மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள்
நெய்வேலி பாரதிக்குமார்.
“மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள்”
என்று கணேசன் எட்டு மணிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியை பதினோரு மணிக்குத்தான்
பார்த்தான் பார்த்திபன். பதறியபடியே கணேசனுக்கு போன் செய்தபோது அவனது அலைபேசி
அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக குரல் சொல்லிக் கொண்டிருந்தது.
கணேசனிடம் வேறு தொலைபேசி இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு
முன்பு ஒன்றாகப் படித்துப் பழகிய நட்பில் இன்று தொடர்பில் இருப்பது அவன் மட்டுமே. ஆகையினால்
கணேசனைத் தெரிந்த மற்ற நண்பர்களின் எண்கள் எதுவும் கைவசம் இல்லை
நேற்றைய இரவு கம்பெனி கெஸ்ட் ஹவுசில் நடந்த
மதுவிருந்தின் மயக்கம் இன்னும் கலையாமல் இருந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை
கம்பெனி நிர்வாகமே வைக்கும்.. பதவி உயர்வு,, பிறந்தநாள், திருமண நாள் என எல்லா கொண்டாட்டத்துக்கும்
அங்கு நிர்வாகம் அனுமதித்து விட்டதால் யாரும் தப்பவே முடியாது. ஊழியர்கள் வெளியில்
மது அருந்தி பிரச்சினைகளில் சிக்க வேண்டாம் என்கிற உயரிய எண்ணத்தில் அனுமதிப்பதாக
ஹெச் ஆர் வெங்கட்ராமன் நிர்வாகத்தை மெச்சி அதன் ரகசியத்தை அவிழ்த்தார். அங்கேயே
இரவுத் தூங்கி ஞாயிறு காலை விடியலை தரிசிக்கவும் சிறப்பு அனுமதியை வெங்கட்ராமன்
பெற்றுத் தந்திருந்தார்.
கோயம்புத்தூருக்கு நேரடியாக கிளம்பிச் செல்வதைத்
தவிர வேறு வழியில்லை. சென்னையில் இருந்து அத்தனை தூரம் பயணிப்பதை நினைத்துப்
பார்த்தால் ஆயாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தச் செய்தி தந்த பதட்டம்
அடங்குவதாக இல்லை.
கோயம்பேட்டில் பேருந்தைப் பிடித்து அமர்ந்த பொழுது ‘இதெல்லாம்
தேவையா?’ என்று தோன்றியது. மறுபடி மொபைலை எடுத்து கணேசனுக்கு முயற்சித்தான். ம்ஹும்.. அணைத்து
வைக்கப்பட்டு இருப்பதாக அதே குரல்.. அதே செய்தி.. தன்னிச்சையாக வாட்ஸப்பை
திறந்துப் பார்த்தான். அரிக்காத மணிக்கட்டை அனிச்சையாக சொறிவது போல காரணமே
இல்லாமல் வாட்ஸப்பை திறந்து திறந்து பார்ப்பது நோய் போல ஆகிவிட்டது. கணேசன்
அனுப்பிய செய்தி அபத்தமாக இருந்தது. மாதவி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறாள்
என்பது என்ன ஒரு பிழையான வாக்கியம். எதிரே ஒரு உயிர் தற்கொலை செய்து
கொண்டிருக்கும் போது எப்படி ஒருவனால் மெசேஜ் டைப் செய்து கொண்டிருக்க முடியும்?
தற்கொலைக்கு முயற்சி என்றால் கூட ஒரு அர்த்தமிருக்கிறது
மாதவி கல்லூரிக் காலத்தில் அவர்களது கல்லூரியின் இணயற்ற பேரழகி. அதைவிட அவளது விஞ்ஞான அறிவு அசாத்தியமானது. வகுப்பிலும்
லேப்-லும் அவளது பரபரப்பான அதிதீவிரமான
ஈடுபாடு அவளுக்கு மேரி க்யூரி என்கிற ரகசிய பட்டப்பெயரை தந்திருந்தது. ஒவ்வொரு
அறிவியல் வகுப்பிலும் தர்க்க ரீதியாக எல்லா பேராசியர்களுடன் விவாதித்துதான்
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வாள். அவளை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பலரும்
காதலித்துக் கொண்டிருந்தனர். பண பலத்தில் மிதக்கும் செல்வா அவளது கடைக்கண்
பார்வைக்காக கல்லூரியில் எவருமே வைத்திராத கவர்ச்சியான மோட்டார் பைக்கில் அவளின் பின்னாடியே
சுற்றிக் கொண்டிருந்தது பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.. படிப்பைத்
தவிர ஸ்போர்ட்ஸ், டான்ஸ், கராத்தே என உடல் சார்ந்த அனைத்துக் கலைகளிலும் வித்தகன்..
