திங்கள், 4 செப்டம்பர், 2023

 

கற்பித்தலின் மாமன்னன் பேராசிரியர் மா. நன்னன்

                        -நெய்வேலி பாரதிக்குமார்



குப்புத் தொடங்குவதற்கு அடையாளமாக, வழக்கமான அச்சுறுத்தும் மணியோசை இருக்காது. நாவைத் துருத்தியபடி பிரம்புடன் ’உள்ளே போ’ என்று எவரும் நிற்பதில்லை. வகுப்பறையில் மிக வசதியாக வெவ்வேறு வயதினரும் புன்முறுவல் ததும்பும் முகங்களுடன் அமர்ந்திருப்பர். இப்படியானச் சூழலில் கல்வி போதிக்கும் பணியை அதுவும் மொழி இலக்கணத்தை கற்பிக்கும் வியத்தகு தருணங்களை தந்தவர் பேராசிரியர் மா. நன்னன். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக எண்ணும் எழுத்தும், அறிவோம் அன்னை மொழி ஆகியத் தலைப்புகளில் எளிய நடையில் வலிய உதாரணங்களுடன் பிழையின்றி தமிழ் எழுத அவர் நடத்திய நிகழ்ச்சிகள் தமிழுக்கு கிடைத்த கொடை. கற்பித்தலில் புதிய அணுகுமுறையைப் புகுத்தியவர். நன்னன் கற்பித்தல் முறை என்றே அதற்கு பெயர்.

  புலவர் மா. நன்னன் அவர்கள் பிறந்தது ஸ்ரீமுஷ்ணத்துக்கு அருகில் உள்ள காவனூர் என்று எழுத முற்படும்போது முதுகுக்குப் பின் நின்று அது ஸ்ரீமுஷ்ணம் இல்லை திருமுட்டம் என்று திருத்தி எழுது என்கிற கனிவான அதே நேரம் மிக உறுதியான குரல் கேட்டால் அது நன்னன் அவர்களின் குரலாகத்தான் இருக்கும். நல்ல தமிழில் உரைநடை எழுத விரும்பும் எல்லோரது குரலிலும் அவரது குரலின் ஒலியைக் கேட்கலாம். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் இடம்பெறும் கட்டுரைகளில் பிழையான தமிழ்ச்சொற்களை வாசிக்க நேரிட்டால் அது குறித்து எழுதியவர்களுக்கு சந்திக்கும்போதோ அல்லது தொலைபேசியிலோ தெரிவித்து அதனை நெறிப்படுத்துவது அவரது இயல்பு.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவரது வகுப்பறைப் பாடங்கள் முடிந்து தேர்வுகளும் நிறைவுற்றபோது. மயிலாடுதுறைக்கு அருகில் வடகரையில் பெரியார் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக மாணவப் பருவத்திலேயே அழைக்கப்பட்டார் அந்த நிகழ்ச்சியின் நிறைவில் “நீ என்னுடன் வந்துவிடுகிறாயா?” என்ற் பெரியார் கேட்டபோது யாருடைய அனுமதிக்காகவும் காத்திராமல் அவருடன் ஈரோட்டுக்கு சென்றுவிட்டார். அன்றைக்கு பின்பற்றி நடக்கத் தொடங்கிய பெரியாரின் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் தனது இறுதி மூச்சு வரை தொடர்ந்தார்.  ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றியவர் பின்னர் ஆசிரியர் பணிக்கு மாறவேண்டிய சூழல் வந்தது. அதற்குப் பின்னர் பேராசிரியர் பணி தொடங்கி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பதவி வரை அவரது தமிழ்த்தொண்டு தளராது தொடர்ந்தது.

