வியாழன், 7 செப்டம்பர், 2023

 

ஊரில் சிறந்தவர்கள்

                                          -நெய்வேலி பாரதிக்குமார்

 


               தையல் இயந்திரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த முனையில் துளையுள்ள ஊசி, காஜா தைத்துக் கொண்டிருந்த தலைப்பகுதியில் துளையுள்ள கை ஊசி'யைப் பார்த்து,

               ஓட்டைக்காதே.. ஓட்டைக்காதே... உன்னை விட நானே உயர்ந்தவன். புதுத் துணிகளோடு தான் பெரும்பாலும் என் உறவுஎன்று கொக்கரித்தது.

               பதிலுக்குக் கை ஊசி, “ஓட்டை வாயே... ஓட்டை வாயே... நாவை அடக்கிப் பேசு. வறுமையில் வாழும் ஏழைகளின் மானத்தை மறைத்து வாழ பெரும்பாலும் நான்தான் உழைக்கிறேன். ஊசிகளில் உயர்ந்தவன் நானே!என்றது.

               மருத்துவமனையின் மருந்தேற்றும் ஊசியோ மந்தகாசச் சிரிப்புடன், “அட, முட்டாள்களே! உயிரைக் காக்கும் உத்தமப் பணியில் இருக்கும் நானல்லவா உயர்ந்தவன்!என்றது.

               தானியங்கள் சேமித்து வைத்தால்தானே உயிர் பிழைக்க உணவு கிடைக்கும்?” என்று குரல் கொடுத்தது சாக்குப்பை தைக்கும் கோணி ஊசி.

               நடந்து தேயும் கால்களுக்கு காலணி தரும் என்னை விடவா நீங்கள் எல்லாம் உயர்ந்தவர்கள்?” என்றது செருப்பு தைக்கும் ஊசி.

               காலில் இருக்கும் பொருளோடு கை கோர்க்கும் நீயே இப்படிப் பெருமையடிகிறாயே பெண்களின் கொண்டையில் இருக்கும் நான் உன்னை விட உயர்ந்தவன்என்றது கொண்டை ஊசி.

               அவர்களுக்குள் ஒருபோதும் சமாதானம் வரவில்லை... எவரும் மற்றவரை ஏற்கத் தயாரில்லை.

               எனவே, ஊரில் பெரியவர் அறிவாளி கரியமேகத்தை சந்தித்து தங்களது பிரச்சினையைக் கூறி ஊரில் உயர்ந்தவர் எங்களில் யார்?” என்றன.

               கரியமேகம் அர்த்தப் புன்னகை ஒன்றை சிந்தினார். பின், “ஊரில் கெட்டுப் போன திண்பண்டங்களை ஊசி'ப் போயிற்று என்றுதான் சொல்கிறோம். அந்த கெட்டுப்போன ஊசி உங்களில் எந்த ஊசி?” என்றார் சிரிப்புடன்.

               ஊசிகள் எதுவும் வாய் திறக்காமல் மெளனமாய் நின்றன.

               கரியமேகம் மீண்டும் சிரித்தார். பின், “இந்த உலகில் படைக்கப் பட்ட எதுவும் ஒன்று இன்றி மற்றொன்று இல்லை. ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதுதான் படைப்பின் தத்துவம்... கலங்காதீர்கள். உங்களில் யார் உயர்ந்தவர் என்று கர்வத்துடன் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.

               ஒன்றுபடுத்தலையும் உயிர்கொடுத்தலையும் உங்களிடமிருந்துதான் எங்கள் மனித இனம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் பிரிவினை ஏன்?”

               உங்கள் ஒவ்வொருவர் உழைப்பில்தான் எங்கள் மனித இனம் உயிர்த்திருக்கிறது. ரில் சிறந்தவர்கள்நீங்கள் அனைவருமே என்பதன் சுருக்கமாகத்தான் உங்கள் அனைவரையும் ஊ சி' என்றழைக்கிறோம். உங்களில் தாழ்ந்தோரும் இல்லை, உயர்ந்தோரும் இல்லை. நீங்கள் எல்லோருமே ஊரில் சிறந்தவர்கள் தான்!என்றார் கரியமேகம் உறுதியாக.

               தங்களது சிறுமைத்தனமான சண்டைகளை நினைத்து வெட்கிய ஊசிகள் தங்களுக்குள் இனிச் சண்டை இல்லை; பிரிவில்லை; இனி ஒன்றுபடுத்துவதே நம் பணி என்ற உறுதியோடு தை தைஎன தைத்துக்கொண்டு இருக்கின்றன... உற்சாகத் துள்ளலுடன்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>

  வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார்                       அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...