குருத்து அகம் விரித்து
-நெய்வேலி பாரதிக்குமார்
’பூம்’ என்று ஒரு சத்தம்
கேட்டதே தவிர என்ன நடக்கிறது என்பதை யோசிக்கும் முன் தீயின் நாக்குகள் எழும்பி
தற்காலிகக் கூரையைத் தொடுவதற்காக சினம் கொண்ட பாம்பின் சீற்றம் போல ஆங்காரத்துடன்
ஆடியது. மேல் துண்டும் வேட்டியும் பற்றி எரிவதைக் கூட சற்று தாமதமாகவே உணர்ந்து
கொண்ட முருகேசனை என்ன ஏது என்று யோசிப்பதற்குள் கையில் அகப்பட்ட படுதாவை எடுத்து
அவன் மேல் போர்த்தி தரையோடு தரையாக உருட்டினான் கோவிந்து. அதற்குள்ளாக நெருப்பின்
நீள்கரங்கள் முருகேசன் உடலில் பெரும்பகுதியைக் கருக்கி இருந்தன. முருகேசன்
மூர்ச்சையாகினான்.
அதிகாலை மூன்று மணி என்பதால் கூட்டம் எதுவும் சேரவில்லை. சமையலுக்காக
கூட இருந்த ஆட்கள் திபு திபுவென முருகேசனைச் சுற்றிக் குழுமினர். கொஞ்சம் பேர்
நெருப்பை அவசரம் அவசரமாக அணைக்கப் போராடினர். பரிமாறுவதற்காக கொண்டு வரப்பட்ட
ஆட்கள் சமையல் கூடத்தை விட்டுத் தள்ளி வெகு தூரத்தில் படுதா விரித்து அசந்து
தூங்கிக் கொண்டிருந்தனர்.
சமையல் கூடத்துக்கு வெளியே நாற்காலிகளை வரிசைக் கட்டி
போட்டு அதில் கண்ணசந்து இருந்த தம்பண்ணா நெருப்பு எரிவதைப் பார்த்து பதட்டத்துடன் எழுந்து
சமையலறைக்கு ஓடி வந்து கல்லையும் மண்ணையும் அள்ளிப்போட்டு தீயை அணைக்க
முயற்சித்தார்.
“என்னடா ஆச்சு?” எதிர்பட்டவனைக் கேட்டார்
“எலை முருகேசனுக்கு தீ புடிச்சிகிச்சு..அங்க போங்கண்ணே”
பெரும் சரீரத்தை தூக்கிக்கொண்டு நெருப்பில் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக
நடந்து முருகேசன் அருகே மூச்சிரைக்க வந்து நின்றார்.
நெருப்பு அணைக்கப்பட்டாலும் அவனது தீய்ந்த தோலும் வெந்து
சிவந்த காயங்களும் தம்பண்ணாவை உலுக்கின.
“டேய் முருகேசா என்னடா ஆச்சு.. எப்படிடா ஆச்சு..“பொல பொலவென
கண்ணீர் விட்டு அழுதார் தம்பண்ணா.
“தள்ளிப் போங்கண்ணே.. அளுதா ஆறிடுமா நவுந்து நில்லுங்க..
கோயிந்து போயி 407 ஐ வரச்சொல்லு.. தனசேகரு வண்டிக்கு உள்ளதான் தூங்கிக்கிட்டு
இருப்பான்.. ஃபோன் கெடைக்கலை.. போவும்போது ரெண்டு பெட்ஷீட்டை எடுத்துட்டுப் போயி
பின்னால விரிச்சுப் போடு” பரபரவென மேற்கூரையையும் பக்க வாட்டில் கட்டி இருந்த ஷாமியானா
துணிகளையும் அகற்றினான் பத்து.
“எலை முருகேசனுக்கு எண்ணெய் சட்டியிலே என்னடா வேலை?
டேய் தாஸ் ஒன்னைத்தானடா வடை சட்டி போடச்
சொன்னேன்?”
