்படியே நீங்க இருக்கிற இடத்தை எப்படின்னு வர்ணிச்சு எனக்கு சொல்லுங்க? தப்பிக்க வழி இருக்கானு யோசிச்சு சொல்றேன்”

“எல்லா இடமும் இருட்டுதான். எதுவும் கண்ணுக்குத் தெரியலை. அது போகட்டும்  உங்களுக்கு பாடத் தெரியுமா நண்பரே ஒரு பாட்டுப் பாடுங்கள்”

இந்தக் கோரிக்கை தமிழை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இப்படிப்பட்ட தனிமையான கேம்ப்பில் பொட்டல் வெளியில் பாடுவதுதான் அல்லது பாடுவதைக் கேட்பதுதான் மன அழுத்தத்தை சிறிது குறைக்கும் என்பது இராணுவத்தில் எழுதப்படாத விதி. அதனால் தமிழ் தயங்கவில்லை.    

Ek ladki ko dheka tho aisa laga.” தமிழ் தனது அழகான குரலில் நான்கு வரிகள்  பாடினான்

1942 A love story  குமார் சானு இல்லே.. என்ன ஒரு அழகான பாடல். உங்களுக்கு அழகான குரல் நண்பரே”

பின்னர் தொடர்பு தானாக அறுந்தது.....

குல்கர்னி சாட்டிலைட் போனில் கர்னல் குர்மீந்தரை தொடர்பு கொண்டார்

“அனைவரும் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பொருட்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. தேங்க்ஸ் சார்”

“எதற்கு தேங்க்ஸ்? திஸ் இஸ் மை ட்யூட்டி.. காணாமல் போனவர்கள் பற்றி...“

“இன்னும் தேடுகிறோம் சார். அனுமந்தப்பா தலைமையில் ஒரு டீம் அனுப்பி இருக்கேன் சார்”

“இன்னும் கிடைக்காதவங்க யார் யார்?”

“லேன்ஸ் நாயக்  அஜய் சிங்,  ஹவில்தார் பட்நாயக் அப்புறம் சுபேதார் தமிழ்ச்செல்வன்”

“என்னது? ..தமிழ்ச்செல்வனா? யூ மீன் ஃபார்ட்டி ஃபோர்?”

“ஆமா சார்”

“ஏன் அவனை பாட்ரோல்க்கு அனுப்பினீங்க குல்கர்னி? ஹீ இஸ் ரேர் பாய்.. தெரிஞ்சும் அனுப்பி இருக்கீங்க” கவலை தொனிக்கும் குரலில் கேட்டார் குர்மீந்தர்.

“சாரி சார் அவன் ரிக்வஸ்ட் பண்ணினான்”

“ரிடிக்குலஸ்..இர்ரெஸ்பான்சிபிள்.” கோபமாகக் கத்தினார் குல்கர்னி அமைதியாக இருந்தார்.

.”என்ன பண்ணுவீங்களோ அவனைக் கண்டுபிடிங்க”

தொடர்பு துண்டிக்கப்பட்டும் கூட அவர் குரல் கர்ஜிப்பது போலவே இருந்தது.

உண்மைதான் அவனது இரத்தம் கோல்டன் பிளட் என்று சொலார்கள் ஆர்ஹெச் நள் (Rh NULL) ரொம்பவும் அபூர்வமான வகை ரத்தம். ஏ, ஓ, பி. ஏபி இப்படி எதிலும் சேராது. யுனிவர்சல் டோனார். எல்லா வகை ரத்தம் உள்ளவர்களுக்கும் தமிழ் ரத்தம் தரலாம்... உலகில் மொத்தம் 43 பேருக்குத்தான் இந்த அரிய வகை ரத்தம் உள்ளதாக சொல்கிறார்கள். தமிழ்ச் செல்வன் 44 வது ஆள் என கேம்ப்பில் கலாய்ப்பார்கள். அதனால்தான் அவனுக்கு பட்டப்பெயர் 44.