நன்னன் எழுதியுள்ள. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் பெரும்பாலும் தமிழியல் அல்லது பெரியாரியல் சார்ந்தே இருக்கும். தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல் ஆய்வு , அறிவியல் சொற்களுக்கு இணையான கலைச்சொற்களை உருவாக்குதல் ஆகிய அவரது பணிகள் இன்றைய படைப்பாளிகளுக்கு ஆகச்சிறந்த வழிகாட்டிகள்.. எளிய மக்கள் அறியாத சொற்களாயிற்றே என்று தயங்கினால் அவர் எப்பொழுதும் அதனை மறுப்பார். பள்ளத்தில் இருப்பவர்களை மேலேற்றிவிட வேண்டும் என்றால் நீங்கள் கைகொடுத்து தூக்கிவிடுவீர்களா அல்லது பள்ளத்துக்குள் குதிப்பீர்களா என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கும். அப்படியான சமாதானங்களை அவர் ஒருபோதும் ஏற்பதில்லை.

நன்னன் குடி அமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப்போட்டிகள், மாணவ மாணவியர்களுக்கான தமிழறிவை வளர்க்கும் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை நடத்தி அவரது பிறந்தநாளான சூலை முப்பதாம் தேதி பெரும் பொருட்செலவில் விழா எடுத்து பரிசுகள் அளித்து ஊக்குவிப்பதை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருந்தார். இப்பொழுதும் அவரது மகள்கள் வேண்மாள், அவ்வை ஆகிய இருவரும் அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விடாமல் அனைத்துப் போட்டிகளையும் நடத்தி விழா எடுத்து கௌரவிக்கின்றனர்.

அவர் மறைந்த அன்று இறுதி ஊர்வலத்தில் அவரது துணைவியார் பார்வதி அம்மாளும் கூடவே இடுகாடு வரை வந்து அவரது கைகளைப்பற்றி “திருமணத்தின் போது நீங்கள் சொன்னது போலவே உங்கள் கரங்களைப் பிடித்துக்கொண்டு உங்கள் கொள்கையின் பொருட்டு பெரியார் வழியில் இதோ தொடர்ந்து வந்துவிட்டோம்” என்று கண்கலங்கிய தருணத்தில் அங்கிருந்தவர்களும் கண்கள் கலங்க நெகிழ்ந்தனர். அவரது மகள்கள் இருவரும் தமிழியல் பணியிலும் பெரியாரின் சிந்தனைகளைப் பரப்பும் நோக்கிலும் தினந்தோறும் நன்னனின் சொல் துலக்கங்கள், பெரியாரின் கொள்கைகள் விளக்க  காணொளிகளை பதிவிடுகிறார்கள். அடுத்தத் தலைமுறைக்கும் தன்னுடைய கொள்கைகளை அவர்கள் உளமாற ஏற்கும் அளவுக்கு தனது வாழ்வியல் முறைமைகளை உறுதியாகக் கடைபிடித்தவர் புலவர் மா.நன்னன் அவர்கள்.

திருஞானசம்மந்தம் என்கிற தனது இயற்பெயரை தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக நன்னன் என்று மாற்றிக்கொண்டார். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் ‘பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட,, என்கிற வரிகளில்  மதுரையின் முதல் யாமம். எப்படி கழிந்தது என்பதைப் பற்றி வர்ணிக்கையில் தன்னுடைய வள்ளல்தன்மையால் புகழ்பெற்ற நன்னன் என்னும் மன்னனின் பிறந்தநாளின் போது அவன் மீது அன்பு கொண்ட மக்கள் தெருக்களில் அவனைக் கொண்டாடி ஆர்ப்பரிப்பது போல மதுரையின் முதல் யாமம் ஆர்ப்பரித்துக் கழிந்தது என்று பாடியிருப்பார். பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இந்த சூலை முப்பதாம் தேதி பிறந்தநாள். அதுவும் இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு தொடக்கம். அவரது பெயரைச் சொல்லும் தருணத்தில் நம்மையறியாமல் சொல் பற்றிய தேடலும் அது குறித்த துலக்கமும் நம்முள் எழுந்து நம்மை ஒழுங்கு செய்கிறது எனில் அது நன்னன் கற்றுத்தந்த தமிழின் ஆர்ப்பரிப்பு...

                 -இந்து தமிழ் திசை நாளிதழ் ஜூலை 29. 2023

.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...