“நான்தாண்ணே போட்டுக்கிட்டு இருந்தேன்..எத்தனை நாளைக்கு எலை
முருகேசனாவே இருக்கிறது..இன்னிக்கு நா வடை போடறேன் நீ நவுருன்னு வம்படியா என்னை
நவுத்திட்டான்”
“இப்ப போன கதை எதுக்கு? விடுங்கண்ணே..யாரும் அவசரப்பட்டு
இப்ப அவனைத் தூக்க வேணாம்,, வண்டி வந்துரட்டும் பின்னாலே பெட்ஷீட், வேஷ்டியை
எல்லாம் போட்டுட்டு அப்புறமா நெதானமா தூக்கி அதுல படுக்க வச்சிக்கலாம். நவுருங்க..
நவுருங்க.. அவனுக்கு காத்து வரட்டும் .. செல்ராசு ஓடிப்போயி மளிகை சாமான் பொட்டியிலே
தேன் பாட்டில் இருக்கும் எடுத்துட்டு வா.. சும்மா பேக்காண்டி மாறி நிக்காதே.. ஓடு” பத்து பரபரப்பாக கட்டளைகளைப்
பிறப்பித்தான்.
தெறித்து விழுந்திருந்த எண்ணெய், வாணல் துடுப்பு, மாவுச்சிதறல்கள்
எல்லாவற்றையும் பெருமாள் எடுத்து இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தான்.
“ஆம்புலன்ஸ்க்கு சொல்லிறலாம் பத்து”
“வேணாம் அது வரதுக்குள்ளே நாம 407லேயே போயிறலாம். ஆம்புலன்ஸ்
அடப்பா இருக்கும். காத்து வராது.. நம்ம வண்டியிலேயே போயிறலாம்”
செல்வராஜ் தேன் பாட்டிலை எடுத்து வர அதை கையில் வாங்கி
மிகக் கவனமாக முருகேசனின் உடலில் இருந்த தீக்காயங்கள் மீது தடவினான் பத்து.
“ஊணான் எறும்பு சுத்திரும் உலாத்திக் கிட்டு இருக்கு நீ
பாட்டுக்கு தேன் எடுத்து பூசுறே” பதறினான் பன்னீர்
“அது பாக்கத்தான் ஆனை மாதிரி... அதும்பாட்டுக்கு பூனை
கணக்கா போயிட்டே இருக்கும் ஒண்ணும் பண்ணாது” சொல்லியபடியே முருகேசனின் காயங்கள்
மேலே இன்னும் தடவினான் பத்து.
லேசாக கண் விழித்து உடலை அசைத்தான் முருகேசன்.
சப்தம் வராமல் சூழலுக்கு சற்றும் பொருந்தாமல்
தீயே உனக்கொரு நாள் தீ மூட்டி பாரோமோ
என்று எதையோ நினைத்துக் கொண்டு முருகேசனின் உதடுகள் முணுமுணுத்தது
முருகேசனுக்கே சற்று வெறுப்பாகத்தான் இருந்தது. தீயின் உஷ்ணமோ, காயங்களின்
எரிச்சலோ இன்னும் முருகேசனுக்கு உறைக்கவே இல்லை.. அவ்வப்போது தம்பண்ணா திட்டியது
போல சூடு சொரணையற்ற ஜென்மம்தானோ? என்று அவனுக்கே தோன்றியது.
பத்து அவன் வலியில் முனகுவதாக நினைத்து அவன் காதுக்கு அருகே
குனிந்து “முருகேசா.. கொஞ்சம் பொறுத்துக்கோ.. அந்தோமா ஒருக்களிச்சு திரும்பிப்
படு.. மொள்ள மொள்ள.. இந்தா வண்டி வந்துரும்.. வந்ததும் ஆசுவத்திரிக்கு சட்னா போயிடலாம்.. ஒண்ணும் வெசனப்படாதே.. எல்லாம் செரியாயிடும்”என்று
ஆசுவாசப்படுத்தினான்
புல்லட் மணியின் வண்டி சத்தம் கேட்டது. தம்பண்ணாதான் போன்
செய்து சொல்லி இருந்தார். தற்காலிக சமையல் கூடத்துக்கு அருகில்தான் மாநாட்டுப்
பந்தலில் மணி இருந்தார். விடிந்தால் மாநில அளவிலான கட்சி மாநாடு. தில்லியில் இருந்து
காசிராஜ் தாக்கர் கலந்து கொள்வதால் பெரிய அளவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்
மணி என்கிற தெய்வசிகாமணி. எப்பொழுதும் காரில் செல்வதை விட அவருக்கு உவப்பான
புல்லட்டில் எங்கும் பயணிப்பதால் ‘புல்லட் மணி’ என அவரது திருநாமம் பரவிவிட்டது.