போதாதற்கு கல்லூரியின் முதல் மாணவன் புள்ளைபூச்சி
என்று பட்டப்பெயர் தாங்கிய சந்துருவும் அவளைத் தன் பக்கம் கவர படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான்.
கல்லூரியே அவள் யார் பக்கம் திரும்புவாள்? என்று அறிவிக்கப்படாத போட்டி ஒன்றை நடத்திக்
கொண்டிருந்தது.
பார்த்திபன் அவளோடு சகஜமாக பேசுவதுண்டு.
ஆபத்தில்லாத பிராணிகள் பட்டியலில் சர்வ நிச்சயமாக தன் பெயர் உண்டு என்பது
பார்த்திபனுக்குத் தெரியும். ஆதலால் கல்லூரியின் சகல ஜீவ ராசிகளும் அவ்வப்பொழுது
கள நிலவரத்தை அவன் மூலம் அறிய முற்படும். அதில் கொஞ்சம் கெத்தாகவும் இருந்தான்
பார்த்திபன். ஆனால் யாருமே எதிர்பாராதபடி அவள் நரேனை காதலிப்பதாக அறிந்தபோது கல்லூரியே
அதிர்ச்சியில் உறைந்து போனது.
.நரேன் எப்பொழுதும் வானத்தைப் பார்த்துக் கொண்டே
இருப்பான் உடன் படித்த மாணவர்களின் பெயர்களை
விட அதிகமாக நட்சத்திரங்களின் பெயர்களைச் சொல்வான். சொல்லப்போனால் அவன்
மாதவியின் பக்கம் அதிகம் நாட்டம் கொண்டவனாக யாராலும் யூகிக்கக் கூட முடியவில்லை.
எப்படி அவன் தன்னை காதலிப்பதாக மாதவி தெரிந்து கொண்டாள் என்பது புரியாத புதிராகவே
இருந்தது.
மிகச்சாதாரணமான
குடும்பத்தில் இருந்து வந்தவன் நரேன்.
அவ்வப்பொழுது குடிப்பவன் என்பதால் அவன் மீது ஒரு ஒவ்வாமை எல்லோருக்கும் இருந்தது. மதிப்பெண்கள்
மீது அதிகம் நம்பிக்கை கொண்டவனில்லை. அவனது மூளை எப்பொழுதும் பாடத்திட்டத்துக்கு
வெளியே யோசித்துக் கொண்டிருந்தது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக அழைப்பிதழை ப்ரூஃப் பார்க்கப்போன சந்துரு
அதன் காப்பியை எடுத்து வந்த போது எதேச்சையாக அதனை வாங்கிப் பார்த்த நரேன்,
“August presence இல் ஆகஸ்ட்ல உள்ள A வுக்கு ஏண்டா கேபிட்டல்? அப்படி போட்டா..ஆகஸ்ட் மாசம்னு அர்த்தம் மாறிடும்.
ஸ்மால் லெட்டர் ஏ போட்டாத்தான் மதிப்பு மிக்க வருகைன்னு அர்த்தம் வரும். Capitonyms னு அதுக்கு பேரு”என்ற போதுதான் அப்படி ஒரு விஷயம் இருப்பதே எங்களுக்குத் தெரிந்தது.
ஜோனஸ் சால்க் பிறந்தநாள் என்று அக்டோபர் 28 ஆம் தேதி எல்லோருக்கும் சாக்லெட் கொடுத்து கொண்டாடினான். போலியோவுக்கு
சொட்டு மருந்து கண்டுபிடித்து இது மக்களுக்கானது என்று கோடிக்கணக்கான ரூபாய்
வருவாயை இழந்து அதற்கான பேடண்ட் ரைட் வாங்க மறுத்ததால்தான் இன்றைக்கு இலவசமாக
எல்லோருக்கும் கிடைக்கிறது என்று விளக்கம் சொன்னான்.
