துரோகத்தின் கண்கள்
நெய்வேலி
பாரதிக்குமார்
மின் கிறுக்கல் மின்னிதழ் நடத்திய வரலாற்றுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை
அந்த அவை நள்ளிரவில் கூடி இருந்தது
தளியின் பாளையக்காரர் வெங்குடுபதி எத்திலப்ப நாயக்கர் அழைத்திருக்கிறார் என்றால்
அது நிச்சயம் முக்கியமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் பரப்பில்
நீண்டிருந்த அந்த அரண்மனை ஆங்காங்கே செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியில்
பேரழகுடன் மின்னியது. அரண்மனையைச் சுற்றிலும் வெட்டி வைக்கப்பட்ட அகழியில் சுற்றி
வந்த நீர், தன் மீது நிலவை ஏந்திக்கொண்டு
கர்வத்தோடு வலம் வந்து கொண்டிருந்தது. எத்திலப்ப நாயக்கருக்கு நீர்ப்பாசனத்திலும்
அதனைச் சிறப்பாக கையாள்வதிலும் பெரும் திறன் இருப்பதை அங்கு வந்தவர்கள்
வழியெங்கும் மனதுக்குள் குறித்தபடி வந்திருந்தனர்
“சித்திரை மாதத்திலும் கூட இத்தனைக்
குளிர்ச்சியாக இருக்கிறதே இந்த அரண்மனை” என்று கண்களை மூடி காற்றை ரசனையோடு
சுவாசித்தார் இராமநாதபுரம் ஜமீன் கல்யாணித்தேவர். “நாமெல்லாம் காற்றை கடமை போல
சுவாசிக்கின்றோம் உண்மையில் பலநேரம் நாம் சுய நினைவின்றி சுவாசிக்கிறோம் இல்லையா
பெருமாள் பிள்ளை?”
“ஆமாம் உண்மைதான்”
“ஆனால் சுவாசம்தானே நாம் வாழ்தலுக்கான அடையாளம்.
ஆனால் அதை ஏன் நாம் ரசித்து செய்வதில்லை என்று பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால்
இங்குதான் காற்றைக்கூட உணரமுடிகிறது”
“எத்திலப்பர் காற்றையும் மாற்றும் வல்லமைக்
கொண்டவர் இல்லையா” பெருமாள் பிள்ளை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
“அதெல்லாம் அவரது குருதியில் குடியேறிய குணம்.
அவரது தாத்தாவுக்கெல்லாம் தாத்தா ராயர் மாயன நாயக்கர்தான் இந்த திருமூர்த்தி
அணையைக் கட்டினார். இருநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் அந்த அணை அத்தனை வலுவாக
இருக்கிறது. அவரது இரத்தம்தானே இவருக்கும்.. அதனால்தான் தளி பாளையம் இத்தனை
வளமாக, செழிப்பாக இருக்கிறது”
“கட்டபொம்மனை விசாரணைக்கு என்று நயவஞ்சகமாக
அழைத்து அந்தப் பறங்கியன் பானர்மேன் தூக்கில் போட்டானே அது நடந்து ஒரு
வருடமாகிவிட்டது இல்லையா? அதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சி எதையும் திட்டமிட்டு இருப்பாரோ?”
“நானும் அதைத்தான் யூகிக்கிறேன் ஏற்கனவே
விருப்பாட்சி, பழனி, தளி, ஆயக்குடி, இடையர்க்கோட்டை, ஊத்துக்குழி பாளையங்களை ஒரு
அணியில் இணைத்து தீபகற்பக் கூட்டணி என்று ஒரு அமைப்பாக உருவாக்கிய செய்தி கிடைத்து
வெறியான பறங்கியன் மக்லாயிடு, ஓசூர் முகம்மது ஹசனைப் பிடித்துக்கொண்டு
போய்விட்டான்”
“கூட்டணி அமைத்த பாளையக்காரர்களை விட்டுவிட்டு
சம்மந்தமில்லாமல் ஓசூர்க்காரனை எதற்கு பிடித்துக்கொண்டு போயிருக்கிறான் அந்த வெள்ளெலி?”