உண்மையில் அதிக பிரச்சினை உள்ள பகுதிகளுக்கு அவனை அனுப்புவதில்லை. அவன் உடனிருப்பது ஒரு பிளட் பேங்க் இருப்பது மாதிரி என்று குர்மீந்தர் நகைச்சுவையாக சொல்லுவார். இராணுவ மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் அனைவரும் அவனை அதிசயப்பிறவி போல வந்து பார்ப்பார்கள்

“ரேர் க்ரூப்...கோல்டன் க்ரூப் எல்லாம் சொல்றீங்க ஆனா எக்ஸ்ட்ரா ஒரு கையோ இல்லை நெத்தியில ஒரு கண்ணோ  குடுத்திருக்கலாம்.. டிஃபரன்ட்டா  இருந்திருக்கும்”

“மிலிட்டரியிலே உன்னை அன்ஃபிட் பண்ணி இருப்பாங்க அப்புறம் எதாச்சும் ஒரு எக்சிபிஷன்ல உன்னை கூண்டுக்குள்ள வச்சி பைசா வசூல் பண்ணி இருப்பாங்க“ மருத்துவர் பிரபாகர் விளையாட்டாக கிண்டலடிப்பார்.

நான்காம் நாள்

உணவும் தண்ணீரும் இல்லாமல் எத்தனை நாள் சமாளிப்பது? நா உலர்ந்து உதடுகள் வெடிக்க ஆரம்பித்தன. சட்டைக்குள் வழிந்த வேர்வை உடலோடு ஒட்டி உறைந்து பனித் தகடுகளாக மாறி இருந்தது ஒரு கட்டத்தில் பாளம்  பாளமாக  வெடித்தது. கால் உறையில் இருந்த சூடேற்றும் சாதனம் செயலிழந்து சில்லிட வைத்தது. உள்ளுக்குள் இரத்தம் உறைவது போன்ற உணர்வு வாயின் இரு புறமும் புண்கள் இரத்த சோகையின் அடையாளமாகத் தோன்றின. அவசர உதவி பையில் இருந்து  கேஸ் நிரப்பிய லைட்டரை எடுத்து பற்ற வைத்து பனிக்கட்டியை உருக்க முயற்சித்தான். மலையை குண்டூசி கொண்டு செதுக்குவது போன்ற முயற்சி அது.

மிகுந்த பிரயத்தனப்பட்டு சொட்டுச் சொட்டாக நீர்த்துளி விழ உதடுகளில் ஏந்தினான்.  நாவால் துளிகளை நனைத்து உதடு முழுக்க பரப்பினான். பையில் இருந்த இரண்டு ஸ்லைஸ் பிரட் ஏற்கனவே இறுகி இரும்புத்துண்டு போல ஆகி இருந்தது.

:ரோஜர்” கொர கொரவென வாக்கி டாக்கி சத்தமிட்டது.

“அஸ்லம்” நலிந்த குரலில் அழைத்தான்

“பிரதர் நன்றாக இருக்கிறீர்களா?” அஸ்லம்

“அனேகமாக நான் கடைசியாக பேசிய நபர் நீங்களாகத்தான் இருக்கும் பிரதர்”

“அப்படி சொல்லாதீர்கள் இறைவன் உங்களைக் காப்பாற்றுவார்”

“எனக்கும் அதுதான் விருப்பம். பிழைத்து வந்து உங்களோடு தரை மார்க்கத்தில் சண்டை இடவேண்டும் என்று ஆசை ... இந்தப் பனிக்கட்டிகளோடு போராட விருப்பம் இல்லை.”

“நான் உங்களோட போராடத் தயாரில்லை பிரதர்”

“அஸ்லம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

“என்னுடைய விரல் என் கண்ணெதிரே உதிர்ந்து விழுந்துவிட்டது பிரதர். அழுவதற்கு பயமாக இருக்கிறது பிரதர். கண்ணீர் உறைந்துவிட்டால் என்னால் துடைக்க இயலாது.” அஸ்லமின் குரல் தழுதழுத்தது.

“அய்யோ  அழுதுவிடாதீர்கள். அழுதுவிடாதிர்கள் இறைவன் காப்பாற்றுவதாய் இருந்தால்.. உங்களைக் காப்பாற்றட்டும்.. தரை மார்க்கத்திலும் உங்களோடு சண்டை இடமாட்டேன்.. தயவு செய்து அழுது விடாதீர்கள்”

“அழுவதற்கு கண்ணீர் கூட இல்லை என்றுதான்  நினைக்கிறேன் அனைத்தும் உறைந்து விட்டன. கண்களும் குரலும் மட்டும் என்னிடம் உயிரோடு இருக்கின்றன. மற்றவை செத்துப் போய்விட்டன.”