முதலாம் ஆண்டு துவங்கி
வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்று ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு பயனற்ற பொருட்களைக்
கொண்டு பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வண்டியை கல்லூரி உபயோகத்துக்காக
உருவாக்கியது அவனது பெயரை நீண்ட நாளுக்கு சொல்லிக்கொண்டிருந்தது. என்றைக்காவது ஒரு
நாள் ஸ்டீபன் ஹாக்கிங் போல ஒரு சயிண்டிஸ்டாக வருவேன் என்று அவன்
கூறிக்கொண்டிருந்ததை கேலி செய்து கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
மாதவி அந்த அதீதத்தின் மீதுதான் கவரப்பட்டாள்
என்பது அவளோடு பேசிக்கொண்டிருந்த போது புரிந்தது. நரேனும் அவளும் ஒரு முறை
சுவாரசியமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக பார்த்திபன் அதில் ஒரு
பார்வையாளனக மட்டுமே இருக்க முடிந்தது. ஏனெனினில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது
பிக்பேங்க் தியரியைப் பற்றி... நரேன் அப்பொழுது ஜெயெந்த் விஷ்ணு நர்லிகர்
என்பவரின் சூர்ய குடும்ப கொள்கை பற்றி
காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.
இடையில் புகுந்து பார்த்திபன் அசட்டுத்தனமாக....
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிகிட்டு
இருக்கீங்களாமே?”
“ஆமா அதுக்கென்ன இப்போ?”
“இல்லை.. உங்க குடும்பத்தைப் பத்தி பேசிகிட்டு
இருக்காம சூரிய குடும்பத்தை பத்தி பேசிகிட்டு இருக்கீங்களே?”
“ஸ்டுப்பிட்.. நாம எல்லோருமே சூரிய குடும்பம்தான்..”என்று
எரிச்சலாக சொல்லிவிட்டு அவளிடம் பேச்சைத் தொடர்ந்தான் நரேன்.
மாதவியே அவனது எல்லா செலவுகளையும் பார்த்துக் கொண்டாள்.
அட்டெண்டன்ஸ் குறைந்து அவன் எக்ஸாம் எழுத முடியாது என்ற நிலை வந்தபோது பிரின்சிபல்
மற்றும் நிர்வாகத்திடம் கெஞ்சிக் கூத்தாடி அவனை எழுத வைத்தாள்.
பார்த்திபன் அதற்காக மாதவியிடம் சற்று கோபமாகவே
“ஏன் இந்த நொண்டிக்குதிரையை பிடிவாதமாக தலையில்
சுமந்து கொண்டு ஓடிக்கிட்டு இருக்கறே?” என்று கேட்டான்.
“ஏன்னா அது மூளையுள்ள குதிரை..” என்று
புன்னகையோடு பதில் சொன்னாள்.
கல்லூரியை விட்டு வெளியே வந்து பல
வருடங்களுக்குப் பிறகு மாதவி தன் வீட்டில் உள்ளவர்களை எதிர்த்துக்கொண்டு அவனையே
திருமணம் செய்து கொண்டதாகவும், நரேன் ஒரு கம்பெனியில் நிலைத்திருக்காமல் குரங்கு
போல தாவிக்கொண்டிருப்பதாகவும் செவி வழிச்செய்திகள் பார்த்திபனை வந்தடைந்தன. மிகச்
சமீபமாக கணேசன் அவளை கோவையில் சந்தித்ததாக இதே போல் ஒரு வாட்ஸப் செய்தியை
அனுப்பினான். ஆர்வத்தோடு அவனைத் தொடர்பு கொண்டு பேசிய போது நரேன் குடிப்பழக்கத்துக்கு
அடிமையானதாகவும், கல்லூரிக்குச் செல்லாமல் எப்படி மட்டம் போட்டானோ அதே போல
வேலைக்கும் செல்வதில்லை என்றும் மாதவிதான் மறுபடி மறுபடி வேதாளத்தைச் சுமக்கும்
விக்கிரமாதித்தன் போல அவனைச் சுமந்து கொண்டு கஷ்டப்படுகிறாள் என்றும் சொன்னான்.