“பாளையக்காரர்கள் பக்கம் இனி தலைவைத்துப் படுக்க
பறங்கியர்கள் அஞ்சுவார்கள். கோபால் நாயக்கர் சாதாரண ஆள் இல்லை திப்புசுல்தானிடம்
எப்படியோ நட்பு கொண்டு அவரது தளபதி ஷாஜிஹானை தனக்கு பக்க பலமாக சேர்த்துக்
கொண்டார். ஷாஜிஹான் வந்ததும் ஓசூர் புட்டா முகமது, முகம்மது ஹசன் இச்சாப்பட்டி
ரமனுல்லாகான் என வரிசையாக கோபாலர் பக்கம் ஜமீன்கள் சேர ஆரம்பித்துவிட்டனர்
அதனால்தான் மக்லாயிடுவுக்கு கிலி கிளம்பி இருக்கிறது”
“சரி அதோ அமர்ந்திருக்கிறாரே அவர் எந்த ஜமீன்?”
“அது மலபார் கேரள வர்மா, அந்தப்பக்கம்
அமர்ந்திருப்பவர் சிவகங்கை சீமை சின்னமருதுவின் தளவாய், இன்னொருவர் மைசூர்
கிருட்டிணப்பாவின் தளபதி. எல்லாம் கோபால் நாயக்கரின் கூட்டாளிகள்தான். ஆக எத்திலப்ப
நாயக்கர் ஏதோ திட்டத்துடன்தான் நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார் என்று
நினைக்கிறேன்”
கூட்டத்தில் சிறு சலசலப்பு கிளம்பியது. கம்பீரமான
மீசை, ஆறடி உயரம், அகன்ற மார்பு, நிமிர்ந்த நடை என எத்திலப்பர் அவைக்குள் நுழைந்த
போது அவை நிரம்பியது போல எல்லோரும் உணர்ந்தனர் அவரது கண்கள் எல்லோரையும் ஒரு முறை
தீர்க்கத்துடன் பார்த்தன. இரு கரங்களையும் கூப்பி எல்லோரையும் வணங்கினார்
எத்திலப்பர்.
“உங்கள் அனைவரையும் இன்னொரு முறை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பினை நான் வணங்கும் ஜக்கம்மா
தந்திருக்கிறாள். அந்தத் தெய்வத்தை வணங்கி உங்களை எல்லாம் வரவேற்கிறேன்”
எல்லோரும் எழுந்து அவரை வணங்கினார்கள்
“உங்களுக்கெல்லாம் நிச்சயம் நினைவில் இருக்கும் என்று
நம்புகிறேன் இன்றைக்கு அக்டோபர் 16 ஆம் தேதி.
போன ஆண்டு இதே நாள் சதிகார வெள்ளையன் பானர்மேன் மிகத்தந்திரமாக எங்கள் மாமன்
கட்டபொம்முவை விசாரணைக்கென்று அழைத்து தூக்கில் போட்டான். இத்தனை உறவுகள்
இருந்தும் அதைத் தடுக்க முடியாமல் கையறு நிலையில் தவித்திருந்தோம் அந்தத் துயரின்
வடு ஆறுவதற்குள் அந்த பானர்மேன் இடையர்க்கோட்டை ஜமீனுக்கு ஒரு தாக்கீது அனுப்பி
இருக்கிறான் எல்லா பாளையக்காரர்களும் கும்பினியாரிடம் அடிபணிந்து போகாவிட்டால்
கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட நிலைதான் எல்லோருக்கும் என்று திமிர்த்தனமாக கடிதம்
எழுதியிருக்கிறான்”
“என்ன ஆணவம்?”