“சிலிண்டர் ஏதாச்சும் வெடிச்சிடுச்சா?”
“இல்லை தலைவரே.. வடைக்கு எப்பவும் வெறகு அடுப்புதான் நாம
வைக்கிறது சிலிண்டர் ஓரமா அப்படி இருக்கு பாருங்க.. என்னாச்சுன்னு தெரியலை எண்ணைச்
சட்டி குப்புன்னு பிடிச்சிகிட்டு காடாத் துணிங்க பத்திகிச்சு.. அதுல இவனுக்கு
தீக்காயம்”
“இன்னும் எத்தனை பேருக்கு அடிபட்டிருக்கு?”
“நல்ல வேளை பக்கத்துலே யாரும் இல்லை.. அதனால வேற யாருக்கும்
அடிபடலை..“
“அப்பா..நல்ல வேளை.. இவன் பேரு?”
“இலை முருகேசன்.. இலைங்கறது பட்டப்பேரு தலைவரே புல்லட் மணி
மாதிரி”
புல்லட் மணி கடுப்பாக தம்பண்ணாவைப் பார்த்தார். வேறொரு சமயமாக
இருந்தால் காய்ச்சி இருப்பார். புல்லட்டும் இலையும் ஒண்ணாய்யா அப்படின்னு விழுந்து
பிடுங்கி இருப்பார். ஆனால் இப்ப நேரம் சரியில்லை எதுவும் திட்ட முடியாது.
407 வண்டியை பின்னால் ஏற்றுவதற்கு வசதியாக தனசேகர்
ரிவர்ஸில் எடுத்து வந்து கொண்டிருந்தான்.
“எதுக்கு உள்ளே இந்த வண்டி வருது?”
“பக்கத்துலே 24 மணிநேர ஹாஸ்பிட்டல் இருக்காமே அங்கதான்
போலாமுன்னு..”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. விஷயம் லீக் ஆயிடுச்சுன்னா
அவ்வளவுதான் பத்திரிகைக்காரனுங்க ஊதி ஊருக்கெல்லாம் உலை வச்சிடுவானுங்க.. எவனாச்சும்
கேமராவோட இங்க வந்தானா”
“இல்லை தலைவரே....ஆனா காயம் அதிகமா இருக்கு ஹாஸ்பிட்டலுக்கு
போகலைன்னா பிரச்சினையா போயிடும்”
“மாநாடு முடியற வரைக்கும் ஒரு அசம்பாவிதமும் நடக்கக்
கூடாதுன்னு ஊர்லே உள்ள சாமியை எல்லாம் வேண்டிகிட்டு இருக்கேன்.. அந்த ஆளு தாக்கர்
வேற செண்டிமெண்ட்டுக்கு பொறந்தவன்யா.. எங்க போனாலும் காரை வலப்பக்கமா நிறுத்தி எறங்கி
அப்புறம் பார்க்கிங்லே கெழக்கு மேற்கா நிறுத்தச் சொல்வானாம்.. இந்த விஷயம் தெரிஞ்சுதுன்னு வச்சிக்க.. அப்புறம் சகுனம் சரியில்லை அது இதுன்னு மொறைச்சிகிட்டு
போயிடுவான். தம்பு.. ஒங்ககிட்ட
சொல்றதுக்கு என்ன? நேஷனல் லெவல்ல ஒரு பெரிய போஸ்ட் கெடைக்கும்னுதான் நம்ம ஊர்லே
நடத்தறேன்னு வம்படியா கட்சியிலே கேட்டு வாங்கி சொந்தக்காசை எறைச்சி செலவு பண்ணிகிட்டு இருக்கேன்.. ஏதாச்சும்
கொழப்பி வுட்றாதே”
”அதுக்காவ அடிபட்டவனுக்கு வைத்தியம் பண்ணாமே இருக்க
முடியுமா?” கோபமாகக் கேட்டான் பத்து.