வண்டி கோவையை அடைந்த போது விடிந்திருந்தது.
கணேசனின் வீட்டு கதவைத் தட்டி அவன் வெளியே வந்து இவனை விட அதிகமாக திகைத்தான்.
”என்னடா இப்படி திடுக்குன்னு வந்து நிக்கிறே?”
“போடா.. இவனே.. நீ பாட்டுக்கு மாதவி தற்கொலை
செய்து கொண்டிருக்கிறாள்னு மெசேஜ் அனுப்பிட்டு செல்லை ஆஃப் பண்ணிட்டு
எனக்கென்னான்னு தூங்கிட்டு இருக்கே?”
“அட்டா.. மெசேஜ் டைப் பண்ணிகிட்டு இருக்கும்போதே பேட்டரி
ட்ரெயின் ஆகி சுவிட்ச் ஆஃப் ஆயிட்டுதுடா.. அதை சார்ஜ் போட்டுட்டு வேற ஃபோன் யூஸ்
பண்ணிகிட்டு இருந்தேன். இதுல உன் நம்பர் இல்லை. அந்த மெசேஜ் உனக்கு வந்துடுச்சு
போல சாரிடா. இன்னும் அந்த ஃபோனை ஆன் பண்ணலை.”
“மாதவிக்கு என்னடா ஆச்சு?”
“அவளுக்கு ஒண்ணும் ஆகலை ஆனா நரேன் ஒரு மாதிரி
சித்த பிரம்மை பிடிச்சா மாதிரி ஆயிட்டான்..”
“இதுக்காடா அப்படி ஒரு மெசேஜ் அனுப்புவே.. நான்
பதறி சிதறி ஓடி வர்றேன்” அப்படியே தலையில் கை வைத்து கீழே அமர்ந்தான்.
”இல்லடா... மாதவி வேலையை விட்டுட்டா....நரேனை
பார்த்துக்க ஒரு ஆள் வேணுமாம்”
“என்னது வேலையை விட்டுட்டாளா? லூசாடா அவ..”
“யார் சொல்லியும் கேக்க மாட்டேங்குறா. தன்னை
நம்பி வீட்டை எதிர்த்துகிட்டு உறவை எல்லாம் விட்டுட்டு வந்துட்டானாம்.. அவனைக்
காப்பாத்த வேண்டியது அவ பொறுப்பாம்”
“சரி கிளம்பு அவளைப் பார்ப்போம்” நரேன்
மருத்துவமனையில் இருந்ததால் அங்கேயே சென்றார்கள்.
. ”கோர்ஸா காஃப் சிண்ட்ரோம்”
என்றாள் மாதவி.
”அப்படின்னா?”
”குடியால அவரோட
மூளை பாதிக்கப்பட்டிருக்கு நினைவுகள் அழிஞ்சிகிட்டே வருது.”
”ஏன் அப்படி
அவனை குடிக்க விட்டே.?”
”நான்
குடிக்க விட்டேனா?.. காதலி சம்மதம் சொன்னா குடிப்பீங்க.. ஒத்துக்கலைன்னா
குடிப்பீங்க.. பாஸ் பண்ணிட்டா குடிப்பீங்க.. வேலை கிடைச்சா குடிப்பீங்க.. கிடைக்கலைன்னாலும்
குடிப்பீங்க.. அக்ரிமெண்ட் சைன் ஆயிடுச்சின்னா கம்பெனியே குடிக்க வைக்கும்.. அஞ்சு
நாள் வேலை செஞ்சுட்டா சாட்டர்டே ஃபீவர்னு சனிக்கிழமை சாயங்காலம் குடிக்க
கிளம்பிடுவீங்க.. ஒரு சயிண்டிஸ்ட்டா வர வேண்டியவனை இந்த சனிக்கிழமை பார்ட்டிகள்தான்
குடிக்க வச்சி மொடாக்குடியன் ஆக்கிடுச்சு..” ஒரு தம்ளர் தண்ணியை குடித்து சிறிது
ஆசுவாசமானாள்.