“அதே கேள்விதான்
எனக்கும் எழுந்தது ரத்தம் கொதித்தது கோபால நாயக்கரும் அதே போல கொந்தளித்தார்.
அந்தப் பறங்கியனை கைது செய்து இழுத்து வர . இடையர்க்கோட்டை, மேலூர் ஜமீன் படையையும்
இணைத்துக்கொண்டு சத்திரப்பட்டி ஜமீன் அரண்மனையில் வெள்ளையன் இன்னஸ் படையை
எதிர்த்து வீரமுடன் சமர் செய்தனர் அந்த யுத்தத்தில் நமது கோபால் நாயக்கரின் மகன்
முத்து வெள்ளை நாயக்கர் வீரமரணம் அடைந்துவிட்டார்”
“என்ன உண்மையாகவா? இது
என்ன கொடுமை மிக மிக இளவயது ஆயிற்றே அவருக்கு”
“அங்கிருந்து கோபால்
நாயக்கர் எப்படியோ தப்பித்து இங்கு வந்துவிட்டார் விழுப்புண்களுடன் நமது
அரண்மனையில்தான் இருக்கிறார்”
எல்லோரும் பரவசமானார்கள்
“அந்த மாவீரரை நாங்கள்
பார்க்கவேண்டும் எத்திலப்பரே”
“அவரது ஆவலும் உங்களைப்
பார்க்க வேண்டும் என்பதுதான் ஆகையால் அவரது உடல்நலனையும் பொருட்படுத்தாமல் இங்கே
உங்களை நேரே காண வந்திருக்கிறார்”. தனது அருகில் நின்றிருந்த காவலனை அழைத்து “அவரை
இங்கு பத்திரமாக அழைத்துவா” என்று உத்தரவிட்டார்.
“உடல்நலம் சரியில்லாதவரை
நாங்கள் சென்று பார்ப்பதுதானே முறை” பெருமாள் பிள்ளை அக்கறையுடன் கேட்டார்.
“அவர் தன்னை உடல்நலம்
சரியில்லாத நோயாளியாக உங்கள் முன் அறிமுகமாக விரும்பவில்லை. ஒரு போர் வீரனாகவே காண
விரும்புகிறார்”
“அவரைப் பார்ப்பது
எங்களுக்கு கிடைத்த மாபெரும் பேறு” என்றார் கல்யாணி
மருத்துவர் இட்ட
கட்டுக்களுடன் சற்றுத் தளர்வாக நடந்து வந்தார் கோபாலர். ஆனால் அந்தக் கம்பீரம்
குறையவேயில்லை மிடுக்கால் தன் நோயை துச்சமென விரட்டிக்கொண்டே நடந்து வந்தார்.
அனைவரும் அவரை வணங்கி
“கோபால் நாயக்கர் வாழ்க” என பெருமிதத்துடன் முழக்கம் எழுப்பினர்.
அவர் அனைவரையும் இரு
கரம் கூப்பி வணங்கினார்.
“உங்கள் மகனை நீங்கள்...
“இந்த மண்ணுக்குள்
விதைத்திருக்கிறேன். அவன் மீண்டும் ஒருநாள் முளைப்பான் விருட்சமாக..” என்று குரல்
நடுங்காமல் உயர்த்திச் சொன்னார்.
அனைவரும் ஒரு கணம்
அந்தக்குரலின் கம்பீரத்தில் கட்டுண்டனர்.
“என் மகன் போரில்
வீரமரணம் அடைந்தான். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. எனக்கு முன்பாக அவன்
அந்தப் பெருமையை பெற்றிருக்கிறானே என்கிற பூரிப்பில் என் காயங்கள் ஆறின. ஆனால் நான்
எங்கே இருக்கிறேன் என்று அடித்து சித்திரவதை செய்தபோது தன் கழுத்தைத் தானே
அறுத்துக்கொண்டு மரணித்தாரே முகம்மது யாசின் அவரது மரணத்துக்கு அவர்கள் பதில்
சொல்லியே ஆக வேண்டும்.
