ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

 

ஒரு ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் ..


                                                -நெய்வேலி பாரதிக்குமார்


பேராசிரியர் நன்னன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பரிசு பெற்றச் சிறுகதை. முதல்வர் முன்னிலையில் வாசிக்கப்பட்டச் சிறுகதை 





தைத் திங்கள் ஒன்றாம் தேதி 2023

”அங்க போயி உங்க அப்பா பண்ற அலம்பலைப் பாருங்க?” கோபமாக முறையிட்டாள் வானதி. அவளது சிவந்த முகம் மேலும் சிவந்திருந்தது.

      ”ஏன் என்னாச்சு” என்றவாறு தினசரியை வைத்துவிட்டு எழுந்தான் முகுந்தன்.

      ”வயசானா மூளைப் பிசகிடுமா? உஙக பொண்ணை உக்கார வச்சிகிட்டு அவரு கூத்துக்கட்டி ஆடிக்கிட்டு இருக்காரு. பொங்கலுக்கு வந்தேன் புளியோதரைக்கு வந்தேன்னு எதையாச்சும் சொல்லிக்கிட்டு இங்க வந்து ஊர்நாட்டான் வேலை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காரு.கேட்டா பாரிவேட்டை ஆடறாராம். போயி நிறுத்துங்க அதை”

      ”இவரு வேற...சும்மா இல்லாம எதையாச்சும் பண்ணிக்கிட்டு” முனகிக்கொண்டே அப்பா இருக்கும் அறைக்குச் சென்றான் முகுந்தன்.

      ”அதாகப்பட்ட்து பாரி ஆகிய என் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட முன்னூறு சிற்றூர்களும், ஒரு லட்சம் குடிமக்களும், பல்லாயிரக்கணக்கான செடிகளும் மரங்களும் கனிகளும் பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் இன்னபிற தூசி தும்பட்டைகளும் வாழ்வதற்கான சகல உரிமையும் சகல அதிகாரமும் பெற்றவை. மாரி எப்படி பேதமற்று பெய்கிறதோ அப்படியே இந்த பாரியும் அன்பை, செல்வத்தைப்  பொழிவான்

      கொடி தளும்பினால் குடி தளும்புமே பூமியிலே.. இந்தப் பூமியிலே

       நாடி நரம்பெல்லாம் கொடை ததும்புமே தேகத்திலே பாரியின் தேகத்துலே

மீசையை முறுக்கிக்கொண்டே ஒரு கம்பீர நடை நடந்து அறையின் வாசல் கதவு வரை வந்தவர் முகுந்தனைப் பார்த்ததும் திகைத்து நின்றார்.

      ”என்னப்பா இதெல்லாம்?”

      ”உன் பொண்ணுக்கு ஏன் முல்லைக்கொடின்னு பேர் வச்சேன்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சு பேர். வச்சது நான்தானே அதானால நான்தானே தீர்க்கணும். அதான் பாரி வேட்டை நடத்திக்காட்டுறேன்”

      ”ஏற்கனவே நீங்க வச்ச முல்லைக்கொடி அப்படிங்கற பேரை அவளை பள்ளிக்கூடத்துல சேர்க்கறப்ப சொன்னப்ப அங்க உள்ளவங்க அப்படி சிரிச்சாங்க. பொண்ணோட அம்மா பேரு பச்சைக்கிளியா இல்லை முத்துச்சரமான்னு கேட்டாங்க”

      ”என் பேத்தி சிரிச்சாளா?”

      ”அவளும் சிரிச்சா ஆனா அவங்களைப் பார்த்து சிரிச்சா”

      ”அவ என்னோட பேத்தி இல்லையா? பறம்புமலை அதான் பிரான்மலையோட  கொழுந்துடா அவ.. சிங்கம்புணரி பக்கம் வந்து முல்லைக்கொடின்னு ஒரு குரல் கொடு தெருவுக்கு நாலு பேரு வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கூப்பிட்டீங்களான்னு கேப்பாளுக”

      ”ஊர் பெருமை போதும்பா இதை எல்லாம் வாயால கதையா சொன்னா பத்தாதா? கூத்து ஆடிக்காட்டனுமா?”