“கடவுளே .. அனுமந்தப்பா ஹெல்ப் ஹெல்ப் அனுமந்தப்பா”

தொடர்ந்து விடாமல் அரை மணிக்கு ஒரு தரம் குரல் கொடுத்தான் தமிழ்.

சில மணி நேரத்தில் ஆச்சர்யமாக எதிர்ப்பக்கம் பதில் வந்தது. ““ஃபார்ட்டி ஃபோர் தமிழ்.. .. தமிழ்ச்செல்வன். ஃபார்ட்டி ஃபோர்  எங்கே இருக்கே என் குரல் கேக்குதா?”

“அனுமந்தப்பா அனுமந்தப்பா” முடிந்தவரை குரலை உயர்த்தி கத்தினான். நா உலர்ந்தது. தொண்டை வறண்டது இருந்தாலும் விடாமல் கத்தினான்.

உள்ளே டார்ச்சின் ஒளிவட்டம் நுழைந்த பொழுது கடவுள் தனது கரங்களை  நீட்டியது போல இருந்தது. தன் கைகளை நீட்டி அந்த ஒளிவட்டத்திடம் காட்டினான்.

“கிடைச்சிட்டான்.. கிடைச்சிட்டான்” அனுமந்தப்பாவின் குரல் கேட்டது மட்டுமே நினைவில் இருக்கிறது அதன் பின்னர் மூச்சுத் திணற ஆரம்பித்தது. தமிழ்ச் செல்வனுக்கு குரல் வரவில்லை

\

சியாச்சின் பங்கர்

குல்கர்னி வாக்கி டாக்கியை அழுத்தி “குல்கர்னி ஆன் லைன்” என்றார்

“சார் ஃபார்ட்டி ஃபோர் கிடைச்சிட்டான். இங்க பள்ளத்துக்குள்ள இருக்கான்”

“இஸ் ஹீ அலைவ்?”

“ஆமாம் சார் கையை ஆட்டினான். இப்ப பள்ளத்தை அகலமாக்கி அவனை ரெட்ரீவ் பண்ண முயற்சி பண்றோம்”

“காட் இஸ் கிரேட். அனுமந்தப்பா பார்த்து ஆக்சிஜன் சிலிண்டர் ரெடியா இருக்கா?”

“எல்லாம் தயாரா வச்சிருக்கோம்”

“லக்கி பாய் கோல்டன் பாய் .. இப்ப மணி இரண்டு.. இப்ப இன்ஃபாரம் பண்ணினா விடியல் காலையிலே ஹெலி வந்துடும்” உற்சாகமானார் குல்கர்னி. உடனே சாட்டிலைட் ஃபோனை ஆன் செய்து குர்மீந்தரைத் தொடர்பு கொண்டு சகல ஏற்பாடுகளையும் செய்தார். பேஸ் கேம்ப்பில் மருத்துவமனையில் மருத்துவர்கள். கருவி இயக்குபவர்கள் லேப் டெக்னீஷியன்கள் என அனைவரும் தயாராக இருக்க பணிக்கப்பட்டனர்..

னுமந்தப்பா குழுவினர் அரை மணி நேரத்தில் வெற்றிகரமாக தமிழ்ச் செல்வனை உயரே தூக்கும் அளவுக்கு பள்ளத்தை சாமர்த்தியமாக அகலப்படுத்தி உள்ளே ஒருவரை இறக்கி கயிற்றின் வழியே அவனை மீட்டனர். உடலெங்கும் பனி போர்த்திய அவனை லாவகமாக துடைத்தனர். லேசாக கண்விழித்து “அஸ்லம் அஸ்லம்’ என முனகினான். அவனது வாக்கி டாக்கி மீது பனிக்கட்டி விழுந்து .பள்ளத்தில் புதைந்து கிடந்தது கும்மிருட்டில் எவருக்கும் தெரியவில்லை. அவனைக் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஸ்லீப்பிங் பேக்கில் அவனை படுக்க வைத்தனர். அவன் இன்னும் சன்னமாக ‘அஸ்லம் அஸ்லம்’ என்றான்.

அனுமந்தப்பா அவன் உதட்டருகே காதுகளை வைத்து கேட்டான். பிறகு குழுவில் இருந்த ஆஹான் அகம்மதை அழைத்து என்ன சொல்கிறான் கேள் என்றான். அவனும் காதருகே குனிந்து பின்னர் “அஸ்லாம் அலைக்கும்” என்றான்.