எனது அன்பிற்குரிய
மராட்டிய சிற்றரசர் துந்தாசி வாக்கினை பீரங்கியின் வாயில் கட்டி சிதறடித்திருக்கிறானே
பறங்கியன் அந்தக் கொடுமையை என்னால் மன்னிக்கவே முடியாது. என்றைக்கு வேண்டுமானாலும்
நான் மரணத்தைத் தழுவத் தயாராக இருக்கிறேன் ஆனால் என் உயிர், சாவை முத்தமிடுவதற்கு
முன்பாக ஒரு பறங்கியனையாவது தூக்கில் தொங்கவிட்டு தாலாட்ட வேண்டும் வீரம் செறிந்த
உங்களை எல்லாம் இங்கே வரவழைத்ததற்கு காரணம் என் பாளைய சாம்ராஜ்யத்தைக்
காப்பாற்றுவதற்காக அல்ல. மானத்தை இழந்து நாம் மண்டியிட்டுவிட்டால் அதன் பிறகு நம்
சந்ததியினர் ஒரு போதும் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள். நம் பரம்பரைக்கு தீராத
இழுக்கைத் தேடி வைத்த அவப்பெயர் நமக்கு வந்து சேரும்”
“நீங்கள்
கட்டளையிடுங்கள் நாயகரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
“சமாதானம் பேச அழைத்தாலோ
அல்லது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி விசாரணை என்று அழைத்தாலோ அதற்கு மதிப்பளித்து
வருபவர்களை தகுந்த மரியாதையுடன் அவை நாகரீகத்துடன், அவர்களை திருப்பி
அனுப்புவதுதான் நமது மண்ணின் பண்பு ஆனால் கட்டபொம்முவை விசாரணை என்கிற பெயரில்
அழைத்து தூக்கிலிட்ட வஞ்சகத்தினை செய்த பிறகு நாமும் எந்த அறநெறியையும்
பின்பற்றவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை சிங்கம் என்றால் அதனை எப்படி வேட்டையாட வேண்டும் என்று
நமக்குத் தெரியும் அதே சமயம் ஒரு நரியை எப்படி வேட்டையாடுவோம் என்பது அவனுக்குத்
தெரிய வேண்டும்”
“தெரிய வைப்போம்
கொபாலரே. நீங்கள் கவலைப்படவேண்டாம்” புன்னகையுடன் சொன்னார் எத்திலப்பர்.
“இதற்கு முன்பாக உங்களை
எல்லாம் ஒருங்கிணைத்து தீபகற்பக் கூட்டமைப்பு அமைத்தோம். அதோடு நில்லாமல் சென்ற ஆண்டு பங்குனி
மாதம் மூவாயிரம் கிராமங்களுக்கு ஓலைச்சுவடிகளை அனுப்பி அந்த மக்களையும் ஒன்று
திரட்டி நாம் மேலூர், நத்தம், மணப்பாறை ஆகிய ஜமீன்களை கைப்பற்றினோம் அந்தச் சமயம்
மணப்பாறை லட்சுமி நாயக்கர், தேவதானப்பட்டி பூசாரி நாயக்கர், ஷாஜிகான் தீரமுடன்
போரிட்டார்கள்.. அன்றைக்கு கட்டபொம்மன் உயிரோடு இருந்தது நமக்கெல்லாம் பெரிய பலம்.
ஆனால் புரட்டாசி மாதம் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார். இப்பொழுதும் நமக்குத் துணை வர ஜமீன் மக்களும் நம் நட்பு பாளையக்காரர்களும்
தயாராக இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் எப்பொழுதும் போல கைகொடுக்க வேண்டும்.”
“இதை நீங்கள் சொல்ல
வேண்டுமா அது எங்கள் கடமை அல்லவா?” என்றார் எத்திலப்பர்.