      ”அதெல்லாம் கலை. கூத்துதானேன்னு சொல்லக்கூடாது. போன தரம் வந்தப்ப வெடி போட கத்துக் குடுத்தேன் இப்ப வெடி போட்டு என்னையே திணற அடிக்கிறா உன் பொண்ணு”’

      ”வெடியா? இப்ப ஒண்ணும் திருவிழா இல்லையே”

      ”உனக்குத் தெரிஞ்ச வெடி அதுதான்.. நீ வெடி போடுடா கண்ணு”

      அதைச் செய்பவருக்கு அது தேவை இல்லை. அதை வாங்குபவர் அதைப் பயன்படுத்துவதில்லை. அதைப் பயன்படுத்துபவருக்கு அது தனக்குப் பயன்படுகிறது என்பதே தெரியாது. அப்படின்னா அது என்ன? உற்சாகமாகக் கேட்டாள் முல்லை.

      .”அய்ய்ய்யே என்னம்மா இது பள்ளிக்கூடத்துல இதை எல்லாம் போயி நீ சொன்னா கேலி பண்ணுவாங்க”

      ”அதெல்லாம் ஒண்ணும் சிரிக்கலைப்பா அவங்க எல்லாம் தப்புத் தப்பா பதில் சொன்னாங்க நான் சரியா சொன்னதும் கைத்தட்டினாங்க”

      ”உனக்கு பதில் தெரியலை அதான் நழுவுறே”–என்று தாத்தா சீண்டினார்.

      ”நான் சொல்லட்டா” என்றாள் முல்லை ஆர்வமாக

      ”சரி சொல்லு” என்றான் முகுந்தன் சலிப்பாக

      ”அது என்னன்னா சவப்பெட்டி” என்று அவளே கைத்தட்டிக்கொண்டு சிரித்தாள்.

      ”சகிக்கலை” என்றாள் பின்னால் நின்றிருந்த வானதி

      வானதி  இன்னும் ஏதாவது மனவருத்தப்படும்படி சொல்லிவிடப் போகிறாளே என்று பயந்து முகுந்தன் “அவங்க காலம் வேற உங்க காலம் வேற நீங்க புரியாம இதை எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு இருக்காதீங்கப்பா”

      ”காலம் எல்லாம் மாறத்தான் செய்யும் ஆனா தாத்தாக்களின் உலகத்துலதான் பேரன் பேத்திங்க இருப்பாங்க உனக்கு கூட என்னை விட எங்கப்பா மேலத்தான் பாசம் அதிகம் ஏன்னு கேக்காதே அது அப்படித்தான் அதெல்லாம் உனக்கு பேரன் பேத்தி பொறக்கறப்பத்தான் புரியும் நீ கெளம்பு கெளம்பு” அவரது குரலும் மீசையும் இளைக்கவே இளைக்காது அதே கம்பீரத்துடன்தான் இருந்தன.

      முல்லைக்கொடி கையில் ஒரு உண்டியலை எடுத்து வந்து “கெளம்பறதுக்கு முன்னாடி இதுல ஒரு ரூபாய் போட்டுட்டுப் போங்க” என்று நீட்டினாள்.

      ”இது என்ன புதுப்பழக்கம்? ஏது இந்த உண்டியல்? இதெல்லாம் ஒண்ணும் சரியாப்படலை” என்று கோபமாக முனகிவிட்டு நகர்ந்தாள் வானதி.

”நான்தான் வாங்கிட்டு வந்தேன். வெடி போட்டா பதில் சொல்லனும் இல்லைன்னா இதுல ஒரு ரூபாய் போடனும் நான்தான் மொதல்ல ஒரு ரூபாய் போட்டவன். நீயும் பதில் சொல்லலை. அப்ப உண்டியல்ல பணம் போடு அந்தக் காலத்துல எல்லாம் எங்க அப்பத்தா தின்பண்டம் வாங்கனும் காசு குடுன்னா இது மாதிரி அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும் இல்லைன்னா அவங்க சொல்ற வீட்டுவேலையைச் செய்யணும். தேங்காய் உரிச்சுக்கொடுக்கணும், தோட்டம் கொத்தணும், ஒட்டடை அடிக்கணும் இப்படி ஏதாச்சும் செஞ்சாத்தான் கொடுப்பாங்க. இப்பல்லாம் கேட்ட உடனே வாங்கிக் கொடுத்தடறீங்க எப்படி பணத்தோட அருமை புரியும்? அதுக்குத்தான் இந்த உண்டி”

      முகுந்தனுக்கு நியாயமாகத்தான் பட்டது. தன் சட்டைப்பையில் இருந்து பத்து ரூபாய்த் தாளை எடுத்தான்.