“தம்பி வைத்தியம் பண்ண வேணாம்னு யாரு சொன்னது?
ஆஸ்பத்திரியிலே வேணாம்யா.. நம்ம பருப்பு மண்டிக்கு கொண்டுகிட்டு போங்க அங்க
டாக்டரை வர வைக்கறேன்.. டாக்டர் என்ன கேக்கறாரோ அது அங்க வரும் கவலைப் படாதே ஆஸ்பத்திரி
அது இதுன்னு களேபரம் வேணாம்னு சொல்றேன்.. புரியுதா?”
வெளியில் நின்றிருந்த நபரை அழைத்து “மாரி.. நீ இந்த
வண்டியிலே இவங்க கூட போயி நம்ம பருப்பு மண்டி ஆபீஸ் ரூம் இருக்கில்லே அங்க கட்டிலை
பிரிச்சிப்போட்டு படுக்க வை.”
“தம்பு.... டாக்டர்
அங்க வருவாரு உங்க ஆளுங்களை இதுலே கூட்டிகிட்டு அங்க போகச்சொல்லு.. மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம்..
விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது.. கெளம்புங்க” சொல்லிவிட்டு போனில் டாக்டரைத்
தொடர்புகொண்டார். பின்னர் தம்பண்ணா காதில் ரகசியமாக…
“சொந்தம் பந்தம்.. சாதிசனம்னு யாராச்சும் வந்தா..”
“அவனுக்கு எல்லாமே நாந்தான்”
“சரி பாத்துக்கங்க.. எவ்வளவு செலவானாலும் நான் தரேன்
பாத்துக்கலாம்”
புல்லட் மணி சுபாவத்தில் நல்ல மனுஷன். சொன்னபடி செய்யக்
கூடியவர். தம்பண்ணா கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தார்.
தம்பண்ணாவுக்கு சொந்த
ஊர் பண்ருட்டிக்கு அருகில் திருவதிகை என்றாலும்
கடலூர் மாவட்டம் முழுக்க எல்லோராலும் அறியப்பட்ட புகழ்பெற்ற சமையற்காரர்.
பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர் வரை அவரது பெயர்
பிரபலம். எத்தனை நபர்கள் கலந்துகொள்ளும் விழா என்றாலும் அவருக்கு பொருட்டே இல்லை.
அதைவிட அறிவிக்கப்படாத வேலை வாய்ப்பு அலுவலகம் அவருடையது. எப்பொழுது யார் போய்
கேட்டாலும் அவரிடம் வேலை காலி இருக்கும். கல்யாணம், மாநாடு, கோயில் விசேஷம், யோகா
வகுப்புகள் என்று எல்லா நிகழ்ச்சியிலும் நீக்கமற நிறைந்திருப்பார். ஆக ஆட்களின்
தேவை அவருக்கு இருந்துகொண்டே இருக்கும்.
இதே கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பல மாநாடுகள், பொதுக்
கூட்டங்களுக்கு பெரிய அளவில் சமைத்து போட்டிருக்கிறார். இப்பவெல்லாம் பிரியாணி
குவாட்டர் இல்லாம எவன் கூட்டத்துக்கு வர்றான்?. பந்தல் எப்படியோ அப்படியே
பிரியாணியும் கட்டாயமாகிவிட்டது. அதுவும் புல்லட் மணி இருக்கும் கட்சிக்கு அதிகம்
ஆள் பலம் கிடையாது சோத்தைப் போட்டுத்தான் கூட்டம் கூட்டனும். அதனாலதான் வடை
பாயாசம்னு திமிலோகம்...
முருகேசனுக்கு சின்ன வயசிலேயே அப்பா இறந்துவிட தாய்மாமன்
தயவில்தான் வளர்ந்ததும் படித்ததும். கல்லூரிக்கு போகும் சமயத்தில் அம்மாவும் தவறிவிட
மாமா நைசாக ‘தபால்ல எல்லாம் படிக்கிறாங்களே அப்படி படியேம்பா’ என்று கைக்கழுவி விட்டார்.