அப்பொழுது எத்திலப்பரின்
தளவாய் அவரது காதருகே வந்து ரகசியமாக ஏதோ சொன்னார். அதைக் கேட்டதும் பலமாகச்
சிரித்தார் எத்திலப்பர்.
“பாளையக்காரர்களே...
வெள்ளையன் நம்மைக்கண்டு பயந்துவிட்டான். இனி போர் வேண்டாம் இருபக்கமும் அமர்ந்து பேசி
சமாதானமாகிவிடுவோம் என்று தகவல் அனுப்பி இருக்கிறான்.
“அவன் அழைக்கிறான் என்று
எதற்காகவும் செல்லக்கூடாது அவர்களின் சூதுக்கு இனி ஒருவர் கூட பலியாகக்கூடாது”
என்றார் கல்யாணி.
“அவனும் அதை யோசித்துப்
பார்த்திருக்கிறான் ஆகையினால் நாம் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக தஞ்சையில்
இருந்து ஒரு பறங்கியனை நம்முடன் பேசுவதற்காக அழைத்திருக்கிறார்களாம் அவன் வந்த
பிறகு அவனுடன் பேசுங்கள். என்ன முடிவெடுக்கிறீர்களோ அதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
என்றும அந்தத் தகவலில் சொல்லி இருக்கிறான்”
“எரிகிற கொள்ளியில்
எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?”
“வரட்டும் பார்ப்போம்
அது கொள்ளியா இல்லை பல்லியா என்று...” மர்மமாகச் சிரித்தார் எத்திலப்பர்.
திணைக்குளத்தில் அது மாபெரும் தோப்பு. பல்வேறு வகையான மரங்கள்
அங்கு உண்டு. தளிக்கும் ஜல்லிப்பட்டிக்கும் இடையில் திணைக்குள தோப்பு அடர்ந்த இலைகளின்
தலையசைப்பில் வனப்புடன் காட்சியளித்தது. வாகை, தேக்கு மாமரங்கள், புங்க மரம்,
வேம்பு கொன்றை என சகல மரங்களும் நிரம்பிய தோப்பு அது. அங்குதான் தஞ்சையில் இருந்த
வந்த பறங்கியன் ஆண்ட்ரூ கெதே புளிய மரம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.
எதிரே எத்திலப்பர் தனது
அடர்த்தியான நீண்ட மீசையை வருடியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
“தூது பேச வந்த என்னை
இப்படி மரியாதை இல்லாமல் மரத்தில் கட்டி வைப்பது சட்டப்படிக் குற்றம்” என்று
கத்தினான் ஆண்ட்ரூ.
“யாருடைய மண்ணுக்கு
வந்து யார் சட்டம் போடுவது நீங்கள் யார் எங்களுக்கு சட்டம் போடுவது?”
“மாட்சிமைத் தாங்கிய
பிரிட்டன் சாம்ராஜ்யத்தை நீங்கள் அவமதிக்கிறீர்கள். எங்கள் அரசு உங்களுக்கெல்லாம்
சட்டமியற்றி ஆளும் அதிகாரம் படைத்தது. சமாதனம் பேச வந்தவரை கைது செய்து கட்டி
வைப்பதுதான் உங்கள் பண்பா?”
“பண்பையும் நீதியையும்
பற்றி நீங்கள் பேசக்கூடாது பாஞ்சாலக்குறிச்சியின் கணக்கர் சுப்பிரமணியரை எதன்
அடிப்படையில் தலையை வெட்டி வீதியில் நட்டு வைத்து மிரட்டினீர்கள். கட்டபொம்முவை
தூக்கிலிட உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அவர் என்ன குற்றம் செய்தார்”
“கப்பம் கட்ட மறுத்தார்.