      ”அதெல்லாம் இல்லை ஒரு ரூபாய்க்கு மேல ஒரு ரூபாய் கூட கிடையாது” என்றாள் முல்லை கண்டிப்பானக் குரலுடன்.

      ”ஏன் அப்படி?”

      ”ஆமாண்டா.. பணம் அதிகமா போயிட்டா அப்புறம் பொய் பித்தலாட்டம் திருட்டு எல்லாம் கூட வந்துடும் ஒரு ரூபாய் காசு இருந்தா போடு.. போதும்”

      நல்லவேளையாக சட்டைப்பையில் இருந்தது அதை எடுத்து போட்டபடி. ”இந்தப் பணத்துக்கு என்ன வாங்கி சாப்பிடுவே?” கேட்டான் முகுந்தன்.

      ”அதை இப்ப நாங்க சொல்ல மாட்டோம்” என்று தாத்தாவைப் பார்த்துக்கொண்டே  கண்ணடித்தாள் முல்லை.

 

 

பிப்ரவரி 6, 2023

ந்தியோக் நகரம் முழுக்க துர்நாற்றம் வீசியது. ஒட்டுமொத்த துருக்கியின் பெருமைமிகு நகரமாகக் கருதப்பட்ட ஹடாய் மாகாணம் இன்று ஒரு இமாலயக் குலுக்கலில் புரண்டு கிடந்தது. மெஹெஜ் அக்சோல் தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய தன்னுடைய வீடு மண்ணுக்குள்ளேயே தலைக்குப்புற விழுந்து கிடந்ததைக்கண்டு ஓலமிட்டு அழுதார். என்ன ஒரு பரிதாபம் அவரது அழுகுரலைக் கேட்கக் கூட எவரேனும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எங்கு திரும்பினும் பிணவாடை. மீட்புக்குழு ஒரு வாகனத்தில் அதிவேகமாக வந்து இறங்கி அவரிடம் ”உங்களுக்கு காயம் எதுவும் உண்டா?” என்று கேட்டனர் .

“நான் மிகக்கொடுமையான பிறவி போலிருக்கிறது இந்த ஊரையே இந்த மண் விழுங்கிவிட்டது. எனக்கென்று உறவுகள் யாரும் இல்லை. நான் தனியன். வியாபாரத்துக்காக வெளியூர் சென்றிருந்தேன். என்னை உயிரோடு எதற்காக இந்த பூமி இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது?”

“உறுப்புகள் இழந்து காயங்களோடு பிழைத்தால்தான் மிகக் கொடூரம் அன்பரே முகாமில் இடமில்லை மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை பிழைப்பது பெரும் சவால். வாழ்வது அதனினும் பெரும் சவால். உங்களுக்கு யாருடைய அபயக் குரலாவது கேட்டதா? எவருடைய மூச்சொலியையாவது உணர்ந்தீர்களா?”

“இல்லை நண்பர்களே”

“நல்லது நீங்கள் இதற்காகத்தான் பிழைத்து இருக்கிறீகள் போலும் அப்படியே இங்கேயே அமர்ந்திருங்கள் மயங்கி கிடக்கும் யாராவது இடிபாடுகளுக்கு கீழே இருந்து குரல் கொடுக்கலாம் அல்லது பெருமூச்சு விடலாம் காதுகளையும் கண்களையும் அகல விரித்துக் காத்திருங்கள். ஒருவேளை அப்படி எதுவும் நீங்கள் உணர்ந்தால் இங்கே கற்களுக்கு அடியில் கிடக்கும் அடர் வண்ணத் துணியை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு உயரமான பகுதியில் நின்றுகொண்டு துணியை பலமாக அசையுங்கள் தொலைத் தொடர்பு வசதிகள் எதுவும் இப்பொழுது இல்லை. மீட்புக்குழுவினர் வருவதற்கு அது ஒன்றுதான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி”

“விழுந்து கிடக்கும் என் வீட்டின் கீழே என் சக குடித்தனக்காரர்கள் இருக்கலாம் மீட்பர்களே அவர்களைத் தேடும் உத்தேசம் எதுவும் இல்லையா? உங்களால் உதவ முடியாதா?”