அப்படியாக படித்ததுதான் எம்.ஏ டிகிரி. வேலைக்கு எல்லாம் உத்திரவாதம் இல்லாத
படிப்பு தம்பண்ணாவிடம் வேலை கேட்டு வந்த பொழுது அவர் கேட்ட முதல் கேள்வியே ‘என்ன
படிச்சிருக்கே?’ என்பதுதான்
சொல்ல சங்கோஜப்பட்டு “அதிகம் ஒண்ணும் படிக்கலைங்கண்ணா.. எழுதப்
படிக்கிற அளவுதான்” என்றான்.
“எதுக்கு கேக்கறேன்னா இங்க எல்லா வேலையும் செய்யவேண்டி
வரும்.. உனக்கோ சமைக்கத் தெரியாது டிரைவிங் தெரியாதுங்கறே.. பரிமாற, சுமைத் தூக்க,
இலை எடுக்க இதுக்கெல்லாம் யோசனை பண்ணக் கூடாது மண்டபத்துல விசேஷம்னா இலை எடுக்க
ஆளு இருக்கும். கட்சி மாநாடு, கோயில் திருவிழா இங்க எல்லாம் நாமதான் செய்யணும்
பரவாயில்லைன்னா வா.. நாளைக்கே மேல்மலையனூர்ல ஒரு கோயில் ஃபங்க்ஷன்” அப்படி ரெண்டு
வருஷத்துக்கு முன்னாடி அவரிடம் சேர்ந்ததுதான். தங்கவும், திங்கவும் ஒரு பிரச்சினை
இல்லை..
பெரும்பாலும் வேனில் இருந்து மளிகை, காய்கறி மூட்டைகளை
சமையல் அறை அல்லது ஸ்டோர் ரூம்முக்கு தூக்கிச் செல்வது, அரிசி களைதல், காய்கறி
கழுவுதல் என்கிற மாதிரிதான் அவனது வேலைகள் இருக்கும்., சமயத்தில் காய்கறி வெட்டித்
தருவான் ஆனால் எதிலும் அதிநிதானம். நேரத்துக்கு ஏத்த மாதிரி வேகமாக முடிக்க வராது.
ஆனால் இலையை ‘கட்டி’ல் இருந்து பிரித்து பதனமாக நறுக்கி காம்பு கிழித்து டிபன்
இலை, சாப்பாட்டு இலை என நறுவிசாக அதிக சேதாரம் இல்லாமல் தரம் பிரித்து
வைத்துவிடுவான். இலை வைக்கும் போதும் அதே நிதானம்.. கிழியாமல் கொள்ளாமல் பந்தியில்
ஆள் பார்த்து போட்டுவிடுவான்.. அதனால் அந்த வேலைக்கு அவனை விட்டால் யாரையும்
அதிகம் விடமாட்டார் தம்பண்ணா.. அப்படித்தான் அவனுக்கு இலை முருகேசன் என்று பெயர்
வந்தது. என்ன... இலை எடுப்பதும் அவன்
வேலையாகிவிடும்..
அதுவும் பந்தி பரிமாறும் போது ‘எலை .. எலை இங்க வாப்பா எலை’ன்னு
நேத்து வேலைக்கு வந்த பய கூட கூப்பிடும்பொழுது எரிச்சலாகும்.. ஆனால் உள்ளுக்குள்
ஏதாவது ஒரு வசனமோ பாட்டோ சம்மந்தமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் இப்படித்தான் ஒரு
விசேஷத்தில் ஒருத்தன் குடித்துவிட்டு ‘ஏலேய்.. ஏலேய் எச்சக்கலை ’என்று நக்கலாக
கூப்பிட கடுப்பாக அவனருகே சென்று எதையோ சொல்ல முயற்சிக்க.. வார்த்தைகள்தான் வராமல்
சதி செய்தன.
ஆனால் உள்ளுக்குள் ஒரு குரல் அவனையே பார்த்து ‘பச்சின்னு
இருந்த தலை வாழை இலையை எச்சிலாக்குன
எச்சக்கலை நீதாண்டா’ அப்படின்னு திட்டிக்கொண்டே இருந்தது.