“அவனுக்கு நினைவுகள் பிரகாசமாக இருக்கின்றன. தினமும் அப்படித்தானே உன்னிடம் வணக்கம் சொல்வான்?” என்று கேட்டான் அனுமந்தப்பா..

“ஆமாம்’ என்றான் ஆஹான்.

“நான்கு நாட்கள் முழுசாக நான்கு நாட்கள்.. ஆகாரம் தண்ணிர் இல்லாமல்  எப்படி உள்ளே தாக்குப் பிடித்திருக்கிறார்? உண்மையில் அதிசயப்பிறவிதான்..“ வியந்தான் ஆகான்.

“தவறாமல் யோகா பிரணாயாமம் செய்கிறவன் அவை எல்லாம் அவனைக் காப்பாற்றி இருக்கிறது. ரெகுலர் எக்ஸைஸ்  முடித்ததும் நீங்கள் எல்லாம் சோர்ந்து விடுகிறீர்கள்.” என்றான் அனுமந்தப்பா

 ஸ்லீப்பிங் பேக்கில் அவனை மிகப்பாதுகாப்பாக கவனமாக வைத்து ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்துக்கொண்டு தூக்கியபடி பங்கருக்குச் சென்றனர்.

 

சியாச்சின் பேஸ் கேம்ப் மருத்துவமனை

மிழ்ச்செல்வனுக்கு முதலுதவி செய்து ஐஸியூவில் வைத்திருந்தார்கள். மூச்சு விட சிரமம் இருந்ததால் ஆக்சிஜன் சிலிண்டர் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு மருத்துவக்குழு அவனருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டு இருந்தது.

பிரபாகருக்கு ஃபோன் மேல் ஃபோனாக வந்து கொண்டிருந்தது. எல்லோருமே பனிச்சரிவில் தப்பித்தவர்களின் உடல்நிலை பற்றி விசாரித்தாலும் தமிழ்ச்செல்வனை கூடுதலாக விசாரித்தார்கள்.

சம்பிரதாயமாக பனிச்சரிவில் சிக்கியவர்கள் பற்றி தகவல் உரிய முறையில் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் தமிழ்ச்செல்வனைப் பற்றி எப்படியோ மீடியாக்களுக்குத் தெரிந்து அந்த இடத்தைச் சுற்றியபடி தலைப்புச் செய்திகளுக்காகவும் பிரேக்கிங் நியூஸ் -காகவும் திரிந்துக் கொண்டிருந்தார்கள். இராணுவ வளையத்தைத் தாண்டி அவர்களால் வர இயலவில்லை என்றாலும் எங்கிருந்தாவது செய்தி கசியாதா என்று தவித்துக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவமனைக்கு குர்மீந்தர் வரும்போதெல்லாம் கண்ணில் தென்படும் பத்திரிகைக்காரர்கள் செய்திக்காக அவரை நோக்கி பேரிகார்டுக்கு அந்தப்பக்கம் நின்றபடி தவிப்புடன் பார்க்கும் போது ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் பாவமாக இருந்தது.

தமிழ்ச் செல்வனின் தாயாரும் , தங்கையும் மருத்துவமனை காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தனர். தமிழ்ச்செல்வன் கண் விழித்ததாக பிரபாகர் தகவல் அனுப்பியதால் குர்மீந்தர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். முதலில் தமிழின் தாயாரை பார்க்க அந்த அறைக்குள் நுழைந்தார். அவர்கள் தொலைக்காட்சியில் தமிழ்ச் செல்வன் பற்றிய செய்தியை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொலைக்காட்சியில் சர்வமத பிரார்த்தனைகள் தமிழ்ச் செல்வனுக்காக நடைபெறுவதாக  ஒளிபரப்பானது. குர்மீந்தரைக் கண்டதும் எழுந்தார்கள். பிரபாகர் அங்கு வந்தார்.

“நீங்கள்தான் அந்த அதிர்ஷ்டசாலியின் அம்மாவா?” என்றபடி சட்டென அம்மாவின் பாதம் தொட்டு வணங்கினார் குர்மீந்தர். பதறியபடி அவரது தோளைத்தொட்டு அம்மா “நமச்சிவாயம் நமசிவாயம்” என்றபடி மேலே தூக்கினார்..