“ஒரு சத்தமோ அசைவோ இல்லாத இடத்தில் வீணாகத் தோண்டிக் கொண்டிருக்க முடியாது அதற்குத் தேவையான இயந்திரங்கள் போதுமான அளவில் இல்லை. ஆட்களும் இல்லை. உங்களுக்கு இந்த மனிதர்களின் மீது உண்மையிலேயே அன்பிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இப்படியே அமர்ந்து உயிரின் ஒலி எங்கேனும் கேட்கிறதா என்று உற்று கேட்டுக்கொண்டிருங்கள். அல்லது ஏதேனும் ஒரு அசைவு தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டிருங்கள்”.

“அப்படியானால் நான் இங்கேயே இப்படியே தனிமையில் கிடக்க வேண்டியதுதானா?”

“ஹடாய் மாகாணத்தில் யாரும் தனிமையில் இல்லை. உங்கள் கண்ணெதிரே பிணங்கள் இந்தக் கட்டடங்களுக்கு கீழே கிடக்கின்றன. ஒருவேளை அவற்றுள் எவற்றுக்கேனும் ஆச்சர்யகரமாக உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கலாம்., உயிர்ப்பான ஒரோண்டாஸ் நதி உங்களுக்கு சற்று தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. லெவாண்டஸ் கடல் அலையின் சத்தத்தை நீங்கள் உற்றுக் கவனித்தால் இன்றிருக்கும் மயான அமைதியில் உங்களால் கேட்க முடியும். கண்ணுக்கு எதிரே பிரமாண்டமாக நூர் மலைகளின் பச்சை வெளிகள் தெரிகின்றன. இது நாள் வரை கவனித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது கவனிக்கும் நேரம் வந்துவிட்டது. அமைதியாக கவனியுங்கள் நண்பரே” சொல்லிவிட்டு அவர் வாகனத்தில் ஏறிக்கொள்ளும் முன்பாக

“நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்

“இனிப்பு உருளைக்கிழங்கும், கிட்டே(வெள்ளரி)வும் விற்பனை செய்கிறேன். உங்களுக்கு கிட்டே வேண்டுமா?” தன் பையில் இருந்து வெள்ளரிக்காய்களை எடுத்துத் தந்தார். அவர் மகிழ்ச்சியோடு அவற்றை வாங்கிக்கொண்டார்..

“அய்யா உங்கள் பெயரைச் சொல்லவில்லையே. மீண்டும் உங்களை அழைக்க வேண்டும் என்றால் என்ன பெயர் சொல்லி அழைப்பது?”

“என் பெயர் ஹபீப் நஜ்ஜார். மீட்பு வாகனங்கள் வந்தால் என் பெயரைச் சொல்லுங்கள் அவர்கள் உதவுவார்கள் அல்லது என்னை அழைப்பார்கள்”

“நான் மெஹெஜ் அக்சோல்”. அவர்கள் கிளம்பினார்கள்.

சில கற்களின் இடுக்குகள் வழியே இரத்தக்கறைப் படிந்த கைகள் தெரிந்தன சிலவற்றில் கால்கள் மட்டும் தெரிந்தன. அருகே சென்று அவற்றை வருடிப் பார்த்தார் இடிந்த கட்டட கற்களின் பாரம் அவரால் அசைக்க முடியாததாக இருந்தது. ஒருநாள் பூகம்பம் ஒட்டுமொத்த துருக்கியையே புரட்டிப் போட்டிருந்தது. வெளியே தெரிந்த உறுப்புகளைக்கொண்டு அவை ஆர்மீனியர்களுடையதா, அரேபியர்களுடையதா அலாவியர்களுடையதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நிலநடுக்கம் எல்லோரது அடையாளங்களையும் அழித்திருந்தது.