எச்சில் இலை எடுப்பது மாதிரி மகா கேவலமான வேலை உலகத்திலேயே
இல்லை என்று எல்லா வேலைக்காரனும் தன்னுடைய வேலையைக் கடினம் என்று சொல்வது போல
சொல்லிக்கொள்வான். மூடாமல் போகும் எச்சில் இலை அப்படியே மனிதனின் அத்தனை
விகாரங்களையும் கொட்டி வைத்தால் போல கிடக்கும். மெத்தப் படித்து நாகரீகமாக உடை
அணிந்தவர்கள் கூட ஒரு தொழு நோயாளியின் உடல் போல சாப்பிட்ட இலையை விட்டுச்
செல்லும்போது முருகேசனுக்கு கோபமாக வரும். ‘அகத்தின் அழகு, தின்ன இலையில்தான்
தெரியும்’ என்று அடிக்கடி சொல்லுவான். ஒரு சிலர் இலையைக் கழுவி வைத்தாற்போல அத்தனை
கணக்காக சாப்பிட்டிருப்பார்கள். அவர்கள்தான் இலை எடுப்பவர்களுக்கு மிகப்
பிடித்தமானவர்கள். அவர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து பல பந்திகளைக்
காண வாழ்த்துவான்.
இன்னும் சிலர் இலை மீது காய்கறிகளை மென்று தின்று அத்தனை
ஆங்காரத்துடன் காறித் துப்புவார்கள். தம்பண்ணாவிடம் சொல்லுவான் “அண்ணே இனும..
முருங்கைக்காய் சாம்பாருக்கு ஒத்துக்காதீங்கண்ணே’ என்பான்
“ஏண்டா?”
“அட என்னங்கண்ணே,, எனுமோ... சண்டைக்காரனுங்க வாயில எதிரிங்க
கட்டை வெரலு கெடைச்ச மாறி அப்படி கடிச்சுக் குதறி இலை மேல துப்புரானுங்க”
“இலை எடுக்கறவன் சாப்பிடறவனை பாக்கக் கூடாதுடா..
அதுக்குத்தான் உன்னை இலை போடச் சொன்னா, திரும்பவும் எடுக்கத்தான் அனுப்புறது..
இடையிலே எந்த பதார்த்தத்துக்கும் பரிமாற அனுப்பறதில்லே..”
தம்பண்ணாவுக்கு குடும்பம் குழந்தை குட்டி என்று
எதுவுமில்லை.. ஆனாலும் ராப்பகலாக உழைக்கிறார்.“எதுக்குண்ணே பேய் மாதிரி இப்படி ஒழைக்கறீங்க?
மாசத்துக்கு நறுக்கா மூணு நாலு விசேஷம் ஒப்புத்துகிட்டு மிச்ச நாளு அக்கடான்னு
வூட்டுல கெடக்காம..” என்று ஒரு நாள் கேட்டான் முருகேசன்.
“நான் மட்டும் தின்னு, தூங்கி நாளைக் கழிச்சா போதுமாடா?
ஒன்னை மாதிரி நாலு பேருக்கு பொழப்புக்கு வழி செய்ய வேணாமா? அதுவுமில்லாம சாப்பிட்ட
கை ஈரம் காயறத்துக்குள்ள தேடி வந்து ‘அடடா பிரமாதம்’னு யாராச்சும் சொல்றப்ப
கெடைக்கிற சொகம் இருக்கே அதுக்கு நாய் கணக்கா தேயலாம்டா” என்று அவர் சொன்ன போது
மனதுக்குள் ஒரு பாடலின் ஒற்றை வரி செய்தித் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப
ஓடும் பிரேக்கிங் நியூஸ் போல ஒடி இம்சை செய்தது. அடுத்தவர்களுக்காக உழைக்கும்
ரட்சகர் தம்பண்ணா என்று தோன்றியபோதுதான் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது. கூடவே அந்த
வரியை ஒலிக்கும் கரகரத்த குரல் யாருடையது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான்.
இன்னொரு இடியாப்பச் சிக்கலை அவன் முன் கொட்டிவிட்டு அந்த கேள்வி மட்டும் சிவனே
என்று மனசுக்குள் உட்கார்ந்திருந்தது.
‘அன்ன
மாட்சி அனையராகி” என்கிற அந்த வரி அதற்கு மேல் நகர மறுத்து இம்சை செய்தது. இதுபோல்
மறந்து போன வரிகளை நினைவுப் படுத்த வழக்கமாக பள்ளி படித்த காலத்தில் அமர்ந்திருந்த
டெஸ்க்கின் மரச்சிம்பை பெயர்ப்பதில் இருந்து நினைவுப் படுத்த முயற்சிப்பான்..