அதனால் கயிற்றில் தொங்க விட்டோம்”
“நன்றாக தமிழ் பேசும்
உன்னைத் தண்டிக்க கூட எங்கள் தமிழ் மனம் தடுக்கிறது. ஆனால் நியாயம், நீதி
எதுவுமற்ற உங்களை மன்னிக்கத் தயாராய் இல்லை”
“அனாவசியமாக எங்கள்
பகையை சம்பாதிக்கிறீர்கள் எங்கள் விரல் மீது உங்கள் கைகள் பட்டது தெரிந்தால்
உங்கள் பாளையம் தரை மட்டமாகிவிடும்”
“இன்னமும் உங்கள் திமிர்
குறையவே இல்லை. இவன் மீதான தண்டனையை வாசியுங்கள் தளவாய்”
“நிகழும் துன்மதி ஆண்டு
சித்திரை மாதம் 10 ஆம் தேதி அதாவது
ஆங்கில வருடம் 1801 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள்
வியாழக்கிழமை அன்று எங்கள் பாளையக்காரர்களை உயிருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில்
மிரட்டி, ஜமீனுக்கு எதிரான கருத்துக்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசிய
குற்றத்துக்காக பிரிட்டிஷ் அதிகாரி ஆண்ட்ரூ கெத்தே என்பவருக்கு சாகும் வரை தூக்கிலிட
பாளையம் உத்திரவிடுகிறது. இது ஜக்கம்மாவின் ஆசியோடு இன்று நிறைவேற்றம்
செய்யப்படுகிறது.” என்று வாசித்தார்
“ஜக்கம்மாவின் உத்திரவு
மற்றும் ஆசியோடு இந்த ஆணை உடனடியாக நிறைவேற்றப்படுகிறது” என்றார் எத்திலப்பர்.
“எங்கள் அரசுக்கு
மட்டும்தான் மரண தண்டனை விதிக்க, சகல அதிகாரங்கள் உண்டு. உங்களுக்கு எந்த
அதிகாரமும் இல்லை. நீங்கள் அடிமைகள்.”
“இந்தத்
திமிருக்குத்தான் இன்றைக்கு உன் உயிர் போகப்போகிறது இந்தச் சமயம் இந்தக் கண்கொள்ளா
காட்சியைக் காண என்னுடன் கோபால் நாயக்கர் இல்லையே என்று மனம் வருந்துகிறது”
“இன்று நீ செய்யப்போகும்
தவறுக்கு உங்கள் மக்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டி வரும் மாட்சிமைப் பொருந்திய
எங்கள் மகாராணி உங்கள் அனைவரையும் மண்ணோடு மண்ணாக்கிவிடுவார்”
“அவரே விட்டு வைத்தாலும்
ஒருநாள் மண்ணாகித்தான் போவோம். இது வீரம் செறிந்த மண் இம்மண்ணில் உயிர் கலப்பது
எங்களுக்கு பெரும் பேறு. நீதான் நாடுவிட்டு நாடு மாறி மண்ணாகி புழுத்துப்
போகப்போகிறாய். தளவாய் இவனைப் புதைக்கும் இடத்தில் இப்படி ஒருவனை இங்குதான் நாம்
புதைத்தோம் என்னும் நற்செய்தியை மாத்திரம் பதித்துவிடுங்கள்”
“உத்தரவு ஜமீன்
பெருந்தகையே”
ஆண்ட்ரூ கெதே அங்கிருந்த
புளியமரம் ஒன்றின் கிளையில் கீழ் நிறுத்தப்படுகிறான்
“தளவாய்.. இவர்கள்
வணங்கும் வேதக்கோயில் பூசாரி யாராவது இங்கே இருக்கிறாரா?”