காற்று சற்று ஓய்ந்திருந்தபோது மெல்லிய முனகலொலிக் கேட்டது

“யாருடைய குரல் இது? எங்கே இருக்கிறீர்கள் இன்னும் பலமாகக் குரல் கொடுக்க முடியுமா?” பதறினார் மெஹெஜ் அக்சோல்

சிறிது நேரம் எதுவும் கேட்கவில்லை. மெஹெஜ் அக்சோல் தன்னுடைய காதுகளை பூமியின் மீது படும்படி தலையை சாய்த்துக்கொண்டு கேட்டார். சற்று முன்புதான் ஹடாய் மாகாணத்தையே உலுக்கி உதறிய குற்றஉணர்ச்சி எதுவுமில்லாமல் மிக அமைதியாக இருந்தது குருதி படிந்த அந்த நிலம்.

சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் குரல்.... இம்முறை உறுதியாகச் சொல்ல முடியும் அது ஒரு சிறுமியின் குரல். மெதுவாக ஊர்ந்து ஒவ்வொரு கல்லாக நெருங்கிப் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு குரல் வந்த திசையைக் கண்டுபிடித்துவிட்டார். மிகுந்த பலத்துடன் மண்மூடிய அப்பகுதியை கைகளால் வேகமாகத் தோண்டினார். இப்பொழுது அந்தப் பூமுகம் தெரிந்தது ஒரு கல்லுக்கும் மண் கட்டிக்கும் இடையே அதிக சேதமின்றி முகம் மட்டும் பத்திரமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. அப்பகுதியை முற்றிலுமாக சுத்தம் செய்தார். வெளிச்சம் படுமளவு அனைத்தையும் அகற்றினார். உடலின் பெரும்பகுதி இன்னமும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கிடந்தது. காப்பாற்றிவிடலாம் உறுதியாகக் காப்பாற்றிவிடலாம் அருகே கிழிந்து கிடந்த சிவப்பு நிறத் துணியை எடுத்துக்கொண்டு உயரமான இடத்தை நோக்கி ஓடினார் அங்கிருந்து வேகமாக அந்தத் துணியை அசைத்தார். துயரங்களின் நெரிசல்களுக்கு இடையில் அவரையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி ஊற்று கொப்பளித்தது

சில நிமிடங்களில் ஒரு அவசர் உதவி வாகனம் வந்தது அதிலிருந்தவர்கள் அவசரமாகக் குதித்தனர் விளக்கம் சொல்ல அவகாசமில்லை.

“அங்கே ஒரு பெண் குழந்தை.. இன்னும் உயிர் இருக்கிறது” சொல்லியபடி ஓடினார் மெஹெஜ். வாகனத்தில் வந்தவர்களும் பின் தொடர்ந்தார்கள். கைவசமிருந்த மண் அகற்றும் கருவிகளால் விரைந்து அகற்றினார்கள் அவளது கரங்கள் காயமடைந்து இரத்தச் சகதியாக இருந்தன. காலில் முறிவு இருக்க வேண்டும் உதவுவதற்காக மேலே பட்டபொழுது வலியில் அவை துடித்தன. குழுவில் இருந்த மருத்துவர் அவசர மருத்துவச் சிகிச்சைகளைச் செய்தார். அவளது சுவாசத்தின் அளவை தன்னிடமிருந்த கருவியால் அளந்தார் பின்னர் தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினார்

“என்ன ஆயிற்று பிழைத்து விடுவாளா?”

“பிராண வாயு அளவு  மிகவும் குறைவாக இருக்கிறது. மருத்துவமனைகளில் அதுதான் தட்டுப்பாடாக இருக்கிறது முறிவுகளை, காயங்களைக் கூட சரி செய்துவிடலாம் போதிய சுவாசக் கருவிகள் இல்லாமல் துருக்கியே மூச்சுத் திணறுகிறது”

“நான் ஹபீப் நஜ்ஜாரின் நண்பன் ஏதாவது செய்யுங்கள்”

“சிபாரிசுகளுக்கு இப்பொழுது மதிப்பெதுவும் இல்லை நண்பரே. கையடக்க சுவாசக்கருவிகள் அதிகம் தேவைப்படுகின்றன.... பக்கத்து  நாடுகள் எல்லாம் பகை நாடுகளாக இருக்கின்றன. ஏதேனும் ஒரு மனிதாபிமானம் மிக்க நாடுதான் தர வேண்டும். சரி உடனே இவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். பேசுவதற்கு நேரமில்லை” அவசரமாக அவளை வாகனத்தில் ஏற்றினர்.