எப்படியாவது பிடிபட்டுவிடும் ஆனால் இந்த முறை ரொம்ப சண்டித்தனம் செய்தது. ரெண்டு
நாட்களாக அந்த ஒற்றை வரி பல் துலக்கும் போதும், கழிவறையில் அமர்ந்திருந்த போதும்
கூட குடைந்து கொண்டே இருந்தது.
கள்ளக்குறிச்சியில்
ஒரு திருமண விழாவில் பந்தியில் இலை எடுத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல்
அடுத்த வரிசையில் நாதமுனி அய்யாவைப் பார்த்தபொழுது ஒரு கணம் உலகமே தன் சுழற்சியை
நிறுத்திவிட்டு அவனையே உற்றுப் பார்ப்பது போல இருந்தது. அதே சமயம் அவர்
வகுப்பறையில் மண்டையில் நறுக்கென குட்டி “முண்டம் , முண்டம் (அது அவர் ட்ரேட்
மார்க் வார்த்தை) அடுத்த வரி ஞாபகம் வரணும்னா முதல் வரியிலே கடைசி எழுத்து
மெய்யெழுத்தா இருந்தா அதையும் சேர்த்துச் சொல்லிப் பழகனும்னு எத்தனை தடவை சொல்லி
இருக்கேன்” என்று கரகரத்த குரலில் கோபத்துடன் முதுகிலும் குத்துவார்.
சட்டென
அந்த வரி மெய்யெழுத்தோடு மின்னியது.
“அன்ன மாட்சி அனைய ராகித்’ என்று தோன்றிய மறுகணம்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
என்று
மிச்ச வரிகளும் பொறியில் மாட்டிய எலியை இரக்கமுள்ளவன் திறந்துவிட்டால் ஓடி வருவது
போல ஓடி வந்தன. உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது அது நாதமுனி அய்யாவின் குரலேதான்
என்று இன்னொரு குரல் ஆர்க்மிட்டீஸ் போல உள்ளுக்குள் துள்ளிக் குதித்தது.
மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இலை எடுக்கும்
அன்னக்கூடையுடன் அவர் முன் நின்றான்
“அய்யா உங்களுக்கு என்னை நெனப்பு இருக்கா?”
என்று கேட்டான். அவர் நிச்சயம் நினைவு வைத்திருப்பார் என்று சந்தேகத்துக்கு
இடமில்லாமல் நம்பினான்.
“யாருப்பா?” என்றார் கண்களைச் சுருக்கிக்
கொண்டே..
“நான்தான் அய்யா முருகேசன்..நைன்த் F லே
உங்ககிட்டேதான் படிச்சேன்”
அவர்
தாங்க முடியாத அவமானத்துடன் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். சோதனையாக அவருக்கு
பக்கத்தில் இருந்தவன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்கிற ஆவலுடன் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்தது அவரது அவமானத்தின் ரேட்டிங்கை இன்னும்
அதிகப்படுத்தியது.
நாதமுனி அய்யா சாமர்த்தியமாக “அந்த வத்தக்குழம்பை இங்க வரச்
சொல்லு” என்றார். சாப்பிட்ட இலைகள் பாதி நிரம்பிய அன்னக்கூடை அப்பொழுதுதான் அவன் கையில்
கனத்தது. ஒரு கலெக்டரோ, டாக்டரோ எதிர்பாராத
இடத்தில் முன்னாள் மாணவன் என்று அறிமுகமானால்
அவர் முகம் ஆனந்தத்தில் மலர்ந்திருக்கலாம்.
ஒரு இலை எடுப்பவனை எப்படி தன்னுடைய முன்னாள் மாணவன் என்று பெருமிதத்துடன்
சொல்லிக்கொள்ள முடியும்? என்கிற ஞானம் தாமதமாகத்தான் உதித்தது.
அங்கிருந்து அவன் மெல்ல நகர்ந்தபொழுது
‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே’ என்கிற வரியை மனக் குரல் ஜபித்தது. நிச்சயமாக அது நாதமுனி
அய்யாவின் குரல் இல்லை.
