திங்கள், 4 செப்டம்பர், 2023

 

சென்னை உலகப் புத்தகக் கண்காட்சி 2022

விரல்கள் எழுதுவதற்கு மட்டுமல்ல பரவலாக்கவும்தான்




கடந்த ஜனவரி மாதம் பபாசி என அழைக்கப்படும் பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்கள் சங்கம்  ஆண்டு தோறும் நடத்தும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் 16,17,18 ஆகிய தேதிகளில் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது குறித்து செய்தித்தாள்களில், காட்சி ஊடகங்களில் செய்தியாக பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சென்னையில் உலகப் புத்தகக் கண்காட்சியின் நோக்கம் பற்றியும் அதில் தமிழ்நாடு அரசு பங்களிப்பு  குறித்தும் விரிவான தகவல்கள் பெரும்பாலானோருக்கு அதிலும் படைப்பாளிகள் பலருக்கும் தெரியவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை.




சென்னை உலகப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு முன்வந்து நடத்துவதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியங்கள் பிற உலக மொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கம்தான். இதுவரை தமிழில் இருந்து உலக மொழிகளுக்கு அதிகபட்சம் நூறு நூல்கள்தான் மொழிபெயர்க்கப்பட்டு சென்றிருக்கின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மை. தமிழில் உலகத்தரத்துக்கு இணையான அல்லது அதற்கும் மேலான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் அவை உலகின் பார்வைக்கு எடுத்துச் செல்ல தனி நபர்கள்தான் அதிகம் முயற்சித்திருக்கின்றனர். முதன் முறையாக தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த முன்னெடுப்பை எடுத்திருக்கிறது என்பது பாராட்டுக்குரிய செயல்.




தமிழ்நாடு அரசு தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நூல்கள்  பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க ஆகும் தொகையை அளிக்கும் என்கிற அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் படைப்பாளிகள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கும் மகிழ்வளிக்கும் செய்தியாகும். பபாசியுடன் இணைந்து இத்திட்டத்தை நடத்தும் முடிவு என்பது உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கான சிறந்த வழியாக இருந்தது. இதற்கென CIBF என்கிற இணையதளத்தை உருவாக்கி அதில் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் பதிவு செய்யும்படி அறிவித்தார்கள். அதன்பிறகு புத்தக பரிமாற்றத்துக்கான உரிமம் பெறுவதற்காக வாங்குவோர், விற்போர் மற்றும் இரண்டிலும் விருப்பமானோர் பட்டியலை உருவாக்கினார்கள்.

உலக பதிப்பாளர்கள், முகவர்கள் பதிவதற்கான விரிவானத் தளமாக அது உருவாக்கப்பட்டது. அதே இணையத்தில் தங்கள் புத்தகங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை அவரவர் உருவாக்கி பதிவிடவும், சென்னை உலகப் புத்தகக் கண்காட்சியில் நேரடியாக சந்தித்து உரிமைப் பரிமாற்றத்துக்கான நேர பகுப்பு பிரிக்கப்பட்டு, இணையம் வழியாகவே தங்கள் விருப்பத்தேர்வை உறுதி செய்ய வசதிகளும் செய்யப்பட்டன. சென்னைப் புத்தகக்கண்காட்சி நடக்கும் அதே வளாகத்தில் உலகப் புத்தகக் கண்காட்சிக்கான தனி அரங்கு அமைக்கப்பட்டது. அந்த அரங்கில் புத்தக விற்பனை இல்லை, ஜனவரி 16,17,18 தேதிகளில் பதிப்பாளர்கள், முகவர்கள், படைப்பாளிகள் நேரடியாக உரையாடி நூல்கள் மொழிமாற்றத்துக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது.




சென்னை உலகப் புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே மொத்தம் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்பது பெருமகிழ்வளிக்கும் செய்தி. தமிழிலிருந்து அயலக மொழிகளுக்கு 90 ஒப்பந்தங்களும், தமிழில் இருந்து பிற இந்திய மொழிகளுக்கு 60 ஒப்பந்தங்களும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு 170 ஒப்பந்தங்களும், பிறமொழிகளுக்குள் 45 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. முதல் முயற்சியிலேயே இத்தனை ஒப்பந்தங்கள் என்பது பெருமிதத்துக்குரிய ஒன்றுதான்.



உலகப் புத்தகக் கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு உலக தரத்தில் இருந்ததாக அயலகத்தில் இருந்து வந்திருந்த பதிப்பாளர்கள் பாராட்டினார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட்டில் தொடர்ந்து உலகப் புத்தகக் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மத்தியில் நடைபெறும் ஜெர்மனி உலகப் புத்தகக் கண்காட்சியில் உலகம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேசத்துக்கென கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டு அந்த நாட்டினுடைய நூல்கள், கலாச்சார பண்பாட்டு வெளிப்பாட்டுக்கு என முதன்மையான கவனத்தை ஃபிராங்க்பர்ட் உலகப் புத்தகக் கண்காட்சியில் அளிக்கிறார்கள். 2006 ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. நம் தலைநகர் தில்லியிலும் உலகப் புத்தகக் கண்காட்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. 