“அவன் கடவுளின் பிள்ளைம்மா எதுவும் ஆகாது. இருபத்தி ஐந்து அடி பள்ளம் மிகக்கடுமையான பனிச்சரிவு அதையே ஜெயிச்சு வந்துட்டான். இனிமே பயப்படாதீங்க நாங்க பாத்துக்கறோம்” என்றார் குர்மீந்தர். பிரபாகர் அவர்களுக்கு குர்மீந்தர் சொன்னதை விளக்கிச் சொன்னார்.

தமிழின் அம்மா கையெடுத்து கும்பிட்டார்.

“நீங்க தமிழைப் பார்த்தீங்களா ? அவன் உங்களைப் பார்த்தானா?”

‘பார்த்தோம்’ என்று கண்ணீரோடு சொன்னார் அம்மா.

“பிரபாகர் இவங்க ஓய்வெடுக்க.. சாப்பிட என்ன தேவையோ அதைக்குடுங்க.. எந்தக்குறையும் இருக்கக் கூடாது“ 

“எஸ் சார்.”

“லெட் அஸ் மூவ் டூ ஐசியூ ?”

இருவரும் தமிழின் அறைக்குள் நுழைந்தார்கள்.

தமிழின் அருகில் இருந்த செவிலியர்கள் சட்டென நகர்ந்தார்கள். தமிழ் அருகில் சென்று 44” என்றார் குர்மீந்தர். தமிழின் கண்கள் திறந்தன. அவனது உதடுகள் அசைந்தன. மகிழ்ச்சியோடு குர்மீந்தர் குனிந்தார் அவரது காதுகளில் விழும்படி “மை வாக்கி டாக்கி.. வாக்கி டாக்கி“ என்றான் தமிழ்.

“ஓ .. வாக்கி டாக்கி .. டோன்ட் வொர்ரி ரெஸ்க்யூ பண்ணிடலாம். ஹவ் டூ யூ ஃபீல்? ஆர் யூ ஒகே?”

“அஸ்லம் .. அஸ்லம்  சார்”

”அஸ்லம்?.. டோன்ட் வொர்ரி.“ என்றார் குர்மீந்தர் குழப்பமாக

“கண் விழித்ததலிருந்து அடிக்கடி சொல்கிறான். ரொம்பப் பேசுவது அவனுக்கு ஆபத்து” என்றார் பிரபாகர்.

குர்மீந்தர் நிமிர்ந்து அவன் கைகளைப்பிடித்து ஆசுவாசப் படுத்தினார்

“சார் பேசுங்கள்” என்றான் தமிழ்

“என்னவோ சொல்கிறான்” என்றபடி மறுபடி  குனிந்து உற்றுக்கேட்டார்

“பேசுங்கள் சார் ப்ளீஸ் பேசுங்கள்..பேசினால் பேசினால்’..’ அவனுக்கு மூச்சு இறைத்தது

“ஒகே.. ஒகே.. கூல் டவுன் உனக்கு உடம்பு நல்லாகட்டும் நிறைய பேசலாம்..”

“நோ சார்.. நோ.. பேசினால் பிழைப்போம் அஸ்லம்.. அஸ்லம்”

“ஓ நிச்சயம் பேசுவோம்”

“யுத்தக் களம் ..யுத்தக்களத்தில் மரணம்.” என்று விரல்களை  உயர்த்த முயற்சித்து தோற்றுப்போனான்.

அவன் கைகளைத் தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பினார்

தமிழ் இன்னும் சன்னமாக “அவர்களிடம் பேசுங்கள்” என்று சொன்னது இருவரின்  காதுகளில் விழவில்லை.

பிரபாகரும் குர்மீந்தரும் வெளியே வந்தனர்.

“அவனோட லங்க்ஸ் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. கிட்டத்தட்ட ட்வென்டி ஃபைவ் பர்சென்ட்தான் வொர்க் பண்ணுது”

:’பிழைச்சிடுவானா?”

“”சார் அவன் மிராக்கிள் பாய் என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஆனா எனக்கு டென் பர்சென்ட் தான் நம்பிக்கை இருக்கு. சான்ஸ் ரொம்ப கம்மி ஹீ இஸ் கவுண்டிங் ஹிஸ் டேஸ்“

“டெல்லி எயிம்ஸ் மருத்துவ மனைக்கு கொண்டு போகலாமா? ஹவ் இஸ் ஹிஸ் ஹெல்த் கண்டிஷன்?”