வலியும்
எரிச்சலும் ஒன்றோடோன்று போட்டி போட்டு அவனை வதைத்துக் கொண்டிருந்தாலும்,...
நாதமுனி அய்யா, ஏதோ ஒரு மண்டபத்து சாப்பாட்டுக் கூடம், மக்களின் சலசலப்பு என்று
மனக்கண்ணுக்குள் லஜ்ஜையின்றி காட்சிகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன
வேனின் பின்பக்கம் அவனைக்கிடத்த
தூக்கியபோதுதான் தீக்காயத்தின் எரிச்சல் உயிர்போவது போல வாட்டியது.
“பெருமாள் பத்து பதினைஞ்சு வாழை இலையை
எடுத்துட்டு வா . நல்லா இளசா, நீட்டா பார்த்து எடுத்துட்டு வா” என்று பத்து
கத்தினான். அவன் குரலே அப்படித்தான்.
பெருமாள் ஓடிப்போயி ஒரு கட்டாகவே எடுத்து
வந்தான்.அதில் இருந்து இளசாக இருந்த இலைகளை எடுத்தான் பத்து. எண்ணெய் கிண்ணத்தை
எடுத்து தளர அதில் ஊற்றினான். இலை முழுக்க சலும்பரத் தடவினான்.
முருகேசனின் ஆடைகளை முழுமையாகக் களைந்து
விட்டு அந்த இலைகளில் கிடத்தினான். பிறகு மேலாக இரண்டு இலைகளை அழுத்தாமல் அப்படியே
பாந்தமாக வைத்தான். கொஞ்சம் இதமாக இருப்பது போலத்தான் பட்டது.
“ஏண்டா ஆஸ்பத்திரிக்கே போயிடலாமா?
எனக்கென்னவோ பயமா இருக்குடா?”
“ஒண்ணும்
பயப்படத் தேவையில்லைண்ணா காயம் அதிகமில்லே.. அவருதான் டாக்டரை அனுப்பறேன்னு
சொல்றாரு இல்லே.. சொன்னபடி செய்ற ஆளுதான். அவரு நெனச்சா சென்னையிலேர்ந்து கூட
டாக்டரை வரவச்சிடுவாரு.. இப்பம் அவனுக்கு செலவு பண்ண யாரு இருக்கா.. நீ மட்டும்
என்ன குதுருக்குள்ளையா காசை குமிச்சு வச்சிருக்கே.. வந்ததை எல்லாம்
கேட்டவங்களுக்கு குடுத்து காசை வுட்டு ஒட்டி இருக்கே.. ஊரு நுப்பம் அறிஞ்சு
உடும்பை தோளுல போட்டுக்கணும்.. புல்லட்டு பேரு
கெட்டுடும்னு பயந்து கெடக்கான்.. அப்படியே மாட்டைத் தடவி கொடுத்து மடியைப்
பிடிச்சிக்கனும்.. இவன் மாமன்காரன் எட்டிக்கூட பாக்கமாட்டான்.. கவலைப்படாதேண்ணே..
எல்லாம் செரியாயிடும்” என்று ஆறுதல்
படுத்தினான் பத்து.
அப்படி
ஆறுதலாக பத்து சொன்னால் தம்பண்ணாவுக்கு மனம் நிம்மதியாகிவிடும்.
ஒரு
கூட்டத்தில் ஏதாவது ஒரு குரல் இப்படி சப்தமாக இணக்கமாக ஒலித்தால் எல்லோருக்குமே மனம்
லேசாகிவிடும்.
போர்த்திய
வாழை இலை முருகேசனை ஒரு தாய் போல அணைத்துக் கொண்டிருந்தது போதுமாக இருந்தது
முருகேசனுக்கு..
பந்தியில்
இலை போடும்போது சில சமயம் தோன்றும் வரிகளை மனம் இப்பொழுது முணுமுணுத்தது.
“குமரி வாழையின் குருத்து அகம் விரித்து –ஈங்கு
அமுதம்
உண்க அடிகள்”
-நெய்வேலி பாரதிக்குமார். 9442470573.
படைப்புக் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டியில்
எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் தேர்வு செய்த சிறுகதை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>