சென்னை உலகப் புத்தகக் கண்காட்சி அரங்கின் வடிவமைப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட (100) ஒவ்வொரு மொழிக்கென ஒரு குறளை மாதிரிக்கு இடம்பெற்ற திருக்குறளின் மாபெரும் வடிவம் அரங்கினுள் வைத்தது போற்றுதலுக்குரிய செயல். ஒவ்வொரு நாளும் அயலக பதிப்பாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு உள்ளேயே நிகழ்த்தப்பட்டன.

சென்னை உலகப் புத்தகக் கண்காட்சிக்கென உருவாக்கப்பட்ட இணையதளம் (www.cibf.com) மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு அதில் படைப்பாளிகளையும் இணைவதற்கான வாய்ப்பை உருவாக்கியது மகத்தான ஒன்று. ஆனால் பதிப்பாளர்கள் அதில் பங்கேற்ற அளவு படைப்பாளிகள் கலந்து கொள்ளவில்லை. இதில் பதிப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது தகவல்கள் சென்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் வரும் காலத்தில் திரளாக கலந்துகொள்வது படைப்பாளிகளுக்கு நல்லது. குழு சாராத, பதிப்பகங்கள் தூக்கிப் பிடிக்காத படைப்பாளிகள் அல்லது பிரபல எழுத்தாளர்களின் அருட்கடாட்சம் பெறாத படைப்பாளிகள் தங்களின் படைப்புகள் வழியே தங்களை முன்னிறுத்துவதற்கான சூழல் இப்பொழுது இல்லை     

தங்கள் படைப்புகள் பிறமொழிகளுக்கு சென்றால் மட்டுமே நம் இலக்கியங்கள் பற்றிய கவனம் உலகின் பார்வைக்குச் செல்லும். இந்தியாவின் பிற மொழிகளுக்கு செல்வதற்கான வழிகளைக் கூட அறியாமல்தான் தமிழ்ப் படைப்பாளிகள் இயங்கி வருகின்றனர். சில குறிப்பிட்ட படைப்புகள் மட்டுமே தமிழில் இருந்து பிற இந்திய மொழிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மலையாளத்தில் எழுதப்பட்ட மிகச் சுமாரான படைப்புகள் கூட தமிழுக்கு வருகின்றன. ஆனால் தமிழின் உச்சமான இலக்கியங்கள் கூட பிற மொழிகளுக்குச் செல்வதில்லை. அதற்கான மாபெரும் வாயில் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர்கள் விழிப்புடனும் மிகச் சிறந்த வழிகாட்டல்களுடன் இதனைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் படைப்பாளிகள் எழுதுவதுடன் நம் வேலை முடிந்தது என்கிற மனப்பான்மையுடன் அசட்டையாக இருந்து வருகின்றனர். இந்த உலகப் புத்தகக் கண்காட்சியில் நான் அறிந்த வரையில் ஒரு இருபது எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அதிலும் இணையத்தைப் பயன்படுத்தி பதிப்பாளர்களைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களை  ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

இந்தியாவின் பிற மொழி பதிப்பாளர்களில் கேரளாவைச் சார்ந்த பதிப்பாளர்கள்தான் மும்முரமாக செயல்பட்டு அதிக ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கின்றனர். வடஇந்திய மொழிகளில் அனேகமாக இல்லை என்கிற அளவுக்குத்தான் பங்கேற்பு இருந்தது. இது தமிழ்நாடு அரசு தந்திருக்கின்ற மகத்தான வாய்ப்பு இதனை தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

முதலில் தாங்கள் வெளியிடும் நூல்கள் ISBN பதிவுடன் இருக்கிறதா என்று உறுதி செய்து இல்லை எனில் அதனைப் பெற வேண்டும். தங்கள் படைப்புகள் பற்றிய சுருக்கக் குறிப்புகளைக் கொண்ட கையேட்டினை ஆங்கில மொழியில் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டுக்கான நிகழ்வு பற்றிய அறிவிப்பு அனேகமாக இந்த ஆண்டு நவம்பரில் வந்துவிடும் அதற்குள் தயாராகவேண்டும். அறிவிப்பு வந்தவுடன் அதற்கான இணையதளத்தில் பதிவிட்டு தொடர்ந்து அதனைக் கவனித்து அனைத்து முறையான செயல்பாடுகளையும் உடனுக்குடன் முழுமை செய்யவேண்டும். பதிப்பாளர்களுடன் உரையாடும் வாய்ப்பையும், சரளத்தையும், தமிழ்நாடு அரசின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தும் உத்வேகத்துடனும் இயங்கினால் நமது  நல்ல இலக்கியங்கள் பிறமொழிகளுக்குச் சென்று சேரும். நமது கரங்கள் எழுதுவதற்கு மட்டுமல்ல பரவலாக்கவும்தான்...           

  .                        -சங்கு ஜூலை 2023 இதழ் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...