கல்லக்குறிச்சி தனியார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலகம்.

மாசி 8, 2023

ள்ளியின் நிர்வாக இயக்குனர் சேகரன் மிகக்கோபமாக தலைமை ஆசிரியரிடம் ஆங்கிலத்தில் கத்திக்கொண்டிருந்தார்.

“ஒரு பள்ளிவளாகத்தில் உண்டியல் வைத்து ஒரு மாணவி சூதாட்டம் நடத்தி பணம் சேர்த்திருக்கிறாள் ஆனால் உங்களுக்கு அது தெரியவே இல்லை என்ன நிர்வாகம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை”

“அவள் வெளிப்படையாக எதையும் செய்யவில்லை. புதிர் விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறாள் தனது பைக்குள் யாருக்கும் தெரியாமல் உண்டியல் வைத்திருந்து பதில் சொல்லாதவர்கள் ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள்.  அதுவும் உணவு இடைவேளைகளில் அதனால் யாருடைய கவனத்துக்கு வராமல் போய்விட்டது.”அவரது பதிலும் ஆங்கிலத்தில்

“யாரந்த தமிழாசிரியர் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது”

“கதிரவன். இளைஞன் ஆர்வக்கோளாறில்,,,,”

நாளைக்கு காலையில் அந்தப் பெண்குழந்தை பேரென்ன முல்லைக்கொடி அவளது பெற்றோரையும், அந்தக் கதிரவனையும் வரச்சொல்லுங்கள் இருவருமே பள்ளிக்குத் தேவையில்லை வெளியே அனுப்பிவிடலாம்” கோபமாக வெளியேறினார்.

மாசி 9, 2023

ள்ளியின் நிர்வாக அலுவலகம் கல்லக்குறிச்சி

அலுவலக நாற்காலிகளில் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கதிரவன் முல்லைக்கொடியின் பெற்றோர் மற்றும் முல்லைக்கொடி ஆகியோர் வெவ்வேறு மனநிலைகளில் அமர்ந்திருந்தனர்.

நிமிடத்துக்கு ஒருமுறை வானதி தன்னருகில் இருந்த முல்லையை கடிந்தபடி இருந்தாள் முல்லையோ எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கமான தனது உற்சாகப் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். தலைமை ஆசிரியரிடம் மிகப் பணிவாக முகுந்தன் மகள் மீது எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தான் அவர் பதிலெதுவும் சொல்லாமல் தன் முன்னிருந்த கோப்புக்களைப் பார்வையிடுவது போன்ற பாவனையில் இருந்தார்.

“முதல்ல உங்க அப்பாவை ஊருக்கு அனுப்புங்க இனிமே பொங்கலுக்கு வர்றேன் உப்புமாவுக்கு வர்றேன்னு இங்க கிளம்பி வரக்கூடாது. உங்க தம்பிக்கிட்ட கண்டிச்சு சொல்லிடுங்க கூட ஆயிரம் ரூபாய் வேணும்னாலும் அனுப்பிடலாம்.” சன்னமான குரலில் பற்களைக் கடித்தபடியே வானதி முகுந்தனின் காதுகளில் ஓதினாள்.

“சரி சரி இப்ப எதுக்கு அந்தப் பேச்சு? வீட்டுக்குப் போயி பாத்துக்கலாம்” தணிந்த குரலில் சொன்னான் முகுந்தன். அப்பொழுது அறைக்குள் நுழைந்த சேகரனின் முகத்தில் எதிர்பார்த்த கடுமை இல்லை. எழுந்து நின்ற அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு தன் உதவியாளரிடம்

“பத்திரிகை ஆளுங்க வந்தா வெளியே உக்கார வைங்க நான் சொல்ற வரைக்கும் உள்ளே விடவேண்டாம். எல்லாருக்கும் குடிக்க ஏதாவது சொல்லிடுங்க” அவர் தலையாட்டிவிட்டு வெளியேறினார்.

“அப்புறம் நீங்கதான் முல்லையோட அப்பாவா”

“ஆமாங்க அவ சின்னப்பிள்ளை ஏதோ தெரியாம பண்ணிட்டா.. இந்தத் தடவை மன்னிச்சு விட்டுடுங்க இனிமே இது மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றான் முகுந்தன் கெஞ்சலானக் குரலில்..