“சாட்டர்டே ஃபீவர் இவரை
நிரந்தர நோயாளி ஆக்கிடுச்சு. கேட்டா சோஷியல் டிரிங்கர்.. இன்னிக்கு பிரைவேட்
கம்பெனி சனிக்கிழமை பார்ட்டி வைக்க காரணமே சம்மந்தப்பட்டவர்களை நோயாளியாக்கி அவனை
வெளியேற்ற ஒரு காரணத்தை செயற்கையாக உருவாக்கத்தான்.. மூளையை கசக்கிக்கிட்டு ஆயிரம்
ப்ரோக்ராம் பண்றீங்க உங்களை எவாக்குவேட் பண்ண கம்பெனி ப்ரோக்ராம் பண்றதை
கண்டுபிடிக்க முடியலன்னா உங்களுக்கு மூளை இருந்து என்ன பிரயோஜனம். .
இப்ப அவர் மூளை
இருந்தும் முழு முட்டாள்.. ஒரு மனநோயாளியைக் கூட ட்ரீட்மெண்ட்ல ஒரு நாள் சரி
பண்ணிடலாம்.. மூளைப்பிசகிய குடி நோயாளியை எப்படி சரி பண்றது? இனிமே அவர் நடைப்பிணம்..
குடிக்கலைன்னா அவருக்கு கை கால் நடுங்க ஆரம்பிச்சிடும் குடிச்சா மூளை இன்னும் மோசமாகிடும்“குமுறி
அழுதாள்.
”எல்லாம்
தெரிஞ்சும் உன் வாழ்க்கையை ஏன் நாசமாக்கிக்கிட்டு இருக்கே?”
”நான்
ஒண்ணும் நளாயினி தமயந்தி இல்லே அவரோட குடும்பத்துக்கு தகவல் சொல்லி அனுப்பினேன்
செத்தாக் கூட தகவல் சொல்லாதேன்னு இரக்கமில்லாம விட்டுட்டு எட்ட போயிட்டாங்க. இப்ப
அவருக்குத் தேவை ஒரு கருணையுள்ள துணை. எல்லா பொம்பளைங்களும் காவியத்துல
வர்றதுக்கோ, கட்டுன பாவத்துக்கோ, ஊர் உலகத்துக்கு பயந்துகிட்டோ குடிகாரனை
காப்பாத்தறதில்லே..கருணை..இரக்கம்.. விட்டுட்டுப் போக முடியாம தடுக்குற தாய்மை. இப்ப
அவர் புருஷனில்லை எனக்கு பிள்ளை”
“வேலையை
விட்டுட்டு செலவுக்கு என்ன பண்ணுவே?”
“மெடிக்கல்
ட்ரான்ஸ்கிரிப்ஷன் .. வீட்டுலேர்ந்தே செய்து
தர ஆர்டர் கிடைச்சிருக்கு எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவு பணம் இப்போதைக்கு
நரேனையும் பார்த்துகிட்டு செலவையும் சமாளிக்க இதுதான் ஒரே வழி”
ஸ்டீபன் ஹாக்கிங் போலவே
நரேனும் சக்கர நாற்காலியில் ஒரு பொட்டலம் மாதிரி மடங்கிக் கிடந்தான் .ஆனால் மூளை
முற்றிலும் சிதைந்து......சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தவர்களிடமிருந்து
மேரி க்யூரி கைமாற்றி ஸ்டீபன் ஹாக்கிங்கை சரிந்துவிடாமல் கைகளால் தாங்கியபடி
தள்ளிக் கொண்டு வந்தாள். நரேனின் கைகால்கள் வெலவெலத்து நடுங்கிக் கொண்டிருந்தன. இப்பவும்
வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் சிந்தனைகளற்று ஒரு ஜடம் மாதிரி.. கைகளில்
இருந்த பணத்தை அவள் கையில் திணித்தனர்..
இருவரும் வெளியே வந்து காரில் ஏறியபொழுது இருவருக்கும் இடையில் பேச
ஒன்றுமில்லை. இன்னோவா காரின் கேப்டன் சீட் தனித்தனியாக கைப்பிடி வைத்து வசதியாகத்தான்
இருந்தது ஆனால் அமரும் போது சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டு பிடிமானத்துக்கு
இறுகப்பிடித்திருப்பது போலவே தோன்றியது பார்த்திபனுக்கு. .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>