“இருக்கிறார்கள் ஜமீன்”
“அப்படியானால் அவரை உடனே
அழைத்து வாருங்கள் அவர்கள் முறைப்படி என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அவர்
சொல்படி செய்து விடுங்கள்”
“தங்கள் ஆணை ஜமீன். உடனே
அழைத்து வர ஆள் அனுப்புகிறேன்”
வேதக்கோயில் ஆபிரகாம்
அங்கு வந்து ஆண்ட்ரூவின் இறுதிப் பயணத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து பின்னர்
புதிய ஏற்பாடு நூலில் இருந்து வாசகங்களை படித்தார். இறுதியில் ஆண்ட்ரூ
தூக்கிலிடப்பட்டான்.
தளவாய் எத்திலப்பரின்
அருகில் வந்து “நீங்கள் சொன்னீர்கள் நானும் தண்டனையை வாசித்துவிட்டேன் ஆனால்
பறங்கியர்கள் நம்மை சும்மா விடமாட்டார்கள் நிச்சயம் நமக்கு மரணம் மிக அருகில்
இருக்கிறது ஜமீன்”
“வேண்டுமானால் ஒன்று
செய்யுங்கள் தளவாய் நான் இப்பொழுது சற்று ஓய்வெடுக்கச் செல்கிறேன், நான் இருக்கும்
இடத்தை பறங்கியர்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள் என்னைக் கைது செய்து இதே
தோட்டத்தில், இதே மரத்தில் தூக்கிலிடுவார்கள். என்னைக் காட்டிக்கொடுத்த
பேருதவிக்காக உங்களுக்கு உயிர் பிச்சை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது”
“ஜமீன் என்ன இது என்னை இப்படி நினைத்து விட்டீர்கள்”
“”நம் மண்ணில் எந்த
அளவுக்கு வீரம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறதோ அதே அளவு துரோகமும் பேயாட்டம் ஆடிக்
கொண்டிருக்கிறது. வரலாறு முழுக்க நம்மை அழித்தது பகை இல்லை துரோகம்தான். கட்டபொம்முவை
காட்டிக்கொடுத்தவனும் இதே மண்ணில் பிறந்தவன்தான். நான் இந்த வெள்ளையனை தூக்கிலிட
எப்பொழுது முடிவு செய்தேனோ அப்பொழுதே எனக்கு
நானே மரண தண்டனை விதிக்கிறேன்
என்பது எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் நான் ஒரு வெள்ளையனைத் தூக்கிலிட்டேன்
என்கிற வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது அது வெள்ளையர்களின் உடம்பில் தேமல் போல
என்றும் அழியாமல் அசிங்கமாக தெரிந்துகொண்டுதான் இருக்கும்.
நான் என் எதிரிக்காக காத்திருக்கவில்லை என்னுடைய
துரோகி யாரென்று அறிய வேதனையோடு காத்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் நானும் கோபால
நாயக்கரும் கண்டிப்பாக தூக்கிலிடப்படுவோம். அப்பொழுது அங்கே எங்களுக்கு அருகே
நிற்கும் துரோகத்தின் கண்களை நான் பார்க்க வேண்டும் தளவாய்” எனச் சொல்லிவிட்டு
விறுவிறுவென்று நடந்தார் எத்திலப்பர். அவர் ஒவ்வொரு இரவிலும் எங்கு தங்குகிறார்
எங்கு உறங்குகிறார் என்பது யாருக்கும் தெரியாது
எத்திலப்பர் நடந்து செல்லும்
திசையை ஒருவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் பல்லக்கில் ஏறும்போது
அவனும் பின்தொடர்ந்தான்.
“எங்கள் எத்திலப்பர்
வாழ்க.. பறங்கியனை தூக்கிலிட்ட மாவீரன் வாழ்க வாழ்க”
என்று அவர் செல்லும்
வழியில் கத்திக்கொண்டே அவன் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் அவனை யாரும்
கவனிக்கவில்லை. அவனது குரல் மெல்லத் தேய்ந்து கொண்டிருந்தது ஆனால் அவனது கண்களின்
கூர்மை இன்னும் துல்லியமாகி அவரைப் பின்தொடர்ந்து ரகசியமாக சென்று
கொண்டிருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>