“தில்லியில் இருக்கிற துருக்கி தூதரகத்திலேர்ந்து ரெண்டு கடிதம் வந்திருக்கு. ஒண்ணு துருக்கியோட பிரதமர் அலுவலகத்திலேர்ந்து வந்திருக்கு இந்தியாவில் இருந்து துருக்கி பூகம்பத்துக்காக நிறைய மருந்துப் பொருட்கள் சுவாசக்கருவிகள் எல்லாம் வந்தன அதில் கல்லக்குறிச்சியில் இருந்து பள்ளி மாணவர்கள் தங்களுக்குள் சேமித்து முல்லை என்னும் மாணவி அனுப்பிய பணம்  ரூபாய் ஏழாயிரமும் அடங்கியது என்கிற செய்தி படித்து நாங்கள் நெகிழ்ந்தோம் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வந்தன இருந்தாலும் இந்த ஏழாயிரம் ரூபாய் எங்களைப் பொறுத்தவரை பல கோடி ரூபாய்களுக்குச் சமம் ஏனெனில் குழந்தைகள் சேமித்து அனுப்பியதால்  அவர்களை கௌரவப்படுத்த அந்தத் தொகைக்கு  சில சுவாசக்கருவிகளை வழங்க ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டது ஆகவே அந்தக் குழந்தைகளுக்கு எங்கள் தேசத்து மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவியுங்கள்’ என்று ஒரு கடிதம்

இன்னொன்று அங்குள்ள ஹடாய் மாகாணத்தின் அந்தியோக் நகரத்தில் இருந்து மெஹெஜ் அக்சோல் என்பவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இடிபாடுகளில் சிக்கி இருந்த அயிலா என்னும் சிறுமிக்கு சரியான நேரத்தில் சுவாசக்கருவிகள் வந்து சேர்ந்ததால் அவள் பிழைத்துவிட்டாள். அவளுடைய பெற்றோர்கள் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார்கள். உறவுகள் யாருமற்ற தனக்கு ஒரு மகளை உயிரோடு தந்துவிட்டீர்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றிகள் என்று எழுதி இருக்கிறார்.” படித்து முடித்ததும் அவரது முகத்தில் பெருமிதம் முகுந்தனும் வானதியும் புன்னகையுடன் முல்லையைப் பார்த்தனர்.

“இந்த யோசனை உனக்கு எப்படிம்மா வந்துச்சு?”

“எங்க தாத்தாதான் சொன்னார் பாரி வேடம் போட்ட பரம்பரை நம்முது அதனால சேர்த்த பணத்தை நல்ல செயல்களுக்கு செலவு பண்ணனும் அப்படின்னு சொன்னார் தமிழய்யா கிட்ட இவ்வளவு பணம் சேர்ந்திருக்கு இதெல்லாம் வினாடி வினா போட்டியில தோத்தவங்க தந்த பணம்னு சொன்னேன் அவர்தான் அன்னிக்கு துருக்கியில பூகம்பம் நிறைய பேரு அவதிப்படறாங்க அவங்களுக்கு அனுப்புவோம்னு சொல்லி அனுப்பினார்”

பள்ளி நிர்வாகிக்கு தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அவர் அவற்றுக்கு பெருமைப் பொங்க பதிலளித்துக் கொண்டிருந்தார்

“ஆமாம் அந்தப்பொண்ணு எங்க பள்ளிதான். அரை மணி நேரம் கழிச்சு வாங்க இங்கதான் இருக்காங்க ஆமாம் கதிரவனும் எங்க கூடத்தான் இருக்காரு அதுக்குள்ளே எப்படி உங்களுக்கு தகவல் வந்துச்சு? ஒ அப்படியா கல்வி அமைச்சர் அலுவலகத்திலேர்ந்தா சரி சரி வாங்க” என்று சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“பாருங்க எத்தனை பேரு? வீட்டிலேர்ந்து வர்றதுக்குள்ள ஏகப்பட்ட பேரு கூப்பிட்டு பாராட்டுனாங்க. என்ன இருந்தாலும் அந்தக் காலத்து மனுஷங்க மனுஷங்கதான் அவங்க எப்படி பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லித்தராங்க பாருங்க..” என்றவர் தலைமை ஆசிரியர் பக்கம் திரும்பி “வெளியே கும்பலா பத்திரிகைக் காரவங்க நிக்கிறாங்க நீங்களும் போயி கூட நின்னு பேட்டி குடுங்க மறக்காம நம்ம பள்ளிக்கூடத்து பேரைச் சொல்லிடுங்க.. அடுத்த வாரம் இவங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்திடலாம். சரிம்மா முல்லை எனக்கு ஒரு விடுகதை போடு பாக்கலாம்”