“பெட்டர் வீ ஷுட் மூவ் ஹிம் டு எய்ம்ஸ் சார்”

குர்மீந்தருக்கு கால் வந்தது.

“குட்மார்னிங் .. சொல்லுங்க குல்கர்னி.. மிச்சம் ரெண்டு பேர்?”

“பாடி கிடைச்சிடுச்சு”

“ஒ.. மை காட்.. காலையில ஹெலி அங்க வரும். தேவையானதை செய்யுங்க”

“சார்..”

“தமிழ் விழுந்து கிடந்த இடத்துலே அவனோட வாக்கி டாக்கியை எடுத்தீங்களா?”

“இல்லை சார் கிடைக்கலை”

“அங்கதான் இருக்கணும் அனுமந்தப்பாவை அனுப்பி தேடச் சொல்லுங்க.. வாக்கி டாக்கி சவுன்ட் வச்சிதான் இடத்தை ஐடன்டிஃபை பண்ணி இருக்கீங்க.. அப்புறம் எப்படி ரெக்கவர் பண்ணாம டீம் வர்றாங்க?”

“சாரி சார்.. பதட்டத்துலே. அதுவுமில்லாம இருட்டு”

“டோன்ட் பீ சில்லி.. முதல்ல சர்ச் பண்ணி கண்டுபிடிங்க.”

“எஸ்.. சார்..”

“ஆமா... நம்ம டீம்ல அஸ்லம்னு யாராச்சும் இருக்காங்களா?”

“:இல்லை சார்.. ஆகான்னு ஒரு லேன்ஸ் நாயக் இருக்கான்”

“ஐ நோ .. ஐ நோ.. அவனைத் தெரியும்..”

“சார் தமிழ் அடிக்கடி சொல்றானா.. அவன் ஆகானை பார்த்து அஸ்லாம் அலைக்கும்னு  சொல்லுவான்”

“இல்லை குல்கர்னி .. அது இல்லை அவன் வேற என்னவோ சொல்ல வர்றான் ஆனா எனக்குப் புரியலை ... சரி ஒகே ஒகே”

தொடர்பைத் துண்டிக்கிறார்.

“பிரபாகர், டெல்லி எயிம்ஸ் அனுப்ப எல்லா ஏற்பாடும் ஏற்கனவே பண்ணியாச்சு. உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு டிசைட் பண்ணலாம்னு இருந்தேன். கூட போறதுக்கு மெடிக்கல் அசிஸ்டன்ஸ் டீம் ரெடி பண்ணுங்க அவங்க அம்மா, தங்கையும் கூட போகட்டும். இன்னும் டூ ஹவர்லே.. ஸ்பெஷல் ஹெலி லே (Leh) விலேர்ந்து கிளம்பும். ஸோ மேக் இட் ஃபாஸ்ட்”

“ஒகே சார்”

“பிரபாகர்.. தமிழ்ல அஸ்லம் அப்படின்னு ஏதாவது வார்த்தை இருக்கா?”

“இல்லை சார். அது ஒரு பெயர். அவ்வளவுதான்.” .

“நிச்சயம் அது முக்கியமான பெயராக இருக்கணும்.. பேசுங்க பேசுங்கன்னு சொல்றான் யார்கிட்ட என்ன பேசணும்? எனி ஐடியா?”

பிரபாகர் தெரியாது எனத் தோளைக் குலுக்குகிறார்..

“எனக்கும் புரியலை.. பட் என்னிக்காவது புரியலாம்.. அன்னிக்கு... அடடா அப்பவே புரியாம போச்சேன்னு நாம வருத்தப்படலாம்” என்றார் குர்மீந்தர்

“எஸ். சார்”

“நிறைய பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்”

“எது சார்?” என்று குழப்பமாகப் பார்த்தபடி கேட்டார் பிரபாகர்

:”இந்த எஸ் சார்ங்கற வார்த்தை” என்றார் குர்மீந்தர் கீழ்க்கண்ணால் பார்த்தபடி..

ஐசியூ அறையில்.... கண்ணீர் மல்க “பேசுங்க ..பேசுங்க” என உதடுகளுக்குள் முனகினான் தமிழ்.. எப்பொழுதும் போல அந்த சாமான்யனின் குரல் உதடுகளுக்குள் முடங்கிப்போனது .

 

 .     

 

  

 

 

 

 

    . 

      

 ..


   

 

 

 

 

 .  

  

 

 

.  

 

.  

.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...