”நான் எனது முகாமை விட்டு தெற்கு நோக்கி 3 மைல்கள் சென்றேன். அப்புறமா கிழக்குப் பக்கம் திரும்பி 3 மைல் தூரம் நடந்தேன். அப்புறம் நான் வடக்கே திரும்பி 3 மைல்கள் நடந்தேன், அந்த நேரத்தில என் கூடாரத்திற்குள் ஒரு கரடி என்னோட உணவை சாப்பிட்டு விட்டது அப்படின்னா! கரடி என்ன நிறத்தில் இருந்தது?

“இப்படி எல்லாம் குழப்பினாலும் என்னை ஏமாத்த முடியாது. கரடின்னா கறுப்பு நிறத்துலதானே இருக்கும்

”அதான் இல்லை கரடியின் நிறம் வெள்ளை. ஏன்னா. நீங்க தெற்கே 3 மைல்கள், அப்புறம் கிழக்கே 3 மைல்கள், அதுக்கப்புறம் வடக்கே 3 மைல்கள் நடைபயணம் செஞ்சீங்கன்னா, உங்களோட தொடக்கப் புள்ளியில் மீண்டும் முடிவடையும் ஒரே இடம் வட துருவத்துல. மட்டும்தான். துருவக் கரடிகள்தான் வட துருவத்தில் வாழும் ஒரே கரடி இனம் , அவை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். அதனால கரடியின் நிறம் வெள்ளை”

“ஓ இதுல புவியியல் அறிவியல் எல்லாம் இருக்கு போல நான் ஏதோ வார்த்தை விளையாட்டுன்னு நினைச்சேன். அப்ப சரி இந்தா” தன் சட்டைப்பையில் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்தார்

“ஒரு ரூபாய்க்கு மேல ஒரு ரூபாய் கூட கிடையாது”

“அதை ஒரு ரூபாய்க்கு மேல ஒரு ரூபாய் கூட இல்லைன்னுதானே சொல்லனும்”

“அய்யோ... பாரி தன் வாயால இல்லைன்னு சொல்ல மாட்டார் அப்படின்னு எங்க தாத்தா சொன்னார். கிடையாதுன்னா தர வேண்டாம்னு அர்த்தம் ஒரு ரூபாய் மட்டும் போடுங்க”

“ஓ அப்படியா” சிரித்தபடி போட்டுவிட்டு ”உன்னால ஒரே ராத்திரியிலே பள்ளியோட பேரு உச்சத்துக்குப் போயிடுச்சு” பெருமையோடு சொல்லிவிட்டு ”நம்ம பள்ளிக்கூடத்துல இதை விட பெரிய உண்டியல் வைங்க. பள்ளி ஆரம்பிக்கறதுக்கு முன்னால இந்த மாதிரி புதிர் போட்டி வைங்க அறிவும் வளரும் நல்ல மனசும் வளரும் என்ன நான் சொல்றது?” என்றபடி வெளியே சென்றார் நிர்வாக இயக்குனர். .முகுந்தனும் அவர் பின்னாலேயே கிளம்பினான்

“நீங்க எங்க போறீங்க?” வானதி பாய்ந்துக் கேட்டாள்.

“தம்பிகிட்ட அப்பாவை எப்ப வந்து கூட்டிட்டு போறேன்னு கேக்கனும். இங்க சரியா கிடைக்க மாட்டேங்குது அதான் வெளியில போயி பேசலாம்னு..”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் உங்கப்பா இங்கேயே இருக்கட்டும்”

“அப்படியா இருக்கட்டும்” மர்மப்புன்னகையுடன் முகுந்தன் வெளியே எட்டிப் பார்த்தான் பத்திரிகையாளர் கூட்டம் அவர்களுக்காக காத்திருந்தது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...